Skip to content
Post Views: 7,543
தாய்ப்பால் மட்டுமே உணவாகக் கொண்ட குழந்தை சட்டென்று அதன் உணவைப் பிடிங்கிக்கொண்டாள் என்ன செய்யும், தாயின் மடி தேடி அவளின் வாசம் தேடி ஏமாந்த பிள்ளை வாயில் வைக்கப்பட்ட பால் புட்டியை சப்பி சப்பி பார்த்துப் பிடிக்காமல் அழுது பசியில் துவண்டு நாவை மட்டும் நனைத்துக்கொண்டு அயர்ந்து தூங்கி விட்டது.
Advertisement
கனகத்திற்கு அதன் அழுகை நெஞ்சை பிளந்தது ராஜகுமாரன் தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டான் இது சரிவருமா வராதா ஒன்றுமே புரியவில்லை.
Advertisement
Advertisement
“ஏய் மாப்ள எதுக்கு இப்போ இப்படி உக்காந்திருக்க நல்ல காரியத்துக்குத்தானே வெசனப்படாதாடா சரியாப்போவும்” என்றான் செந்தில் உள்ளே நுழைந்துகொண்டு.
Advertisement
அவனுக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது குழந்தைக்குப் பேர் வைக்கும் வைபவத்திற்கு நண்பனை அழைக்க வந்திருந்தான்.
“இங்க பாரு தங்கச்சி அம்மாகாரிக்கு உடம்பு சுகமில்லன்னா பிள்ளைக்குப் பால் கொடுக்கமாட்டாங்க, இல்ல தாய்க்கு பால் சுரக்கிறது கம்மி ஆயிடுச்சுன்னா அப்போ என்ன செய்வாங்க வேற யோச்சிக்கணும்ல அப்படி நினைச்சுக்கோ, பிள்ளை அழுவறதை பார்த்தா இந்தப் பிரச்சனை எப்போவும் சரியாகாது துணிஞ்சு இறங்கியாச்சு தைரியமா நில்லுங்க” என்றான்.
அவன் வார்த்தைகள் கொஞ்சம் தெம்பூட்டியது உண்மை, விசேஷத்திற்கும் அழைத்துவிட்டு சென்றான் சிறிது நேரத்திலே ஓட்டமும் நடையுமாகப் பரிதவிப்போடு வந்து நின்றாள் செவ்வந்தி, அவளைப் பார்த்ததுமே கனகத்தின் விழிகள் நிறைந்துவிட்டது.
“யாருக்கு வேணுமோ வேண்டாமோ எனக்கு என் பிள்ளை வேணும் வந்தா வரட்டும் இல்லனா என் பிள்ளையை நானே வளத்துக்குறேன்” என்றவள் தங்கையின் முன் கைநீட்ட வேகமாகக் குழந்தையைத் தாயின் கையில் ஒப்படைத்தாள் கனகம், அவள் கைகள் இப்பொழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
குழந்தை தாயின் வாசம் அறிந்து அழுகையோடு மார்பை முட்ட வேகமாகப் பிள்ளையோடு அறைக்குள் நுழைந்தாள் செவ்வந்தி, மனைவியை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் ராஜகுமாரன்.
“தப்புதானே… சாமி மன்னிக்காது என்னய அம்மாகிட்டயிருந்து பிள்ளையைப் பிரிச்சுட்டேன்” என்று தேம்பினாள், அவள் விரல்கள் தன் வயிற்றை மெல்ல வருடிக்கொண்டது.
ஆம் தாய்மை அடைந்திருக்கிறாள் இரண்டுமாதம் இன்னும் யாரிடமும் சொல்லவில்லை, நல்ல செய்தியைச் சொல்லி நிரந்தரமாகப் புகுந்தவீடு செல்லும்முன் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைத் தேட வேண்டும் என்று கணவனும் மனைவியும் நினைத்தனர்.
“இல்ல சாமி நம்ம பிள்ளைக்கு இன்னும் இன்னும் நல்லதை செய்யும் நீ வேணா பாரு” என்றான் கணவன், யோகன் அடுத்த இரண்டு நாட்களும் வெளியேகூட வரவில்லை அவனுடைய அறைக்குள்ளே அடைந்திருந்தான் யாருடனும் பேச்சுவார்தையுமில்லை.
மனைவியை அழைத்துச்செல்லும் நோக்கத்தோடு வந்திருந்த மாணிக்கம் ராஜகுமாரனின் திட்டத்தின் படி மனைவியையும் குழந்தையையும் அங்கேயே விட்டுச் சென்றான், ராஜியின் மகனின் அழுகை கேட்க்கும்போதெல்லாம் யோகனின் மனம் தவித்தது தன் பிள்ளையை எண்ணி.
கண்ணால் கண்டே இரண்டு நாட்கள் ஆகிறது, இவன் பார்க்கவில்லையென்றாலும் வீட்டில் குழந்தையின் இருப்பை உணர்ந்துகொண்ட இருப்பானே இரவில் அவர்களின் அறையில் அழுவதும் பால் குடிப்பதும் உறங்காமல் விழித்துக்கிடப்பதும் என்று அறை முழுதும் மகளின் வாசம் நிறைந்து நின்றது.
மனைவியையும் பார்க்கவில்லையே அவன் தேவைகளை அவன் கேட்க்கமாலே செய்வாளே யாருமற்று தனிமையில் இருப்பதை போல ஒரு உணர்வு.
மகனைப் பார்க்கத் தினமும் காலையும் மாலையும் ஓடி வந்துவிடுவான் மாணிக்கம் “நீ படுத்துக்கோ ராஜி நான் பாத்துக்குறேன்” என்று மனைவிக்கு ஓய்வு கொடுத்து ஆசையாகப் பிள்ளையைத் தோளிலிட்டு தட்டிக்கொண்டே நடப்பவனை பார்க்க மனசாட்சி குத்தியது.
மூன்றாம் நாள் காலைத் தம்பியின் வாசல் வந்து நின்றான் “வா” என்று யாரும் அழைக்கவில்லை, அவனைக் கேள்வியாகப் பார்த்துநின்றனர் சுவற்றில் சாய்ந்தமர்ந்து மகளை மடி தாங்கி அமர்ந்திருந்தாள் செவ்வந்தி.
வாசலில் தயங்கி நின்றவன் மெல்ல மனைவியை நோக்கி நடந்தான் கனகம் கணவனின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள், செவ்வந்தியை நெருங்கியவன் அவள் அருகில் சிரமப்பட்டு அமர்ந்தான் கால்களை நீட்டிக்கொண்டவன் மனைவியின் மடியில் துயில் கொண்டிருந்த மகளை முதன்முறை ஆசையாகப் பார்த்தன்.
நடுங்கும் கைகளால் பூப்போல அள்ளிக்கொண்டான் மகளை, செவ்வந்தி வாய்விட்டே அழ மகளை மடியில் கிடத்திக்கொண்டவன் மறுகையால் மனைவியைத் தோளோடு அணைத்துக்கொண்டான், ராஜாவின் இதழ்கள் புன்னகையில் விரிய கணவனுக்கு அழுத்தமான கன்னத்து முத்தம் பதித்தாள் அவன் சண்டைக்கோழி.
மன்னிப்பையோ நன்றியையோ சொல்லவில்லை தம்பியைப் பார்த்து முறைத்தவன் மெல்ல சிரிக்க தொடங்கினான், செவ்வந்தி தான் தங்கையைக் கட்டிக்கொண்டாள் அப்படியே கனகம் தாய்மை அடைந்திருப்பதை சொல்லி அந்தச் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினர்.
அடுத்தநாளே கனகமும் கணவனுடன் புகுந்த வீடு சென்றுவிட்டாள் செந்திலின் மகனின் பெயர் வைக்கும் வைபோகமும் சிறப்பாக நடந்து முடிந்தது, யாரின் வீட்டு விசேஷத்திற்கும் சென்று பழக்கமில்லாத யோககுமாரன் தன் மகளைத் தூக்கிக்கொண்டு மனைவியுடன் சென்று நின்றான்.
“உன் அண்ணன் ஆனாலும் இவ்ளோ நல்லவன் ஆகவேண்டாம்டா” என்று சொல்லி ராஜாவிடம் அடியும் பெற்றுக்கொண்டான் செந்தில், அப்படியே மாறிவிட்டான் என்று சொல்லமுடியவில்லை என்றாலும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தான் யோகன் அதுவே அவன் வரையில் பெரிய மாற்றமே.
ராஜி மாணிக்கத்தின் இரண்டாவது மகனிற்கு பிரபு என்று பெயர் சூட்டினர் அந்தக் குடும்பத்தில் சந்தோசம் மீண்டிருந்தது, செல்லியம்மா இப்பொழுதும் அறிவுரைகளை வாரித் தெளிப்பார் மகள்கள் அதைக் கடக்க கற்றுக்கொண்டனர்.
கணவனின் காதலில் அக்காவின் கவனிப்பில் மாமியாரின் அதிகாரமான அன்பில் தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தாள் கனகம் முதல் குழந்தை அவர்களுக்கும் பெண் மகவே அமிர்தமான மகளுக்கு அமிர்தா என்று பெயர் சூட்டினர்.
அடுத்த இரண்டு வருடங்களில் யோகன் செவ்வந்திக்கு மீண்டும் ஒரு பெண் பிள்ளை பிறந்தது, இரண்டாவது மகளுக்கு நந்தினி என்று யோகனே பெயர் தேர்வு செய்தான்.
“அக்காளும் தங்கச்சியும் போட்டி போட்டுப் பொம்பள பிள்ளைகளா பெத்து போடுறீங்களே இந்த வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டாமா” என்று புலம்பத் தொடங்கிவிட்டார் ராக்காயி, அதனாலே அடுத்த குழந்தை என்பதை யோசிக்கவே பயமாக இருந்தது கனகத்திற்கு.
இனி ஆண் வாரிசு பிறக்கும் வரை தன்னை பிள்ளை பெற்றுக்கொள்ள சொல்லிவிடுவாரோ மாமியார் என்ற பயம் செவ்வந்தியை சூழ்ந்தது.
“ஏன் ஆம்பள பிள்ளை சொன்னாதான் அப்பன் பேர் பெருமை அடையுமா பொம்பள பிள்ளை சொன்னா அடையாதா கடவுள் எனக்கு ரெண்டு குழந்தைகளைக் கொடுத்திருக்கார் எங்களுக்கு அது போதும் நாங்க குடும்ப கட்டுபாடு செஞ்சிக்கப்போறோம்” என்றுவிட்டான் யோகன் தாயிடம்.
அதன்பிறகு அவனிடம் எங்குப் பேச அடுத்த நம்பிக்கை இளயமகனுக்கு இரண்டாவது பிள்ளை ஆண் பிள்ளையாக இருக்க வேண்டும் என்று அத்தனை எதிரார்ப்போடு காத்திருந்தார், அவர்களானால் மூன்று வருடம் கடந்தும் எந்தச் சேதியும் சொல்லவில்லை.
“அடியே சண்டைக்கோழி ரெண்டு பிள்ளைங்க வேணும்டி இன்னும் ஒண்ணே ஒன்னு பெத்துக்கலாம்” என்று ஆசையாகக் கணவன் கேட்க பாவமாகப் பார்த்துநின்றாள் கனகம்.
“அமிர்தா குட்டிக்கு அஞ்சு வயசு ஆயிடுச்சு சண்டக்கோழி” என்று அவளைத் தாஜா செய்ய.
“அதும் பொண்ணா போய்ட்டா என்னால அத்த வாயில விழ முடியாது” என்றாள் அவள்.
“எனக்குப் பிள்ளை வேணும் அது பொண்ணா இருந்தாலும் பையனா இருந்தாலும் என்னோட சாமர்த்தியம், எங்க அம்மா வாயை நான் அடச்சுக்குறேன் நீ எனக்குப் பிள்ளையைக் குடு” என்று அவளை வசியம் செய்து சாதித்துக்கொண்டான்.
அப்படி ராக்காயியை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து ராஜகுமாரன் கனகாம்பரம் தம்பதிக்கு வந்து பிறந்தான் அந்த வீட்டின் ஒற்றை ஆண் வாரிசு சரவணகுமரன்.
ஆண் பிள்ளையென்று அவனுக்குத் தனி கவனிப்பு கிடையாது அவன் பெற்றோரிடம், அதற்கும் சேர்த்து அவனைக் கொண்டாடுவார் ராக்காயி அவரின் அந்தக் கண்மூடித்தனமான பாசம் மகனைக் கெடுக்கிறது என்பது புரிந்ததும் ராஜகுமாரன் தாய்க்கு தெளிவாகக் கூறிவிட்டான்.
“அவனோட தப்பை நியாயப்படுத்தி நீங்கப் பேசினா அவனை ஹாஸ்டல்ல போட்டுருவேன் பேரனை நீங்கப் பாக்கவே முடியாது, கனகம் அவனைக் கண்டிச்சா நீங்கப் பேசாம இருக்கணும் என் பிள்ளை ஒழுக்கமா வளரனும் அதுக்கு உங்க பாசம் தடையா இருந்தா எனக்கு வேற வழி இல்லை” என்று, அதுமுதல் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் ராக்காயி.
பிள்ளைகள் அனைத்தும் கனகத்தின் வளர்ப்பு கண்டிப்பானவள் எங்கே பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எங்கே தணிந்துபோக வேண்டும் எங்கே தன் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்கொடுத்தாள்.
பாசத்துக்கு செவ்வந்தி அவளுக்கு அதட்ட கூடத் தெரியாது அவளிடம் பெரிதாக மாற்றம் கொண்டுவரமுடியவிலை அப்படியே விட்டுவிட்டனர் காரியம் சாதித்துக்கொள்ள அவளிடமே சென்று நிற்பர் பிள்ளைகள்.
நல்ல தகப்பனாக நண்பனாக வழி நடத்த ராஜகுமாரன், யோகனும் கண்டிப்பே பிள்ளைகளுக்கு அவனிடம் எபோழுதும் பயம் கலர்ந்த மரியாதை இருக்கும், அதுவே ராஜா அப்பா என்றால் தோழனைப் போல எதைப் பற்றியும் பேசலாம் பகிர்ந்துகொள்ளலாம்.
பள்ளியில் சந்திப்பு ஆண்டுவிழா விளையாட்டுவிழா எதுவானாலும் யோகனோ ராஜாவோ யாருக்கு நேரம் இருக்கிறதோ அவர்கள் சென்றுவிடுவார்கள், என் பிள்ளைக்கு நான் போவேன் உன் பிள்ளைக்கு நீ என்ற பேச்சே இல்லை.
ஒற்றுமையான அண்ணன் தம்பி அக்காள் தங்கையைப் பார்த்து வளர்ந்த பிள்ளைகளுக்குள்ளும் அந்த ஒற்றுமை தானாகவே வந்துவிட்டது, பிள்ளைகள் நான்கு பேரின் படிப்பும் அவர்களின் விருப்பமே பொட்டப்பிள்ளைக்கு எதுக்கு அதிக படிப்பு என்ற ராக்காயின் வாதம் எல்லாம் அங்கே எடுபடவில்லை.
மகேஷ் கல்லூரி படிப்பை முடித்த கையேடு தந்தையின் கடையைப் பார்த்துக்கொள்ள அமர்ந்துவிட்டான் பெயருக்கு ஒரு டிகிரி அவ்வளவே பழனிச்சாமியின் உடல்நிலை மோசமடைய மகனுக்குத் திருமணம் முடிக்க ஆசைகொண்டார் தந்தை.
அக்காள்கள் இருவருக்கும் பொங்கல் தீபாவளி கல்யாணநாள் நல்ல நாள் என்று சீர் செய்வதில் நல்ல தம்பியாகவும், அக்காள் பிள்ளைகளின் அணைத்து சடங்குகளுக்கும் தாய்மானாகவும் முன் நின்று அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்தான் மகேஷ்.
செல்லியம்மா சொந்தத்தில் சல்லடையாகச் சலித்து அவருக்குத் தக்க மருமகளை தேடி பிடித்துவிட்டார், ஆனந்தி செவ்வந்தியைவிட வாயில்லா பூச்சி மாமியார் மெச்சும் மருமகளானாள் ஆனந்தி.
செல்லியம்மாவின் குணம் தெரியும் அதற்க்கு தக்க நின்றுகொண்டாள் ஆனத்தி, அவளுக்கும் கொண்டவனின் துணை உண்டு பின்னே சும்மாவா அவனின் மாமன் ராஜகுமாரனை பார்த்து வளர்ந்தவனாயிற்றே மனைவியைத் தாங்கிக்கொண்டான்.
சரவணகுமார் பிறந்து ஆறு வருடங்கள் கடந்து மகேஷ் ஆனந்தி திருமணம் நடந்தது அடுத்த வருடமே ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது அந்த வீட்டின் வழக்கத்தை மாற்றாமல் மகளுக்குப் பாரிஜாதம் என்று மலரின் பெயரையே சூட்டிவிட்டான் மகேஷ்.
நாள் கிழமை ராக்காயின் வீடே நிறைந்துவிடும் அந்தப் பக்கம் ராஜலஷ்மியின் குடும்பத்தையும் இந்தப் பக்கம் தாய் வீட்டையும் மொத்தமாக அரவணைத்தே எந்த விசேஷமும் அங்கு.
error: Content is protected !!