Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 4

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!

அத்தியாயம் 4

    மித்ரன் பார்வை முழுக்க பிரவீணா மீது தான் நிலைத்து இருந்தது. அவள், மித்ரனை கவனிக்க வில்லை. அவள் பாட்டுக்கு தன் நிலையில் அமர்ந்து இருந்தாள். திருமணமும் முடிந்து இருக்க.. ஒவ்வொருவராக புது தம்பதிகளை வாழ்த்த மேடை ஏறினார்கள்.

   பிரவீணா நிலையில் மாற்றமில்லை. ஏனோ, அரை மணி நேரத்தில் கிளம்பிவிடும் எண்ணத்தில் இருந்தவன். அவளை பார்த்தவாறு அமர்ந்து கொண்டான். மகன் உறக்கம் கலைந்து எழுந்ததும் ஒரு கையில் பிடித்து கொண்டவள். மெல்ல மேடை ஏறினாள். தூங்கி விழித்த ஆதிரன், “மாமா” என்று தூக்க சொல்லி கையை விரித்தான்.



Advertisement

   லேசான சிரிப்போடு மகனை தடுத்தவள், தன் கையில் வைத்திருந்த பெட்டியை திறந்து இரண்டு பவுன் வரும் கை ஜெயினை அத்து கையில் கொடுத்து, மாமன் கையில் போட சொன்னாள்.

 “ எதுக்குக்கா இதெல்லாம்?..” என்று தம்பி பிரேம் கேட்க.

  “என்ன? இது என் கடமைடா?..” என்றவள், மகனை முன் நிறுத்தி போட்டோவுக்கு நின்றாள்.

Advertisement

  அந்த போட்டோ எடுப்பவர், எல்லாம் குடும்பமாக போட்டோ எடுக்க, பிரவீணா மகனை மட்டும் வைத்து கொண்டு நிற்பதை பார்த்து,

Advertisement

“ சிஸ்டர், நீங்க போய் உங்க வீட்டுகாரரை கூட்டி வாங்க… எல்லோரும் குடும்பமா தான் எடுக்குறாங்க…” என்றதும்,

“இல்லங்க, அவர் இல்லை. நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்..” என்றவள், மகனோடு சேர்ந்து நின்று எடுத்த பின், கீழ இறங்க பார்க்க,

 பிரவீணா அம்மா தான், “பிரவீ!.. குடும்ப போட்டோ எடுக்கணுமாம். நீ நில்லு.. உங்க அப்பா எங்க?…”என்று தேட,

Advertisement

 தேவ தாஸ் வந்தார். மணமகனின் தாய், தந்தை நடுவில் அமர.. அவர்களை ஒட்டி இரு பக்கமும் மண மக்கள் நின்றார்கள். மகனை முன் பக்கம் தாத்தா மடியில் விட்டு, சோஃபா பின் பக்கம் பிரவீணா நின்றாள்.

  தாய் மகேஷ்வரிக்கு ஒரு எண்ணம்.. எல்லாம் குடும்பமாக புருசன், பொண்டாட்டி, பிள்ளைகள் என்று போட்டோ எடுக்க.. தனித்து நின்றது பிரவீணா மட்டும் தான். யாரும் எதுவும் சொல்லும் முன், அவளாகவே தள்ளி நின்று கொண்டாள். அவள் தனியாக நிற்பது தாங்காமல் தான், குடும்ப போட்டோவில் மகளை நிற்க வைத்தது. ஆனால், வீடியோ எடுப்பவர்,

 “சிஸ்டர், நீங்க கொஞ்சம் தள்ளி போங்க. இது குடும்ப போட்டோ.. இவங்களை வச்சு மட்டும் எடுக்கிறது. அப்படி தான் பிரேம் சார் கேட்டார். மாப்பிள்ளை அம்மா, அப்பா, மண மக்கள்.. அதே போல் பொண்ணு வீட்டில அவங்க அம்மா, அப்பா, மணமக்கள்… பொதுவா, அப்படி தான் எடுப்பாங்க…” என்றதும்,

பிரவீணா ஒதுங்கி கொண்டாள். மகனை கையில் பிடித்து தூக்க, அவன் சினுங்கினான்.

  “பிரவீ.. என்னடி பண்ற. அவனை விடு.. நீயும் சேர்ந்து நில்லு, தம்பி ஏதோ சும்மா சொன்னான் போல…” என்று மகேஷ் சொல்ல,

 “ஆமா க்கா.. நான் அப்படி யோசிக்கல..” என்று பிரேம் விளக்கம் கொடுக்க,

  “நான் எதையும் தப்பா நினைக்கலடா.. நீ, அம்மா, அப்பா கூட சேர்ந்து போட்டோ எடு. நாங்க அப்புறம் எடுக்குறோம்..” என்று மகனை கட்டாயமாக தூக்கி கொண்டாள்.

 “ஏண்டி இப்படி பண்ற..”

  “நான் ஒன்னும் நினைக்கல. எனக்கு ஒன்னும் இல்லை.. நீங்க போட்டோ எடுத்துட்டு வாங்க..” என்றவள், தந்தை சொல்லியும் கேட்காமல் மகனோடு இறங்கி கொண்டாள்.

  கணவன் இளங்கோ இறக்கும் போது மகனுக்கு பத்து மாதம்… அவனின் ஒன்றை வயது வரை மாமனார் வீட்டில் தான் இருந்தாள். அங்கு ரொம்பவும் இருக்க முடியாமல் போக, அடுத்து எல்லாம் தாய் வீடு தான். நாம் தனி என்று இதுவரை நினைக்கவே இல்லை. கடைசி வரை பெற்றவர்கள் அரவணைப்பு மட்டும் தான் என்று கிளம்பி வந்து விட்டாள். இதுவரை ஒரு சின்ன சங்கடம் கூட நேர்ந்தது இல்லை.

     இப்போதும் பெற்றவர்கள் நினைக்க வில்லை தான். புது பெண் ஆர்த்தியின் அம்மா கவிதாவுக்கு தான் நெருடல்… அவள் முன் நிற்பதை விரும்ப வில்லை. அதை கொண்டு பிரவீயும் தள்ளியே நின்று கொண்டாள்.

 மகனோடு கீழே வர அங்கு அமர்ந்திருந்தது யுவி மித்ரன். அப்பொழுதுதான் அவன் வந்ததையே கவனித்தாள் பிரவீணா. திகைப்பாக பார்த்தவள்..

“சார் நீங்க இங்க?..” என்று இழுக்க,

 “பொண்ணு வீடு எங்களுக்கு தெரிஞ்சவங்க பிரவீணா..”

 அப்படிங்களா சார் என்றவள் சம்பிரதாயமாக,

 “சாப்பிட்டீங்களா சார்…”

 “இல்ல மேடம் இனி தான்..” என்றதும்,

 “சார் வாங்க சாப்பிட” என்று அழைக்க எழுந்து கொண்டான் மித்ரன். இன்னும் ஆதிரன் சாப்பிடவில்லை. இனி பசி தாங்க மாட்டான் உணவு கொடுக்க வேண்டும்.

 கல்யாண வீட்டு ஆளாக மித்ரனை முன்னழைத்து சென்று உணவருந்த அமர வைத்தவள். நகரப் போக,

“நீங்களும் சாப்பிடுங்க பிரவீணா. பாருங்க குட்டி பையன் கிறக்கமா இருக்கான்…” என்று மித்ரன் சொன்னதும்,

  மகனை மட்டும் அமர வைத்தவள்.. இவள் உடன் அமரவில்லை. அது சரியாக இருக்காது என்று நினைத்தாள். என்னதான் உடன் வேலை பார்ப்பவராக இருந்தாலும், அவருக்கு அருகில் மகனோடு இவள் அமர்வது சரியாக இருக்காது. அதனால், ஆதிரனை மட்டும் அமர வைத்து உணவு கொடுத்தவள். இவள் நின்று கொண்டாள்.

  “இன்னும் கூட்டம். வரும் போல தெரியுது பிரவீணா. நீங்களும் சேர்ந்து சாப்பிடுங்க…” என்றாலும்,

“இருக்கட்டும் சார் இதை சாப்பிட மாட்டான்..” என்று மகன் அருகில் நின்று கொண்டே இருந்தாள்.

“இந்த சிஸ்டத்துக்கு தான் எனக்கு இந்தியன் கல்சரே வேணாம்னு ஓடுறேன்…” முனங்கி கொண்டு மித்ரன் அமர்ந்து இருக்க,

 ‘ஹே பிரவீ.. உன்னை எங்கெல்லாம் தேடுவது.. நீ சொல்லித்தான், உன் தம்பி கல்யாணத்துக்கு நான் வந்தேன். பார்த்தா என்ன கூப்பிட கூட நீ வரல..” என்று சாய் ஸ்ரீ சொல்ல,

 “ஹே! சாய் நாம சார் வந்திருக்காருப்பா…” என்றாள் பிரவீணா.

 அப்போதுதான் பார்த்தவள் “அட! மித்ரன் சார் நீங்க எங்க?..”

“பார்த்தீங்களா நம்ம எல்லாம் ஒரே டீம்மா இருந்தாலும் பிரவீணா மேடம் உங்கள மட்டும் தான் வர சொல்லி இருக்காங்க…”

 “சார் நான் வேற யாருக்குமே சொல்லல.. இவளுக்கு மட்டும் தான் சொன்னேன். இவளுக்கு எங்க வீடு ஆட்கள் தெரியும். அப்ப சொல்லாம இருக்க முடியாதுல்ல. என் தம்பி கல்யாண சார், இஷ்டத்துக்கு நான் ஆள் கூப்பிட முடியாது. என் பையன் கல்யாணத்துக்கு நீங்கதான் முதல்ல…” என்றதும்,

“நான் இல்லாம வா அத்து கல்யாணம்…” என்றவன்,

“நீங்களும் சாப்பிடுங்க சாய்..” என்றான் மித்ரன்.

எப்படியும் தன்னோடு சேர்ந்த அமர்ந்து சாப்பிடுவதை அவள் விரும்பப் போவது கிடையாது. பிரவீனா முகமே சோர்ந்து போய் கண்ணெல்லாம் உள்ளே விழுந்து கிடந்தது. பசியாக இருக்குமோ என்று ஒரு எண்ணம் அவனுக்கு… அதனால் தான் சாய் ஸ்ரீ அமர சொன்னது,

 “ஆமா, சாய் நீ உட்காரு. உன் பக்கத்துல நானும் உக்காந்துக்குறேன். காலையிலிருந்து நானும் சாப்பிடல…” என்று பிரவீணா அமர்ந்ததும்,

 “சரி தான்..”நினைத்தான் மித்ரன்.

  மற்ற நாட்களை விட இந்த மாதிரி விசேஷ நாட்களில் பிரவீணா ரொம்பவும் வேதனையாக உணர்வாள். இப்படி குடும்பமாக எங்கு சென்றாலும், இவள் மட்டுமே ஒரு பிள்ளையோடு தனியாக நிற்பது மாதிரி இருக்கும். இவளின் சொந்த அத்தை மகன் தானே இளங்கோ.. என்னவோ அவனை மிகவும் தேடுவாள். தன் கணவன் இருந்திருந்தால் என்று நினைக்காமல் அங்கு எதுவும் நகராது.

  இன்றும் தன்னைச் சுற்றி அத்தனை சொந்தங்கள் இருந்தும், தன் வீட்டு விசேஷமாக இருந்தும், ஒதுங்கியே நிற்பது மாதிரி இருந்தது. இவள் தான் உடன் பிறந்தவளாக தாலி எடுக்க பாதிப்பணம் கொடுத்தாள், மீதி பணம் இவள் தங்கை பிரீத்தி கொடுத்தது.. வீட்டுக்கு மூத்த பெண்ணாக இருந்தும், தாலியில் மூன்றாவது முடிச்சை போட்டது இவள் தங்கைதான். அது என்னவோ இவளையும் யாரும் அழைக்கவில்லை. அவளும் நான் என்றும் முன் போய் நிற்கவில்லை. அவரவர் மனதிலே தோன்றுமோ என்னவோ தள்ளியே இவள் நின்று கொண்டாள்.

 அவள் மனம் வேற என்னவோ எதிர்பார்த்ததோ தெரியவில்லை கல்யாணம் மேடையில் உடன் நிற்க அழைத்தவர்கள். தாலியில் முடி போட அழைக்கவில்லை. அது எதற்கு தான் முன்னே இருக்கணும் என்று பிரவீனா தள்ளியே நின்று கொண்டாள்.

 தன் ஆபீஸ் வட்டத்தை பார்த்த பின் தான் ஒரு மாதிரி நார்மல் மூடுக்கு வந்து கொண்டிருந்தாள் பிரவீ.. இதுவரை வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் பரிதாபத்தையும், அனுதாபத்தையும் முகத்தில் காட்டிக் கொண்டிருக்க.. சகஜமாக பேசும் தன் நட்பு வட்டங்களை பார்த்தபின் லேசாக முகத்தில் சிரிப்பு வந்தது.

  அவர்கள் கிளம்பும் வரை அவர்களோடு சுற்றிக் கொண்டிருந்து.. வாசல் வரை சென்று வழிய அனுப்பி வைக்க..

மித்ரன் மனதில் பட்டென்று ஒரு யோசனை, அங்கு போட்டோ எடுத்து கொண்டிருப்பவர்களை பார்த்து,

“தம்பி எங்க நாலு பேரையும் ஒரு போட்டோ எடு…” என்றதும்,

“சார் எதுக்கு..” என்று பிரவீணா சங்கடப்பட,

 “என்ன மேடம் நாம எல்லாம் ஒண்ணா வேலை பாக்குறோம். உங்க தம்பி கல்யாணத்துக்கு வந்து இருக்கோம். ஒரு போட்டோ எடுத்தா என்ன?.. வாங்க சேர்ந்து நில்லுங்க..” என்று அவசரமாக நிற்பது போல் நின்று கொண்டான்.

பேசிக்கொண்டே நகர்ந்து வந்ததால், எந்த நிலையில் வந்தார்களோ அந்த நிலையில் நின்று அவசரமாக ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அதை பிரவீணா கவனிக்கவில்லை. ஆனால், மித்ரன் கவனித்தான். அவன் பிரவீணாவோடு சேர்ந்து நின்றதை…

 ஆம், தனக்கு முன் ஆதிரனை நிற்க வைத்து.. அவன் தோளில் இரு கை வைத்திருக்க, அவனுக்கு அருகில் பிரவீணாவும், அவளுக்கு அருகில் சாய் ஸ்ரீ நின்றிருந்தார்கள். தன்னோடு சேர்ந்து சாப்பிட கூட யோசித்தவளை, யோசிக்கவே விடாமல் தன்னருகில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டான் மித்ரன்.

தன் நண்பர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு, மகனோடு உள்ளே வர அங்கு பெரிய குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புது ஜோடி, அம்மா, அப்பா, தங்கை அவள் கணவன், மாமா, அத்தை, சித்தி சித்தப்பா, அவர்கள் பிள்ளைகள் என்று ஒரு பெரிய பட்டாளமே முன் நின்று கொண்டிருந்தது.

  பிரவீணா பார்வை அவர்களை சுற்ற.. யாரும் அவளை தேட வில்லை. தன் கணவன் மனைவி இருக்கா பிள்ளைகள் இருக்கா என்று பார்த்தவர்கள்.. பிரவீணா என்ற ஒரு ஒருத்தி இல்லை என்பதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் எல்லாம் சேர் போட்டு அமர்ந்திருக்க, நடுத்தர வயது தம்பதிகள தம்பதிகள் எல்லாம் ஜோடியாக பின்னிற்க, சின்னப் பிள்ளைகள் எல்லாம்முன் பக்கம் அமர்ந்து இருந்தார்கள்.

  அவரவர் குடும்பம் நிற்கிறதா என்பதை மட்டும் பார்த்தவர்கள், அவள் இல்லை என்பதை கவனிக்க வில்லை. தன்னை அழைக்காமல் வழிய போய் நிற்க விருப்பமில்லை அவளுக்கு.. போனில் என்னத்தவோ ஓடவிட்டு மகன் கையில் கொடுத்தவள். அவனோடு சேர்ந்து ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். அதுவரையிலும் கூட யாரும் அவளை தேடவில்லை.

போட்டோ வீடியோ எல்லாம் எடுத்து கீழே வரும் பொழுது தான் அவள் ஒருத்தி அமர்ந்திருப்பதையே கண்டார்கள்.

“ஐயோ! பிரவீ.. நீ எங்க போனா..”

“ உனக்கு யாரும் சொல்லலையா?..”

“திவ்யா நீ பிரவீயா பார்க்கலையா?…”

“நான் என் பிள்ளைகளை பார்த்திட்டு இருந்தேன். கவனிக்கல…”

  “என்னாச்சு? ஏன் கத்துறீங்க?” என்று மற்றவர்கள் கேட்டு வர,

“அச்சோ! பிரவீணாவை விட்டாச்சு. குடும்ப போட்டோவுக்கு அவள மறந்துட்டோம்…”

“என்ன பிரவீணா நிக்கலையா நீ.. என்னப்பா நீங்க யாருமே ஒருத்தர் கூடவா கவனிக்கல…”

“சரி விடுங்க, கூட்டத்துல தெரியல போல.. திரும்ப ஒரு போட்டோ எடுப்போம்” என்று ஆரம்பிக்க..

அடுத்தடுத்து வேற வேற ஆட்கள் வர போட்டோ எடுக்க நேரம் அமையவே இல்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!