Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 7 1

꧁☆☬  லயம் – 7 ☬☆꧂



Advertisement

இரவு மகள் உடுத்திய ஆடை கலைந்து, புத்துணர்வோடு இதம் தரும் காலை நேரம். சிலுசிலுவென பனிக்காற்று வீச, அதன் தாளத்திற்கேற்ப, செடியில் பூத்த புது மலர்களும், இலைகளை உரசி உரசி  தங்களை மறந்து குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தன. இணை இரை தேடி பறக்க தொடங்க, இன்னொரு இணையோ இன்னும் இன்னும் வேண்டுமென, பிரியாதிருக்க வேண்டுமாய் கூக்குரல் எழுப்ப, அதன் துணை பறவையின் சமிக்சை குரழும்  காற்றில் ரீங்காரம் எழுப்பி கொண்டிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெள்ளை உடை தேவதையை வழியனுப்பி வைத்து விட்டு, சிவந்த பொட்டினை வான மகள் ஒய்யாரமாய் சூடும் அதிகாலை  நேரம். மெல்லிய வாடை காற்று ஆடை தழுவ, சுகமாய் நித்திரையில் அவனும் ஆழ்ந்திருந்தான். எழுந்து விடு என தென்றல் கானம் பாட, எழும்புவேனோ என  மனம் தாளம் இசைத்தது. கானத்திலும்,   தாளத்திலும், அவன் தோடி ராகம் இசைத்து கொண்டிருக்க, அவனை தேடி வந்தது அறையினுள் மற்றொரு வாசம். இனி அவன் அதன் வசம்.

Advertisement

Advertisement

கண்மூடி அசந்து உறங்கி கொண்டிருப்பவன் மீது மெத்தென மார்பில் சிறு அசைவுடன் மென்மையிலும் மென்மையாய் அவனை அழுத்திய சுகத்தில் சற்றே உறக்கம் களைந்தான். அலை அலையென திரண்ட அவன் கேசத்தில் கைகளால் கோதி, களைத்து விளையாட உறக்கம் இன்னுமே விடை கொடுத்தது. முழித்தது தெரிந்தால் இந்த சுகம் கிடைக்காது போய்விடுமே என கண்களை திறவாமல் ரசித்து இருந்தான்.

சற்றே விளையாடிய அனிச்சம் பூவை விட மென்மையான மென்மை கரங்கள் மெதுவே அவன் முகத்தில் இப்போது தஞ்சமடைந்து இருந்தது. நெற்றியில் தொடங்கி கழுத்து வரை விரவிய அதன் மென்மை சுகத்தில் இன்னும் இன்னுமாய் தொலைந்தான். நெற்றியில் அழுத்தி வைத்தும், கன்னத்தில் மெதுவே வைத்தும் விடைபெற்று, இப்போது அவன் அடர்ந்த மீசையருகே கரங்களின் விளையாட்டு ஆரம்பம் ஆகி இருந்தது. நடுவில் ஆரம்பித்து இறுதி வரை நீண்டு சென்ற விரல்களின் ஸ்பரிசத்தில், நளினத்தில் இதழில் மெதுவே புன்னகை விரிய, அதற்கு மேலும் அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை.

Advertisement

” அச்சோ மாமா., ” என சிணுங்கிய சப்தத்தில் அவன் மேல் இருந்து மெதுவே இறங்க முயற்சிக்க, அவன் கரங்கள் விரைந்து பற்றி, நகர விடாமல் இறுக்கி பிடித்தது.

 ” மாமா., மாமா., ” என மெல்லிய முனங்கல் சப்தம் பெரிதானால், யாரும் கண்டுவிடுவரோ என தத்தளித்து சிறு சப்தம் எழுப்பி அந்த அறையையே சுற்றி வர, மனம் இளகினான் இல்லை.

அவன் பிடியில் சற்றே வலிக்க ஆரம்பிக்க, இப்போது உதட்டை பிதுக்கி, சுருங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்து, “மாமா!… ப்ளீஸ்…, சாரி..,” என காதோரம் சென்று சிறு குரலில் யாசிக்க, கொஞ்சமே கொஞ்சம் பிடியை தளர்த்திட்டான்.

“மால்ஸ்!, வேகமா வா ..,” என குரல் கொடுக்க பயத்தில் திருதிருவென முழிக்க ஆரம்பித்து கண்ணில் நீர் படலம் மெதுவே எட்டி பார்த்தது.

“ஏய் மால்ஸ் ! என்ன பண்ற.., ” என அதட்டி கொஞ்சமே உரக்க கத்த, அவன் குரலில் அடித்து பிடித்து பக்கத்துக்கு அறையில் இருந்து ஓடி வந்து திகைப்புடன் பார்த்தவள் கண்டது, இளாவின் மேல் தன் இரு மகன்களும் ஆளுக்கொரு பக்கம் மார்பில் முகம் வைத்து, அவர்கள் மொத்த உடலும் அவன் உடலில் விரவி இருக்க, அவன் கரங்களோ அவர்களை சுற்றி இருந்ததில் நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்ததை தான்.

அவன் முகத்தை கூட பார்க்க விடாமல்,  மகன்களின் தலை மறைத்து இருக்க, ” டேய்!.. பசங்கள விடுடா.., ” என அவர்களை பிரித்து எடுத்தவள், மெதுவே இருவரையும் கீழே இறக்கி விட அடித்தோம்., பிடித்தோம்.,  என ஓடி ஒளிந்தனர்.

 ” என்னாச்சு .., ஏன்டா ஓடுறாங்க ., ” என திரும்பி பார்த்தவள் கண்டதோ தலையில் சிறு பேண்ட் கொண்டு உச்சி குடுமியும், கிளிப் குத்தியும், முகம் முழுவதும் பவுடர் அப்பி, நெற்றியில் பெரிய பொட்டும், கன்னத்தில் சிறு கருப்பு பொட்டும் திருஷ்டிக்கு வைத்திருக்க, அவன் மீசையை கருப்பு மை கொண்டு இன்னும் நீட்டி வரைந்து இருந்தனர்.

“என்னடா இப்படி ” என வயிற்றை பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்க, வேகமாய் எழுந்து அவள் தலையில் கொட்டு வைத்தான்.

“பிள்ளையை பெக்க சொன்னா… தொல்லையை பெத்து வச்சுட்டு சிரிக்கிறியா மால்ஸ்! ” என மேலும் கொட்டு வைக்க, சிரித்து கொண்டு இருந்தவள் அப்போது தான் மால்ஸ் என தன்னை அழைப்பதையே உணர்ந்து திகைத்து, கண்கள் விரித்து அதிர்ச்சியோடு அவன் முகம் கண்டவள்.

” இப்போ நீ என்ன சொல்லி கூப்பிட்ட,” என்றாள் உணர்ச்சிப் பொழிவில் கரகரத்து.

” ஏய் லூசு அக்கா… மால்ஸ்னு தானே கூப்பிடுவேன். புதுசா கேக்குற… ” என கூறிய பின் தான் நான்கு வருடம் கழித்து அவளை அவ்வாறு கூப்பிட்டதே அவன் நினைவுக்கு வந்தது.

புரிந்த நொடி என்ன சொல்வதென அறியாது விழிக்க, தம்பியின் மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, அவன் தோளில் சாய்ந்தாள்.  ” என்னை இப்படி கூப்பிட உனக்கு இவ்ளோ நாளாடா? ” என்றாள் கலங்கிய குரலில்.

கண்களை மூடி, மூச்சினை இழுத்து வெளியேற்றி கொண்டு  ” சாரிக்கா! ” என்றான் உணர்ந்து.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளோ “நீ  நீயா இருந்து எவ்ளோ நாளாச்சுடா? இனியும் மாத்திக்காதே, இப்படியே இருடா ” அவன் கைகளை இறுக பற்றி கொண்டு இறைஞ்சும் குரலில் கெஞ்சலாய் கேட்க, அவன் உள்ளே எதுவோ ஒன்று நெகிழ, இமை மூடி தலையசைத்தான்.

எதையோ தொலைத்து கை சேர்ந்த உணர்வு இருவர் உள்ளத்திலும். அவன் முகத்தை சேலை முந்தானையால் துடைத்து, தலையை சரி செய்து, சீர் செய்திட்டாள் கலங்கிய கண்களோடு. தாயை போல தன்னை தாங்கிய தமையனுக்கு இன்று தாயாகி நின்றாள் மாலா.

அவன்  சேட்டை செய்தும் திட்டாமல் இருக்கும் தாய்க்கு பயந்து

ஓடியவர்கள் மாமனின் தோளில் சாய்ந்து இருக்கும் தாயை  கண்டவுடன் பொறாமை உணர்வில் ஓடி வந்து, அவளை தட்டிவிட்டு ” என் மாமா ” என இருபுறமும் இருவர் ஓட்டி நிற்க, அன்பில் நெகிழ்ந்து இருப்பினும் அவர்களை அடிக்க கையை ஓங்கியது போல செய்ய முகத்தை சுருக்கி பார்த்தனர் இருவரும்.

” ஏன்டா மாமாவுக்கு மேக்கப் போட்டிங்க?”

“நேத்து ரியா இப்படி தான் வந்தா ? நீ கவுந்து தூங்கிட்ட, மாமாக்கு போட்டோம். ” தன் வகுப்பு தோழி செய்து வருவதை தினமும் தாய்க்கு செய்து பார்க்கும் மகன்கள் பதில் கூற

முறைத்தவளோ ” சேட்டை ரொம்ப கூடி போச்சு. பொம்மைக்கு போட்டு பாருங்கடா. எங்கள விடுங்க..,”  என்க

” இட்ஸ் போர்மா. இதான்…. நல்லாருக்கு….” கண்ணை சிமிட்டி குறும்பு கொப்பளிக்கும் குரலில்  பேசுவதை கேட்டவள்.

” அடி கழுதை! உங்களுக்கு போர் அடிச்சா எங்கள படுத்துவிங்களா? ” காதை திருகி கேட்கும் அன்னையின் கோபத்தில் ” மா….. மா…..” என கத்தும் சத்தம் அதிகரிக்க முரளியும் எழுந்து வந்து விட்டான்.

” என்னடா காலையிலேயே ரகளை ஆரம்பிச்சாச்சா ? “

” ப்பா., அம்மா அடிக்குறாங்கா… ” நல்ல பிள்ளைகளாய் தந்தையிடம் ஓடி சென்று புகார் செய்ய , மாலாவும் நடந்ததை கூறி முடித்தாள்.

பின் அவர்களை அள்ளி கொண்டு இருவரும் வெளியேற குளியல் அறையின் உள் நுழைந்தவனுக்கோ நேற்றைய நினைவுகளே ஆக்கரமித்து இருந்தது. அவளை சந்தித்த நொடி முதல் தன்னில் எழுந்த மாற்றமே அவன் கண் முன் வந்தது. யாருக்காகவும் நம்ம இயல்பை

நாம மாத்திக்க வேண்டிய அவசியமில்லை என்ற வரிகளே இரவு முழுவதும்  அவனை இம்சித்தது.

யாரோ ஒருவன் செய்த தவற்றிற்காக, தன் தாயின் அந்த நேர கோப வார்த்தைக்காக, நம்பிக்கையற்ற நிலையை எண்ணி தன்னையும் வருத்தி கொண்டு, தன்னை சார்ந்தவர்களையும் ஏன் வருந்த செய்ய வேண்டும். தன் இயல்போடு இனி இருக்கலாமே என முடிவெடுத்து தான் உறக்கத்தை தழுவினான்.

” என்னடா, புதுசா என்னென்னமோ பண்ணியாம்? உங்க அக்காக்கு சந்தோசம் தாங்கல… ” தோளின் மீது கைப்போட்டு  இறுக்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் முரளி. கடந்து போன காலங்களில் தோழமையாய்  அவனை தாங்கி நின்றது அவன் தானே.

இவன் மௌனமாய் சிரிக்க ” எந்த மரத்தடியில நின்னப்போ ஞானம் கிடைச்சது மச்சான் உனக்கு இவ்ளோ நாள் இல்லாம… ” .

பதில் சொல்லாமல் சிரித்தவன் பேச்சை மாற்றி “ஏன் மாம்ஸ், பசங்க தான் மேக்கப் போட ஆளை தேடி அலையுறாங்கல. ஒரு பொண்ணை பெத்துக் கொடுக்கலாம்ல. “

” எது பொண்ணா? , இதை மட்டும் எங்கம்மா கேட்டா உலக்கையை தூக்கிட்டு வந்து குமட்டுல குத்துவாங்க. ஏன்டா உனக்கு இந்த கொலைவெறி? “

முரளியையும் சேர்த்து மொத்தம் ஆறு பையன்கள் அவன் வீட்டில். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அடுத்தடுத்து ஆணாய் பிறக்க, அதுவும் இரு முறை இரட்டை குழந்தைகள். முதலில் இரட்டை. முரளி  மூன்றாவது பையன். அடுத்தும் இரட்டை. அடுத்தும் ஒரு பையன் என கார்த்திகை பெண்கள் கையில் சுமந்த அத்தனை ஆண்களும் ஒரு வீட்டில் இருக்க தினமும் ரகளை தான். இவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்து, வந்த மருமகள்களை எல்லாம் மகளாய் நடத்தி மகிழும் அன்பு தாய்,  ஆண்கள் அதிகம் அழிச்சாட்டியம் செய்யும் வீட்டில் வாழ்வதால், வாயை விட கையை தான் அதிகம் நம்பும் கொஞ்சம் வம்பு தாயும் கூட.

” எனக்கும் பொண்ண வளர்க்கனும்னு ஆசையா இருக்கு மாம்ஸ். ” என்றான் கண் சிமிட்டி

” உனக்கு பொண்ணு வேணும்னா, நீ பெத்துக்கோ மேன், என்னை ஏன் சொல்லுற? நான் இப்பவே போய் தங்கச்சியை தேடுறேன்? ரெடியா இருந்துக்கோ. ” அலர்ட் மோடில் முரளி சொல்ல

“ஆமா, அவ என் பின்னாடியே இருக்கா, உடனே கல்யாணம் பண்ண, எங்க இருக்காலோ, அதெல்லாம் நடக்காது. போங்க மாம்ஸ். “

” நீ மட்டும் இப்போ ஓகே சொல்லு. நான் அத்தைகிட்ட பேசுறேன்.”

” அவங்க என்கிட்ட பேசுனா தான் என் லைப்ல கல்யாணம் பத்தியே யோசிப்பேன். இல்லைனா இல்லை தான். நடக்கற கதையே பேசுங்க. ” இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த மாலாவிற்கு நெஞ்சம் கனத்தது. இருவரின் பேசா போராட்டத்தில் பாதிக்கப்பட்டது இவளும் தானே.  அன்னையா, தம்பியா என குழந்தை பெற்ற இரு மாதத்தில் இருந்து தூது போகும் புறாவாய் இருந்தவள் தானே. இனியும் விட்டால் வேலைக்காகாது என அவளும் களத்தில் இறங்கி விட்டாள்.

***************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!