Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 09

“சீக்கிரமா நீங்க கல்யாணம் முடிங்கத்தான். எனக்கு அவங்களைப் பார்க்கணும்போல இருக்கு.”

கண்களில் ஆர்வத்தோடு சொண்ணாள் வசுமதி. துரைப்பாண்டி அவளுக்குப் பதில் சொல்லமுடியாமல் அமைதியாக இருந்தான். சிறிது நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது. போனமுறை வந்தபோது சரியாக ஒட்டாமல் இருந்த வசுமதி, இப்போது சகஜமாகப் பேசியது அவனுக்கு இதமாக இருந்தது.

“ஏன் துரை, உங்க அப்பாதான் சொல்லிட்டாருல்ல. இனிமேலாச்சும் நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமில்ல?” என்ற மலரைப் பார்த்து மையமாகச் சிரித்தான் துரைப்பாண்டி.

“அதெல்லாம் நடக்கும் அத்தை. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றபடி சரவணனின் பக்கம் திரும்பினான்.



Advertisement

“மாமா, உங்க ஃப்ரெண்டு சுரேஷண்ணன் மகளுக்குக் கல்யாணம் வருதாமே? அதுக்கு நீங்க ஊருக்கு வரணும்ல.”

“பார்ப்போம். அதுக்கு இன்னும் நாள் இருக்குல்ல. முதல்ல அவன் பத்திரிக்கை வைக்க வரட்டும்.”

“வந்தா, நீங்க எல்லாரும் நேர நம்ம வீட்டுக்குத்தான் வரணும் மாமா. வேற எங்கேயும் தங்கக்கூடாது. நம்ம வீட்டுலதான் தங்கணும். சரியா?”

Advertisement

“சரி.. அவ்வளவு தூரம் வர்றவங்க, அங்க எங்க அக்கா வீட்டுக்கு வர மாட்டமா?” என்றபடி எழுந்து தன் அறைக்குச் சென்றார் சரவணன். மலரும் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.

Advertisement

*****

காலையிலிருந்து மித்ராவின் பிறந்தநாள் ட்ரீட்டை எண்ணி, காத்திருந்து, ஏமாந்து போன மதன், பெருங்கோபத்தோடு சங்கரின் முன் வந்து நின்றான்.

“பத்துவாட்டி ஒனக்கு போனடிச்சேன். ஏன் எடுக்கவேயில்லை. என்னாச்சு ஒனக்கு?”

Advertisement

“….”

“அவளுக்கும் போன் போகலை. போனை ஆஃப் பண்ணி வச்சிருக்கா போல. என்னதாண்டா நடக்குது இங்க?”

“….”

“ஏண்டா நிஜமாவே பேய் பிடிச்சமாதிரி இருக்க? என்னாச்சின்னு சொல்றா.” தன் எதிரே அமர்ந்து கேட்ட மதனை அமைதியாகப் பார்த்தான் சங்கர்.

“சம்பவம் நடந்துருச்சி.”

“என்னாச்சி என்னாச்சி? நீ மட்டும் தனியாப் போயி, அவகிட்ட காதலைச் சொல்லிட்டியா?”

“தனியாப் போனது.. உனக்கெப்படித் தெரியும்?”

“உங்கம்மாதான் சொன்னாங்க. பத்து மணிக்கு மேல வண்டி எடுத்துட்டு வேகமாப் போனியாமே? எனக்கு போன் போட்டு, எங்கடா சினிமாவுக்கா போறீங்கன்னு கேட்டாங்க.. ஆமான்னுட்டேன். சரி சொல்லு. உன் லவ்வை சொல்லிட்டியா?”

“நான் சொல்றதுக்குள்ள அவளே சொல்லிட்டா.”

“வாவ் சூப்பர்! பெரிய ஆள்றா நீ!” அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினான் மதன்.

“சந்தோசம்தானே.. அப்புறம் எதுக்கு இப்படிப் பொணம் மாதிரி இருக்கே?”

“சரி சொல்லு. என்ன சொன்னா.. எப்படி சொன்னா?”

“என்னா சொன்னான்னா? அவ வேற ஒருத்தனைக் காதலிக்கிற விஷயத்தைச் சொன்னா. போதுமா?”

சற்று நேரம் அமைதியாக இருந்தான் மதன்.

“அப்புறம்..?”

முதல் நாள் இரவு நடந்ததை அப்படியே அவனிடம் சொன்னான். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மதன், கடைசியில் சிரித்துவிட்டான்,

“சூப்பர் மச்சான். கடைசீல உன்னைக் கட்டிக்கிற அளவுக்கு வந்துட்டா பார்த்தியா. மச்சம்தான்யா உனக்கு. என்ன.. ஒரு ட்ரீட்டு மிஸ்ஸாயிடுச்சி. இருந்தாலும் பரவால்ல.. இனிமே உன் ஆளுகிட்ட சரக்கு பார்ட்டியே கேட்கலாம் போலிருக்கே!” என்றவனை முறைத்தான் சங்கர்.

“கத்தாதேடா. எங்கம்மா காதுல விழப்போகுது.”

******

அன்று துரைப்பாண்டி சென்னையிலேயே தங்கிவிட்டான். இரவுக்கு சமையல் வைக்கவேண்டாம் என்று மலரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். எஸ்ஸெஸ் பிரியாணி ஆர்டர் செய்து, ஐஸ்கிரீமும் வரவழைத்தான். சாப்பிட்டார்கள். சாப்பாட்டுக்குப் பிறகு, அவன் போன் போட்டுத்தர சரவணனும் மலரும் பிச்சை வாத்தியாரிடம் நலம் விசாரித்துப் பேசினார்கள். துரைப்பாண்டிக்கு இது பிடித்திருந்தது. தன் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது. அவனின் தோளைப் பிடித்து செல்லமாய்த் தொங்கும் பிரபுவும் சினேகமாய்ச் சிரிக்கும் வசுமதியும் கிடைத்திருக்கிறார்கள். சரவணன் மாமாவும் இன்னொரு தாயாய் மலர் அத்தையும் கிடைத்திருக்கிறார்கள். தனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பெருமிதம் வந்தது. அந்த இரவில் மொட்டைமாடியில் வைத்து வசுமதி கேட்டாள்.

“அத்தான் அவங்களுக்குப் போன் போடுங்க. பேசுவோம். எனக்கு அவங்களைப் பார்க்கணும்.”

“சேச்சே..இப்பல்லாம் பேசக்கூடாது. அவங்க தூங்கிட்டு இருப்பாங்க. அவங்களைப் பார்க்க உனக்கு அவ்ளோ ஆர்வமா? எதுக்காக?”

“ஒரு ஆர்வம்தான். எங்கப்பாவோட க்ரெஷ் ஆச்சே!”

“க்ரெஷ்ஷா? அப்படின்னா?”

“அப்படின்னா அவங்க மனசுக்குப் பிடிச்சவங்க.”

“அதுசரி.. அப்ப, நீ உங்க அப்பாவையே அவங்ககிட்ட பேசச் சொல்லி கேக்கலாமே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் துரைப்பாண்டி.

“அய்ய.. ரொம்பத்தான்..” எரிச்சலோடு பழிப்புக் காட்டிவிட்டுப் போனாள் வசுமதி.

அவளிடம் விளையாட்டாய் சொன்னதை எண்ணிப் பார்த்தான். அப்படி சரவணன் மாமா பேசுவாரா? அப்படியே பேசினாலும் ரமணியத்தை பேசுவாளா என்பது அதைவிடப் பெரிய கேள்விக்குறிதான்.

*****

சங்கரை எப்படி எதிர்கொள்வது என்று தவித்த மித்ரா, அன்று காலையில் சீக்கிரமே கிளம்பி மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துவிட்டாள். சனிக்கிழமை இரவு என்ன நடந்தது, அவனிடம் என்ன பேசினாள் என்று முழுவதுமாக ஞாபகத்துக்கு வரவில்லை. அவன் மார்பில் சாய்ந்து அழுதது தெரியும். அவன் தோசை வாங்கி வந்து ஊட்டிவிட்டதும் ஏதோ கனவில் நடந்ததுபோல் ஞாபகத்தில் இருக்கிறது. அதைத் தாண்டி வேறு எதுவும் நினைவில் இல்லை. திரும்பத் திரும்ப யோசித்து, தலைவலி வந்ததுதான் மிச்சம்.

“என்னக்கா. எனக்கு முன்னாடியே வந்துட்டீங்க? அண்ணனும் சீக்கிரம் வந்துடுவாரா என்ன?” என்றபடி குட்டி வந்தான்.

“அதல்லாம் தெரியாது குட்டி, வந்தா பார்க்கலாம்னுதான்..”

கடையைத் திறந்துவிட்டு, அவளுக்கு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்துப் போட்டான். அமர்ந்தாள். அவளிடம் எப்போதும் இருக்கும் உற்சாகம் அன்று இல்லை என்பதை குட்டியும் கண்டு கொண்டான்.

“உடம்பு ஏதும் சரியில்லையாக்கா? டீ வாங்கிட்டு வரவா?”

“வேண்டாம் குட்டி. சங்கர் வந்துடட்டும்.”

அதன்பின், தனது அன்றைய பொழுதுக்கான வேலைகளைத் தொடங்கினான் குட்டி. உள்ளே நிறுத்தியிருந்த பழைய வண்டிகளை எல்லாம் எடுத்து, வெளியே வரிசையாக நிறுத்தினான். பஞ்சர் பார்ப்பதற்கு ஏதுவாக, அங்கே இருந்த சிறு பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்தான்.

 ஒன்பது மணிக்குமேல் சங்கர் வந்தான். அவன் மனம் கவர்ந்த மித்ராவின் எதிர்பாராத தரிசனத்தில் அப்படியே நின்றான். அன்று கையில்லாத டாப்பும் முட்டியில் சின்னதாய்க் கிழிந்திருந்த ஜீன்ஸும் அணிந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து நின்ற மித்ராவின் முகத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது.   

“ஆபீஸ் போகல?”

“இல்ல.”

“சாப்ட்டியா?”

“வா போலாம்.” என்றபடி அவள் சுவாதீனமாய் பின்னால் ஏறிக்கொள்ள, குட்டியிடம்கூட எதுவும் சொல்லாமல் வண்டியைக் கிளப்பினான் சங்கர்.

 அருகே இருந்த ஒரு கார்ப்பரேஷன் பூங்காவில் வண்டியை நிறுத்திவிட்டு, மரநிழல் படர்ந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

 நேராக விஷயத்துக்கு வந்தாள் மித்ரா.

“சனிக்கிழமை நைட்டு நீ என் வீட்டுக்கு வந்தியா?”

“அதுவே உனக்கு சந்தேகமா?”

“சரி, தெரியும், அன்னைக்கு என்ன நடந்துச்சி?”

“அப்படி ஒண்ணும் நடக்கலியே!”

முறைத்தாள். “கடுப்பைக் கிளப்பாம சொல்றியா?”

“நீ மூடு அவுட்டா இருந்த. யாரோ ஏமாத்திட்டான்னு சொல்லி அழுதே.”

“குரு.. குருமூர்த்தி…”

“ஆமா, அவனை சும்மா விடக்கூடாதுன்னு சொன்னே.”

“சரி, அப்புறம்?”

அவளின் கைகளை எடுத்து, தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

“அப்புறம் என்ன.. அவ்ளதான். சரி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?”

“..?”

“என்னக் கட்டிக்கிறியா மித்ரா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!