Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

26 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

 உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 26

.

விண்ணைத் தொடும் பெரிய மரங்களைக் கொண்டிருந்தது அந்த குளிர்ந்த மலைப் பிரதேசம். நேரம் என்னவாக இருக்கும்? தெரியவில்லை. மேக மூட்டமும் பனி சாரலும் நேரத்தைக் கணிக்க விடவில்லை. இரு உள்ளங்கைகளையும் சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டான். இது என்ன பூ-லோகமா? அப்படித் தான் காட்சி அளித்தது வெண்மலர் தேசம். மரத்திலும்… நின்றிருந்த பூமியிலும்… கண் காணும் எங்கும் வெண் மலர்கள்.



Advertisement

பிடித்துக்கொள்ள வசதியாக நீளத் தண்டிருக்க, கையில் கொத்தாகச் சில பூக்களைப் பிடித்திருந்தான். யாருக்குக் கொடுப்பது? அதோ… அந்த மரத்தில் தனக்கு முதுகைக் காட்டி சாய்ந்து நின்றிருக்கும் வனதேவதைக்கா? அவளை நோக்கிச் சென்றான். அவன் சூட்டிய வெண் மலர்கள், விரித்திருந்த கார்கூந்தலில் நட்சத்திரங்களாகக் கண்சிமிட்டின. இடையோடு அவளை கட்டிக்கொண்டு கூந்தல் காட்டில் முகம் புதைத்தான். உயிரோடு உடல் இணைந்தால் இப்படித் தான் இருக்குமோ? மனம் சந்தேகம் கொண்டது. உள்ளுக்குள் அடக்கிவைக்க முடியாது காதல் கரைபுரண்டது.  வெறும் காதல் கொள்ள அவள் வேறு நான் வேறா என மனம் கேட்டது.

அவள் மீது எழுந்த தன் அன்பைக் காட்டக் காதல் போதவில்லை அவனுக்கு. தேனுக்குள் விழுந்து போதையில் திளைத்தது வண்டு. அவனுக்கும் போதை. அவன் போதையை அவளுக்குக் கடத்த நினைத்தானோ? நினைத்ததைச் சாதித்தான். பூ குவியலுக்குள் அவளோடு விழுந்து அவளையும் இன்பத்தில் திளைக்க வைத்தான். உடல் சுகத்திலும், மனம் ஆனந்தக் களிப்பிலும் திளைத்தது. “உனக்கான என் அன்பை இன்னும் எவ்வளவு நாள் அடக்கி வைப்பேன்?” என அவள் மேனியில் காதல் பேசினான். காமத்தில் திளைத்தான். கரடு முரடான பயணக் களைப்பு தீர அவள் மார்பில் புதைந்தான்.

“விட்டுவிட்டுச் சென்றுவிட மாட்டாயே?” சோகம் வழியக் கேட்டவளிடம், “என் இதயம் துடிக்கும் வரை” எனச் சத்தியம் செய்தான். பெண்ணவளின் மென் மார்பில் வழிந்த வியர்வை துளி அவன் முகத்தை ஈரப்படுத்தியது.

Advertisement

தாபம் குறையாது முகம் உயர்த்தியவன் கண்களுக்குப் பனி மூட்டத்தின் நடுவே அவள் மங்கலானச் சிரிப்பு தெரிந்தது. கண்களைக் கசக்கினான்… பனி மூட்டத்தை விரட்டினான். அவனுக்கு முதுகைக் காட்டி முன் சென்றாள் அவன் வனதேவதை.

Advertisement

“முகத்தைக் காட்டிவிட்டுச் செல்” என்றவனைப் பார்க்க முகத்தை மட்டும் திருப்பினாள். தொங்கிக் கொண்டிருந்த பூக்களுக்கு இடையே அவள் விரிந்த புன்னகையோடு அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

புன்னகைக்கிறாள்… தெரிகிறது. ஆனால் அவளைக் காண இமைகள் திறக்க மறுக்கிறது. மூடிய கண்களோடு அவள் பின்னே ஓடியவன் கால் இடறியது. எதையேனும் பிடித்துத் தப்பித்துக் கொள்ள முடியாதா என கைகள் காற்றைத் துழாவியது. உடல் அதலபாதாளத்தை நோக்கிச் செல்லவும் உடல் ஒரு குலுங்கு குலுங்க மெத்தையிலிருந்து கீழே விழப் போன கௌதமன் எழுந்து அமர்ந்தான். பயத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. அந்த படபடப்பிலும் அவன் மார்பின் மீது தூங்கிக்கொண்டிருந்த மகளைக் கேழே போட்டு விட்டேனோ எனத் தேட மகள் அருகில் இல்லை.

மகள் மட்டுமா? வனம்… மலை… பனிமூட்டம்… வெண் மலர்கள்… வனதேவதை… எதுவுமே அருகில் இல்லை. எல்லாம் கனவா? வேற என்ன… மனம் நொடித்துக் கொண்டது. வியர்த்த கழுத்தையும் மார்பையும் உள்ளங்கையாய் துடைத்தான். எப்பொழுதும் போல் கோர்வை இல்லாத கனவு முழுவதுமாக நினைவில் வரவில்லை. அவள் யார்? தெரியவில்லை. ஆனால் அந்த பெருங்காதலும் அது தந்த உணர்வும் புதிது.

Advertisement

கல்லூரியின் கடைசி வருடத்தில் தாக்ஷாவோடு காதல் இல்லாத காமம் புரிந்திருக்கிறான். அதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால்… இது? உருகி வழிந்த அந்தக் காதல் கௌதமனை சிலிர்க்கச் செய்தது. தனக்குள் இப்படி ஒரு காதலனா? சிரிப்பு வந்தது. பொறுப்பற்றவனாக சுற்றியவனுக்குள் தாய்மை சுரக்கவில்லையா? அதுபோல் தான் இதுவும் என ஆறுதல் கூறிக்கொண்டான்.

இத்தனை காதலையும் ஏன் தாக்ஷாவிடம் தான் காட்டியதே இல்லை? காட்டாத அன்பிற்கு மதிப்பு ஏது? தான் உணர்ந்த நிறைவை… அன்பை அவளுக்கும் கடத்த வேண்டும் என மனம் தீர்மானித்தது.

இப்படியான கோர்வையற்ற கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் கௌதமன் பழகி இருந்தான். அறுவைசிகிச்சை முடிந்த சில மாதங்களில் இப்படியான நினைவோடு கலந்த கனவுகளுக்குப் பயந்து குழம்பியவனுக்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டது. “நினைவுகள் மூளையில் மட்டும் இருப்பதில்லை” என்பதை முதலில் நம்ப மறுத்தான். “பாடி மெம்மொரி” என்பது உண்மை எனப் படித்து அறிந்தானோ இல்லையோ… உணர்ந்தான். உணர்ந்த ‘அவன்’ மனைவி குழந்தையைத் தேடித் தோற்றான். “அவர் சிங்கிள் கௌதமன்” என்றதை கேள்விப்பட்டவனுக்குக் குழப்பங்கள் இன்னுமே அதிகமானது. இந்தக் கனவுகள்… உணர்வுகள்… இதில் எது அவனுக்கானது? எது தனக்கானது?

“டிரான்ஸ்பிளான்ட்ல இத எல்லாம் எதிர்பார்க்காத ட்விஸ்ட். அவரோட டிஷ்யூவோட அவரோட மெம்மொரியும் உங்களுக்கு தானம் பண்ணியிருக்கார்” என்பதை இன்றும் நினைவு கூர்ந்தான். சில மாதங்களாகவே இது போல் அவ்வப்போது கனவோ… எண்ணமோ… ஏதோ ஒன்று உள்ளுக்குள் அதிகம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை எவ்வளவு நேரம் நினைப்பதாம்? முகம் கழுவி வந்தவன், மகளைத் தேடிக் கொண்டு கீழே சென்றான். மதியம் மகளோடு விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் உறங்கியிருந்தான். நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது.

“மத்தியானம் விக்ரம் வந்தான். உன்ன தூங்க வச்சுட்டு உன் பொண்ணு கொட்ட கொட்ட முழுச்சுட்டு இருந்தா. மாலதி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன்னு யாழியையும் தூக்கிட்டு போனான்.” என்றார் அன்னை.

“ம்ம்ம்” என்றவன் மீண்டும் அறைக்குச் சென்றான். கிளம்பி வந்தவன் கைப்பேசியோடு பூங்காவை அடைந்தான். குட்டி யாழி நின்றிருக்க, அவள் மாமன் படிகள் ஒன்றில் அமர்ந்து அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“பிக்கி மாமா பிணினி நேணும்” எனத் தன் குட்டி விரல்களைக் குவித்து தன் குட்டி வாய்க்குள் திணித்தாள் குழந்தை.

“தரேன் தரேன். மாமன் பேர கொல்லறடி தங்கம்”

“தங்க இல்ல… ஆலி பேபி சொல்லு”

“இவ பேர மட்டும் கரெக்டா சொல்லணும். யாழி பேபி… ஓகேவா?”

குட்டி குடுமி ஆட, “எத் மாமா” என்றவள், மீண்டும், “பிக்கி மாமா பிணினி” என விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள்.

“இவ ஒருத்தி ஒண்ண கேட்டா, அது கிடைக்கிற வரைக்கும் நிறுத்த மாட்டா” என்றவன் கையில் இருந்த பிரியாணியைக் குழந்தைக்கு ஊட்டினான்.

“பேபி… மாமன் பேரு விக்ரம். பிக்கி இல்ல.”

“சளி பிக்கி மாமா” என குழந்தை வேகமாகத் தலை அசைத்தாள்.

“பேபி… சளி இல்ல சரி” என்றவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

யாழினியாளின் கொஞ்சும் மழலையைக் கேட்பதில் விக்ரமிற்கு அலாதி இன்பம். கௌதமனோடு பேசுகிறானோ இல்லையோ தினமும் ஒரு முறை காணொளியில் பார்த்து பேசிவிடுவான் குழந்தையிடம். பெற்றோரோடு தில்லியில் இருப்பவன் சென்னைக்கு வரும் போதெல்லாம் குழந்தையைக் காண வந்திடுவான். விக்ரம், அவன் தங்கை மாலதி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்ததும் அவளைக் காண வந்திருந்தவன் தில்லிக்குத் திரும்பும் முன் வந்துவிட்டான் கௌதமனையும் யாழியையும் காணவென.

“என்ன நடக்குது இங்க” எனக் கேட்டுக் கொண்டே இவர்கள் இருந்த இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தான் கௌதமன்.

“அப்பா அப்பா அப்பா” என ஆயிரம் அப்பாக்களோடு தாவிய குழந்தை அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொடை  மீது நின்றாள்.

“என்ன சாப்பிடுறீங்க?”

“பிணினி” என்றவள், ‘ஆஆ’ என வாயைத் திறந்து காட்டினாள்.

“சரி சரி, சாப்பிடுங்க” மகளை இறக்கி விட்டவன் பார்வை விக்ரமிடம் சென்றது.

“என்ன டா சிரிப்பு?”

“சளி பிக்கியாம்”

“என்ன?”

“உன் பொண்ணு என் பேர ரொம்ப டேமேஜ் பண்றா டா கௌதமா… முன்ன கூட தேவல, பிக்கம்ன்னு சொல்லிட்டு இருந்தா. இப்போ நான் பிக்கி மாமாவாம்”

“உன் பேர மட்டுமா? என் பேர கேளு” என்றவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

“அப்பா பேர் என்ன யாழி பேபி?”

“மை அப்பா நேம் இஷ் கௌமகன்” என மகள் முடிக்கவும் விக்ரம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, ஏன் என்றே தெரியாது குழந்தையும் சேர்ந்தே சிரித்தாள்.

“ரொம்ப ஸ்வீட் டா நம்ம பாப்பா. அவன் அவன் தவம் இருந்து கூட இப்படி ஒரு குட்டிய பெத்துக்க முடியறது இல்ல. நீ நிஜமாவே லக்கியஸ்ட் பர்சன் டா” எனக் குழந்தையை உச்சி முகர்ந்தான் விக்ரம்.

ஆம் என ஆமோதிக்காது இருக்க முடியுமா கௌதமனால்? யாழினியாள்… அவன் சிப்பியின் முத்தாயிற்றே.

“ஆறு மாசமா பிளே ஸ்கூல் போறா இல்ல… நல்லா கோர்வையா பேசறா. அம்மா அப்பா தாத்தா பாட்டின்னு உறவு பேர், கலர்ஸ், அனிமல்ஸ், வெஜிடபிள்ஸ் இப்படி நிறைய சொல்லுவா. வீட்டுல வேலை செய்றவங்க பேர் வரைக்கும் எல்லார் பேரும் கரெக்டா சொல்லுவா. எங்க மூணு பேரோட போன் நம்பர், வீட்டு அட்ரஸ் வரைக்கும் சொல்லுவா. ஆனா புதுசா கேட்கிறவர்களுக்குப் புரியாது” என்றான் மகளை வாஞ்சையாய் பார்த்துக் கொண்டே.

“வாய திறந்தாலே பொண்ணு புராணம் வாசிக்கிற டிப்பிக்கல் அப்பா ஆகிட்ட டா. ஆனாலும் ஒத்துகிட்டே ஆகணும், யாழி உண்மையாவே அறிவாளி குழந்தை டா”

“ம்ம்ம் எனக்குமே தோணும். ரெண்டர வயசுக்கு அவளோட மெம்மொரி ரொம்ப ஜாஸ்தி டா. ரெண்டு மாசம் முன்னாடி இவ செயின கழட்டி வச்ச இடத்த நான் மறந்துட்டேன். ஆனா இவ சரியா காட்டறா டா. அமேசிங் மெம்மொரி என் பொண்ணுக்கு. நீ உன் போன் நம்பர் சொல்லி கொடுத்துட்டு போ. நாளைக்கு பேசும் போது கேளு… கரெக்டா சொல்லுவா.”

“ஊர்ல இருக்க ஃபிளாஷ் கார்டெல்லாம் வச்சு அவ ஞாபக சக்திய ஏத்திவிட்டிருக்கன்னு நினைக்கிறேன்”

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “த்விங்கிள் திவிங்கிள் லித்தில் ஸ்தார்…” எனப் படிகளில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள் யாழினியாள்.

“ஜெனிட்டிக்கல்லா கூட இருக்கலாம் டா.” எனப் புன்னகைத்தான் கௌதமன். குழந்தை வளர வளர கௌதமனுக்கு இவளைப் பெற்று விட்டெறிந்தவர்களைக் காண வேண்டும் என்ற உந்துதல் ஏறிக் கொண்டே போகிறது. என்ன காரணத்தினால் இப்படி ஒரு தேவதையைத் தூக்கிப் போட மனம் வந்தது எனத் தெரிய வேண்டும் அவனுக்கு. இவன் கரத்தில் கிட்டாது போயிருந்தால், இவ்வளவு அன்பையும் அறிவையும் கொண்ட பொக்கிஷம், கவனிப்பார் இல்லாது வாடி அல்லவா போயிருக்கும்? அவர்களைத் தெரிந்துகொள்ளத் தோன்றினாலும் அதைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டான். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் தன் மகளைக் கேட்டுவிட்டால்?

கேட்டால் கொடுத்துவிடுவானா என்ன?

அன்றைய பொழுது விக்ரமோடு சென்றது. “டாடா பிக்கி மாமா” என யாழி கையசைத்து இரவு தில்லி விமானத்தில் விக்ரமனை ஏற்றிவிட்டாள்.

நாளை கல்லூரி என ஓட்டம் ஆரம்பித்துவிடும். ஏனோ கௌதமனுக்கு வீட்டிற்குச் செல்ல மனமில்லை. மனம் எதையோ தேடுகிறது. அது என்ன என்று தெரியவில்லை. சற்று நேரம் காற்றோட்டமாக நடந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. தனிமை தேவைப்பட்டது. என்ன மாயமோ, தனிமையிலும் மகள் கைக்குள் இருப்பதையே மனம் வேண்டி நிற்கிறது. அப்படி என்ன பந்தமோ இருவருக்கும்?

சுண்டலை கொறித்துக் கொண்டே மகளும் அப்பாவும் கடற்கரை மணலில் நடந்தனர். மகள் அப்பாவின் கைக்குள் உறங்கியபின்னும் கௌதமன் வெகு நேரம் மணலில் அமர்ந்திருந்தான். காற்றில் குளுமை சேரவும் மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். குளியல், பால் என்ற சம்பிரதாயங்களுக்குப் பின் அப்பாவின் கையணைப்பில் மகளும், மகளை அணைத்துக் கொண்டு அப்பாவும் நிம்மதியாக உறக்கத்திற்குள் மூழ்கினர்.

திங்கள் கிழமைக்கே உரிய சோம்பேறித்தனத்தை விடுத்து சூரியன் பிரகாசித்தான். ஆனால் யசோ சோம்பி கிடந்தாள் மெத்தையில். அப்படியே உருண்டு புரண்டு கொண்டே இருக்க மனம் விரும்பியது. ஆனால் கடமையின் அழைப்பைப் புறம் தள்ள முடியாதே.

அப்பா இன்று காலமே தோழன் வீட்டு விசேஷம் எனக் கிளம்பியிருக்க, குடித்து முடித்த காபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தவளுக்குச் சமைத்துச் சாப்பிடப் பொறுமையும் இல்லை நாட்டமும் இல்லை. சற்று நேரம் புல்லாங்குழலோடு நேரம் செலவிட்டாள். ஜன்னல் வழியே சாலையைப் பார்த்து நின்றாள். பக்கத்து வீட்டுப் பெண் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். இளமைக் காலம் கண்முன் வந்தது, கூடவே அம்மாவும், அவனும் வந்தனர். திருச்சிக்குச் செல்ல மனம் ஆசை கொண்டது.

கைப்பேசி சிணுங்கியது. அப்பாவிடமிருந்து, ‘சாப்பிட்டாச்சா? கிளம்பியாச்சா? பத்திரமா போயிட்டு வா’ என்னும் குறுந்தகவல்கள் வந்திருக்க, கல்லூரிக்குத் தயாரானாள். பிரெட் ஆம்லேட்டோடு அமர்ந்தவளுக்கு அதை உள்ளே தள்ள முடியவில்லை. மீண்டுமாக ஒரு கோப்பை காபியை உள்ளே தள்ளி காலை உணவை முடித்தாள்.

கால தாமதமாகக் கல்லூரிக்கு வந்தவளுக்கு வேலை செய்யும் ஆசையும் எழவில்லை. இதையும் அதையும் புரட்டினாள். நேரம் நகர்வேனா என அடம்பிடித்தது. காலை உணவு உள்ளே இறங்க மறுத்ததின் விளைவாக மத்திய உணவு வரை காத்திருக்காது வயிறு தன் இருப்பை காட்டியது. எப்பொழுதும் அவளோடு சிற்றுண்டிச் சாலை செல்லும் ஷெரின் இன்று வந்திருக்கவில்லை. தனியே கான்டீனை நோக்கி சென்றவளை பார்த்த ஈஸ்வரி, “இன்னைக்கு என்ன உங்க ட்வின், ஷெரின் வரலியா?” எனப் புன்னகைத்தார்.

“நீங்க புளூட்டிஸ்டுன்னு நாலு நாள் முன்ன தான் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப அழகா வாசிக்கிறீங்க யசோ மேம்.

என் ஹஸ்பன்டுக்கு மியூசிக்னா ரொம்ப இஷ்டம். வயலின், செல்லோ, பியானோன்னு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ச விரும்பி கேட்பார். கொஞ்ச மாசமாவே புல்லாங்குழல் பைத்தியம் ஆகிட்டார். எப்போ பார் காதுல இயர்பாட்… அதுல பூளூட்! அவருக்கு புல்லாங்குழல் தாலாட்டினா தான் தூக்கமே வரும். ரொம்ப ஓவரா பண்றார்ன்னு திட்டவும் செய்திருக்கேன்.

நாலு நாள் முன்னால நான் வீட்டுக்குள்ள நுழையும் போது டீவில ‘ஆயர்பாடியில் கண்ணல் இல்லையோ’ன்னு நீங்க வாசிச்சுட்டு இருந்தத பார்த்தபோது, மோகனோட சேர்த்து நானுமே உங்க வாசிப்புக்கு அடிமையாகிட்டேன். வாவ்… எப்படி அவ்வளவு அழுத்தத உங்களால கடத்த முடியுது? அமேசிங்.

நானும் உங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன். வாரத்துக்கு ரெண்டு வீடியோவாது போடுங்க பிளீஸ்” ஈஸ்வரி பேசிக் கொண்டே போகப் புன்னகையோடே கேட்டு அமர்ந்திருந்தாள் யசோ.

“ரொம்ப நல்லா வாசிக்கிறீங்க மேம். கண்டிப்பா நம்ம காலேஜ் கல்சுரல்ஸ் அன்னைக்கு நீங்க வாசிக்கணும்”

இவள் புன்னகைக்க, “எனக்குக் காபி, கட்லெட். உங்களுக்கும் அதயே வாங்கிடலாமா?” எனக் கேட்டுக் கொண்டே கௌன்டர் பக்கம் சென்றவர் எதிரே வந்து கொண்டிருந்தான் கௌதமன்.

“ஹைய் மேம். குட் மார்னிங்” சிரித்து நின்றவன் பார்வை யசோவின் மீது விழவும் இருவருக்குமே புன்னகைத்துக் கொள்வதா வேண்டாமா எனத் தயக்கம்.

“வா கௌதமா” என அழைத்தவர், “இது கௌதமன், என் மகன் மாதிரி. ரொம்ப சமத்து பையன்” என்றவர் நினைவு வந்தவராக, “நீங்க ரெண்டு பேருமே ஏற்கனவே அறிமுகமானவங்கன்னு மறந்துட்டேன்” என்றார் நமுட்டுச் சிரிப்போடே.

“கௌதமா ஒரு ரெண்டு கப் காபியும், ரெண்டு பிளேட் கட்லெட்டும் வாங்கிட்டு வர்றீயா? காலையில இருந்து நின்னது கால் கடுக்குது.” என்றவரை, “நீங்க போய் உக்காருங்க… வந்துட்டேன்” என அனுப்பி வைத்தான்.

யசோ தர்ம சங்கடமாக அமர்ந்திருந்தாள். இப்பொழுது அவன் வாங்கி தருவதை உண்ண வேண்டுமோ? பணத்தை எண்ணி இவரிடம் கொடுக்க வேண்டுமா இல்லை அவனிடமா? ஏதாவது கூறிவிடுவானோ? உள்ளுக்குள் கேள்விகள் எழ, அவஸ்தையோடே அமர்ந்திருந்தாள் யசோ.

“முறையா கத்துகிட்டீங்களா? எப்போல இருந்து வாசிக்கிறீங்க?” விடாது பேசிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் கவனத்தைக் கலைத்தது அவரின் கைப்பேசி.

“வி.பி. கூப்பிடுறாங்க. லாங் லீவ் கேட்டிருந்தேன். அது விஷயமா இருக்கும். நான் கிளம்பட்டா?” என ஈஸ்வரி எழுந்து கொள்ளவும் கௌதமன் சிற்றுண்டியோடு வந்தான்.

“அவசரமா போறேன் கௌதமா. எனக்கு ஒரு கட்லெட் மட்டும் போதும். ஃபிரியா இருந்தா யசோ மேம் காபி குடிக்கிற வரை கம்பனி கொடு” என ஓட்டமும் நடையுமாகக் கல்லூரி துணைத் தலைவரை காண விரைந்தார்.

இவள் குடிப்பாளா இல்லையா என கௌதமனுக்கு தெரியவில்லை என்றாலும் கொண்டு வந்த தேநீரை, “டீ தான் இருந்துது” என அவளிடம் நீட்ட அவள் வாங்கிக் கொண்டாள்.

“கட்லெட்” என அவள் முன் வைத்தவன், அவள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான். இருவரும் மௌனமாகக் குடிப்பதையும் கொறிப்பதையும் கர்மசிரத்தையாகச் செய்தனர். மிக மிக மெதுவாக உண்டபோதும் தட்டு காலியாவதை இருவராலும் தடுக்க முடியவில்லை.

எவ்வளவு நேரம் தான் அந்தச் சின்ன துண்டு கட்லெட்டை முறைப்பது? கௌதமனுக்கு பொறுக்கவில்லை.

அவள் மீது எழுந்த கோபத்தை நாகரிகம் இல்லாத வார்த்தைகளாய் அவள் மீது கொட்டி ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவளிடம் அதற்கு மன்னிப்பு கேட்காததால் இன்று எதிரே இருந்தாலும் பேச முடியவில்லை. இந்தச் சூழல் அவனுக்கே பிடிக்கவில்லை. அன்றே விளையாட்டின் போது மன்னிப்பு கேட்டுச் சரி செய்திருந்தால், இப்படிப் பார்க்கும் வேளையில் எல்லாம் தர்மசங்கடமாக உணர வேண்டியிருக்காது. இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளியிட நினைத்தவன், காலியான தட்டை முறைப்பதை விட்டு, தலையை உயர்த்தினான்.

அவன், “சாரி” என ஆரம்பிக்கும் நேரம் அவளும் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தவள் அவன் பக்கமாக ஐ-பேடை நகர்த்தினாள்.

“சாரி கௌதமன்… சின்ன மிஸ்சண்டர்ஸ்டேண்டிங்… அறைஞ்சுட்டேன்” என்றிருந்தது அதில். அவளிடம் சின்ன தயக்கமும், கொஞ்சம் வெட்கமும் கலந்த சிரிப்பு பார்க்க அழகாகவே இருந்தது.

“அன்னைக்கு ஹோட்டல்ல ஏதோ நடந்திருக்கணும். அதுக்கு நான் தான் காரணம்ன்னு உங்களுக்கு தோணவே அந்த கோபம்ன்னு யோசிச்சதுல புரிஞ்சுது. அத தெரியாம நானும் என் பங்குக்குக் கொஞ்சம் கூட மேனர்ஸ்சே இல்லாம நடந்துகிட்டேன்.” என தன் பக்கத்தை விளக்க முற்பட்டான்.

“இல்ல உங்க கோபம் நியாயம் தான். நான் தான் யார் தப்பு பண்ணினான்னு தெரியாம உங்கள சந்தேகப்பட்டு அறைஞ்சுட்டேன். நீங்களா இருக்கவே பேசாம போயிட்டீங்க. வேற யாராவதுன்னா… அன்னைக்கு பெரிய பிரச்சனை ஆகி இருக்கும்.”

“ஒரு தரம் வாங்கிய அறைய இப்படி அடிக்கடி நினைவுபடுத்தணுமா? விடுங்க அத” எனப் புன்னகைத்தான்.

‘நீங்க என்னை ரொம்ப உத்து உத்து பார்த்த மாதிரி இருக்கவே, தப்பா நினைச்சுட்டேன்’ என அவள் கை அசைக்கவும்,

“ஆமா பார்த்தேன். கல்யாண வீட்டுல நீங்க ஒரு பெரியவர் கூட கோவிச்சுட்டு இருந்தத பார்த்தேன். எனக்கு என் பொண்ணோட பெரிய சைஸ்ச பாக்கிற மாதிரி இருந்துதா… அதுதான் பார்த்தேன். உங்கள பாக்க பாக்க, எனக்கு உங்கள ஏற்கனவே தெரியுங்கிற ஃபீல்.” என்றவனை அவள் புருவம் உயரப் பார்த்தாள்.

“அது என்ன பார்வ? நிஜம் தான். இதுக்கு முன்ன பார்த்திருக்கோம்” என்றவன் கைப்பேசியில் எதையோ துழாவினான்.

“என் மக” என்றவன், கைப்பேசியை அவள் முன் நகர்த்தினான். குட்டி மேகக் குவியல் ஒன்று, தாடி, மீசை, கொண்டை என அரைக் கால் சட்டையில் இருந்த நெடியவன் கரத்தில் தவழ்ந்தது.

யசோவின் கண்கள் விரிந்தன. “நானும் என் மக யாழினியாளும்… ஒன்னரை வருஷம் முன்ன…” இவனா இது? எனப் படத்தையும் எதிரில் இருப்பவனையும் மாறி மாறி பார்த்தாள்.  “நினைவுல வரோமா?” எனக் கேட்டான். ஆம் என்பதாக யசோவின் தலை அசைந்தாலும், கண்கள் அந்தக் குட்டி புதையலை விட்டு அகல்வேனா என அதில் நிலை குத்தி நின்றன.

கைப்பேசிக்காகக் கையை நீட்டியவனிடம் அதைக் கொடுக்க பிடிக்காதவளாக அதை இறுகப் பற்றிக் கொண்டாலும் அதை அவனிடம் கொடுப்பது தானே சரி… கொடுத்துவிட்டாள். கைப்பேசியில் அப்பாவின் கையில் தவழ்வது தன் மகள் எனத் தெரியும் வேளை யசோவால் இப்படிக் கொடுக்க முடியுமா?

“உடனே நாம ரேண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகணுங்கிற நினைப்புல நான் இத எல்லாம் உங்கட்ட சொல்ல. அடுத்த முறை எதிர்ல பார்க்க நேர்ந்த தர்மசங்கடமா எங்கையாது பாக்காம, முகத்த பாத்து ஒரு ‘ஹலோ’ சொல்ல முடிஞ்சா போதும்.” என்றவனைப் பார்த்தவள் ஆமோதிப்பான புன்னகையைச் சிந்தினாள்.

‘அன்னைக்கு காலேஜ்லயும் மைக்கேல் கூப்பிட்டது தெரியாம, நீங்க தான் வம்பு பண்றதா நானே நினைச்சுகிட்டது எவ்வளவு பெரிய மடத்தனம்? அதுக்கும் சாரி… போதாதுக்கு ஈஸ்வரி மேம்ட்ட மாட்டி விட்டேன்’ என எழுதிக் கொண்டிருக்கும் போதே சிரித்துவிட்டாள்.

அவள் எழுத எழுத அவள் ஐ-பேடை பார்த்து இருந்தவனுக்கும் சிரிப்பு வந்தது.

“சீட்ட கிழிக்கிற அளவுக்குக் கேடி வேல பார்த்துட்டு சிரிப்பா?” அவன் சிரிக்க, மூன்றரை வருடங்களுக்குப் பின் யசோவின் முகத்திலும் பற்கள் தெரிய விரிந்த புன்னகை மலர்ந்து, நீண்ட நேரம் நிலைத்தது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!