உறவாடும் கனவே தொடருதே அத்தியாயம் …1
உறவாடும் கனவே தொடருதே
அத்தியாயம் …1
Advertisement
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
Advertisement
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
Advertisement
என மந்திரத்தை உச்சரித்தப்படி, அழகே உருவாகி, சர்வ லட்சணத்துடன் காட்சியளித்து கொண்டிருந்த, அந்த உலக நாயகியான அம்பாளின் சன்னதியில் இருந்து வெளிவந்த ஐயர், அவள் கைகளில் திருநீறு, குங்கும பிரசாதத்தை கொடுக்க, அதனை வாங்கி, நெற்றியில் இட்டுக் கொண்டு மீண்டும் அம்பாளை நோக்கி இமைகளை மூடி, வேண்ட ஆரம்பித்தாள் தமிழ்ஸ்ரீ வெண்பா.
அவளின் வேண்டுதல் அதிகப்பட்சமாக என்ன இருந்து விட போகிறது? எல்லாரும் நல்ல இருக்கனும் தாயே! எல்லாருக்கும் எல்லாத்தையும் எந்த குறைவில்லாமல் கொடுத்து, எல்லாரும் சந்தோஷமா வாழ நீ தான் அருள் புரியனும் அம்மா’ என எல்லாருக்காகவும் தான் எப்பொழுதும் அவள் வேண்டுதல் இருக்கும்.
Advertisement
வேண்டுதலை முடித்தவள் அமைதியாக, பிரகாரத்தை வலம் வந்தாள்.
“ஏய் வெண்பா” என்ற குரலில், சட்டென்று திரும்பி பார்க்க, அங்கே கோவில் வாசலில் அவளது தோழி மலர் நின்றிருந்தாள்.
அவளை பார்த்து புன்னகைத்தவள், அவளருகே வர, மலரோ,
“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? அங்கே பெரிய வீட்டில் உன்னை தான் வல போட்டு தேடிட்டு இருக்காகவ. நீ என்ன டான்னா சாவகாசமா சாமி கும்பிட்டுட்டு இருக்க?” என்றவளுக்கு,
“இதோ போறேன் மலரு” என்றாள் வெண்பா புன்னகையுடன்.
“மொதல்ல கிளம்பு. அங்க உன் அம்மாச்சி வாசலையே பார்த்துட்டு இருக்காக. நீ போன தானே அவைகளுக்கு, வாயும் கையும் நல்ல வேல செய்யும். அதான் உன்ன தேடுறாக போல. அந்தப்பக்கம் நான் வரவும், என்கிட்ட சொல்லி விட்டாக”
என அவளது தாயின் தாய், அவளுக்காக காத்திருப்பதை கூற, வெண்பாவும் சரியென்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப தயாரானாள்.
கிளம்பும் முன், மீண்டும் அம்பாளை திரும்பி பார்த்தவள், அந்த கடவுளுக்கு கூட தெரியாத, தன் மனதிற்கினிய நபருக்காக, மீண்டும் மனதுக்குள்ளே பிராத்தித்து கொண்டு புறப்பட்டாள்.
நேராக தன் இல்லத்திற்கு வந்தவள், படுக்கையில் இருக்கும் தாயின் அருகில் சென்று, அவருக்கு திருநீறு இட, அவரோ அதில் கண் விழித்து பார்த்தார்.
“கோவில் போய்ட்டு வந்தியா வெண்பா?” என்று எழுந்தமர்ந்தபடியே அவர் கேட்க,
“ஆமாம் மா, போகணும் தோணுச்சு அதான் போனேன். அதுக்குள் நம்ம பக்கத்து வீட்டு மலரு வந்து, அம்மாச்சி நான் இன்னும் வரலையேனு கேட்டதா சொன்னா. அதான் சீக்கிரம் வந்துட்டேன்” என கூறியவள், சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“அப்பா இன்னும் வரலையா ம்மா?” என வெண்பா கேட்க,
“இன்னும் வரல மா. வர நேரமா தான் இருக்கும். சாப்பிட்டாரோ? இல்லையோ? வேலனு வந்துட்டா மனுஷன் சோறு தண்ணி இல்லாமா ஓடுறார். நேத்து போனவர், இன்னும் வரல பாரேன்”
என கணவனை பற்றிய கவலையில் அவர் புலம்ப, அவரின் புலம்பலை கேட்டப்படியே சூடான காபியை தயாரித்து கொண்டு வந்து அன்னையிடம் கொடுக்க, அதனை வாங்கி பருகினார் அவளது அன்னை கனகவல்லி. அவளுக்கென்று காபி தயாரித்து கொள்ளாததை கண்டு,
“ஏம் மா, உனக்கு காபி கலக்கலையா?” என்று கேட்க,
“இல்ல ம்மா, இப்போவே நேரமாச்சு. அம்மாச்சி நேரம் கழிச்சு போனா திட்டுவாங்க. நான் போய் தான் அவங்களுக்கு வரகாபி போட்டு தரணும். அதுவரைக்கும் குடிக்காம இருப்பாங்க. நான் கிளம்புறேன் ம்மா. நீங்க படுத்து இருங்க. நான் டிபன் செஞ்சதும் கொண்டாறேன்” என்றவள் அவரிடம் விடைபெற்று கொள்ள,
“நீயும், உங்க அப்பா மாதிரியே தான் இருக்க செல்லம்” என வாஞ்சையாக அவளின் தாடை பற்றி செல்லம் கொஞ்ச, அதற்கு புன்னகைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
இரண்டு தெரு தள்ளி தான் அந்த பிரம்மாண்டமான பெரிய வீடு இருக்கிறது. அந்த ஊர் மட்டுமல்ல, சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலைமை பெரிய வீடு தான்.
பரம்பரை பரம்பரையாக கட்டி ஆண்ட வீடு அது. அம்பலவாணர்- நாச்சியார் தான் அந்த பெரிய வீட்டின் மூத்த தலைமுறைகள்.
அம்பலவாணர் தற்பொழுது உயிரோடு இல்லை. காலப்போக்கில் வயது மூப்பு காரணமாக அவர் இறந்து விட்டார். ஆனால் இந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக சுற்றி வருகிறார் அவரின் துணைவி நாச்சியார்.
அம்பபலவாணர் இறந்த பின்பு அவருக்கு கிடைத்த அத்தனை மரியாதையும், செல்வாக்கும் குறைவில்லாமல் நாச்சியாருக்கும் கிடைத்தது.
ஊரில் நல்லது கெட்டது எது நடந்தாலும் பெரிய வீட்டின் தலையீடு இல்லாமல் நடந்ததே இல்லை. வாரி வழங்கும் வள்ளல் பரம்பரை. வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயும் நாச்சியாரின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
சூரியன் வரும் முன்பே, அதிகாலையிலேயே எழுந்து வந்து வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்தவர், அவர் சுப்பிரபாதத்தை ஆரம்பித்து இருந்தார்.
“எம்புட்டு நேரமாகுது, இன்னமும் வாச தெளிச்சு கோலம் போடாம கிடக்கு. ஒருத்திக்கும் பொறுப்பில்லை” என சத்தமாகவே கத்தி கொண்டு இருந்தார். வழக்கமாக இந்த வேலைகள் எல்லாம் வெண்பா தான் செய்வாள். அதிகாலையிலேயே வருபவள் முதல் வேலையாக வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு தான் உள்ளேயே நுழைவாள்.
இன்று இன்னும் வராமல் இருப்பதை கண்டு, சற்றுநேரம் அமர்ந்திருந்தவர், அந்தப்பக்கமாக வந்த மலரிடம்,
“இந்தாடி மலரு, இங்க வா..”
“இந்த வெண்பாவை இன்னும் காணும் டி. விடியவே போது, இன்னும் வராமல் அப்படி என்னத்த தான் வெட்டி முறிச்சிட்டு கிடக்காளோ! இங்க பாரு இன்னும் வாசல் கூட கூட்டல. இதெல்லாம் அவ தானே பண்ணுவா. நீ போய் அவளை நான் சீக்கிரம் வரசொன்னேன் சொல்லு” என அதிகாரமாக கூற, அதற்கு மலரோ,
“ஏன் அப்பத்தா, இன்னும் விடியவே இல்லை அதுக்குள்ள அவளை வேலை வாங்க எழுந்து வந்துடியா நீயி. உனக்கு உறக்கமே வராதா? பாவம் அவ..” என வெண்பாவிற்காக இரக்கப்பட்டவள்,
“இதுக்காகளாம் அவ வீட்டுக்கு போக முடியாது. எனக்கு வேல கிடக்கு. பார்த்தா சொல்லி விடுறேன்” என துடுக்காக கூறிவிட்டு மலர் அங்கிருந்து கிளம்ப தயாரானாள்.
“அடிக்கழுத, என்ன வாய் நீளுது? ஒழுங்கா கூப்பிட்டு விட்டு போ. இல்ல, உன் ஆத்தா கிட்ட சொல்லி நாலு போட சொல்லுவேன். என்கிட்ட தான் அவ காசு வாங்க வரணும்”
என மிரட்ட, அவளோ அவருக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடிவந்து விட்டாள் மலர்.
மீண்டும் திண்ணையில் அமர்ந்து தன் புலம்பலை ஆரம்பித்தவர் வெண்பா வரும் வழி தெரியாது இருக்க, நாமளே செய்து விடுவோம், என துடைப்பத்தை எடுத்த நேரம், சரியாக வெண்பா அந்த பெரிய வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தாள்.
அவர் வாசல் பெருக்க ஆயத்தமாகும் போதே கண்டுவிட்டவள், ஓடிவந்து, அதனை வாங்கி கொண்டு,
“அம்மாச்சி, என்ன பண்றீங்க? நீங்க போய் இதெல்லாம் செஞ்சுட்டு. கொடுங்க”
என்றவள் தாவணியோடு பாவாடையையும் தூக்கி சொருகி வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“இதோ இருக்க ரெண்டு தெரு, அதை தாண்டி வர இவ்வளவு நேரமா உனக்கு? ஏன் மகாராணிக்கு வெத்தலை பாக்கு வச்சி அழைச்சா தான் வருவீங்களோ?!!” என அவர் அவளை வசைப் பாட ஆரம்பிக்க,
“அப்படியெல்லாம் இல்ல அம்மாச்சி. கோவில் போய்ட்டு வந்தேன் அதான் நேரமாகிடுச்சு”
என வெண்பா காரணத்தை கூறினாலும் அவர் வாய் ஓயவே இல்லை. அவளை பேசிக்கொண்டே தான் இருந்தார். பழகிய ஒன்று தான் என்று வெண்பாவும் அதனை பொருட்படுத்தவில்லை.
வாசலை கூட்டி தெளித்து, கோலம் ஒன்றை போட்டவள், அடுத்து சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அனைவருக்கும் காபி தயாரிக்க வேண்டும். அந்த வேலையை செய்து கொண்டிருக்கும் போதே, நாச்சியாரின் மருமகள் விசாலாட்சி, குளித்து முடித்து ஈர துண்டை தலையில் கட்டியப்படியே சமயலறைக்குள் நுழைந்தார்.
மாமியார் திண்ணையில் அமர்ந்திருப்பார் என்பது தெரியும். ஆதலால், அவர் பார்த்து விட கூடாதென்று வேக வேகமாக நுழைய, சரியாக அது நாச்சியாரின் கண்ணில் விழுந்தது.
“ஏய் விசாலாட்சி, என்ன? எனக்கு தெரியாம, ஓடி ஒளிய பார்க்கிறியோ?!! என் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது டி..” என்றவர்,
“எந்திரிச்சு வர நேரமா இது? வீட்டு மருமகளா வெள்ளென எந்திரிக்கனும் தெரியாது. இப்படி இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்?
அந்த காலத்தில், நாங்களாம், என் மாமியார் விழிக்க முன்னே எழுந்து எல்லா வேலையும் பார்த்து முடிச்சு இருப்போம். இங்க பாரு. நான் எழுந்து எம்புட்டு நேரமாகுது, இன்னும் ஒரு காபி தண்ணிக்கே வழிய காணும்.
நான் எழுந்து வந்ததுக்கு அப்புறம் தானே, என் மருமகளே எழுந்து வரா. இந்த நியாயத்த நான் எங்கிட்டு போய் சொல்ல?”
என அவரது வசவுகள் தீர்ந்தபாடே இல்லை. சீனப்பெருஞ்சுவர் போல நீண்டு கொண்டே போனது.
உள்ளே சமயலறையில், அதனை எல்லாம் கேட்டு கொண்டிருந்த விசாலாட்சி, தலையில் கைவைத்தப்படி நின்றிருக்க, அவர் முன், நாச்சியாருக்கு தயார் செய்த வர காபியை நீட்டினாள் வெண்பா.
“கொடுத்துட்டு வாங்க அத்தே. கொஞ்ச நேரம் சத்தம் வராமல் இருக்கும்” என சிரித்து கொண்டே அவள் கூற, அவரும் அதனை வாங்கி கொண்டு சென்று மாமியாரிடம்,
“இந்தாங்க அத்தே” என பவ்வியமாக கொடுத்தார்.
அவரை ஏற இறங்க பார்த்த நாச்சியார், அதனை வாங்கி பருக ஆரம்பிக்க, விசாலாட்சி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
“அப்பா, மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. அநியாயம் பண்றாங்க என் மாமியார். எனக்கே இன்னும் கொஞ்ச நாளில் மருமக வர போறா. ஆனாலும், இவங்க இன்னமும் புது மருமக மாதிரி என்னை திட்டிட்டே இருக்காங்க. இன்னைக்குனு பார்த்து ஏதோ கொஞ்ச நேரம் தூங்கிட்டேன், அதுக்கு போய் எவ்வளவு பேச்சு. என் மருமக கிட்ட நான் இப்படியெல்லாம் இருக்க மாட்டேன் பா. நிம்மதியா தூங்கு மானு சொல்லி தூங்க சொல்லுவேன். இவ்வளவு காலையில் எந்திரிச்சு அப்படி என்னத்த தான் வேல பார்க்க முடியும்”
என அவர் புலம்பலை ஆரம்பிக்க, அவர் முன் ஆவி பறக்க சூடான காபியை நீட்டினாள் வெண்பா.
அவளையும், காபியையும் பார்த்த விசாலாட்சி,
“என்ன டி? என் புலம்பலை கேட்க உனக்கு காது வலிக்குதோ?! உடனே காபியை நீட்டுற” என சந்தேகமாய் கேட்க,
“அய்யோ அத்தே, அதெல்லாம் இல்ல. எழுந்து வந்ததிலிருந்து, பரபரனு இருக்கீங்க. இதை குடிச்சா, இதமா இருக்கும். அப்புறம் பொறுமையா அடுத்த வேலையை பார்க்கலாம்ல அதுக்கு தான்”
என்றவள், அவரை காய்கறி வெட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த, மேஜை அருகில் உள்ள நாற்காலியில் அமர வைத்து குடிக்க செய்தாள். உண்மையில் அந்த சமயம், வெண்பா தயாரித்த அந்த காபி அத்தனை இதமாக அவரது தொண்டைக்குள் இறங்கியது.
இத்தனை நேரம் இருந்த பாரமெல்லாம் இறங்கியது போல் மனம் லேசானது விசாலாட்சிக்கு.
காலை உணவை தயாரிக்க, வெண்பா ஆரம்பிக்கும் போதே வெளி வாசலில் வேலைக்கு வந்திருந்த வேலையாட்களை பிடித்து கொண்டு நாச்சியார் திட்டி கொண்டிருப்பது அவளுக்கு கேட்டது.
“என்னங்க டி ரெண்டு பேரும் ஆடி அசந்து இப்போ வரீங்க. இன்னும் நேரமிருக்கே போய்ட்டு நேரம் கழிச்சு வாங்க போங்க” என நாச்சியார் அவர்களை நகையாட,
“ஆத்தா, ஏதோ இன்னைக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு. அதுக்கு போய் கிண்டல் பண்றீங்களே! அதான் இப்போ வந்துட்டோம்ல” என்ற வள்ளிக்கு,
“எது? இன்னைக்கு மட்டும் நேரமாகிடுச்சா? பொய்யா பேசிக்கிட்டு திரியுங்க டி. போங்க டி, என் வாயா பார்க்காமா, வேலைய போய் பாருங்க”
என அதற்கும் அவர்களை பேச, வள்ளியும், லட்சுமியும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க டி. டிபனுக்கு எல்லாம் ரெடி பண்ணி வைங்க” என்ற விசாலாட்சி, வெண்பாவிடமும்,
“என்னென்ன செய்யணுமோ, செய்ய சொல்லு வெண்பா. நான் உங்க மாமாவுக்கு ஏதாச்சும் தேவைன்னா செஞ்சு கொடுத்துட்டு வரேன்” என அங்கிருந்து வெளியேறினார் அவர்.
“சொல்லு பாப்பா, என்ன செய்யணும்?” என வள்ளி வெண்பாவிடம் கேட்க,
“முதல்ல ரெண்டு பேரும் இந்த காபியை குடிச்சுட்டு வேலைய பாருங்க கா” என அவர்களுக்கு காபியை கொடுத்தாள். அவள் கொடுத்ததை புன்னகையுடன் வாங்கி கொண்டவர்கள்,
“நீதான் பாப்பா, எங்க கஷ்டத்த புரிஞ்சுகிட்ட ஒரே ஜீவன். நடுசாமத்திலே எழுந்து, வீட்டில இருக்கிற அம்புட்டு வேலையையும் பார்த்துட்டு ஓடி வரோம். தண்ணி குடிக்க கூட நேரமில்ல. ஆனால் அது எல்லாம் உங்க அம்மாச்சிக்கு எங்க தெரியுது. ஏதோ கலெக்டர் ஆபீஸில் வேலை பார்க்கிற போல, நேரத்துக்கு வாங்க சொல்றாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு வந்தா, என்ன? ஏன்?னு நிற்க வச்சு கேள்வி கேட்கிறாங்க. எங்க நிலைமையை என்னத்த சொல்ல?” என லட்சுமி அவரது கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள,
“அக்கா, அம்மாச்சி பத்தி தான் தெரியும்ல. விடுங்க. அவங்களுக்கு நேரத்துக்கு வேலை நடக்கணும் அது நடக்கலைனதும் கொஞ்சம் கண்டிச்சு பேசுவாங்க. அவ்வளவு தான்.அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க” என அவர்களை சமாதானப்படுத்தினாள் வெண்பா.
“அதானே, உன் அம்மாச்சியை விட்டு கொடுப்பியா நீ”
என்றவருக்கு புன்னகைத்து விட்டு அவள் வேலையை பார்க்க, மற்றவர்களும் அவளுக்கு துணையாக வேலையை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் யாருமே அவள் எதாவது குடித்தாளா என கேட்கவில்லை. கேட்க வேண்டும் என அவள் எதிர்பார்ப்பதும் இல்லை.
மளமளவென்று பம்பரம் போல காலை உணவை தயாரித்து கொண்டிருந்தாள் வெண்பா. அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும்? எந்த பதத்தில் பிடிக்கும் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அதன்படி அவள் செய்து கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி.
நாச்சியாரும், ஒவ்வொரு வேலையாட்களும் வர வர அவர்களுக்கு என்ன வேலையோ, அதனை பிரித்து கொடுத்து விட்டு, வீட்டினுள் வந்து அமர்ந்து கொண்டார்.
மகனும், பேரன்களும் பேத்தியும் எழுந்து வரும் நேரமாயிற்றே! அவர்கள் எழுந்ததும் முதலில் அவரிடம் தான் வருவர் என்பது அவருக்கு தெரியும். அதனாலே ஹாலில் வந்து அமர்ந்து கொண்டார்.
முதலில் அவரது மகன் திருநாவுக்கரசு, குளித்து முடித்து தயாராகி அறையிலிருந்து வெளிவந்தவர், அன்னையை பார்த்ததும், புன்னகையுடன் அவர் காலை தொட்டு கும்பிட, நாச்சியாரும்,
“நல்ல இரு யா. நூறு வருஷத்துக்கு நீ நல்ல இருக்கணும்” என ஆசீர்வதித்து, தன் அருகிலே அமர்த்தி கொண்டார்.
அதன் பின் அவர் அவரிடம் தொழிலை பற்றி பேசி கொண்டிருக்க, நாச்சியாரோ,
“ஏய்..விசாலாட்சி, எம்புள்ள எந்திரிச்சு வந்து எம்புட்டு நேரமாச்சு. இன்னும் காபி கொடுக்காமா, அங்க என்னத்த தான் வெட்டி முறிக்கிற நீ” என சத்தம் போட,
விசாலாட்சியோ, “அய்யோ மறந்தே போயிட்டேன். உண்டு இல்லன்னு பண்ண போறாங்க” என இதுக்கும் திட்டு விழுமே! என அவர் பதற, வெண்பாவோ,
“அத்தே, இந்தாங்க கொண்டு போய் கொடுங்க” என அவர் பதற்றத்தை தணித்தாள்.
திருநாவுக்கரசிடம் அவர் கொண்டு சென்று கொடுத்து விட்டு திரும்ப மீண்டும் சமயலறை வரும் வரை நாச்சியாரின் வாய் ஒரு வினாடி கூட மூடவில்லை. விசாலாட்சியை, பேசிக்கொண்டே இருந்தார்.
அதன் பின் அந்த வீட்டு வாரிசுகளான, கதிர்வேலவனும், மீனாட்சியும் தூங்கி வழிந்த முகத்தோடு எழுந்து வந்து நாச்சியாரின் இருபக்க மடியிலும் படுத்து கொண்டனர்.
“அடேய் எந்திரிங்க ரெண்டு பேரும். தூங்கி எழுந்து அப்படியே வந்து படுக்கிறீங்க? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு?” என திட்ட, கதிவேலவனோ,
“இல்ல போல தான் தெரியுது அப்பத்தா. எனக்கு ஒரு கால் கிலோவும், மீனாட்சிக்கு ஒரு ஒருகிலாவும் இருந்தா வாங்கி கொடுங்க”
என தூக்க கலக்கத்திலே அவன் கூற, அவன் கூறியதை கேட்டு சிரிப்பு வந்தாலும், அதனை அடக்கி கொண்டனர் அங்கிருந்தவர்கள்.
“ஏன் டி மீனாட்சி, அவன் தான் ஆம்பிள பையன் இப்படி வரன்னா, பொம்பிள கழுதை உனக்கென்ன? குளிச்சு முடிச்சுட்டு வர வேணாம்”
என மீனாட்சியை பார்த்து கேட்க, அவளும் உறக்கத்துடனே,
“போ அப்பத்தா, நயிட்டெல்லாம் உட்கார்ந்து அசைன்ட்மெண்ட் எழுதினது எனக்கு தான் தெரியும். தூக்கமா வருது. என்ன பண்ண? அதான் தூக்கம் கலைய, வெண்பாவோட காபி குடிக்க வந்தேன். பார்த்தா இவனும் வரான்” என்றவள், கண்களை திறக்கவே இல்லை.
அவர்களுக்கும் காபியை தயாரித்த வெண்பா, வேலையாட்களிடம் கொடுத்தனுப்ப, காபி மணத்தில் கண் விழித்து பார்த்தவர்கள், புத்துணர்வுடன் அதனை பருக போன சமயம் நாச்சியாரோ,
“ரெண்டு பேரும் பல்லு விளக்கினீங்களா முதல்ல” என கேட்டதும், இருவரும் அசடு வழிந்தவாறே, “இன்னும் இல்லையே” என்றனர்.
“ரெண்டு போட்டா தான் சரிவரும் போலையே உங்களுக்கு”
என அவர் அடிக்க எழுந்து வர, உடனே அங்கிருந்து இருவரும் அவரவர் அறைக்கு ஓட்டம் பிடித்தனர்.
காலையில் அந்த பெரிய வீடு கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்க, அனைவருக்கும் தனி புத்துணர்வை தந்தது என்றே சொல்லலாம்.
இதில் கலந்து கொள்ள மனம் ஆசைப்பட்டாலும், அது முடியாத காரணத்தினால், காதில் கேட்டவாறு அந்த தருணத்தை எண்ணி மனதுக்குள்ளே மகிழ்ந்து கொண்டாள் வெண்பா. அவளால் அது மட்டுமே முடியும்!
கதிர்வேலன், மீனாட்சி போல, அவளும் நாச்சியாருக்கு பேத்தி தான். என்ன? அவர்கள் மகன் வழி உறவுகள், இவள் மகள் வழி உறவு. மகள் வழி என்றாலும் அவளும் பேத்தி தானே! மகளை கட்டி கொடுத்து விட்டால் அந்த சொந்தம் இல்லாமல் போய் விடுமா?!!
சொந்தம் இல்லாமல் போனதற்கு, மகள் என்ற காரணம் மட்டுமில்லாமல், பணம் என்ற காரணமும் சேர்ந்ததால் தான், அவள் சொந்தமில்லாமல் போனாள் என்பது அவளுக்கு காலப்போக்கில் நன்கு புரிந்தது.
அவர்களை கொஞ்சுவது போல், பாசம் காட்டுவது போல், தன்னிடமும் அவர் பேச வேண்டும் அன்பை காட்ட வேண்டும் என்ற ஏக்கம் அவளுக்கும் இருக்கிறது தான்
அது எல்லாம் ஏக்கமாக மட்டுமே இருக்கிறது. நிறைவேறுமா? தெரியாது.
தன் எண்ணம் போகும் திசையை கண்டு துணுக்குற்றவள், அவசரமாக அந்த எண்ணத்தை விரட்டி விட்டு, வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம், அனைவரும் தயாராகி கூடத்தில் குழுமி இருக்க, அனைவருமே அவனுக்காக காத்திருந்தனர்.
திருநாவுக்கரசு- விசாலாட்சியின் மூத்த மகன் வெற்றித்திருக்குமரன். அந்த வீட்டில் அனைத்தும் நாச்சியார் என்றால், அவரே அடங்கி போகும் ஒரே நபர் வெற்றித்திருக்குமரன்.
அந்த வீட்டின் மூத்த வாரிசு என்பதால், அவன் மீது அனைவருக்கும் பாசம் அதிகம். அதுவும் நாச்சியாருக்கு, மூத்த பேரன் அப்படியே கணவனை போல உருவத்திலும், குணத்திலும் இருப்பதால் மற்றவர்களை விட அவருக்கு அவன் மீது ஒருபடி அன்பு அதிகம்.
அதிக நேரம் காக்க வைக்காது, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக, மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தான் வெற்றித்திருக்குமரன்.
அவனை காண, காண நாச்சியாரின் கண்கள் பனிந்தன. ஒருநிமிடம் தன் கணவரே உயிருடன் வந்து விட்டாரோ என சந்தேகம் கொள்ளும் வகையில் ராஜ தோரணையுடன் இறங்கி வந்த, பேரனை இமைவெட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்.
அதுவும் அம்பலவாணர் போலவே, எப்பொழுதும் பட்டு வேட்டி அணிவதும், அடிக்கடி, மீசையை நீவி விட்டு கொள்வதும், அவரது தங்க காப்பை அணிந்து கொண்டவன் அதனை அடிக்கடி ஏற்றி விடுவதும், பேசும் பொழுது நேருக்கு நேர் கண் பார்த்து பேசுவதும், நடக்கும் தோரணை எல்லாமே அப்படியே அச்சு அசல் அம்பலவாணர் தான்.
தற்பொழுதும், ஒருகையால் வேட்டியை மடக்கி பிடித்தவாறு இறங்கி வரும் பேரனின் உருவத்தில் கணவனை கண்டவருக்கு கண்கள் லேசாக கலங்கி நின்றது.
நேராக அவரிடம் வந்தவன் காலை தொட்டு கும்பிட்டு அவரை பார்த்து புன்னகைக்க, அவரும்,
“நல்ல இருயா, நல்ல இரு” என்று ஆசீர்வதித்தவர், கண்களை துடைத்து கொண்டார். வெற்றியோ
“அப்பத்தா, ஏன் அழுறீங்க?” என அவனும் அவரின் கண்ணீரை துடைத்து விட,
“அதெல்லாம் இல்ல ராசா. சந்தோஷத்தில் தான் அழ வருது. உன் தாத்தா எங்கேயும் போகல. அப்படியே மொத்த உருவமா உன்கிட்ட தான் இருக்கார். அதை நினைச்சதும் எனக்கு சந்தோஷம் தாங்கல. உடனே தண்ணி வந்துச்சு ராசா”
என உணர்ச்சிவசப்பட்டு கூற, வெற்றியோ அவரை அணைத்து ஆசுவாசப்படுத்தினான்.
அதில் சமநிலைக்கு வந்தவர்,
“வாங்க எல்லாரும் சாமி கும்பிடலாம்” என அனைவரையும் அழைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்றார்.
“வெண்பா, பூஜைக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டியா?” என விசாலாட்சி கேட்க,
“வச்சுட்டேன் அத்தே” என உள்ளிருந்தே அவள் குரல் கொடுத்தாள்.
பூஜை அறையின் வேலைகள் அனைத்தும் வெண்பா தான் செய்வாள். ஆனால் பூஜையில் கலந்து கொள்ள மாட்டாள். கலந்து கொள்ள யாரும் அவளை அழைப்பதும் இல்லை.
நாச்சியார் பூஜை செய்து மணியடிக்கும் பொழுது இங்கிருந்தே கண்மூடி பிராதித்து கொள்வாள். இன்றும் அவ்வாறே செய்து லேசாக பூஜை அறையை எட்டி பார்க்க, நாச்சியார் அனைவருக்கும் தீபாராதனை காட்டி, திருநீறு வைத்து விட்டு கொண்டிருந்தார்.
அதனை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் திளைக்க, அதன் எதிரொலி அவள் உதடுகளும் லேசாய் வளைந்தன.
வாழ்வில் எதிர்பாராமல் ஏற்பட்ட
எதிர்பார்ப்பால்
என் ஒவ்வொருநாளும்
அந்த எதிர்பார்ப்பை எதிர்பார்த்தபடியே
நகர்கிறது!!
கனவுகள் தொடரும்…..
