Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 10

   எட்டு மணிக்குமேல் எழுந்த துரைப்பாண்டி, பால்கனியிலிருந்து ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். பஜாரில் நெல் அரிசி மார்க்கெட் காலை ஐந்து மணியிலிருந்தே பரபரப்பாக இருக்கும். அதிகாலையிலேயே சரவணன் நெல் மண்டிக்குக் கிளம்பிப் போய்விடுவார். வீட்டுக்கு வர பத்து மணிக்குமேல் ஆகிவிடும்.
கோடை விடுமுறையாக இருந்தாலும் ப்ளஸ்டூ என்பதால், பிரபுவுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது. வேண்டா வெறுப்பாகக் கிளம்பிப் போனான். துரைபாண்டிக்கு காபி கொண்டு வந்த மலர், சற்று நின்றாள்.
“என்ன துரை.. நல்ல தூக்கமோ?”
“ஆமா அத்தை.. அது வந்து.. சின்ன வயசுல இருந்தே லேட்டா எழுந்து பழக்கமாயிடிச்சி.”
“அதுசரி, நேத்தே ஒண்ணு கேக்கணும்னு நெனைச்சேன். பேச்சு அப்படியே வேற பக்கம் போயிடுச்சி.”
“என்ன அத்தை?”
“உங்க ரமணியத்தைக்கு எத்தனை பிள்ளைங்க?”
“ரெண்டு. ரெண்டுமே பையனுவதான். நம்ம பிரபுவைவிட வெடிப்பா இருப்பானுவ.”
“நீங்க ரமணியத்தையைப் பார்த்ததில்லையா அத்தை?”
“யாரு காட்டுனாங்க? உங்க அம்மாவைத்தான் பார்த்திருக்கேன். ஒரே ஒருமுறை,
அவங்க இறந்ததுக்குக்கூட உங்க மாமா மட்டுந்தான் வந்தாங்க. ஹூம்..இனி நீதான் உங்க அத்தையை எனக்கு அறிமுகப்படுத்தணும்.”
“அம்மா டிஃபன் ரெடியா?” என்றபடி தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் வசுமதி.
மெரூன் நிற டாப்பும் சந்தன நிற லெக்கின்ஸுமாய் அப்போதுதான் பூத்த பூ போல இருந்தாள்.
அவளுக்கு டிஃபன் பாக்ஸை தயார் பண்ண சமையலறைக்குள் போய்விட்டாள் மலர்.
“என்ன அத்தான், பல்லு வெளக்காகமலே காபியா?”
“நான் உன் அளவுக்கு டீசண்ட் இல்ல தாயே!” என்று சிரித்தான் துரைப்பாண்டி.
உள்ளறையில் அவனது போன் அடிக்கும் சத்தம் கேட்டது.
போனைக் கையில் எடுத்த துரைப்பாண்டி சுற்றும் முற்றும் பார்த்தான். அது ஒரு வீடியோ கால்.
“ஆங்.. சொல்லுங்க அத்தை நல்லாருக்கீங்களா?”
“ம்ம் என்னடா எப்படியிருக்கே?”
“எனக்கென்ன.. உங்கண்ணன் நல்லாதான் வச்சிருக்காரு.”
“பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தான். வசுமதிக்கு கண்களால் ஜாடை காட்டியபடி பால்கனிக்குச் சென்றான்.
“என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? ஏய் இரு.. எங்க இருக்க? இது உன் மில் மாதிரி இல்லையே?” ரமணியின் முகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி அப்பட்டமாய்த் தோன்றியது.
“சென்னையில இருக்கேன் அத்தை.. ஒரு வேலையா வந்தேன்.”
அவன் அருகே கேமராவில் தெரியாதவாறு பூனை போல நெருங்கினாள் வசுமதி.
“சென்னையில எங்க.. யார் வீடு இது?” அவளது குரல் இப்போது மாறியிருந்தது.
“இது..இது.. நம்ம சரவணன் மாமா வீடு..”
“என்னது?!”
மறுநொடியே கால் கட்டானது.
ரமணியின் முகத்தைப் பார்க்கமுடியாமல் ஏமாற்றமடைந்தாள் வசுமதி.
****
சங்கர் ஏதோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதைப்போல் கலவரமடைந்தாள் மித்ரா.
“ஸாரி?”
“என்னைக் கட்டிக்கிறியா மித்ரா?”
“சங்கர்.. ஒண்ணு புரிஞ்சிக்கோ. நான் அன்னிக்கு ராத்திரி எது பேசியிருந்தாலும் அது என் மனப்பூர்வமா பேசினது கிடையாது.”
“பரவால்லை அதைவிடு. நான் எதையும் மனசுல வச்சிக்கலை.”
“இல்லை சங்கர். நான் சொல்ல வர்றது இன்னும் உனக்குப் புரியலை.என்னோட கனவுகள் அதிகம். எதிர்பார்ப்பும் ரொம்ப பெருசு. நீ வீணா கற்பனையை வளர்த்துக்காத.”
அவனை நேரே பார்க்காமல் காற்றில் எதையோ பார்த்தவாறு பேசினாள் மித்ரா.”
“அப்ப உனக்கு என் மேல உண்மையிலேயே அன்பு இல்லையா?”
“கரெக்ட்டு. அன்பு இருக்கு. நிறைய இருக்கு. ஆனா அதை எப்படி லவ்வுன்னு சொல்லலாம்?
நான் இப்ப வரைக்கும் உன்னை ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பார்க்குறேன். அதைத்தாண்டி யோசிக்க நமக்குள்ள ஒண்ணும் இல்ல!”
“அப்ப இதுக்குமேல அந்த ‘நண்பன்’கிற எண்ணம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா?”-என்ற சங்கரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“எனக்குப் பசிக்குதுபா, சாப்பிடப் போலாமா?” என்றாள்.

  மித்ரா அதற்குப்பின் பழையபடி சகஜமாகிவிட்டாள். ஹோட்டலில் சாப்பிடும்போது எப்போதும்போல் தொட்டுத் தொட்டுப் பேசினாள். சிரித்தாள். சங்கர்தான் பித்துப்பிடித்த நிலைக்கு வந்துவிட்டான்.
“நீ எதும் ஒர்ரி பண்ணிக்காத சங்கர். குருமூர்த்திய நான் டீல் பன்னிக்கிறேன்.” என்றாள்.
சங்கரின் கவலை அதிகமாயிற்று.
*******
  ரமணியம்மா ஏன் பேச்சைத் துண்டித்தாள். திரும்ப இரண்டு முறை துரைப்பாண்டி போன் போட்டும் எடுக்கவில்லை. என்ன கோபம்? யார் மீது கோபம்? வசுமதிக்குத் தலையே வெடித்துவிடும்போல இருந்தது.
“ஏம்மா, சிக்னல் விழுந்துடிச்சி வண்டிய எடும்மா!” யாரோ ஒருவர் கத்தினார். அவள் சுயநினைவுக்கு வருவதற்குள், அவளது ஆக்டிவாவின் பின்புறத்தில் லேசாக இடித்து நின்றது ஒரு பைக்.
“ஏங்க.. என்னங்க வண்டி ஓட்றீங்க? தூக்கம் வந்தா வீட்ல போய்த் தூங்க வேண்டியதுதான?” என்றான் அவன்.
பதட்டத்தில் வண்டி ஆஃப் ஆக, வசுமதிக்கு வியர்த்தது. இறங்கி வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓரங்கட்டினாள். அவனும் ஓரங்கட்டினான்.
“அட நீங்களா? ஹெச்சார் மேடம்! என்னாச்சுங்க? காலையில சாப்பிடலையா?”
நல்லவேளை. அவன் சண்டைக்கு வரவில்லை என்பது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.
“ஸாரிங்க.. அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றபடி வலிய சிரித்தாள்.
“என்னை உங்களுக்குத் தெரியுமா?”
“என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க. நான் மதன். ஒருநாள் இந்த வண்டிக்கு என் ஃப்ரெண்டு கடையில பஞ்சர் போட்டிங்களே. நான்கூட எனக்கு ஒரு வேலை பார்த்துக் கொடுங்கன்னு கேட்டேனே. டீயெல்லாம் வாங்கிக் கொடுத்தேனேங்க மறந்துட்டீங்களா? இந்தப் பொண்ணுங்களே இப்படித்தாங்க.”
“ஹலோ, இருங்க இருங்க.. ஞாபகம் வந்துடுச்சி. நீங்க இவ்ளோ நீளத்துப் பேசினா, நான் நேரத்துக்கு ஆபீஸுக்கு போகமுடியாது!”
“கரெக்ட்டு. நீங்க ஆபீஸுக்குக் கிளம்புங்க. ஆனா என் போன் நம்பரை அன்னிக்கே டெலிட் பண்ணிட்டீங்க போலிருக்கே.” என்றபடி அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண, வசுமதி சிரித்தாள்.
கைப்பையைத் திறந்து தனது கார்டை எடுத்துக் கொடுத்தாள்.
“அப்புறமாக் கூப்பிடுங்க, சேவ் பண்ணிக்குறேன்.”
மதனுக்கு பை சொல்லிவிட்டு போக்குவரத்தில கலந்து மறைந்துபோனாள்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!