Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே.. 1

அத்தியாயம் 1

“ஓம் கணத்தியாக்கஷாய நமஹ்”

நட்சத்திர பூக்கள் வாரியிறைத்து அலங்கரித்திருந்த இருளாடையை சூடி நின்ற வான்மகள்.. அதை கலைந்து, வெளிச்சமெனும் பொன் வர்ண மேலாடை சூடிக்கொள்ளும் அதிகாலை வேளை. 



Advertisement

சென்னை மாநகரின் மிகவும் பிரபலமான திருமண மண்டபத்தில் மங்கள மேளங்கள் முழங்க, மாவிலைத்தோரணங்களும், வாழை மரங்களும் அந்த திருமண மண்டப வாசலை அலங்கரிக்க, அந்த திருமண மண்டபமே மிகவும் சுறுசுறுப்பாய் அன்று நடைபெறும் திருமணத்திற்காக தயாராக இருந்தது.

“வெற்றிவேல்செழியன் வெட்ஸ் கனிகா ”

என்ற பெயர் பலகை அந்த திருமண மண்டப வாசலில் விதவிதமான விலையுயர்ந்த ஆர்கிட் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருவோரை வசீகரித்துக்கொண்டிருந்தது.

Advertisement

வரவேற்பு பகுதியில் அன்று திருமண பந்தத்தில் நுழைய போகும் ஜோடிகளின் பெற்றோர் சந்தோஷத்தோடும், மனதில் நிறைவோடும் புன்னகை முகமாய் மணமக்களை வாழ்த்திட வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

Advertisement

மூகூர்த்த நேரம் நெருங்குவதை உணர்ந்து திருமணத்திற்கு என ஐயர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்து, அவரின் தேவையை கவனிக்க என பலரும் மேடையில் உலாவி கொண்டிருந்தனர் சுறுசுறுப்பாக.

மணமகன் அறையிலும் சரி, மணமகள் அறையிலும் சரி எல்லா திருமணத்திலும் நடக்கும் அனைத்து வித கலாட்டாக்களும், அவரவர் நண்பர்களால் செவ்வனே அரங்கேற்றப்பட்டு கொண்டிருந்தது. 

‘நீங்க என்னமோ பேசிக்கோங்க. எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்ல..’ எனும் விதமாய், 

Advertisement

வெளியே இன்னும் விடியல் எட்டி பார்க்கத்தால் இருந்த மெல்லிய இருளை ஜன்னல் வழியே வெறித்தபடி நின்றிருந்தான் வெற்றிவேல் செழியன்.

அவன் நிலை கண்ட அவனின் நண்பனில் ஒருவனான சதீஷ் அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்த மற்ற நண்பர்களை பார்த்து, 

“டேய்…! போதும் டா. ரொம்ப ஓவர் ஸ்பீட்ல போறீங்க. வண்டிய அப்படியே பிரேக் போட்டு நிறுத்திட்டு கொஞ்சம் அமைதியா இருக்கறீங்களா..? 

நீங்க பேசறது கொஞ்சம் எல்லை தாண்டி போகுது. அவன் கவனிக்காத வரை தான் உங்களுக்கு சேஃப்டி. 

அப்புறம் வர்ற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல..” என நண்பர்கள் காதில் மட்டும் கேட்கும் படி மெல்ல சொல்ல,

“ஏன் மச்சி.. கல்யாணமுன்னா நாலு ஃபிரண்ட்ஸ் வர்றதும், இப்படி கலாட்டா செய்யறதும் தானே உலக வழக்கு..!” என வெற்றியின் நட்பில் இருக்கும் ஒருவன் சொல்ல,

“ஆல் ரெடி செம காண்டுல தான் அவன் இருக்கான். நீ இப்படி மொக்க போட்டேன்னு வையி, ஒரு காட்டு காட்டிடுவான். அப்புறம் மூக்கு எது வாய் எதுன்னு தேடி பிடிக்க வேண்டி வந்திடும். அதனால..” என்ற சதீஷ், 

தான் கை கொண்டு முன்னும் பின்னும் மூடி, “சரியா…?” என்றதும் வெற்றியை ஒரு பார்வை பார்த்தவனும் அதன் பின் வாயை இறுக மூடிக்கொண்டான்.

“முகூர்த்தத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. கல்யாணத்த வேடிக்கை பார்க்க வந்த நம்ம ரெடியாகிட்டோம்.

மணவறையில உட்கார்ந்து தாலி கட்ட வேண்டியவன் இன்னும் ரெடி ஆகல. மொதல்ல அவன ரெடியாக சொல்லுடா…” என ஒருவன் சொல்ல,

இதற்கு முன் பேசியவன் இப்போதும் அடங்காமல், “அதானே..! மா…” என ஆரம்பிக்க, சதீஷ் பார்த்த பார்வையில் கப்பென வாயை மூடிக்கொண்டான்.

“உன்ன திருத்த முடியாது..” என்றுவிட்டு வெற்றியை நோக்கி சதீஷ் செல்ல,

“ஏன் மச்சி என்னை திருத்த நான் என்ன பரிச்சை பேப்பரா…?” என்றுவிட்டு, 

“ஈ…!” என பல்லை கட்டியவனை கண்டு காண்டான நட்புக்கள், அதற்கு பரிசை அவன் முதுகில் வஞ்சனை இன்றி கொடுக்க துவங்கினர்.

சதீஷ் திரும்பி அடிப்பவர்களை பார்த்து, “என்னோட சார்பாவும் ரெண்டு சேர்த்து போடுங்கடா அவனுக்கு. 

நேத்து இருந்து இப்படி இத்து போன பழைய மொக்க ஜோக்கா சொல்லி கொன்னுட்டு இருக்கான். மனசுல பழைய ஜோக் தங்கதுரைன்னு நினப்பு..” என்று விட்டு,

இத்தனை நடந்தும் கண்டு கொள்ளாமல் இன்னும் ஜன்னலுக்கு வெளியே மட்டும் பார்த்து கொண்டிருந்த வெற்றியின் தோளை தொட்டு,

“வெற்றி, நீ இந்த கல்யாணத்துக்கு முழு மனசோட தானே சம்மதம் சொன்ன..?” என கேட்க, 

எந்த வித தயக்கமோ மறுப்போ சிறிதும் இல்லாது திடமாய் “ஆமாம்..” என்றவனின் வார்த்தையில் மனம் குளிர, 

“அப்புறம் என்னடா இப்படி நிக்கற..?. 

போ, போய் ஃப்ரஷ்ஷா ரெடியாகி சும்மா மாப்பிள்ளை களையோட வா..” என துண்டை கொடுத்து பாத்ரூமினுள் அனுப்பிவிட்டு, 

அவன் மாற்ற வேண்டிய துணிகளை பொட்டியிலிருந்து எடுத்து வைத்தான் மற்றவர்களோடு வம்பு வளர்த்த படியே.

“சதீஷ், எங்கடா இன்னும் நம்ம டாக்டர் மச்சான காணோம்..?” என்ற ஒருவனின் கேள்விக்கு, 

“சார்.. அவரும் நம்மள மாதிரி சோசியல் சர்வீசர். 

எப்போ, எப்படி அழைப்பு வருமின்னு தெரியாது. வீட்டுல என்ன நடந்திருந்தாலும், அதபத்தி யோசிக்காம கடமைய முன்நிறுத்தி ஓடியே ஆகணும். 

எதாவது எமர்ஜென்சியா இருக்கும். கண்டிப்பா வந்திடுவான். நம்ம வெற்றியோட க்ளோஸ் ப்ரண்டாச்சே. மிஸ் பண்ண மாட்டான்..” என்றவன்,

தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெற்றி குளித்துவிட்டு வெளியே வந்ததும் தானும் ரெடியாகிட சென்றான். 

வெற்றி மணமகனுக்காய் எடுத்திருந்த வெண்பட்டு வேட்டி சட்டையில் சிறிதும் அவனின் கம்பீரம் குறையாது, மிடுக்காய் நிற்பதை பார்த்த நட்புகள் அனைவரும் வாயை பிளந்து பார்த்திருந்தனர் அவனின் அழகில்.

ஆறு அடிக்கும் மேல் ஆண்களே அன்னார்ந்து பார்க்கும் அசாத்திய உயரத்தில், தனது தொழிலை முன்னிட்டு செய்யும் உடற்பயிற்சியால் வந்த சிக்ஸ்பேக்ஸ் பாடியோடு, கச்சிதமாய் இதழ் மேல் வீற்றிருக்கும் மீசையோடு, மாநிறமாய் இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சார உடைக்கே உரித்தான அழகோடு நின்றிருந்தவனை பார்த்து, 

“மச்சி..! இன்னைக்கு பொண்ணு மயக்கம் போட்டு விழுறது கன்ஃபார்ம். 

இவன பார்த்தா எனக்கே கட்டிபிடிச்சு கிஸ்ஸடிக்க தோணுதே..!” என சொல்ல, 

மற்றவர்களும் அதை வழி மொழிந்து கலாய்க்க ஆரம்பிக்க, 

வெற்றியோ அதுவரை இருந்த விரைப்பு தன்மை நீங்க.. மெல்லிய புன்னகையை படரவிட்டான் தன் இதழில்.

அந்த புன்னகை மேலும் அவனின் வசீகரத்தை கூட்ட, 

“ஓ… !!!” வென மீண்டும் தங்களின் ஆரவார கலாட்டக்களை தங்களுக்கே உரித்தான பாணியில் செயல்படுத்தி, வெற்றியை திக்குமுக்காட செய்து அவனை வெக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தனர் அவனின் நட்புக்கள்.

முகூர்த்ததிற்காக ஐயர் மணமக்களை அழைக்க, அதை சொல்ல அந்த அறைக்கு வந்தார் வெற்றிவேல் செழியனின் தாய் சந்திரா. 

அங்கு மகனின் மணக்கோலமும், அவன் முகத்தில் இருந்த சிறு வெக்கம் கலந்த மகிழ்ச்சியையும் கண்டு, தனது நீண்ட நாள் கனவு இன்று ஈடேறி இருப்பதை நினைத்து கண்ணில் ஆனந்த கண்ணிர் வழிய நின்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!