Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 5

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!

அத்தியாயம் 5

    பிள்ளையை காரணம் கொண்டு பிரவீணா சீக்கிரமாகவே வீடு வந்து விட்டாள். தன் உறவுகள் தன்னை விட்டு விட்டார்களோ என்ற நினைப்பை விட, இத்தனை மக்கள் இருக்க ஏன் அந்த கடவுள் என் கணவரை மட்டும் பறித்துக் கொண்டார் என்ற வேதனை அதிகமாக அதிகமாகவும்.. இருக்க முடியாமல் கிளம்பி விட்டாள். அவள் தன் தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பும் சமயம்,

“ப்ரீத்தி அப்படி எங்க தான் போவயோ நீ.. மறு வீடு இருக்கு, கோயிலுக்கு போகணும், ஆளாத்தி எடுக்கணும்.. எல்லாத்துக்கும் நாத்தனார் தான முன்ன நிக்கணும். ஒவ்வொண்ணுக்கும் உன்னை தேடிட்டே இருக்கணுமா.. நீயா வந்து நிக்க மாட்டியா?.. உனக்கு இருக்கிறது ஒத்த அண்ணே, அவனுக்கு கூட நின்னா என்ன?..” என்று சித்தி தங்கையை சத்தம் போடுவது அவள் காதில் கேட்டது.



Advertisement

 மகேஷ் சங்கடமாக பெரிய மகளை பார்க்க.. பிரவீணா எதையும் பெரிதாக எடுக்கவில்லை. இந்த நான்கு வருடத்தில் அவள் எவ்வளவோ கடந்து வந்து விட்டாள். அவருக்கும் பெரிய மகளை ஓரிரு இடத்தில் யாவது முன்னிருக்க வைக்க ஆசைதான். ஆனால் கல்யாண வீட்டில் பொதுவில் யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ என்ற பயம். தாயிடம் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து பிள்ளையை அழைத்துக் கொண்டு வீடு வந்து விட்டாள்.

   அடுத்து கோவிலுக்கு போய், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு வந்து, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீடு போயி என்று இரு பக்க சொந்தமும் கலந்து கொண்டே தான் இருக்கும். அங்கிருக்கும் எல்லோரும் பிரவீனாவை சங்கடமாக நினைப்பதும், அனுதாபமாக பார்ப்பதும் அவளுக்கு நிறைய வலியை கொடுக்கும். முன்பே தெரியும் இதெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 பிரவீணா நினைவு என்ன யார் ஒரு வார்த்தை சொல்லும் நாமே ஒதுங்கிக் கொண்டால் வலி மிச்சம் அவ்வளவுதான். மறு வீடு அழைப்பு முடிந்து, ராத்திரி சடங்குக்கு அலங்காரம், கல்யாண விருந்து என்று வீடு களைகட்ட பிரவீணா எதற்கும் தலை காட்ட வில்லை. அவள் ஆபீஸ் வேலையை எடுத்து வைத்துக் கொண்டாள்.

Advertisement

    “ பிரவீ, ஏண்டி உள்ளவே இருக்க?.. வெளிய வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசேன். வேற யாரும் இல்ல பிரவீ, நம்ம வீட்டு ஆளுக தான்…” என்று தாய் சத்தம் போட்ட பின் தான் கொஞ்சம் வெளியே வந்தாள்.

Advertisement

 அவளுக்கு தெரியும் கல்யாண வீடாக இருந்தாலும், இவளுக்கு கணவன் இல்லை என்றாலும் புதிதாக கேட்பது போல சிலர் கேட்கத்தான் செய்வார்கள்.

உங்க வீட்டுக்காரரு கொஞ்சம் வயசுல இறந்துட்டாராமே.. முடியாம இருந்தாரா இல்ல வேற எதுவும் சிக்கலா.. உனக்கு எதுவும் தெரியாதா?.. உன் புருசன் வீட்டு ஆளுக வர்றது இல்லை போல… எப்படி இறந்தார்?.. நீயும் தான் பாவம்.. உன் வயசுக்கு தனியா இருக்கிறது எல்லாம் கஷ்டம்.. உன்னை மாதிரி ரெண்டாம் தாரமா, பொண்டாட்டி இல்லாம பிள்ளையோட இருக்குற ஆளா தான் பார்க்கணும், முப்பது வயசு கூட ஆகல, உன் காலம் என்னைக்கு போக.. இப்போ வேணாம்ன்னு தான் நினைப்பு இருக்கும். நாப்பது வயசுக்கு அப்புறம் ஏக்கம் வந்துரும்..”

   இந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு அவ்வளவு வலியை கொடுக்கும். தன் மீது அக்கறையில் சொல்லும் சொந்தங்களை என்ன சொல்ல முடியும். தன் வலியின் ஆழம் அவர்களுக்கு எங்கு தெரியும்.

Advertisement

  ஆர்த்தியோடு அவளுக்கு பெரிதாக எந்த சங்கடமும் நேர வில்லை. புது பெண் என்பதால் வீட்டில் இருக்கும் நேரம் மிக குறைவு. சமையல் வேலைகளை பிரவீணா பார்த்து கொள்ள, சின்ன சின்ன வேலைகளை ஆர்த்தி பகிர்ந்து கொண்டாள்.

  பிரேமுக்கும், அவன் அம்மாவுக்கும் தான் ஒரு மாதிரி நெருடலாக இருந்தது. அவன் தந்தை கூட சொல்லி விட்டார்.

“கல்யாண வீடு. நாம எவ்வளவோ செலவு பண்ணோம். பிரவீ கிட்ட கணக்கு பார்த்திருக்க கூடாது மகேஷ்…” என்று,

பிரவீனா இது தான் என்று யாரிடமும் குற்றமாக சொல்ல வில்லை. எல்லாம் அவள் மனதோடு தான். ஆனால், சாய் மட்டும் கேட்டு கொண்டாள்.

 “நீ உன் தம்பி கல்யாணத்துக்கு சேலை எடுக்கவே இல்லையா பிரவீ.. புது சேரி கட்டவே இல்லை. எங்க பக்கம் எல்லாம் பொண்ணுக்கு எடுக்குற அளவுக்குக்கு நாத்துனாருக்கும் எடுப்பாங்க தெரியுமா?..”

“அவங்க எடுக்க தான் சொன்னாங்க சாய். ஆனா?” என்று இழுக்க,

“என்ன பிரவீ?…”

“நான் எந்தம்பி கிட்ட ஒரு முப்பதாயிரம் கடன் வாங்கி இருந்தேன் சாய். நம்ம அத்து ஸ்கூல் ஃபீஸ் கட்ட. அதை என்னால திரும்பி கொடுக்க லேட் ஆச்சு..”

“தெரியுமே!.. சம்பளம் போட்டதும் கொடுக்கணும்ன்னு சொன்ன தான..”

“அதுக்கு முன்ன அவன் கல்யாணம் வேற வந்துருச்சு. சீர் செய்யணும். ரெண்டு பவுனுக்கு ஜெயின் எடுக்க இருந்தேன். அதான், கடன் கொடுக்க லேட். அதுக்கு தான்..”

“என்ன அதுக்கு தான்?..” புரியாமல் சாய் கேட்க.

ஒரு பெருமூச்சு விட்டவள், “வாங்குன பணத்தை என்னால திரும்ப கொடுக்க லேட் பண்ணேன் தான.. அதை என் சேலை கணக்குல வச்சுக்க சொல்லிட்டாங்க…”

“யாரு?..”

“எங்க அம்மாவும், தம்பியும்..”

“இதெல்லாம் ரொம்ப தப்பு பிரவீ… உன் தம்பி கல்யாணத்துக்கு எத்தனை லட்சம் செலவு செஞ்சாங்க. வெறும் முப்பதாயிரம்.. மகளுக்கு விட்டு கொடுத்தா என்ன?.. கல்யாண பொண்ணுக்கு, உந்தங்கச்சிக்கு எல்லாம் சேலை எடுக்கும் போது உனக்கு மட்டும் கடனுக்கு கழிச்சு விடலாமா? நீ பேச வேண்டி தான.. சீர் செஞ்ச தான..” கோபமாக சாய் கேட்க.

 “என் தங்கச்சிக்கு அவ வீட்டுகாரர் வருமானம் இருக்கு, எந்தம்பிக்கு எங்க அப்பா கல்யாணம் பண்ணி வச்சாங்க. எனக்கு நான் மட்டும் தான். என்னோட வருமானம் கம்பி. அத்து பெரிய ஸ்கூல்ல படிக்கிறான். எந்தம்பி கல்யாண சீருக்கு தான் கொஞ்சம் இழுத்து போச்சு..”

“இருந்தாலும் உனக்காக கொஞ்சம் யோசிச்சு இருக்கணும். எல்லாரும் புது சேலை கட்டும் போது.. என்னவோ போ..” சலித்து கொண்டாள் சாய்.

“ஜரிகை வச்ச பட்டு சேலை கட்டறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. எடுத்து கொடுத்தாலும் வேஸ்ட் சாய். பணம் கிடச்ச வரை லாபம் தான்…” என்று பிரவீனா சொல்ல,

 “ஆயிரம் நீ சொன்னாலும் ஒரு தம்பி கல்யாணத்துக்கு கணக்கு பார்க்காம உனக்கு சேலை எடுத்து கொடுத்து தான் இருக்கணும்…”முடிவாக சொன்னாள் சாய்.

 உண்மை தான். அவள் மனமும் அதை எதிர்பார்த்தது தான். ஆனால், சொன்னது வேறல்லவா…

“பிரவீ.. நீ தம்பிக்கு முப்பதாயிரம் கொடுக்கணும் தான. எப்படியும் அது கடன் தான். அதுக்கு சேலை பணமா வச்சுகோ… முப்பதாயிரம் ரூபாய்க்கு சேலை எடுத்து என்னாக போகுது.. சும்மா பிரோல தான் இருக்கும்”என்று தாய் சொன்ன பின் மறு வார்த்தை பேச வில்லை.

  ஆனால், மனதில் மட்டும் ஒரு எண்ணம் இருந்தது. இதுவே தான் தாய் வீடு இல்லாது கணவன் வீட்டில் இருந்து இருந்தால்… அன்று மாலையே அதை சொல்லியும் விட்டாள்.

  அன்று மாலை வீட்டின் உள்ளே நுழையும் போதே..

“பிரவீ.. உங்க மாமியார் வீட்டுக்கு நாம பத்திரிகை கொடுக்கல தானா. ஆனா, மொய் பணம் அனுப்பி இருக்காங்க…” என்று அவள் சித்தி சொல்லும் போதே,

  “அப்படியா சித்தி. நாம செஞ்சதை திருப்பி கொடுக்க நினைச்சு இருப்பாங்க…”

  “அவங்க மொய் கொடுத்து விட்டுதுக்கு அப்புறம் மனசுக்கு சங்கடமா இருக்கு பிரவீ.. சும்மாவாது ஒரு பத்திரிக்கை அனுப்பி இருக்கணும்…” என்ற போதும் அமைதியாக நின்றாள் பெண்.

  “நீயாவது அவங்களுக்கு போன் போட்டு ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும்…” என்றார் தாய்.

“எல்லாம் தெரிஞ்சு நீங்களே இப்படி பேசாதீங்க அம்மா…”

 “சண்டை தான். ஆனாலும், அவங்க உங்க அப்பாவோட அக்கா, உனக்கு மாமியாரும் கூட.. நீயொரு வார்த்தை சொல்லி இருக்கணும்…”

  “நான் என்ன வார்த்தைம்மா சொல்லணும்.. என் மகனை ஒதுக்கி வச்ச அவங்க எனக்கு சொந்தமா?.. பணம் வந்ததும் நீங்களும் சேர்ந்து பேசுறீங்க. அனாதை மாதிரி நானும், என் மகனும் கிடக்கோம். இளங்கோன்னு அவங்க மகன் பேர் சொல்ல இருக்குற ஒருத்தன் ஆதிரன். அவன் எப்படி இருக்கான்னு ஒரு நாளாவது வந்து பார்த்து இருக்காங்களா?… அவங்களா எனக்கு சொந்தம். ஏதாவது பேசணும்ன்னு பேசாதீங்க..” கோபம் கனன்றது.

  “அதுக்கு ஏண்டி அனாதைன்னு எல்லாம் சொல்ற. நாங்க என்ன உன்னை அப்படியா பாக்குறோம்..”

 “வேற எப்படி சொல்ல.. என் மாமியாரை விடுங்க. முதல்ல எனக்கு பத்திரிக்கை கொடுத்தீங்களா?.. தல மகன்னு பழம், தேங்காய் வைத்து எனக்கா முதல் பத்திரிக்கை குடுத்திங்க. அதைக்கூட விடுங்க.. நான் உங்க வீட்ல தான் இருக்கேன். சும்மா கூட கல்யாணத்துக்கு வான்னு சொல்லல..” ஆதங்கமாக சொல்ல,

“நீயென்ன யாரோவா?.. உன் தம்பி கல்யாணம். ஒரே வீடு.. நீ தான் முன்ன நிக்கனும். குத்தம், குறை கண்டு பிடிக்காத பிரவீ..” என்று தாய் சொல்லிய போதும், அவள் அமைதியாக இருந்தாள்.

 “உன் தங்கச்சி வீட்டுக்கு போனோம் தான். அங்க உன் தங்கச்சி புருஷன் இருக்கான்டி.. முறை செய்யலைன்னா தப்பா போய்டாதா. அவங்க மாமியார் வேற இருக்காங்க. என்னதான் என் சொந்த அண்ணன் குடும்பமா இருந்தாலும் ,அவ தனியா இருக்கறதுனால செய்ற மாதிரி தான் இருக்கும். நீ நம்ம கூடவே தானே இருக்க.. இது உன் வீடு பிரவீ, யாரும் சொல்லி நீ செய்யணும்னு கிடையாது. நாங்க சொல்லாமலே நீ செய்யணும் பிரவீ…”

  இதுதானே அவளுக்கு இருக்கும் வலி. புருஷன் இருந்தால்தான் சில மதிப்பும், மரியாதையும் என்று சொந்த குடும்பமே வரையறுக்க… தன் நியாயம் பேசவே முடியவில்லை பிரவீனாவாள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!