Skip to content
Post Views: 3,817
அத்தியாயம் 16
குரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான். முன்பிருந்த குருவாக இருந்தால் உடனே டாக்சி புக் செய்து கிளம்பி இருப்பான். இப்பொழுது பேருந்து நிற்குமிடம் நோக்கி நடந்தான்.
Advertisement
சரியான பேருந்தை தேடி பார்த்து ஏறி அமர்ந்துகொண்டான். சமீபத்தில் அவன் படித்த ஒரு விஷயம் நியாபகத்திற்கு வந்ததது. ‘ஒரு நாடு வளர்ந்த நாடு என்று சொல்ல வேண்டும் என்றால், அது ஏழைகள் கார்களில் செல்லும் சூழல் ஏற்படுவதில் இல்லை, பணக்காரர்கள் பேருந்தில் செல்லும் சூழல் ஏற்படுவதில் தான் உள்ளது’ என்று.
அருணாவிற்கு அழைத்து வந்து சேர்ந்துவிட்டதை தெரிவித்தான். காலை பதினோரு மணி போல இவர்கள் முன்பிருந்த அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தான்.
Advertisement
Advertisement
குருவை பார்த்ததும் காவலாளி அவனை அடையாளம் கண்டு, ”சார் நீங்களா? வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?” என்றான் உற்சாகமாக.
குருவிற்கு இந்த வரவேற்பு கொஞ்சம் வியப்பாக இருந்தது. ஏனென்றால் இங்கே இருந்த வரையில் இவர்கள் இருவரும் யாருடனும் அதிகமாக பேசி பழகியது இல்லை. பார்த்ததும் ஒரு சிரிப்பு, ஒரு தலையசைப்பு, அவ்வளவு தான்.
Advertisement
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே? இப்படியா சொல்லாம கொள்ளாம போறது?” என்றான் அந்த காவலாளி.
“போகும்போது, உங்க கிட்ட சொல்லிட்டு தானே போனோம். எங்க வீட்ல இருந்த சின்ன டேபிள் கூட உங்க பிள்ளைக்கு கொடுத்துட்டு போனோமே?”
“வீடு வித்திட்டு போறேன்னு சொன்னீங்க சார். ஆனா எங்க இருக்கேன்னு உங்க வீட்லகூட சொல்லாம போய்ட்டீங்களே. பாவம் சார் உங்க வீட்ல, அதுவும் உங்க அம்மாவும் மேடத்தோட அம்மாவும், எத்தனை தடவை இங்க வந்து விசாரிச்சாங்க தெரியுமா? பாவமா போச்சு சார்” என்றான் அந்த காவலாளி வருத்தமாக.
குரு சங்கடமாக பார்த்தான்.
“சரி விடுங்க சார். இப்ப யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க? ஓ, உங்க வீட்டை மேடத்தோட பிரென்ட் தான் வாங்கி இருக்காங்க இல்ல? போய் பாருங்க சார். என்ட்ரி போட்டுட்டு போங்க” என்று கூறி வரவேற்பில் உள்ள ரிஜிஸ்டரை எடுத்து கொடுத்தான்.
பாட்டியின் பேத்தி வீட்டு எண்ணையும் பெயரையும் குறித்து, கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே வந்தான்.
பின்காலை பொழுது என்பதால் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. வேகமாக குரு பாட்டியின் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.
கம்லா பாட்டி, “பேட்டா.. குரு…” என்று மகிழ்ச்சியாக அவனை வரவேற்றார்.
அவனுக்கும் பாட்டியை நீண்ட நாட்கள் சென்று பார்க்கவும், கண்கள் கலங்கி விட்டது.
கரிஷ்மா “வாப்பா” என்று கூறினார். பின் பாட்டி, பேத்தியின் குழந்தையை கொண்டுவந்து குருவிடம் காட்டினார்.
“அவங்க அப்பா அம்மா வேலைக்கு போய் இருக்காங்க“
அருணா குழந்தைக்கு என்று டிரஸ் வாங்கி கொடுத்து விட்டிருந்தாள். அதை எடுத்து கொடுத்தான்.
“உனக்கு சிரமம் கொடுத்திட்டோம். அவருக்கு கால்ல அடிப்பட்டிருச்சு, மூனு மாசம் அசைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அதான் இப்பகூட ரூம்லயே இருக்காங்க. அதனால தான் உன்னை வரச்சொல்லி கேட்டோம். அம்மாவும் இதுக்கு மேலே இங்கே இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார் கரிஷ்மா.
“இதுல என்ன சிரமம் ஆண்ட்டி. பாட்டி இல்லாம அங்கே ஹல்த்வானியே சோகத்துல இருக்கு. பாட்டி வந்தா தான் அங்கே நல்லா இருக்கும். பாட்டி தான் எங்களுக்கு கஷ்டமான சூல்நிலையில் உறுதுணையா இருந்தாங்க. அதுக்கு முன்ன இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என்று அவரை சமாதானப் படுத்தினான்.
“குளிச்சிட்டு வா குரு சாப்பிடலாம்” விருந்தினர் அறையை குருவிற்காக ஒதுக்கி கொடுத்தார் கரிஷ்மா.
சற்று நேரம் இருவருடனும் பேசிக்கொண்டிருந்தான்.
“நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு பிளைட் பாட்டி. நம்ம ஒரு பத்து மணி போல வீட்ல இருந்து கிளம்பினா சரியா இருக்கும்”
“சரி குரு… வா போய் என் மருமகனை பார்த்துட்டு வந்திடலாம்” என்று குருவை ரூமினுள் அழைத்து சென்றார்.
அவரிடமும் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, பின் மதிய உணவை பாட்டியுடன் உண்டான்.
தன் நண்பர்களை சந்தித்து வருவதாக பாட்டியிடம் கூறிவிட்டு கிளம்பினான்.
காவலாளி, “என்ன சார் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?” என்று பதட்டமாக கேட்டான்.
‘இந்தாளு எதுக்கு தேவையே இல்லாமல் இவ்வளவு பதட்டபடறாரு’ என்று குருவிற்கு யோசனையாக இருந்தது.
“பிரண்ட்ஸை கொஞ்சம் பார்த்துட்டு வரலாம்னு..”
“ஓ, இங்க எத்தனை நாள் சார் இருப்பீங்க?”
“நாளைக்கு காலையில கிளம்பிடுவேன்”, என்று கூறி மேற்கொண்டு அவன் எதுவும் கேட்கும் முன்னே நிற்காமல் கிளம்பிவிட்டான்.
நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு அழைத்து பேசி, பக்கத்தில் ஒரு ரெஸ்டாரண்டிற்கு வருமாறு கூறி அங்கே சென்றான்.
“எதுவும் சொல்லாமல் காணாமல் போனதிற்கு கோவப்பட்ட நண்பர்களை ஓரளவிற்கு சமாதானப்படுத்தி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்”
“டேய், நீங்க காணாமல் போனதும் உங்க அம்மாவும் அத்தையும் எங்களை போட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க தெரியுமா? கொஞ்சம் விட்டா நாங்க தான் உன்னை கடத்தி வச்சிருக்கோம்னு போலீஸ்ல புடிச்சு கொடுத்திருப்பாங்க”
“சாரி மச்சான்”
“நல்ல வேலை ஒரு லெட்டரை போட்ட போல. அதுக்கப்புறம் தான் கொஞ்சம் விட்டாங்க”
“எங்க சூழ்நிலை அப்படி மச்சான், அதான் சொல்லாமலே கிளம்பிட்டோம்”
“சரி விடு மச்சான், நீயும் அருணாவும் சந்தோசமா இருந்தா போதும். இப்போ எங்கடா இருக்கீங்க? உங்க வீட்ல பேசிட்டிங்களா?”
“வீட்ல இன்னும் சொல்லலை… சொல்லிட்டு திரும்ப போக முடியாது மச்சான்“
“அதுவும் சரி தான். இரண்டு நாளே எங்களை தலைகீழ நிக்க வச்சு தண்ணீ குடிக்க வச்சிட்டாங்க உங்க அம்மாவும் அத்தையும். இப்ப கூட மாசத்துக்கு ஒரு தடவை போன் போட்டு கேட்டுகிட்டு தான் இருக்காங்க. நீ பேசுனியான்னு?”
“என்னை பார்த்ததா சொல்லிடாதீங்கடா..ப்ளீஸ்..”
“கண்டிப்பா சொல்ல மாட்டோம் டா. ஆனா இனியாவது தொடர்புல இருடா”
மேலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு கிளம்பினான். புது தொலைபேசி எண்களையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டான்.
அருணாவின் மருத்துவரிடம் அப்பொய்ன்ட்மென்ட் வாங்கி இருந்தான். மாலை ஐந்து மணிக்கு, மருத்துவமணை சென்று அவரை சந்தித்தான்.
“வாங்க கந்தகுரு, என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க? அருணாளினி எப்படி இருக்காங்க?”
“நாங்க இப்ப நார்த் இந்தியால செட்டில் ஆகிட்டோம் டாக்டர். இங்க ஒரு வேலை விஷயமா நான் மட்டும் தான் வந்தேன். உங்களை பார்த்துட்டு போலாம்னு”
“சொல்லுங்க.. என்ன கேக்கணும்? அருணாளினி எப்படி இருக்காங்க? எதாவது பிரச்சனை இருக்கா?”
“நல்லா இருக்கா டாக்டர். நார்மலா தான் இருக்கா டாக்டர். ஆனாலும் குழந்தை இறந்ததில் இருந்து முழுசா வெளிய வரலை”
“கஷ்டமான விஷயம் தானே. காலம் தான் இதுக்கு மருந்து”
“டாக்டர், எனக்கு ஒரு சந்தேகம். திரும்ப குழந்தை உண்டாகி இப்படி எதாவது ஆனா அருணாவை கண்டிப்பா என்னால சமாளிக்க முடியாது. அதனால இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா? இல்ல மறுபடியும் ரிஸ்க் வரும்னா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமான்னு? யார் கிட்ட இத பத்தி கேக்கிறதுன்னு தெரியலை டாக்டர். அதான் உங்களை சந்திக்க வந்தேன்”
“சில விஷயங்கள் நம்ம கையில இல்ல. தத்து எடுக்கிறது நல்ல விஷயம் தான். அது உங்க இரண்டு பேரோட தனிப்பட்ட முடிவு. நான் முன்னமே சொன்ன மாதிரி தான், நடந்தது ஒரு விபத்து, பிறப்பு இறப்பு இறைவன் கையில் தான் இருக்கு. நிறைய பேருக்கு முதல் குழந்தை இறந்திருக்கு. அப்புறம் ஆரோக்கியமான குழந்தை பிறந்தும் இருக்கு. பாசிட்டிவா யோசிங்க, மனைவி மேலே இவ்வளவு அக்கறையா இருக்கீங்க. கொஞ்ச நாள் பொறுமையா இருங்க. இயற்கையா குழந்தை கிடைக்கும்னு நம்புங்க. உங்க இரண்டு பேருக்கும் சின்ன வயசுதானே. கொஞ்ச காலம் பொறுத்து முடிவு எடுக்கலாமே? உங்களுக்கான வழியை கடவுள் நிச்சயம் காட்டுவார். மருத்துவரீதியா என் அபிப்ராயம் கேட்டிங்கன்னா இயறக்கையா குழந்தை பெத்துக்கிறதுல அருணாவிற்கு பிரச்சனை கிடையாது. ஆல் தி பெஸ்ட்.” என்று நல்லவிதமாக கூறி அவனை அனுப்பி வைத்தார்.
டாக்டரை சந்தித்து பேசியதில் மனது கொஞ்சம் இலகுவாகியது. எட்டு மணிபோல வீடு திரும்பினான்.
பாட்டியின் பேத்தியும் அவள் கணவரும் இருந்தார்கள். முறையே இவனை வரவேற்றனர்.
“நாளைக்கு மங்களூர்ல எங்க அம்மா வீட்ல ஒரு பார்ட்டி. நாங்க அங்கே போகணும். உங்களை பார்த்துட்டு போகத்தான் வெயிட் செய்தோம்” என்று கூறி, குழந்தையுடன் அவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.
குரு பாட்டியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். கரிஷ்மா அவர் கணவரை கவனிக்க உள்ளே சென்றுவிட்டார்.
“வியாபாரம் எல்லாம் எப்படி போது குரு ? அருணா என்ன சொல்றா?”
“அதான் தினமும் அருணாவும் நீங்களும் போன்ல பேசுறீங்களே? உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்னும் இல்ல. என்கிட்ட போட்டு வாங்கிறதுல உங்களுக்கு எப்பவுமே ஒரு சந்தோசம். போங்க பாட்டி”
“பரவா இல்லையே, அருணா புருஷனுக்கு கொஞ்சம் விவரம் கூடி தான் போச்சு”
கரிஷ்மா வரவும் மூவரும் சேர்ந்து உண்டார்கள்.
“நல்லா ஹிந்தி பேசுற குரு, இங்க இருக்கும் போது அவ்வளவா பேச மாட்டல்ல?” என்றார் கரிஷ்மா.
“இப்ப அங்கேயே இருக்கேன் இல்ல ஆண்ட்டி. அதான் பழகிக்கிட்டேன்”
சாப்பிட்டு எல்லாம் ஒதுங்க வைக்க குரு உதவி செய்தான்.
“ரொம்ப நல்ல பையன் இல்ல ம்மா?” என்றார் கரிஷ்மா பாட்டியிடம்.
“புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் நல்ல மனசு கரிஷ்மா… “
எல்லாம் முடித்து படுக்க செல்லுகையில் அழைப்பு மணி அடித்தது. இந்த நேரத்துல யாரு என்று கேட்டு கொண்டே கதவை திறந்தார் கரிஷ்மா.
அஞ்சு, மஞ்சு, ஆனந்தன், வடிவேலு நாலு பேரும் நின்று கொண்டிருந்தார்கள்.
குரு அதிர்ச்சியாக அவர்களை பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
பாட்டி தான் நிலைமையை கையில் எடுத்துக்கொண்டார்.
‘வாங்க’ என்று அனைவரையும் உள்ளே அழைத்து அமர செய்தார்.
காவலாளி, “நல்ல நேரம் மேடம், கரெக்டா வந்துட்டீங்க… நாளைக்கு காலைல கிளம்பிடுவாராம் சார்“என்று கூறி இவர்களது பைகளை கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றான்.
‘அடப்பாவி, இவன் தான் இந்த அம்மாக்களின் உளவாளி போல. அது தெரியாம வசமா சிக்கிட்டோமே?’ என்று நினைத்து பேந்த பேந்த முழித்தான்.
அஞ்சனா மகனை கண்ணெடுக்காமல் பார்த்தார். உணர்ச்சி மிகுதியால் பேச்சு வரவில்லை.
வடிவேலு ‘குரு’ என்றார் கரகரப்பான குரலில்.
‘அப்பா’ என்று சென்று அவரின் கைகளை பற்றிக்கொண்டான்.
பாட்டியும் கரிஷ்மாவும் அமைதியாக அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டனர்.
ஆனந்தனும் குருவின் தோளை தட்டிக்கொடுத்தார். ‘மாமா’ என்று இன்னொரு கைகளால் அவரது கையை பிடித்து கொண்டான்.
பின் மெதுவாக ‘அம்மா’ என்று அழைத்தான்.
ஓங்கி அவன் முதுகில் ஒரு அடி போட்டு, அழத் தொடங்கிவிட்டார் அஞ்சு.
குருவிற்கும் கண்கள் கலங்கிவிட்டது.
“பெண்ணை கட்டிக்கொடுத்த மாப்பிள்ளையை அடிக்கூடாதுன்னு நான் அடிக்கலை” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே சொன்னார் மஞ்சு.
“அப்படி யார் சொன்னது அத்தை. உங்களுக்கு இல்லாத உரிமையா. நீங்களும் ஒரு அடி அடிச்சுக்கோங்க” என்றான் குரு சிரித்துக்கொண்டே.
“அஞ்சு, என் சார்பா நீயே இன்னொரு அடி போடு. உன் மருமகள் எங்கேன்னு கேளு. அவளை இழுத்து நாலு அடியாவது வைக்கணும்”
சும்மா சொல்கிறார் என்று யோசிக்க விடாமல் அஞ்சு மீண்டும் ஒரு அடி வைத்தார்.
“எப்படி இருக்கீங்க குரு? அருணா வரலையா?“ என்றார் ஆனந்தன்.
“நான் மட்டும் தான் வந்தேன் மாமா”
“ஆமா என்ன விஷயமா வந்தே. இந்த ஹிந்தி காரங்க வீட்டுல எதுக்கு தங்கி இருக்க?” என்றார் அஞ்சு.
“இப்ப எங்க இருக்கீங்க? இரண்டு பேரும் இங்க இருந்த வேலையை ரிசைன் பண்ணிட்டதா சொன்னாங்களே உங்க ஆபிஸ்ல?” என்றார் மஞ்சு.
“இப்ப எங்க வேலை செய்றீங்க ?” என்றார் அஞ்சு .
“நீ வேற அஞ்சு, அதான் உன் மருமகள் சொன்னாலே. குடும்ப தலைவியா இருக்க போறேன்னு. குரு மட்டும் தான் வேலைக்கு போவானா இருக்கும்”
“அப்படி தான் இருக்கும் மஞ்சு. ஆமா குரு, எந்த ஊர்ல இருக்கீங்க. எப்படி சாமளிக்கிறீங்க?”
“இவங்க திருந்தவே மாட்டாங்களா மச்சான் ?” என்றார் ஆனந்தன் வடிவேலுவிடம்.
‘இன்னுமா இவங்க திருந்துவாங்கன்னு இவரு நம்புறாரு. அப்பாவி மனுசனா இருக்காரே’ என்றுஆனந்தனை பார்த்துவைத்தார் வடிவேலு.
அம்மாக்கள் பேசுவதிற்கு பதில் கூறாமல், “நீங்க எல்லாம் எப்படி இங்க வந்தீங்க?” என்றான் தன் தந்தையிடம்
“சொல்லாம கொள்ளாம நீங்க போய்ட்டீங்க? நாங்க எப்படி பரிதவிச்சு நின்னோம்னு தெரியுமா டா?” என்றார் அஞ்சனா ஆவேசமாக.
“நாங்க தேடி அலைந்ததை பார்த்து அந்த வாட்சமேன் எங்களுக்கு பிரெண்ட் ஆயிட்டான். எப்ப உன்ன பார்த்தாலும் எங்களுக்கு சொல்ல சொல்லி நம்பர் கொடுத்திருந்தோம். அவன்தான் சொன்னான். இவன் மட்டும் இல்லை, எங்களுக்கு தெரிஞ்ச உன் பிரெண்ட்ஸ், அருணா பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தோம்” என்றார் மஞ்சு.
குரு சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
பின், “நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா மாமா? எதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” என்றான் ஆனந்தனிடம்.
“வழியில சாப்பிட்டுட்டு தான் வந்தோம். அந்த வாட்ச்மேன் போன் போட்டதும், உடனே அப்படியே கார் எடுத்தது கிளம்பிட்டோம்”
“நீங்க இரண்டு பேரும் என்ன ஏதுன்னு எதுவும் இப்ப கூட கேட்டுடாதீங்க. நாங்களே கேட்டு, எப்பவும் போல கெட்டவங்கன்னு பேர் வாங்கணும். அப்படித்தானே?” என்று அஞ்சனா ஆனந்தனிடமும் வடிவேலுவிடமும் பாய்ந்துவிட்டார்.
மஞ்சுவும் முறைத்துப் பார்த்தார்.
“எங்களை கேக்க விட்டாத்தானே. கொஞ்சமாச்சும் கேப் விட்டதானே பேசுறதுக்கு?” என்றார் ஆனந்தன்.
“நாங்க என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறான். நீங்களே கேளுங்க. நாங்க வாயே திறக்கலை” என்றார் மஞ்சு.
“அருணா எப்படி இருக்கா குரு ?உடம்பு தேறிட்டாளா?”
குரு எப்படி இருக்கிறான் என்று பார்த்தாலே தெரிந்தது.
ஜம்மென்று இருந்தான். புதுசா பூத்திருக்கும் காதல், மனசுக்கு பிடித்தமான வேலை, குளிர் பிரதேசம் எல்லாம் அவனை மெருகேற்றி இருந்தது. கொஞ்சம் நிறம்கூடி, லேசாக சதை போட்டு, ஆளே பார்க்க சினிமா ஹீரோ போல இருந்தான்.
“நல்லா இருக்கா மாமா. எப்பவுமே அருணா அழகு தான். ஆனா இப்ப பார்த்தீங்கன்னா, புதுசா பூத்த வெள்ளை ரோஜா மாதிரி அவ்வளவு அழகா இருக்கா தெரியுமா?” சொல்லும் போதே அவன் குரல் அப்படி மென்மையாக இருந்தது.
“கூட்டிட்டு வந்திருக்கலாமே?”
“உங்களை எல்லாம் பார்க்க போறேன்னு எனக்கே தெரியாதே மாமா”
அதுவரை பொறுமையாக இருந்த பெண்களால் அதற்கு மேலே அமைதியாக இருக்க முடியவில்லை.
“அதானே.. எங்களை எல்லாம் பார்க்க இப்ப கூட மனசு வரல. இப்பவும் நாங்களா தேடி வரலைன்னா அப்படி போயிருப்ப. அப்படி தானே?” என்றார் அஞ்சனா.
“குருவாவது பரவாயில்லை அஞ்சு. இந்த பக்கம் வந்தா, தெரியாம கூட நம்ம கண்ணுல பட்டுடக்கூடாதுன்னு அவ வரவேயில்லை” என்றார் மஞ்சுளா.
“அப்படி தானா குரு? நாங்க அப்படி வேண்டாதவங்களா போய்ட்டோமா? “ என்றார் அஞ்சு.
குரு பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.
மீண்டும் அஞ்சுவும் மஞ்சுவும் மாறி மாறி பேசத் தொடங்கிவிட்டார்கள்.
“இவங்க வீட்ல எவ்வளவு நேரம் இருக்க முடியும்? இங்க எதுக்கு இருக்க?”
“நாளைக்கு எப்ப கிளம்புற. இப்பயாவது உண்மையா சொல்லு?”
“எந்த ஊர்ல இருக்கீங்க? பெங்களூர் வேலை விஷயமா வந்திருக்கியா? அப்ப திரும்ப இங்கயே வந்துடுவீங்களா?”
இவர்களது சத்தம் அதிகரிக்கவும், கம்லா பாட்டி எழுந்து வெளியே வந்தார்.
“சாரி பாட்டி, சத்தம் போட்டு உங்களை தொந்திரவு செய்திட்டோமா?” என்று குரு ஹிந்தியில் கேட்டான்.
“பரவாயில்ல குரு, எல்லாரும் சாப்பிட்டாங்களா? பிரிட்ஜில் பால் இருக்கு. பால் சாப்பிடுவாங்களா?” என்று கேட்டார்.
குரு அதை மொழிபெயர்க்கவும், “இல்லம்மா பரவாயில்லை, உங்களுக்கு தான் தொந்திரவு கொடுத்திட்டோம்” என்றார் ஆனந்தன் சங்கடமாக.
குரு அதை ஹிந்தியில் மொழிபெயர்த்தான் பாட்டிக்கு.
“டீ சாப்பிடறீங்களா?” என்றார் மீண்டும். குடித்தால் நன்றாக இருக்கும் போல தான் இருந்தது அனைவருக்கும். நீண்ட தூர பயணம். அனைவரும் சற்று களைத்திருந்தார்கள்.
“நீங்க போங்க பாட்டி. நான் போட்டு கொடுக்கிறேன்” என்றான்.
“எனக்கும் சேர்த்தே போடு குரு. தூக்கம் கலைஞ்சிடுச்சு, நானும் கொஞ்சம் இங்கே உட்கார்ந்துக்கிறேன்” என்று பாட்டி ஹாலில் அமர்ந்துவிட்டார்.
“என்ன அஞ்சு, இந்த கிழவி இங்கயே உட்கார்ந்துடுச்சு?” என்றார் மஞ்சுளா முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு.
“மெதுவா பேசு மஞ்சு, கேட்டுட போது “
“தமிழ் புரியவா போகுது. எல்லாம் நம்ம நேரம், இப்படி மூணாவது மனுசங்க வீட்ல வந்து அர்த்த ராத்திரி உட்கார வேண்டியதா இருக்கு”
“நம்ம பெத்ததுங்க சரி இல்லை. வேற என்னன்னு சொல்ல?”
ஆனந்தனும் வடிவேலுவும் தங்கள் மனைவிமார்களை அமைதியாக இருக்கும்படி செய்கை காட்டினார்கள் தான். அதை கண்டுகொள்ளத்தான் இவர்கள் தயாராக இல்லை.
குரு அடுப்படிக்குள் சென்று அனைவருக்கும் தேநீர் தயாரித்து கொண்டிருந்தான்.
அந்த கெஸ்ட் ரூம்ல நீங்க இரண்டு பேரும் படுத்துக்கங்க. ஆண்கள் எல்லாம் ஹாலில் படுத்துக்கட்டும் என்றார் கம்லா பாட்டி அஞ்சு மஞ்சுவிடம் தமிழில்.
“ஆங்.. “
“உங்களுக்கு தமிழ் தெரியுமா?”
“புரியும். கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன். அருணா சொல்லி கொடுத்திருக்கா ”
அருணாவின் உபயத்தில் பாட்டிக்கு தமிழ் நன்றாகவே புரியும். ஓரளவிற்கு பேசவும் முடியும். செல்லும் இடங்களில் உள்ளவருக்கு தமிழை கற்றுக்கொடுப்பதும், இங்கே வருபவர்களுக்கு தமிழை கற்றுக்கொடுப்பதும் தமிழர்களின் தனிச்சிறப்பு அல்லவா?
அஞ்சுவும் மஞ்சுவும் பாவமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பாட்டி அனைவருக்கும் போர்வை தலையணைகள் எல்லாம் எடுத்து கொடுத்தார்.
“இவன் பாட்டுக்கு சம்மந்தமே இல்லாம இங்க வந்து இருக்கான். நாளைக்கு கிளம்பறேன்னு சொல்றான். என்ன மஞ்சு பண்றது?”
“தெரியலை அஞ்சு, தலை எல்லாம் வலிக்குது”
குரு மணக்க மணக்க தேநீர் கொண்டு வந்து கொடுத்தான்.
தலைவலிக்கு இதமாக இருந்தது. அனைவரும் அமைதியாக
பருகினார்கள்.
குடித்து முடித்ததும், “இப்ப சொல்லு” என்று மீண்டும் ஆரம்பித்தார் அஞ்சு.
“நாளைக்கு காலையில டெல்லி பிளைட்”
“ஓ அப்ப, டெல்லியில இருக்கீங்களா? அப்புறம் ஏன்டா நாக்பூர்ல இருந்து லெட்டர் போட்ட. நாங்க நாக்பூர் போய் தேடி பார்த்தோம் தெரியுமா?”
“டெல்லில எங்க வேலை? வீடு எங்கே? எங்க கிட்ட சொல்றதுக்கு என்ன?”
‘எத்தனை நாளைக்கு தான் மறைப்பது. எல்லாம் சொல்லிவிடலாம்’ என்று தோன்றியது குருவிற்கு.
“டெல்லிக்கு போகல அம்மா.. டெல்லி போயிட்டு அங்கே இருந்து ஹல்த்வானி போறேன்”
“என்ன வாணி?”
“ஹல்த்வானி.. உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கு”
“அங்க என்னடா பண்றீங்க?”
“அங்கே ஒரு டீ கடை வச்சிருக்கோம்”
“என்னது டீ கடையா?”
“என்ன குரு சொல்ற?”
அம்மாக்கள் இருவருக்கும் அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அப்பாக்களுக்குமே அதிர்ச்சி தான்.
“அறிவு இருக்கா டா உனக்கு? இதுக்கா உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சோம்?”
“எங்கயாவது கவுரவமா வேலை செய்வீங்கன்னு இல்ல நினைச்சோம்? இப்படியா மானத்தை வாங்குவீங்க?”
அதற்கு மேல் அஞ்சு மஞ்சு இருவரையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“முதல்ல கிளம்பி இங்கே வாங்க இரண்டு பேரும். இனியும் உங்க இஷ்டத்துக்கு விட முடியாது” என்று காச் மூச் என்று கத்த துவங்கினர்.
“டீ ஆத்துறதுக்கு தான் சொல்லாம அவ்வளவு தூரம் போய் உட்கார்ந்துட்டு இருக்கீங்களா? டீ தான் ஆத்தனும்னா நம்மூர்லயே ஆத்த வேண்டியது தானே?”
பாட்டிக்கு குருவை பார்த்தால் பாவமாக இருந்தது. மெதுவாக உள்ளே சென்று அருணாவிற்கு அழைத்து விட்டார்.
அருணாவிற்கு உள்ளுணர்வு சொல்லிகொண்டே இருந்தது. அப்பா அம்மாக்களை சந்திக்கும் சூழல் அங்கே ஏற்படும் என்று. அதனால் பாட்டி அழைத்து விஷயத்தை கூறவும் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை.
“சரி பாட்டி, நீங்க சொல்ற மாதிரி குருவால இரண்டு அம்மாக்களையும் சமாளிக்க முடியாது. நான் குருவிற்கு அழைத்து பேசுறேன். நேரமாயிடுச்சே பாட்டி, நீங்க போய் தூங்குங்க. நான் பேசி சமாளிச்சிடுவேன். நம்ம நேர்ல மத்ததை பேசிக்கலாம்” என்று பாட்டியிடம் பேசி அவரை தூங்க அனுப்பி விட்டு கணவனின் கைபேசிக்கு அழைத்தாள் அருணா அந்த நள்ளிரவு நேரத்தில்.
error: Content is protected !!