உனக்கென இருப்பேன்-12
உனக்கென-12
காலையில் எவ்வளவு கண்விழிக்க முயன்றும் கோந்து போட்டு ஒட்டினாற்போல் இமைகள் இரண்டும் ஒட்டிக் கொண்டது .
உடல்சோர்வு ,உறக்கமின்மை எல்லாம் சேர்ந்து தலை கிறுகிறுத்தது ….மெல்ல தாக்குப்பிடித்து எழுந்தவள் தலைக்கு தண்ணீர் ஊற்றினால் சோர்வு நீங்குமென்று தலை குளித்தாள் .
Advertisement
தணிந்த நீர் கொஞ்சம் அவளை தணிய வைத்தது . தலைக்கு ஊற்றிய நீர் கொஞ்சம் மனக்கிலேசத்தை மட்டுப்படுத்தியது .
கிச்சனுக்குள் நுழைந்தவளுக்கு அப்போது தான் தெரிந்தது நேற்று நடந்த கூத்தில் இட்டலிக்கு ஊறவைக்கவே இல்லை . மாவு இல்லையே என்று யோசித்தவள் பொங்கல் செய்து சாம்பார் வைத்தாள் .
காபி போட்டு குடித்துவிட்டு மதிய உணவை தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டாள் .
Advertisement
ஆறரைக்கு மேல் ஆகிவிட்டது அஸ்வின் இன்னும் எழவில்லை என்னாச்சு ? வாக்கிங் போவாரே …தயக்கமாய் அறைக்கதவை திறந்து பார்த்தாள் . குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான் .
Advertisement
குழந்தை அழுதிருப்பான் போல …அது தான் இப்படியான சயனக்கோலம்.
ஒரு நிமிடம் அவள் மனம் பெருமை பட்டுக் கொண்டது .எவ்வளவு சிறந்த தகப்பன் இவன்! பெறாத பிள்ளையை இப்படி பூஜிக்கிறானே …!
இனிப்பு மாத்திரையின் மேல்பகுதி கரைந்து மெல்ல கசப்பு சுவை எட்டி பார்க்குமே ….அப்படி மறுநிமிடமே அவன் பற்றிய அருமை பெருமை கரைந்து அவன் காதல் கதை கண் முன் வந்தது .
Advertisement
மீண்டும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள் .
தியானுக் குட்டி என்னவோ தெரியல உங்கம்மா சரியில்லை …என்னனு கேட்போமா ? குழந்தையின் பிஞ்சு கரம் பற்றி தன் கன்னத்தை மென்மையாய் வருடிக் கொண்டான்.
பிஞ்சுக் குழந்தையின் தீண்டல் அவன் பாரத்தை எல்லாம் மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டிருந்தது. தியானு செல்லம் ச்சோ சஸ்வீட் ச்சோ சாஃட்…..குழந்தை கரம் பற்றி முத்தமிட்டான் . அன்றைய காலை பொழுதே இதமாய் தொடங்கியது .
இவ ஏன் இப்படி உர்ருன்னு திரியறா ?நாம ஏதாவது கேட்கப்போய் அவ மனசை காயப்படுத்திடுவோமோ ….வினோத் நினைவு அவளை அலைக்கழிக்கிறதோ என்னவோ ? தனக்குள் பேசிக் கொண்டான் . அவளை எண்ணி கவலையும் கொண்டான் .
“……………………”
வழக்கம் போல் ஷர்ட் அயன் பண்ணி வைத்திருந்தாள் .
காலை உணவு பரிமாறினாள் . மதிய உணவை எடுத்து டேபிளில் வைத்தாள். கடமையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தாள் . மருந்துக்கும் மகிழ்ச்சியின்றி நடமாடிக் கொண்டிருந்தாள். அவனை ஏறெடுத்து பார்க்கவேயில்லை .அவளின் உதாசீனம் கலந்த நடத்தை அவனை வெகுவாய் காயப்படுத்தியது.
அவள் மகிழ்ச்சியில் தான் அவன் ஜீவன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லையே….
நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று ஆணித்தரமாய் நம்பியவன் எதுவும் கேளாது ஆபிஸ் கிளம்பினான்.
வழக்கம் போல் பை கீர்த்தி ..பை செல்லம் என்று குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு போனான் .
அவள் பை சொல்லமாட்டாள் ஆனால் குழந்தையின் கரம் பற்றி தியானு சொல்வது போல் பை என்பாள் . அவள் அப்படி சொல்வது அஸ்வினுக்கு அவ்வளவு பிடிக்கும். இன்று அது மிஸ்ஸிங் . அஸ்வின் மனம் அதையும் குறித்துக் கொண்டது
ஆபிஸில் அவனுக்கு வேலையே ஓடவில்லை …ஏன் முகம் வாடி இருக்கிறாள் ? எதுவானாலும் சொன்னால் தானே தெரியும் ? அடிக்கடி இப்படி முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறாளே …அதே சிந்தனையில் தான் உழன்று கொண்டிருந்தான். அவளுக்கு நாம் நம்பிக்கை கொடுக்க தவறிவிட்டோமோ ?
நான் அவளை எந்த விஷயத்திலும் கட்டுப்படுத்தியதோ கட்டாயப்படுத்தியதோ இல்லையே …பிறகேன் இவ்வளவு வாட்டம் ? குமைந்து கொண்டிருந்தான் .
“…………..”
நேற்றிலிருந்து சாப்பிடாத வயிறு புரட்டியது .வெறும் வயிற்றில் காபி குடித்தது வேறு குமட்டலை அதிகப் படுத்தியது .
வயித்துக்கு ஆகாரம் கொடுப்போம் என்று ஒரு வாய் பொங்கலை எடுத்து வாயில் வைத்தாள் . நெய் வாசம் சேராமல் வாந்தியே வந்துவிட்டது .
எலுமிச்சை பிழிந்து உப்பு சர்க்கரை போட்டு குடித்த பின்னே சற்று ஆசுவாசம் ஆனாள் .
குழந்தை வேறு வயிறு நிறையாது அழுது கொண்டே இருந்தான் .வெறும் வயிறாய் கிடப்பவளுக்கு பால் எப்படி சுரக்கும் ?
குழந்தைக்கு பால் ஆற்றி கொடுத்துவிட்டு இட்டலிக்கு ஊரவைத்தாள்.
சற்று நேரத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது . தலை பாரம் தாளமுடியவில்லை,காய்ச்சல் வரும்போல் குளிரத் தொடங்கியது .
தைலம் தேய்த்துக் கொண்டு கம்பளியை போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.
குழந்தை மீண்டும் விசும்ப தொடங்கிவிட்டான் .குழந்தையை தூக்கி தேற்றுமளவிற்கு உடல் நிலையில்லை. பலவீனப்பட்டு கிடந்தவளுக்கு இயலாமையில் அழுகை வந்தது . மஞ்சுமாவிற்கு கால் பண்ணினாள் .
அவர் பதறி அடித்து ஓடிவந்தார் .
கீர்த்திமா என்னடா பண்ணுது ? பதட்டமாய் நெற்றியில் தொட்டு பார்த்தார். அனலாய் தகித்தது .
குளிருது மஞ்சுமா ….தலை வலிக்குது .ஏன் என்று தெரியாமலே அவளுக்கு அழுகை வந்தது .மேனி உதறல் கண்டது .
கழுத்து நெற்றி என்று அயோடக்ஸ் தேய்த்து விட்டவர் டோலோ 650 டேபிலேட் கொடுத்து படுக்க வைத்துவிட்டு கஞ்சி வைக்க சென்றுவிட்டார்.
கஞ்சி கொண்டு வந்தவர் அனத்திக் கொண்டிருந்தவளை தொட்டு எழுப்பினார். நெருப்பாய் கொதிக்க தொடங்கிவிட்டது உடம்பு .
பயந்து போனவர் அஸ்வினுக்கு அழைக்க ….அவன் நம்பர் நாட் ரீச்சபிள் . உடனே சரவணனுக்கு அழைத்து தகவல் சொன்னார் .
சார் …சார் …உங்க வைஃபுக்கு பீவராம் அம்மா கால் பண்ணினாங்க. உடனே உங்களை வர சொன்னாங்க .அரக்க பறக்க வந்து தகவல் சொன்னான் சரவணன் .
அவசரமாய் விடுப்பு சொல்லிவிட்டு ஓடினான் அஸ்வின் .
இரு போர்வை கொண்டு போர்த்தியும் நடுக்கம் நிற்கவில்லை. போர்வைக்கு மேல் சுட்டது.
குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொண்டே வாயிலை பார்த்துக் கொண்டிருந்தார் மஞ்சுளா .
கீர்த்தி …கீர்த்தி செருப்பை கூட கழட்டாமல் ஆவி துடிக்க உள்ளே நுழைந்தான் அஸ்வின் .
நிலைமையை புரிந்து கொண்டவன் மஞ்சுமா தியானுவை பார்த்துக்கோங்க ப்ளீஸ் என்றவன் அவளை அள்ளி எடுத்துக் கொண்டு வந்து காரில் கிடத்தினான்.
“……………….”
வைரல் பீவர் தான் .ரொம்ப ஷிவரிங்கா இருக்கு . இன்ஜெக்ஷன் போட்ட மருத்துவர் ட்ரிப்ஸ் போட வேண்டும் என்றார் .
மருத்துவமனையில் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது .
ரொம்ப வீக்கா இருக்காங்க ….மதர் பீட் பண்றவங்க இவ்வளவு அன் ஹெல்தியா இருக்காங்க! அவங்களை கொஞ்சம் கேர் பண்ணுங்க சார் என்றார் மருத்துவர் .
ம்ம்ம்ம்ம் என்றான் , வேறென்ன சொல்ல முடியும் ? பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருக்கிறான் அப்படியும் அவள் வீக்காக இருக்கிறாள் என்றால் அவன் என்ன செய்ய முடியும் ?
ட்ரிப்ஸ் முடிந்து மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு கிளம்பினார்க்ள் .
நடக்க தடுமாறியவளை தாங்கி பிடிக்க வந்தான் . அவன் கையில் சிக்காமல் தானே நடந்து வந்து காரில் ஏறிக் கொண்டாள் .
இடம் பொருள் உணர்ந்து அமைதியாகவே இருந்தான் .
இருவரும் பேசிக் கொள்ளவில்லை . வீடு வந்து சேர்ந்தார்கள் .
மஞ்சுளா குழந்தையை குளிப்பாட்டி உணவூட்டி தூங்க வைத்திருந்தார்.
இட்டலிக்கு மாவு அரைத்து வைத்துவிட்டு சாதமும் ரசமும் வைத்து அப்பளம் பொறித்துத் தயாராய் வைத்திருந்தார் .
மஞ்சுமா நன்றின்னு ஒரு வார்த்தையில் சொன்னா அது அபத்தமா இருக்கும் . எங்க ரெண்டு பேரோட அம்மா இருந்திருந்தா கூட இவ்வளவு அன்பா,அக்கறையா பார்த்துப்பாங்கன்னு சொல்ல முடியாது.நெகிழ்ந்து போனான் அஸ்வின்.
அஸ்வின் எனக்கு நீ வேற,சரவணன் வேற இல்லை . எப்போதும் சரவணன் சங்கீதாவுக்கு மூத்தவனா நான் பெறாத பிள்ளையா தான் உன்னை பார்க்கிறேன் .
சங்கீதா கல்யாணத்துக்கு நீ எவ்வளவு உதவி பண்ணியிருக்க …அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்ல . குழந்தை தூங்கும் போதே ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றார் .
அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள் கீர்த்தி.
அவ்வளவு நல்லவனா இவன் ? கசப்பான சிரிப்பு வந்தது .
அஸ்வின் டாக்டர் என்ன சொன்னாங்க? கவலையாய் கேட்டார் மஞ்சுளா.
இவளே காய்ச்சலை இழுத்து விட்டிருக்கா போல …வைரல் பீவரா இருக்கும்னு சொன்னாங்க . மூணு நாளைக்கு டேபிலட்ஸ் கொடுத்திருக்காங்க என்றான் .
காலையில் தலைக்கு குளிச்சிருக்கா …நேத்து உங்க வீட்டுல தயிர் சாதம் வேற சாப்பிட்டிருக்கா …. சொல் பேச்சு கேட்கிறதே இல்லை ! குற்றப்பத்திரிகையை நீட்டி முழக்கிக் கொண்டிருந்தான் .
அவ எப்போ எங்க வீட்டில் சாப்பிட்டா ?மஞ்சுளா புரியாமல் கேட்டார்.
ஒற்றை பார்வை அவளை கோபமாய் பார்த்தவன் அவரிடம் எதுவும் தோண்டி துருவாமல் அமைதியாகி விட்டான்.
கீர்த்தி சாப்பிட்டு மாத்திரை போடும்மா.அஸ்வின் பார்த்துக்கோப்பா …ஏதாவது வேணும்னா கூப்பிடுப்பா என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி போய் விட்டார் .
உணவு கொண்டு வந்து ஹாலில் வைத்தவன் கீர்த்தி வா சாப்பிடலாம் என்றான் .
மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு போய் கட்டிலில் சுருண்டு கொண்டாள் .
அஸ்வின் அறை கதவை தாழிட்டு அவளருகில் வந்தான்.இதுவரை அவர்கள் அறை கதவு தாழிடப்பட்டதே இல்லை .
சுருண்டு கிடந்தவள் விழுக்கென எழுந்தமர்ந்தாள் . அவன் பார்த்த பார்வையில் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் .
வீரியமான அவன் விழி வீச்சை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
இறுகிய முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தவன் அவளை துளைக்கும் பார்வை பார்த்தான் . காய்ச்சலில் கிடந்தவள் மேனி ஜன்னி கண்டது போல் நடுங்கத்தொடங்கி விட்டது .
