Skip to content
Post Views: 2,480
அத்தியாயம் 29
“திவி, இந்த விக்டர் ஆலன் வீடு, டிரெண்ட் வீடு, மைக்கல்சன் மேன்ஷன் இது மூணையுமே தேடணும். மேன்ஷன்ல ஆளுங்க யாரும் இல்ல. மத்த ரெண்டு வீட்டுலையும் சும்மா பேச்சு குடுக்கற மாதிரி பேசப் போலாமா?”
“போலாம் பரணி. ஆனா, அவங்க போலீஸ் வந்தப்போவே கவனிச்சேல, வீட்டுக்குள்ள இருந்து கதவு தடுப்பைக் கூட திறக்கலை. டிரெண்ட் தம்பதி வயசானவங்க, அவங்களுக்கு கொரோனா பத்தின பயம் அதிகமா இருக்கும். சோ, நம்மளை வீட்டுக்குள்ள விடமாட்டாங்கன்னு நினைக்கறேன்.” என்றாள் திவ்யா. பரணியும் அதை ஆமோதித்தான்.
“விக்டர் ஆலன் கூட, பத்தடி தள்ளி நின்னு தான் பதில் சொன்னான். கொரோனா பயம் எல்லாருக்குமே இருக்கு. சோ, நேரடியா அவங்க வீட்டுல பேச போனாலும், கதவுக்கு வெளிய நின்னு தான் பேசற மாதிரி இருக்கும் பரணி” என்றாள்.
Advertisement
“கரெக்ட், நேர்ல போயி அவங்க வீட்டை சோதனை போட்டு பார்க்கணும்னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்கள்ல திவி. சோ என்ன பண்ணலாம்?” என்றான் பரணி.
“அவங்க இல்லாத நேரம், அவங்க வீட்டுக்குள்ள புகுந்து பார்த்தா தான் ஆச்சு. ஆனா, அதுக்கும் வாய்ப்பில்ல பரணி. கொரோனாவால யாருமே வீட்டை விட்டு வெளிய போறதில்ல, சோ, வீட்டுலையே இருக்கப்போ எப்படி அவங்க இல்லாத நேரம் போக முடியும்?” என்று திவ்யா சொன்னதை அசைபோட்ட வண்ணம் அமர்ந்திருந்த பரணி,
“உள்ள போகாட்டியும், ஏதாவது சத்தம் கேட்குதான்னாவது பார்க்கலாமா?” என்று பரிதவிப்பாக அவன் கேட்க, எதுவும் செய்யாமல் காவலர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பர் என்று அமர்ந்திருப்பது பரணிக்கு எத்தனை மனவருத்தத்தைக் கொடுக்கிறது என்று புரிந்தது.
Advertisement
“சரி, வா போலாம்” என்று போர்வையை சுருட்டிக் கொண்டு அவள் எழுந்து அமர, “இப்போவா?” என்று கேட்டான் பரணி.
Advertisement
“ஆமா, இப்போ தான். அவங்க வீட்டை வெளிய நின்னு ஒட்டு கேட்கணும்னா நாம நைட் போனா தான் உண்டு. காலையில போய் அவங்க வீட்டு வாசல்ல காதை வச்சு உள்ள என்ன நடக்குதுன்னா தெரிஞ்சுக்க முடியும்?” என்று திவ்யா சின்ன சிரிப்புடன் கேட்க, “போலாம்” என்று பரணியும் தயாரானான்.
இவர்கள் வீட்டில் யஷ்வந்தும், வருணும் உறங்கச் சென்றிருக்க, பனியில் நடக்க ஏதுவாக செருப்புகள் அணிந்து கொண்டு பத்து நிமிடத்தில் இருவரும் வெளிப்பட்டனர். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
“மொதல்ல டிரெண்ட் தாத்தா பாட்டி வீட்டைப் பார்க்கலாம். மேன்ஷன் வாசல்ல செக்யூரிட்டி கேமரா இருக்கு. சோ, மேன்ஷன்ல தேடறது சிரமம். அதுவுமில்லாம மேன்ஷன் வீடியோ கேமராவை போலீஸ் ஏற்கனவே செக் பண்ணியிருப்பாங்க. ஏதாவது தப்பா, சந்தேகம் வர்ற மாதிரி தோணியிருந்தா அவங்களே மேன்ஷனைத் தேடியிருப்பாங்க. சோ, இப்போதைக்கு டிரெண்ட் வீடும், விக்டர் வீடும் மொதல்ல பார்க்கலாம் வா.” என்று பரணி நாலா விஷயங்களையும் யோசித்து சட்டென முடிவெடுத்திருந்தது திவ்யாவிற்கு ரொம்பவும் பிடித்தது.
Advertisement
அவன் சொன்னது படியே முதலில் டிரெண்ட் தம்பதியினரின் வீட்டை நோக்கி நடந்தனர். இவர்கள் வீடு தான் அந்த வீதியின் இறுதியில் இருந்தது. சாலையின் வலது பக்கம் இவர்கள் வீட்டையும் சேர்த்து மொத்தம் மூன்று வீடுகள், இடது பக்கம் மூன்று வீடுகளின் இடத்தையும் சேர்த்து கட்டப்பட்டிருந்த மைக்கல்சன்ஸ் மேன்ஷன்.
வெளியே மெல்லிய பனி பொழிந்து கொண்டிருந்தது. சாலையில் மின்விளக்கு இருந்த இடத்தில் மட்டுமே பத்தடிக்கு வெளிச்சம். சாலையில் நடந்தால், எதிர்பக்க மேன்ஷன் சிசிடிவி கேமராவில் விழுக்கூடும் என்று எண்ணிய பரணி, வீட்டின் பின்பக்கம் காடுகள் இருந்த பகுதி வழியாகவே செல்ல எண்ணினான். இலைகள் சிறியதாய் துளிர்க்கத் துவங்கியிருந்த குச்சி மரங்களின் ஊடே ஓரடிக்கும் குறையாத உயரத்தில் பனி கொட்டிக் கிடந்தது. கையோடு கொண்டு வந்திருந்த சிறிய டார்ச் ஒளியில் மெல்ல மெல்ல நடந்தனர் இருவரும்.
விழுந்துவிடாமல் இருக்க ஸ்பைக் முட்கள் வைத்த ஸ்னோ ஷுஸ் அணிந்திருந்த போதிலும், பரணியின் கைகளை பிடித்துக் கொண்டு தான் திவ்யா நடந்தாள். இவர்கள் வீட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில் முதலில் விக்டர் ஆலனின் வீடு வந்தது. வீட்டில் சிறிய வெளிச்சம் கூட இல்லை. உள்ளே விக்டர் இருக்கிறானா, இல்லையா என்று கண்டுகொள்ள இயலவில்லை. அந்த வீட்டைக் கடந்து மேலும் நூறு அடிகள் சென்ற பின்னரே டிரெண்ட் தம்பதியினரின் வீட்டின் பின்பக்கம் தென்பட்டது.
கீழ் தளம் கும்மிருட்டாகவே இருக்க, மேல் தளத்தின் ஒரு அறையில் மிக மெல்லிய நீல நிற வெளிச்சம் ஜன்னல் திரை சீலைகளின் ஊடே கசிந்தது. “நைட் லேம்பா இருக்கும்” என்று முணுமுணுத்த பரணி, அந்த வீட்டை மெல்ல சுற்றி வர எண்ணி நோட்டம் விட்டபோது, வீட்டின் பின்பக்க கதவுகளின் மேல் அந்த மோஷன் சென்சார் (ஆள் நடமாட்டம் இருந்தால் சப்தம் எழுப்பும் கருவி) பொருத்தப்பட்டிருந்ததை திவ்யாவிற்குக் காட்டினான்.
“மோஷன் சென்சார் இருக்கு. நாம் கொஞ்சம் கிட்ட போனாலும் அலாரம் அடிக்குமோ என்னவோ?” என்று சொன்ன பரணி, மெல்ல பக்கவாட்டிலேயே சற்று நடந்தான். டிரெண்ட் தம்பதியினர் மீது சந்தேகம் கொள்ளும் அளவிற்கு எந்த காரணமும் இல்லையென்பதால் வீட்டினுள் சென்று தேட வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவு குறைந்திருந்தது.
70 வயதைக் கடந்த தம்பதியினரால் நாபிக்கு எந்த கேடும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று உள்ளுணர்வு சொல்ல, திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காட்டு வழியாகவே திரும்பினான். டிரெண்ட் வீட்டிற்கும், இவர்கள் வீட்டிற்கும் இடையில் இருந்த விக்டர் ஆலனின் வீடு இப்போதும் கும்மிருட்டில் மூழ்கியிருக்க, வீட்டைச் சுற்றிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறதா என்று முதலில் கவனித்து, சிசிடிவி இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு மெல்ல வீட்டின் சமீபத்தை எட்டினர்.
வீட்டில் பின்பக்க கதவின் அருகே இருந்த சிறிய வெராண்டாவில் ஒரு பழைய மரநாற்காலி போடப்பட்டிருக்க, ஒரு மூலையில் காலையில் விக்டர் நெருப்பூட்ட வெட்டி வைத்திருந்த மரக்கட்டைகள் குவிந்திருந்தன.
நாற்காலியின் அருகே இருந்த ஜன்னலின் வழியே உள்ளே நோட்டம் விடத் துவங்கினான் பரணி. இருட்டு கண்களுக்குப் பழக சில நேரம் ஆனது. சமையல் மேடையும் அதில் சில பாத்திரங்களும் தென்பட்டன். டிரெண்ட் வீட்டைப் போன்று இரண்டு அடுக்கு வீடாக இல்லாமல், கீழ் தளம் மட்டுமே கொண்ட வீடாகவே இருந்தது. முன்னறை, சமையல் அறை அத்தோடு ஒரு படுக்கை அறையும் இருப்பதாகத் தோன்றியது. வீட்டினை ஒரு முறை சுற்றி வந்தனர் இருவரும். இங்கேயும் சிறிய சப்தம் கூடக் கேட்கவில்லை.
“போலாமா பரணி.” என்று மெல்லமாக திவ்யா கேட்க, பரணியும் சம்மதித்து விக்டரின் வீட்டில் இருந்து வெளிவர இருக்க, அவன் கால் இடறி பின்பக்கம் போடப்பட்டிருந்த நாற்காலி சட்டென சாய்ந்தது. சாய்ந்த வேகத்தில் பின்னால் போடப்பட்டிருந்த மரக்கட்டை குவியலின் மேல் விழ, அங்கிருந்து சில கட்டைகள் சரிந்து பெரியதாய் சப்தம் எழுப்ப, அதனருகே நின்றிருந்த பரணியும் திவ்யாவில் திடுக்கிட்டுப் போயினர். அங்கிருந்து வேக வேகமாக வெளியேறலாம் என்று எண்ணும் சமயம், விக்டர் ஆலனின் வீட்டில் இருந்து விளக்கு எரிய, பரணி, திவ்யாவை இழுத்துக் கொண்டு இவர்கள் வீட்டின் சமீபம் செல்லும் பாதையில் நின்ற பெரிய மரத்தண்டின் பின்னால் மறைந்து கொண்டான்.
திவ்யாவையும் தன்னுடன் இறுக்கிக் கொண்டு, மெல்லமாய் மரத்தின் பின்னாலிருந்து எட்டிப் பார்க்க, விக்டர் ஆலன் வீட்டின் கதவின் முன், ஒரு கையில் டார்ச் விளக்குடனும், ஒரு கையில் பெரிய நீண்ட வேட்டையாடும் துப்பாக்கியுடனும் நின்றிருந்தான்.
***
துப்பாக்கியைக் காணாவும் உடல் வெடவெடுக்கத் துவங்கியது திவ்யாவிற்கு. “பரணி, துப்பாக்கி!” என்று கிசுகிசுப்பான குரலில் திவ்யா கேட்க, பரணி அவள் உதட்டில் கைவைத்து மூடினான். விக்டர் ஆலன் தன் வீட்டின் பின் கதவின் அருகே நின்றபடிக்கு நோட்டம் விடுவது தெரிந்தது. கீழே விழுந்திருந்த நாற்காலியையும், சரிந்து கிடந்த மரக்கட்டைகளையும் பார்த்தவன், டார்ச் வெளிச்சத்தை மரங்களை நோக்கி வீசினான். டார்ச் ஒளி, இவர்கள் நின்றிருந்த மரத்தின் சமீபம் வரும் நேரம், விக்டர் ஆலனின் பக்கவாட்டில் சிறிய புதரின் அருகே சலசலப்பு சப்தம் அதிகமாகக் கேட்க, அவன் கவனம் புதரின் பக்கம் திரும்பியது.
இந்த தருணத்தை தனதாக்கிக் கொண்டு பரணி, திவ்யாவுடன் இவர்கள் வீட்டின் சமீபம் நோக்கி மரங்களின் பின்னூடே ஒளிந்து கொண்டு நடந்து, மற்றொரு பெரிய மரத்தின் பின்னால் நின்று விக்டர் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட்டான்.
புதரினை அடைந்திருந்த விக்டர், துப்பாக்கியினை லாவகமாக ஒரு கையில் மாற்றிப் பிடித்து, புதரினை விலக்க, அங்கே ரக்கூன் என்று அழைக்கப்படும் சிறிய விலங்கு நின்றிருந்தது. “யு நாஸ்டி டெவில்ஸ்” என்று சொல்லிக் கொண்டே ரக்கூனை விரட்டிய விக்டர் ஆலன், திரும்பவும் டார்ச் வெளிச்சத்தினை மரங்களை நோக்கித் திருப்பி ஆராய்ந்துவிட்டு மெல்ல வீட்டினுள் சென்றான்.
அவன் சென்று சில நேரம் கழித்தே மரத்தின் பின்னால் இருந்து வெளிப்பட்டனர் இருவரும். எதுவும் பேசாமல், அவசர அவசரமாக தங்கள் வீட்டினுள் நுழைந்து ஹாலில் சோஃபாவில் தொம்மென அயர்ந்து போய் அமர்ந்த பின் தான் இருவருக்கும் சீரான மூச்சே வந்தது.
பரணி எழுந்து சென்று குளிர்ந்த நீர் கொண்டு வந்து திவ்யாவிற்குக் கொடுத்துவிட்டுத் தானும் குடித்து இளைப்பாறினான். சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, “பரணி, என்ன இந்த விக்டர் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்கான். எனக்கு உயிரே போயிருச்சு ஒரு நிமிஷம்” என்று அயர்ச்சியாக பரணியின் தோளில் சாய்ந்து கொண்டு கூறினாள்.
பரணிக்கு இன்னமும் படபடப்பு குறையவில்லை. “சாரி, திவி, ரொம்ப சாரி டீ. உன்னையும் சேர்த்து ஆபத்தான இடத்துல நிக்க வச்சுட்டேன். சாரிடீ” என்று பரணி சொல்லவும், இம்முறை திவ்யா அமைதியாகவே இருந்தாள்.
இந்த இருளில் பரணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தாங்களாகவே சென்றிருக்கக் கூடாது என்று இப்போது உறைத்தது. “நல்ல வேளை அந்த ரக்கூன் வந்து காப்பாத்துச்சு” என்று திவ்யா சொல்ல, பரணி ஆமோதித்தான்.
“வெர்மெளண்ட்ல கன் வச்சிருக்கறது லீகல் தான். ப்ராப்பர் டிரெயினிங் இருக்கணும் இல்லைன்னா மிலிட்டரி, நேஷனல் கார்ட்ல மெம்பரா இருக்கணும். அவ்வளோ தான்.”
“இந்த விக்டர் ஆலனைப் பார்த்தா அப்படி படிச்சு நல்ல வேலையில இருந்தவன் மாதிரி தெரியலையே.” என்று திவ்யா கேட்க,
“படிச்சவனா இல்லையான்னு பார்த்தா எப்படி தெரியும். இதே இந்தியாவுலன்னா, நல்லா இங்கிலீஷ் பேசினாலே அவன் படிச்சவன்னு சொல்லிடுவோம். இங்கே அவங்க தாய்மொழியே அதான். சோ, எல்லாருமே நல்லா படிச்சவங்களா என்ன? அவன் என்னவா இருந்தான்னு யாருக்கு தெரியும்?”
“அதும் சரி தான், ஏதோ நல்ல நேரத்துல விநாயகர், அந்த ரக்கூன் ரூபத்தில வந்து நம்மளை காப்பாத்திட்டாரு” என்று திவ்யா தீவிரமாக மொழிய, அவள் சொன்னது அந்த நேரத்தில் அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.
‘விநாயர் யானை ரூபத்தில வந்து வள்ளியை முருகன் கூட சேர்த்து வச்ச மாதிரி, இப்போ ரக்கூன் ரூபத்தில வந்து உன்னையும் என்னையும் விக்டர்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்காராக்கும்?” என்று சின்ன சிரிப்புடன் பரணி கேட்க, திவ்யா, “கிண்டல் பண்ணாத, சாமி கண்ண குத்திரும்” என்று சொல்லிக் கொண்டே அவன் மார்பில் பலமாக குத்திவிட்டு அங்கேயே சாய்ந்தும் கொண்டாள்.
அப்படியே இருவரும் சோஃபாவில் அமர்ந்திருந்த வண்ணமே ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அமர்ந்த வாக்கிலேயே உறங்கத் துவங்கியிருக்க, அந்த இரவு மெல்ல மெல்ல பகலை நோக்கி நகரத் துவங்கியிருந்தது.
***
அதிகாலை ஆறு மணி போல, திவ்யாவிற்கு முதலில் உறக்கம் கலைந்தது. மெல்ல கண்களைத் திறந்தவளுக்கு முன் தின நிகழ்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவில் எழ, பக்கவாட்டில் சோஃபாவில் சாய்ந்து, டீபாயின் மீது கால் நீட்டி படுத்திருந்த பரணியை ஏறிட்டாள். அவன் முகம் அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, எங்கே தான் அசைந்தால் அவன் எழுந்து கொள்வானோ என்று எண்ணி, எழுந்துகொள்ள மனமில்லாமல் அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும், அதற்கு மேல் அவளால் விழிப்புடன் அப்படியே படுத்திருக்க இயலவில்லை. மெல்ல அவனை அசைக்காமல் எழுந்து கொள்ளலாம் என அவள் திரும்ப, பரணியின் தூக்கம் கலைந்து போனது.
“குட்மார்னிங்க்” என்று மெல்லமாய் சின்ன சிரிப்புடன் சொன்னவன், “டைம் என்ன?” என்று வினவினான்.
“ஆறு ஆகப் போகுது.” என்ற திவ்யா, “காபி வேணுமா?” என்று கேட்க, பரணி முழுவதுமாய் சோஃபாவில் இருந்து எழுந்து கொண்டு, “நான் கலந்துக்கறேன்” என்று சொல்லி அவள் தலையை சினேகமாய் கலைத்துவிட்டுச் சென்றான்.
திவ்யா எழுந்து வீட்டின் வாசலிற்கு வந்தாள். குளிருக்கு இதமாக போர்வையை தன்னுடன் இறுக்கி கொண்டவள், அங்கிருந்த மர சோஃபாவில் அமர, பக்கவாட்டில் எங்கிருந்தோ, “ட்ர்ர் ட்ர்ர்” என்று தரையில் தகரம் இழுக்கப்படும் சப்தம் கேட்டது. கொரோனா காரணத்தினால், பனிக்காலத்தில் அதிகாலையில் பனியை விலக்க பயன்படுத்தப்படும் இயந்திரம் கூட சில மாதங்களாகவே வருவதில்லை.
அவரவர் கேரஜ்களின் முன்னால் குவிந்திருந்த பனிப் பொழிவை தாங்களாகவே தான் சுத்தம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படியிருக்க, எங்கிருந்து ட்ர்ர் ட்ர்ர் சப்தம் கேட்கிறது என்ற யோசனையுடன், தங்கள் வீட்டில் இருந்து மெல்ல வெளியே சாலையின் சமீபத்தை அடைந்து நோட்டம் விட்டாள் திவ்யா. முன் தின நிகழ்வின் நீட்சியாக, விக்டர் ஆலன் வீட்டின் பக்கம் தன்னிச்சையாக அவள் கால்கள் நடக்க, அவள் எதிர்பார்த்தபடிக்கே, விக்டர் ஆலன் சாலையின் நடுவே முன்பக்கம் சக்கரங்கள் கொண்ட தள்ளும் டிராலியை இழுத்துச் சென்றுகொண்டிருந்தான்.
“இந்த நேரத்தில எதுக்கு ட்ராலி தூக்கிட்டு போறான்” என்று எண்ணிக் கொண்டே திவ்யா நின்றிருக்க, இவளைத் தேடிக் கொண்டு கையில் காபி கோப்பையுடன் அங்கே சமீபித்திருந்தான் பரணி. “இங்க இருக்கியா? இந்தா காபி” என்று சொல்லி கோப்பையை நீட்டியவன், திவ்யாவின் முக பாவனையைக் கண்டு அந்த திக்கில் கூர்ந்து நோக்கினான்.
“விக்டர் தள்ளுவண்டிய இழுத்துட்டு போறான் போல. வா நாம உள்ள போலாம்” என்று பரணி சொன்னதைக் கேட்காமல், மெல்ல விக்டர் ஆலனின் வீடு நோக்கி நகர்ந்தாள் திவ்யா. அவள் பின்னூடே பரணியும் செல்லலானான்.
விக்டர் தன் வீட்டின் பக்கவாட்டை நோக்கித் தான் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தான். இவர்களை தூரத்தில் காணவும் சினேகமாகக் கையசைத்தவன், “குட்மார்னிங், டேகிங் சம் வுட்ஸ் ஃபார் ஃபையர்” என்று சொல்லிவிட்டு தாமதிக்காமல் அவனது வீட்டை நோக்கி வண்டியை இழுத்துச் சென்றான். முன் தினம் துப்பாக்கியுடன் நின்றிருந்த விக்டரின் நினைவு திவ்யாவிற்கு எழுந்தது. முன்தினம் பார்த்த முகத்திற்கும், இந்த முகத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதது போலவும் தோன்றியது. ஏதோ ஒன்று உறுத்தலாகவே இருந்தது.
“போலாம் திவி” என்று பரணி அவள் தோளைத் தொட்டு, அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் வீட்டை அடைந்தான். திவ்யா திரும்பத் திரும்ப விக்டர் ஆலனின் வீட்டையே பார்த்துக் கொண்டு நடந்தவள், இவர்கள் வீட்டின் கதவை அடைந்ததும், உள்ளே வராமல் ஏதோ யோசனையுடன் அங்கேயே நின்று போனாள். அவள் முகம் உறைந்து போனதைப் போல ஆகிவிட்டிருந்தது.
“திவி என்னாச்சு?” என்று கேட்ட பரணிக்கும் எந்த பதிலும் சொல்லாமல், ஏதோ யோசனையிலேயே ஆழ்ந்திருந்தவள், திடுமென பரணியிடம் திரும்பி, “விக்டர் இப்போ என்ன சொன்னான் பரணி. திரும்ப சொல்லு” என்று விசித்திரமாக வினவினாள்.
அவன் என்ன சொன்னான், “எரிக்கறதுக்கு மரக்கட்டை எடுத்துட்டு போறதா சொன்னான்.” என்று இயல்பாக பரணி கூற, திவ்யா பரபரப்பானாள்.
“பரணி, பரணி உனக்கு புரியலையா? நேத்து நைட் நாம அவன் வீட்டு பின்னாடி வாசல்ல அவ்வளோ மரக்கட்டை குவிச்சு வச்சிருந்ததை பார்த்தோமே! உன் கால் சேரை தட்டி கீழ விழுந்தப்போ, மரக்கட்டை கூட சரிஞ்சுதே. அவ்வளோ மரகட்டையும் ஒரே நாள்ல அவன் எப்படி எரிச்சிருக்க முடியும் பரணி. என்னவோ தப்பா இல்லையா? விடிஞ்சும் விடியாம இவன் மரக்கட்டை வேணும்னு எதுக்காக வண்டிய தள்ளிட்டு நிக்கறான்?” என்று திவ்யா கேட்க, பரணி ஒரு நொடி ஸ்தம்பித்து தான் போனான்.
அவனுக்கும் இப்போது தெளிவாக நினைவு எழுந்தது. நாற்காலி பட்டு, மரக்கட்டைகள் சிலது கீழே விழும் சப்தம் கேட்டுத் தான் விக்டர் வெளியே வந்ததே! திவ்யா சொல்வதை வைத்துப் பார்த்தால், ஒரே இரவுக்குள் அத்தனை மரக்கட்டைகளையும் எரித்து முடித்திருக்க முடியாது தான்.
இதை யோசித்துக் கொண்டே விக்டர் ஆலனின் வீட்டைப் பார்த்த வண்ணம் ரோட்டில் நின்றவர்கள், எதிர்சாரியில் மெல்லமாக அடைந்து கொண்டிருந்த மேன்ஷனின் ஆட்டோமேடிக் கதவினை ஏறிட்டனர். “விக்டர் இப்போ மைக்கல்சன்ஸ் மேன்ஷன்ல இருந்தா வெளிய வந்தான்? மேன்ஷன் பூட்டியிருக்கு, யாரும் உள்ள இல்லைன்னு போலீஸ் சொன்னாங்களே” என்று கேட்டுக் கொண்டே மேன்ஷனை நோக்கி நடந்தனர்.
இதற்குள் விக்டர் தன் வீட்டின் பின்பக்கம் வண்டியை இழுத்துக் கொண்டு சென்று, இவர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்துபோனான். பதட்டத்துடன் மேன்ஷனை நோக்கி இருவர் கால்களும் செல்ல, மெல்லமாக தானியங்கி முறையில் அடைந்து கொண்டிருந்த மேன்ஷனின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மேன்ஷன், அந்த அதிகாலை வேளையில் பிரம்மாண்டமாக தென்பட்டது. இரும்பு கேட்டின் உள்ளே விக்டர் இழுத்துச் சென்ற வண்டியின் தடம் பனிப் பாதையில் அச்சாகத் தெரிந்தது.
“விக்டருக்கும் மைக்கேல்சன் மேன்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? இவன் எப்படி இதுக்குள்ள ஈஸியா போயிட்டு வர்றான்? உள்ள போய் விசாரிக்கணும்னா ஓனர்ஸ் பர்மிஷன் லீகலா வாங்கணும்னு போலீஸ் சொன்னாங்க. ஆனா கேட் கதவை திறந்துட்டு விக்டர் எப்படி போக முடியும்?” என்று ஒன்றின் பின் ஒன்றாக கேள்விகள் கேட்டுக் கொண்டே நின்றிருந்தாள் திவ்யா. பரணி, அந்த இரும்பு கேட்டின் அருகே இருபுறமும் இருந்த காம்பவுண்ட் சுவரை ஆராய்ந்து கொண்டே, ஒருபக்கம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஏறிட்டான்.
அதன் சிவப்பு விளக்கு எரிவது போலத் தோன்றாது போக, “திவி, இங்க பாரு! சிசிடிவி கேமரா ஆஃப் ஆன மாதிரி இல்ல. கீழ ரெட் லைட் எரியலை பாரு” என்று பதட்டமாகக் கூற,
“பரணி, நிச்சயம் நாபி-ஜூன் காணாம போனதுக்கும், இந்த விக்டருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கணும். நாம மேன்ஷன்குள்ள போய் ஒரு தடவை பார்த்துடலாமா?” என்று திவ்யா கேட்க,
“திவி” என்று ஏதோ சொல்ல வந்தவனை, “ப்ளீஸ் பரணி! ரொம்ப யோசிக்க டைம் இல்ல. எனக்கு என்னவோ நாபி இந்த மேன்ஷன்ல இருக்கலாம்னு தோணுது. ப்ளீஸ் ஒரு தடவை செக் பண்ணிடலாம்.” என்று திவ்யா பதட்டமாகக் கூற, பரணி தலையை அசைத்தான்.
கேட்டின் சமீபமாக நின்று கொண்டு உள்ளே செல்ல வழி இருக்கிறதா என்று ஆராயத்துவங்கிய பரணி, சில முறை திரும்பித் திரும்பி விக்டர் ஆலனின் வீட்டை நோட்டம் விடத் தான் செய்தான். விக்டருக்கு இவர்கள் இங்கே நிற்பது தெரிந்திருக்குமா? அவன் மனநிலை இப்போது என்னவாக இருக்கும்? என்றெல்லாம் ஒரு பக்கம் யோசனை சென்றாலும், அந்த பெரிய மேன்ஷனுக்குள் எப்படிச் செல்வது என்று யோசித்த வண்ணம் இருந்தவனுக்கு, அந்த மேன்ஷனின் பின்னால் இவர்கள் வீட்டைப் போலவே அடர்ந்து வளர்ந்திருந்த காடுகள் நினைவில் வந்தன.
“திவி, மேன்ஷன் பின்னால ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம் வா” என்று திவ்யாவை அழைத்துக் கொண்டு மேன்ஷனின் பின்பக்கமாக உள்ளே செல்ல வழி இருக்கிறதா என்று தேடிச் சென்றான் பரணி. திவ்யா, பரணி இருக்கும் தைரியத்தில் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவன் பின்னூடே கைகளைப் பிடித்துக் கொண்டு சென்றாள்.
விக்டரின் வீடு மேன்ஷனில் இருந்து எதிர்சாரியில் பக்கவாட்டில் முப்பதடி தூரத்தில் இருந்தது. பரணியும் திவ்யாவும், மேன்ஷனின் கேட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்ததையும், பின்பு மேன்ஷனின் பின்பக்கமாக நடந்து செல்வதையும் தன் வீட்டினுள் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் விக்டர் ஆலன். அவன் இதயம் பதட்டத்தில் வேகமாக அடித்துக் கொண்ட போதும், அவன் கைகள் இறுக்கமாகத் தனது வேட்டை துப்பாக்கியைப் பிடித்திருந்தது. சிறிது நேரம் அப்படியே செய்வதறியாது அமர்ந்திருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தவன் போல, பெரியதாய் மூச்செடுத்துக் கொண்டு, தன் துப்பாக்கியுடன் மைக்கல்சன்ஸ் மேன்ஷன் நோக்கி நடக்கத் துவங்கினான்.
error: Content is protected !!