உனக்கென இருப்பேன்-17
உனக்கென இருப்பேன்-17
சொல்லு யாரந்த கீர்த்தி ?விசாரணை படலம் ஆரம்பம் ஆனது.
அது …அது …தடுமாறினான் . சட்டென்று சமாளிக்க அவனுக்கு வரவில்லை.
Advertisement
ஐயோ எங்கண்ணன் வெடக்கப்படறாரு டோய் ….இதை நான் யாருகிட்டேயாவது சொல்லியே ஆகணும் டோய் , இல்லைனா என் தலை வெடிச்சிடும் டோய் ….கவுண்டமணி மாடுலேஷனில் அச்சு கையை காலை உதைத்து டயலாக் பேச…
ஏய் லூசு வாயை மூடு ! கெஞ்சினான் .
அப்போ உண்மையை சொல்லு மேன் !
Advertisement
நீ அடிவாங்கப் போற ….மீண்டும் அவள் வாயை பொத்தினான்.
Advertisement
அம்மா ….அம்மா அவள் சத்தமிட்டு அழைக்க ….
இம்சை கொன்னுடுவேன் உன்னை …..தலையை பிடித்து மாவாட்டி அவள் கையில் இருக்கும் நோட்டை பிடுங்கிக் கொண்டு போனான்.
அண்ணா கீர்த்தி யாரு ? சொல்லிட்டு போ ! இல்லைனா எனக்கு மண்டையே வெடிச்சுடும் .
Advertisement
த…சீ போ ….அவன் சலித்துக் கொண்டு நடந்தான்.
இரு உனக்கு இன்னைக்கு லட்சார்ச்சனை இருக்கு! அம்மா உன் புள்ள என்ன பண்ணி இருக்கு தெரியுமா ?மொட்டை மாடியில் நின்று சத்தமாக கத்தினாள் .
ஏய் லூசு மானத்தை வாங்காதே ….சொல்லி தொலையறேன் உன் திருவாயை மூடு !
அப்படி வா வழிக்கு !துள்ளி குதித்துக் கொண்டு அண்ணனுக்கு அருகில் ரகசியம் கேட்க வந்து நின்றாள் .
நான் சொல்வேன் ஆனா நீ யாருக்கும் சொல்லக் கூடாது !
டீல் என்றாள் கட்டை விரல் உயர்த்தி.
“…………………………”
அவளை முதன் முதலில் பார்த்ததில் இருந்து வாரா வாரம் தவறாமல் அவளை பார்ப்பது வரை கூறினான் .
ஆளு எப்படி ? ஆர்வமாய் கேட்டாள்.
உன்னை மாதிரி பூசணிக்காய் மாதிரி இருக்க மாட்டா…. கண்ணுக்கு லட்சணமா அழகா இருப்பா….கண்கள் மின்ன ரசனையுடன் சொன்னான்.
உன்னை எப்படி பார்க்குது அந்த பொண்ணு ?
ஏய் நான் தான் அவளை பார்க்கிறேன் !
ஒன் சைட் லவ்வா? அதுக்கா இவ்வளவு ஸீன்? நக்கலாய் சிரித்தாள் .
ஏய் …தங்கையை முறைத்தான்.
அவ சின்ன பொண்ணு ! அவ படிப்பு முடியட்டும் .
சின்ன பொண்ணை ஏன் லவ் பண்ற ?
ராமா ! உன்கிட்ட சொன்னேன் பாரு? தலையில் அடித்துக் கொண்டான்.
அவசரப்பட்டு படிக்கிற பொண்ணுக்கு பிரப்போஸ் பண்ண முடியுமா ?
பின்ன பாட்டிக்கா பண்ணுவாங்க ? வாய் பொத்தி சிரித்தாள் .
நானும் ஒரு தங்கச்சி கூட பிறந்தவன் தானே ?
தம்பி நீ அதுக்கெல்லாம் சத்தியமா சரிப்பட மாட்ட! அவன் தலையில் தட்டினாள்.
அமைதியாய் அமர்ந்திருந்த அஸ்வினை கண்டு மனம் இறங்கிய தங்கை பிரண்ட்லியா ஒரு ஹாய் ஹலோ சொல்றத்துக்கென்ன ? பேச்சை மாற்றினாள்.
அச்சு நான் இன்னும் ஒரு வேலை தேடிக்கலை . அப்பாட்ட பட்ட கடனை அடைக்கல ….அதுக்குள்ள லவ்வில் விழறதெல்லாம் சரியா வருமா ?
ரொம்ப கஷ்டம் ! முணுமுணுத்தாள்.
சரி அவங்க நம்ம ஆளா ?அடுத்த குண்டை தூக்கி போட்டாள்.
தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கினான்.
தெலுங்கு பேசறா அச்சு ….அப்போ நாயுடு ,செட்டி,ரெட்டி இப்படி இருக்குமோ…எதுவா இருந்தா என்ன? அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியும்? நல்ல பொண்ணு …குணமா இருக்கா . இது போதாதா?
இப்போவே கண்ணை கட்டுதே …நீ எப்போ லவ்வை சொல்லி கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு எப்போ எனக்கு அண்ணியா வர்றது ?
அதெல்லாம் நடக்கும் …நீ யார்கிட்டேயாவது மூச்சு விட்ட உன்னை கொன்னுடுவேன் ! மிரட்டினான்.
“………………………….”
நாட்கள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது. படிப்பு வேலை கூடவே கீர்த்தியின் நினைவு என்று அஸ்வினின் நாட்கள் அழகாய் கழிந்து கொண்டிருந்தது.
எவ்விதத்திலும் கீர்த்தியை பாதிக்கா வண்னம் தன ஒருதலை காதலை அழகாய் வளர்த்துக் கொண்டிருந்தான் .
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அவனுக்குள் ஆழமாய் வேரூன்றியது.தன் காதல் கைகூட வேண்டும் எனில் தனக்கு அவசியம் வேலை தேவை என்று உணர்ந்திருந்தான்.
“………………………..”
டேய் அஸ்வின் இப்போல்லாம் ரொம்ப அழகாயிட்டே போற …! தனியா சிரிக்கிற …கவிதை எழுதுற …என்னடா சங்கதி ? உயிர் தோழன் ராகவ் வாயை பிடுங்கினான்.
அதெல்லாம் ஒண்ணுமில்லைடா என்று சிரித்து மழுப்பினான்.
அஸ்வின் உன்னை எனக்கு தெரியதா?UG ல இருந்து ஒண்ணா தானே படிக்கிறோம்? அவன் முதுகில் தட்டி விட்டு போனான் ராகவ்.
காதல் ஒரு பக்கம் இருந்தாலும் அதிலே முற்று முழுதாக அமிழ்ந்து போகாமல் படிப்பில் தீவிர கவனம் செலுத்தினான்.
கண்டிப்பாய் ஜெயிக்க வேண்டும் ! காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு வரும் அப்போது தகுதி தராதரம் அலசி ஆராயப்படும். அரசு உத்தியோகத்தில் அமர்ந்து கெத்தாக பெண் கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.
அவனை உந்தித் தள்ளும் ஊக்க சக்தியாக அவன் காதல் மாறியது .
“………………………………..”
அண்ணா உன் காதல் தேவதை என்ன சொல்றா ? அக்ஷயா ஆர்வமாய் கேட்டாள்.
அவ என்ன சொல்லுவா ?
நீ ஏதாவது பேசினாத்தானே அவ பதில் சொல்லுவா ? அஸ்வின்னு ஒருத்தன் இருக்கான்னே அவளுக்கு தெரியாது . இப்படியே ஆறு மாசம் போயிடுச்சு ! நீ தான் காதல் பயிரை வளர்த்துட்டு வர …அவளுக்கு இன்னும் உன்னை தெரியவே இல்லை .
சீக்கிரம் உன் லவ்வை சொல்லுண்ணா. பொண்ணு வேற அழகா இருப்பான்னு சொல்ற …நடுவில் புகுந்து எவனாவது ஆட்டைய போட்டுட போறான்.
ஏய் வாயாடி என்ன பேச்சு இது ? முகம் கசங்கி போனான்.
அண்ணனை எண்ணி கவலை கொண்டாள் ஆருயிர் தங்கை.
“……………………………….”
என்ன அஸ்வின் வீக் என்டில் தான் தவறாமல் ஊருக்கு கிளப்புவ இன்னைக்கு வென்ஸ்டே கிளம்புற ? என்னடா நடக்குது ? ராகவ் குடைந்தெடுத்தான்.
சும்மா ….கண்கள் சிரிக்க உதடு விரிந்தது.
டேய் நாளைக்கு பிப்ரவரி 14 . அது கூட ஸ்பெஷலா இருக்கலாம் என்றான் தினகரன் . அவர்களின் இன்னொரு நண்பன்.
இருக்குமடா மச்சி ….கொஞ்ச நாளாவே சார் தனி உலகத்தில் சஞ்சரிக்கிறார்.
ச்சீ போங்கடா …வெட்கத்தில் அவர்களை விரட்டினான்.
மச்சி சீக்கிரம் எங்களுக்கு பார்ட்டி உண்டு ராகவ் விடாமல் சீண்டினான்.
இப்போதைக்கு இல்லை இன்னும் ரெண்டு வருஷம் போகனும் ! சிரித்தபடி பேக்கை இழுத்து மூடினான்.
ஏண்டா ஒண்ணாங்கிளாஸ் புள்ளையவா லவ் பண்ற ? தினா கேட்க …மற்றவர்கள் கல கலத்து சிரித்தனர்.
ராஸ்கல் …பல்லை உடைப்பேன் இன்னைக்கு நான் தான் உங்களுக்கு என்டர்டெயிண்மெண்டா? சிரித்துக் கொண்டே கிளம்பினான்.
“………………………”
பிப்ரவரி 14 இதுவரை இந்த நாளை அஸ்வின் யோசித்தது கூட இல்லை.
தோழர்கள் கல்லூரி நாட்களில் அவரவர் ஆளோடு கொண்டாடும் போது என்ன கல்ச்சரோ என்று நக்கலாய் சிரித்து நகர்ந்து விடுவான் .
இன்று அந்த நாளை எதிர்நோக்கி …..அவள் முகம் கண்டுவிடும் முனைப்புடன் தான் ஊருக்கு கிளம்புகிறான் .
என்னண்ணா முந்தா நாள் தான் போன ? அதுக்குள்ளே ரிட்டர்ன் ஆகிட்ட… துளைத்து எடுத்தாள் இம்சையாகி போன தங்கை .
நீ +2 தானே படிக்கிற …படிக்க எவ்வளவு இருக்கு போய் படி ! நல்ல மார்க் வாங்கலைன்னா ஒரு குப்பனையோ சுப்பனையோ கட்டி வச்சிடுவாங்க போய் கவனமா படி …விரட்டினான் .
“…………………………”
இரவெல்லாம் எழுதினான் எழுதினான் எழுதிக் கொண்டே இருந்தான்.
எழுதினான் …அடித்தான் …கிழித்தான் …மீண்டும் எழுதினான். காகிதப்பூ போல் அவன் சுருட்டி மூலையில் வீசிய காகிதங்கள் அவனை பரிதாபமாய் பார்த்து விழித்தது.
காதலித்துப் பார் கவிதை வரும் என்று வைரமுத்து சொன்னாரே ….நமக்கு ஏன் வரவில்லை ? தவித்து விட்டான்.
// அழிவின் விளிம்பில்
பல நூறு மொழிகள் இருக்கிறதாம் !
உன் மொழி அப்படியல்ல ….
ஆம் உன் மொழி “மௌன மொழி “
உலகம் உள்ளவரை
உயிர்கள் உள்ளவரை
அழியாமல் நிலைத்திடுமே !
உன் மௌனத்தை
உடைக்க நினைத்து
நான் உடைந்து
கொண்டிருக்கிறேன்!
என்றாவது ஒருநாள்
உன் மௌனத்தை என் காதல்
ஆட்சி செய்யும்
அன்று உன் மௌனம் சிதைந்து
சிறு துகளாகி
இந்த பிரபஞ்ச பெருவெளியில்
கரைந்து காணாமல் போகும் ! //
படித்து பார்த்து கொஞ்சமாய் திருப்தி பட்டுக் கொண்டான் .
பரவாயில்லையே நமக்கு கூட சுமாரா கவிதை எழுத வருதே …சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான்
அவன் மனம் அடித்துக் கொண்டது.எப்படி கொடுக்க ? நேரடியாக கொடுத்து அவளை சஞ்சலப் படுத்த கூடாது .
அவள் தோழியர் மூலம் …? ம்கூம் அவர்க்ளுக்கு தெரிந்தால் அவளை சந்தேகப்படுவார்கள்.
“…………………………”
என்னண்ணா உன் ரூமில் காகித மழை பெய்திருக்கு ? ஒரு வேளை கவிதை மழையா இருக்குமோ ? கிண்டலடித்துக் கொண்டே பெருக்கி அள்ளினாள் அச்சு .
தோட்டத்தில் கொண்டு குப்பையோட சேர்த்து கொட்டு ! அம்மா பார்த்துடப் போறாங்க அச்சு.
நடத்து …நடத்து ….சிரித்துக் கொண்டே போனாள்.
“…………………………”
முக மலர்ச்சியுடன் கிளம்பும் அண்ணனை பார்த்து கவலை அடைந்தாள் அச்சு.
கடவுளே என் அண்ணன் ஆசையை நிறைவேற்றிடு ! ரொம்ப ஆழமா ஆசையை வளர்த்துட்டு வரான்…வெகுவாய் கலங்கி விட்டாள் அச்சு.
அவள் வேண்டுதல் பலிக்கவில்லை பாவம் !
சற்று பதட்டம் இருப்பினும் ஜரூராக கிளம்பினான் அஸ்வின் .
உங்க அண்ணன் மாப்பிள்ளை கணக்கா கிளம்பி போறான் ….சாப்பிட்டு போக சொல்லு என்றார் சரோஜினி.
“மாப்பிள்ளையே தான்” மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அண்ணனை பார்த்து அர்த்தம் பொதிந்த சிரிப்பு சிரித்தாள்.
தங்கையின் பார்வையில் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அண்ணா கீர்த்தி விவகாரத்தை வீட்டில் சொல்லும் போது என்ன ரியாக்ஷன் இருக்கும் யோசித்துப்பாரு ! யோசிப்பது போல அவள் பாவனை செய்ய ….அடிங்க ….என்னை பதற வைக்கிறதையே வேலையா வைச்சிருக்க …. அவள் காதை பிடித்து திருகினான்.
“…………………………”
வழக்கம் போல் பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டான் .
கடவுளே ….கடவுளே ….அவ பேக்கை என்கிட்ட கொடுக்கணும் ! மானசீகமாய் வேண்டிக் கொண்டான்.
அஸ்வின் பக்கத்தில் ஒரு எழுபது பிளஸ் பாட்டி அமர ….வேப்பெண்ணெய் குடித்தது போல் கசந்து போனான்.
அவன் தேவதை பெண் வந்தாள் . கண்குளிர கண்டு ரசித்தான் . இன்று அவன் கண்களுக்கு பேரழகாய் தெரிந்தாள்.
கூட்டத்தின் இண்டு இடுக்கு வழியே அவளையே மொய்த்துக் கொண்டிருந்தது அவன் கண்கள்.
பாட்டி இந்த பேக்கை கொஞ்சம் வச்சுக்கோங்க ! கொஞ்சலாய் கேட்டாள்.
பாட்டி வாங்கி வைத்துக் கொண்டார்.
பாட்டி உங்களுக்கு எதுக்கு சிரமம் ? என்கிட்ட கொடுங்க ! அஸ்வின் அக்கறையுடன் வாங்கி வைத்துக் கொண்டான்.
தன் பாக்கெட்டில் இருக்கும் கவிதையை எடுத்து அவள் நோட்டிற்குள் சொருகி வைத்தான்.
கீர்த்தி இன்னைக்கு நம்ம காலேஜ் கலை கட்டப் போகுது என்றாள் ரேணு .
ம்ம்ம் என்றாள் ஆமோதிப்பாய்.
இன்னைக்கு எத்தனை பிரபோஸ் இருக்கும் எத்தனை அவாய்டன்ஸ் இருக்கும் என்றாள் ஷாலு .
மீண்டும் ம்ம்ம்ம் என்றாள் கீர்த்தி .
அவளுக்கு மனமெல்லாம் கொஞ்ச நாளாகவே அவளை சுற்றி வருபவன் மேல் இருந்தது.
எப்படியும் இன்று அவன் பிரபோஸ் பண்ணக்கூடும் என்று நினைத்தாள் .
பெரம்பலூர் வரவே மாணவர் கூட்டம் குதூகலமாய் இறங்கியது .
“………………………….”
மதிய உணவு இடைவேளை ….கீர்த்தி உன்கூட கொஞ்சம் பேசணும் ! கண்கள் மின்ன அழகிய புன்னகையுடன் நின்றிருந்தான்.
அவள் ஆழ்மனம் சொன்னது பொய்யாகாமல் வந்து விட்டானே ..!மெச்சிக் கொண்டாள்.
இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க….அவன் கண்களில் காதல் ஜுவாலை.
அப்படியா என்றாள் .
சீரியஸ் மா என்றான் கண்களில் காதலை தேக்கி . இந்த ஆலிவ் க்ரீன் சுடி உனக்கு ரொமப் அழகா இருக்கு!
தேங்க்யூ ! நான் வரட்டுமா ? அவள் கிளம்பினாள்.
ஏய் இரு ! என் பெயர் தெரியுமா ?
ம்ம்ம்ம்ம்ம் வினோத் . பிசியோதெரபி பைனல் படிக்கிறீங்க !
பாருடா ….கர்வத்துடன் புருவம் நெறித்தான்.
உனக்கு பிரண்ட்ஸ் உங்களை பெயர் சொல்லி கூப்பிடும் போது பார்த்திருக்கேன் என்றாள்.
ஸ்போர்ட்ஸ் டே அன்னைக்கு நீங்க வாலி பால் டீம் கேப்டனா வின் பண்ணீங்க ! அப்போ பிஸியோ டிபார்ட்மெண்ட்டுன்னு தெரியும் ! வெட்கத்துடன் சொல்லி முடித்தாள்.
உன்னை கொஞ்ச நாளாவே பாலோ பண்றேன் அது தெரியுமா? அவன் மயக்கும் புன்னகையுடன் கேட்டான்.
