Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

30.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 30.1

.

“கண்ணு…” விடியும் முன்பே திடீர் என எதிரில் வந்து நிற்கும் பேரனைப் பார்த்த பாட்டியின் விழிகள் விரிய, வாய்க் கொள்ளா புன்னகையோடே, “வா கண்ணு வா வா” எனப் பேரனின் கரம் பற்றி வீட்டினுள் அழைத்து வந்தார்.



Advertisement

பளீர் முகமும் அதில் பூத்திருக்கும் புன்னகையும் பேரனின் நலனில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணர்த்திடப் பாட்டிக்குள் பதட்டம் எழவில்லை. இருப்பினும், “நல்லா இருக்கியா கண்ணு? இந்நேரம் வந்திருக்க? ஏரோபிளேன்ல வந்தியா? கடைசியா எப்போ சாப்பிட்ட? பசிக்குதா?” எனப் பேரனைப் பார்த்த குஷியில் அடுக்கிக் கொண்டே போனார்.

“ஷ்ஷ்… மூச்சு விடுங்க அம்மம்மா” எனப் பாட்டியைத் தோளோடு அணைத்து விடுத்தான்.

“நீ வரதா முன்னமே சொல்ல மாட்டியா? தாத்தா அவர் அண்ணன பாக்கன்னு கோயம்புத்தூர் போயிருக்கார் கண்ணு. விடிஞ்சதும் தாத்தாக்கு ஃபோன் போட்டு வர சொல்லு” எனப் பாட்டி பேரனுக்குக் காபி வைக்க அடுக்களைக்குள் சென்றார்.

Advertisement

பாட்டியோடே அடுக்களைக்குள் நுழைந்தவன், “பெரிய தாத்தாக்கு இன்னும் உடம்பு சரி ஆகலையா?” எனவும், “எம்பது வயசாகுதில்லையா கண்ணு? உடம்பு அப்பிடி இப்பிடின்னு படுத்தத் தான் செய்யும்” என நிதர்சனத்தை உரைத்தார் பாட்டி.

Advertisement

“ம்ம்ம்… நீங்க டீ போடுங்க. பல் தேச்சுட்டு வரேன்” எனக் கொண்டு வந்த பெட்டியோடு அறைக்குள் நுழைந்தவனைக் குளுகுளு ஏசி வரவேற்றது. குளிர் காற்றோடு வாடிய முல்லை மலரின் வாசம் நாசியில் ஏறி உடலில் எங்கெங்கோ பயணப்பட்டதின் விளைவால் புன்னகை அரும்பியது புதுக் காதலனுக்கு.

உடல் முழுவதும் போர்வைக்குள் பொதிந்திருந்தாலும் மந்தமான இரவு விளக்கொளியிலும் பால் நிலா முகம் பளிச்சென்று அவன் கண்களுக்குக் காட்சியளித்தது. பின்னோடு கட்டிக் கொண்டு படுத்தால் எப்படி இருக்கும் என வாலிப மனது கேட்காது இல்லை. ‘தூங்கு மூஞ்சிய எழுப்பினா கொன்னுடுவா’ எனப் பெண்ணை அறிந்த மனது பதில் கொடுக்க, சத்தம் எழுப்பாது குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

காலைக் கடன்களை முடித்து முகம் துடைத்து வந்தவன் பாட்டி நீட்டிய மல்லி காபியை உள்ளிறக்கி, “நான் கொஞ்ச நேரம் படுக்க போறேன் அம்மம்மா. நீங்களும் போய் படுங்க” என அவன் அமர்ந்திருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டான்.

Advertisement

பயண களைப்போ இல்லை தன் வீடு என்பதாலோ, படுத்த அடுத்த நிமிடமே சீரான மூச்சோடு கண்ணயர்ந்தவனை, வேகமான உலுக்கலும், “ல்லகு… எழுந்திரி லகு” என்ற சத்தமும் எழுப்பின.

அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவன் எதிரில் பள்ளிச் சீருடையில் நின்றிருந்தவளைப் பார்த்து முறைக்க, “ம்மணி ஏழே முக்கா. இஇன்னும் என்ன தூக்கம் வேண்டி இருக்கு? என் கூட ஸ்கூலுக்கு வா” என அவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் பெண்.

“பிசாசு… நீ ஸ்கூல் போக நான் எதுக்கு டி எழுந்துக்கணும்? நிம்மதியா மனுஷன தூங்க விடுறியா? பிசாசு பிசாசு” எனக் கண்களைக் கசக்கிக் கொண்டே அவள் இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுத்தான் ரகு.

“ம்மச மசன்னு நிக்காத லகு. ல்லேட் ஆகுது”

“போ… பின்னாடியே வரேன்” என்றவன் குளியலறைக்குள் சென்ற அடுத்த நிமிடமே, “ச்சீக்கிரம் வா ல்லகு” எனச் சைக்கிளின் மணியை விடாது அடித்தாள் பெண்.

“அம்மம்மா பேபி கூட ஸ்கூல் வரைக்கும் போயிட்டு வரேன்” எனக் கிளம்பி, தன் சைக்கிளோடு நின்றிருந்தவளைப் பார்த்துக் கொண்டே அவன் சைக்கிளின் சாவியை எடுத்தான்.

“நேத்து வரைக்கும் நானா கூட வந்தேன்… இப்போ தனியா போகறதுக்கு என்ன டி?” எனத் திட்டிக் கொண்டே சைக்கிளைக் கிளப்பினாலும் ரகுவின் காலைப் பொழுது உற்சாகமாகவே ஆரம்பித்தது.

“நான் தான் ஃபர்ஸ்ட்” என வேகம் எடுத்தவளை முந்திக் கொண்டு, “ஹ ஹ ஹா… கனவுல” என்றான். சாலையில் முதல் இடம் பிடிப்பதில் இருவரும் ஆர்வம் காட்டி, சாலையில் வேகம் கூட்டியும் குறைத்தும் என ஒரு வழியாகப் பள்ளி இருக்கும் தெருவை வந்தடைந்தனர்.

சைக்கிளின் வேகத்தைக் குறைத்த இருவர் முகங்களிலும் வேர்வையோடு புன்னகையும் அரும்பியிருந்தது.

“எப்படி பேபி இருக்க?” என்றவனை ஆசையோடு பார்த்தவள், “த்த்தேங்க்ஸ் ல்லகு” என்றாள்.

புன்னகை மாறாது நெற்றி சுருக்கி, “எதுக்கு?” என்றான்.

“ஒஒரு வருஷம் வெயிட் பண்ண வைக்காம வந்தியே அதுக்கு தான்” என்றவள் அகமும் சேர்ந்தே மலர்ந்திருந்தது. காலையில் எழுந்ததுமே, கையை தலைக்குக் கொடுத்து, தன்னை குறுக்கிக் கொண்டு துயிலும் ரகுவை பார்த்தவளுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கியது. பூத்துக் குலுங்கும் மலர்கள் போல் பெண்ணின் மனதும் பூத்துக் குலுங்கிக்கொண்டே இருக்க, புன்னகை அடங்க மறுத்தது.

பள்ளியின் வாயில் வரவும், “நாலு மணிக்கு இந்த மரத்தடியில வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நான் வர லேட் ஆச்சுன்னா இங்கயே வெயிட் பண்ணு.” என்றான் சைக்கிளை ஓரம் நிறுத்தி.

வழித்துச் சீவிய தலையும், பொட்டுகளாய் பூக்க ஆரம்பித்திருக்கும் வியர்வை துளிகளுமாய் தன்னை பார்த்து சிரிப்பவளை எப்பொழுது அள்ளி அணைப்பது? காதலில் அது அடக்கம் தானே? ‘அது அது அந்த அந்த வயசுல செஞ்சாதான் சரி. இன்னும் அஞ்சு வருஷம் போகட்டும்… கட்டிப் பிடிக்கிறது என்ன? முத்தமும் சேத்தே கொடுக்கலாம்’ என ஆசை கொண்ட மனதிற்கு அறிவுரை கூறியது அறிவு.

“நாலு மணிக்கு வாச்மேன் கூட இருக்க மாட்டார்.” என்றாள் முகம் கொள்ளா புன்னகையோடு.

“ஏன் டி?” என்றான் நெற்றிச் சுருக்கி.

“இன்னைக்கு லாஸ்ட் எக்சாம். ஹாஃப் டே தான் ஸ்கூல். டுவெல் டுவென்டிக்கு வா” என்றவள், “என்னைக்கு போணும்?”  எனக் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

“ஒன் வீக் லீவ்” என்றவனிடம், “இன்னைக்கு மதியானத்துல இருந்து எனக்கும் லீவ்” எனப் பல்லைக் காட்டினாள்.

“கிளாசுக்கு கிளம்பு… ஆப்டர்நூன் பார்ப்போம்” எனக் கிளம்ப எத்தனித்தவனை உடனே விடும் எண்ணம் இல்லாதவளாகப் பேச்சை வளர்த்தாள்.

“வழியில புதுசா பெரிய ஐஸ் கிரீம் கடை திறந்திருக்கான் பார்த்தியா லகு?”

“கவனிக்கலியே. அதத் தான் திரும்பித் திரும்பி பார்த்துட்டே வந்தியாக்கும்?”

“ரெண்டு நாள் தான் ஆச்சு திறந்து”

“ஓஹ்”

“லகுஊஊ”

“என்ன? போகணுமா?”

“ம்ம்ம்”

“போகும் போது போகலாம்.”

“நிஜமா?”

“சத்தியமா டி”

இவனும் இவன் சத்தியங்களும்! அவனுக்கும் சத்தியங்கள் செய்து அலுக்கவில்லை. அவளுக்கும் அதைக் கேட்டு அலுப்பதில்லை.

“இப்போ நேரம் ஆகுது. ஸ்கூலுக்குள்ள போ. மதியம் வரேன் சரியா?”

“வந்திடுவ இல்ல? மறந்திட மாட்டியே?” என்றபின்னும் அடுத்த பத்து நிமிடங்கள் ‘பை லகு’, ‘பை பேபி’ படலம் தொடர்ந்தது.

கூறியது போலவே மதியம் சென்றவன் பார்த்தது சைக்கிள் ஹேண்ட் பாரில் தலை சாய்த்து நின்றிருந்தவளை தான்.  பிள்ளைகள் இன்னும் பள்ளியை விட்டு வெளியே வந்து கொண்டிருக்க, தான் அதிக நேரம் தாமதிக்கவில்லை என்று மூச்சு விட்டுக்கொண்டான்.

“பேபி” என்ற சத்ததிற்கு தலையை தூக்கியவள் முகம் சோர்ந்து போயிருக்க, அமைதியாக இருந்திருக்கலாம் ரகு. வாயை சும்மா வைத்துக் கொண்டிருக்காது, “தூங்கு மூஞ்சி… கேப் கிடைச்சா கொறட்டை விட்டுடு“ என அவன் கேலி பேச, சோர்ந்த முகம் கோப முகமாக மாறியது.

பதில் கூறாது வீட்டை நோக்கி சைக்கிளை அவள் ஆமை வேகத்தில் செலுத்த, “நிலா காயல பேபி. வெயில் கொளுத்துது… கொஞ்சம் ஃபாஸ்டா ஓட்டேன் டி” என்றவன் அவள் முறைப்புக்கு ஆளானான்.

“ஏன் பேபி முறைக்கிற? வெயில் கொளுத்துதுன்னு சீக்கிரம் ஓட்டச் சொன்னது ஒரு குத்தமா?” என அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே சைக்கிளின் பெடலை அழுத்திக் கொண்டிருந்தவன் பனிகூழ் கடையைக் கடந்திருந்தான்.

மூக்கு விடைக்க அவனை முறைத்தவள் வேகத்தை எல்லாம் மூச்சை இழுத்து விடுவதில் மட்டுமே காட்ட, சைக்கிள் ஆமை வேகத்தில் நகர்ந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தது.

ரகு இறங்கி அந்த பெரிய இரும்பு கதவின் ஒரு பக்கத்தைத் திறக்கவும், அவனைக் கடந்து கொண்டு அவள் சைக்கிளைத் தன் வீட்டை நோக்கிச் செலுத்தினாள். ‘என்ன ஆச்சு இவளுக்கு’ என முணுமுணுத்துக் கொண்டே வீட்டினில் நுழைந்தவனுக்கு உண்மையிலுமே அவள் கோபத்தின் காரணம் புரியவில்லை.

“சரியான வெயில் அம்மம்மா” என சோஃபாவில் அக்கடாவென விழுந்தவனை முறைத்துப் பார்த்தார் பாட்டி.

“ஏன் ஆள் ஆளுக்கு முறைக்கிறீங்க?” என்றவனுக்கு ‘என்னடா இவங்க பிரச்சின?’ என்றுதான் தோன்றியது.

“காலையில ஸ்கூல் வரைக்கும் போயிட்டு வரன்னு போனவன்… மதியம் வந்து நிக்கிற. இதுல வெயில் கொளுத்துதாம். எங்கடா சுத்திட்டு வர?”

“ஃப்ரெண்ட்ஸ்ச பாக்க கிரௌண்டுக்கு போனேன் பாட்டி. கிரிக்கெட் மேச் முடியவே நேரம் ஆகிடுச்சு. அப்படியே ஸ்கூல் போய் பேபியோட வந்தேன். அதுக்கெதுக்கு முறைக்கிறீங்க?”

அவன் கூறியதை எல்லாம் கிடப்பில் போட்டவர், “அவ வந்துட்டாளா? இங்க வராம நேராவா வீட்டுக்கு போனா? ஏன் டா அவ கூட சண்டை எதுவும் போட்டியா? வந்த அன்னைக்கே திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும்?” எனப் பாட்டி புலம்ப ஆரம்பித்தார். பின்னே… வரும் வேளையில் எல்லாம் இருவரும் உருண்டு புரண்டு ஏற்படுத்தும் சேதாரம் அதிகம் ஆகிற்றே.

“நான் என்ன இன்னும் குழந்தையா? அடிச்சு சண்டை போட? இருபது வயசாகுது! காலேஜ் போறேன். பேசராங்க பாரு…” என்றவனிடம், “நாலு மாசம் முன்னதான டா ஊற வச்ச மாங்காய்க்குச் சண்டை போட்டீங்கன்னு சந்திரிகா ரெண்டு பேருக்கும் முதுகில ஒண்ணு வச்சா?” எனவும், “ம்ம்ம்… அது அப்போ. இது இப்போ” என எழுந்து கொண்டான்.

“வயசானா எல்லாருக்கும் மறதி வருமாமே… அதெல்லாம் உங்களுக்கு வராதா?” என முணுமுணுத்துக் கொண்டே குளியல் அறையை நோக்கி நடந்தான்.

குளித்து தலையைத் துவட்டிக்கொண்டே வந்தவனை “சாப்பிடுறியா?” எனப் பாட்டி அழைக்கவும், “கொஞ்ச நேரம் ஆகட்டும். குடிக்க சில்லுன்னு ஏதாவது இருக்கா அம்மம்மா?” என்றவனைப் பார்த்தவர், “நொங்கு சர்பத் இருக்கு பார். அவளுக்கு எடுத்து வச்சுட்டு குடி. அவ வந்ததும் ஃபிரிட்ஜ் முன்னதான் வந்து நிப்பா” என்றார்.

“எத எடுத்தாலும் அவட்ட கேட்டுக்கோ… அவளுக்கு வேணும்… அவளுதுன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்? வீட்டுக்கு வந்தா என் படுக்கையில அவ தூங்கறா. இது என் வீடா? அவ வீடா? நான் தான உங்க பேரன்?”

“நீ சொல்லித் தான் தெரியுது. வருஷத்துக்கு ஒரு தரமோ… நாலு வருஷத்துக்கு ஒரு தரமோ ஒரு மாசம் வந்து தங்கி போறவன் உரிமைப் போராட்டம் நடத்துறான்னு சொன்னா இந்த திருச்சியே கைகொட்டிச் சிரிக்கும். இடத்தைக் காலி பண்ணு… படுக்கணும்” என்ற பாட்டியை முறைத்தவனால் என்ன சொல்லிவிட முடியும்? பெற்ற ஒரு பெண்ணையும் பறி கொடுத்து நின்றபவர்களுக்கு ஒரே ஆறுதல் அவன் பேபி என இவனுக்குத் தெரியாதா என்ன?

பேத்தியா பேரனா என்ற கேள்விக்குப் பாட்டியின் பதில் என்னவாக இருக்கும் என ரகுவிற்கு தெரியாதா என்ன? அந்தப் பதிலில் ஏனோ ரகுவிற்கு துளியும் பொறாமையோ கோபமோ இல்லை என்பதே உண்மை. இருந்தும் பாட்டியை வம்பிழுப்பது அவனுக்குப் பிடித்த ஒன்று என்பதால் இந்தக் கேள்வி அவ்வப்போது வருவது உண்டு.

ஒரு டம்ளரில் நொக்கு சர்பத்தை ஊற்றி உள்ளிறக்கியவனுக்கு பெண்ணவளின் மூக்கு விடைக்க முறைத்த முகமே முன்வந்து நின்றது. ‘என்னவாம் அவளுக்கு?’ என எண்ணியவன், கலக்கி வைத்திருந்த நொங்கு சர்பத்தைத் தூக்கிக் கொண்டு பின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கிரில் கேட்டு மட்டும் கொஞ்சமாகச் சாத்தியிருக்க, வீடு திறந்து கிடந்தது. வீட்டினுள் நுழைந்தவளுக்குக் கதவை அடைக்கும் பொறுமை கூட இல்லை என நினைத்தவன் அவளைத் தேடிக்கொண்டே உள்ளே சென்றான்.

“பேபி.. பேபி” கூடம், அடுக்களை எனப் பார்த்தவன் படுக்கை அறையை எட்டிப் பார்க்க, சுருண்டு படுத்து உறங்கி இருந்தாள் பெண்.

“பேபி” என மெல்ல உலுக்கவும், “எஎஎன்ன?” என எரிந்து விழுந்தாள்.

“ஏய்… என்ன டி உன்னோட பிரச்சன? சும்மா சும்மா முறைக்கிற… தேடி வந்தா எரிஞ்சு விழற?” என அவன் பங்கிற்கு எரிந்து விழுந்தான்.

சட்டென பெண்ணவள் கண்கள் பனித்துவிட, புதுமையைக் காண்பது போல் பார்த்தான். அப்படி எல்லாம் கண்ணைக் கசக்குபவளா அவன் பேபி? அவனைத் தானே அழ விடுவாள்?

“பேபி? என்ன டி ஆச்சு? ஸ்கூல்ல பிரச்சனையா?” என இறங்கி வந்தான் ரகு.

“ஒஒண்ணும் இல்ல ரகு” என்றாள் சோர்வாக.

“ரகுவா?” எனப் பதறியவன், “மறைக்காம சொல்லு… யார் என்ன சொன்னா? ஏன் இவ்வளவு டையர்டா தெரியற? என்கிட்ட மறைக்கிற அளவுக்குப் பெரிய ஆள ஆகிட்டியா?” என அவன் பாய… “ப்ச் லலகு. வயிறு வலிக்குது” என்றாள், மீண்டும் கட்டிலில் சுருண்டவள்.

“வெயில்ல வந்தது ஒத்துகல போல. சூட்டுல கூட வலிக்கும் தெரியும் இல்ல.” என்றவனிடம், “பீரியட்ஸ் டா” என்றாள் அலுப்போடு.

“மாத்திர வாங்கிட்டு வரவா?”

“வேண்டாம்… அம்மா வெந்தையம் தருவாங்க.”

“ஓஹ்… இரு இரு நொங்கு சர்பத் கொண்டு வந்திருக்கேன். குடிச்சுட்டு படு” என்றவன் அடுக்களைக்குச் சென்று ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை விழுங்கச் செய்தவன், கொண்டு வந்த சர்பத்தைப் பருக வைத்துப் படுக்க விட்டான்.

“வயிறு வலி சரி… அதுக்கு எதுக்கு என்னை முறைச்சுக்கிட்டே வந்த?” என்றதும் நினைவு வந்தவளாக மீண்டும் முறைத்தாள்.

“என்ன பேபி? சொன்னாதான தெரியும்”

“ந்நீ என்னை மரத்தடியில நிக்க விட்டுட்ட”

“அஞ்சு நிமிஷம் நின்னுருப்பியா? அதுக்கு கோபமாக்கும்?”

“வ்வ்வயிறு வலியோட லகு”

“ஓ… சாரி சாரி… எனக்கு அப்போ உனக்கு முடியலன்னு தெரியாதே. தெரிஞ்சிருந்தா அஞ்சு நிமிஷம் முன்னமே வந்திருப்பேன். சாரி பேபி”

“அஅப்பறம்…”

“அப்பறம் வேற இருக்கா? சொல்லு”

“ந்ந்நீ எனக்கு டிரைவர் வேல பாப்பேன்னு சொல்லிட்டு என்னையே சைக்கிள் ஓட்ட விட்டுட்ட. ந்நீ ஓட்டியிருந்தா நான் வலியில சைக்கிள் ஓட்டியிருக்க வேண்டியிருந்து இருக்காது.”

“அது போன தரம் சொன்னது. சொன்ன மாதிரி தினமும் டிரைவர் வேலை பார்த்தேனே.”

“ஓஹ்… அப்போ நேத்து ஒரு பேச்சு… இன்னக்கு ஒரு பேச்சா?”

“ச்ச ச்ச… அப்படி இல்ல பேபி. நீ சைக்கிள்ல வரவும் நானும் சைக்கிள்ல வந்தேன். நீ ஸ்கூட்டி பக்கம் நின்னிருந்தா, வண்டியில கூட்டிட்டு போயிருப்பேன்”

“ம்ம்… அஅப்பறம்…”

“இன்னும் எவ்வளவு பேபி?”

“அ…ஐஸ்கிரீம் சாப்பிடலாம்ன்னு சொன்னியே”

“அட ஆமா… அது உன்னால தான் மறந்தேன். அந்த முறை முறைக்கவும் மறந்துட்டேன். சாயங்கலம் வாங்கி வரேன் சரியா?”

“ம்ம்மறக்க மாட்டியே?”

“மாட்டேன் மாட்டேன். இந்தத் தரம் பிளாக்கரண்டா? காபி-கேரமல்லா?”

“ரெண்டத்துலயும் ஒரு ஸ்கூப்.”

“நாலு வாய் சாப்பிட்டுட்டுப் படு. ஈவினிங் ஐஸ்கிரீமோட வரேன்”

“ப்ச் ல்லகு. ம்முடியாத பொண்ண படுத்தற”

“நானே சோறு போட்டு எடுத்துட்டு வரேன்” என்றவன் அடுக்களையில் மகளுக்காக சந்திரிகா வைத்திருந்த உணவை எடுத்து வந்தான்.

“ஸ்பூன் வச்சிருக்கேன்… கை கூட கழுவ வேண்டாம். சாப்பிடு” என்றவனை அலுப்பாகப் பார்த்துக்கொண்டே எழுந்தவள், எண்ணி நான்கு வாய் உணவை உண்டாள்.

“ப்போதும் லகு… வயிறு வலிக்குது. படுக்கறேன்” என்றவள் அவன் வைத்திருந்த ஒரு டம்ளர் தண்ணீரை குடித்திறக்கினாள்.

“சரி படு” என்றவன் வேக வேகமாகத் தட்டில் இருந்த மீதி உணவை விழுங்கி தட்டை கழுவி வைத்து, மீதி உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்து வந்தான்.

“கதவ சாத்தி வச்சுட்டு, கிரில் கேட்ட பூட்டி, பெட் ரூம் ஜன்னல் வழியா சாவிய போட்டுட்டு போறேன். நீ எழும்ப வேண்டாம் சரியா? ஈவ்னிங் பாப்போம்.” என்றவன், அவளுக்கு வசதியாகத் தலையணைகளை வைத்து, மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி, ஜன்னல்களை நன்றாக திறந்து வைத்தவன், கூறியது போலவே வெளி இரும்பு கதவைப் பூட்டி சாவியை அவள் இருந்த அறைக்குள் போட்டுச் சென்றான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!