Skip to content
Post Views: 2,638
அவனோ கவலைகள் ஏதுமற்றவனாய் தன் காலை உணவில் மூழ்கியிருக்க, ‘சே, பரணி மேல இருக்க ஈர்ப்பு இந்த கொரோனா காலத்திலையா வந்திருக்கு? இல்லையே! அவனை காலேஜ் படிக்கறப்ப இருந்தே பிடிக்குமே. என்ன அப்போ அவ்வளோ மைண்ட் மெச்சூரிட்டி இல்லாததால அவன் பிரபோஸ் பண்ணப்போ ஒதுங்கி போயிட்டேன். அதுக்காக அவனை நான் வெறுக்கவோ, அவனைப் பத்தி நினைக்காமையோ இல்லையே.
நல்ல ரொமேண்டிக்கான பாட்டு கேட்டாலோ, படம் பார்த்தாலோ கூட மனசுகுள்ள ஒரு மூலையில அவன பத்தின எண்ணமும் அவன் முகமும் ஒரு நொடியாவது வந்து போகுமே. கண்டதையும் நினைச்சு ஏதேதோ கவலைப்படற திவி. ஸ்டாப் இட்’ என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டவள் இம்முறை மனதில் நிம்மதியுடன் பரணியை ஏறிட, அவனும் அந்த நொடி அவளைத் தான் பார்த்தான்.
இயல்பாக இருவரும் சிரித்துக் கொள்ள, அவள் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு அமைதி உண்டாகியது. ‘இந்த மனநிறைவு தான் உண்மையான காதலா? அங்கே இங்கே சுற்றி விட்டு கடைசியில் இளைப்பாற நிழலில் வந்துவிட்ட அமைதி தோன்றுவது தான் அன்பா?’ என்ற கேள்விகளில் தத்தளித்தவளின் கைகளை இயல்பாக பரணி பற்றிக் கொள்ள, அதன் பிறகு திவ்யாவிற்கு வேறு எந்த கவலையும் உண்டாகவில்லை.
பரணியின் கைகள் திவ்யாவின் கைகளைப் பிடித்துக் கொள்வதையும், அவளும் இது தினமும் நடக்கும் விஷயம் தான் என்பது போல எந்த மறுப்பும் காட்டாது தன் தேநீரை உறிஞ்சுவதையும் கவனித்த வருணுக்கு மனம் சுண்டிப் போனது. இப்போதும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து தன் அறை நோக்கி சென்றவனை கொஞ்சம் கவலையாக திவ்யா ஏறிட,
Advertisement
“நான் பேசிக்கறேன் திவி.” என்று சமாதானப்படுத்திய பரணி, சட்டென நினைவு வந்தவனாக, “திவி, இந்த நாபி காலையில சாப்பிட வரலை இன்னும். கொஞ்சம் அவ ரூம் போய் பார்த்துட்டு வா” என்று அனுப்பி வைத்தான்.
நாபி-ஜூன் இன்னமும் காலை உணவை சாப்பிட வரவில்லை என்பது அப்போது தான் அவளுக்கும் யஷ்வந்திற்குமே உறைத்தது. திவ்யா, நாபியின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள். “நாபி, ஆர் யு தேர்?” என்று இரு முறை தட்டிட, மறுபக்கமிருந்த எந்த சப்தமும் இல்லாமல் போகவும், “நாபி ப்ளீஸ், ஓபன் த டோர். இன்னமும் கோபமா இருக்கியா? சாப்பிட வா ப்ளீஸ்” என்று சாந்தமான குரலில் தான் அழைத்தாள் திவ்யா.
நாபியின் அறைக்கதவுகள் மூடப்பட்டே இருக்க, யஷ்வந்தும், பரணியும் அவள் அறையின் முன்பு வந்திருந்தனர். நாபி தன் அறைக்கதவைத் திறவாதது கண்டு சற்றே சுணங்கிய பரணி, “நாபி, ஐம் சாரி ஃபார் எஸ்டர்டே! நான் பேசினது உன்னை கண்டிப்பா ஹர்ட் பண்ணியிருக்கும். ஐம் ரியலி சாரி. ப்ளீஸ் சாப்பிட வா” என்று கதவின் அருகே நின்று சப்தமாகவே மொழிந்தான்.
Advertisement
நாபி கதவை இம்முறை திறந்துவிடுவாள் என்றே மூவரும் நினைத்திருக்க, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில நொடிகளுக்குள் யஷ்வந்த் தன் பொறுமையை இழந்திருந்தான். “பாப்ரே! தர்வாசா கோலோ! வீ ஆர் சாரி, கமான். ஓபன் த டோர்” என்று கதவை மடமடவென தட்டியபோதும் கதவு திறக்காது போக, மூவரும் சற்றே துணுக்குற்றனர்.
Advertisement
“ஒரு வேளை ரூம்ல இல்லையோ?” என்று திவ்யா சந்தேகமாய் வினவ?
“திரும்ப ஜாகிங் போயிட்டாளா? அவளை!” என்று யஷ்வந்த் பற்களை நறநறவெனக் கடித்தான்.
பரணி கதவின் தாளில் கைவைத்து திருக, அது திறந்து கொண்டது. உள்ளே திவ்யா தான் முதலில் எட்டிப் பார்த்தாள். நாபி ஜூன் அவள் அறையில் இருக்கவில்லை. கட்டிலின் மேல், துணிகளை அடுக்கும் பெரிய பெட்டி திறந்த வாக்கில் இருந்தது. குளியல் அறையில் திவ்யா சென்று பார்க்க, அதுவும் காலியாகவே இருந்தது. இதைக் காணவும் யஷ்வந்த் தான் கொதித்துப் போனான்.
Advertisement
“அவ திரும்ப ஜாகிங் போயிருக்கான்னு தான் நினைக்கறேன். வந்ததும் பேக் பண்ணிட்டு எங்கையோ போகறதுக்காக பெட்டியை எடுத்து கட்டில் மேல வச்சுட்டு போயிருக்கா!” என்றான் கீழே இறங்கியபடிக்கு.
“வரட்டும் இன்னைக்கு அவ. கண்டிப்பா ஆபீஸ்ல நான் ரிப்போர்ட் பண்ண போறேன் பரணி! திஸ் இஸ் வெரி ஸ்டூபிட் ஆஃப் ஹர். சென்ஸ் வேண்டாம், அறிவில்லாமையா ஊரடங்கு உத்தரவு போட்டிருக்காங்க. வாரத்துக்கு ஒரு தடவை க்ராசரி வாங்க போனா கூட அவ்வளோ கட்டுக்கோப்பா போயிட்டு வரவேண்டியதா இருக்கு. இவ என்னடான்னா புரிஞ்சுக்காம ஜாகிங் போறேன், வாக்கிங் போறேன்னு ஊர் சுத்த போயிடறா!” என்று பதட்டமாகப் பேசிய யஷ்வந்த் தனது அறைக்குச் செல்லாமல் ஜாகிங் சென்றிருந்த நாபி-ஜூனின் வருகைக்காக காத்திருந்தான்.
நேரம் ஒன்பதானது. அன்று சனிக்கிழமை என்பதால் அலுவலக வார விடுமுறை தினம். அவரவர் சாவகாசமாகக் குளித்து முடித்து மெல்லமாகவே நேரத்தைப் போக்கும் தினம். காலையிலேயே திவ்யா பரணியிடம் சொல்லியிருந்தாள்.
“பரணி, தினேஷ்க்கும், என் ஃப்ரெண்ட் பரிமளாவுக்கும் காலையில ஃபோன் பேசணும். நம்மளைப் பத்தி அவங்ககிட்ட சொல்லணும்” என்று கண்களில் சிரிப்புடன் அவள் கேட்கவும், “அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு. ஆமா யாரந்த பரிமளா? உன் க்ளாஸ் ஃப்ரெண்டா?” என்று வினவினான்.
“பரி என்னோட பக்கத்து வீடு. சின்ன வயசுல இருந்து ரொம்ப க்ளோஸ் நாங்க. அவகிட்ட ரெண்டு நாளைக்கு ஒருக்காவாது பேசிடுவேன்.”
“சரி திவி. பேசிடலாம்.” என்று ஆமோதிப்பாய் தலையசைத்திருந்தான்.
காலை குளித்து முடித்து தன் நண்பர்களிடம் பேசிடலாம் என்று பரணியின் அறையைத் தட்டிட, உள்ளிருந்து வருண் கதவைத் திறந்தான். அவன் முகத்தைப் பார்க்கவே திவ்யாவிற்கு சங்கடமாக இருந்தது. காலை உணவருந்தும் போது கூட எதுவும் பேசாமல் விருட்டென்று எழுந்து அவன் மேலே சென்றது மனதில் திரும்ப வந்து போக மெளனமாய் அறையின் வாயிலிலேயே நின்றுவிட்டாள்.
“ஐம் ஜஸ்ட் லீவிங்” என்று அவள் முகம் பார்க்காமல் பொதுப்படையாக மொழிந்த போதும், வருணின் உடல் மொழி சற்றே மாறியிருந்தது. இறுக்கம் கொஞ்சமாக தளரப் பெற்றவன் போலக் காணப்பட்டவன், இவளைக் கடக்கும் சமயம், “கங்கிராட்ஸ்” என்று அதிகம் சப்தமில்லாமல் கூறிவிட்டே சென்றான். வருணின் இந்த மாற்றத்தை எண்ணிக் கொண்டே பரணியின் அறைக்குள் சென்றாள் திவ்யா.
அறையின் ஜன்னல் பக்கமிருந்த விண்டோ சீட்டில் அமர்ந்திருந்த பரணியின் அருகில் உரிமையாய் சென்று அமர்ந்து கொண்டவள், “வருண்கிட்ட என்ன பேசின? அவன் கொஞ்சம் ரிலாக்ஸ்டா பேசின மாதிரி இருந்தது. இஸ் எவ்ர்திங் ஓகே”? என்று வினவினாள்.
“ஆல் ஓகே”
“என்ன சொன்ன வருண்கிட்ட?”
“ம்ம் உண்மைய சொன்னேன்” என்று பாட்சா ஸ்டையில் பரணி கூற, அவள் வயிற்றில் முட்டியால் லேசாகக் குத்தியவள், “ஏ, தினேஷ்ட பேசுவமா?” என்று கேட்டுக் கொண்டே கைப்பேசியில் தினேஷின் எண்ணிற்கு வாட்ஸ்ஸப்பில் அழைத்தாள்.
“ஹே என்ன இந்த நேரத்தில கூப்பிட்டிருக்க? என்ன பண்ணற” என்று இயல்பாக பேசத் துவங்கிய தினேஷ், “ஹாய் தினேஷ்” என்ற பரணியின் குரல் கேட்டு ஒரு நொடி முற்றிலும் மெளனமானான்.
“ஹலோ தினேஷ் லைன்ல இருக்கியா?” என்று மீண்டுமாய் பரணி கேட்க,
“சார்… பரணி சார்… நீங்க? திவ்யா ஃபோன்ல இருந்து?” என்று உளற,
“டேய் என்னடா இன்னமும் சார், மோர்னு கூப்பிட்டுட்டு இருக்க?” என்று உரிமையாக பரணி கடிந்து கொண்டான்.
“அது சாரி சார். ஐ மீன் சாரி ண்ணா. எப்படி இருக்கீங்க? நீங்க திவ்யா ஃபோன்ல பேசுவீங்கன்னு எதிர்பார்க்கலை. அவ ஓகே தானே! உடம்புக்கு ஏதும் முடியலையா அவளுக்கு? கொரோனா பாசிடிவ்னு ஏதாவது?” என்று தினேஷ் ஃபோனிலேயே திவ்யாவிற்கு கொரோனா பிடிக்க வைத்திருக்க, பக்கவாட்டில் இருந்து, “நான் நல்லா தான் இருக்கேன் எரும! கேட்குது பாரு கேள்வி, கொரோனா பாசிடிவ்வான்னு?” என்று திவ்யா பேசிட, பரணி வாய்ஸ் காலை, வீடியோ காலாக மாற்றினான்.
“ஹாய் தினேஷ், எப்படியிருக்க?” என்று பரணி கேட்க,
“நான் நல்லா இருக்கேண்ணா… நீங்க எப்படி இருக்கீங்க? திவி எங்க?” என்று தினேஷ் பதில் சொல்லி முடிக்கும் முன்னர், பரணியின் தோள் மேல் சாய்ந்தபடிக்கு அமர்ந்திருந்த திவ்யாவும், “ஹாய் டா. இங்க தான் இருக்கேன்” என்று சிரிப்புடன் கூற, மேலே அவர்கள் விவரம் சொல்லாமலேயே தினேஷிற்கு விஷயம் புரிந்து போயிருந்தது.
“டீ சொல்லவேயில்ல. இதெல்லாம் எப்போ நடந்துச்சு?” என்று பரணியை விடுத்து தன் தோழியிடம் ஆர்வமாக தினேஷ் பேசத் துவங்க, நாகரீகம் கருதி பரணி கைப்பேசியை திவ்யாவிடம் முழுவதுமாய் கொடுத்துவிட்டான். திவ்யாவும் தினேஷும் சிறிது நேரம், “கொன்றுவேன், எரும, அப்படியில்ல தினு, உங்கிட்ட தான் மொதல்ல சொல்லறோம்” என்று அப்படியும் இப்படியுமாக பேசி இறுதியில் கைப்பேசியை வைக்கப் போகும்போது மீண்டுமாய் பரணியிடம் நீட்டினாள்.
“ஆல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா தினேஷ்?” என்று விளையாட்டாய் பரணி கேட்க, “ண்ணா, என்னண்ணா?” என்று அவனுமே அசடு வழிந்தான்.
“தினேஷ் இன்னொரு விஷயம். இதைப் பத்தி உன் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டயும்…” என்று பரணி வாக்கியத்தை முடிக்கும் முன்பே,
“ஐய்யோ கண்டிப்பா சொல்லமாட்டேண்ணா. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று தினேஷ் படுதீவிரமாய் கூற,
“சே சே! உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டையும் சொல்லிடுன்னு சொல்ல வந்தேன்.” என்று சிரிப்புடன் பரணி கூறினான்.
“ண்ணா?” என்று பேந்தப் பேந்த தினேஷ் முழிக்க, “ஆமாடா. எல்லாருக்கும் சொல்லிடு. சக்திவேல் கிட்ட நான் அப்பறம் பேசிக்கறேன். மத்தபடி உன் காண்டாக்ட்ல இருக்க எல்லா ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் சொல்லிடு என்ன?” என்று கூறியவனிடம் குத்துமதிப்பாக தலையசைத்தான்.
“சரி, பை தினேஷ். ஸ்டே சேஃப். திவிட ஃபோன் தர்றேன்” என்று சொல்லிவிட்டு கைப்பேசியை திவ்யாவிடம் ஒப்படைத்து விட்டான். திவ்யா இன்னும் சில நொடி பேசிவிட்டு “அப்பறம் கூப்பிடறேன்டா” என்று சொல்லி கைப்பேசியை அணைத்தாள். அவள் முகமெல்லாம் பல்லாக மாறியிருந்தது.
“என்ன?” என்று சிரிப்புடன் பரணி கேட்க, “இல்ல” என்று தலையை பலமாக அசைத்தவள், “ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்று சொல்லி அவன் கைகளை இறுக பிடித்துக் கொண்டாள். அவன் அணிந்திருந்த முழுக்கை டீஷர்டின் மேல் முத்தம் கொடுத்தவள், அவன் சற்றும் எதிர்பாராத சமயம், நறுக்கென்று அவன் புஜத்தில் கடித்து வைத்தாள்.
“ஏ… வலிக்குது திவி” என்று சொல்லி, “ஸ்ஸ்” என்று அவன் லேசாய் முகம் சுருக்கவும் தான் கடிப்பதை நிறுத்தினாள். “உன்னை கடிக்கணும் போல இருந்துச்சு. அதான்” என்றவள், “சரி, வா, பரிட்ட பேசுவோம்” என்று கூறிக்கொண்டே பரிமளாவின் எண்ணிற்கு அழைத்தாள்.
பரியிடம் நேரே வீடியோ கால் தான் செய்திருந்தாள். பரிமளா தன் கட்டிலில் உருண்டு கொண்டே கைப்பேசியை எடுத்திருக்க, “ஏ, எந்திரிச்சு ஒழுங்கா உட்காருடீ” என்று தோழியை திட்டிவிட்டு, “இந்தா பேசு” என்று பரணியிடம் கைப்பேசியை நீட்டிவிட்டாள்.
தினேஷையாவது கல்லூரியில் பழக்கம். இந்த பரிமளா யாரென்றே பரணிக்குத் தெரியாது. திவ்யா பேசிவிட்டு தன்னிடம் கைப்பேசியைக் கொடுப்பாள் என்று நினைத்தவனிடம், எடுத்த எடுப்பிலேயே, “பேசு” என்று சொல்லிவிட, தான் யார் எவரென்று இந்த பரிமளாவிற்குத் தெரியுமா என்ற அச்சத்துடன் தான் பேசினான் பரணி.
ஆனால் பரணியின் தயக்கத்திற்கு அவசியமே இல்லை என்பது போல, “ஏ, பரணியா! ஏ திவி எரும? என்னடீ உன் ஃபோன்ல பரணிண்ணா பேசறாரு. ண்ணா எப்படியிருக்கீங்க? உங்களை பத்தி தான் ஓயாம பேசுவா. ஆபீஸ்ல நடக்கற ஒவ்வொண்ணும் தினமும் சொல்லிடுவா” என்று பைப்பைத் திறந்தவுடன் கொட்டும் நீர் போல மடமடவென திவ்யாவைப் போன்றே இயல்பாகப் பேசிய பரிமளாவை பரணிக்கு பிடித்துப் போனது.
“ண்ணா, ண்ணா” என்று ஆர்வமாக கண்களில் குறும்புடன் நீண்ட நாட்கள் பரிட்சயமானவள் போல பரிமளா பேசப் பேச, திவ்யா தன்னைப் பற்றி பரிமளாவிடம் எவ்வளவு சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். கல்லூரி நாட்கள் தொட்டு, அலுவலகத்தில் நேர்காணல் நடந்த தினம், வேலையில் சேர்ந்த தினம் முதல், இங்கே அமெரிக்கா வீட்டில் வசிப்பது வரையிலும் அன்றாடம் நடக்கும் எல்லா விஷயமும் பரிமளா அறிந்திருந்தது கண்டு பரணிக்கு வியப்பே.
பரிமளாவுடனும், தினேஷுடனும் பேசியது திவ்யாவிற்கு நிறைவாக இருந்தது. கைப்பேசியை வைத்து நெடு நேரமாகியும் முகம்கொள்ளா சிரிப்புடன் தான் பரணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். “நீ வீடியோ கால் பண்ணதுமே தினேஷோட முகம் போன போக்கை பார்த்தியா? சார்… சார்ன்னு பேச ஆரம்பிச்சுட்டான்.”
“அட அதைக் கூட விடு. இந்த பொண்ணு பரிமளா என்ன இப்படி வாயடிக்குது? ரொம்ப நாளா என்னைத் தெரிஞ்ச மாதிரி உரிமையா பேசறா? நல்லா இருக்குல திவி.”
“ம்ம்ம், பரி எப்பவுமே அப்படித்தான்.”
“நீ பரிமளாகிட்ட எல்லாமே சொல்லிருவியா என்ன? ஒண்ணாங்கிளாஸ் பொண்ணு வீட்டுக்கு போனதுமே வீட்டில ஒப்பிக்கற மாதிரி எல்லாமே சொல்லியிருக்க. நேத்து நடந்ததுமா சொன்ன?” என்று குறும்புடன் கேட்க,
“ஏ, போ…” என்று பரணியின் தோளில் இடித்துவிட்டு சிரிப்புடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். இருவருமாய் இப்படி நடந்த விஷயத்தை அலசியது பிடித்திருந்தது திவ்யாவிற்கு.
காலைப்பொழுது இப்படியாக கழிந்து போயிருக்க, பதினொரு மணிவாக்கில் மதிய உணவிற்கு தயார் செய்யும் பொருட்டு இருவரும் கீழே வந்தனர். யஷ்வந்த் ஹாலின் சோஃபாவில் அமர்ந்து தன் மடிக்கணினியில் படம் பார்த்துக் கொண்டிருந்தவன், இவர்கள் இறங்கி வரவும், “காலையில ஜாகிங் போன நாபி இன்னும் வீட்டுக்கு வரலை” என்று கூற,
“இன்னும் வரலையா? காலையில அஞ்சு மணிக்கே போயிடுவாளே! மணி இப்போ பதினொன்னாகப் போகுது! இன்னுமா வரலை?” என்று கொஞ்சம் பதட்டமாக திவ்யா வினவ,
“மே பீ, ஜாகிங் போயிட்டு நேரா அவ கொரியன் ஃப்ரெண்ட்ஸ் இருக்க ப்ளாட்டுக்கு போயிட்டாளோ என்னவோ?” என்று பரணி கூறினான்.
கொரோனா ஊரடங்கு போடப்படுவதற்கு முன்பு, இது போல வார விடுமுறை நாட்களில் நாபி-ஜூன் பெரும்பாலும் இவர்களுடன் வீட்டில் இருக்க மாட்டாள். அவள் கொரிய நண்பர்களுடன் தான் பொழுதைக் கழிப்பாள். இன்றும் அது போல சென்றிருக்கலாம் தான்.
“ஆமா நாம திட்டிட்டோம்ல. அதனால நம்மகிட்ட சொல்லாம போயிருப்பா. வந்துருவா” என்று யஷ்வந்த் சொல்லிவிட்டு, திரும்ப தன் மடிக்கணிணியில் படம் பார்க்கத் துவங்கியிருந்தான்.
பரணியும், திவ்யாவும் சேர்ந்து அன்றைய மதிய சமையலை முடித்து வைத்துவிட்டனர். அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், பாத்திரங்களை சுத்தம் செய்யும் வேலையை யஷ்வந்தும் வருணும் பார்த்துக் கொள்ள, திவ்யா சிறிது நேரம் ஓய்வெடுக்க தன்னறைக்கு வந்துவிட்டாள்.
இரவு உணவுக்கு மதியம் மீந்திருந்தவற்றை அனைவருமாக சாப்பிட்டு முடித்து அந்த சனிக்கிழமையைக் கழித்திருந்தனர்.
அடுத்த தினம் ஞாயிறு அன்றும் தாமதமாக எழுந்து, காலை உணவைத் தவிர்த்து நேராக மதிய உணவை சமைத்து, கிச்சன் பாத்ரூம் என்று சுத்தம் செய்து, ஒருவாறு அந்த வாரவிடுமுறை கழிந்து போயிருந்தது.
வழக்கமான நாட்களில், நாபி-ஜூன் தன் நண்பர்கள் வசிக்கும் ஃப்ளாட்டிற்குச் சென்றால், எப்போதும் ஞாயிறு மாலை அல்லது இரவுக்குள் இங்கே வந்துவிடுவாள். ஆனால் மணி எட்டை நெருக்கிக் கொண்டிருந்த போதும் நாபி இன்னமும் வீட்டிற்கு வராதது சற்றே வருத்தம் கொடுத்தது பரணிக்கு.
error: Content is protected !!