“எனக்கு பிடிச்சிருந்தா தானே ஓகேன்னு சொல்ல முடியும்? பிடிக்காத ஒருத்தரை எப்படி லவ் பண்ண முடியும்?” என்று பூங்கொத்தை பார்த்துக் கொண்டு மெல்லமான குரலில் அவள் சொன்ன போதும், அவள் சொல்லாமல் விட்ட கதை அப்போது உள்ளே நுழைந்த பரணிக்கு நன்றாகவே புரிந்து போனது. பரணி வீட்டினுள் வந்தது பற்றி உணராமல் திவ்யா தன் போக்கில் பேசிக் கொண்டே இருந்தாள்.
“எனக்கு பிடிச்சிருக்கான்னு யாருமே கேட்கலை. அவங்க லவ் சொல்ல வர்றப்போ நான் என்ன மனநிலையில இருக்கேன்னு புரிஞ்சுக்கலை. நான் இஷ்டமில்லைன்னு சொன்னது மட்டும் தான் எல்லாத்துக்கும் தெரியுது. ஆனா எதுக்காக அப்படி சொன்னேன்னு யாருமே யோசிக்கலை.” என்றவளிடம் யஷ்வந்திடமிருந்து சூடான தேநீர் கோப்பையைப் பெற்று, திவ்யாவிடம் நீட்டிய பரணியை அப்போது தான் உணர்ந்தாள்.
Advertisement
மறு பேச்சில்லாமல் கோப்பையை வாங்கிக் கொண்டு மெல்ல ஒரு மடக்கு பருகினாள். சூடான பானம் தொண்டையில் குளிருக்கு இதமாய் இறங்கி, புத்துயிர் கொடுத்தது.
திவ்யா இறுதியாகப் பேசிய வார்த்தைகள் மட்டுமே பரணி கேட்டிருந்தான். அவை வருணுக்காக சொல்லபட்டவை அல்ல என்பதும், தனக்கானது என்பதும் அவனுக்குப் புரியாமல் இல்லை. வருணை பின் தொடர்ந்து சென்று சற்று நேரம் அவன் புலம்பலைக் கேட்டு, அவனுக்கு சிறிது சாமாதானம் சொல்லி, அவனுடன் சிறிது தூரம் நடந்து என்று வருணை ஒருவாறு சமநிலைக்குக் கொண்டுவந்திருந்தான்.
வருணுக்கும் அவனது தவறு புரிந்திருந்தது. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று கொஞ்சமும் யூகிக்காமல் திடுமென காதல் சொல்லி அவளை அச்சுறுத்தியது தவறு என்று தெளிவுபெற்றிருந்தான். அதனால், பரணி கூறிய சமாதான வார்த்தைகளை அவனால் சடுதியில் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
Advertisement
வருணின் பின்னால் அவனைச் சமாதானப்படுத்த சென்ற போது, வருணின் வாய்மொழியாக நடந்தவற்றை தெரிந்து கொண்டான். அவன் சமாதானப்படுத்த பெரும் அவசியம் ஏற்படவில்லை. வருணே ஓரளவு தன்னை நிலைபடுத்திக் கொண்டிருந்தான்.
Advertisement
“ஐம் ஆல்ரைட் டா. நீ போ, நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றேன்” என்று அழுத்தமாக உரைத்த வருணின் தோளைத் தட்டி, “சீயர் அப் மேன்” என்று சொல்லிவிட்டு, வீடு நோக்கி வந்திருந்தான். நிச்சயம் இந்த நிகழ்ச்சி, திவ்யாவிற்கு தன்னைப் பற்றிய எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்று பரணி எதிர்பார்த்தான். அவன் கணித்தது போலவே, திவ்யா திகைத்துப் போய் தான் அமர்ந்திருந்தாள்.
அயற்சியுடன் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவள், அவன் வந்தது கூட உணராது, “என் நிலைமை என்னன்னு யாருமே கேட்கலை” என்று கூறியது பரணிக்கு சுர்ரென்று உறைத்தது. ஆம், அவன் அன்று அவள் நிராகரித்தது பற்றியும், அதற்காக அவள் கூறிய காரணத்தைப் பற்றியும் மட்டும் யோசித்து கண்ணீர் சிந்தினானே ஒழிய, அவளது நிலைமை என்னவென்று யோசிக்க மறந்திருந்தான்.
இன்று திகைத்துப் போன பார்வையுடன் புலம்பலாக அவள் சொல்லியிருக்க, அந்த நொடியே அவளை தன் நெஞ்சோடு இறுக்க அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போலத் தோன்றிய எண்ணத்தை மனதினுள் மூடி மறைக்க வெகு பிரயத்தனம் செய்தான். ஆனாலும் அவனால் எதுவும் சொல்லாமல் அவளிடமிருந்து தள்ளி அமர இயலவில்லை. அவள் அமர்ந்திருந்த சோஃபாவில், நாபிக்கும் அவளுக்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டு உட்காரர்ந்தவனை சற்றே ஆச்சர்யத்துடன் பார்த்த நாபி-ஜூன், நாகரீகமாக நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.
Advertisement
திடுமென, அதுவும் இத்துனை நெருக்கமாக பரணி உட்காருவான் என்று திவ்யாவுமே நினைக்கவில்லை. நகர்ந்து உட்கார அவளுக்கு அப்போது திராணியும் இருக்கவில்லை. வருண் ஏதேனும் விபரீதமாக செய்து கொள்வானோ என்ற அச்சம் மேலோங்கியிருக்க, பரணி மட்டுமாக வீட்டிற்கு திரும்பியதை கவனித்தவளாக, “வருண் எங்க?” என்று வினவினாள்.
“ஹி இஸ் ஆல் ரைட். வந்துருவான். சும்மா கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றேன்னு சொன்னான். சமாதானமாயிட்டான்” என்று திவ்யா கையில் பிடித்திருந்த தேநீர் கோப்பையைக் கண்களால் ஜாடைகாட்டி குடி என்பது போலப் பார்க்க, திவ்யா தேநீர் கோப்பையை விடுத்து, அருகினில் அமர்ந்திருந்த பரணியின் கண்களை கூர்ந்து நோக்கினாள். சமாதானமாயிட்டான் என்ற வார்த்தை அவளை என்னவோ செய்தது.
“உன்ன யாரு அன்னைக்கு சமாதானம் பண்ணா?” என்று அவள் முன்பின் முரணாகக் கேட்ட போதும், அவள் கேள்வியின் அர்த்தம் பரணிக்குப் புரிந்தது தான்.
அதுவரையினில் காணாமல் போயிருந்த புன்னகை அவன் உதட்டில் வந்து ஒட்டிக்கொள்ள, “ம்ம் டி.ராஜேந்தர்” என்று இதழ் பிரிக்காமல் சொன்னான்.
என்ன தான் விளையாட்டாய் அவன் விடை சொன்னாலும், அந்த உதட்டின் அழுத்தத்தில் பொதிந்திருந்த லேசான துக்கத்தை திவ்யாவால் இன்று கண்டுகொள்ள முடிந்தது. வைத்த கண் வாங்காமல், புன்னகைக்கும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் கையில் பிடித்திருந்த தேநீர் கோப்பையைப் பிடித்து, அவள் உதட்டின் அருகே கொண்டு சென்றவன், “குடி” என்று மெல்லமாக கூறினான்.
அவன் விரல்கள் அவள் கைகளை அழுத்தமாக பிடித்திருக்க, அந்த அழுத்தம் அவன் சொல்லாத நூறு விஷயத்தையும் நொடியில் அவளுக்கு விளக்கியிருந்தது. அவன் பிடித்திருந்த தேநீர் கோப்பையை மறுகையால் இறுக்கமாக தானும் பொத்திக் கொண்டாள். முகத்தின் பாதியை கோப்பை மறைத்திருக்க, கண்கள் மட்டும் பரணியின் விழிகளில் சங்கமித்திருந்தன.
ஒரு மடக்கு தேநீரைப் பருகியவள், “ஸாரி” என்று வார்த்தைகளை சத்தமாக உச்சரிக்காமல் உதட்டை மட்டுமாக அசைக்க, விழிகளை, ‘வேண்டாம், சொல்லாதே’ என்று அசைத்து, “குடி” என்று மீண்டுமாக கூறினான்.
இருவருக்குள்ளும் நடக்கும் இந்த சம்பாஷனையை நாபி-ஜூனும் யஷ்வந்தும் பார்த்துக் கொண்டிருக்க, சற்றே சுய உணர்வு பெற்றவன் போல, அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்ட பரணி, “ஏதும் யோசிக்காத, வருண் இஸ் ஆல் ரைட்.” என்று பொதுவாக சொல்லிவிட்டு மேலே படிக்கட்டுகளில் ஏறியிருந்தான்.
அவன் மனதின் படபடப்பைக் கொஞ்சமும் அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எங்கே அவளருகில் அமர்ந்திருந்தால், மற்றவர் முன்னிலையில் ஏதேனும் கூத்தாகிப் போகுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடி வந்திருந்தான். ஆன போதும், அன்றைய தினத்தை எண்ணி வருந்தி அவள் மன்னிப்பு கேட்ட விதம் அவனை உருக்கியிருந்தது.
நிறைய முறை அவள் அவனிடம் மன்னிப்பு கோரி, அவளை ஏற்றுக் கொள்ளும் படிக்கு கேட்பது போல கற்பனை செய்து பார்த்திருக்கிறான். அது போன்ற சமயங்களில் என்ன பேசவேண்டும் என்பதையும், அவளிடம் திமிராக நடந்து கொள்ள வேண்டும் என்பது போலெல்லாம் வசனம் பேசிப்பார்த்துக் கொள்வான். ஆனால் நிஜத்தில் இன்று அவள் மன்னிப்பு கேட்டபோது, அவனுக்குத் தான் சங்கடமாகிப் போனது. உண்மையில் அவன் மனம் அவளை என்றோ மன்னித்து விட்டிருந்தது புரிந்தது.
அவள் தானாக சுயத்தை நினைவில் கொள்ளாமல் புலம்பியதை கேட்கவும், ‘அன்றைக்கு அவள் மனநிலை என்ன, அவள் வீட்டு நிலைமை என்ன என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமல் போனோமே’ என்று அவன் மீது தான் கோபம் வந்தது. இந்த வருண் தன் காதலை அவளிடம் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியபோது அவன் மனதில் ஏற்பட்ட கோபமும், ஆத்திரமும் சொல்லொணாதது.
அவள் அவனுக்கானவள் என்று தெரிந்தும், இவன் எப்படித் தன் காதலைச் சொல்லலாம் என்ற சிறுபிள்ளைத்தனமான கோபம் அது. வருணுக்கு எப்படி இவன் திவ்யாவை விரும்பியது தெரிந்திருக்கும்? வாய்ப்பில்லை தான். ஆனாலும் அவன் எப்படி அவளிடம் காதல் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. அதிலும் திவ்யாவின் படபடப்பும், அவள், “உன்ன யாரு சமாதானப்படுத்தினா?” என்று கேட்ட விதமுமே அவனுக்கு அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.
“எதையாவது பேசி, நீயா வெண்ணை தாழிய டமார்னு தரையில போட்டு சாத்திறாத! அவளா இப்போ தானே ரியலைஸ் பண்ணி யோசிக்கறா. அவளாவே இதைப் பத்தி, உன்னை பத்தி பேசுவா. வெயிட் பண்ணு” என்று திடும் திடுமென அடித்துக் கொண்ட இதயத்தை சமாதானப்படுத்தினான்.
இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்கள் வேறு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கழிந்து போயின. வருண் அவ்வளவாக திவ்யாவுடன் பேசுவதைத் தவிர்த்தான். அவள் இருக்கும் இடத்திலோ, அறையிலோ இல்லாமல் பார்த்துக் கொண்டான். சாப்பிடும் போதும் நாபி, யஷ்வந்த் அல்லது பரணியோ உடன் இருப்பர். அதனால், திவ்யாவுடன் தனியாக பேசும் சந்தர்ப்பமும் சூழலும் உருவாகாத வகையில் நடந்து கொண்டான். வருணின் மனம் புரிந்து திவ்யாவும் அவனை தொந்தரவு செய்யாமல் இருக்க பழகிக் கொண்டாள்.
சீரான சில மாதங்கள் இவ்வாறாக கழிந்திருக்க, விண்டர் மாதங்கள் முடிந்து ஸ்பிரிங்க் எனப்படும் வசந்தகாலம் துவங்கியிருக்க, அந்த ஊரில் அழகியலே சட்டென மாறிப்போனது போல உணர்ந்தாள் திவ்யா.
எங்கே பார்த்தாலும் பச்சை புல்வெளியும், அதில் பூத்துச் சிரிக்கும் பலவர்ண மலர்களையும் காண இயல்பான புத்துணர்ச்சி அவளை பிடித்துக் கொண்டது. அதே நேரம் பனிக்காலம் முடிந்திருந்த படியால், அலுவலகத்திற்குச் செல்வதும் இன்பமானதாக இருந்தது. அவர்களது வேலையும் வெகு மும்மரமாக தோய்வில்லாமல் சென்றது.
அமெரிக்கா வந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகிப் போயிருக்க, திவ்யா தன் வங்கி கடனில் பெரும்பகுதி அடைத்திருந்தாள். இந்தியாவில் வேலை பார்த்தபோது, மலைப்பான விஷயமாகத் தோன்றிய ஆறு லட்சம் வங்கிக் கடன் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பது நினைத்து அவளது மகிழ்ச்சி மேலும் கூடிற்று.
இப்படியாக நாட்கள் வெகுவேகமாக உருளத் துவங்க, அதனுடன் சேர்ந்து பரணியுடனான நட்பும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது என்றே சொல்ல வேண்டும். முன்னர் கல்லூரி காலத்தில் அவன் மீது ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அவனைப் பற்றி பெரியதாக அவளுக்கு எதுவும் தெரியாது. அவன் வீட்டினர், அவர்களுடன் அவனது உறவு எத்தகையது? அவனது பொழுது போக்கு என்ன என்றெல்லாம் அவளுக்குத் தெரிய வாய்க்கவில்லை.
இங்கே ஒரே வீட்டில் தங்கியிருக்க, அவனைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டாள். அவள் கேள்விப்படும் விஷயங்களும், நேரில் அவன் செய்கையும் அவளுக்கு பரணி மீதான மரியாதையை மேலும் வளர்ப்பது போலவே இருந்தது. வசந்த காலத்தில் வார இறுதியில் கையில் ஏதேனும் புத்தகத்துடன் அருகில் இருக்கும் பூங்காவிற்குச் சென்று நிம்மதியாக மரநிழலில் அமர்ந்து ஆழ்ந்து புத்தகம் வாசிக்கும் பரணியை திவ்யாவிற்குப் பிடித்திருந்தது.
இரவில் 7 மணிக்கு உணவை முடித்துக் கொண்டு மெல்ல சிறிது நேரம் நடை பயிலும் அவன் நிதானம் பிடித்தது. காலையில் எழும்போதே அனைவருக்குமாக காபி கலந்து வைத்துவிட்டு, அவரவர் வந்ததும் சூடான கோப்பையில் ஊற்றிக் கொடுத்து உபசரிக்கும் பாங்கு பிடித்தது. யஷ்வந்தோ, வருணோ அல்லது இவளோ சமைக்கும்போது, அருகே நின்று காய்வெட்டிக் கொடுத்தோ அல்லது வெறுமனே பேசிக் கொண்டோ நிற்கும் பதனம் பிடித்தது.
இதையெல்லாம் விட, இவளைக் காணும் நேரம், அதிலும் மற்றவர் இல்லாமல் இவர்கள் இருவரும் மட்டுமாக இருக்க நேர்ந்தால் தவறாது கண்சிமிட்டி புன்னகைக்கும் அவன் விழிகளை வெகுவாகப் பிடித்தது.
சில நாட்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு அவன் காலாற நடைபயிலச் செல்லும்போது, வேண்டுமென்றே இவளும் ஒட்டிக் கொள்வாள். அன்றைய கல்லூரி நாட்களைப் பற்றி ஏதேனும் பேசுவானோ என்று பெரிய நப்பாசை உண்டாகும். ஆனால், அவனோ பொதுப்படையான விஷயங்களைப் பற்றியே பேசுவான். அமெரிக்க மக்களின் வாழ்வியல், இந்தியர்கள் பற்றி, அவன் வாசித்த புத்தகங்கள், ஆர்வமாகப் பார்த்த சினிமா என்று அவர்கள் சம்பாஷணை பொதுப்படையாகவே இருக்கும்.
இப்படியாக இருவருக்குமான நெருக்கம் வளர்ந்து கொண்டே இருந்த போதிலும், இருவருமே தங்களது மனதைத் திறந்து இன்னதென்று எதுவும் சொல்லிக் கொள்ளாமல் நாட்களைக் கழித்தனர். அந்த வருடத்தின் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக நடந்து முடிந்திருக்க, புத்தாண்டு கோலாகலங்கள் முடிவடையும் சமயம் செய்திகளில் அப்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் என்ற புதுவிதமான நோய் குறித்து தரவுகள் வந்தவண்ணம் இருந்தன.
“இதுவும் இந்த சார்ஸ், பன்றி காய்ச்சல் மாதிரி வைரஸ் போல. எங்கையாவது பத்து பேருக்கு வரும். அதை பெருசா பேசி பேசி பயமுறுத்தறாங்க” என்று வீட்டில் விவாதித்துக் கொண்டனர். கொரோனா கொண்டு வரப்போகும் அச்சுறுத்தல் குறித்து அப்போதைக்கு அவர்கள் அஞ்சவில்லை.
இந்த வருடம், மெர்மெளண்ட் மாகாணத்தில் பனிப்பொழிவு சற்றே மிகுதியாக இருப்பதாக பேசிக் கொண்டார்கள். அதைத் தான் பெரும் கவலையென வீட்டினர் பேசிக் கொண்டனர். “ஃபிப்ரவரி ஆரம்பிச்சும் இன்னமும் பனிப்பொழியறது நிக்கலை பாருங்க. இன்னும் மார்ச் மாசம் முழுக்க விண்டர் இருக்கும் போல. இப்போவே டெம்பிரேச்சர் மைனஸ் ரெண்டு மூணுக்கு போயிருது நைட்ல. இன்னமும் கொஞ்சம் ஹார்ஷா கிளைமேட் மாறுமாம். லோக்கல் நியூஸ் பேப்பர்ல ஆர்டிக்கல் போட்டிருக்கான்” என்று பேசிக் கொண்டனர்.
வழக்கமான செவ்வாய் கிழமை போன்று தான் அன்றைய தினமும் விடிந்தது. அந்த வீட்டில் முதலில் எழுவது நாபி-ஜூன் தான். எழுந்ததும் தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு, வெளியே ஜாகிங் சென்று வருவாள். அன்றும் கிளம்பியிருந்தாள். அவளுக்கு அடுத்து எழுந்து கொள்வது பரணி. எழுந்து மெல்ல தனக்காக காபி கலந்து கொண்டு வெளியே போர்சில் அமர்ந்து இயற்கையை ரசித்த வண்ணம் காபி பருகி முடிப்பான். அதன் பின்னர், மற்றவருக்கு தேநீர் போட்டு வைத்துவிட்டு, காலை உணவுக்கு முட்டை, பிரட் என்று பிரிட்ஜில் இருந்து எடுத்து கிச்சன் மேடையில் வைத்துக் கொண்டிருந்தான்.
ஒன்றின் பின் ஒருவராக, “குட்மார்னிங்” சொல்லிக் கொண்டு, திவ்யா, யஷ்வந்த் மற்றும் வருணும் வந்து சேர்ந்துவிட்டால், அனைவருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு குளிக்கச் செல்வான். ஆளுக்கு தங்களுக்குத் தேவையானவாறு காலை சிற்றுண்டியை செய்து கொள்வர். பெரும்பாலும் யஷ்வந்த் பிரட்டை சுட, திவ்யா ஆம்லெட் போடுவாள். அன்றும் அப்படியாக பேசிக்கொண்டே ஆளுக்கு ஒரு வேலையை செய்து கொண்டிருக்க, நாபி-ஜூன் தன் ஜாகிங்கில் இருந்து வந்தவள் மூச்சிரைக்க அன்றைய நாளிதழை கிச்சன் மேடையில் வைத்தாள்.
“சீ த நியூஸ். சம்திங்க் வெரி இம்பார்டெண்ட்” என்று சொல்லிக் கொண்டே மெளமாய் வீற்றிருந்த தொலைக்காட்சியை உயிர்பித்து செய்தி சேனலைத் தேடினாள். அதில் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி அவசர உரையாற்றிக் கொண்டிருந்தார்.
“ஐ ஆஸ்க் ஆல் மை டியர் சிட்டிசன்ஸ் டு பீ சேஃப். இட் இஸ் எ பாண்டமிக். பீ வெரி சேஃப் தேன் சாரி” என்று அவர் பேசப் பேச, கீழே நியூஸ் ரீலில், கொரோனா வைரஸ் வெகு வேகமாகப் பரவுவதாகவும், இதனால் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியமும், இதற்கு இன்னமும் மருந்துகள் அறியப்படவில்லை என்ற உண்மையையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
“என்ன சொல்லறானுக? பாண்டமிக்னா. வைரஸ் உலகம் பூரா பரவியிருக்கா என்ன? ஐசொலேட் பண்ணனும்ங்கறான், லாக்டவுன்னு சொல்லறான்? என்ன நடக்குது?” என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள, கைப்பேசியில் அனைவருக்கும் அலுவலகத்தில் இருந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்ற செய்தி வந்திருந்தது.
அதுவரையிலும் சற்றே விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மெல்ல மெல்ல பயம் படர்ந்தது. “உலகம் முழுக்க பரவியிருக்குன்னா அப்போ இந்தியாவில இருக்க வீட்டு ஆளுங்க நிலைமை?” என்று கவலை கொண்டவர்களாக தத்தமது வீட்டினருக்கு அழைத்துப் பேசுவதில் மும்மரமாயினர். அவர்கள் கவலை கொள்ளும் படிக்கு இந்தியாவிலும் ஏன் உலகம் முழுக்கவே லாக்டவுன் செய்வதாக உலக சுகாதார மையம் அறிவுறுத்தியிருந்தது.