Skip to content
Post Views: 4,511
நிறம் பாராத காதல்
அத்தியாயம் – 19
ரணதீரனும் வைதேகியும் நட்பாகப் பழகுவதை பார்த்த மாறன் மனதார மகிழ்ச்சி அடைந்தான்.
“சார்… மூணு நாளைக்கு இவங்க காலுல தண்ணி படாமல் பார்த்துக்கோங்க.
பெயின் கில்லர் எழுதித் தரேன், நல்லா சாப்பிட்டப் பிறகு போடச் சொல்லுங்க, பிபீ அதிகமா இருக்கு அதனால ரொம்ப டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க”
என்று மருத்துவர் ரணதீரனிடம் சொன்னதும், “மாமா… நீங்க வைதேகிக்கிட்ட இருங்க நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்” என்றான் ரணதீரன்.
Advertisement
“வெறும் பணியனோட நீ எப்படி போவ? இரு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்ற மாறன் சிகிச்சை அறையில்ருந்து வெளியே செல்ல, “சாரி… என்னால உங்களுக்கு ரொம்பக் கஷ்டம்” என்று வருத்தமாகச் சொன்னாள் வைதேகி.
“கஷ்டமெல்லாம் ஒண்ணுமில்ல, நீ கவலைப்படாத, உன்னை உன் ஆசைப்படி சீக்கிரமா கனடாவிற்கு அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று இன்முகத்துடன் பேசும் ரணதீரனை பார்த்து வைதேகியின் கண்கள் ஆச்சிரியத்தில் அழகாய் விரிந்தது.
“ஏன் அப்படி பாக்குற, என் வார்த்தையில நம்பிக்கை இல்லையா?” என்று ரணதீரன் கேட்டதும், “இருக்கு… உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு” என்ற வைதேகியை பார்த்து ஒரு மார்க்கமாகச் சிரித்தவனை, “இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் வைதேகி.
Advertisement
“ம்… இதே வாய் தான் என்னை கொலைக் காரனா சித்தரித்து பேசுச்சு. அத நினைச்சேன் சிரிச்சேன்” என்று ரணதீரன் கிண்டலாகச் சொல்ல, “Mr. தீரா… நீங்கக்கூட தான் என்னை நைட்டோட நைட்டா கொலை பண்ண என் ரூமுக்கு வருவேன்னு வில்லன் மாதிரி சொன்னிங்க. ஆனா இப்போ எனக்காக இதோ உங்க சட்டையை எல்லாம் கொடுத்து என்னைக் காவுந்து பண்ணலையா! எல்லாம் அப்படி தான் பாஸ்” என்ற வைதேகி தன் மனதில் உள்ள கவலைகளை ஒதுக்கி வைத்து ரணதீரனிடம் இயல்பாகப் பேசினாள்.
Advertisement
“ம்… உண்மை தான். உன்னை முதல் முறை பார்த்ததும் நீ கல்யாணம் பிடிக்காம ஓடி வந்துட்டேன்னு சொன்னியா! அதான் நான் உன்ன தப்பா நினைச்சு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். சாரி…தப்பு என் மேல தான்” என்று ரணதீரன் மனதார மன்னிப்பு கேட்டதும்,”ஹலோ தீரா…நீங்க என்னைத் தப்பா மட்டும் நினைக்கல! ரெண்டு அடி கூட அடிச்சிங்க” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் வைதேகி.
“வேணும்னா பதிலுக்கு நீயும் என்னை அடிச்சுக்கோ” என்ற ரணதீரனின் செயலும் பேச்சும் வைதேகிக்கு மேலும் அவன்மீது நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது.
“தீரா… நேரமாகுதே! அத்தை நம்ம இன்னும் வீட்டுக்கு வரலைன்னு பயப்பட மாட்டாங்களா? நீங்க அவங்களுக்கு ஒரு போன் பண்ணி வர வழியில ஜீப் பிரேக் டவுன் ஆகிறதுன்னு சூழ்நிலையைச் சமாளிக்கிற மாதிரி எதையாவது சொல்லிடுங்களேன். பாவம் பயப்பட போறாங்க” என்று வேதநாயகியின் மனதை அறிந்தவளாகச் சொன்னாள் வைதேகி.
Advertisement
“அதெல்லாம் மாமா அக்கா கிட்ட சொல்லி அம்மாவைச் சமாளிக்க சொல்லிட்டாரு.
நீ இதையெல்லாம் யோசிக்காம நேர நேரத்துக்குச் சாப்பிட்டு ஒழுங்கா டாக்டர் தந்த மருந்தைப்போடு. அப்பதான் கனடாவுக்கு உன்னால போக முடியும். கைக்கால்ல அடிபட்டா பிளைட்ல ஏத்த மாட்டாங்க தெரியும் தானே?” என்ற ரணதீரனை பார்த்துக் கோவமாக முறைத்தாள் வைதேகி.
“ஏன் அப்படி முறைக்கிற?” என்று ரணதீரன் கேக்க,
“இல்ல…என்னை இந்த ஊர விட்டு அனுப்பி வைக்கிறதுல்லையே குறியா இருக்கீங்களே? ஏன் நான் உங்க வீட்ல இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று கேட்ட வைதேகியின் முகம் சட்டென்று வாடியது.
“நான் எங்க அப்படி சொன்னேன்! நீ எத்தனை நாள், எத்தனை மாசம், ஏன் எத்தனை வருஷம் வேணும்னாலும் நம்ம வீட்ல இருக்கலாம். ஆனா நீதானே இங்கே இருந்து தப்பித்து கனடாவுக்கு போகணும்னு ஆசைப்படுற! அதனாலதான் சொன்னேன்” என்று ரணதீரன் சொல்ல, இந்த நொடி வேதநாயகியின் குடும்பத்தை பிரிய வைதேகிக்கு மனம் இல்லை என்பதுதான் உண்மை என்ற அவளின் மனநிலையை ரணதீரன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
இவர்கள் இருவரும் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த வேளையில்,
“மச்சான்…மருந்து வாங்கிட்டேன்,வீட்டுக்குப் போகலாமா? நீ வேற அரைகுறை ஆடையோட நிக்கிற! வீட்ல அத்தை கேட்டா என்ன சொல்றது” என்று மாறன் கேட்க,
“பொய் சொல்ல உங்களுக்குக் கத்தா கொடுக்கணும். இந்நேரம் நீங்க எதையாவது யோசித்து வச்சிருப்பீங்களே” என்று மாறனை காலை வாறும் விதமாகக் கேட்டான் ரணதீரன்.
“உண்மைய சொல்லனும்னா இந்த நிலைமையில் எனக்கு எந்த ஐடியாவும் வரல, இப்போ வைதேகி உன் சட்டையைப் போட்டு இருக்கிறது மட்டுமில்லாமல் பாப்பாவுக்கு கைக்கால்ல அடிபட்டு இருக்கு, இதையெல்லாம் பார்த்து நான் எந்தக் கதைய சொல்றதுன்னு எனக்கே ஒன்னும் தோணல மச்சான்” என்று மாறன் தவிப்பாகச் சொன்னதும் ரணதீரன் வைதேகியை ஒரு கணம் உற்றுப் பார்த்துத் தீர்க்கமான முடிவை எடுத்தான்.
“மாமா… இதுக்கு மேல அம்மாக்கிட்ட பொய் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லிடலாம்” என்று ரணதீரன் சொன்னதும் வைதேகியின் முகமும் மாறனின் முகமும் ஒருசேராக அதிர்ச்சியை தழுவியது.
“என்ன மச்சான் சொல்ற!? அத்தைக் கிட்ட உண்மையைச் சொல்லனுமா? “என்று மாறன் கேட்க,” தீரா…அத்தைக்கு உண்மை தெரிஞ்சா என்னை ரொம்ப தப்பா நினைப்பாங்க. நானாவது பரவால்ல! கனடா கிளம்பிடுவேன். ஆனா பாவம்! என்னால மாறன் அண்ணனுக்குத் தானே தர்ம சங்கடம். வேண்டாம் தீரா…என்னைப் பற்றி எதுவும் சொல்லிடாதீங்க” என்று வைதேகி கெஞ்சிக் கேட்டாள்.
வைதேகியின் பயத்தை புரிந்து கொண்ட ரணதீரன் அவள் அருகே சென்று,
“ஒரு பொய்யை மறைக்கிறதால அடுத்தடுத்து நிறைய பொய் சொல்ல வேண்டியது இருக்கும். அம்மாக் கிட்ட நான் பக்குவமா உண்மையை எடுத்துத் சொல்றேன். நீ கவலைப்படாத. மாமா பேர்ல எந்தத் தப்பும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன். மாமா வாங்க போகலாம்” என்று ரணதீரன் சொல்ல, வைதேகியைப் பற்றிய உண்மைகள் தெரியும் பட்சத்தில் வேதநாயகியின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற பயம் மாறனுக்குள் ஏற்பட்டது.
“மேடம் போகலாமா? நீங்கத் தனியா நடந்து வருவீங்களா இல்லனா நான் தூக்கணுமா?” என்று ரணதீரன் கேட்டதும, “நானே நடந்து வரேன். எப்படியா இருந்தாலும் உண்மை தெரிஞ்சதும் அத்தை என் கழுத்தை புடிச்சு வெளியே தள்ள போறாங்க! அப்போ நானா எழுந்து தானே தனியா நடக்கணும்” என்று வைதேகி பாவமாகச் சொன்னதும்,
“கவலைப்படாத…நீ கீழ விழும்போது உன் அண்ணன் அங்க தான் இருப்பார். ஏன்னா அம்மா உன் அண்ணனையும் கழுத்த புடிச்சு வெளியே தள்ளத் தான் போறாங்க” என்ற ரணதீரன் தன் மாமா மாறனை பார்த்து அர்த்தமாகச் சிரித்தான்..
“ஏன் மச்சான்… ஆக மொத்தம் நீ பிளான் பண்ண மாதிரி என்னையும் என் தங்கச்சியையும் உன் வீட்டை விட்டுத் துரத்தப் போற! அதானே உன் பிளான்? ” என்ற மாறனின் தோளில் தட்டிக் கொடுத்தான் ரணதீரன்.
“இதெல்லாம் பொய் சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்! இப்ப யோசிச்சு என்ன பயன். சரி சரி வைதேகி காலை அசைக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு, அதனால நம்ம ஹாஸ்பிடல்லயே இவங்களுக்கு வாக்கிங் ஸ்டிக் வாங்கிட்டு வரேன்” என்ற ரணதீரன் மருத்துவரைப் பார்க்கச் சென்றதும் மாறன் தவிப்புடன் கட்டிலில் அமர்ந்திருந்த வைதேகி அருகே சென்றான்.
“என்ன பாப்பா என் மச்சான் பேசறத பார்த்தா பயமா இருக்கா? “என்று மாறன் கேட்க, “ஆமா அண்ணா! உங்க மச்சான் அத்தைக் கிட்ட என்னைப் பற்றிச் சொல்லப் போறேன்னு சொல்றாரே அத்தை நம்மள தப்பா நினைச்சுட்டா என்ன பண்றது?” என்று தயக்கத்துடன் கேட்டாள் வைதேகி.
“நீ இதுக்கெல்லாம் பயப்படாத. என் மச்சான் யோசிக்காம எதையும் செய்யமாட்டான். அவன் அத்தைக் கிட்ட உண்மைய சொல்லனும்னு சொல்றானா அதுல ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும். விடு ப்வீட்டுக்கு போய் என்ன நடக்குதுன்னு பார்த்துப்போம். என்ன ஒன்னு அடுத்த வாரம் ரணதீரனுக்கும் உனக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்ன்னு அத்தை ரொம்ப ஆசையா இருந்தாங்க. இப்போ இவன் வேற உண்மைய சொல்றேன் ஊறுகாய் போடறேன்னு கிளம்பிட்டான்.
என்ன ஆகப்போகுதுன்னு தெரியல!” என்ற மாறனின் புலம்பளை கேட்டு மேலும் பயந்தாள் வைதேகி.
அதே சமயம் ரணதீரன் வாக்கிங் ஸ்டிக்குடன் வந்தவன் வைதேகியை காரின் அருகே பாதுகாப்பாக அழைத்துச் சென்று அவளைப் பின் இருக்கையில் அமர வைத்து தானும் அவள் அருகே அமர்ந்து கொண்டான்.
மாறன் காரை வேதயநாயகியின் பங்களாவை நோக்கி விரட்ட, வைதேகியின் முகம் பேய் அறைந்ததை போல இருந்தது.
“மச்சான்… எப்படியும் இன்னும் பத்து நாளுல வைதேகிக்கு பாஸ்ப்போர்ட் ரெடி ஆகிடும், நான் காதும் காதும் வச்ச மாதிரி வைதேகியை கனடாவுக்கு பிலைட் ஏத்தி விடுறேன், நீ அதுக்குள்ள அத்தைகிட்ட எதுவும் சொல்லிடாத” என்ற மாறனை கோவமாக முறைத்தான் ரணதீரன்.
“ஆமா தீரா… எனக்கும் கூட அதான் சரின்னு படுது” என்று வைதேகி சொல்ல,
“இப்போ நீங்க உண்மையை மறைச்சாலும், வைதேகி பாஸ் போர்ட் விஷயமா போலீஸ் வெரிஃபிகேஷன் நடக்கும்போது அம்மாவுக்கு இதெல்லாம் தெரிய தானே போகுது, அதுவும் இல்லாம இந்த ஏரியா போலீஸ் விக்ரமுக்கு வைதேகி யாருன்னு தெரிந்தால் அவன் சும்மாவா இருப்பான்? ” என்று ரணதீரன் கேட்டான்.
ரணதீரனின் கேள்வியில் உள்ள அர்த்தம் நியாயம் தான் என்று மாறன் எண்ணும் முன்னே”தீரா…ஆனா! விக்ரமுக்கு நான் யாருன்னு முன்னாடியே தெரியும்” என்று தயக்கத்துடன் வைதேகி சொல்ல,
“என்ன சொல்லுற! விக்ரமுக்கு உன்னைப் பற்றிய உண்மை தெரியுமா?” என்று மாறன் அதிரிச்சியாகக் கேட்டான்.
“அவனுக்கு எப்படி தெரியும்?” என்று அதே கேள்வியைச் சற்று கோவமாக ரணதீரன் கேட்க
“முதல் நாள் நீங்க என்னை உங்க கம்பெனிக்கு அழைச்சிட்டு போகும்போது உங்க வண்டி பிரேக் டவுன் ஆச்சு இல்ல! அப்போ கூட விக்ரம் எங்களை நடுக்காட்டில் சந்தித்தாரே! அப்போத்தான் என்கிட்ட நான் யார் என்ற உண்மை அவருக்குத் தெரியும்ன்னு சொன்னாரு. என்னைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்னு நான் கேட்டதுக்கு, கனடாவில் ஒரு முறை எனக்கு விருது கொடுத்த செய்தியை அவர் நியூஸ்ல பார்த்திருப்பார் போல, அதை வைத்துக் கூகிள் சர்ச் பண்ணி நான் யாருன்னு கண்டுபிடிச்சேன்னு சொன்னாரு. அப்புறம் இனி அவர்கிட்ட எதையும் மறைக்க முடியாது என்ற பட்சத்துல நானும் உண்மையைச் சொல்லிட்டேன். ஆனா அவருக்கு என்னைப் பற்றிய உண்மை தெரியும் என்ற விஷயம் மாறன் அண்ணனுக்குத் தெரியக்கூடாதுன்னு சொன்னாரு” என்று வைதேகி சொன்னாள்.
“அவன் ஏன் மாறன் மாமாக்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்னான்! ஏதோ ஒன்னு தப்பா இருக்கே, மாமா…இதுக்கு மேலயும் வைதேகி பத்தி அம்மாக்கிட்ட சொல்லாம இருந்தா அது தப்பா போயிடும். நீங்களாவது பரவாயில்லை! நம்ம வீட்டு ஆளு. ஆனா வைதேகியை அம்மா தப்பா நினைச்சுட்டா அது சரிவராது” என்று ரணதீரன் சொல்ல, “சரி மச்சான்…அத்தைக் கிட்ட உண்மையைச் சொல்லிடலாம்” என்ற மாறனும் ஒரு மனதாகச் சம்மதித்தான்.
சில நிமிட கார் பயணத்தில் மாறனின் வண்டி பங்களாவை சென்றடைய.
வைதேகியை கைத் தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து வந்தான் ரணதீரன்.
காலில் அடிப்பட்டு ரணதீரனின் சட்டையை அணிந்திருந்த வைதேகியை பார்த்து அவளுக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று புரியாமல் அனைவரும் அவள் அருகில் வர, “ஐயோ வைதேகி என்னமா ஆச்சு?” என்று பதறினார் வேதநாயகி.
“அம்மா அம்மா இருங்க ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான். வைதேகி நீ இப்படி உட்காரு” என்ற ரணதீரன் வைதேகியை சாய்வு இருக்கையில் அமர வைத்ததும், வைதேகி குடிக்க மாயா தண்ணீர் கொடுத்தாள்.
“ஐயோ…என்னன்னு தெரியலையே! நேரமே சரியில்ல, நேத்து நைட்டு என் பையன் செத்துப் பிழைச்சான், இப்போ என் மருமகளுக்கு கைக்கால் அடிபட்டு இருக்கு. கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன். ஏன் என் பிள்ளைகளைப் பாடப் படுத்துற” என்று வேதநாயகி கண்களில் கண்ணீருடன் ஆதங்கப்பட்டு புலம்பிக்கொண்டு இருந்தவரை சமாதானம் படுத்தும் விதமாக ரணதீரன் தன் அம்மாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
“அம்மா நீங்கப் பயப்படற அளவுக்கு ஒன்னும் ஆகல. வைதேகி மூணு நாள் ரெஸ்ட் எடுத்தா போதும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நீங்க முதல்ல இப்படி உட்காருங்க. உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்ற ரணதீரன் தன் அம்மாவின் கரங்களைப் பிடித்து வைதேகியின் அருகே அமர வைத்தான்.
“டேய் மவனே… என்னடா உன் மச்சான் என்னமோ சம்பவம் பண்ண போறான் போல! பீடிகை எல்லாம் பலமா இருக்கு. எனக்கு இப்பவே லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. நானுள்ள போறேன்” என்ற கீதா அவர் அறைக்குச் செல்ல முயன்றவரின் கரங்களைப் பிடித்துத் தன் அருகே நிறுத்தினான் மாறன்.
“இங்க பாருங்க அம்மா… திடீர்னு நான் மயக்கம் அடிச்சு விழுந்துட்டா என்னைத் தாங்கிப் பிடிச்சுக்க நீங்க இங்கேயே இருக்கனும்” என்று மாறன் சொல்ல,
“என்னது மயக்கமா! டேய் அப்பச் சம்பவம் நிச்சயமா? ” என்று கீதா கேட்க, “ஆமா…வைதேகியை பற்றிய உண்மையை ரணதீரன் அத்தைக் கிட்ட சொல்லப் போறான்” என்று மாறன் சொன்னதும் கீதாவின் சப்த நாடியும் அடங்கிப்போனது.
“என்ன ராணா… என் மருமகளுக்கு இப்படி அடிபட்டிருக்கு! நான் உடனே ஜோசியரைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன். என் கையை விடு” என்று வேதநாயகி இருக்கையிலிருந்து எழ முயன்றவரை மீண்டும் அமர வைத்தவன், “அம்மா நான் சொல்றத முதல்ல பொறுமையா கேளுங்க. நீங்க நினைக்கிற மாதிரி வைதேகி மாறன் மாமாவோட சித்தி பொண்ணு இல்லை” என்ற ரணதீரனின் வார்த்தையைக் கேட்டு வேதநாயகியின் இமைகள் அசைய மறந்தது.
“ராணா… என்ன விளையாடுறியா?என்ன சொல்ற நீ?வைதேகி சம்மந்தியுடைய தங்கச்சி மகள் இல்லையா?”என்ற வேதநாயகி தன் அருகே தலை குனிந்தபடி அமர்ந்திருந்த வைதேகியையும் தன் எதிரே அதே நிலையில் நின்றிருந்த மாறனையும் மாறி மாறிப் பார்த்தவர்,” டேய் என்னடா என்ன சொல்ற நீ? “என்று மீண்டும் தன் மகன் பேச்சை நம்பாதவராகக் கேள்வி கேட்க, வைதேகி யார்? எதனால் வைதேகியை தன் சித்தி மகள் என்று மாறன் பொய் உரைத்தான்?என்ற எல்லா உண்மையையும் ரணதீரன் பத்தே நிமிடத்தில் சொல்லி முடித்தான்.
வீட்டில் உள்ள அனைவரும் தன்னிடம் பொய் உரைத்துள்ளார்கள் என்ற உண்மையை அறிந்த வேதநாயகிக்கு இதயமும் துடிக்க மறுத்த நிலையில், “வைதேகி… ராணா என்ன சொல்றான்? நீ அப்போ மாறன் மாப்பிள்ளையோட தங்கச்சி இல்லையா? மாப்ள என்ன இதெல்லாம்?ஏன் இவ்வளவு பொய்?அப்போ வைதேகி இந்த வீட்டு மருமகள் இல்லையா?” என்ற வேதநாயகி நெஞ்சை பிடித்துக்கொண்டு அதே இடத்தில் கண்கள் கலங்கி மனம் உடைந்த நிலையில் அமர்ந்திருந்தவர் அருகே மாயாவும் மாறனும் மன்னிப்பு கேட்கும் விதமாக மண்டியிட்டு அமர்ந்தார்கள்.
“அம்மா…வைதேகி பற்றிய உண்மையைத் தெரிந்த பிறகுதான் மாறன் மாமா நம்ம வீட்டுக்கு அவளை அழைச்சிட்டு வர முடிவு பண்ணாரு. அதுக்கேத்த மாதிரி நீங்களும் உடம்பு சரியாம இருந்தீங்களா! அதனாலதான் இப்படியொரு பொய்யை சொல்ல வேண்டியதா போச்சு” என்று மாயாச் சொல்ல, “அத்தை என்னை மன்னிச்சிடுங்க” என்றான் மாறன்.
மாறி மாறி அனைவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்க, வேதநாயகி தன் அருகே அமர்ந்திருந்த வைதேகியை அழுத்தமாகப் பார்த்து, “ஏன் என்கிட்ட பொய் சொன்ன?நீயாவது உண்மையைச் சொல்லி இருக்கலாமே?” என்று தோய்ந்த குரலில் கேட்டதும், இதுவரை தேக்கி வைத்திருந்த மொத்தக் கண்ணீரும் வைதேகியின் விழிகளின் வழியே சீரிப்பாய்ந்தது.
தன் சூழ்நிலையை வைதேகி வேதநாயகியிடம் சொல்லும் முன்னே “அம்மா…நம்ம வீட்டுக்குப் போலீஸ் ஜிப்பும், இன்னும் ஒரு கார்ல அடியாட்களும் வந்திருக்காங்க” என்று வாசலிலிருந்து ஓடி வந்த பணியாளர் தெரிவிக்க, “என்ன அடியாட்கள் வந்திருக்காங்களா?” எனக் கோபமாகத் தன் அம்மாவின் அருகிலிருந்து எழுந்தான் ரணதீரன்.
“அய்யய்யோ…அவங்களுக்கு நான் இங்க இருக்கிறது தெரிஞ்சி என்னை அவங்க கூட அழைச்சிட்டு போகத் தான் வந்திருக்காங்க” என்ற வைதேகி பயத்துடன் மாறனின் பின்னே ஒளிந்து கொண்டாள்.
“ஏய் சித்ரா…நீ இங்க தான் இருக்கியா?
ஓ…கோடீஸ்வர பொண்ண உங்க வீட்டுக்குள்ள மறைச்சு வச்சுக்கிட்டு மொத்த சொத்தையும் நீங்க ஏப்பம் விடப் பாக்குறீங்களா? இந்தாடி… என்னைச் சாகுற அளவுக்கு அடிச்சுட்டு இங்க வந்து யார் வீட்லையோ மறைந்து வாழ்ந்துகிட்டு இருந்தா உன்னைச் சும்மா விட்டுடுவேன்னு நினைக்கிறியா? டேய் வாங்கடா, வந்து இவளை நம்ம வீட்டுக்குத் தூக்குங்க” என்று வைதேகியின் சொந்தக்காரன் ரங்காராவ் தலையில் கட்டுடன் ரணதீரன் வீட்டின் மத்தியில் நின்று அதிகாரமாகப் பேசுபவனை பார்த்து வைதேகியின் கைக்கால்கள் எல்லாம் நடுக்கம் எடுத்தது.
“என்ன போலீஸ்காரரே…மசமசன்னு நின்னுகிட்டு இருக்க. இதோ இந்தப் பொண்ண காணோம்னு தான் நான் உன்க் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஒழுங்கு மரியாதையா அவளை என்க் கூட அனுப்பி வைக்கச் சொல்லு. மீறி இங்கே வேற ஏதாவது கலாட்டா நடந்தா இந்த வீட்ல எத்தனை பிணம் விழும்ன்னு எனக்கே தெரியாது” என்று கோபத்துடன் காவல் அதிகாரியாக இருக்கும் விக்ரமை பார்த்தும், சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்தும் எச்சரிக்கும் விதமாகக் கடுமையான வார்த்தைகளால் ரங்காராவ் அனைவரையும் எச்சரித்தான்.
“வேணா… நீங்க இங்க இருக்கிற யாரையும் எதுவும் பண்ணாதீங்க. இப்போ என்ன? நான் உங்க கூட வரணும் அவ்வளவுதானே! சரி வரேன்” என்ற வைதேகி கால்களைத் தாங்கிய நிலையில் கண்களில் கண்ணீருடன் வாசலை நோக்கி நடந்தவளின் கரங்களைப் பற்றித்
தன் வசம் இழுத்தான் ரணதிரன்.
“டேய்…அவ மேல இருந்து கையை எடுடா” என்று ரணதீரனை அடிக்க ரங்காராவ் கையை ஓங்க, ரணதீரன் தன் விரலைச் சுண்டிய அடுத்த நொடி அவன் வாசலில் நின்றிருந்த மூன்று கருப்பு நிற வேட்டை நாய்களும் ரங்காராவை கடித்துக்குதற காத்திருந்த நிலையில்,
“வைதேகி எங்கேயும் வரமாட்டாள்” என்ற ரணதீரன், யாரும் எதிர்ப் பார்க்க வண்ணம் சட்டென்று அவளைத் தன் கரங்களால் தூக்கிக்கொண்டு தன் அன்னை வேதநாயகியின் அறைக்குள் சென்றவனை பார்த்து அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள்.
error: Content is protected !!