Skip to content
Post Views: 4,539
நிறம் பாராத காதல்
அத்தியாயம்.18
மாறனின் காரில் ரணதீரனும் வைதேகியும் அமர்ந்து இருக்க,”மாமா… நேரா நம்ம ஹாஸ்பிடல் போங்க, வைதேகி காலுல ரத்தம் வந்துகிட்டே இருக்கு” என்ற ரணதீரனின் குரலில் பதற்றம் நிறைந்து இருந்தது.
“என்ன மச்சான், வைதேகிக்கு எப்படி அடிபட்டுச்சு?” என்று மாறன் கேட்டதும்,”அண்ணா…என் மாமாவோட ஆளுங்க தான் எங்களைத் துரத்திகிட்டு வந்தாங்க” என்ற வைதேகி சற்றும் முன் நடந்த சம்பாவத்தை சொல்லி முடித்தாள்.
Advertisement
“ஐயோ… அப்போ நீ இந்த ஊருல இருக்குறது உன் மாமாவுக்குத் தெரிந்து போச்சா?”என்ற மாறனின் கேள்வியில் வைதேகியின் முகத்தில் பயம் குடிக்கொண்டது.
“மாமா… வைதேகிக்கு என்ன தான் பிரச்சனை? யாரு அவங்கெல்லாம்?” என்று ரணதீரன் கேட்டதும், “அவங்கயெல்லாம் பக்கத்து ஊருல பெரிய தலை ரங்கராவ் இருக்காரே அவங்க ஆளுங்க”என்று மாறன் சொல்ல,”சரி அவங்க ஏன் வைதேகியை துரத்திகிட்டு வரணும்? “என்று ரணதீரன் புரியாமல் கேட்டான்.
“எல்லாதுக்கும் காரணம் சொத்து தான் மச்சான்” என்று மாறன் சொன்னதும், தன் அருகே கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்து இருந்த வைதேகியை பார்த்தவன், “என்ன சொத்துக்காகவா? ஏன்? நீ என்ன அவ்ளோ பெரிய பணக்காரியா?” என்று ரணதீரன் கேட்டதும்,
Advertisement
“என்ன பணக்காரியா!? வைதேகி கோடிஸ்வரி மச்சான், பக்கத்து ஊருல இருக்குற முக்காவாசி சொத்துக்கு ஒரே வாரிசு வைதேகி தான்” என்று மாறன் சொன்னதும் ரணதீரன் வைதேகியை ஆச்சிரியமாகப் பார்த்தான்.
Advertisement
“அண்ணா… நான் கோடிஸ்வரி எல்லாம் இல்லை, நான் ஒரு டாக்டர், இது மட்டும் தான் என் அடையாளம். இந்தப் பணம் காசை எல்லாம் என்னைக்குமே நான் பெருசா நினைச்சது இல்லை, என் அம்மா அப்பாவைக் காவு வாங்கிய இந்தப் பணம் எனக்குத் தேவையே இல்லை” என்ற வைதேகி இயல்புக்கு மாறாகச் சத்தம் போட்டுப் பேசியவள் அப்படியே மயங்கி ரணதீரனின் தோளில் சரிந்தாள்.
வைதேகியின் நிலையைப் பார்த்து,”ஐயோ மாமா சீக்கிரமா ஹாஸ்பிடல் போங்க” என்று ரணதீரன் பதறியதும் அடுத்த சில நிமிடங்களில் மாறன் வைதேகியை மருத்துவமனையில் சேர்த்து அவளுக்குச் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்தான்.
வைதேகியின் பாதி கதையைக் கேட்ட ரணதீரனுக்கு அந்தக் கணமே அவளை இவன் தவறாக நினைத்ததை எண்ணி கவலைப்பட்டவன், “மாமா…அப்படியே நம்ம டாக்டர்க்கிட்ட சொல்லி, ஏன் வைதேகிக்கு அடிக்கடி மயக்கம் வருதுன்னு செக் பண்ண சொல்லுங்க” என்ற ரணதீரனின் அக்கறையயை பார்த்து மாறனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.
Advertisement
“செக் பண்ண சொல்லலாம் மச்சான், ஆமா உனக்கு ஏதும் அடிப்படலையே” என்று மாறன் கேக்க, “வைதேகியை துரத்திகிட்டு வந்த ஆளுங்க எல்லாம் ரெண்டே தட்டுல ஓடிப் போயிட்டாங்க மாமா. ஆனா பாவம் வைதேகி தான் பள்ளத்தாக்குல விழுந்ததும் ரொம்ப பயந்துட்டாள், பழசை எல்லாம் எண்ணி என்னைப் பழி வாங்கிடாதீங்கன்னு அழ ஆரம்பிச்சிட்டாள், பார்க்கத் தான் தைரியமா இருக்குற மாதிரி என்னை மிரட்டுறது, ஆனா சரியான அழு மூஞ்சி மாமா உங்க தங்கச்சி” என்ற ரணதீரன் முதல் முறையாக மாறனிடம் மணம் திறந்து சிரித்து பேசுவதை பார்த்த மாறனுக்கு இந்த ரணதீரன் புதிதாகத் தெரிந்தான்.
“பாவம் மச்சான் வைதேகி… பெத்த அம்மா அப்பாவைப் பணத்துக்காகத் தன் மாமனே சாகடித்த கதை தெரியாம அவனை நம்பி இந்த ஊருக்கு வந்து, இன்னைக்கு அவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம நம்ம வீட்டுல மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலையில இருக்குறாள்” என்று மாறன் சொன்னதும், “என்ன சொல்லுறீங்க, வைதேகிக்கு அம்மா அப்பா இல்லையா?” என்று கேட்ட ரணதீரனின் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக வைதேகி யாரென்ற உண்மையைச் சொல்லத் தொடங்கினான் மாறன்.
கனகா மற்றும் கனகராஜின் ஒரே செல்ல மகள் தான் வைதேகி.
வைதேகியின் அம்மா கனகா கோடிஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
கனகா வெளிநாட்டிற்கு படிக்கப் போன இடத்தில் தாய் தந்தையர் இல்லாத கனகராஜ் மீது காதல்க் கொண்டு அவரையே தன் பெற்றோர்களின் விருப்பமின்றி மணம் முடித்துக்கொண்டார்.
கனகாவின் அப்பா, அதாவது வைதேகியின் தாத்தா அவர் குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள தன் மகளையே ஒதுக்கி வைத்ததால் கனகாவும் அவரின் கணவனும் கனடாவிலேயே வாழ்ந்து வந்தார்கள்.
கனகா கனகராஜின் காதலுக்கு பரிசாக வைதேகி பிறந்ததும் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
பேத்தி பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு வைதேகியின் தாத்தாவும் பாட்டியும் மீண்டும் வைதேகியின் அம்மா அப்பாவை ஏற்றுக்கொண்டார்கள்.
மூன்று வருடத்திற்கு ஒரு முறையாவது வைதேகியை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு கனடாவிலிருந்து இந்தியா வந்து செல்வது வைதேகியின் பெற்றோர்களுக்கு வழக்கமாக இருந்தது.
வைதேகியின் அம்மா கனகாவிற்கு தூரத்து அண்ணன் முறை தான் ரங்காராவ். வைதேகி அவனை மாமா என்று உரிமையோடு தான் அழைப்பாள்.
வைதேகியின் அம்மா கனடாவிலேயே தங்கி இருந்ததால் இந்தியாவில் இருக்கும் அவரது பூர்விக சொத்துக்களை கண்காணிக்கும் பொறுப்பை ரங்காராவ் பார்த்து வந்தான்.
ஒரு முறை வைதேகியின் அம்மா இந்தியாவிற்கு வந்தபோது கணக்கு வழக்குகளைக் கேட்டதும், ரங்காராவ் ஆள் வைத்து வைதேகியின் அம்மா சென்ற வாகனத்தை அடித்துத் தூக்க சொன்னவன், வைதேகியின் அம்மா கனகா கார் விபத்தில் இறந்து விட்டதாக அனைவரையும் நம்பவும் வைத்தான்.
தன் அம்மாவின் இறுதி சடங்கை முடிக்க வைதேகியும் அவளின் அப்பா கனகராஜும் கனடாவிலிருந்து இந்தியா வந்தவர்களுக்குக் கனகாவின் மரணத்திற்கு காரணம் விபத்து இல்லை கொலை என்ற உண்மை தெரியாமல் போனது.
சிறுவயதிலேயே தன் அம்மாவை இழந்த வைதேகிக்கு தாயுமானவனாக மாறினார் அவளின் அப்பா கனகராஜ். தன் மனைவியின் மரணத்திற்கு பிறகு வைதேகியுடன் கனடாவில் வாழ்ந்து வந்த கனகராஜூக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்களை பற்றிய எந்தத் தேவையும் இல்லாமல் போனது.
தன் மகளுக்கு அவள் விருப்பப்பட்ட வாழ்க்கையயை அமைத்துத் தர வேண்டும் என்று எண்ணிய கனகராஜ் வைதேகியை அவளின் ஆசைப்படியே மருத்துவராக்கி அழகு பார்த்தார்.
வைதேகிக்கு ஓவியம், நடனம், சிலம்பம் என்று எல்லா கலைகளிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தக் காரணத்தால் கனடாவில் தன் தந்தையுடன் நிறைவான வாழ்க்கையயை வாழ்ந்து வந்தாள் வைதேகி.
இந்தியாவில் வசிக்கும் வைதேகியின் தாத்தா பாட்டி முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இரண்டு வருடத்திற்கு முன்னதாக வைதேகியின் அப்பா கனகராஜை தங்களை வந்து பார்க்கும்ப்படி வேண்டுகோள் வைக்க, கனகராஜ் மட்டும் இந்தியா சென்று வைதேகியின் தாத்தா பாட்டியைப் பார்த்து வந்தார்.
இந்தியா சென்று வந்த ரெண்டே நாளில் வைதேகியின் அப்பாவுக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட, அவரை மருத்துவமனையில் அனுமதித்து வைதேகி தனி ஒரு ஆளாகத் தன் தந்தையை பார்த்துக் கொண்டாள்.
ஒரு வாரக் காலம் வைதேகியின் அப்பா உயிருக்குப் போராடியவர் வைதேகியை அனாதையாகத் தவிக்க விட்டு இறைவனடி சேர்ந்தார்.
கனடா நாட்டில் தன் தந்தையை தவிர எந்தச் சொந்தமும் இல்லாத வைதேகிக்கு இன்று தன் தந்தையும் தன்னோடு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் நடைப்பினமாக மாறியவளுக்கு அவளின் உயிர் தோழி கண்மணி மட்டுமே ஆறுதலாக இருந்தாள்.
தன் தந்தை இறந்த விஷயத்தை இந்தியாவில் வசிக்கும் தன் அன்னையின் குடும்பத்துக்கு வைதேகி தெரியப்படுத்த, அவர்கள் அனைவரும் கனடாவில் அனாதையாக இருக்கும் வைதேகியை இந்தியாவிற்கே வந்துவிடும்ப்படி கெஞ்சி கேட்டுக்கொண்டார்கள்.
சில காலம் எங்கும் செல்லாமல் வைதேகி கனடாவில் தன் வீட்டிலேயே அடைப்பட்டவள் மீண்டும் மருத்துமனை சென்று அவள் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.
அவள் தனிமையை மறக்க அவளாகத் தேடி சென்று மன நலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்குச் சேவை செய்யத் தொடங்கி இருந்தாள்.
அப்படி பட்ட சூழ்நிலையில் தான்,
“டொரோண்டோ மனநல சிக்கலால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகளின் வாழ்க்கையை சீரமைத்து, அவர்களைச் சாதாரண வாழ்க்கைக்கு மீட்டுத்தந்த மனநல மருத்துவர் சித்ரா @ சித்ரவைதேகி கனடா சமூக நலத்துறை சார்பில் விருது வாங்கினாள்.
இலவச சேவையாக இந்தச் சிகிச்சைகளை அளித்த சித்ரவைதேகி, குழந்தைகளின் நலனுக்காகத் தன்னுடைய நேரத்தையும், அறிவையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார். குழந்தைகளின் மன அழுத்தம், பேச்சுத் தடைகள், சமூக இடைவெளிகள் போன்ற சிக்கல்களை அணுகுவதில் அவர் புது முன்முயற்சிகளை எடுத்துக் கொண்டார். இதன் விளைவாக, அவர்கள் அனைவரும் தற்போது கல்வியிலும், சமூக வாழ்க்கையிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ரவைதேகி தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார்.
அவருடைய அரிய சேவையைப் பாராட்டி, சமூக நலத்துறை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் பல்வேறு சமூகத் தலைவர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சித்ரவைதேகிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தக் குழந்தைகள் மீண்டும் சிரிக்கத் தொடங்கியதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, என உருக்கமாகத் தெரிவித்தார் சித்ரவைதேகி.
இந்தச் சாதனை, மருத்துவ சமூகத்திலும், சமூக சேவைகளிலும் ஒரு மிளிரும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது” என்ற செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் இணைய வலைத்தளங்களிலும் பெரிதாகப் பேசப்பட்டது.
இந்தச் செய்தியைக் கூகிள் மூலம் ரணதீரனின் சித்தி மகன் விக்ரமும் படித்ததின் பலனாகத் தான் வைதேகியை பற்றிய உண்மையும் அவனுக்குத் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிமையை வெறுக்கும் வைதேகி ஒரு நாளில் ஏழு மணி நேரத்தைத் தவிர மீதம் உள்ள நேரத்தில் தன் மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்தவளுக்கு இந்தியாவிலிருந்து அவள் தாத்தா மரண படுக்கையில் இருப்பதாகவும், கடைசி ஆசையாக வைதேகியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதின் விளைவாகத் தனி ஆளாக வைதேகி கனடாவிலிருந்து இந்தியா வந்தவளை வரவேற்க விமான நிலையத்திற்கே வருகை தந்து இருந்தார் இவர்களது தூரத்து சொந்தகாரர் ரங்காராவ்.
ரங்காராவின் வயது அறுபதை தாண்டியுருக்கும், இருப்பினும் பண வெறி பிடித்த ஆசாமி.
ரங்காராவின் மனைவி ஆண் மகனைப் பெற்றெடுத்த கணமே இறைவனடி சேர்ந்தார்.
ரங்காராவ் மகன் பவானிசங்கர் பிறப்பால் ஆண்மகனாக இருந்தாலும் அவன் வளர வளரத் திருநங்கையாக மாறியவனை அடித்துத் துன்பறுத்தி ரங்காராவ் அவனை வைதேகிக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டம் தீட்டி வைதேகியை கனடாவிலிருந்து இந்தியா வர வைத்த உண்மையைத் தெரியாமல் வைதேகியும் தன் தாத்தா பாட்டியைப் பார்க்க இரண்டு வார விடுமுறையில் இந்தியா வந்து இறங்கினாள்.
வைதேகியை வீட்டுக்கு அழைத்து வந்த ரங்காராவ் முதலில் அன்பாக பேசத் தொடங்கியவன், அடுத்த நாளே வைதேகிக்கும் ரங்காராவ் மகன் பவானி சங்கர்க்கும் கல்யாணத்தை நடத்தி வைக்குமாறு வைதேகியின் தாத்தா பாட்டியிடம் சம்மதம் கேட்டான்.
“எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை, நான் தாத்தா பாட்டியைப் பார்க்கத் தான் இந்தியா வந்தேன்” என்ற வைதேகியை, “நீ என் மகனைத் திருமணம் செய்துக்கொள்ள வில்லை என்றால் உன் அம்மா அப்பாவுக்கு நேர்ந்த அதே கதி தான் உனக்கும் நடக்கும்” என்ற ரங்காராவின் இன்னோரு முகத்தைப் பார்த்து அங்குள்ள அனைவரும் அரண்டு போனார்கள்.
“என்ன சொல்லுறீங்க, என் அம்மா அப்பா மரணத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?” என்று அதிர்ச்சியுடம் வைதேகி கேட்க,
“உன்னோட அம்மா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு கனடாவுக்கு ஓடிப் போனவள் திடிர்னு வந்து இந்தச் சொத்தைப் பற்றிய கணக்கு வழக்குகளைக் கேட்க ஆரம்பித்தாள், அதான் உன் அம்மாவைப் போட்டுத் தள்ளிட்டேன்” என்ற ரங்காராவின் திமிரான வார்த்தையைக் கேட்டு வைதேகிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
“உன் அம்மா போன பின்னாடி இந்தச் சொத்து முழுவதும் என் பெயருக்கு வரும்னு பார்த்தா, இந்தக் கிழவன் எல்லா சொதத்தையும் உன் அப்பன் பேர்லயும் உன் பேர்லயும் எழுதி வச்சிட்டான்,
இந்தச் சொத்தை நான் அனுபவிக்கனும்னா உன் அப்பன் சாகணும்னு திட்டம் போட்டுத் தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உன் அப்பா இங்க வந்து இருக்கும்போது அந்த ஆளு சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா அவனைச் சாகடிக்கும் விஷயத்தைக் கலந்து அவன் கதையை முடிக்கத் திட்டம் போட்டேன்.
என் திட்டப்படி உன் அப்பனும் போய்ச் சேர்ந்துட்டான். இப்போ இருக்குறது நீ மட்டும் தான். நீ ஒரு ஆளு தான் இந்தக் கோடி கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு, நீயும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிளையும் கையெழுத்து போட்டால் மட்டுமே இந்தச் சொத்தை விற்க முடியும்னு உயில் இருக்கு.
அதனால தான் உன்னை என் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து இந்தச் சொத்து முழுதும் எனக்கு மட்டுமே கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாட்டைப் பண்ணி இருக்கேன்” என்ற ரங்காராவின் வார்த்தையைக் கேட்டு வைதேகி தலையில் இடி இறங்கியதை போல உணர்ந்தவள் அங்கிருந்து தப்பிக்க வழி இல்லாமல் தனி ஒருவளாகச் சிக்கி கொண்டாள்.
வைதேகியின் தாத்தா பாட்டிக்கும் கூட ரங்காராவின் சுயரூபம் இது தான் என்று தெரிந்த பிறகு தன் பேத்தியை எப்படியாவது அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார்கள்.
வைதேகியின் பாஸ்போர்ட் அவளது கைபேசி என்று அணைத்தும் ரங்காராவின் வசம் இருக்க, அவன் கட்டுப்பாட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தவித்துப் போனாள் வைதேகி.
விடிந்தால் வைதேகிக்கும் பவானிசங்கருக்கும் கல்யாணம் என்ற நிலைமையில் அங்கிருந்து விடுபட ஒரே வழி திருமணம் நடக்க இருக்கும் கோவிலிலிருந்து தப்பிப்பது மட்டும் தான் என்று எண்ணிய வைதேகி மறுநாள் காலை மணப்பெண் அலங்காரத்தில் கோவிலுக்கும் சென்றாள்.
மணவறையில் ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டு இருந்த தருணம் அங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று எண்ணிய வைதேகி அதற்கு உண்டான வழியைத் தேட, “ஐயா ஐயா… உங்க பையன் பவானி இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைனு லெட்டர் எழுதி வச்சிட்டு இங்க இருந்து ஓடிப் போயிட்டாரு” என்று ஒருவன் சொல்ல, திருமணம் நின்று போன செய்தியைக் கேட்டு வைதேகி மனதார மகிழ்ச்சி அடைந்தாள்.
“அவன் ஓடிப் போனால் என்ன, எனக்கு இந்தச் சொத்து முக்கியம், இப்போ இவளை விட்டால் என்னால இந்தச் சொத்தை அனுபவிக்கவே முடியாது, அதனால என் பையன்க்கட்ட வேண்டிய தாலியை நானே இவ கழுத்துல கட்டி இவளோட சேர்த்து இவனால வரப் போற கோடி கணக்கான சொத்தையும் நானே அனுபவிச்சுக்கிறேன்” என்ற ரங்காராவ் மணவறையிலிருந்து தாலியை எடுத்து வந்தவன், வலுகட்டாயமாக வைதேகியின் கழுத்தில் கட்ட முயற்சி செய்தவனை அருகே இருந்த குத்து விளக்கைக்கொண்டு ஓங்கி ரங்காராவ் தலையில் அடித்தாள் வைதேகி.
வைதேகி அவனை அடித்த வேகத்தில் ரங்காராவ் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தவனை பார்த்து வைதேகி பயத்தில் உறைந்து போக, “அம்மாடி சித்ரா, நீ இங்க இருந்து தப்பிச்சு போயிடுமா, இந்தக் கொலைகாரப்பாவி இனி உன்னைச் சும்மாவே விடமாட்டான்” என்று வைதேகியின் தாத்தாவும் பாட்டியும் தன் பேத்தியின் வாழ்க்கையை காப்பாற்றி அவளைக் கோவிலிலிருந்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
“டேய் அவளை விடாதீங்க டா” என்று கர்ஜித்த ரங்காராவ் அதிகப்படியான ரத்த போக்கில் மயங்கி விழுந்தவனை பார்த்துப் பயந்த வைதேகி கோவிலிலிருந்து கால் போன போக்கில் தப்பித்து ஓடி வந்தவள் தான் மாறனின் கார் எதிரே வந்து விழுந்தாள், என்ற உண்மையைத் தெரிந்துக்கொண்ட ரணதீரனின் இதயம் வைதேகியை நினைத்து ரணமாக மாறிப்போனது.
“பாவம் மச்சான் வைதேகி, அவளோட அம்மா அப்பா ஏன் இறந்தங்கனு தெரியாம இந்தப் பொண்ணு அந்த ரங்காராவ்கிட்ட வந்து மாட்டிக்கிட்டாள், ஆனா எந்தச் சாமி புண்ணியமோ அன்னைக்கு வைதேகி அவன்கிட்ட இருந்து தப்பிச்சி இப்போ நம்மகிட்ட பாதுக்கப்பா இருக்குறாள்” என்று மாறன் சொன்னதும், ரணதீரனுக்கு வைதேகியின் வாழ்க்கையை எண்ணி பாவமாக இருந்தது.
“ஏன் மாமா… இப்போ அந்த ரங்காராவ்க்கு என்ன ஆச்சு? அப்போ அவன் ஆளுங்க தான் எங்கள துரத்திகிட்டு வந்தாங்களா?” என்று ரணதீரன் கேக்க, “இருக்கலாம் மச்சான்! நான் ரெண்டு நாள் முன்னாடி வைதேகி கனடா போகப் பாஸ்போர்ட் ரெடி பண்ண என் நண்பனைப் பார்க்கப் போனபோது அந்த ரங்காராவை பற்றி விசார்க்க சொன்னேன்,
நம்ம வைதேகி அடித்த அடியில அந்த ஆளு கோமாக்கு போயிட்டான்னு சொன்னாங்க, ஒரு வேளை இப்போ அவன் குணமாகிட்டான்னு நினைக்கிறேன், அதான் வைதேகியை தேடி ஆளை அனுப்பி இருக்கான்” என்று மாறன் சொன்னதும்,
“அடுத்த முறை எவனாவது வைதேகியை தேடி வரட்டும், அவனை உயிரோட என் கம்பெனி பொம்மைக்குள்ள வச்சி பாடை கட்ட ஏற்பாடு பண்றேன்” என்ற ரணதீரனின் கோவத்தைக் கண்டு மாறன் கேள்வியாக அவனைப் பார்த்தான்.
வைதேகியை பற்றிய முழு விவரத்தையும் கேட்டுத் தெரிந்துக் கொண்ட ரணதீரனுக்கு அவளை முதல் முறை இவன் சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்த நிலையில், “சார்…மேடம் கண் விழிச்சிட்டாங்க, ஆனா ரொம்ப கத்தி அடம் பிடிக்கிறாங்க கொஞ்சம் சீக்கிரம் வந்து பாருங்க” என்று செவிலியர் சொன்னதும், வைதேகிக்கு என்னானதோ ஏதானதோ என்று பதறிப் போய் மாறனும் ரணதீரனும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தார்கள்.
“டாக்டர் ப்ளீஸ்” என்று வைதேகி அமுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவள் அருகே சென்ற ரணதீரன், “என்னாச்சு ஏன் அழற? ” என்று கேட்க, “திரா…ப்ளீஸ், இவங்கள எனக்கு ஊசி மட்டும் போட வேண்டாம்னு சொல்லுங்க, எவ்வளவு மாத்திரை வேணும்னாலும் கொடுக்கச் சொல்லுங்க, ஊசி மட்டும் வேண்டாம்” என்று கண்களில் கண்ணீருடன் சிறு குழந்தையைப் போல அழும் பெண் அவளைப் பார்த்து ரணதீரன் சத்தமாகச் சிரித்தான்.
“அண்ணா… நீங்களாவது சொல்லுங்களேன் எனக்கு ஊசி வேண்டாம், அது ரொம்ப வலிக்கும்.” என்று வைதேகி மாறனிடம் மன்றாடும் சமயம்,
“டாக்டர் நீங்க ஊசி போடுங்க” என்ற ரணதீரன், வைதேகியின் இடது கையை அழுத்தமாகக் கிள்ளியதும்,
“ஆ….” என்று வைதேகி கத்தும் சமயம், டாக்டர் வைதேகிக்கு அவள் வலது கையில் ஊசியைச் செலுத்த,
“இப்போ பார்த்தியா ஊசி போட்ட வலியே உனக்குத் தெரியல” என்ற ரணதீரனை கொலை வெறியில் பார்த்தாள் வைதேகி.
“ஒரு வலியை மறக்க இன்னோரு வலியையே வழியா சொல்லுறிங்களா! இருங்க என் வலியை நீங்களும் அனுபவிங்க”என்றவள் சட்டென்று ரணதீரனின் கையைப் பிடித்துத் தன் பல் தடம் பதியும் அளவுக்குக் கடித்து வைத்தவளின் செயலில்,
“ஆ…. வலிக்குது டி குட்டி சாத்தான்” என்று அலறும் ரணதீரனின் அலறலைக் கேட்டு வைதேகி சத்தமாகச் சிரித்தாள்.
இவர்கள் சண்டையைப் பார்த்து,”இங்க என்ன நடக்குது!? ரெண்டு பேரும் மாறி மாறிக் கிள்ளியும் கடிச்சும் விளையாடிக்குறாங்க. ஒருவேளை இவங்களுக்குள்ள காதல் மலர்ந்திடுமா?”என்று எண்ணிய மாறன் இவர்களின் செல்லச் சண்டையை ரசித்துக்கொண்டு இருந்தான்.
error: Content is protected !!