Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 22

அத்தியாயம் 22 

அருணாவும் குருவும் அன்றிரவே இரு வீட்டினருக்கும் அழைத்து விஷயத்தை கூறிவிட்டார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பதை விட ஒரு வித ஆசுவாசம்.



Advertisement

“என்னய்யா.. தாத்தா ஆக போற.. இனி உன்னை கையில பிடிக்க முடியாது?”

“உன்ன மட்டும் பிடிக்க முடியுமாக்கும். நாலு பக்கத்துக்கு லெட்டர் எழுதின இல்ல, அதான் அந்த கோலு கடவுள் உன் வழக்குக்கு நல்ல தீர்ப்பு கொடுத்திருக்காரு போல”

Advertisement

Advertisement

“நீ மட்டும் என்ன? நாலே வரியில கோலுஜியை கவுத்துட்ட. என்னோமோ ஒன்னு, நமக்கு ஒரு நல்ல வழியை காட்டிட்டார்…. நம்ம போய் அவருக்கு நன்றி சொல்லி மணியை கட்டிட்டு வரனும்ய்யா”

“எப்ப போகலாம் சொல்லு.. கிளம்பிடுவோம்”

Advertisement

“சரிய்யா.. ஆனா ரகசியமா செய்யணும்… இல்லனா விடமாட்டாங்கய்யா..”

“ஒரு பார்ட்டி கொடுக்கிறது?” 

“எப்ப எங்கேன்னு மட்டும் சொல்லு, உடனே கொடுத்திருவோம்..”

மேலும் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை வைத்தார்கள்.

அஞ்சுவும் மஞ்சுவும் தான் அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வார்கள். அருணா குருவிடம் இருந்து நல்ல செய்தி வந்ததும், இப்பொழுது வடிவேலுவும் ஆனந்தனும் பேசிக்கொண்டார்கள்.

நந்தன் மும்பையிலிருந்து ஒரு வாரம் லீவ் என்று வந்திருந்தான். 

அன்று அபி கல்லூரிக்கும் வடிவேலு அஞ்சனா அலுவலகத்திற்கும் கிளம்பி சென்ற பிறகு, சொர்ணம் பாட்டியும் நந்தனும் தான் வீட்டில் இருந்தார்கள்.

“நந்து, எனக்கு குருவையும் அருணாவையும் பார்க்கணும் போல இருக்கு” என்றார் சொர்ணம் பாட்டி.

“அதுக்கு என்ன ஆச்சி? வீடியோ கால் போட்டு தரவா? இப்ப அண்ணா வீட்டுக்கு சாப்பிட வந்திருப்பாங்க. இரண்டு பெரும் ஒண்ணா தான் இருப்பாங்க”

“இல்ல நந்து, நேர்ல பார்க்கணும் போல இருக்கு. என்னை கூட்டிட்டு போறியா?”

இதுவரை சொர்ணம் பாட்டி யாரிடமும் எதுவும் கேட்டது இல்லை. மிகவும் தயங்கி கொண்டு தான் கேட்டார்.

“நாளைக்கே போவோம் பாட்டி, என்கிட்ட கேக்க எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க? இருங்க நான் இப்பவே டிக்கெட் இருக்கான்னு பார்க்கிறேன்”

உடனே பாட்டிக்கும் அவனுக்கும் டெல்லி செல்வதற்கு டிக்கெட் புக் செய்தும் விட்டான்.

“நாம வரோம்ன்னு அண்ணாக்கு சொல்லிடுவோமா ஆச்சி”

“இல்ல நந்து.. சொல்லாம போவோம்”

“சர்ப்ரைஸ் ஆ… சூப்பர் ஆச்சி… நிஜமா அண்ணாவும் அண்ணியும் ரொம்ப சந்தோச பாடுவாங்க”

“நாளைக்கு காலைல திருச்சில இருந்து கிளம்பனும். இங்க வீட்ல இருந்து நம்ம ஒரு ஆறு மணிக்கு எல்லாம் புறப்படணும். எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க”

அதற்கு பிறகு சொர்ணம் பாட்டி ஒரு இடத்தில் நிற்கவில்லை. பார்த்து பார்த்து எல்லாம் எடுத்து வைத்தார்.

மாலை அஞ்சனாவும் வடிவேலுவும் வேலை முடிந்து வருகையில் எல்லாம் பேக் செய்து எடுத்து வைத்துவிட்டனர் பாட்டியும் பேரனும். ஹாலில் பைகள் எல்லாம் தயாராக அடுக்கி வைத்திருந்தார்கள்.

அபிநயா, “என்ன மட்டும் விட்டுட்டு போறீங்க இல்ல..” என்று கல்லூரி முடிந்து வந்ததில் இருந்து உம்மென்று இருந்தாள்.

“அபி, உனக்கு அடுத்த வாரம் பரீட்சை இருக்குல்ல, ரித்துவையும் உன்னையும் போன லீவுக்கு கூட்டிட்டு போனேன் இல்ல. ஆச்சியை கூட்டிட்டு இப்பதானே  போறேன், திரும்ப லீவ் கிடைச்சதும் உங்களை கூட்டிட்டு போறேன்” என்று தங்கையை வெகுவாக சமாதானம் செய்திருந்தான்.

“என்ன லக்கேஜ்? டேய் நந்தா ஒரு வாரம் லீவுன்னு தானே வந்தே, அப்புறம் எங்கே கிளம்புற?” என்றார் அஞ்சனா உள்ளே நுழைந்ததுமே.

சொர்ணம் பாட்டி, “மாசமா இருக்க பிள்ளைக்கு மாங்காய் தொக்கு இருந்தா ஒரு பிடி சாதம் சேர்த்து சாப்பிட முடியும். நான் அதை கொஞ்சம் செஞ்சிடுறேன்” என்று கூறி, அப்பொழுது அடுப்பில் மாங்கை தொக்கு கிளறிக்கொண்டிருந்தார்.

‘இந்த ஆச்சி ஜாலியா தொக்கு  கிண்டுதே.. அம்மா விஷயத்தை சொன்னா  நம்மளை தொக்கா  கிண்டிடுவாங்களே?’  என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“என்னடா பேசாம இருக்க? எங்க போற? பிரண்ட்ஸோட ஊரு சுத்த கிளம்பிட்டியா? வயசு தான் ஏறுது.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை” என்றார் அஞ்சனா கடுப்பாக.

“என்ன அபி வாசனை, பாட்டி என்ன செய்றாங்க?” என்றார் வடிவேலு மகளிடம்.

“நான் என்ன பேசுறேன். நீங்க என்ன கேக்கறீங்க? அவனே எல்லாம் முடிவு செய்வானா? இப்ப என்னன்னு கேளுங்க?” என்றார் அஞ்சனா இப்பொழுது வடிவேலுவை பார்த்து.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சொர்ணம் பாட்டி வந்துவிட்டார்.

“வா வடிவேலு.. வாம்மா அஞ்சு.. நாளைக்கு நானும் நந்துவும் குருவை போய்  பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம், அதான் மாங்காய் தொக்கு கிளறிட்டு இருந்தேன்” என்றார் சாதரணமாக.

ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை இருவருக்கும்.

“என்னம்மா திடீர்னு, அவ்வளவு தூரம் எப்படி போவீங்க.. காலையில கூட  ஓன்னும் சொல்லல?” என்றார் கொஞ்சம் அதிர்ச்சியாக.

“காலைல தான் நந்து கிட்ட கேட்டேன், உடனே டிக்கெட் போட்டுட்டான்”

அஞ்சனா நந்தனை முறைத்தார். அவன் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தன் மடிக்கணினிக்குள் தலையை நுழைத்து கொண்டான்.

 

“என்ன அத்தை நீங்க? இது என்ன விளையாட்டு விஷயமா? அவ்வளவு தூரம் உங்களால எப்படி போக முடியும்? அங்க இப்ப குளிரா வெய்யிலா ஒன்னும் தெரியாது. மொழி தெரியாத ஊர்ல என்ன பண்ணுவீங்க?” படபடவென பொரிந்தார் அஞ்சு.

“எனக்கு குருவை பார்க்கணும்மா.. போயிட்டு வந்துடறேன். காலையில ஆறு மணிக்கு புறப்படணுமாம்” 

எப்பொழுதும் போல அலட்டலில்லாத பதில். 

முன்பு அருணா கருவுற்றிருந்த போது நான் இதே மாதிரி முடிவு செஞ்சு போய் இருக்க வேண்டும் என்று நூறாவது முறையாக தன்னேயே நொந்து கொண்டார் பாட்டி.

“எனக்கு மட்டும் என் பிள்ளையை பார்க்க ஆசையா இருக்காதா? ஒரு வார்த்தை என்னை வான்னு சொல்லலை” என்றார் அஞ்சனா ஆதங்கமாக.

யாரும் பதில் கூறவில்லை. அதற்கு பிறகு அவரது புலம்பல்களை கேட்க யாரும் நிற்கவில்லை.

வடிவேலு மகளை அழைத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றார். குருவிற்கும் அருணாவிற்கும் துணிமணிகள் வாங்கி வந்தார். பாட்டியும் பேரனும் நேரமே உண்டுவிட்டு சென்று படுத்துவிட்டார்கள்.

காலை ஆறு மணிக்கு டாக்சி புக் செய்வதாக சொன்ன மகனை தடுத்துவிட்டு, “நான் கொண்டு வந்து ஏர்போர்ட்டில் விடறேன்” என்று வடிவேலுவே அழைத்து  வந்தார். அபிநயாவும் உடன் இணைந்து கொண்டாள்.

அஞ்சனா மட்டும் வீட்டில் இருந்தார்.

அஞ்சனாவிற்கு மனதிற்கு ஒரே வெறுமையாக இருந்தது. வீட்டினர் அனைவரும் தன்னை  ஒதுக்குவதை போல தோன்றியது. இத்தனை வருடம் வீட்டை விட்டு எங்கேயும்  செல்லாத மாமியார் தீடீர் என்று அவரே முடிவு செய்து கிளம்பியது ஒரு மாதிரியாக இருந்து.

குருவின் தாத்தா தவறிய பின் இவர்களுடன் தான் இருக்கிறார். அதற்கு முன்பும் பிள்ளைகளின் பொறுப்பை சொர்ணம் பாட்டியும் சொக்கன் தாத்தாவும்  ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

அன்று அவர் வேலைக்கு செல்லவில்லை. மனமும் உடலும் சோர்வாக இருப்பதை போல இருந்தது.

கிளம்பி செல்லுமுன் சொர்ணம் பாட்டி காபி போட்டு கொடுத்துவிட்டு தான்  கிளம்பி இருந்தார். அதை நினைக்கும் போது கொஞ்சம் நெகிழ்ச்சியாக இருந்தது.

“நான் என் பையனிடமும் மருமகளிடமும் எத்தனை குறைகள் கூறுகிறேன். ஆனால் இன்று வரை அத்தை என்னை ஒரு வார்த்தை குறைத்து கூறியதில்லேயே..” சுய அலசலில் ஆழ்ந்துவிட்டார்.

காலை எட்டு மணி ஆகவும் பசிக்க தொடங்கியது. என்ன சாப்பிடுவது என்று அடுப்படிக்குள் சென்று பார்த்தார்.

அவருக்கு எது எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை. கொஞ்சம் எரிச்சலாக வந்தது.

வேலைக்கு வரும் பெண்மணி காலை ஒன்பது மணிக்கு மேலே தான் வருவார்.

ப்ரிஜ்ஜை திறந்து பார்த்தார். தோசை மாவு இருந்தது. அதை எடுத்து இரண்டு தோசைகள்  ஊற்றிக்கொண்டார். நேற்று சொர்ணம் பாட்டி செய்த மாங்காய் தொக்கு ஒரு கண்ணாடி பாட்டிலில் தெரிந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

அமைதியாக தொலைக்காட்சியை ஆன் செய்து அமர்ந்து கொண்டார். அதில் வரும் காட்சிகள் மனதில் பதியவில்லை. இவருக்கும் வடிவேலுவிற்குமான திருமணம், கந்தகுரு பிறந்தது, அண்ணன் திருமணம், மஞ்சு, வேலை, பதவி உயர்வு, நந்தன் பிறந்தது, அபி பிறந்தது, மாமனாரின் மறைவு, சொர்ணம் பாட்டி உடன் வந்தது, கந்தகுரு அருணாளினி திருமணம், அவர்கள் வாழ்வில் இவரது தலையீடு, பின் அருணாவின் கர்ப்பம், வளைகாப்பு, விபத்து, குழந்தை இறந்தது என்று மனதினில் காட்சிகள் வந்து கொண்டே இருந்தது.

தலை வலிக்க தொடங்கியது.

வடிவேலு அழைத்து, “நானும் அபியும் இங்கயே சாப்பிட்டோம். நான் அபியை காலேஜிலே விட்டுட்டு ஆபிஸ் போய்டுறேன்”, என்று கூறி வைத்துவிட்டார்.

வேலை செய்யும் பெண் வந்து பாட்டி இல்லாததை பார்த்து, “எங்கே அக்கா அம்மாவை காணும்.. என்னக்கா சமைக்கட்டும்?” என்றார் அஞ்சனாவிடம்.

“ஆங் ..” என்று விழித்தார் அஞ்சனா. 

“எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு, அத்தை என்ன செய்றாங்க பெருசா” என்று தோன்றும். இப்பொழுது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.

“நீ முதலில் வீடு பெருக்கி பாத்திரம் துலக்கு”

“சரி அக்கா, ஒரு டீ மட்டும் கொடுக்கா” என்று கூறிவிட்டு அவர் தன் வேலை பார்க்க தொடங்கினார்.

“என்னது.. இவளுக்கு நாம தான் டீ போடணுமா? எனக்கு என் வீட்டில் நடப்பதே தெரியலையே..?” என்று நொந்து போனார்.

அவருக்கும் தலை வலிக்கு சூடா ஏதாவது குடித்தால் தேவலாம் போல தோன்றவே டீ தயாரித்தார். டீ குடிக்கையில் மகனின் ஞாபகம் சேர்ந்துகொண்டது.

“நீ இங்க சாப்பிடுவியா? தோசை ஊத்தவா?” என்றார் வேலைக்காரியிடம்.

“இல்லக்கா, காலையில வீட்டாண்ட சாப்பிட்டுட்டு தான் வருவேன். மதியம் தான்  இங்க சாப்பிடுவேன்”

“ஓ..அம்மா என் பையன் வீட்டுக்கு போயிருக்காங்க. நம்ம இரண்டு பேரும் தான். நீயே ஏதாவது சிம்பிளா செஞ்சிடு. நான் கொஞ்சம் படுக்கிறேன், தலை வலிக்குது “ என்று கூறி நீளிருக்கையிலே படுத்து கண்ணை மூடி கொண்டார்.

“அம்மா, அருணாவுக்கு முடியலைம்மா.. கொஞ்ச நாளைக்கு ஆச்சியை எங்க கூட அழைச்சிக்கவா? பக்குவம் சொல்லி கொடுத்தா அப்புறம் நாங்களே பார்த்துப்போம்”

“ஏண்டா, மாசமா இருக்கிறது என்ன வியாதியா? சுயநலமா யோசிக்காதீங்க, உங்களை மட்டும் பார்த்தா போதுமா? இங்க யாரு பார்ப்பா?” 

“அத்தை ரொம்ப மூச்சு வாங்குது அத்தை, நான் லீவ் போட்டு ஊருக்கு வந்துடவா?”

“இப்பவே யாராவது லீவ் போடுவாங்களா? நான் வேலைக்கு போய் மூனு  பிள்ளை பெத்துக்கலையா, பின்னாடி தான் லீவ் தேவைப்படும். பேசாம ஒன்பதாம் மாதம் வரை போ”

முதல் கரு உருவான நாட்களில் குருவும் அருணாவும் தன்னிடம் பேசியது நியாபகம் வந்தது.

 “நான் எங்கேயோ சறுக்கி விட்டேனா?” என்று முதல் முறையாக தன் பக்கம் என்ன பிழை இருக்க முடியும் என்று யோசிக்க தொடங்கினார் அஞ்சனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!