விழா பாதி நடந்துகொண்டிருக்கும்போதே ராஜமகேந்திரனும், ஸ்ரீதரனும் இன்னும் சில விருந்தினர்களும் கிளம்பினர். எல்லாருமே முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்பதால், அவர்களுக்கான மரியாதை செய்யப்பட்டு, அவர்கள் உரை முடியவும் கிளம்ப வேண்டும் என்பவர்களைக் கல்லூரி நிர்வாகமும் புரிந்துகொண்டது. மகேந்திரன் கிளம்பி இருபது நிமிடங்கள் கழித்தே பிரசன்னவர்தினி வெளியே வந்தாள். வாகனங்கள் நிறுத்துமிடம் வந்தவள் அவள் கார் நோக்கி செல்ல, நிச்சயம் மகேந்திரனை எதிர்ப்பார்க்கவில்லை.
இப்போது அவன் எம்.பி. வேலையிருக்கும், கிளம்பியிருப்பான் என்று நினைத்திருந்தாள். அதுவும் அவள் காரில் சாய்ந்து நின்றான். அருகே செல்ல செல்ல அவன் உபயோகிக்கும் யார்ட்லி வாசனை திரவியத்தின் நெடி பிரசன்னாவைத் தொட்டது. வேண்டுமென்றே ஓட்டுநர் பக்கம் நின்றவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் நிற்க, மகேந்திரன் நிச்சயம் பேச மாட்டான் என்பது ஸ்ரீதரனுக்குத் தெரியும்.
“மகி! சொல்றது கேளு. பார்க்கிங்’ல நின்னு சீன் போடாத, வழி விடு” என்று ஶ்ரீதரன் அதட்ட,
Advertisement
“காரை எடுக்கணும்” என்றாள் பிரசன்னா.
“எடுக்கட்டும்” என்று ஸ்ரீதரனிடம் சொன்னான் ராஜமகேந்திரன்.
“ப்ச், மாமா. இப்போ இவர்கிட்ட சண்டை போடுற அளவு எனக்குத் தெம்பில்ல” என்று கடுப்போடு சொன்னாள் பிரசன்னா.
Advertisement
“ஏன் மா சண்டை போடணும்? நீதானே கோச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போன. நீ வீட்டுக்கு வந்துட்டா இவன் ஒழுங்கா இருப்பான்” என்று நண்பனுக்காகப் பரிந்துப் பேசினான் ஸ்ரீதரன்.
Advertisement
“அக்காவுக்குப் போன் போடவா மாமா?” பிரசன்னா ஸ்ரீதரனை மிரட்டினாள். பிரசன்னாவின் தாத்தா வெங்கட கிருஷ்ணனின் தம்பி பேத்தியைத்தான் ஸ்ரீதரன் திருமணம் செய்திருக்கிறான். வெங்கட கிருஷ்ணனின் தம்பி மகன் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் இறந்திருக்க, அவர் மகள் மானசா பெரும்பாலும் பெரிய தாத்தா வீட்டில்தான் இருப்பாள்.
“நீ என்னை வெறுப்பேத்திப் பார்க்காத, அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான் மகேந்திரன் கோபத்தை அடக்கி.
“இன்னும் செய்ய என்ன இருக்கு? என்னோட ஒரு கேள்விக்குப் பதில் இல்லை. உங்க இஷ்டம்னு எல்லாரையும் கஷ்டப்படுத்துவீங்க” என்றாள் பொறுமலாக. ஸ்ரீதரன் உடனே,
“இங்கே வச்சு சண்டை போடணுமா?” என்றான் கொஞ்சம் அதட்டல் குரலில். அவனுக்கு இருவரும் இப்படி பொது இடத்தில் பேசுவது பிடிக்கவில்லை. அதை விட இன்னும் அங்கே நின்றால் வார்த்தைகள் விடுவான் என்று ஸ்ரீதரன் அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.
“பதில் என்ன ஒரு புண்ணாக்கும் கிடையாது உனக்கு. நீயா வந்தா வா இல்ல போடி” என்று சீறிவிட்டு சென்ற கணவனை கலக்கத்தோடு பார்த்தாள் பிரச்சன்ன வர்தினி. அவளது கலக்கத்தை இன்னும் கூட்டவென வந்தான் பிரபஞ்சன்.
“இதுக்குத்தான் இங்க வந்தியா?” என்ற கோபக்குரலில் திரும்பினாள் பிரசன்னா.
“அண்ணா” என்று பிரசன்னா பதில் சொல்ல நினைக்க,
“இவனோடு சண்டைப் போட்டு வேண்டாம்னு வந்துட்டு இப்ப என்ன பேச்சு வேண்டியிருக்கு?” என்று கேட்க,
“சண்டைப் போட்டுத்தான் வந்தேன், வேண்டாம்னு வரல. நீ ஏன் இங்க வந்த? என்னை ஃபாலோ பண்றியா?” என்றாள் பிரசன்னா.
“நீ காலேஜ் வந்தன்னு வீட்ல சொன்னாங்க, தனியா வந்துருக்கனு உன்னைப் பத்திரமா அழைச்சிட்டுப் போக வந்தேன்.” என்றவன் அவளைக் காரில் ஏற சொல்லி அவன் காரை இயக்கினான்.
காரை மெல்ல வெளியே நகர்த்தியவன் தங்கையிடம், “அவனை வேண்டாம்னே நீ முடிவு பண்றது எல்லாருக்கும் நல்லது” என்ற அண்ணனை இறைஞ்சுதலாகப் பார்த்தவள்,
“அவர் எதுவும் பண்ணிருக்க மாட்டார்ணா” என்றாள் வரவழைத்த திடத்துடன்.
“பண்ணலன்னா அவனுக்கு நல்லது. இல்லைன்னா இல்லைதான்! எதுவும்!! அவனும் இல்லை, அவனோட உனக்கு வாழ்க்கையும் இல்லை!” என்ற ரஞ்சனை புதிதாகப் பார்த்தாள் பிரசன்னா. அவளின் அண்ணா இப்படியான வார்த்தைகளைப் பேசுவான் என்பதை நம்பவே முடியவில்லை.
“நீ இப்படி பேசுவனு நான் நினைக்கல ரஞ்சண்ணா. உனக்கு இது நல்லா இல்ல” என்றாள் தாங்க முடியாமல்.
“நடக்குற விஷயங்கள் என்னை அப்படி பேச வைக்குது பிரசன்னா” என்றவன் மனத்திலும் பாரம். அவனுக்கு எப்போதுமே ராஜமகேந்திரனைப் பிடிக்காது. தங்கைக்குப் பிடித்தபோதும் அவ்வளவு எதிர்த்தான். பிரசன்ன வர்தினி அவ்வளவு போராடி அவனை மணந்தாள். இப்போது வந்த பிரச்சனையில் ரஞ்சனுக்கு யாரையும் நம்ப முடியவில்லை.
பிரசன்னா கண்களை மூடிக்கொண்டாள்.
மகேந்திரனோ நண்பனிடம் பொறுமினான்.
“பதில் வேணுமாம். என்னை நம்ப மாட்டாளா அவ?” என்று கத்தினான்.
“கத்தாத டா. கார் ஒட்டுறேன்ல.” என்ற ஸ்ரீதரன்
“உன் ஹிஸ்டரி அப்படி. காலேஜ் எலெஷன்ல என்ன செஞ்சன்னு மறந்துட்டியா?” என்று ஸ்ரீதரன் கேட்க, மகேந்திரனுக்கு அந்த நாட்களின் ஞாபகங்கள்.
“டேய் ராஜா! இப்போ ஏன் டென்ஷனா இருக்க? இதுக்குத்தான் படிக்கிற காலத்துல எலெக்ஷன் எல்லாம் வேண்டாம் சொன்னேன்.” வைதேகி மகனை கத்தினார்.
“அவனே தோத்துட்டோம்னு இருக்கான். அவனைப் போய் பேசுறியேம்மா” தேசிகன் மருமகளை நிறுத்த,
“பேசட்டும் விடுங்கப்பா. இங்க பாரு டா ராஜா, உன் ஆசைக்கு எலெக்ஷன்ல நின்ன. அத்தோட அது முடிஞ்சுப் போச்சு. எங்க ஆசைப்படி நீ டாக்டர் ஆகல, உன் இஷ்டப்படி டிகிரி முடிச்ச, இப்போ லா முடிச்ச. ஓகே. ஒழுங்கா ஒரு நல்ல லாயரா பார்த்து ப்ராக்டீஸ் பண்ணு. சுப்ரீம் கோர்ட்ல பண்ணுமா, டெல்லி போ.” என்று மகனின் பக்கத்தில் உட்கார்ந்து வித்யாதரன் சொல்ல, ராஜா அவரை ஒரு பார்வைப் பார்த்தான். அவர் சொல்லியதை ஏற்காத பாவனை.
ராஜமகேந்திரன் அமைதியாக இருந்தான். அவனால் முதல் தோல்வியை ஏற்க முடியவில்லை. கஷ்டமாக இருந்தது, வீட்டினரும் புரியாமல் பேச இன்னும் கோபம் வந்தது.
“அப்பா! அவன் மட்டும் அரசியல் அது இதுனு ஆரம்பிச்சான், அவ்வளவுதான் சொல்லிட்டேன்.” என்றிட
“முதல்ல நீ உங்கப்பன் பேச்சைக் கேட்டியாடா, உன் மவன் கேட்க? உன் இஷ்டப்படிதானே நீ நடந்த, உன் புள்ளையும் அப்படித்தான் இருப்பான்” என்று தேசிகன் பதில் கொடுத்தார்.
அவருக்கும் மகன் தன்னைப் போல் தீவிர அரசியலில் இல்லை என்ற ஆதங்கம் உண்டு. அவரது நண்பர் இரத்னவேலின் மக்களும் அப்படியே. தாங்கள் வளர்த்த கட்சியில் அவர்களுக்குப் பின் அவர்களின் வாரிசாக யாருமில்லாமல் யாரோ வந்து அமரப்போகிறார்களே என்ற ஆதங்கம் நிறைய. வயதாக ஆக கட்சியில் அவர்களுக்கான முக்கியத்துவம் வேறு குறைந்துபோனது. அதை உணர்ந்த இரத்னவேல் தீவிர அரசியலில் இருந்து விலகிவிட, தேசிகனுக்குப் பெயரனின் ஆர்வம் புரிந்துபோனது. அதில் உற்சாகமடைந்தவர் கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை குறையவிடவில்லை. பெயரன் முதன்முதலாக கல்லூரித் தேர்தலில் நிற்கவும் மகிழ்ந்துப்போனவருக்கு அவனின் தோல்வி பொருட்டாகத் தெரியவில்லை.
அவர் பார்க்காத தேர்தலா? தோல்வியா? அரசியல் களத்தில் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வெற்றி வாகை சூடலாம். தோல்வி என்று துவண்டுவிட்டால் மறந்துவிட்டு மக்கள் அடுத்த அரசியல்வாதியைத் தேடிப்போய்விடுவார்கள் என்பதை நன்குணர்ந்தவர்.
வித்யாதரனுக்கும் வைதேகிக்கும் மகன் தேர்தலில் தோற்றது சந்தோஷமாக இருந்தது. அந்த தோல்வி அவனை மீண்டும் அரசியல்பக்கம் பார்க்க விடாதென்று எண்ணினார்கள். ஆனால் வெற்றி தருகின்ற போதையை விட, தோல்வி தருகின்ற வலியும் வலிமையும் அதிகமாகிற்றே?
“மச்சீ! உன்னை யாரு சரக்கு வாங்கித் தர சொன்னா?” என்ற ஸ்ரீதரனுக்குச் சிரிப்பை அடக்க கஷ்டமாக இருந்தது.
ராஜமகேந்திரன் கல்லூரி மாணவர் செயலாளர் பதவிக்கு நின்றான். ஜுனியர் மாணவர்கள், அவன் வகுப்பினர் சிலர் அவனிடம் பார்ட்டி வேண்டும், பார் செல்ல வேண்டும் என்று கேட்டிட பணத்தை செலவழித்து அவர்களை வழிக்குக் கொண்டு வர நினைத்தவன் அதையே செயலாற்றினான். என்ன தேர்தல் முடிந்து செய்திருந்தால் தப்பித்திருப்பான், அவன் நேரம் அவர்கள் கேட்டதை செய்தால் ஓட்டு கிடைக்கும் என்றெண்ணி தேர்தலுக்கு முதல்நாள் இரவு அவர்கள் கேட்டபடி பணத்தைக் கொடுத்திருந்தான். எல்லாரும் குடித்துவிட்டு இரவு முழுவதும் ஆட்டம் போட்டு ஹேங்ஓவராகி மதியத்திற்கு மேல்தான் வந்தனர். கல்லூரி தேர்தலோ மதியம் பன்னிரண்டு மணி வரைதான். வர வேண்டிய ஓட்டுகள் வந்திருந்தால் ராஜமகேந்திரன் ஜெயித்திருப்பான்.
அதுவே அவனுக்கு முதல் அரசியல் பாடமாக அமைந்தது. வேண்டும் என்றாலும் வேண்டுவதை கேட்ட உடன் தந்துவிட கூடாது என்ற அரசியல் விதியை அவன் கற்றான். பொறுமையாக பேசி ஓட்டுப்போட்டால்தான் பார்ட்டி என்று சொல்லியிருந்தால் ஜெயித்திருக்கலாம், அவனோ அவர்கள் கேட்டபடி செய்தால் தன் வழிக்கு வருவார்கள் என்று தவறாகக் கணித்துவிட்டான்.
ஆனாலும் அன்று கற்ற உத்தி இப்போதுவரை அவனுக்குத் துணை செய்கிறது. அவன் வேலை முடியாமல் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டான். அவனுக்கு எதிராக நின்று ஜெயித்த திலக் எந்த குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்கவில்லை, ராஜமகேந்திரன் கல்லூரியில் அந்த வயதுக்கே உரிய கலாட்டா எல்லாம் செய்யும் குறும்புக்காரன். திலக் அப்படியில்லை, எப்போதும் யாருக்குப் பிரச்சனை என்றாலும் முன்னே நிற்பான். முன்னுதாரணமான ஒரு மாணவன். ராஜா அதற்காக மோசமானவனில்லை, ஆனால் வாய் அதிகம். எனக்கென்ன என்ற ஒரு எகத்தாளமும், நக்கலும் பேச்சில் இருக்கும்.
பெருமூச்சோடு காருக்கு வெளியே பார்த்தவன், திரும்பி நண்பனிடம்,
“ஜெயிக்கணும்னு தானே எல்லாரும் வாழ்றானுங்க. எந்த விஷயத்தை ஆரம்பிச்சாலும் தோத்தா பரவாயில்லனு மைண்ட்செட்ல இருக்காங்களா யாராச்சும்? நான் ஜெயிக்கணும்னு சில விஷயங்கள் பண்ணியிருக்கேன், பண்ணேன். இப்போ அதுக்காக என்னை விட்டுப் போவாளா?” என்றவனிடம்
“மகி! பிரசன்னாவோட பேசி அவ கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. உங்களுக்குள்ள ஏன் டா ப்ராப்ளம்?” என்று சொல்ல,
“அது அவளுக்குப் புரியணும். என்னை விட மூணாவது மனுஷங்க அவளுக்கு முக்கியமா போய்ட்டாங்க, அப்படிப்பட்டவளுக்கு நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்ல” என்றான்.
“நீ நேரா ஆபிஸ் போ. அங்க கொஞ்சம் வேலையிருக்கு” என்றவன் காரில் ப்ளூ டூத்தை ஆன் செய்து பாடலை ஒலிக்கவிட்டான்.
“ஏக் லடுக்கி கோ தேக்கா த்தோ ஐசா லகா” என்று குமார் சானுவின் குரலில் பாடல் ஒலித்தது. மெல்ல ராஜமகேந்திரனின் இதழ்களும் பாடலை முணுமுணுக்க, கண்கள் மூடின.
அந்த பாடல் வரிகளைப் போல் அவளைப் பார்த்த கணம், அவள் பேசிய கணம் எல்லாம் அவ்வளவு பிடித்தது. ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிடித்தது, அந்த பிடித்தமே இன்று இத்தனை கோபம் கொள்ள காரணம்.
பிரசன்ன வர்தினி ரஞ்சனோடு வீட்டுக்குள் நுழைந்தான். பிரபஞ்சன் அவன் அம்மா நர்மதாவிடம், “அம்மா! பெரியம்மாவுக்கு டின்னர் அனுப்பிட்டீங்களா?” என்று கேட்க
“உங்க தாத்தாவும் அப்பாவும் ஹாஸ்பிட்டல் போனாங்க, அவங்ககிட்ட கொடுத்துவிட்டேன்” என்றார்.
மகள் முகத்தை நர்மதா பார்க்க, அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தவள், “பசிக்குதுமா” என்றிட,
“இரண்டு பேரும் வாங்க, சாப்பாடு வைக்கிறேன்” என்றார்.
அண்ணும் தங்கையும் உண்டு முடிக்க, வெங்கட கிருஷ்ணனும் அவர் மகன் கவியரசனும் வீடு வந்தனர். வெங்கட கிருஷ்ணன் முன்னாள் அமைச்சர். கவியரசன் அரசியலில் இல்லை, தொழிலதிபர்.
“அப்பா” என்று பிரபஞ்சன் பார்க்க, கவியரசன் வருத்தமாக தலையசைத்தவர் உண்ணாமல் அறைக்குள் போய்விட்டார். வெங்கட கிருஷ்ணன் பெயரனிடம்,
“என்னம்மா காலேஜ் ஃபங்க்ஷன் எப்படி போச்சு?” என்று கேட்க,
“நல்லா போச்சு தாத்தா” என்றவளிடம்
“உன் புருஷன் என்ன சொல்றான்” என்றார். அந்த குரலின் பேதம் பிரசன்னாவிற்கு நன்றாகப் புரிந்தது.
“அவர் எதுவும் பண்ணியிருக்க மாட்டார் தாத்தா.”
“தெரியத்தானே போகுது. அப்போ யாருக்காகவும் நான் பார்க்க மாட்டேன்” என்றிட, பிரசன்னாவின் உடலில் அச்சம் பரவி உள்ளே நடுங்கியது.
*********
அடுத்த நாள் அவனது தொகுதி எம்.பி அலுவலகத்தில் இருந்தான் மகேந்திரன். MPLAD எனப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த முக்கியத் திட்டத்திற்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஸ்ரீதரனோடும், மற்றவர்களோடும் ஆலோசித்தான். திட்டம் சிறப்பானதாக இருக்க வேண்டும், அவன் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவனை நினைவு கூறும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதானே அடுத்த தேர்தலில் இவனை நினைப்பார்கள். செய்யும் தவறுகளை நொடிகளில் மறக்கடித்து, நல்லவைகளை வருடக்கணக்கில் மக்கள் மனத்தில் பதிய செய்பவனே திறமையான அரசியல்வாதி.
“பஸ் ஸ்டாப் கட்ட வேண்டும்”
“அங்க ரோட் போடலாம்” என்றும் ஆலோசனைகள் நடக்க, ரூமில் இண்டர்காம் ஒலித்தது.
ராஜமகேந்திரனின் பி.ஏ சுமன் எடுத்துப் பேசினான்.
“சார் உங்களைப் பார்க்க ஏ.சி.பி வந்திருக்காராம்.” என்றதும் ஸ்ரீதரன் துணுக்குற்றான்.
நண்பனைப் பார்க்க, “வெயிட் பண்ண சொல்லுங்க சுமன். நான் அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொல்லி கவனிக்க சொல்லுங்க” என்றான். ஆலோசனை அப்படியே நிற்க எல்லாரும் வெளியேறினார்கள்.
“மச்சான்! லாயரை வர சொல்ல வா” என்று கேட்டவன் ராஜாவின் முறைப்பில்,
“சாரி டா, டென்ஷன்ல பைத்தியமாகிட்டேன். நம்மளே லாயர்தானே? இருந்தாலும் ஒரு நல்ல லாயர்” என்று இழுக்க,
“மிஸ்டர். ஸ்ரீதரன் என்னை வயலென்ஸ்ல இறங்க வைக்காதீங்க” என்று பல்லைக்கடித்தான்.
“எல்லாம் அந்த எக்ஸ்.மினிஸ்டர் வேலையா இருக்கும். அவர் வீட்ல பிரச்சனை’னா எல்லாரையும் குறை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.” என்று தலையைத் தேய்த்தவன் என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஏசிபி இருந்த அறைக்குச் சென்றான். அங்கோ ட்ரேயில் காஃபி ஆறிக்கொண்டிருந்தது, சுமன் அங்கேயே நிற்க ஏசிபி காஃபி குடிக்க மறுத்துவிட்டான் என்று புரிந்தது. இளைஞனாகத்தான் இருந்தான். காக்கி உடையில் இருந்தவன் ராஜமகேந்திரன் வந்ததும் எழுந்து நின்று,
“ஹலோ சர்” என்றான்.
“சொல்லுங்க சர்” என்று மகேந்திரன் சொன்னவன் அவனை உட்கார சொல்ல,
“உங்ககிட்ட கொஞ்சம் எங்கொயரி பண்ணனும் சர்” என்றான்.
“இவர் ஒரு சிட்டிங் எம்.பி ஏசிபி. எந்த விஷயமா நீங்க விசாரிக்கணும்? எஃப்.ஐ.ஆர்’ல இவர் பெயர் இருக்கா? என்ன க்ரவுண்ட்ல விசாரிக்கணும் சொல்றீங்க?” என்று ஸ்ரீதரன் அரசியல் ஆலோசகனாக, அதிகாரத்தோரணையில் பேச அந்த ஏசிபியோ அலட்டிக்கொள்ளவில்லை.
“விசாரிச்சாதான் எஃப்.ஐ.ஆர்’ல இவர் பெயரை சேர்க்கணுமா இல்லையானு தெரியும்.” என்றவன் பெயரைப் பார்த்தான் ஸ்ரீதரன். இவன் யார் என்று விசாரிக்க வேண்டும் என்று குறித்துக்கொள்ள, மகேந்திரன் சுமனையும் ஸ்ரீதரனையும் போக சொன்னான்.
“சொல்லுங்க ஏசிபி. என்ன தெரியணும் உங்களுக்கு?” என்று கேட்க, ராஜமகேந்திரனின் அந்த நிதானம் உண்மை தந்ததா இல்லை நடிக்கிறானா என்று ஆராய்ந்தான் ஜீவபிரகாஷ்.
வெளியே வந்த ஸ்ரீதரன் ஜீவபிரகாஷ் யாரென்று விசாரிக்க சொன்னவன், நண்பன் வருவதற்காக அறையில் பரபரப்பாகக் காத்திருந்தான்.