Skip to content
Post Views: 2,683
அத்தியாயம் 22
பூவிடைப் பனித்துளிகள்
இவளைக் கடக்கும் போது உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சென்றவனைக் காண சற்றே சிரிப்பு வந்தது திவ்யாவிற்கு. அத்தோடு ஒருவித தவிப்பும். பரணி எங்கே தனக்கு வருணின் மீது அன்பு ஏற்பட்டுவிட்டது என்று தன்னை தவறாக எண்ணிக் கொள்வானோ என்ற பயம். தன் அறைக்குச் செல்லாமல் சோஃபாவிலேயே அமர்ந்துவிட, சற்றைக்கெல்லாம் காலி கோப்பையுடன் கீழே வந்தான்.
Advertisement
இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மடிக்கணினியைத் திரும்ப எடுத்து உயிர்ப்பிக்க, இவள் அமர்ந்திருந்தது நினைவில் வந்தவனாக, “ரசம் நல்லா இருந்துச்சாம். ரொம்ப தேங்க்ஸாம். அவனுக்காக பார்த்து பார்த்து சமைச்சு குடுக்கறதுக்கு, சொல்ல சொன்னான்.” என்று இவள் முகம் பாராமலேயே கூறியிருந்தான்.
திவ்யாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் போயிற்று. ‘அடப்பாவி, மேல போயி நானா குடுத்து, வருணுக்கு நம்பிக்கை குடுக்கற மாதிரி நடந்துக்க வேண்டாம்னு இவங்கிட்ட குடுத்துவிட்டா, இவங்கிட்டயே தேங்கஸ் சொல்லி அனுப்பியிருக்கான். பரணி என்னை என்ன நினைப்பான்? எனக்கும் வருண் மேல அக்கறை இருக்குன்னு தானே நினைப்பான்.
ஐயோ! இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். நானா மேல போய் குடுக்காததுக்கான காரணம் சொன்னா, ஓவரா அலட்டிக்கற மாதிரி இருக்குமே. நிஜமாவே இவன் எனக்கும் வருண் மேல அன்பு இருக்குன்னு நினைக்கறானோ?’ என்ற எண்ணத்தில் பரணியின் முகத்திலேயே கண்பதித்திருந்தாள். அவனோ இவளை சட்டை செய்யாமல் சிறிது நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
இவள் உற்று உற்று இவன் முகம் பார்ப்பது என்னவோ போல் குறுகுறுவென்று ஆகிவிட, “அதான் அவன் சொன்ன பதிலை சொல்லிட்டேன்ல. இனியும் ஏன் என் முகத்தை பார்த்துட்டு உட்கார்ந்துகிட்டு. போங்க போயி வாட்ஸ்ஸப்ல மீதிக் கதைய பேசிக்கோங்க” என்று பற்களை கடித்தவண்ணம் இவன் கூறவும், திவ்யாவின் முகம் ரொம்பவும் வாடிப்போயிற்று.
Advertisement
சட்டென சோஃபாவில் இருந்து எழுந்து கொண்டவள், வேகமாக மாடிப்படி நோக்கிச் சென்று மீண்டுமாய் திரும்பி வந்தாள். தன் கைப்பேசியில் வாட்ஸ்ஸபை திறந்தவள், வருணின் சேட் ஹிஸ்டரியை அவன் கண்முன் நீட்டி, “வேணும்னா செக் பண்ணிக்கோ. அவன் கூட வாட்ஸ்ஸப்ல கதை பேசலை. அவ்வளோ கூட என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று சம்பந்தமில்லாமல் உளறியவள், அவன் முகத்தையே மீண்டுமாய் பார்க்க, அவள் செய்கையைக் கண்டவனுக்கு சிரிப்பு எழுந்தது.
“அப்படி ரெண்டடி தூரத்தில நின்னு வாட்ஸ்ஸப் சேட் காட்டினா எனக்கெப்படி கண்ணு தெரியும்? இப்படி ஃபோனை குடு நான் பார்த்துட்டு சொல்லறேன்” என்று விளையாட்டாய் வினவியவன் கைகளில் கைப்பேசியை ஒரு அவசரத்தில் கொடுக்கப் போனவள், அவன் சிரிப்பைக் காணவும் கொஞ்சம் போல் முகத்தை சுருக்கிவிட்டு கைப்பேசியை தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டாள்.
அவனும் விளையாட்டாகவே வருணுடன் தன்னைச் சேர்த்து வைத்து பேசினான் என்று தெரிந்தபோதும், என்னவோ அது ரொம்பவுமே வலித்தது. அதுவும், வருண் மீது தனக்கு அக்கறை இருப்பதாக பரணி தவறாக எண்ணிவிடக் கூடாதே என்று அவள் மனம் கவலை கொண்டு ஓலமிட்டது நினைத்து அவளுக்குமே வியப்பு தான். ‘இவன் என்ன நினைச்சா என்னன்னு தானே இவ்வளோ நாளும் இருப்ப? இப்ப மட்டும் என்ன வந்துச்சு?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டே படியேறினாள்.
Advertisement
அந்த வாரத்திற்கு வாங்கி வந்திருந்த முட்டை, ரொட்டி காய்கறிகள் என அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக ஐந்து நாட்களிலேயே தீர்ந்து போய்விட்டிருந்தது. வருணால் திரும்ப காஸ்கோ மார்கெட் செல்ல முடியாத நிலை என்பதால், “நான் போயிட்டு வர்றேன்” என்று முன்வந்தான் பரணி.
“நானும் கூட வரட்டுமா?” என்று திவ்யா கேட்க,
“கார்ல ஒரு ஆள் தான் இருக்கணும்னு ரூல் இருக்கு, வேண்டாம்… நான் மட்டும் போறேன்” என்று முடித்துவிட்டான். அவனுடன் ஒன்றாக தனியாக சிறிது நேரம் செலவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கவே தான் திவ்யா இதை சாக்காகக் கொண்டு கேட்டிருந்தாள்.
பரணி காஸ்கோ சென்று அடுத்த வாரத்திற்குத் தேவையான மளிகை, காய்கறிகள், சிக்கன் என அள்ளிக் கொண்டு வந்திருந்தான். வழக்கம் போல, வீட்டின் வெளியே அவன் அணிந்து சென்ற ஆடைகளைக் கழற்றி பக்கெட்டில் சோப்பு கொட்டி ஊற வைத்து, கை கால்களை கழுவோ கழுவென்று கழுவிக் கொண்டு தான் உள்ளே வந்தான்.
இருப்பினும், அடுத்த நாளே லேசான காய்ச்சல் கண்டுவிட்டது அவனுக்கு. ‘பிகாஷனா இருந்திருக்கணும். எனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு அசால்டா இருந்திருப்பான்’ என்று பரணியை உள்ளூர திட்டியபோதும், திவ்யா அவ்வப்போது சூடாக கஞ்சி, ரசம் என்று வைத்துக் கொடுத்தாள். வருணுக்கு பரணியிடம் கொடுத்து அனுப்பியது போல் அல்லாமல், தான் செய்வதை அவளே கொண்டு சென்று கொடுப்பாள்.
“வெளிய வச்சிரு. நான் குடிச்சிக்கறேன்” என்று அவன் சொன்னாலும்,
“இல்ல, சும்மா ஒரு கம்பெனிக்கு உக்கார்ந்திருக்கேன். நீங்க குடிங்க” என்று விட்டு அமர்ந்திருப்பாள்.
ஆக, அந்த வீட்டில் மந்தமான சற்றே இறுக்கமான சூழலே நிலவியது எனலாம். வீட்டினர் ஐவரில் ரொம்பவும் பாதிப்பு அடைந்தது என்றால் அது நாபி-ஜூன் தான். தினமும் ஐந்து கிலோ மீட்டர் காலையும் மாலையும் ஓடிவிட்டு வருபவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்தால் எப்படி?
“ஐ ஃபீல் ட்ரேப்ட். மூச்சு விட முடியாத மாதிரி இருக்கு. என்னால ஓடாம இருக்க முடியாது” என்று சொல்லிய நாபி-ஜூன், ஊரடங்கு போட்ட மறுதினம் வழக்கமாக ஜாகிங் சென்றிருந்தாள் தான். சென்ற பத்து நிமிடத்தில் காவலர்கள் பேரிகேட் போட்டிருப்பதாகக் கூறிக் கொண்டு திரும்ப வந்திருந்தாள்.
அடுத்த தினம் வீட்டின் முக்கு திரும்பியிருக்க மாட்டாள், அதற்குள், நீல – சிவப்பு விளக்குகள் மிளிர காவல் வாகனம் இவளைத் துரத்தியிருந்தது.
மூன்றாம் தினம் எங்கே திரும்ப வெளியே ஓடக் கிளம்பிவிடுவாளோ என்று பயந்தது போலக் காவலர்கள் வீட்டின் வாசலிலேயே காரில் அமர்ந்திருந்தனர்.
“டாம் காப்ஸ்” என்று கதவை அறைந்து சாத்திவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டாள். அவ்வப்போது அவள் அறையில் கைகால்களை அசைத்து உடற்பயிற்சி செய்த போதும் வெளியே சுத்தமான காற்றை நாபி நிறைய சுவாசித்து, இயற்கையை அனுபவித்த வண்ணம் ஓடும் மகிழ்ச்சி வீட்டில் செய்யும் உடற்பயிற்சியில் கிட்டவில்லை.
மார்ச் மாதத்தின் துவக்கம் என்பதால் பனிப்பொழிவு பெருமளவு குறைந்து போய்விட்டிடுந்தது. வசந்த காலம் துவங்கியிருக்க மரங்கள் மெல்லமாய் துளிர்விடத் துவங்கியிருந்தன. அவ்வப்போது வெளியே சிறிய பறவைகளின் கீச்சு சப்தம் நிறைய கேட்கத் துவங்கியது.
“சச் ஏ ப்ளஸ்ண்ட் மார்னிங்” என்று ஏக்கமாக ஜன்னலைத் திறந்து வெளிக்காற்றை உள்ளிழுக்க மட்டுமே நாபி-ஜூனால் முடிந்தது. ஊரடங்கு உத்தரவை வெகு சிரத்தையாகக் கடை பிடித்தனர் இம்மக்கள்.
“பின்ன, சும்மாவே இவனுகளுக்கு பயந்த சுபாவம். இதுல கொரோனா மாதிரி பெரிய வியாதிலாம் பக்கத்து நாட்டில வந்ததுன்னு தெரிஞ்சாலே இவனுக பீதியாவனுக. இவுங்க ஊர்லையே வந்துருச்சுன்னா கேட்கவா வேணும். அதும் சீனால தான் முதல் பேஷண்ட் டெத்தாம். இனி, சொல்லவே வேணாம். இவனுகளை கொல்ல சீனா செஞ்ச சதின்னு மரணபீதியில இருப்பானுக” என்று பரணி சொல்ல, அதை மற்றவர்கள் ஆமோதித்தனர்.
“வெளிய போகவேணாம் நாபி. இட்ஸ் ஃபார் அவர் குட். காத்தில பரவுற வைரஸ்னால எல்லாருக்குமே காய்ச்சல் வர வாய்ப்பிருக்கு. இன்னும் வேக்சின் கண்டுபிடிக்கலை. சோ, பெட்டர் சேஃப் தேன் சாரி” என்று வெளியே எப்போதடா செல்வோம் என்று தூடியாய் துடித்துக் கொண்டிருந்த நாபி-ஜுனிடம் கூறி தடுத்திருந்தாள் திவ்யா.
திவ்யா சொன்னதிற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிய போதும், எப்போது வெளியே செல்லலாம் என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு தான் காத்திருந்தாள். அப்படி ஆர்வமாக இருந்தவளுக்கு அந்த சூழ்நிலையும் தானாக அமைந்து போனது.
“நான் ஒரு ட்ரெக்கிங் டிரைல் பாத் கண்டுபிடிச்சிருக்கேன். நாளைக்கு அந்த வழியில ஜாகிங் போலாம்னு இருக்கேன்” என்று சில தினங்கள் கழித்து இவர்களிடம் ஆர்வமாகக் கூறினாள் நாபி-ஜுன்.
“டிரெக்கிங் டிரைல்னா?” என்று திவ்யா கேட்க,
“டிரெக்கிங் போற வழிய டிரையல்னு சொல்லுவாங்க.” என்று வருண் தெளிவுபடுத்த, “எங்க இருக்கு இந்த டிரையல். வீட்டை விட்டு, தெரு முக்குக்கு போனாலே ஓடி வந்து புடிச்சிடறாங்க போலீஸ். நீ எப்படி டிரெக்கிங் டிரையல்ல ஜாகிங் போவ?” என்று யஷ்வந்த் வினவினான்.
இந்த நாபி-ஜூனை எவ்வாறு வீட்டிற்குள் வைத்து பாதுகாப்பது என்ற கவலை தோய்ந்த விரக்தி அவனிடம் தென்பட்டது. யார் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பாக எந்த ஒரு சொல்லையும் கூற மாட்டாள் நாபி. அதற்காக மற்றவர் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா என்றால் அதுவும் செய்ய மாட்டாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, தன் இஷ்டம் போலத் தான் நடந்து கொள்வாள்.
முன்னரும் அப்படித்தான், புறா, போர்க், பீஃப் என்று தனக்கு வேண்டிய உணவுகளை வீட்டில் சமைக்கும் போது, “ப்ளீஸ் உனக்குனு நாலு பாத்திரம் தனியா வச்சுக்கோ, அதிலேயே சமைச்சு சாப்பிட்டுக்கோ. நாத்தம் குடலை பிடுங்குது.” என்று வீட்டினர் சொல்லிப் பார்த்தனர்.
அவர்களின் பேச்சை ஒரு வார்த்தை மறுத்துப் பேசாது கேட்டுக் கொண்டவள், தன் இஷ்டம் போலவே எல்லா பாத்திரங்களையும் சேர்த்து தான் புழங்குவாள். எதையும் யாருக்காவும் மாற்றிக் கொள்ளமாட்டாள், அதே சமயம் எதிர்த்து வாதிடவும் மாட்டாள்.
‘நீ சொல்லறத என்ன வேணா சொல்லு, எனக்கு தோன்றதை மட்டும் தான் செய்வேன்’ ரகம் நாபி-ஜூன் என்று சில தினங்களிலேயே கண்டு கொண்டனர். இதே தான் இப்போது ஜாகிங் செல்லும் பேச்சிலும் நடக்கப் போகிறது என்று தெரிந்தது. இவர்களின் முகபாவனை பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஆர்வத்துடன் தான் கண்டுபிடித்த ஜாகிங் டிரையல் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் நாபி-ஜூன்.
“வீட்டை விட்டு ஸ்டிரீட்ல ஓடினா தானே காப்ஸ் புடிப்பாங்க. ஃபாரஸ்ட் பாத்ல ஓடினா அவங்களுக்கு தெரியாதில்லே.” என்று கண்கள் மின்னக் கூறியவளிடம்,
“ஃபாரஸ்ட் பாத்க்கு எப்படி போவ, பறந்தா? அதுக்கு வீட்டை விட்டு ரோட்டில நடந்து போய் தானே ஆகணும். அப்போ புடிப்பான்ல புடிப்பான்ல” என்று பதிலுக்கு யஷ்வந்த் கூற,
“நோ, வீட்டை விட்டு ஸ்டிரீட்டுக்கு போகணும்னு இல்ல. நம்ம வீட்டுக்குப் பின்னாடி ஒரு சின்ன டிரையல் போகுது பாருங்க. அந்த வழியா போனா டிரெக்கிங் பாத் வருது. இன்னைக்கு ரெண்டு கிலோ மீட்டர் வரை போய் பார்த்தேன். சோ, இனி அந்த வழியில ஜாகிங் போவேன்” என்று தீர்மானமாகக் கூறியிருந்தாள்.
“ஏ, வெளிய போனா கொரோனா புடிச்சுக்கும் நாபி. இது உனக்கு மட்டும் இல்ல, எங்க எல்லாருக்குமே டேஞ்சரஸ் தான். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.” என்று பரணி சற்றே காட்டமான குரலில் தான் கூறியிருந்தான். வருணுக்கும் அதே எண்ணம் தான். இருவருக்கும் இந்த ஒரு வாரமாகத் தான் சளி, காய்ச்சல் என்று உபத்திரவம் இல்லாமல் சற்றே உடல்நிலை தேறியிருக்க, இவளால் மீண்டும் எங்கே கொரோனா தொற்றிக் கொள்ளுமோ என்று பயந்தனர்.
“நோ யார், கொரோனா இஸ் நாட் எ டீமன். வீட்டை விட்டு வெளிய போன உடனே காத்திருந்து என்னை பிடிச்சுக்க. இட் ஸ்பெரெட்ஸ் த்ரு ஏர். கொரோனா பாதிக்கப்பட்டவங்க இருமினா, தும்மினா தான் அந்த வைரஸ் நம்ம மேலே படும். நான் போற டிரையல்ல ஆள் நடமாட்டமே இல்லை. இட்ஸ் ஏன் அபேண்டண்ட் பாத். முன்னாடி இந்த வழியா டிரையல் இருந்திருக்கு. இப்போ இங்க வீடுகள் கட்ட அப்ரூவல் குடுத்துட்டனால டிரெக்கிங் டிரையல் க்ளோஸ் ஆகிடுச்சு. இண்டர்நெட்ல படிச்சேன். இன்னக்கு மார்னிங் நான் ஜாகிங் போயிட்டு வந்தது கூட உங்களுக்கு தெரியாது. நல்லா தூக்கத்துல இருந்தீங்க. அந்த மாதிரி நீங்க எந்திரிச்சு பார்க்கறதுகுள்ள நான் போயிட்டு வந்துடுவேன்” என்று என்றும் இல்லாத அதிசயமாக நிறைய விளக்கம் அளித்தவள், தன் பேச்சு முடிந்தது என்பது போல எழுந்து கொண்டாள். போகும் போது அனைவரையும் பார்த்து, பொதுவாக முதுகை வளைத்து வணக்கம் தெரிவிக்க மறக்கவில்லை.
“ஆமா இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல. சொல்லறதை ஒரு வார்த்தை கேட்குதான்னு பாரு, கேட்காது. ஆனா, மரியாதை செலுத்தி வணக்கம் வைக்குதாம்” என்று நாபி-ஜூன் போன பின்பு சரமாரியாக ஏசினான் யஷ்வந்த். அவன் மனத்தாங்கலை அங்கிருந்த அனைவருமே அறிந்திருந்ததால், அது இது என்று பேசிய அவனைத் தடுக்கவில்லை.
இப்படியாக அடுத்த தினம் நாபி-ஜூன் தான் சொன்னது போலவே அந்த ஜாகிங் டிரையலில் ஐந்து ஆறு கிலோமீட்டர் ஓடிவிட்டு வந்திருந்தாள். வீட்டினர் ஒவ்வொருவராய் எழுந்து கீழே வந்த போது, தயாராய் காபி கலந்து வைத்திருந்தாள்.
“ஜாகிங் போகலையா?” என்று திவ்யா கேட்க,
“இப்போ தான் போயிட்டு வந்தேன். அந்த டிரையல் மூணு கிலோ மீட்டர்ஸ் நீளம் போகுது. மலையோட இன்னொரு எண்ட்க்கு போகுது. அங்க இருந்து ஸ்டிரீட் அண்ட் ரெசிடண்ஷியல் ஹவுஸ் திரும்ப ஸ்டார்ட் ஆகுது. அதனால் திரும்பிட்டேன். டோட்டலி சிக்ஸ் கிலோ மீட்டர்ஸ்” என்று நாபி-ஜூன் குதூகலமாய் கூற, அவளை திவ்யா கண்களை உருட்டிக் கொண்டு ஏறிட்டாள்.
“இட்ஸ் வெரி டேஞ்ஜரஸ் நாபி உனக்கும், எங்களுக்கும். உன்னால வீட்டுல எக்ஸர்சைஸ் பண்ண முடியாதா? ஜாகிங் தான் போகணுமா?” என்று திவ்யா மீண்டுமாய் கேட்க,
“இட் இஸ் நாட் டேஞ்சரஸ் திவ்யா. அந்த டிரையல்ல மனித நடமாட்டமே இல்ல. சில அணில் முயல்னு சின்ன சின்ன அனிமல்ஸ் மட்டுமே இருக்கு. வெரி ப்ளஸண்ட் இட் வாஸ்” என்று சிலாகித்த நாபி, “உங்களுக்கு எல்லாம் காபி மேக்கர்ல டிகாஷன் போட்டு வச்சிருக்கேன்” என்று ஏதோ பிரதி உபகாரம் செய்தவள் போல காபி மேக்கரை காட்டினாள்.
யஷ்வந்த் அப்போது தான் கீழே இறங்கி வந்தான். நாபி-ஜூன் திவ்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்த விவரங்களைக் கேட்டிருந்தான். “ஜாகிங் போகாதன்னு சொன்னா கேட்கலை. ப்ளீஸ் உள்ள வந்ததும் குளிச்சுட்டு அப்பறம் திங்கஸ் எல்லாம் டச் பண்ணு. இல்லைன்னா உன் ரூம்லையே இருந்துக்கோ பெட்டர் எல்லாருக்கும்” என்று பொரிந்துவிட்டு, நாபி-ஜூன் ஆன் செய்து வைத்திருந்த காபி மேக்கரில் இருந்த டிகாஷனை அவள் கண் முன்னாலேயே சிங்கில் ஊற்றினான்.
யஷ்வந்தின் செய்கை சற்றே அதிகபடியாகத் தான் அனைவருக்கும் தோன்றியது. நாபி-ஜுனுக்கு முகமே சிறுத்துப் போனது. “ஐம் சாரி” என்று மட்டுமாய் சொன்னவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
“யஷ்” என்று பரணி சற்றே கோபமாக சொல்லத் துவங்கும் முன்னர்,
“யஷ்வந்த எதுவும் சொல்லாதீங்க பரணி. அவன் நம்ம எல்லாருக்காகவும் தான் பேசினான். கொரோனா வந்து எவ்வளோ பேர் தினமும் செத்துகிட்டு இருக்காங்க. இவ புரிஞ்சுக்காம நடந்துக்கறது மட்டுமில்லாம நமக்கும் பிரச்சனை கொண்டு வர்றா” என்று திவ்யா யஷ்வந்திற்கு சாதகமாகப் பேசினாள்.
“யா, யஷ்ஷை திட்ட எதுவுமில்ல. இவ இப்படி ஜாகிங் போயிட்டு வீட்டுக்குள்ள வந்தா, நாளைக்கு நானே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன். ஷி இஸ் புட்டிங் அவர் லைஃப்ஸ் இன் டேஞ்சர்” என்று வருணும் ஆதரவாகப் பேசிட, பரணி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
error: Content is protected !!