Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 22 1

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம்.22(1)

ரணதீரனின் கோவமான முகத்தைப் பார்த்த வைதேகியின் கண்கள் கலங்கியதும்,
“மேடம் அழறீங்களா?”என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தப்படி ரணதீரன் கிண்டலாகக் கேட்டான்.

“அப்போ நீங்க என்னை உங்க தோழியா ஏத்துக்கவே இல்லையா? நீங்க என்னை இந்த ரூம்ல வச்சே கொலை பண்ண போறிங்களா” என்றவளின் பயத்தைக்கண்டு சத்தமாகச் சிரித்த ரணதீரன் சற்றும் தாமதிக்காமல் அறையைத் திறந்துக்கொண்டு அவள் அருகே சென்றான்.



Advertisement

தன் எதிரே சிரித்த முகத்துடன் நின்று இருந்தவனை பார்த்து, “ஓ… நடிச்சிங்களா?” என்று மூக்கை உறிந்தப்படி கண்களில் கண்ணீருடன் கேட்டவளின் முன் கண்களைச் சிமிட்டி அழகாய் சிரித்தான் அவன்.

“பெரிய வீராங்கனை போல வாக்கிங் ஸ்டிக் வச்சி எதிரியை எல்லாம் அடித்து ஓடவிடுவேன்னு சொன்ன! இப்போ என்ன இப்படி அழு மூஞ்சியா நின்னுகிட்டு இருக்க?” என்றவனை பொய்யான கோபத்துடன் கடந்து வெளியே செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து
தடுத்தவனின் இதழ்களில் கீற்று
புன்னகை மலர்ந்தது.

“கையை விடுங்க தீரா… பார்த்த கணத்தில் இருந்தே உங்களுக்கு என்னை அழ வச்சி பார்க்கத் தான் ஆசை. உங்களுக்கு என் மேல அன்போ பாசமோ! ஏன் எந்த வித உணர்வுமே இல்லை” என்றவள் கோவமாக அவனின் கரங்களைத் தட்டி விட்டாள்.

Advertisement

“இப்போ ஏன் நீ கோவப்படுற, நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன். சரி வா நீ கேட்ட கேள்விக்கு உனக்குப் பதில் சொல்றேன்” என்றவன் வைதேகியை அந்த அறையின் மறைவில் உள்ள இன்னோரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.

Advertisement

“என்ன தீரா இது… ஒரு அறைக்குள் இன்னோரு அறையா!? இங்க என்ன இருக்கு?” என்றவள் பயத்துடன் அவன் கரங்களைப் பற்றிகொண்டதும், “இங்க தான் அவன் இருக்கான்” என்ற ரணதீரனின் கண்களில் ஆத்திரமும் குரலில் கோவம் தெரிந்தது.

“இங்க யாரு இருக்காங்க?” என்ற வைதேகி அந்த அறையைச் சுற்றிப் பார்க்க அங்கே கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஆடவன் ஒருவன் மயக்கத்தில் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தவனை பார்த்து வைதேகிக்கு பதற்றம் ஏற்பட்டது.

“தீரா யாருங்க இவரு?” என்றவள் மயக்கத்தில் இருந்த ஆடவனின் அருகே சென்று, “ஏன் இவரை இங்க கட்டி போட்டு வச்சிருக்கீங்க?” என்று கேட்டதும்,
“ம்… இவன் பண்ண பாவத்துக்கு இன்னும் இவனைக் கொல்லாமல் விட்டேனேன்னு சந்தோஷப்படு” என்ற ரணதீரனின் கோவத்துக்கு என்ன காரணம் என்று புரிந்துக் கொள்ள முடியாமல் வைதேகி குழம்பி போனாள்.

Advertisement

“நீ போன முறை இங்க வந்தபோது பார்த்தியே ஒரு கண்ணீர் சிந்தும் பொம்மை! அந்தப் பொம்மைக்குள் இருந்தது இந்தத் துரோகி தான்” என்ற ரணதீரனின் வார்த்தையைக் கேட்டு வைதேகியின் முகத்தில்
பதற்றம் கூடியது.

“என்ன… என்னங்க சொல்றிங்க? இவரு எப்படி பொம்மைக்குள்ள? எனக்கு ஒண்ணுமே புரியலையே” என்ற வைதேகியின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே, அருகே இருந்த தண்ணீரை எடுத்து மயங்கி இருந்த ஆடவனின் முகத்தில் ஊற்றினான் ரணதீரன்.

மயக்கத்தில் இருந்தவன் முகத்தில் குளிர்ந்த நீர்பட்டதும் கண்களைத் திறந்து பார்த்த நபரோ, “ம்…ம்…” என்று வாயில் கட்டப்பட்ட கட்டுடன் முனங்கியவனின் வாயில் இருந்த துணியை ரணதீரன் கழட்டி விட்டதும் தன் எதிரே ஏதும் புரியாமல் நின்று இருந்த வைதேகியை பார்த்த அந்த நபர்,
“என்னைக் காப்பாத்துங்க என்னை இங்க இருந்து காப்பாத்துங்க” என்றவனின் பயத்தைக்கண்டு மேலும் குழம்பி போனாள் வைதேகி.

“என்ன?உன்னைக் காப்பாத்தணுமா? நீ காலத்துக்கும் இங்கேயே கிடந்து செத்து தான் போகப் போற” என்று ரணதீரன் கோவமாகச் சொன்னவனை, “ஐயோ தீரா…யாருங்க இவரு? எதுக்காக இவரை இங்க அடைச்சு வச்சிருக்கீங்க?” என்று பொறுமை இழந்தவளாகக் கேட்டாள் வைதேகி.

“இவன் தான் பொம்மி அக்காவுக்குப் பார்த்த மாப்பிளை. இவன் பேர் சங்கர், ஆளைப்பாரு! பெரிய வெள்ளைக்காரன்னு இவனுக்கு நினைப்பு!அதான் என் அக்காவை வேணான்னு கல்யாணத்தை நிறுத்திட்டு நைட்டோட நைட்டா இந்த ஊரை விட்டே ஓடிப் போயிட்டான்” என்றவனின் வார்த்தைகளில் தெரிந்த அதே கோபத்துடன் சங்கரின் மூக்கை பார்த்து ஓங்கி குத்தினான் ரணதீரன்.

“என்ன! பொம்மி அக்காவுக்குப் பார்த்த மாப்பிளையா?ஆனா இவரை ஏன் நீங்க இங்க அடைத்து வச்சி இருக்கிங்க?” என்று அவள் கேட்டதும், “ஏன் இன்னும் உயிரோட வச்சி இருக்கேன்னு கேளு” என்றான் ரணதீரன்.

“ஐயோ தீரா… முதல்ல நீங்க அவர் கைக்கால்ல கட்டி இருக்குற கட்டை எல்லாம் கழட்டி விடுங்க”என்றவள் வேகமாகச் சங்கர் அருகே சென்றவளை தன் வசம் அதே வேகத்துடன் இழுத்தவன்,”அவன்கிட்ட போகாதே. அவன் ஒரு கொலைக் காரன். இவன்னோட திமிரால தான் பொம்மி அக்காவோட அப்பா இறந்து அவங்களும் கிட்டத்தட்ட நாலு வருஷமா நடைபிணமா மாறிட்டாங்க” என்றவன் மீண்டும் சங்கரை அடிக்கக் கை ஓங்கியவினை தன் முழு பலம் கொண்டுத் தடுத்து நிறுத்தினாள் வைதேகி.

“என்ன தீரா நீங்க… அதுக்காக இவரை இப்படி அடைத்து வச்சி கொடுமை படுத்துவிங்களா?” என்று வைதேகி கோவமாகக் கேட்டதும், “பின்ன! இவனை ராஜமரியாதையோடு அழைச்சிட்டு போய் வேற எதாவது வெள்ளைக்காரியை பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” என்ற ரணதீரனின் முகத்தில் ஆத்திரமும் ஆவேசமும் அதிகமாகவே தெரிந்தது.

“இவன் ஓடிப் போனதால தான் பொம்மி அக்கா வாழ்க்கையே சூனியமா மாறிடுச்சு, ஆனா இவன் அவங்கள பற்றிய நினைவே இல்லாம சென்னையில உல்லாசமா ஊரைச் சுத்திகிட்டு இருந்தான். நானும் இவன் எப்போடா என்கிட்ட மாட்டுவான்னு காத்துக்கிட்டு இருந்தேன். அதுக்கெற்ற மாதிரி நான் பிஸ்னஸ் விஷயமா சென்னை போய் இருக்கும்போது இவன் வசமா என்கிட்ட சிக்கினான்.

அதான் இவனை என்கூடவே தூக்கிட்டு வந்து, எந்த நிறத்தை வைத்து பொம்மியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னானோ, அதே மாதிரி கருப்பா இருக்குற பொம்மைக்குள்ள வச்சி இவனைச் சாகுற வரைக்கும் டார்ச்சர் பண்ணனும்னு நான் முடிவு பண்ணேன்” என்ற ரணதீரனின் பழிவாங்கும் உணர்வை இந்த இடத்தில் ஒரு மனநல மருத்துவராக மாறி அவனின் நிலையிருந்து சிந்திக்க ஆரம்பித்தாள் வைதேகி.

“சார்…நான் பண்ணது தப்பு தான். என் தப்பை நான் உணர்ந்துட்டேன், ப்ளீஸ் சார் என்னை மன்னிச்சிடுங்க” என்று சங்கர் கதறி அழுதவணை பார்த்து ஒரு துளிக்கூட மனம் இறங்கமால் நின்று இருந்தான் ரணதீரன்.

“தீரா… நான் சொல்றதை கேளுங்க இவரை இங்க அனுப்பி வச்சிடுங்க” என்ற வைதேகி சங்கரின் கைக் கட்டைக் கழட்டி விட முயற்சி செய்தவளின் செயலைப் பார்த்து ரணதீரன் கோவம்க் கொண்டவன், “அவனைத் தொடாத, அவன் சாக வேண்டிய ஆளு தான்” என்றவனின் குரலைக் கேட்டு வேகமாக இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான் ரணதீரனின் நண்பன் வேலு.

இதுநாள் வரை நெல்சன் கம்பெனியில் இப்படியொரு ரகசிய அறை இருப்பதை வேலுவும் ரணதீரனும் தவிர வேறு யாரும் அறிந்திடாத நிலையில்,இன்று அந்த அறைக்குள் வைதேகி நிற்பதை பார்த்து வேலுவிற்கு சின்ன சங்கடம் ஏற்பட்டது.

“ராணா… இங்கே ஏதாவது பிரச்சனையா?” என்ற வேலு வைதேகியையும் சங்கரையும் பார்த்தபடி நின்று இருக்க, “ஓ… தீராவின் இந்தப் பழிவாங்குற வேலைக்கெல்லாம் நீங்களும் உடந்தையா வேலு”
என்று கேட்டாள் வைதேகி.

“ஆமா! நான் இவனைப் பழி வாங்க தான் போறேன். இவன் பண்ண காரியத்தால தான் பொம்மி அக்கா வாழ்க்கை நாசமா போச்சுன்னு உனக்குத் தெரியும்தானே” என்று ரணதீரன் கோபமா கேட்க,
“சரி…நீங்கச் சொல்றது உண்மைதான். ஆனாலும் இவர இப்படி நீங்கக் கொடுமைப்படுத்துறதால என்ன மாறிடும்னு நீங்க நினைக்கிறீங்க தீரா” என்ற வைதேகியின் கேள்விக்கு ரணதீரனிடம் பதில் இல்லை.

“எதுவும் மாறப்போவதில்லை தான்.
ஆனால் நிறத்தை வைத்து, அழகை வைத்து, இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காக மணப்பெண்ணெய்யோ மணமகனையோ வேணான்னு சொல்லிட்டு ஓடிப் போறாங்களே இவங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது தானே” என்ற ரணதீரனின் கோவப் பார்வை
சங்கரை சுட்டெரித்தது.

“இந்த அழகும், இந்த இளமையும் இருக்கிறதாலதானே இவங்க நிறத்துலையும் அழகுலையும் கம்மியா இருக்குறவ எங்களை வேதனைப்படுத்தி பார்க்கிறாங்க! அதனாலதான் இவனுக்குச் சோறு தண்ணி இல்லாம, இவனை இந்த ரூம்லயே பட்டினி போட்டுக் கிட்டதட்ட இவன் அடுத்தவங்கள எப்படி அசிங்கம்னு நினைக்கிறானோ அந்த உருவத்தை இவனுக்கு நான் கொடுக்க நெனச்சேன்” என்ற ரணதீரனின் ஆழ் மனதில் ஏற்பட்டு இருக்கும் காயத்தை ஒரு மனநல மருத்துவராய் அந்தத் தருணம் அவனைப் புரிந்து கொண்டாள் வைதேகி.

“தீரா… உங்களுடைய கோபமும் ஆவேசமும் எனக்குப் புரியுது. ஆனா இப்படிப்பட்ட ஒரு ஆளோட பொம்மி அக்காவுக்குக் கல்யாணம் நடக்காமல் இருந்ததே நல்லது தான்.ஏன்னா நீங்கச் சொல்ற மாதிரி நிறத்துக்கும் அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்குறவங்க இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது அவங்கள மட்டம் தட்டி அவங்க வாழ்க்கையையே சூனியம் ஆக்கிடுவாங்க. அதனால இவரை மன்னித்து இங்கிருந்து அனுப்பி வச்சிடுங்க” என்று வைதேகி
பொறுமையாக ரணதீரனுக்கு எடுத்து உரைத்தாள்.

“ஆமா ராணா… வைதேகி சிஸ்டர் சொல்றதுதான் சரி. போதும்.கிட்டதட்ட பத்து நாள் இந்தச் சங்கரை நீ இங்கேயே அடச்சி வச்சி அவன் தவறை அவனாக நீ உணர வச்சிட்ட. இதுக்கு மேல அவன் திருந்தறதும் திருந்தாததும் அவனுடைய விதி. ஆனா இனி நம்ப இவனை இங்கே வச்சிருக்க வேண்டாம். முதலில் இவனை இங்கிருந்து அனுப்பி விட்டுடலாம்.” என்ற வேலுவை கோபத்துடன் முறைத்தான் ரணதீரன்.

“தீரா… நீங்கப் பொம்மி அக்காவைக் கூடப்பிறந்த சகோதரியா நினைக்கிறது உண்மைன்னா! அவங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்குத் திரும்பி வருவதை நீங்க நம்புங்க. அதே போலப் பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம் மட்டுமே முழுமையான வாழ்க்கையை கொடுத்திடாது தீரா. அதனால ஒரு தம்பியா இருந்து நீங்கப் பொம்மி அக்காக் கிட்ட பேசி அவங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை அவங்களுக்கு அமைத்துத்தர உறுதுணையா இருங்க” என்று வைதேகி பொறுமையாகவும் பக்குவமாகவும் ரணதீரனிடம் எடுத்துச் சொன்னவளின் பார்வை சோர்வான நிலையில் அமர்ந்திருந்த சங்கரின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

“அத விட்டுட்டு இந்த மாதிரி அழகு நிறத்தை வச்சி மனிதர்களை எடை போடும் மனுஷங்களை அடச்சி வச்சி நீங்கக் கஷ்டப்படுறதால சல்லி காசுக்குப் பிரயோஜனம் இல்லை தீரா” என்ற வைதேகியின் வார்த்தையைக் காதில் வாங்காமல், அவள் என்ன சொன்னாலும் நான் செய்வது தான் சரி என்ற எண்ணத்தில் ரணதீரன் அதே இடத்தில் ஆணி அடித்ததைப் போல நின்று இருந்தவனை பெருமுச்சுடன் பார்த்தாள் வைதேகி.

“சரி தீரா… நான் இவ்வளவு சொல்லியும் பழிவாங்குற உணர்ச்சி மட்டும்தான் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா தாராளமா இவரை இங்கேயே அடைச்சு வச்சு என்ன வேணும்னாலும் பண்ணுங்க” என்ற வைதேகி வாக்கிங் ஸ்டிக்கின் உதவியோடு அந்த அறையிலிருந்து வெளியே வந்தவள், “வேலு… எனக்காக ஒரு உதவி பண்ணுவீங்களா?” என்று கேட்டாள்.

“என்ன சிஸ்டர்? என்ன பண்ணனும் சொல்லுங்க” என்று வேலு கேட்டதும், “எனக்கு இந்த ஊர்ல இவங்கள தவிர்த்து வேற யாரையும் தெரியாது. அதனால வெளியே எங்கேயாவது தங்கிக்க எனக்கு ஹாஸ்டல் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கிறீர்களா” என்று வைதேகி கேட்டதும், ரணதீரன் கோபமாக அவளை நெருங்கியவன், “என்ன?இவனை வெளியே அனுப்பல்லைனா நீ நம்ம வீட்டை விட்டுப் போயிடுவன்னு சொல்லாம சொல்லிக் காட்டுறியா?” என்று கோவமாக
கேட்டான்.

“சொல்லாம எல்லாம் சொல்லிக் காட்டல சார். நேரடியாவே சொல்றேன். இந்த நொடி இவரை நீங்க இங்கே இருந்த அனுப்பி வைக்கலனா கண்டிப்பா நான் இங்கே இருந்தபடியே ஹாஸ்டலுக்கு, இல்ல இல்ல… அந்த ரங்காராவ் கூடவே…”என்று வைதேகி சொல்லி முடிக்கும் முன்னே,”போதும் நிறுத்து” என்று அவள் முன்னே கையை நீட்டி அவள் வார்த்தையைத் தடுத்துருந்தான் ரணதீரன்.

“இப்போ என்ன? இவனை இங்க இருந்து அனுப்பி வைக்கணும் அவ்வளவுதானே! டேய் வேலு…இந்தத் துரோகியை இந்த ஊரைவிட்டே அடிச்சு துரத்து” என்ற ரணதீரன் சங்கரின் அருகே நெருங்கிச் சென்றவனை பார்த்து ஷங்கர் பயத்தில் நடுங்கினான்.

“டேய்…வைதேகினால தான் இன்னைக்கு நீ என்கிட்ட இருந்து தப்பிச்சிருக்க. மறுபடியும் நீ என் கண்ணுல மாட்டுனா கண்டிப்பா உன்ன பொம்மைக்குள்ள வச்சு பாடை கட்டிடுவேன்” என்ற ரணதீரனின் கோபத்தை பார்த்து வைதேகிக்கும் உள்ளுக்குள் பயம் எழுந்தது என்னவோ உண்மைதான்.

வைதேகி சொன்ன வார்த்தையை மதித்துச் சங்கரை இங்கிருந்து வெளியே அனுப்பப் போகிறான் என்ற நிம்மதி அவள் மனதில் இருந்தாலும் ரணதீரனின் இத்தகைய செயல் வைதேகிக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

“அதான் இங்க இருந்து இவனை அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணிட்டேனே! வா நம்ம கிளம்பலாம்” என்ற ரணதீரன் வைதேகியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்கு சென்றவனின் முகம் கோபத்தோடு தான் இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரணதீரன் அதே கோபத்தோடு அவன் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தவனை விழிகள் அகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் வைதேகி.

ரணதீரனின் மனதில் சொல்ல முடியாத நிறைய வலிகள் உள்ளது என்பதை அறிந்திருந்த வைதேகி அவனிடம் இயல்பாகவும் நட்பாகவும் பேசிப் பழக ஆசை கொண்டாள்.

ரணதீரனை பார்த்த நொடியில் இருந்தே வைதேகிக்கு அவனின் கோபமான சுபாவத்தை அறிந்திருந்தவளுக்கு எந்த நேரம் இவன் எப்படி மாறுவான் என்ற பயமும் உள்ளுற இருக்கத்தான் செய்தது.

சில மணி துளிகள் கடந்த நிலையில், “என்ன?கண்ணைத் திறந்து கிட்டே கனவு காண்றியா?”என்ற ரணதீரனின் கேள்வியில்,
“ஆமாமா… உங்கள பத்தி தான் கனவு கண்டுகிட்டு இருக்கேன்” என்ற வைதேகி இருக்கையிலிருந்து எழ முயன்றவள், கால் தடுமாறி கீழே விழப்போக,

“ஏய் பார்த்து…!” என்றவன் பதறிப்போய்,
அவள் இடையில் கைகொடுத்து
தன்னோடு அணைத்துக் கொண்டவனின் அரவணைப்பை இந்த நொடி மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் வேண்டுமென்ற ஆசை, வைதேகியின் இதயம் எனும் செடியில் காதல் மொட்டாகத்
துளிர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!