Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 23

“அய்யோ மாப். ஜான்வி அப்பா எழுந்திருங்க! என்ன இது?” என்று கொஞ்சம் பதறினார் ஜானகி.

அவர் காலில் விழுந்து கிடந்த ஜகதீஸ், மெல்ல எழுந்து,

“மாப்பிள்ளைன்னு உரிமையா கூப்பிடற தகுதியைக் கூட  நான் இழந்துட்டேன் இல்ல, அத்தை!” என்றார் குற்ற உணர்வுடன்!

“எவ்வளவு நம்பிக்கையா இருந்தீங்க, என் மேல!



Advertisement

உங்க வீட்டுல இருந்த அத்தனை கடும் எதிர்ப்பையும் மீறி, எங்க கல்யாணத்தை நீங்க ஒத்துக்கிட்டு, உங்க பொண்ணு விஜியை என் கூட அனுப்புனீங்க!

அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எதையும் நீங்க குறை வைக்கல!

ஆனா நான் தான அவளுக்கு கொஞ்சம் கூட நேர்மையா நடந்துக்கவே இல்ல!”

Advertisement

ஊர்மிளாவைக் காட்டி, “இவ அண்ணன் பேச்சை எல்லாம் கண் மூடித்தனமா நம்பிட்டு, அவனோட கைப்பாவையாக, அவன் சொன்ன சொல்லுக்கெல்லாம்  ஆடியிருக்கேன்!

Advertisement

நான் ஒரு படிச்ச முட்டாள்!

என்னால ஏற்கனவே விஜியோட வாழ்க்கையே வீணா போய்டுச்சு!

இப்பயும் நான் புத்திக் கெட்டத் தனமா என் பொண்ணோட வாழ்க்கையையும் கெடுக்கப் பார்த்தேன்!

Advertisement

நல்லவேளை ஊர்மி என்னை அதிலிருந்து காப்பாத்திட்டா! அவ மட்டும் சரியான நேரத்தில என்னை தெளிய வைக்கலைன்னா, இந்நேரம் நானே என் பொண்ணோட வாழ்க்கைக்கு நானே எமனா போயிருப்பேன்!”

“சரி. சரி விடுங்க.. அதான் நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க இல்ல, நிதானமா இருங்க! நடந்த எல்லாத்தையும் ஊர்மி எங்க கிட்ட போனில் சொல்லிட்டா” என்றார்கள் ஜானகியின் அருகில் இருந்த கனகுவும் ஜகதுவும்!

“ஆமா, நடந்த எல்லாத்தையும் எங்க கிட்ட ஊர்மிளா சொல்லிட்டா, அதனால இனி ஆக வேண்டியதைப் பாருங்க!” என்றார் ஜானகியும்!

அவருக்கு ஆரம்பத்தில் ஊர்மிளாவைக் கண்டவுடன், இவளால தானே விஜி வாழ்க்கை வீணாக போச்சு என்ற கோபம் மிகவும் அதிகமாக இருந்தது!

ஆனால், கனகுவும் ஜகதுவும் அவருக்கு சொல்லிப் புரிய வைத்தார்கள்!

“ஆமா, இனி ஆக வேண்டிய தான் பார்க்கணும், பரணியும் ஜான்வியும்  இங்க தான் வந்துட்டு இருக்காங்க! நீங்க இப்படியெல்லாம் பழசைப் பேசிட்டு நிக்க வேணாம்!

ஜான்விய பொறுத்தவரை அவளோட பப்பா நல்லவராவே இருந்துட்டு போகட்டும்!

 அந்த நினைப்பை, நீங்க இப்ப போய் நீங்க நடந்துகிட்டத எல்லாம் சொல்லி, அவளைக் கஷ்டப்படுத்திடாதீங்க!

அது தான் விஜியோட ஆசையும்! அதனால தான் அவ நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச உண்மையான காரணத்தைக் கடைசி வரை அவ ஜான்விகிட்ட சொல்லவே இல்லை!

இனியும் அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம்!

நான் பரணி கிட்டயும் ஏற்கனவே இதப் பத்தி பேசிட்டேன்!

அவனும் எதுவும் , அதாவது நீங்க அவன் கிட்ட பேசின எதையும் அவ கிட்ட சொல்ல மாட்டான்!

ஜான்விக்கு அவ பப்பா மேல உள்ள அன்பும் மரியாதையும் கெட்டுடக் கூடாது என்னிக்கும்!” என்றார் கனகு!

மீண்டும் கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் குற்ற உணர்வோடு ஜகதீஸ் பார்க்க,

“அவனா வந்து எதையும் எங்ககிட்ட சொல்லவே இல்ல! நாங்க எங்க வழியில போய் தெரிஞ்சுகிட்டோம்” என்றார் கனகு, அவரின் மனது அறிந்து!

“நீங்க எல்லாம்  ரொம்ப உயர்ந்துட்டே போறீங்க என் மனசுல! இதுக்கு மேலே எனக்கு சரியா சொல்லத் தெரியல!” ஜகதீஸ் கண் கலங்கினார்!

“பப்பா, வாட் எ சர்ப்ரைஸ்! நீங்க எப்படி இங்க? சித்தி.. நீங்க கூட என்கிட்ட ஒரு போன் கூட பண்ணி வர்றதை சொல்லவே இல்ல?” ஜான்வியின் குதூகலக் குரல் கேட்டது!

கூடவே பரணியும் வந்து கொண்டிருந்தான்.

“உன் பப்பா தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டார்!” என்றாள் ஊர்மி சிரித்தபடி!

அவளையும் பரணியையும் வரவேற்று பேசினார்கள் பாட்டிகள் மூவரும்!

“என்ன ஆத்தா, நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்களா?” என்றான் பரணி.

“ஆமா, நான் உங்க கிட்ட எப்ப கிளம்ப சொன்னேன், நீங்க எப்ப வர்றீங்க?” என்றார் கனகுவும் பதிலுக்கு!

“எங்க..  உங்க பேத்திகிட்ட  பேசி, கையில காலுல விழுந்து  கரெக்ட் பண்ணி, கூட்டிட்டு வர்றதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்!” என்று கனகுவின் காதில் முணுமுணுத்தான் பரணி!

“நீ செஞ்சு வச்ச வேலைக்கு, என் பேத்தின்றதுனால உன்னை இத்தோட விட்டா!

வேற எவளாச்சும் அவ இடத்தில் இருந்திருந்தா மவனே நீ காலி! எப்பவும் இத மனசுல வச்சு நடந்துக்கணும்!” கனகுவும் அவன் காதில் இரகசியமாகவே சொன்னார்!

“அங்க என்னடி பேரனோட ரகசியம்? ஜான்விம்மா, மாப்பிள்ளைய உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ! ப்ரெஷ் ஆகிட்டு வாங்க ” என்றார்கள் ஜானகியும் ஜகதுவும்!

அவர்கள் மாடிக்குப் போவதை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஜக்தீசும் ஊர்மியும்!

ஜகதீஸ் பெருமையாக, பூரிப்பாக ஊர்மியைப் பார்த்து, அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டார் உணர்ச்சிப் பெருக்கில்!

அவருக்கு அங்கே இந்தூரில் நடந்தது மீண்டும் நினைவில்!

அன்றைக்கு முதல் நாள் சந்தீப்பிற்கும் நிகிலுக்கும் கட்டம் சரியில்லாத நாள் போல!

ரொம்ப வகை தொகையாகவே ஒரே நேரத்தில் மாமனாரிடமும், மருமகனிடமும் மாட்டிக் கொண்டார்கள்!

—-

நேற்று.

“ஜகதீஸ், ஊர்மி என்னோட தங்கச்சி தான்! ஆனா யாரா இருந்தாலும் , உனக்கு துரோகம் பண்றத என்னால சகிச்சிக்க முடியாது!” என்றான் சந்தீப் ஜக்தீசை காலையிலேயே அவரை, அவரது ஹாஸ்பிட்டலில் சந்தித்து!

“வாட்? என் ஊர்மி, எனக்கு துரோகம் பண்றாளா? என்ன உளறல் இது?” ஜகதீஸ் கிட்டத்தட்ட கத்தினார்!

“நீங்க இத நம்பி தான் ஆகணும்! ஊர்மி மட்டுமில்ல, உங்க ரெண்டு மகன்களும் தான்!

இவங்க மூன்று பேருக்கும் உங்க சொத்து முழுசையும் அவங்களே எடுத்துக்கணும், ஜான்விக்கு எதையும் கொடுக்கக் கூடாது என்று மிகப்பெரிய ஆசை!

ஜான்வி இங்க வந்து ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட கையில் எடுத்திடக் கூடாது, ஏன் இங்க வரவே கூடாதுன்னு தான் திட்டம் போட்டு, நீங்க அத்தனை தூரம் மறுத்து பேசி நிராகரிச்ச அந்த மதராசி குடும்பத்தை இவளே காண்டாக்ட் பண்ணி, பேசி, உங்களுக்கே தெரியாம கல்யாண ஏற்பாட்டை செஞ்சு, ஜான்விக்கு அந்த மதராசியோடவே கல்யாணம் பண்ணி வச்சிட்டா!

இனி ஜான்வி அங்கேயே செட்டில் ஆகட்டும், இங்க  வரவே கூடாதுன்னு ப்ளான்!

இத உங்க பசங்க தான் என்கிட்ட ஓப்பனாகவே சொன்னாங்க!

நீங்க பரணிக்கிட்ட பேசினது எப்படியோ அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு!

அதனால என்கிட்ட வந்து, நீங்க ஏன் மாமா, ஜான்வி நிகிலோட சேர்த்து வச்சு இங்க கொண்டு வரப் பார்க்குறீங்க?

எங்கம்மா அவ இங்க வரக் கூடாதுன்னு இவ்வளவு பண்ணி இருக்காங்க.

நீங்க எல்லாத்தையும் இப்படி கெடுக்கப் பார்க்குறீங்க?

இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்கன்னு சொல்லி மிரட்டுறாங்க ஜகதீஸ்!” என்று நீளமாக பேசி போலிக் கண்ணீர் வடித்தான் சந்தீப்!

அவனுக்கு ஜக்தீசை தனிமைப்படுத்தி வைக்க  வேண்டும்!

ஒருத்தரை அடிமைப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்ய வேண்டியது, அவரை தனிமைப் படுத்த வேண்டும்! என்ற பார்முலாவைப் பயன்படுத்தினான் சந்தீப்!

ஊர்மி இவனோடு இருக்கும் வரை, தான் எது செய்தாலும் தடுத்துக் கொண்டே இருப்பாள், அவளின் மகன்களின் துணையைக் கொண்டு!

இப்போது புதிதாக அந்த மதராசிக் குடும்பம் வேறு இவளுக்கு பக்கபலமாய்!

கூடவே கூடாது என்ற முடிவோடு காய்களை நகர்த்தினான் அவன்!

அன்று மாலையே , ஊர்மி நேரிடையாகவே அவனிடம் சண்டையிட ஆரம்பிக்கவும், ஜன்னல் வழியே ஜகதீஸ் கார் வருவதைக் கண்டுவிட்டு, பிளேட்டை அப்படியே திருப்பியும் விட்டுவிட்டான்!

ஜகதீஸ் கோபமாக ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதை திருப்தியாக கண்டு சந்தோசமாக வெளியே சென்றான்.

ரொம்ப நேரம் கழித்தே வெளியே வந்த ஜகதீஸ் முன் இரண்டு பத்திரங்கள் போடப்பட்டன!

என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தவரிடம்,

“ரெலிங்க்விஸ்மென்ட் டீட் டாக்குமெண்ட்ஸ்(Relinquishment deed Documents) அதாவது துறப்பு பத்திரம்!

சட்டப்படியான எங்களோட சொத்து உரிமையை எல்லாம் ஜான்விக்கு விட்டுக் கொடுக்கும் பத்திரம்!” என்றான் சுசில்!

“அது பதிவு செய்த வருஷத்தையும் பாருங்க! சரியா எங்களுக்கு பதினெட்டு வயசில பண்ணியது!” என்றான் சுனில்!

“புரியல இல்ல? எங்கம்மா ஜான்விக்கு தான் உங்களோட எல்லா சொத்தும் கிடைக்கணும், அவங்க மட்டும் தான் உங்களுக்கு வாரிசா இருக்கணும்னு நினைச்சி, நாங்க மேஜரான வருசமே எழுதி வாங்கிட்ட பத்திரம் இது!

தொழில் முறையிலும் கூட அவங்களே தான் உங்களுக்கு வாரிசா இருக்கணும்னு தான் எங்க ரெண்டு பேத்தையும் டாக்டருக்கு படிக்க வைக்கவே இல்லை!

என்னடா இது? இந்த காலத்துல இப்படி கூட இருப்பாங்களான்னு நீங்களே கூட நினைக்கலாம்!

ஆனா அது தான் நிஜம்!

எங்கம்மா அவங்க விஜிம்மாவுக்கு செய்துட்டதா நினைக்கிற துரோகத்துக்கு பிராயச்சித்தமா நினைக்கிறாங்க இதை!

விஜிம்மா கிட்ட அவங்களுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியும் கூடவே!

இதெல்லாம் உங்களுக்கு எதுவுமே தெரியாது! சந்தீப் மாமா எத சொன்னாலும் நம்பிட்டு ஆடுற ஆள் தான் நீங்க!

அவர் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவீங்க!

ஆனா,  இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களுக்கு எங்கம்மாவை மட்டும்  புரியல!” உங்களுக்கு கசப்பாக சொன்னான் சுனில்!

பத்திரத்தைப் பார்த்து உச்சக் கட்ட அதிர்ச்சியில் இருந்த ஜகதீஸ், கொஞ்சம் நடப்புக்கு வந்து,

“அப்படியெல்லாம் இல்ல, ஊர்மியப்  பத்தி எனக்கு நல்லாவே தெரியும்! இருந்தாலும் அவ ஜான்வி விசயத்துல சித்தி மாதிரி நடந்துகிட்டளோன்னு தான் சந்தேகம்!” அவர் இழுத்தார்!

“ஜான்வியோட உயிரைக் காப்பத்த தான் அன்னிக்கு எங்கம்மா உங்க கூட கல்யாண மேடைக்கே வந்தாங்க அது தெரியுமா உங்களுக்கு?” கோபமாக கேட்டான் சுஷில்!

“டேய்.. என்னங்கடா, இப்படி ஷாக் மேல ஷாக்கா கொடுக்குறீங்க!” கிட்டத்தட்ட கத்திக் கொண்டு  எழுந்தே விட்டார் ஜகதீஸ்!

“ஆமா, எல்லாத்தையும் செஞ்சது சந்தீப் மாமா தான்!”

ஊர்மி, இத்தனை வருஷம் வாயைத் திறந்து  மனம் விட்டு பேசாதவள், இன்று தான் மனதை திறந்து, அவர்கள் கல்யாணம் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் நடந்தது, விஜி எப்படி விலகிப் போனாள் என்று எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

“விஜி தீதி இது எதையும் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லி என்கிட்ட வாக்கு வாங்கிட்டாங்க!” கண்ணீரைத் துடைத்தவாறே சொல்லி முடித்தாள்.

“விஜிம்மா அது மட்டும் செய்யல, அம்மாவை, அவங்க ஆசைப்பட்ட படி மேல இன்னும் படிக்க வச்சுருக்காங்க தெரியுமா?”

“என்ன உங்கம்மா படிச்சுருக்காளா?” ஜகதீஸ் ஆச்சர்யமுடன் கேட்க,

“ஆமா அதுவும் உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே!

விஜிம்மா அவங்கள படிக்க வச்சுருக்காங்க. அதுக்கப்புறமும், படிச்சாங்க அம்மா.

இப்ப அவங்க ஒரு பினான்சியல் கன்சல்டன்சி கம்பெனி நடத்திட்டு வர்றாங்க.

சில கம்பெனிகளுக்கு பன்ட் மேனேஜரா(Fund Manager) கூட இருந்திருக்காங்க!

யூ டுயுபில் அவங்க கம்பெனி பினான்சியல் அவேர்நெஸ் வீடியோ ரொம்ப பாப்புலர் தெரியுமா?

அதுவும் இல்லாம புட் டெலிவரி ஆப் ஒண்ணும் வச்சு, நிறைய ஹவுஸ் ஒய்ப்களுக்கு குக்கிங் ஆர்டர் கொடுத்து அவங்க வாழ்க்கைய மேம்படுத்திக் கிட்டு இருக்காங்க!

ஆனா இது எதுவுமே உங்களுக்கு தெரியாது!

உங்களுக்கு வீட்டில் என்ன நடக்குதுன்னும் தெரியாது!

வீட்டில் உள்ளவர்களை சுத்தி என்ன நடக்குதுன்னும் தெரியாது!

உங்கள சுத்தி என்ன நடக்குதுன்னும் தெரியாது!

ஆனா எல்லாமே உங்க இஷ்டம் போல நடக்கணும்! அது மட்டும் தான் உங்களுக்கு பிரதானம்!

ஜான்வி, பரணியை எவ்வளவு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கா?

அவளை அவர்கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு வந்து உங்க பக்கத்துல வச்சுக்கணும்னு நினைக்கிறீங்களே தவிர, அவ சந்தோசம் உங்களுக்கு முக்கியமா படவே இல்ல!

ஆனா அம்மாவுக்கு இருக்கு!

அவங்க விஜிம்மா இடத்தில் இருந்து யோசிச்சு தான் இந்த கல்யாணத்தை நடத்தியிருக்காங்க.

அதுவும் சும்மா இல்ல,  பரணிக் குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு தெரிஞ்ச பின்னாடி தான்!

இவ்வளவு சொன்ன பிறகும் நீங்க எங்கள நம்பலன்னா, நாங்க செய்யறதுக்கு ஒண்ணுமில்ல!” என்று முடித்தான் சுஷில்.

“டேய் இருடா, அப்படிஎல்லாம் ஒண்ணும் இல்ல, இப்ப பாரு!” என்று சொல்லி, சந்தீப்பை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டான் சுனில்!

போனை சந்தீப் எடுத்தவுடன், “மாமா, நீங்க என்ன பண்றீங்க, இங்க அப்பா, அம்மா கிட்ட கோவித்துக் கொண்டு, ரூமுக்குள்  இருந்து வெளியே வர மாட்டேங்கிறார்!

நீங்க ரெண்டு பேரும் என்ன தான் பண்றீங்க, அந்த ஜான்விய எப்ப தான் இங்க கொண்டு வரப்போறீங்க?”

“கொஞ்சம் பொறு கண்ணா, அதுக்குத் தானே நிகில் அவ கூடவே அங்க போயிருக்கான். வருவான் இரு!”

“எப்ப வர்றது அவன், இங்க அப்பாவுக்கு முடியலன்னு ஒரு போன் போட்டா வந்திட மாட்டாளா?

இவன் எதுக்கு அங்க போய் இப்படி உக்காந்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கான்?

லைன்ல இருங்க. அவனையும் கான் காலில் கூப்பிடறேன்” என்று சொன்னவன் நிகிலையும்  அந்த காலில் சேர்த்தான்.

“ஹாய் நிகில் எப்படி இருக்க?  மாமாவும் லைன்ல தான் இருக்கார்.

நீ இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்க, சட்டுன்னு கிளம்பி வர வேண்டியது தானே?”

“ம்ம். அவன் கவலை அவனுக்கு! என்னமோ காலத்துக்கும் அவளோட குடும்பம் நடத்த போறது மாதிரி, அவ இவனுக்கு ப்ரஷா வேணுமாம்.

அதனால அவளை பரணி கிட்ட நெருங்க விடாம காவல் காத்துட்டு இருக்கான் லூஸுப்பய!” போனில் சந்தீப் பேசி சிரிப்பதைக் கேட்டு இங்கு ஜகதீஸ்க்கு கோபம் தலைக்கேறியது.

அவரின் கையைப் பற்றி அடக்கினாள் ஊர்மி, உதட்டில் மேல் கை வைத்து அமைதியாக இருக்கும்படி சொல்லிக் கொண்டு!

அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“இல்ல இங்க ஊரில் திருவிழா, அது முடிஞ்சவுடன் தான் கிளம்ப முடியும்.

 இங்க எனக்கு ஜான்விய அந்த பரணி கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கிறதே பெரிய வேலையா இருக்கு!

பரணி என்னமோ விலகி தான் போறான்.

ஆனா இந்த ஜான்வி விட்டா தானே? அவளுக்கு தோதா இங்க அவளோட இந்த கிழவிங்க வேற எப்ப பாத்தாலும் ட்ரபுள் கொடுத்துட்டு!”

“அவங்க எப்படியோ இருக்கட்டுமேடா, அவளை இங்க கொண்டு வந்தப்புறம் அவள் உனக்கு தானே? அவளும் அவளோட கூடவே  சொத்தும்!

சொத்து கைக்கு வந்தப்புறம் நீயும் மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் பிரிச்சிக்க வேண்டியது தான்!

அதுக்கப்புறம் அவளை உன் அம்மா கவனிச்சுக்குவா நல்லா!” சொல்லி சிரித்தார் சந்தீப்!

“சரி நிகில் நீ சீக்கிரம் போன வேலையை கச்சிதமா முடிச்சுட்டு ஜான்வியோட திரும்பி வா. சரி மாமா  நான் போன் கட் பண்றேன்!” என்று சொல்லி போனை வைத்தான் சுனில்!

ஜகதீஸ் அதிர்ச்சியில் உறைந்து போய் தான் விட்டிருந்தார்!

அவர் வயதுக்கு, இப்படி ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளா?

வெறும் அதிர்ச்சிகள் அல்ல! அவர் தலையில் விழுந்த இடிகள்!

இங்கே மாமனார் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார் என்றால், அங்கு மருமகனின் நிலையும் அப்படியே!

ஆமாம். அங்கு பரணி வீட்டில், இங்கு யாருக்கு ஹிந்தி தெரியும் என்ற நினைப்பில், மித மிஞ்சிய தெனாவெட்டில், போனை ஸ்பீக்கரில்  போட்டுக் கொண்டு தலை வாரியப்படியே பேசிக் கொண்டிருந்தான் நிகில்.

ஆனால் பரணிக்கு தரை ரேஞ்சிற்கு, கெட்ட வார்த்தைகள் உட்பட நன்றாகவே ஹிந்தி தெரியும் என்பதை அவன் அறிந்திருக்க வில்லை!

பான் இந்தியா, முழுவதும் போய் பொருட்களை கொள்முதல் செய்கிறவன் பரணி! அவனுக்கு ஹிந்தி உட்பட நிறைய மொழிகள் தெரியும்!

அவனுக்கு மட்டுமில்லை பரத்திற்கும் ஹிந்தி தெரியும்!

கனகுவுக்கு பேசத் தெரியாது, ஆனால் ஹிந்தி புரியும்!

உபயம் – அவர் பார்க்கும் ஹிந்தி சீரியல்கள்!

அவன் அறைக்கு வேறு ஏதோ கேட்க வந்த பரணி, அறை வாயிலில் நின்று  இவை அனைத்தையும் கேட்டு விட்டு கடுங்கோபத்தில், அருகில்  இருந்த கம்பி போன்ற பொருளைத் தூக்கிக்கொண்டு அவனை அடிக்க முயன்ற போது அவனைத் தடுத்தன இரு வயதான பெண்ணின் கரங்கள்!

யார் அது? நம்ம கனகு தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!