Skip to content
Post Views: 3,926
உனக்கென இருப்பேன் -6
குழ்ந்தை அழத்தொடங்க கீர்த்தியை பார்த்தான் . அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் .
மெல்ல குழந்தையை தூக்கி அணைத்துக் கொண்டான் . இரவு விளக்கின் ஒளியில் அழுகையை நிறுத்திய குழந்தை அவன் முகத்தை பார்த்து ஆ ஊ என்று கையை காலை உதைத்தது .
உஷ் …அம்மா தூங்கறாங்கடா செல்லம் . குட்டி மூச்சா போயிட்டிங்களா ? பசிக்குதா குட்டி செல்லத்துக்கு ரகசிய குரலில் பேச்சு கொடுத்துக் கொண்டே துணி மாற்றிவிட்டான்.
Advertisement
குழந்தை பசியில் விரல் சப்பத் தொடங்கிவிட்டது . அவளை எழுப்பத் தயங்கியவன் குழந்தையை தூக்கிக் கொண்டே கிச்சனுக்கு சென்று பால்காய்ச்சி பால்புட்டியில் நிரப்பி கொடுத்தான் . பாலை குடித்துவிட்டு சுகமாய் உறக்கத்தை தொடர்ந்தது குழந்தை .
பாவம் இந்த குழந்தை பிறந்த ஐந்து மாதத்தில் தகப்பனை இழந்த துர்பாக்கியம் வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது . தன்னுள்ளே புலம்பிக் கொண்டான்.
உனக்கு அப்பா இருக்கேன்டா செல்லம்…. நீ என் ராஜகுமாரன் உன்னை எப்படி எல்லாம் வளர்ப்பேன் தெரியுமா ? குழந்தையின் பிஞ்சுவிரல் பற்றி முத்தமிட்டான் .
Advertisement
சற்றுநேரம் கண்ணயர்ந்த குழந்தை மீண்டும் அழத்தொடங்க …இம்முறை அவனால் சமாதானம் செய்ய முடியவில்லை .
Advertisement
என்னடா மகனே பிரச்னை …மூச்சா கூட போகலையே …குழந்தை அழுது களைத்தது .
வேறுவழியில்லை …கீர்த்தி கீர்த்தி …மெல்ல அவள் முதுகில் தட்டினான் .
“என்ன வினோ ?எனக்கு தூக்கம் வருது “ புரண்டு படுத்தாள் .
Advertisement
நடுங்கும் கரத்தை சட்டென்று விலக்கிக் கொண்டான் .
அவன் இதயம் அதிவேகமாய் துடித்தது .
அவள் எப்படி வினோவை மறப்பாள் ? அவள் மறந்து விட வேண்டும் என்பது தான் உன் எண்ணமா ?மனசாட்சி நறுக்கென்று கேட்டு வைத்தது
குழந்தை மீண்டும் வீறிட்டு அழ கீர்த்தி பதறி எழுந்தாள் .
அச்சோ …என்னை எழுப்பியிருக்கலாம் இல்ல…பாய்ந்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் .
குழந்தையின் பசியாற்றி மடியில் வைத்து சற்றுநேரம் ஆட்டியதுமே உறங்கிவிட்டது .
நீங்க தூங்குங்க என்றவள் கொட்டாவி விட்டபடி படுத்துக் கொண்டாள்
மெல்ல அறைக்கதவை திறந்தவன் வெளியே வந்து குறுக்கும் நெடுக்குமாய் நடக்கத் தொடங்கினான் .
கீர்த்தி வினோத்திற்காக ஏங்குகிறாளே … பாவம் கீர்த்தி. வினோத் நீ தீர்காயுளோடு இருந்திருக்கலாம் . நீ இருந்திருந்தால் கீர்த்தி எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்திருப்பா .
சோஃபாவில் சாய்ந்தவனுக்கு மூச்சு முட்டியது .
அஸ்வின் நான் கீர்த்தனா இல்லைனா செத்து போயிடுவேன் . கை
பிடித்து அழுத வினோத்தின் முகம் கண்முன் வந்து போனது . இவ்வளவு அவசரமா போய் சேரத்தான் அவசரமா கல்யாணம் பண்ணியா ?
மகிழ்ச்சியா பயமா ? ஏதோ ஒன்று கண்ணில் மின்ன …வினோத்தின் மாங்கல்யத்தை அவள் ஏற்ற நிகழ்வு சற்றுமுன் தான் நடந்தது போல இருந்தது .
பாவம் அவள் ! ஒரு தாலி இறங்கிய சில மாதங்களிலேயே அடுத்த தாலி ஏறும்போது எந்த பெண்ணால் தான் ஜீரணிக்க இயலும் ?
நடுங்கும் கரத்துடன் தான் மாங்கல்யம் பூட்டியதும் கண்கள் குளமாக அவள் குனிந்து வாங்கியதும் அவன் மனதை பிசைந்தது .
எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ இழுத்துச் சென்று அவனை சின்னாபின்னமாக்கி அயர்ந்து போக செய்தது .
எப்போது உறங்கினான் என்று தெரியாது ஆனால் தன்னை மீறி சுவாதீனமின்றி உறங்கினான் .
“……………”
எப்படி எழுப்ப என்று தயங்கி நின்றவள் …அருகில் கிடந்த டவலை எடுத்து தட்டினாள் . ம்கூம் ….அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் .
என்னங்க …என்னங்க ….அவனிடம் அசைவே இல்லை . அவன் பின்னிரவில் தான் உறங்கினான் என்பது அவளுக்கு எப்படி தெரியும் ?
விளையாடி கொண்டிருந்த குழ்ந்தையை தூக்கி வந்து சிறுகரம் பற்றி அவனை தட்டினாள் . அப்பாவை எழுப்புங்க செல்லம் …அப்பாக்கு உடம்பு சரியில்லையா ? உறங்குபவன் மார்பில் குழ்நதையை படுக்கவைத்தாள் .
க்கே …க்க …என்று மிழற்றிய மழலை குரலிழும் பிஞ்சு கரத்தின் வெல்வெட் ஸ்பரிசத்திலும் மெல்ல இமை விலக்கினான் .
குழந்தை அவனின் மார்பில் அடித்து விளையாட ….குட்மார்னிங்டா குட்டி என்றான் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு. குழந்தை இரண்டுபல் முளைத்த பொக்கை வாய் திறந்து சிரிக்க …”தியா குட்டி செம்ம ஹேப்பி போல “ஆனந்தமாய் நெற்றியில் முத்தம் வைத்தான் .
சாரி… ஏழரை மணி ஆகிடுச்சு நீங்க எழுந்துக்கல …. உடம்புக்கு முடியலையோன்னு தான் எழுப்பினோம் ..காபி கப்பை அவன் முன் நீட்டினாள் .
நான் பிரஷ் பண்னனிட்டு தான் குடிப்பேன் என்றவன் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு பல்தேய்க்க சென்றான் .
“…………………….”
ஸ்கூலுக்கு போகவே ஒருமாதிரி இருக்கு சரோ என்றார் பொன்னுசாமி .
என்னப்பா இதெல்லாம் ஒரு பேச்சா ? ஒரு டீச்சர் மாதிரி பேசுங்க ! கோபமாய் முறைத்தாள் அக்ஷயா .
இல்லம்மா ….எனக்கு ஒரு மாதிரி …
என்ன ஒரு மாதிரி ? கேட்கறவங்களுக்கு சொல்லுங்க நீங்க சினிமாவில் பார்த்து கைதட்டிட்டு வர சீர்திருத்தத்தை என் பிள்ளை நிஜத்தில் செய்திருக்கான்னு நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்க !
பொண்ணை பெத்த எந்த தாயும் தகப்பனும் இதை தப்பா பார்க்கவும் மாட்டாங்க ,பேசவும் மாட்டாங்க …. ஆவேசமானாள் அக்ஷயா .
சரோஜினிக்கு பதில் சொல்ல தெரியவில்லை …ஆயினும் மகளின் வார்த்தைகள் அவரை சமாதானம் செய்யவில்லை .
தந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அக்ஷயா கல்லூரிக்கு சென்றாள்
“………………….”
காலை உணவு வேளை …அம்மா அஸ்வின் திட்டம் போட்டு தான் கீர்த்தனாவை கல்யாணம் பண்ணியிருக்கான்னு என் வீட்டுக்காரர் நினைக்கிறார். தணிந்திருந்த நெருப்பை விசிறிவிட்டாள் நிஷா .
அவர் நினைக்கிறதில் ஒன்னும் தப்பில்லையே …பத்மினி சுதி கூட்டினார் .
என்ன ஆத்தாளும் மகளும் நாடகத்தை ஆரம்பிச்சுட்டீங்களா ? தட்டை தூக்கி சுவத்தில் அடித்தார் கிருஷ்ணசாமி .
பத்மினி மிரண்டு எச்சில் விழுங்கினார்.
அஸ்வினுக்கு மாசம் எவ்வளவு சம்பளம் தெரியுமா ? அவன் சப் கலெக்டர் கேடரில் இருக்கிறவன் . எங்க அண்ணனுக்கு என்னை விட நிலபுலன் அதிகம் . எங்க அண்ணிக்கு அம்மாவீட்டு வழியில் கூட ஏகப்பட்ட சொத்து வந்திருக்கு .
இந்த நொள்ளை சொத்துக்கு தான் அவன் நாக்கை தொங்கப்போட்டு அலையறானா ? வார்த்தைகளை தெறிக்கவிட்டு ஆவேசமாய் வெளியேறிவிட்டார் .
யாரும் எதுவும் பேசவில்லை …பேசவும் வார்த்தையில்லை .
“…………….”
சார் நீங்க ஆபிஸ் வரீங்க தானே ?சரவணன் தயக்கமாய் கேட்டான் .
இல்ல சரவணா …இன்னைக்கு வெள்ளிக்கிழமை லீவ் எடுத்துக்கிட்டா வீக் எண்ட் சேர்ந்து மூணு நாள் லீவ் கிடைக்கும்.மன்டே ஜாயின் பணிக்கலாம்னு யோசிக்கிறேன் . கீர்த்தி தனியா இருப்பா ….அவளை கூட்டிட்டு திருவந்திபுரம் ஹயக்ரீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன் .
ஓகே சார் இதுவும் நல்ல யோசனை தான் .நான் கிளம்புறேன் ! அவன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.
கீர்த்திமா குட்டிப்பையன் என்ன பண்றான் ?வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மஞ்சுளா வந்தார் .
வாங்கம்மா குட்டி விளையாடிட்டு இருக்கார் .
டிபன் பண்ணியாம்மா? நான் எடுத்துட்டு வரவா ?
வேண்டாம்மா பூரி செய்தேன், வாங்க சாப்பிடுங்க !
நான் டிபன் சாப்பிட்டாச்சு ! “குழந்தை நைட் நல்லா தூங்கினானா” ?
ஒன்னும் பிரச்சனை இல்லை நல்லா தூங்கினாம்மா.
சரிம்மா நான் தியானு குட்டியை கொஞ்சநேரம் வச்சிருக்கேன் நீ வேலை இருந்தா பாரு ! அவர் தூக்கிக் கொண்டு போனார் .
குளித்து தலைதுவட்டிக் கொண்டு வந்த அஸ்வினையே பார்த்து நின்றாள் .
என்ன கீர்த்தி ?
நீங்க ஆபிஸ் போகலையா ? சங்கடமாய் கேட்டாள் .
இல்லை …தலையை கோதிக் கொண்டான் .
ஏன் லீவ் போட்டுட்டு ?
ஓஒ …. அதுவா ? எனக்கு நிறைய CL இருக்கு (CASUAL LEAVE ) அது தான் லீவ் போட்டுட்டு பொண்டாட்டி பிள்ளை கூட ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு…. புருவம் உயர்த்தி சிரித்தான் .
அவன் உரிமை பேச்சில் அவள் திடுக்கிட்டு பார்த்தாள் .
அவன் படு கேஷுவலாக சட்டை பொத்தானை பூட்டிக்கொண்டு நின்றான் .
என்ன அப்படி பார்க்கிற ?
குளிச்சுட்டு கிளம்பு ! கோயிலுக்கு போகணும் என்றான் .
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவந்திபுரம் .
குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்க சிரமப்பட்டாள் . மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு நடந்தான் .
தனக்கு இணையாக நடக்க முடியாமல் புசு புசுவென மூச்சு விட்டுக் கொண்டு நடக்கும் மனைவியை ஓரவிழியில் பார்த்து சிரித்தான். புத்தம்புது மஞ்சள்கயிறு மின்ன …குங்குமம் வியர்வையில் கரைந்து கலைய…. இடையோடு பின்னல் இழைந்தாட புடவையை தூக்கி பிடித்துக் கொண்டு நடக்கும் மனைவியை நின்று ஒரு கணம் ரசித்தான் .
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசுவாமி உடனுறை ஹேமபுஜவல்லி அம்பாளை மனமுருக சேவித்துவிட்டு …கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பிரசித்திபெற்ற தமிழ்நாடு உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
“……………….”
ஹே அச்சு என்னடி உங்க அண்ணன் இப்படி பண்ணிட்டாரு ?அக்ஷயாவின் வகுப்புத்தோழி சங்கவி வருத்தமுடன் கேட்டாள் .
அச்சுவின் பதிலுக்கு அனைத்து மாணவிகளும் ஆர்வமுடன் காத்திருந்தனர் .
என்ன பண்ணனிட்டார் ? நக்கல் போல் கேட்டாள் .
இல்லடி …எவ்வளவு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம் .
ஏன் இப்போ கல்யாணம் பண்ணியிருக்க பொண்ணுக்கு என்னவாம் ?
ஒண்ணுமில்ல ….அவள் பல்லை கடித்தாள் .
சங்கவி ….என் அண்ணன் பண்ணின மாதிரி உன் அண்ணனை பண்ண சொல்லு பார்ப்போம் ?
என்னடி முழிக்கிற ? எங்கண்ணன் வாய் சொல்லில் வீரரடி மாதிரி கிடையாது .
எங்க அண்ணனோட பரந்த மனசு உங்கண்ணனுக்கு வருமா ?
கன்னி பொண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லை சங்கவி , கணவனை இழந்த அதுவும் கையில் குழந்தையோட இருக்கிற பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் இளகிய மனசும் முற்போக்கு சிந்தனையும் எங்க அண்ணனுக்கு இருக்கு .
“நூறு பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது போல !”
என் அண்ணனை பத்தி பேச யாருக்கும் தகுதி இல்லை சொல்லிட்டேன் ! விரல் நீட்டி எச்சரித்தவளை கண்டு தோழிகள் வாயடைத்து விட்டனர் .
“………………”
எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டு இந்த பையன் ஒரு போன் கூட பண்ணி பேசல பாரு சரோ ? மனைவியிடம் அங்கலாய்த்தார் பொன்னுசாமி .
விடுங்க ! அவர் பெரிய மனுஷராயிட்டார் …அவர் வாழ்க்கையை அவரே முடிவு பண்ணிகிட்டாரு . இனிமேல நம்ம தயவு எதுக்கு ? படிக்கவைத்தோம் ஆளாக்கிவிட்டோம் கடமை முடிஞ்சுடுச்சு . வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் சரோஜினி
எப்படி எல்லாம் வளர்த்தோம் ? ஒரு சிநேகிதனை போல தானே பழகினேன் . இவன் இப்படி பண்ணுவான்னு கனவில் கூட நினைக்கல . என் ஆசையில் தீயை வச்சுட்டான் . ஆற்றாமையில் புலம்பினார் பொன்னுசாமி .
அப்பா உங்கட்ட எப்படி பேசறதுன்னு சங்கோஜமா இருக்கும் .அண்ணா பேசினா நீங்க இன்னும் வருத்தப்படுவீங்கன்னு பேசலை போல என்றாள் அக்ஷயா .
ஆமாடி நீ அண்ணன்காரனை விட்டு கொடுக்காத பாசமலர் சாவித்ரி . சரோஜினி கடுமையாய் முறைத்தார் . எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறான் அவனுக்கு என்ன இவ்வளவு சப்போர்ட் என்ற கடுப்பு அவருக்கு
“…………….”
குழந்தை உறங்கிக் கொண்டிருக்க …கீர்த்தி முல்லை அரும்பை தொடுத்துக் கொண்டிருந்தாள் . அஸ்வின் லேப்டாப்பில் என்னவோ பார்த்துக் கொண்டிருந்தான். போன் அழைத்தது .
அச்சு சொல்லுடா !அப்பா அம்மா நல்ல இருக்காங்களா ? நீ காலேஜ் போனியா ?
எல்லோரும் நலம் .காலேஜ் போயிட்டு வந்தேன் . அண்ணி தியானுகுட்டி நல்லா இருக்காங்களா ?
ம்ம்ம்ம் சூப்பரா இருக்காங்க . தியானு தூங்கறான் ,உங்க அண்ணி பக்கத்தில் தான் இருக்கா பேசும்மா ….சட்டென மொபைலை கீர்த்தி கையில் கொடுத்தான்.
இதுவரை கீர்த்தியும் அக்ஷயாவும் பேசிக் கொண்டதில்லை .கோயிலில் ஓரிரு முறை பார்த்துக்கொண்டதுண்டு . அப்போதும் பேசியதில்லை . அது அக்ஷயா, நம்ம அஸ்வினோட தங்கை எனக்கும் தங்கை தான் என்று வினோத் காட்டியிருக்கிறான் . வினோத்தை பார்த்து அவள் புன்னகைத்துவிட்டு போய்விடுவாள்.
வினோத் இறந்த அன்று அழுது களைத்து கிடந்த கீர்த்தியின் தோள் பற்றி கண்ணீர் துடைத்து விட்டிருக்கிறாள் அக்ஷயா .
திடீரென்று பேசு என்றால் என்ன பேசுவது ? என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது ? இரு பெண்களுக்குமே தயக்கம் .
ஹலோ அண்ணி …தயக்கத்தை புறந்தள்ளி அக்ஷயாவே ஆரம்பித்தாள் .
சொல்லு அக்ஷயா மாமா , அத்தை என்மேல் கோபத்தில் இருக்காங்களா ?
அதெல்லாம் இல்லை அண்ணி . கூடிய சீக்கிரம் மனசு மாறிடுவாங்க
எல்லாம் என்னால் தான் அக்ஷயா …விழி நீர் திரள குரல் உடைந்தது கீர்த்தனாவிற்கு .
அவளிமிருந்து மொபைலை பிடுங்கியவன் “அச்சும்மா அவ இப்படி தான் புலம்பிட்டு இருப்பா …”வேற என்னமா செய்தி ?
அண்ணா நீ அப்பாக்கு கால் பண்ணி பேசு !
அப்பாக்கா ? கொஞ்ச நாள் போகட்டும் !
அண்ணா ப்ளீஸ் ! அப்பா ரொம்ப உடைந்து போயிருக்கார் . பேச பேச தான் இடைவெளி குறையும் .
இல்லம்ம்மா …அவங்களுக்கு புரிஞ்சுக்க டைம் எடுக்கும் .
அஸ்வின் கையில் இருந்து மொபைலை பிடுங்கியவள் அக்ஷயா அவர் கண்டிப்பா பேசுவார் என்றாள் கீர்த்தனா .
திருப்தியாய் இணைப்பை துண்டித்தாள் அக்ஷயா .
“………..”
என்ன மேடம் மாமனார்கிட்ட பேச போறீங்க போல ? கட்டிலில் சாய்ந்து காலாட்டிக் கொண்டே சிரித்தான் .
நான் பேசல ….நீங்க பேசப்போறீங்க ! அவள் கட்டளை போல் பேசினாள் .
பாருடா ஆர்டர் தூள் பறக்குது .புருவம் உயர்த்தி சிரித்தான் .
எனக்கு கில்டியா இருக்கு பேசுங்க ப்ளீஸ் ! அவள் விழிகள் இறைஞ்சியது .
ம்ம்ம்ம்ம் ….பேசிட்டா போச்சு ! என்ன பேசணும்னு சொல்லிட்டா பேசிடுவேன் .
நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க ! நான் இந்த ஜென்மம் முழுதும் நன்றி சொன்னாலும் போதாதுன்னு சொல்லுங்க !
தழுதழுத்தது குரல் . நிலம் பார்த்து நின்றவளின் முகம் நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டவன் “இப்படி எல்லாம் பேசுனால் எனக்கு கோபம் வரும் என்றான் மென்மையாய் மிக மென்மையாய்”.
உனக்கு என்ன உன்மாமனார் கூட பேசணும் தானே …. பேசிட்டு வரேன் . தயவுசெய்து அழுது புலம்பி என்னை டென்சன் பண்ணாதே ! இயல்பா இருக்க முடியலைன்னா அமைதியா இரு ! மேல மேல உன்னை நீயே தாழ்த்திக்காதே …. அவள் கன்னம் தட்டி எழுந்து போனான் .
error: Content is protected !!