யோகன் செவ்வந்தியின் மூத்த புத்ரி நர்மதா ஒரு வழக்கறிஞர் அவளைவிட ஒருவயது இளையவளான ராஜா கனகத்தின் சீமந்த புத்ரி அமிர்தாவும் அக்காவைப் போலவே வழக்கறிஞர் ஆகிவிட்டாள், அவளுடைய சிறுவயது தொட்டே அவளுக்கு அனைத்தும் தமக்கை தான்.
Advertisement
நர்மதா பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சித்தப்பா கேட்டபோது தெளிவாகச் சொல்லிவிட்டாள் “வக்கீலுக்குப் படிக்கணும் ராஜாப்பா” என்று, யோகனுக்கும் ஒரு சந்தேகம் இருந்தது பெண் பிள்ளைகளுக்கு இந்தப் படிப்பு வேண்டுமா என்று சித்தப்பன் முடிவாக நின்று விட்டானே படிப்பு விஷயத்துல யாரும் வராதீங்க நான் பாத்துக்குறேன் என்று.
Advertisement
Advertisement
“இவள மாதிரியே வாயாடியா வளத்திருக்கா பாரு, இவ வீட்டில தான் வாயாடுனா இவளுங்க கோர்ட்க்கில்ல போறாளுங்க பொம்பள பிள்ளைங்களுக்கு இதெல்லாம் தேவையா யார் கட்டிப்பா இவளுங்கள” என்று கனகத்தை ஒரு பக்கம் வசை பாடினார் ராக்காயி அதையெல்லாம் யார் கேட்க.
Advertisement
படிப்பு முடிந்து திருமண பேச்சு வந்தபோதும் தெளிவாகவே சொன்னாள் “எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும் ராஜாப்பா கேஸ் எடுத்து நடத்துறேன் அப்பறம் கல்யாணம்” என்று.
ஒரு கேஸ் விஷயமாக நர்மதாவிடம் வந்த கடலூரின் பஸ் கம்பெனி முதலாளி ராகவன் அவள் திறமையில் வியந்துதான் போனார் பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.
மகனுக்கு இந்தப் பெண்ணைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறதா அவளின் சிறு குறையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனால் என்ற சந்தேகம் இருக்க நேரடியாக மகனிடம் பேசி அவனையே அடுத்தமுறை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நர்மதா அழகியே அவளின் தன்னம்பிக்கை தைரியம் நேர்மை அதைவிட அழகு மறுப்பு சொல்ல மகனுக்கு எதுவும் இல்லை நேரே தட்டைத் தூக்கிக்கொண்டு ராக்காயி வீட்டிற்கு வந்துவிட்டார் ராகவன்.
நர்மதா தீபக் திருமணம் முடிந்த அடுத்த வருடம் ராகவன் மீண்டும் குடும்பத்தோடு வந்து நின்றார், இந்த முறை அவரின் தம்பி மகன் சத்யனிற்கு ராஜா கனகத்தின் மகள் அமிர்தாவை கேட்டு இங்கேயும் அக்காவும் தங்கையும் ஒரே குடும்பத்திற்கு வாக்கப்பட்டு சென்றுவிட்டனர்.
அமிர்தா சத்யன் திருமணம் முடிந்த அடுத்தநாள் ராஜலஷ்மி தம்பிகளிடம் பேசினாள் “கார்த்திக்கு எல்லாரையும் விட வயசு கூட அதனால அவனுக்கு வெளில பொண்ணு பாத்து கட்டியாச்சு, இங்கயும் மூத்த ரெண்டு பொண்ணுங்களையும் ஒரே வீட்டுக்கு அனுப்பியாச்சு என் பொறந்தவீட்டோட எனக்கும் உறவு வேணாமா”.
“ஏண்டா பெரியவனே உன் ரெண்டாவது மவ நந்தினியை என் மவன் பிரபுவுக்கு குடேன்” என்று கேட்க யோகனும் ராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மாணிக்கத்தை பார்க்க அவருக்கும் சம்மதம் என்பதாக என்ன சொல்லப் போகிறார்கள் என்று மச்சான்களை பார்த்து நின்றார் அவர்.
“என்னக்கா நீ உன் வீட்டுக்கு அனுப்புறதுல எங்களுக்கு என்ன பிரச்சனை சந்தோஷம்தான், பசங்ககிட்ட மொதல்ல கேட்டுக்கலாம் அவங்க பேசட்டும் வாழப் போறவங்க அவங்க பேசி அவங்களுக்கு சரி வரும்னு தோணிச்சுன்னா உன் மருமகளை கையேடு கூட்டிட்டு போ” என்றான் ராஜகுமாரன்.
இதுவரை அப்படியொரு எண்ணம் பிள்ளைகள் மனதில் இல்லை ஒன்றாகவே வளர்ந்தவர்கள் நல்ல நண்பர்களாகவே வளர்ந்திருந்தனர் இப்பொழுது இப்படியொரு பேச்சு வரக் கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்று கேட்டனர், பெரியவர்களும் அவர்களுக்கான நேரத்தைத் தந்து விலகி நின்றனர்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு இருவரும் சம்மதம் என்று வந்து நிற்கச் சந்தோஷத்திற்கு கேட்கவும் வேண்டுமா, ராஜலஷ்மி மாணிக்கத்தின் மூத்த மகன் கார்த்தி திருமணம் முடிந்து சிங்கப்பூரில் இருக்கிறான் பிரபு பெங்களூரில் வேலை செய்கிறான், பிரபு நந்தினி திருமணம் முடிந்து அவர்களும் பெங்களூரு சென்றுவிட்டனர், நந்தினி பிசியோதெரபிஸ்ட் அவளுக்கு அங்கேயே ஒரு வேலையும் கிடைத்துவிட்டது.
சரவணகுமரன் தந்தையை பின்பற்றி மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்துத் தந்தை வேலை செய்த அதே டி.வி.எஸ் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறான் தந்தை ராஜகுமாரனுக்கு அதில் ஏக பெருமை.
பாரிஜாதத்திற்கு சரவணன் மாமா என்றால் கருபட்டிபோல நினைத்தாலே தித்தித்துவிடும் அவள் மனம் எங்கும், சரவணன் மாமா எத்தனை உயிரோ அத்தனை வெறுப்பு படிப்பின் மீது.
மகளுக்குப் படிப்பின் மீது நாட்டமில்லை என்று நன்றாகவே தெரிந்தது மகேஷிற்கு “பிளஸ் டூ முடிச்சுடு பாப்பா அதுக்கு அப்புறம் வேண்டாம்னா படிக்க வேண்டாம்” என்று மகளுக்குச் சொல்லியாகிவிட்டது.
கணக்கு படிக்க வேண்டாம் என்பதற்காகவே பயாலஜியை எடுத்துப் படித்தாள் அவள், தந்தையுடன் கடையில் நிற்க அவ்வளவு பிடித்தம் படிக்க முடியாது என்றில்லை என்னவோ படிப்பு என்றால் வேப்பங்காய்தான் அவளுக்கு.
மகளைச் சரவணகுமரனுக்கு கொடுக்க வேண்டும் என்பது மகேஷின் ஆசை ராக்காயி என்ன சொல்லுவாரோ என்ற எண்ணத்திலே அதைப் பற்றிப் பேசாமலே இருந்தான், மகளுக்கு மருமகனின் மீதான விருப்பமும் தெரிந்தே இருந்தது.
சரவணனும் அப்படியே மாமன் மகள்மீது கொள்ளை பிரியம் சும்மாவா பல வருட காதல் அல்லவா அவள்மீது, செவ்வந்தி கனகம் ராஜகுமாரன் அனைவரும் பேசிப்பார்த்தும் படிக்க மட்டும் பாரிஜாதம் விருப்பப்படவில்லை.
சரவணகுமரனிடமிருந்து அழைப்பு என்றதும் மனம் எங்கும் மத்தாப்பு பூக்க “மாமா” என்று ஆசையாக அழைத்தாள் பாரிஜாதம்.
“அம்மன் கோவிலுக்கு வா” என்றவன் உடனேவே வைத்தும்விட்டான், அவனுக்கு அவ்வளவு கோபம் கல்லூரியில் பிள்ளைகள் சேர தொடங்கிவிட்டனர் இவளானால் அதைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கிறாளே என்று அவ்வளவு ஆற்றாமை, தன் அக்காள்கள் அனைவரும் படித்து நல்ல வேளையிலும் இருக்க தன் மனம் கவர்ந்தவள் படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாளே.
தன் முன்னே வந்து நின்றவளை பார்த்துப் பல்லைக் கடித்தவன் “என்னடி நினைச்சுட்டு இருக்க காலேஜ் போகமாட்டேன்னு மாமாகிட்ட சொன்னியாம், பெரியம்மா அம்மா அப்பா எல்லாரும் பேசியும் மாட்டேன்னு சொல்லிட்டியாம் அப்படி என்ன பிடிவாதம்” என்றான் வார்த்தைகளைக் கடித்து துப்பி.
“படிக்கப் பிடிக்கல மாமா” என்றாள் பாவமாக.
“பிடிக்கல இல்ல… சோம்பேறி நீ” என்றான் வேண்டுமென்றே, அவள் அப்படி அல்லவே உழைப்பிற்கு அஞ்சாதவள், முகத்தைச் சுருக்கிக்கொண்டு அமைதியாகவே நின்றிருந்தாள் அவனிடம் வாதம் செய்யவில்லை அவள்.
“சரி நீ படிக்க வேண்டாம் உங்க அப்பா கடைல பொட்டலமே மடி, நான் நல்லா படிச்ச கெத்தான பொண்ணா பாத்து கட்டிக்குறேன் படிக்காதவளை கட்டிக்கிட்டு நான் ஏன் கஷ்டப்படணும்” என்றவன் திரும்பிச் சென்றுவிட்டான்.
தனக்காக நிச்சயம் செய்வாள் என்ற நம்பிக்கை ஆனால் இப்படி செய்வாள் என்றவன் கனவிலும் நினைக்கவில்லை.
மனம் முழுதும் அப்படியொரு வலி, படிக்கமாட்டேன் என்று சொன்ன கோபம் தன்னுடையவளும் படிக்க வேண்டும் என்ற ஆசை நல்ல எண்ணம் எல்லாம் சரிதான் என்றாலும் அந்த வார்த்தையை எப்படி சொல்லலாம், தன்னால் அப்படி சொல்ல முடியுமா வேறு பெண்ணைக் கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டானே என்று அப்படியொரு அழுகை.
அப்பாவிடம் பேசி மறுநாளே திருச்சிக்கு சென்றுவிட்டாள் அவளின் பாட்டி வீட்டிற்கு அவள் தாய் ஆனந்தியின் பிறந்தவீடு அங்குதான், பாட்டி வீட்டில் தங்கிக்கொண்டு பி. எஸ்.சி நுண்ணுயிரியல் படிப்பில் சேர்ந்துவிட்டாள் யாருமே எதிர்பார்க்கவே இல்லை.
“என்னடா சொன்ன பிள்ளையை இப்படி அவளோ தூரம் போய்ட்டா மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசிட்டியா” என்று வீட்டினர் துளைத்தனர் சரவணனை, அவனுடைய அழைப்பையும் அவள் எடுக்கவில்லை.
அவனைக் காணாமல் இருப்பது உயிர்வதையாக இருந்தபோதும் பிடிவாதமாக நின்றுவிட்டாள் நாள் கிழமை எதற்கும் ஊர் பக்கம் வரவில்லை மகேஷும் ஆனந்தியும் மாதம் ஒருமுறை சென்று பார்த்துவந்தனர்.
அவளைப் பார்க்கக்கூட முடியாமல் திண்டாடிப்போனான் சரவணன், மகனின் வாட்டத்தை கண்டு பொறுக்கமுடியாமல் கனகம் கணவனிடம் சென்று நின்றாள் அடுத்த வாரமே குடும்பத்தோடு திருச்சிக்கு பயணப்பட்டுவிட்டார்கள் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிக்கொண்டு, பாரிஜாதத்திற்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது.
வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்தார் ஆனந்தியின் தாயார் நேரமில்லை இன்றே ஊருக்குப் போக வேண்டும் என்றிவர்கள் கூற பேத்தியுடன் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வந்துவிட்டார்.
சந்தனத்தில் அறக்கு நிற பார்டர் வைத்த பாவாடை தாவணியில் நீண்ட கூந்தலை பின்னலிட்டு பூச்சூடி மாமனுக்கு பிடித்த மருதாணியில் சிவந்த விரல்களோடு வந்து நின்றாள் பாரிஜாதம், அவனுக்கான அலங்காரம்தான் என்றாலும் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவளுடைய பிறந்தநாளுக்காக வாங்கிவைத்திருந்த முத்து பதித்த வளவிகள் அவன் சட்டை பையில் சத்தம் எழுப்பியது, அவனிடம் தனிமையில் சிக்காமல் போக்கு காட்டி பாட்டியுடன் சென்றுவிட்டாள் பரிசு அவளைச் சேராமல் அவனிடமே தங்கிவிட்டது.
மூன்று வருட படிப்பு முடிந்த அன்று மாலையே மருமகனை திருச்சிக்கு அனுப்பிவிட்டான் மகேஷ் மகளை அழைத்துவரச் சொல்லி “வீம்பு பிடிச்சவ நீங்களே போய்க் கூட்டிட்டு வாங்க மாப்ள” என்றவன் கூற.
“இவன் ஏதோ சொல்லித்தான் என் மறுமவ வீட்டுக்கே வராம அங்கேயே இருக்கா என்ன செய்வியோ தெரியாது பிள்ளையைச் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர” என்றாள் கனகம்.
“உங்க அப்பன் கிட்ட வேணா டியூஷன் எடுத்துக்கோடா எப்படி பொண்டாட்டியை சமாதானம் படுத்தணும்னு” என்றான் யோகன், அனைவரும் சிரித்துக்கொண்டனர் அப்பொழுதே வண்டியைக் கிளம்பிவிட்டான் சரவணன்.
அப்பாவைக் கூட அவள் அன்று எதிர்பார்க்கவில்லை வீட்டு வாயிலில் மாமனை பார்த்தவள் பேச்சின்றி நின்றுவிட்டாள் ஆனந்தி முன்பே அழைத்துக் கூறிவிட்டாள் மாப்பிளை வருவார் மகளை அனுப்பி வையுங்கள் என்று.
அரைமணி நேரத்தில் சாலையின் ஓரமாக நின்றுவிட்டது கார் “என்ன ஆச்சு” என்றவள் கேள்வியில் “என்ன” மட்டுமே வெளியில் வந்தது மற்றவை அவன் இதழ்களுக்குள் சென்று சேர்ந்துவிட்டது, ஏக்கம் தவிப்பு பிரிவின் வலி என்று அத்தனை உணர்வுகளையும் அந்த ஒற்றை முத்தத்தில் கடத்திவிட்டான்.
அவனை விட்டு விலகவில்லை தள்ளிச்செல்ல நினைக்கவில்லை சேமித்துக்கொண்டாள் பொக்கிஷமாக, சந்தோஷத்தில் விழிகள் நிறைந்து வழிந்தது.
“நீங்களும் அப்படி சொல்லுவீங்களா” என்றாள் தேம்பலோடு.
“சொன்னா போய்டுவேனா… பேசக்கூட இல்ல நீ என்கிட்டே மூணு வர்ஷம்… நான் வேண்டாமா உனக்கு” என்றான் கோபமாக.
“நீ பேசுனது எனக்கும் அப்படி வலிச்சுச்சு மாமா உன் குரலைக் கேட்கணும்னு எவ்ளோ ஆசையா இருக்கும் தெரியுமா, உன்னைப் பாக்காம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ஆனா படிச்சிட்டுதான் உன்கிட்ட பேசணும்னு என்னய நானே கட்டுப்படுத்திக்கிட்டேன், மூணு வருஷமா ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி கடத்தியிருக்கேன்” என்றாள் விதும்பலோடு, அப்படியே இறுக்கமாகக் கட்டிக்கொண்டான் அவளை.
இன்று வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது கல்யாணம் கட்டி போயிருந்த வீட்டின் பெண் பிள்ளைகள் அனைவரும் கணவன் பிள்ளைகளோடு வீடு வந்திருந்தனர் பேச்சும் சிரிப்புமாக எங்கும் சந்தோசம் நிறைந்திருந்தது சும்மாவா அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு, அக்காள்களின் செல்லத் தம்பி சரவணகுமரனின் திருமண நிச்சயம் இன்று.
இன்று நேற்றா பத்து வருட காதல் கைகூடும் திளைப்பு சரவணகுமரனிடம், மகேஷிற்கு மனதெல்லாம் நிறைந்துவிட்டது மாமனை எப்பொழுதுமே பிடிக்கும் அவரின் தனி பிம்பமாக வளர்ந்து நிற்கும் மருமகனை இன்னும் பிடிக்கும் அந்த மருமகனிற்க்கே தன்னுடைய ஒரே மகளை மனம் முடித்துக் கொடுக்கப் போகிறோம் என்ற சந்தோசம் நிறைந்து கிடந்தது.
இரண்டு அத்தைமாரின் செல்ல மருமகள் அல்லவா இப்பொழுது தங்கள் மகனுக்கு மனைவியாக வரபோகிறாள் செவ்வந்தியும் கனகமும் நிறைவான புன்னகையோடு சுற்றிக்கொண்டிருந்தனர்.
பரிசம் போட்டு முடித்த கையேடு அவளுக்காக வாங்கி வைத்திருந்த முத்து வளவிகளையும் அவள் கைகளில் பூட்டி அழகு பார்த்தான் மாப்பிளை குடும்ப புகைப்படத்திற்கு அனைவரும் அமர்ந்தனர்.
ராக்காயி கனகசபை, பழனிசாமி செல்லியம்மா, மாணிக்கத்தின் தாய் அனைவரும் நடுநாயகமாக அமர்ந்திருக்க, யோகன் மனைவி செவந்தியின் அருகில் சாந்தமான புன்னகையோடு நின்றுகொள்ள, ராஜகுமாரன் எபோழுதும் போல மனைவியைத் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு நின்றான்.
மாணிக்கமும் ராஜலஷ்மியும் செவ்வந்தியின் அருகில் நின்றுகொள்ள மகேஷும் ஆனந்தியும் கனகத்தின் அருகில் நின்றுகொண்டனர், மகள்கள் கணவன் பிள்ளைகளோடு கீழே அமர்ந்துகொண்டனர் அன்றைய விழா நாயகன் சரவணகுமரன் முன்னில் அமர்ந்துகொண்டு பாரிஜாதத்தை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
“டேய்” என்று உடன்பிறப்புகள் ஆர்ப்பரிக்க “இனிமே எதுவும் சொல்ல முடியாது எனக்கு உரிமைப்பட்டவ” என்றான் சத்தமாக வெட்கத்தில் சிவந்த முகத்தை மாமனின் தோளிலே மறைத்துக்கொண்டாள் பாரிஜாதம்.
“அப்படியே அப்பனை மாதிரி” என்றார் ராக்காயி, அனைவரும் சிரிக்க அன்றைய காதல் கொஞ்சமும் குறையாமல் மனைவியைப் பார்த்தான் ராஜகுமாரன் இப்பொழுதும் கணவன் பார்வையில் கன்னம் சிவக்க வெட்கம் கொண்டாள் கனகம், அந்த அழகிய குடும்பத்தை ஓவியமாகத் தன்னுள் பதிந்துகொண்டது கேமரா.
மூங்கிலுக்குள் வார்த்தைகள் இல்லை ஒலி மட்டுமே அந்த ஒலியும் இசையாக மாறிவிடுவதில்லை அதைச் செதுக்கி துளையிட்டு புல்லாங்குழலாக மாற்றும்போதே அது பயன்பெறுகிறது.
அதனுள் நுழையும் காற்றை அனைவராலும் இசையாக மாற்ற முடிவதில்லை, எங்குத் துளையை அடைக்க வேண்டும் எங்குத் திறக்க வேண்டும் என்று தெரிந்தவனிடமே இசை வசப்படும்.
குடும்பமும் அப்படியே விட்டுப்பிடித்துத் தட்டிக்கொடுத்து விழாமல் தாங்கிப்பிடித்து விழுந்தவரை கைபிடித்து உயர்த்தி அனைவரும் ஒன்றாகப் போகையில் அந்தக் குடும்பமும் நிறைவான ஒரு சங்கீதமாக மாறும்.