Skip to content
Post Views: 2,549
꧁☆☬ லயம் – 3 ☬☆꧂
” எவன்டா எங்களையே வம்புக்கு இழுக்கிறது , மவனே, உன்னை அடிச்சு துவைச்சு கிளிப் போட்டு காயவைக்கல நான்… ” என சட்டென கூறியபடி திரும்பி பார்த்து அதிர்ந்து விழி விரித்து நின்றாள் ரோஜா. அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவே இல்லை. மற்றவளோ அவனை கண்டதும் மகிழ்ந்து, உற்சாகமாய் விழிகளும் சிரிக்க, அவனை நெருங்கி அருகில் சென்றாள்.
Advertisement
” லாண்டரி பிசினஸ் ஆரம்பிக்க போறிங்களா ? எப்போ இருந்து.., இல்லை, பொண்டாட்டிக்கு துவைச்சு கொடுக்க ட்ரைனிங்கா., ? ” என்றாள் சிரித்து கொண்டே.
Advertisement
” வாலு.., வாலு.., கொஞ்சமாவது பாஸ்னு பயம் இருக்கா., ” விளையாட்டாய் அவள் தலையில் கொட்டி சிரித்து நின்றவனை கண்டதும் ரோஜாவோ திகைத்து நின்றிருந்தாள்.
Advertisement
ஏனெனில் இருவரும் அங்கே நடந்து கொள்ளும் முறையே வேறல்லவா. பணி புரியும் பெண்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல பத்தடி தள்ளி நடக்க வைப்பான். அவனை எப்போதேனும் பணி நிமித்தம் அறைக்கு சென்று காண நேர்ந்தால் கூட அலுவலக பேச்சு தவிர்த்து ஒரு வார்த்தை வாயில் இருந்து வெளி வராது. அழகும், பணமும் இருக்க, சுற்றி பெண்களும் உடன் இருந்தும், கண்ணியம் காத்து நிற்பவன் என்பதால் அவன் மீது அதீத மரியாதை மனதில் உண்டு. சுபாவும் அலுவலகத்தில் வேலை தவிர்த்து எதுவும் பேச மாட்டாள். அவள் குடும்பம் பற்றி கூட தற்போது தான் தெரியும்., காலேஜ் பிரண்ட் ஒருத்தி மூலம் இங்கே வேலைக்கு வந்திருந்தாலும், வந்த பின் தான் பணியின் மூலமே சுபாவுடன் நல்ல பழக்கம் உண்டானது.
Advertisement
இன்றோ இவளை அடிக்க, கண நேரத்தில் கோபத்தில் முகம் மாறியது. ” அதுவும் துவைத்து தருவானாமே.., என் முன்னாடியே எப்படி இவன் சொல்லுறான்., உன்னை எல்லாம்…. ” தன் எண்ணம் போகும் பாதையில் இன்னுமே அதிர்ந்தாள். ” நான் ஏன் இப்படி நினைக்கிறேன், அவங்க என்ன பண்ணா எனக்கு என்ன., நான் ஏன் கோபப்படணும்..,” மாறி மாறி அவன், அவள் எண்ணங்களை அலைக்கழிக்க தடுமாறி தான் போனாள்.
“ஹலோ., பாஸ் எல்லாம் ஆபீஸ்ல தான். இங்கே என் அண்ணன் மட்டும் தான். ஓகே.,” சுபா சொல்வதை கேட்டவுடன், ரோஜாவின் மனம் ஆசுவாசம் கொள்வதை அவள் கண்கள் வெளிப்படையாய் காண்பித்து கொடுத்தது. இருந்தும் மீண்டும் ஒரு மிரட்சி கண்ணில் தோன்றியது.
” என்னடி ஆச்சு., ரோஸ் வாடி போச்சு.., ” என அவளை திரும்பி பார்த்து சுபா வம்பிழுக்க, நொடி நேரத்தில் தடுமாறியவள், பின் சுதாரித்து நிமிர்ந்தாள். அவனை கண்ட நொடி முதல் அவள் முகத்தில் தோன்றிய அத்தனை பாவனைகளும் தவறாமல் ராஜாவின் கண்களை சென்றடைந்தது.
” இல்லை., சார் உனக்கு அண்ணனா.., எ..எப்படி.., எனக்கு தெரியாதே ..” என திக்கி திணற ..,
” ரிலாக்ஸ் .., எனக்கு அவர் அண்ணன் தான்., பெரியப்பா பையன்., ” என கண்ணை சிமிட்ட.
” அப்போ ஆபீஸ்ல ஏன் யாரோ மாதிரி நடந்துக்கிறிங்க.,? ” என்றால் குழப்பமாய். அப்போதும் ராஜாவின் முகம் காண்பதை தவிர்க்க தான் செய்தாள்.
” அதுவா.., நான் ரிலேஷன்னு தெரிஞ்சா நீங்க எல்லாம் என்னை பக்கத்துல நெருங்க விடுவிங்களா.., தள்ளி தானே நிறுத்துவீங்க., அதுக்கு தான் சொல்லல., “
” உன்னை.., சாரி உங்களை பத்தி தெரியாம நான் விளையாட்டா எத்தனை தடவை பேசி இருக்கேன்., ” என்க.
“இங்கே பாரு., நீ என் பிரண்ட்.., இந்த வாங்க போங்கன்னு மரியாதையை கொடுத்து தள்ளி நிறுத்துனா வேலையை விட்டே தூக்கிருவேன் ., ஒழுங்கா பேசு., ” மிரட்டல் விடுத்த சுபா அவலின் தோளில் கையை போட்டு பேசியபடி, இறுக்க அணைத்து விடுவிக்க, ரோஜா கொஞ்சம் சகஜமானாள். அவர்கள் பேசுவதை கண்டு கொண்டிருந்தவனோ சுவாரசியமாய் ரசித்து கொண்டிருந்தான்.
ராஜா புறம் திரும்பி ” என்னண்ணா.., இங்கே .., “
” ஒருத்தர் இங்கே மீட் பண்ண வர சொல்லியிருக்கார். வர்ற டைம் தான். அவரை பார்க்க வந்து வெயிட் பண்ணா .., பின்னாடி நீ இருக்குற., உன் அலும்பு பார்த்து என்னால பேசாம இருக்க முடியல…, ” சிறிது நேரம் பேசி கொண்டிருந்து இவர்கள் கிளம்ப, ரோஜாவின் திகைத்த முகமே இவன் கண்ணில் நின்றது நீண்ட நேரம். ரோஜா ராஜாவின் வசமா ? இல்லை ராஜா ராணியின் வசமா ? ரசனை எந்த நிமிடமும் காதலாய் மாறலாமே, இல்லை காணாமலும் போகலாமே? யாரறிவார் ?
” சாரி .., அவர் உன் அண்ணன்னு தெரியாம எத்தனை தடவை கிண்டல் பண்ணி இருக்கேன்., நீயும் ஒன்னும் சொல்லல. “
” ஹா., ஹா., எது நீ அவருக்கு அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல யாரையும் பார்க்க மாட்டேங்கிறாரு சொல்லுவியே .., அதை தான சொல்ற…., சொல்லிக்கோ ., சொல்லிக்கோ ….. “
” !!!!!! “
” அது திமிர் இல்லைடி , இங்கே நிறைய பிரச்சனை, கொஞ்சம் சிரிச்சா கூட ஏமாத்திட்டு ஓடி போறாங்க., பெரியப்பாவை நல்லா ஏமாத்தி நிறைய லாஸ் ஆகிருச்சு. அதை கண்டுபிடிக்க தான் நாங்க யாரோ மாதிரி வேலை பார்த்துட்டு இருக்கோம்., இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாரு என் அண்ணன் எப்படி எல்லாம் கிண்டல் பண்ணுவாருனு உனக்கே புரியும்.,” என்க.
” உன் அண்ணன் கிண்டல் பண்ண எனக்கென்ன., சுண்டல் பண்ண எனக்கென்ன., ” வாயை மூடி கொண்டு மனதில் மட்டுமே இப்போது நினைத்தாள் ரோஜா.,
அங்கே காத்து கொண்டு இருந்தவனோ அவன் அமர்ந்து இருந்த காபி ஷாப்பில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, தூரத்தில் நடந்து வருபவனை கண்டு புருவம் சுருக்கி யோசித்தான். லைட் ரோஸ் கலர் சர்ட் , பிளாக் பேண்ட், கண்களில் கூலர் அணிந்து வருபவனை உன்னிப்பாக கவனித்தான். கால மாற்றம் அனைவரையும் ஒன்று போலவா வைத்துள்ளது.
தன் சிறு வயது தோழன் கல்லூரியில் காந்தமாய் அனைவரையும் இழுத்தவன் இன்றோ இன்னும் பேரழகனாய் நடந்து வருவதை கண்டு, தன்னையே மறந்து, தன் கோபத்தை கூட மறந்து அவனை நோக்கி ஓடி சென்றான்.
” டேய் மச்சான்….! ” என்றப்படியே ஓடி வந்து அணைத்தவனை, கை கொண்டு தள்ளி நிறுத்தி ” ஹூ ஆர் யூ ? ” என்க
ராஜாவோ புரியாமல் முழித்து ” மச்சி….!, நான் ராஜாடா …, என்னை தெரியலையா “
” சாரி சார், நீங்க யாருனு தெரியல ” பதில் சொல்லியப்படியே வேக நடையில் செல்ல ஆரம்பித்தவன், போனில் தனக்காக வந்திருப்பவரை நேரில் பார்க்க கால் செய்ய, ராஜாவின் போன் அடித்து அவன் தான் வர சொன்னதாய் சொல்ல, வேறு வழியின்றி அவன் முன் திரும்ப வந்தான்.
” ஹாய் சார், ஐ அம் இளா, ஆடிட்டர் ஜெகதீஸ் சொல்லி உங்களை மீட் பண்ண வந்துருக்கேன். ” தன் முன் கைக்குலுக்க கரம் நீட்டியவனை, முகம் தெரியா யாரோ ஒருவரிடம் பேசுவது போல பேசும் உயிர் நண்பனை கண்ணில் வலியோடு பார்த்தான். இன்னும் கோபம் தணியாமல் இருப்பவனிடம் என்ன கூறுவது என தெரியாமல் தவித்தான் . ஓரமாய் அங்கிருந்த மேஜையில் சென்று அமர்ந்தவர்கள் ஒன்றும் பேசாமலே அமைதியாய் இருக்க, மனதை கல்லாக்கி கொண்டு முயன்று ராஜாவே பேச ஆரம்பித்தான்.
அவன் அலுவலக பிரச்சனைகளை பற்றி முழுதும் கூறி முடித்து அக்கௌன்ட்ஸ் எல்லாம் காட்டி சந்தேகம் அனைத்தையும் தெளிவுபடுத்தி கொண்டான். கொடுக்கல் வாங்கலில் அநேக தில்லு முல்லுகள் நடந்திருக்க, அதை சீர் செய்தால் மட்டுமே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல முடியும். நண்பனை தள்ளி நிறுத்தி, கம்பெனி நடத்தும் முதலாளியாய் மட்டுமே அவன் பேச்சுக்கள் பின்னர் தொடர, இளாவும் எந்த தயக்கமுமின்றி அவனிடம் பேசி கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பேச்சுவார்த்தை முடிவுக்கு பின்னே தான் பல தீர்வுகள் ராஜாவுக்கு தெளிவாகின. முடியும் தருவாயில்
” ஏன் சார் இதை எல்லாம் ரெகுலரா நீங்களே பார்த்து இருந்தா கண்டுபிடிச்சிருக்கலாமே? நீங்க செக் பண்ணலையா? ” என இளா கேட்க. தான் இங்கிருந்தும் காணாமல், பேசாமல் இருப்பதாக கோபத்தில் இன்னும் இருக்கிறானோ என அவனையே பார்த்தவன்,
” என் முட்டாள் பிரண்ட் பண்ண தப்புக்கு, அவன் மேல இருந்த கோபத்துல, நான் பாரின் போறேன்னு சொல்லிட்டேன். இதான் சாக்குன்னு என்னை அப்பவே பாரின் அனுப்பி வைச்சுட்டாரு எங்கப்பா. இங்க காண்டாக்ட் பண்ண கூட யாரோட நம்பரும் இல்லை. அவருக்கும் ரெண்டு வருசமா உடம்பு சரியில்ல, பிஸினஸ்ல கான்சண்ட்ரசன் பண்ண முடியல. நம்பி வேலையை பார்க்க சொன்னவர்களும் ஏமாத்திட்டாங்க., கொஞ்சம் நாள் முன்னாடி தான் ரிட்டர்ன் வந்து எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன் ” என நீளமாய் பதிலை கூற அப்போதும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவனை பார்த்து பல்லை கடிக்க தான் முடிந்தது அவனால்.
” ஓகே சார், இனியாவது எல்லாம் கரெக்டா பண்ணுங்க. ஏமாத்த நிறைய பேர் இருப்பாங்க. நம்ம தான் நம்மளை காப்பாத்திக்கணும்” பேசி முடித்து இளா கை குலுக்கி விடை பெற எழ, அதுவரை இழுத்து பிடித்த பொறுமை இவனுக்கு காணாமல் போனது.
” டேய், நில்லுடா.. பெரிய இவனாட்டம் பேசுற, அன்னைக்கு நீங்க பண்ண கூத்துக்கு நான் தான் சண்டை போடனும். ஏன்டா அவாய்ட் பண்ற என்னை.., சொல்லுடா., ” என கையை இறுக்கி பிடித்து கத்த.,
அவன் கரங்களில் சிக்கிய தன் கரத்தை வெளி எடுத்து கொண்டவன், இன்னுமே தன் உடலை இறுக்கி, கண்ணை மூடி தன்னை கட்டுப்படுத்தி கொண்டு ஆழ் மூச்சு எடுத்து, பதட்டப்பட்ட தன்னை சமன் செய்து கொண்டு, ராஜாவின் கண்களை மட்டுமே ஆழ்ந்து பார்த்தான்.
பின் ” லுக் மிஸ்டர்.ராஜா! உங்க பிரண்ட் செத்து போய் ரொம்ப வருஷம் ஆச்சு. நான் இளா… ஜஸ்ட் இளா.., ஓகே., அவனை என்கிட்ட இனி தேடாதிங்க…. குட் பாய் ” என அழுத்தம் திருத்தமாய் கூறியவன் வேக நடையில் வெளியேற அவன் கூறியதில் ஒன்றும் புரியாமல் திகைத்து போய் நின்றான்.
நண்பர்களே உலகம் என்று அவர்கள் பின்னோடே சுற்றி கொண்டிருந்தவன், இன்று தன்னிடமே யாரோ போல் பேசி செல்வது ராஜாவை யோசிக்க வைத்தது. இவன் ஏன் இப்படி மாறினான்? பழைய மாதிரி இல்லையே?., பேச்சு தோரணை எல்லாமே மாறி இருக்கே? குழம்பியவன் சிவாவிற்கு போன் செய்து விசாரிக்க அவன் கூறியதை கேட்டு இன்னுமே நொறுங்கி போனான்.
தானும் அந்த நேரத்தில் அவனுடன் இல்லாது போனது பெருந்தவறு என்று புரிந்தது . விடலை பருவத்தில் யோசிக்காமல் செய்யும் சில விஷயங்கள் நம் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்து விடுகிறதே. இவன் கோபத்தில் யாரிடமும் பேச பிடிக்காமல் பாரின் சென்று படித்து வந்தும், கம்பெனியில் பிரச்சனைகள் மலை போல குவிந்து கிடந்ததால், வந்தும் இன்னும் யாரையும் சந்திக்க துணிய வில்லை. சிவா மட்டுமே உறவு ரீதியாய் பழகுவது. அவனும் பேற்படிப்புக்கு வேறிடம் சென்று விட்டதால் பழைய நட்புகளை சந்திக்க முடியாமலே போனது. ஆதலால் நடந்த விஷயங்கள் எதுவும் இவனுக்கு தெரியவே இல்லை.
இப்போதும் சிவா பழைய நண்பர்கள் சந்திப்பில் கேட்ட விஷயங்களை மட்டுமே உரைத்துள்ளான். உண்மையை அவன் மூலமே அறிய முடியும். முகம் காட்ட மறுக்கும் இளாவிடம் எங்ஙணம் பேசிட முடியும் என்றே புரியவில்லை. அவன் தாயை சந்தித்து பேச வேண்டும் என முடிவெடுத்தவன் மறு நாளே அவர் முன் சென்று நின்றான். மொத்தத்தையும் கேட்டவன் விழி பிதுங்கி நின்றான்.
“ அத்தைகிட்டயும் பேசுறது இல்லையாம். பெரிய சின்சியர் சிகாமணியா வேலையை மட்டும் பார்த்துட்டு இருக்கியா. யாருகிட்டயும் பேசாம, பழகாம உராங்குட்டான் மாதிரி இருக்கிற உன்னை பழைய மாதிரி ஜாலியா, சிரிச்சிட்டு இருக்கிற மாதிரி மாத்தமா விட மாட்டேன்டா. “ மனதில் சூளுரைத்துவிட்டு தான் அவரை சந்தித்து விட்டு வெளியே வந்தான்.
எங்கோ பிறந்த தொப்புள் கொடி உறவுகள் ஒன்றாய் பிறந்ததை போல பாசம் காட்டி வாழ்வதும் நட்பில் தானே. இன்பமோ துன்பமோ வாழ்க்கை கடலில் கடந்து செல்ல கை கொடுக்கும் துடுப்பும் நட்பு தானே. அமைதியான கடலோ, சுனாமியாய் அலை அடித்து சுற்றி சுழன்று நம்மை அம்போவென விட்டு பிரிவதும் நட்பு தானே. பிணக்கு கொண்டாலும் அங்கே இணக்கம் குறைவதில்லை, அப்படிப்பட்ட நட்பினை சுவாசமாய் கொண்டு வாழும் ஒரு நண்பனை மாற்றும் பொறுப்பையும் சேர்த்தே ஏற்று கொண்டான் ராஜா. உயிரை எடுப்பதும், உயிரை கொடுப்பதும் நண்பன் என்பதால் தானே உயிர் நண்பன் என்றே அவனுக்கு பெயர்.
error: Content is protected !!