Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 30(1) by aruna kathir

அத்தியாயம் 30

பரணியும் திவ்யாவும் மைக்கல்சன் மேன்ஷனின் பின்பக்கம் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் நடந்தனர். இங்கேயும் பனிபொழிவு அரையடி அளவிற்கு இருந்ததால் மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேரமென்பதால் நடப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

“விக்டர் எப்படி பரணி இந்த மேன்ஷனுக்குள்ள சாதாரணமா வந்துட்டு போறான்? அதும் மெயின் கேட் வழியாவே? அவனுக்கும் இந்த மேன்ஷன் கூட ஏதாவது தொடர்பு இருக்கணும் பரணி?” என்று திட்டமாக திவ்யா கூறியதை ஒப்புக் கொண்ட பரணி, மேன்ஷனின் பின்பக்கம் வந்திருந்தான்.

இங்கிருந்து பார்த்தால் வீடு நடுமத்தியில் கட்டப்பட்டிருப்பதும் சுற்றிலும் 60, 70 அடிகளுக்கு செடிகளும் லானும் இருப்பதும் தெரிந்தது. பின்பக்கம் நீச்சல் குளம் போன்ற இடத்தின் மீது ப்ளாஸ்டிக் கொண்டு மூடப்பட்டிருந்தது. மேன்ஷனைச் சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டிருந்ததால் ஒருவேளை அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் ஏற்பட, வேலியைத் தொடாமல் சுற்றி வந்தனர் இருவரும்.



Advertisement

பெரும்பாலான இடங்களில் வேலித் தடுப்பும், சில இடங்களில் மரத்தடுப்புகளும் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டவர்கள், மரதடுப்பின் வழியாக உள்ளே செல்ல வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தனர். ஒரு இடத்தில், மரதடுப்பு பலகையில் கொஞ்சம் பலகை உடைந்து போயிருந்தது. கீழே ஏதாவது சிறிய விலங்கு பள்ளம் தோண்டியிருக்க வேண்டும். சற்றே சிரமத்துடன் தவழ்ந்து சென்றால் ஒரு ஆள் உள்ளே போய்விடலாம் என்று தோன்றியது.

பரணி உள்ளே போக எல்லா விதங்களையும் யோசித்துக் கொண்டிருக்க, திவ்யாவிற்கு அதீதமாக பயம் கவ்விக் கொண்டது. நாபியைத் தேடுவது முக்கியம் தான் என்ற போதும், தாங்களும் உள்ளே சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்று அச்சம் பிறந்தது.

“பரணி, நாம நேர வீட்டுக்கு போய் போலீஸ்கு இன்ஃபார்ம் பண்ணலாமா? இந்த மாதிரி விக்டர் இந்த வீட்டுக்குள்ள இருந்து வெளிய போறதைப் பார்த்தோம்னு. நம்மளை நம்பலைன்னா சிசிடிவி செக் பண்ண சொல்லலாம். நாமளே உள்ள போய் பார்க்கணுமா?” என்று தயக்கத்துடன் தான் கூறினாள் திவ்யா. அவளை உறுத்து பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் திரும்ப உள்ளே செல்ல முயற்சிகளை யோசித்துக் கொண்டிருக்க,

Advertisement

“பரணி எனக்கு புரியுது. நாபி காணாம போனது உன்னாலயோன்னு குற்ற உணர்வு உன்னை கொல்லுது. ஏதாவது செய்யணும்னு தோணிட்டே இருக்கு. எல்லாமே எனக்கு புரியுது. ஆனா…” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்க,

Advertisement

“புரியுதுல்ல. அப்ப அதைப் பத்தி மேல பேசாத. நான் சொல்லறபடி செய், நான் உள்ள போறேன். நீ வீட்டுக்கு போ, எனக்காக கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. அரை மணி நேரம் ஆகியும் நான் வரலைன்னா, வருண், யஷ்வந்த் கிட்ட சொல்லி போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணு. சரியா!” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பார்த்தான்.

அவன் சொன்னது திவ்யாவிற்கு ஏக கோபத்தைத் தூண்டியது. “என்னை மட்டும் ஏன் வீட்டுக்கு போக சொல்லற? நானும் உன் கூட தான் வருவேன். வா உள்ள போலாம்” என்று திவ்யா துணிந்து சொல்லிட,

“பைத்தியம் மாதிரி பேசாத! ரெண்டு பேர் கையிலையும் ஃபோன் இல்ல. நாம இங்க வந்ததும் வீட்டில யாருக்கும் தெரியாது. ஒருவேளை ஏதாவது பிரச்சனைன்னா, இன்னொருத்தர காப்பாத்தவாது ஒருத்தர் வெளிய இருக்கணும்ல. ப்ளீஸ் கோவப்படாம புரிஞ்சுக்கோ திவி” என்று ஆத்திரமாகப் பேச்சைத் துவங்கியவன், கெஞ்சுதலாகவே முடித்தான்.

Advertisement

“அப்போ நீ இரு, நான் உள்ள போய் பார்க்கறேன்” என்று திவ்யா எதிர்த்துப் பேச, அவளை கோபத்துடன் ஏறிட்டவன், “பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு? உள்ள என்ன இருக்கு? யாரு இருக்கா என்னன்னு தெரியாம, நான் போய் பார்க்கறேன்னு சொல்லற? உன்னை அப்படி உள்ள விட்டுட்டு என்னால எப்படி நிம்மதியா இங்க நிக்க முடியும் சொல்லு?” என்று கேட்க,

“அதே மாதிரி தானே எனக்கும் இருக்கும். உன்னை தனியா விட்டுட்டு என்னை போ போன்னு விரட்டுற!” என்று கண்களில் திரண்டிட்ட நீருடன் சற்றே கொஞ்சலாக அவள் சொல்ல, அவள் கைபற்றி இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான் பரணி.

இறுக்கமாக அவளை அணைத்தபடிக்கே, “எனக்கு புரியுதுடா பட்டு… ஆனா சென்சிபிளா யோசியேன். நான் சீக்கரம் போய் பார்த்துட்டு வந்துடறேன், சரியா. ப்ளீஸ். ஐ ப்ராமிஸ். ரிஸ்கியா எதுவும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் வீட்டை சுத்தி ஒரு ரவுண்ட் போயிட்டு உள்ள ஏதும் சத்தம் கேட்குதா, உள்ள போக வழி இருக்கான்னு பார்த்துட்டு வந்துடுவேன்” என்று அவள் பாசமும் அச்சமும் புரிந்து பேசினான்.

அவன் மார்பில் தலையைப் புதைத்த வண்ணம் திவ்யா சரியென்று தலையசைக்க, தலையில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு, சற்றே உடைந்து போயிருந்த மரப்பலகையை இன்னமும் உடைத்து, ஆள் நுழைய ஏதுவாக வழிசெய்து கொண்டிருக்க, அவர்கள் பின்னால் வெகுசமீபத்தில், சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது.

திவ்யாவும் பரணியும் திடுக்கிட்டுப் போய் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்ற, பெரிய மரதண்டின் பின்னால் இருந்து வேட்டை துப்பாக்கியை அவர்களை நோக்கி குறிபார்த்த வண்ணம் வெளிப்பட்டான் விக்டர் ஆலன்.

“ஹாய் மை லவ் பேர்டீஸ், வாட் ஆர் யூ டிக்கிங் ஹியர்? (இங்கே என்ன தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?)” என்று கேட்டுக் கொண்டே, துப்பாக்கியின் முனையை பரணியின் நெஞ்சுக்கு நேராக பிடித்தபடி வினவிய விக்டர் ஆலனின் முகத்தில் குரோதம் மின்னியது.

திவ்யா திடுக்கிட்டுப் போய் நின்றுவிட்டாள். பரணி இரு கைகளை அவன் நெஞ்சுக்கு நேரே உயர்த்திப் பிடித்துக் கொண்டான். “ஈஸி, ஈஸி விக்டர். வீ ஆர் ஹார்ம்லெஸ்” என்று சொல்லியவன், திவ்யாவைக் கடந்து அவளை மறைத்தவண்ணம் முன்னே பாதுகாப்பாக நின்று கொண்டான்.

விக்டரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவன் கண்களோ கைகளோ எந்த பதட்டத்தையும் காட்டவில்லை. கையில் தேநீர் கோப்பையைப் பிடித்திருப்பதைப் போல லாவகமாகவே துப்பாக்கியைப் பிடித்திருந்தான்.

“வேர் இஸ் நாபி-ஜூன் மை ஃப்ரெண்ட் விக்டர்? நாபி உயிரோட இருக்காளா? அவ எங்க?” என்று பயத்தை வெளியே காட்டிடாமல் விக்டரிடம் வினவலானான் பரணி. விக்டர் பதில் சொல்லவில்லை.

“வீ ஆர் ஹார்ம்லெஸ் விக்டர். நாங்க போலீஸ்கிட்ட எதுவும் சொல்லமாட்டோம். டிரஸ்ட் அஸ். வேர் இஸ் நாபி? அவளை மட்டும் திரும்ப ஒப்படைச்சிடு. வீ வோண்ட் ஹர்ட் யூ” என்று பரணி பேசிட, எந்தவித சலனமும் அதுவரையிலும் காட்டிடாத விக்டரின் கண்கள் சுருங்கி விரிந்தது.

அவன் உதட்டோரத்தில் சின்ன சிரிப்பு ஏளனமாக ஒட்டிக்கொள்ள, “நீங்க நாபிகிட்ட போகணுமா? நான் கூட்டிட்டு போறேன்” என்று ஆங்கிலத்தில் அலட்சியமாக சொல்லிய விக்டர், துப்பாக்கியின் பிடியை இறுக்கிக் கொண்டான். “மூவ்” என்று சொல்லி பரணி உடைத்திருந்த மரப்பலகையின் பக்கமாக கைகாட்ட, பரணி அதிர்ச்சியுடன் விக்டரையே பார்த்தான்.

“ஐ செட் மூவ்” என்று மீண்டுமாய் விக்டர் கூற, இம்முறை அவன் துப்பாக்கி முனை, திவ்யாவின் நெற்றியைக் குறிபார்த்திருந்தது. பேச்சற்றவனாக நின்று போன பரணிக்கு, விக்டர் சொல்வதைக் கேட்பது தவிர வேறு வழியில்லை என்று புரிந்தது. அவன் கையில் துப்பாக்கி இருக்க அங்கிருந்து தப்பித்து ஓடவும் முடியாது என்பது புலப்பட, திவ்யாவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே, மரப்பலகை இருந்த இடத்தில் குனிந்து மறுபக்கம் வெளிப்பட்டான்.

“யூ டூ! மூவ்” என்று திவ்யாவைப் பார்த்து கர்ஜிக்க, பயத்தில் அரண்டு போயிருந்த திவ்யா மறுபேச்சு இல்லாமல் பரணி சென்ற வழியே உள்ளே நுழைய, அவளைப் பின்தொடர்ந்து விக்டரும் அந்த வழியே மேன்ஷனின் தோட்டத்தினுள் வந்திருந்தான். அவன் பிடி துப்பாக்கியில் இருந்து நொடி நேரம் கூட இளகவில்லை.

“வாக் டு த வுட்டன் டோர்” என்று விக்டர் சொல்ல, அவன் சொல்படி அந்த மேன்ஷன் வீட்டின் பின்பக்கம் இருந்த சிறிய அவுட் ஹவுஸ் போன்ற வீட்டின் பக்கவாட்டு மரக்கதவைத் திறந்து பரணி முதலில் உள்ளே நுழைந்தான். நாள்பட பூட்டி வைத்திருந்த வீட்டில் ஒரு வாடை அவன் மூக்கைத் துளைத்தது. வீட்டினுள் ஜன்னல் திரைச்சீலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க, இருட்டாக இருந்தது. திரைச்சீலைகளின் பக்கவாட்டில் இருந்து வீட்டினுள் கசிந்த சொற்ப வெளிச்சத்தில் அது பழைய பொருட்கள் போட்டு வைக்க பயன்படும் அவுட்ஹவுஸ் என்பது தெரிந்தது.

உள்ளே நுழையவுமே, அங்கிருந்து தப்பிக்க வழி இருக்கிறதா என்று ஆராய்ந்த பரணியின் கண்கள், அந்த அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, வாயில் ப்ஸாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட நிலையில் கண்கள் மூடி சாய்ந்திருந்த உருவத்தைக் கண்டு அலறியே விட்டான். நாபி-ஜூன் அந்த நாற்காலியில் கந்தல் துணி போல சாய்த்து வைக்கப்பட்டிருந்தாள்.

“நாபி…” என்று அடிவயிற்றில் இருந்து எழுந்த கேவல் பரணியின் தொண்டையைக் கூட எட்டியிருக்கவில்லை. நாபியை பார்த்துக் கொண்டு அவன் நின்றிருந்த அந்த அரை நொடிப் பொழுதில், விக்டர் தன் கையில் பிடித்திருந்த நீண்ட வேட்டை துப்பாக்கியின் பின்பக்கக் கட்டையால் பரணியின் மண்டையில் பலமாகத் தாக்கியிருந்தான்.

“திவி…” என்ற அலறலுடன் கீழே சரிந்த பரணியை ஸ்தம்பித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா. ‘ஐயோ!’ என்று அலறக் கூட சக்தியற்றவளாய் நின்றுவிட, அவள் தலையிலும் துப்பாக்கியைக் கொண்டு தாக்கியிருந்தான் விக்டர்.

***

எத்துனை நேரம் மயக்கத்தில் இருந்தான் என்று நினைவே இருக்கவில்லை. பகலா, மாலையா, அடுத்த தினம் விடியல் பொழுதா என்று எதுவும் தெரியவில்லை. தலையின் ஓரத்தில் திட்டாகப் படிந்து போயிருந்த ரத்தம், முகத்தின் பக்கவாட்டில் வழிந்தோடி உறைந்து போயிருந்தது. தலையின் வின்னென்ற வலியினை விஞ்சும் அளவிற்கு கைகளும் கால்களும் அறுக்கப்படுவது போல வலியெடுக்க, சற்றே நினைவு வரப்பெற்ற பரணி முதலில் திவ்யாவைத் தான் தேடினான்.

அவன் வலது பக்கம் திவ்யா ஒருகளித்து கீழே சாய்ந்திருந்தாள். அவள் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்க, வாயில் பிளாஸ்திரி ஒட்டப்படிருந்தது. மெல்லமாக ஏறி இறங்கிய அவள் முதுகை கண்டதும் சற்றே ஆசுவாசம் அடைந்த பரணி, திவ்யாவைத் தாண்டி கண்களைச் சுழலவிட்டான். அந்த அறையின் நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நாபி-ஜூன் ரொம்பவும் கவலைக்கிடமாக இருந்தாள்.

மெல்ல மெல்ல ஏறி இறங்கிய அவள் நெஞ்சுக்கூடு மட்டும் அவள் உயிரோடு இருக்கிறாள் என்று காட்டியது. கண்கள் லேசாக கூட திறக்கப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே மிகவும் ஒல்லியான குட்டையான உடல்வாகு கொண்டிருந்த நாபி-ஜூன் அரை உடம்பாகிப் போயிருந்தாள்.

விக்டர் எங்கேனும் இருக்கிறானா என்று அறையை மெல்லத் துழாவிய பரணியின் கண்கள் நடுமத்தியில் போடப்பட்டிருந்த சோஃபாவில் நின்றிட, கால்களைப் பரத்திக் கொண்டு விட்டத்தைப் பார்த்து சிறிய குறட்டைவிட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் விக்டர் ஆலன். அவன் நெஞ்சின் மீது தூங்கிக் கொண்டிருந்தது அவன் வேட்டை துப்பாக்கி.

பரணி கிடந்த இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் தான் விக்டர் இருந்தான். மெல்ல சப்தம் எழுப்பாமல் நகர்ந்து அவன் பக்கமாக சென்றாலும், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கியை எப்படி அவனிடமிருந்து நகர்த்துவது என்று புரிபடாமல் போக, செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான் பரணி.

அவன் மனதில் பல நூறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. எங்கே போயிருக்கிறோம் என்று வருணுக்கோ, யஷ்வந்திற்கோ தெரியாது. இருவரது கைப்பேசியும் இவர்கள் வீட்டில் இவர்கள் இரவு படுத்திருந்த சோஃபாவின் மீது இருந்தது. எப்படி தொடர்பு கொள்வது என்று புரிபடவில்லை. இங்கிருந்து எப்படி தப்பிப்பது? இது தான் எங்கள் முடிவா? தன் வீட்டினரைப் பற்றி, அவன் அம்மாவைப் பற்றி எண்ணத் தோன்றியது.

சிறிய காய்ச்சல், தலைவலி என்று சொன்னாலே, “ஐயோ என் சாமிக்கு காச்சல் வந்துருச்சே! நல்லா சாப்பிடுறயா சாமி! நிறைய நேரம் வேலை செய்யாத, உடம்ப பார்த்துக்க கண்ணு” என்று புலம்பித் தள்ளும் அவன் அன்னையின் முகம் மனம் முழுக்க நிரம்ப வேதனை அளித்தது.

எதுவும் செய்ய இயலாமல் கட்டுண்டு கிடக்கும் தன் நிலையை விடவும், இரு பெண்களின் நிலைமையையும் எண்ணியவன், அங்கிருந்து தப்பிக்க என்ன வழி என்று தீவிரமாக யோசிக்கலானான். முதலில் கைக்கட்டை எப்படியாவது கழற்ற முடிகிறதா என்று பார்க்க வேண்டும். கயிறுகளாக இருந்தால் கூட கொஞ்சம் இளக்கம் கொடுக்கும். விக்டர் அனைவரின் கைகளையும் ப்ளாஸ்டிக் பட்டை டேப் கொண்டு பிணைத்திருந்தான். கத்திரி அல்லது கத்தி கொண்டு வெட்டினால் தவிர பிரித்து எடுக்க இயலாது.

அப்படியே பிரிக்க எத்தனிக்க பற்களாவது உபயோகப்படுத்த வேண்டும், வாயும் டேப்பால் ஒட்டப்பட்டிருக்க தன் கையாலாகாத நிலை அவன் கண்களை கலங்கத்தான் வைத்தது. எத்தனை நேரம் அப்படி படுத்திருந்தான் என்று தெரியவில்லை. அருகில் திவ்யாவின் ஈன முணங்கல் சப்தம் கேட்டு தான் கண்விழித்தான். திவ்யா கொஞ்சமாக இவன் போலவே எழுந்து சுவற்றில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்கள் மட்டுமே திறந்திருக்க, பரணியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னத்தில் ஈரம் காய்ந்து போய் கோடிட்டிருந்தது.

‘பயப்படாத திவி’ என்று கண்களாலேயே ஆறுதல் சொல்ல முற்பட்ட பரணி, பக்கவாட்டில் சோஃபாவை பார்க்க, அங்கே விக்டர் ஆலன் எழுந்து அமர்ந்திருந்தான். இடது கையில் பிடித்திருந்த சாண்ட்விட்சை பாதி வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தவன் வலது கை துப்பாக்கியைப் பிடித்த வண்ணமே இருந்தது.

பரணி கண்விழித்தது தெரிந்தும் உலகில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாதவனாக தன் சாண்ட்விட்சை விழுங்குவதிலேயே குறியாக இருந்தான் விக்டர் ஆலன்.

‘இவனுக்கு என்ன வேண்டும்? நாபியை ஏன் கடத்தினான்? எங்களை ஏன் கடத்தினான்? என்ன எதிர்பார்க்கிறான். பணமா அல்லது சில அமெரிக்க பைத்தியங்கள் போல இவன் சீரியல் கில்லரா? நாபியைக் கடத்தி ஐந்து நாட்கள் கழித்தும் உயிருடன் வைத்திருக்க காரணம் என்ன?’ இப்படி பலவாறான கேள்விகள் பரணியை அலைகழிக்க, எதையும் கேட்க முடியாமல், அடுத்து விக்டர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற பயத்திலேயே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் விக்டர் உண்டு முடித்து, புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டு அருகே வைத்திருந்த பாதி காலியான மது புட்டியின் மீத சரக்கை மடமடவென தண்ணீர் போல அருந்திட, பரணி, “ம்ம்ம் ம்ம்ம்” என்று கண்களால் சைகை காட்டினான்.

“வாட்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரணியின் அருகே வந்து நின்ற விக்டர், “யூ வாண்ட் சே சம்திங்?” என்று கேட்டு பரணி சற்றும் எதிர்பாராத சமயம் அவன் வயிற்றில் தன் ஷு காலால் எத்தினான். உயிர் போகும் அளவுக்கு வலியெடுத்தது. சாய்வாக அமர்ந்திருந்த வாக்கிலேயே கீழே சுருண்ட பரணி, விடாமல், “ம்ம்ம் ம்ம்ம்” என்று சைகை காட்ட,

“வாட்?” என்று இம்முறையும் கர்ஜனையுடன் அருகே வந்தவன், பரணியின் வாய் பிளாஸ்திரியை மெல்லமாக நீக்கினான். “சப்தம் வந்துச்சு, நிமிஷத்துல உயிர் போயிடும்” என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே தான் பிளாஸ்திரியை நீக்கினான்.

“ப்ளீஸ், எங்களை விட்டுடு. எங்களை எதுக்கு பிடிச்சு வச்சிருக்க. வாட் யூ வாண்ட். எங்ககிட்ட எந்த காசும் இல்லை. லீவ் அஸ்” என்று கரகரவென்று அடைத்துப் போன தொண்டையில் இருந்து மெதுவாகவே பேசினான் பரணி. அவன் பேச்சு விக்டரின் மனதை மாற்றிடாது என்று அவனுக்கும் தெரியும் தான். பல சினிமாவில் தான் கண்டது போல, கடத்தல்காரனைப் பேச வைத்தால் சற்றே காலதாமதம் செய்யலாம் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் அவன் மனதில் அப்போது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!