Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 13

பொன்னம்மாவின் கன்னத்தில் அறை விழுந்தது. கன்னத்தை பிடித்தபடி எதிரில் இருந்த கனகவதியை பார்த்தாள் அவள்.

“நான் சொல்வதை செய்யணும். அதுக்காகதான் உனக்கு இங்கே நான் சம்பளம்‌ தரேன்..” என்று சீறினாள்.



Advertisement

பொன்னம்மா பல வருடங்களாக இங்கே வேலை செய்துக் கொண்டிருக்கிறாள். விக்னேஷை இவள் வளர்த்தி இருக்கிறாள். அவன் மீது இவளுக்கு நிறைய பாசம் உண்டு.

“அந்த தம்பி பண்ணது தப்புதான். ஆனா அதுக்காக அவரை கொல்ல பார்ப்பது எப்படிம்மா நியாயம் ஆகும்? அவர் உங்க பையன்ம்மா. போயிட்டா திரும்ப வர மாட்டாரு..”

Advertisement

Advertisement

கனகவதிக்கு எரிச்சலாக வந்தது. ஆனால் நாம் வெறுமனே சொன்னால் பொன்னம்மா எந்த வேலையையும் செய்ய மாட்டாள் என்று புரிந்துக் கொண்டு “இந்த விஷம் அவன் சாகுறதுக்காக இல்ல. அந்த மாயாவை துரத்துறதுக்காக. அவ என்னோட எதிரி. எப்படி என் பையனை லவ் பண்ணுவா? கொஞ்சமாவது யோசி. என் பையனுக்காக இந்த உதவியை பண்ணு..” என்றாள்.

பொன்னம்மா தயங்கினாள். “இது விபரீதமாகிட்டா தம்பி வாழ்க்கை வீணா போயிடும்மா. நான் செய்ய மாட்டேன். உங்களுக்கு என்னை பிடிக்கலன்னா நான் வேலையை விட்டு நின்னுடுறேன்..” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

Advertisement

கனகவதிக்கு ஆத்திரமாக வந்தது.

அன்றிரவு விக்னேஷ் சோஃபாவில் உறங்க செல்ல, “பெரிய கட்டில்தான். நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்..” என்றாள் மாயா.

விக்னேஷ் நெஞ்சை பிடித்தபடி தலையணையில் விழுந்தான். “எதுவும் பண்ண மாட்டேன்னு பொண்டாட்டி சொல்வதுதான் ஒரு புருஷன் காதுல விழும் வொர்ஸ்ட் ஸ்டேட்மென்டா இருக்கும்..” என்றான்.

அவனின் தலையை வருடியவள் “ஒரு சில வாரங்கள்.. பிறகு நார்மலாகிடுவேன். ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்றாள்.

“நான் சும்மா சொன்னேன். நீ தூங்கு..” என்றவன் ஓரடி இடைவெளியில் படுத்தவளை ஏக்கமாக பார்த்தான்.

“உன்னோடு என்னால ஒரு இழையை உணர முடியுது. உன்னையும் என்னையும் அந்த இழை கட்டிப் போடுது. நீ அந்த மாதிரி உணர்ந்திருக்கியா?” எனக் கேட்டான்.

தலைக்கு அடியில் இரண்டு கைகளையும் வைத்திருந்தவள் “தெரியல. ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. அது மட்டும் தெரியும்..” என்றாள்.

அவளின் உதட்டை தொட்டான். “இது லிப்ஸ்டிக்கா? நிஜமான சிகப்பா?” எனக் கேட்டான்.

“நிஜமான சிகப்புதான். ஹாஸ்பிட்டல்ல பார்த்திருப்பியே. நான் என்ன அங்கே கூட லிப்ஸ்டிக்கா போட்டிருந்தேன்?”

உதட்டை உரசி தன் விரலை பார்த்தவன் “அப்ப உன் உதடு கொஞ்சம் கருப்பா இருந்தது..” என்றான்.

இவள் மூக்கு சிவந்தாள். “உடம்பு சரியில்லன்னா எல்லாருக்குமே அப்படிதான் ஆகும்..”

கோபப்படுத்தி விட்டோமே என்று கவலைப்பட்டவன் “சாரி.. நான் அப்படி மீன் பண்ணல..” என்றான்.

“எனக்கு லிப்ஸ் கருப்பா இருந்தா கிஸ் பண்ண மாட்டியா? உனக்கு டார்க் ரெட்ல லிப்ஸ் வேணும்ன்னா நான் சர்ஜரிதான் பண்ணி வரணும்..”

இவன் அவசரமாக பாய்ந்து அவள் இதழில் தன் இதழை பூட்டினான். அவளின் கீழுதட்டை கவ்வி உறிஞ்சினான்.

அவள் அவனை தள்ளி விட்டாள். “பக்கத்துல வராத..” என்றாள் சீறலாக.

“சாரி.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்ன்னு காட்டதான் கிஸ் பண்ணேன்..” என்றான்.

இவள் திரும்பி படுத்தாள். “ஏற்கனவே நான் ரொம்ப கில்டியா பீல் பண்றேன். என்னை அழ வைக்காத ப்ளீஸ்‌‌..” என்றாள்.

இவனுக்கு அவளின் உணர்வுகளை மதிக்கதான் ஆசை. ஆனால் அவள் கில்டியாக பீல் செய்வதை விரும்பவில்லை.

“எனக்கு அவசரம் கிடையாது. ஆனா உன் அப்பா நீ சந்தோசமா இருக்கணும்ன்னுதான் ஆசைப்படுவாரு..” என்று சொல்லிவிட்டு விளக்கை அணைத்தான்.

மாயா இரவில் உறங்கவில்லை. ‘அப்பாவின் எதிரியுடைய வீட்டிற்கு வாழ வந்திருக்கிறோம்? பழி வாங்குவதை விட்டுவிட்டு காதலுக்கு முக்கியத்துவம் தந்து விட்டோமே!’ என்று கவலைப்பட்டாள்.

‘அம்மா நம்மை பற்றி என்ன நினைத்திருப்பார்? இன்று தந்தையை மதிக்காதவள் நாளை என்னை மதிப்பாளா என்று விக்னேஷே கூட எதிர் காலத்தில் நம்மை சொல்லி காட்டி விடலாம்..’

குழப்பத்துடன் திரும்பி படுத்தாள். விக்னேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இரவு விளக்கு ஒளியில் அவன் முகத்தை பார்த்த பிறகு இவளுக்கு எல்லாமே மறந்து விட்டது. இமை மூடி உறங்கும் உயிர் சிலை. ஒளிரும் தனி சுடர். கலைகளின் பொக்கிஷம். காந்தத்தின் இருப்பிடம். இசைகள் படைப்பட்டது இவன் செவிக்காக. தன் மேனி படைக்கப்பட்டது அவன் இதழ்களுக்காக.

அனைத்தையும் மறந்து விட்டாள். உலகில் அவனை தவிர வேறு யாரும் இல்லாத எண்ணம். அனிச்சையாக அவனை நெருங்கினாள். ஆனால் மோதவில்லை. அவன் மேனியின் கதகதப்பை உணர முடிந்தது. கட்டி அணைக்க ஆசை வந்தது. ஆனால் தயக்கமாகவும் இருந்தது.

அவனின் இதழ் வரிகள் இருட்டிலும் இவளுக்கு தெரிந்தன.

அவன் கரம் மேலுயர்ந்தது. அவளை அணைத்தது. உறக்கத்திலேயே அவளை கட்டிக் கொண்டான்.

அவனின் இதய துடிப்பு இவள் செவிகளில் விழுந்தது. பூ மலரும் சத்தத்தை விடவும் இந்த இதய துடிப்பு சுகந்தமாகவே இருந்தது.

அவனின் அணைப்பில் கண் மூடியவள் உறங்கியும் விட்டாள்.

மாயாவின் பிறந்த வீட்டில்..

நள்ளிரவு நேரம். ரதி உறக்கம் வராமல் ஹாலில் நடமாடிக் கொண்டிருந்தாள். தந்தையின் புகைப்படம் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது‌.

நம்மால் இப்படி ஆகி விட்டதே என்று கவலை ஒரு புறம். தங்கை தேவையில்லாமல் வேலை செய்கிறாளே என்ற கோபம் ஒரு புறம்.

அவள் உறக்கம் மறந்து பல நாளாகி விட்டது.

தரை பார்த்து நடந்துக் கொண்டிருந்தவள் எதிரில் ஒரு உருவம் வந்து நிற்கவும் நிமிர்ந்தாள்.

தருண் நின்றிருந்தான்.

“ஸ்லீப்பிங் டேப்லெட் தரட்டுமா?” எனக் கேட்டான்.

“வேணாம். நீங்க போய் தூங்குங்க..”

அவனோடு பேசுகிறாள். ஆனால் பழைய நெருக்கம் இல்லை. இருவரும் தனி தனியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் அடித்தால், அவள் ஒதுக்கி வைத்தால், என்ன செய்தாலும் அவன் தாங்கிக் கொள்வான். அவள் தனக்குள் வருந்துவதைதான் அவனால் தாங்க முடியவில்லை.

“தூங்கலாம் வா. இப்படியே நீ இருந்தா உன் உடம்பு கெட்டு போயிடும்..”

“எல்லாம் என்னால..” அவள் புலம்ப ஆரம்பிக்க, யோசிக்காமல் அவளை அள்ளி தூக்கினான்.

“சொன்னா கேட்க மாட்டியா? நீ தூங்கணும்..” என்றவன் அவளை அறைக்கு தூக்கி போனான். கட்டிலில் சாய்த்தவன் “கால் பிடிச்சி விடட்டுமா? தூக்கம் வரும்..” என்றான்.

அவள் மறுப்பாக தலையாட்ட “கதை சொல்லட்டுமா?” எனக் கேட்டான்.

அதற்கும் அவள் மறுத்து தலையாட்டினாள்.

அவளின் கைகளை தடவியவன் தயக்கமாக அவள் முகம் பார்த்தான்.

இருவரின் பார்வையும் ஒன்றையொன்று வெட்டின.

“ஐ ஹேட் யூ..” அவளின் உதடுகள் சொன்னது. அதை அவன் நம்பவில்லை.

“என் அம்மா அப்பாவை விட்டு வந்துட்டேன். நீ ஏத்துக்கலன்னா நான் என்ன செய்வேன்?” எனக் கேட்டான்.

அவள் முகத்தை திருப்பினாள். இவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

“ஐயம் சாரி..” என்றபடியே அவளின் கழுத்தில் முத்தங்களை தூவினான்.

அவளின் கரம் தயக்கத்தோடு அவன் முதுகை தொட்டது.

கோபங்களும் வேதனைகளும் இவனருகில் தொலைந்து போயின. அவளை வேறொரு ஆளாக மாற்றின.

“லவ் யூ..” முணுமுணுத்தவன் அவளின் சேலையின் இடத்தை ஆக்கிரமித்தான்.

முதலிரவு கூடல் போல தயங்கி தயங்கி முத்தமிட்டாள். இவனும் கவனமாகவே கையாண்டான்.

அவன் தாம்பத்தியத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இருந்த நேரத்தில் அவனை தடுத்த ரதி “உங்க தம்பியையும் என் தங்கச்சியையும் இந்த வீட்டுக்கு நீங்க திரும்பி கூட்டி வரணும். இதை நான் கெஞ்சி கேட்கிறேன்..” என்றாள்.

“சரி..” என்றவன் அவளோடு உடலாலும் உள்ளத்தாலும் இணைந்தான்.

அவளின் சேலை இருவருக்கும் போர்வையானது. சேலையின் மென்மையை விட அவளின் மேனியின் மென்மையைதான் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவளை இறுக்கமாக அணைத்தவனுக்கு இன்றுதான் நிம்மதியான உறக்கமே வந்தது‌.

விக்னேஷ் கண் விழித்தபோது அவன் அணைப்பில் மான்குட்டி போல் மாயா உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் சிறு ஆச்சரியத்தோடு அவள் முகம் பார்த்தான். அவளின் கேசம் வருடினான்.

‘அவ கண்ணை தொறந்தா உன்னை கொன்னுடுவா. ஒழுங்கா தள்ளி போ..’ என்றது அவனின் மனசாட்சி.

இவன் விலக முயல, இவன் சட்டையை பிடித்திருந்த அவளின் கரம் இறுகியது.

அவளை எழுப்பவும் மனம் வரவில்லை.

காசா பணமா கட்டிய மனைவியை ரசித்தால் என்ன தவறு என்று இவனும் மற்றதை மறந்து அவள் முகம் பார்த்தான்.

செதுக்கியவன் சாதாரண சிற்பி அல்ல சொர்க்கலோக சிற்பி என்றே தோன்றியது.

சூழல் மறந்தவன் அவளின் மூக்கின் மீது முத்தமிட்டான்.

மாயா உடனே கண் விழித்து விட்டாள். பயந்து விலகினான்.

சாரி என்று இவன் சொல்லும் முன்னால் “குட் மார்னிங்..” என்று கீச்சுக்குரலில் அவள் சொன்னாள்.

அவள் திட்டவில்லை என்று நிம்மதியானவன் “மார்னிங்..” என்று சொல்லி விட்டு எழுந்தான்.

அவன் பாத்ரூமுக்கு நடக்க, இவள் படுக்கையில் புரண்டாள். தன் தலையணையை விட்டு விட்டு அவன் தலையணையில் முகம் புதைத்தாள். குப்பென்று மோக மயக்கம் பிடித்தது‌.

“சோத்துல உப்பு காரம் குறைக்கணும்..” என முனகியவள் கட்டிலை வருடினாள்.

அவள் புரண்டு முடித்த நேரத்தில் விக்னேஷ் வெளியே வந்து விட்டான்.

இவளை பார்த்து உறைந்து நின்றான். இவள் குழப்பமாக தன்னை கவனித்தாள். சேலை விலகி இருந்தது.

“சாரி..” முகம் சிவந்தபடி சேலையை சரி செய்தாள். கட்டிலின் மறு பக்கம் இறங்கி நின்றவள் அவனை நேராக பார்க்க தயங்கி பாத்ரூமுக்கு ஓடினாள்.

அவள் உள்ளே பல்லை துலக்கிய நேரத்தில் இந்த அறையின் கதவு தட்டப்பட்டது.

இவன் கதவை திறந்தான். “காப்பி..” என்று ஒற்றை கோப்பையை நீட்டினாள் பொன்னம்மா.

“அவளுக்கு?” என்று இவன் கேட்க, நெற்றியில் அடித்துக் கொண்டவள் “சாரி தம்பி. எப்பவும் போல உங்களுக்கு மட்டும் எடுத்து வந்துட்டேன். ஒரே நிமிசம். வந்துடுறேன்..” என்று ஓடினாள்.

இவன் காப்பியை பருகினான். “டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கே..”

அடுத்த மிடறு விழுங்கினான். “பேஸ்ட் ரொம்ப போட்டு பல் விளக்கிட்டேன் போல..” என்று நினைத்தவன் காப்பியை முழு கோப்பையும் பருகி முடித்த வேளையில் மாயா வெளியே வந்தாள்.

அவளின் காதோரம் இருந்த ஈரத்தையும், அந்த ஈரத்தில் சிக்கி இருந்த சில கேச கற்றைகளையும் கவனித்தவனுக்கு முகம் சூடானது.

‘அவளை பார்க்க பார்க்க என் மைன்ட்ல பெருச்சாளி ஆட்டம் போடுதே!’ என்று கவலைப்பட்டான்.

மாயா அவனருகில் வந்தாள். “எனக்கு காப்பி..” என்று அவன் கையில் இருந்த கோப்பையை வாங்க பார்த்தாள்.

“சாரி‌ இது காலி. புதுசு கொண்டு வருவாங்க..” என்றவன் தனக்குள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான். வயிற்றை பிடித்தபடி வாந்தி எடுத்தான். இரத்த வாந்தி.

“ஐயோ..” மாயா கத்தினாள்.

இவன் அங்கேயே சுருண்டு விழுந்தான். இவள் பதறிப் போய் அவனை உலுக்கினாள்.

“விக்கி.‌.” எவ்வளவு அழைத்தும் அவன் எழவில்லை.

அவனின் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். விக்னேஷை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள்.

சோதித்து விட்டு வந்த மருத்துவர்கள் “அவர் இறந்துட்டாரு..” என்று சொன்னார்கள்.

போலிஸ் மாயாவின் கையில் விலங்கை பூட்டினார்கள்.

விக்னேஷை மின் தகன மேடையில் வைத்து ஸ்விட்சை அழுத்தினார்கள்.

இவள் “விக்கி..” என்று காட்டு கத்தல் கத்த, பாத்ரூம் கதவை திறக்க இருந்த விக்னேஷ் துள்ளி விழுந்தான். திரும்பி பார்த்தான். “ஒரே ரூம்லதான் இருக்கோம். மெதுவா கூப்பிட்டாவே கேட்குமே!” என்றான்.

இதுவரை நடந்தது முன்னேற்பாட்டு காட்சி.

இவள் கட்டிலை விட்டு இறங்கி ஓடி அவனை அணைத்தாள்.

அவன் பாத்ரூமுக்குள் நுழைந்த பிறகு நடந்த அனைத்தும் இவளுக்கு பச்சை விளக்கொளியில் பார்வைக்கு தெரிந்தது. வரப்போகும் காப்பியில் விஷம் இருக்கிறது என்று தெரிந்து பயத்தில் உடல் நடுங்கினாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!