Skip to content
Post Views: 1,786
அத்தியாயம்..7
அடுத்த நாளே வெண்பா கண் விழிப்பதற்கு முன்னமே அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் விசாலாட்சி. தூக்கத்தில் இருந்த வெண்பா அலைபேசியின் சத்தத்தில் எழுந்தவள், அதனை காதுக்கு கொடுக்க எதிர்புறம் இருந்த விசாலாட்சியோ,
“வெண்பா, என்ன டி நேத்து இதோ வரேன்னு போன, அப்புறம் வரவே இல்லை. எனக்கு இங்க வேலையே ஓடல தெரியுமா!! நேத்து கடுகு குழம்பு செஞ்சியாமே! இந்த அத்தைக்கு கொடுக்கணும் தோணவே இல்லைல உனக்கு. அத்தை மேலே பாசமே இல்லாம போச்சு ”
Advertisement
என அவர் மூக்கை உரிய, இந்தப்பக்கம் வெண்பாவிற்கோ அவர் பேசுகையில் சிரிப்பு தான் வந்தது.
“அத்த, உங்க மேலே எனக்கு நிறைய பாசம் இருக்கு. உங்களுக்கு தெரியாதா? குழம்பு தானே இன்னைக்கு வச்சு தரேன் விடுங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க” என இலகுவாக பேச,
“இன்னைக்கு வந்துருவல” என விசாலாட்சி கேட்க, இவளும் “வந்துருவேன் அத்தே” என்று கூறினாள்.
Advertisement
“அப்போ சரி, சீக்கிரம் வந்துரு. உங்க அம்மாச்சி சுப்ரபாதம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. நான் போனை வச்சுறேன்” என அவசரமாக அவர் போனை அணைத்துவிட, இவளோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
Advertisement
பெரிய வீட்டிற்கு செல்வதா? வேண்டாமா? என பெருத்த யோசனை அவளிடம். விசாலாட்சியிடம் ஒரு வேகத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டாள். தற்பொழுது யோசித்து பார்த்தால், நாச்சியாரின் நினைவு எழுந்தது. நேற்று தான் அத்தனை பெரிய பிரச்சனை நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் அங்கு சென்றால் என்ன சொல்வாரோ? என்று யோசனையாக இருந்தது. எழவே பிடிக்கவில்லை. அப்படியே படுத்து கொண்டிருந்தாள். எப்பொழுதும் போலவே, அவள் மனம் நிறைந்த அந்த உயிரிடம் மௌனமாக பேச ஆரம்பித்தாள்.
எத்தனை நேரம் ஆனதோ, கடைசியாக அங்கு செல்வதென்று முடிவெடுத்தவள், எழுந்து வந்து அன்னைக்கு தேவையானதை செய்து முடித்தாள். சண்முகம் அதிகாலையிலேயே வேலை விஷயமாக வெளியே சென்றிருக்க, கனகவல்லி அருகே வந்து அவரை எழுப்பினாள். மெதுவாக கண்விழித்த, கனகவல்லி, அவள் வெளியே செல்ல தயாராக இருப்பதை கண்டு,
“எங்க கிளம்பிட்ட வெண்பா?… அங்கேயா போற?” என அவள் மனதை சரியாக கணித்து கேட்க, வெண்பாவோ மௌனமாக ஆமாம் என தலையாட்டினாள்.
Advertisement
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு. இவ்வளவு நடந்த பின்பும் அங்க போறேன் சொல்ற? எங்கேயும் போக வேண்டாம் வீட்டிலே இரு” என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
“ம்மா, நான் போகலன்னா அங்கே வேலையே ஓடாது. உனக்கே தெரியும், அத்தைக்கு நான் பக்கத்திலே இருக்கனும். இல்லைனா அவங்களுக்கு கை ஒடைஞ்சா போல ஆகிடும். கண்டிப்பா எல்லாரும் என்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க ம்மா” என அவரை சமாதானம் செய்ய,
“லூசு போல உளறாத வெண்பா. நாம இங்க வர முன்னே அந்த வீட்டில் வேலையே நடக்கலையா? இல்லை வேலை செய்ய தான் ஆள் இல்லையா? காலம் முழுக்க நீ அங்கேயே செஞ்சுட்டு இருக்க முடியுமா? உன்னை ஒருத்தர் கையில் பிடிச்சு கொடுத்த பின்னாடியும் அங்கே போறேன்னு உன்னால் சொல்ல முடியுமா?”
என்றதும் அவளுக்கோ சுருக்கென்று இருந்தது. அவர் சொல்வது எல்லாமே உண்மை தான்.
அவர் பயப்படுவதும், அங்கே போவதை தடுப்பதும் எல்லாம் சரிதான். இருந்தாலும் அவளால் போகாமல் இருக்க முடியவில்லையே!!. சில கால பழக்கம் என்றாலும், அது அவளோடு ஒன்றி போய் விட்டதே! திடிரென்று அதை மாற்றி கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை.
“ம்மா, அம்மாச்சி தவிர, அங்க இருக்கிற எல்லாரும் என் மேலே அன்பா தான் இருக்காங்க. யாரும் இதுவரை ஒருவார்ததை கூட என் மனசு சங்கடப்படும்படி சொன்னதில்லை. அவங்களுக்காவது அங்கே நான் போய் தான் ஆகணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்னை கூப்பிட போறாங்க. அதுக்குள் நான் அங்க இருக்கணும் ம்மா. மாமா விஷயத்தில் இனி நான் கவனமா நடந்துக்கிறேன்” என அவரை சமாதானம் செய்ய, கனகவல்லி அவர் பிடியிலேயே தான் நின்றார்.
இங்கு பெரிய வீட்டில், அவள் கணித்தபடி அனைவரும் வெண்பாவை தான் தேடினர்.
“வெண்பாவோட காபி இல்லாமல் நாளே விடியல. எப்போ தான் வருவா?” என ஒருபக்கம் மீனாட்சி புலம்ப, இன்னொரு பக்கம் கதிர்வேலும் ,
“அம்மா, வெண்பாவுக்கு போன் பண்ணி சீக்கிரம் வர சொல்லுங்க. எனக்கு ரொம்ப தலைவலிக்குது” என்றான்.
“நான் அவளுக்கு எப்பவோ பண்ணிட்டேன் டா. வரேன் தான் சொன்னா, ஆனால் இன்னும் காணும். நான் வேற அவ செஞ்சு கொடுக்கிற குழம்புக்காக காத்துட்டு இருக்கேன்” என விசாலட்சியும் கூற, இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த நாச்சியாருக்கோ கடுப்பாக இருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவர், அவர்களின் புலம்பலை தாங்க முடியாது,
“இப்போ என்ன உங்களுக்கு? அவ வந்தா தான் இங்க எல்லா வேலையும் நடக்குமோ? அவ இல்லைனா ஒன்னும் நடக்காதோ!! போய் அவங்கவங்க அவங்கவங்க வேலைய பாருங்க. விசாலாட்சி நீ போய் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா போ” என நாச்சியார் ஓங்கி அதட்ட, விசாலாட்சி அடுத்த நொடி அங்கில்லை.
“ஆத்தி” என பயந்தவர் வேகமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
நாச்சியாரின் குரல் கேட்டு வெளிவந்த, திருநாவுக்கரசு.
“என்னம்மா? என்னாச்சு? ஏன் காலையிலேயே இவ்வளவு சத்தமா பேசிட்டு இருக்கீங்க?” என கேட்க, நாச்சியாரோ அமைதியாக இருந்தார்.
“அது ஒன்னுமில்ல ப்பா, வெண்பா இன்னும் வரல. ஏன் வரலைன்னு பேசிட்டு இருந்தோம். அப்பத்தாவுக்கு கோபம் வந்துடுச்சு” என கதிவேலன் கூற,
“வெண்பா வரலையா? ஏன்? என்னாச்சு? கனகாக்கு ஏதாச்சும் உடம்பு முடியலையா? என திருநாவுக்கரசு பதற, நாச்சியாருக்கோ எங்கயாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.
“அதெல்லாம் ஒன்னுமில்லையா, அவளுக்கு ஏதோ அங்க வேலை இருக்கு போல, அதனால் வரல. வரலைனா விடுங்களேன் இது ஒரு பெரிய பிரச்சனைனு அதையே பேசிட்டு இருக்கீங்க”
என நாசூக்காக அவர் பேச்சை தவிர்க்க, திருநாவுக்கரசுக்கு எதுவும் சரியாக படவில்லை.
“இல்ல ம்மா, வெண்பா அப்படி கிடையாது. அங்கே ஏதோ பிரச்சனை நடந்து இருக்கு அதனால் தான் வராமல் இருக்கா, இருங்க நான் என்னன்னு கேட்கிறேன்” என்றவர் உடனே வெண்பாவிற்கு அழைத்தார்.
அன்னையிடம் கெஞ்சி கொண்டிருந்தவளின் அலைபேசி அலற, அதில் மின்னிய எழுத்தை பார்த்து,
“பாரு ம்மா, பெரிய மாமா தான் பண்றாங்க. ஏன் இன்னும் வரலன்னு கேட்க போறாங்க” என அவள் அலைபேசியை காட்ட, கனகவல்லி அவள் அலைபேசியை வாங்கி கொண்டார்.
அவரே அதனை உயிர்ப்பித்து காதுக்கு கொடுக்க, எதிர்முனையில் இருந்த திருநாவுக்கரசோ,
“வெண்பா, என்னாச்சு? ஏன் இன்னும் வீட்டுக்கு வராம இருக்க?” என கேட்டதும்,
“அண்ணா நான் கனகவல்லி பேசுறேன்” என கனகவல்லி பேச ஆரம்பித்தார்.
“என்னமா? என்னாச்சு? வெண்பா நேத்து இதோ வரேன்னு சொல்லிட்டு கிளம்பினா இன்னும் வராமல் இருக்கா, உனக்கு உடம்பு சரியில்லையாமா? இல்லை வெண்பாவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா?” என கேட்க, கனகவல்லிக்கு நடந்ததை பற்றி அண்ணனிடம் கூற மனம் வரவில்லை.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணா, சும்மா தான்” என மென்று விழுங்கினார்.
“என்ன மா வேற எதுவும் பிரச்சனையா? நான் வேணும்னா வெற்றியை அனுப்பவா?”
என்றதும், ஐயோடா என்றிருந்தது கனகவல்லிக்கு. இங்கு நாச்சியாரோ, நாசமா போச்சு என்று முணுமுணுத்தார்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே படிகளில் இறங்கி வந்த வெற்றி, அவன் பெயர் அடிப்படுவதை கேட்டு,
“என்னப்பா? எங்க போகணும்? என விசாரிக்க,
“கனகவல்லி வீட்டுக்கு தான் வெற்றி. வெண்பா இன்னும் வரல. ஏதாச்சும் உடம்பு முடியலையா? இல்ல வேற எதுனாவா போய் பார்த்துட்டு வா”
என வெற்றியிடம் கூறிக்கொண்டிருப்பது கனகவல்லிக்கு நன்றாக கேட்டது.
“ஐயோ அண்ணா, அதெல்லாம் வேண்டாம். இங்க ஒரு பிரச்சனையும் இல்ல. நான் வெண்பாவை அனுப்பி வைக்கிறேன். இப்போ வந்துருவா” என அவர் தான் மனமிறங்க வேண்டிருந்தது.
திருநாவுகரசும், சரியென்று அலைபேசியை அணைத்து விட்டு, விஷயத்தை கூறினார்.
இங்கு கனகவல்லியோ, வெண்பாவிடம்,
“உன்னை அங்க அனுப்பாமால் இருக்கலாம் பார்த்தா, முடியல. அண்ணா என்ன? ஏதுன்னு துருவி துருவி கேட்கிறாங்க. கூடவே வெற்றியையும் அனுப்புறேன் சொல்றாங்க. அவர் கிட்ட உண்மையையும் சொல்ல முடியல. என்ன தான் பண்றதோ? விதி விட்ட வழினு தான் போக வேண்டி இருக்கு. சரி நீ கிளம்பு. பார்த்து நடந்துக்கோ” என அவளுக்கு அறிவுரை கூறி வழியனுப்பினார் கனகவல்லி.
வெண்பாவும் மகிழ்ச்சியுடனே அங்கே கிளம்பினாள். பெரிய வீட்டில் அவள் நுழந்ததும்,
“வெண்பா, வா வா. உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என விசாலாட்சி வரவேற்க, அனைவருமே அவளின் வரவில் மகிழ்ந்தனர். நாச்சியாரோ ஒருவார்த்தை அவளிடம் பேசவில்லை.
ஆனால் அவள் செய்கையை அவதானித்தப்படி தான் இருந்தார். வெண்பாவும், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் இருந்தாள்.
எந்தவித சலசலப்பும் இல்லாது ஒருவாரம் அமைதியாகவே கடந்தது. நாளை மூத்த மகள் தன் இல்லம் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், நாச்சியாருக்கு தலைகால் புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை விடாது வேலை வாங்கி கொண்டே இருந்தார்.
இதை சுத்தம் செய், இதை மாற்றி வை, இதை சரியாய் அடுக்கு என அவர் வீட்டு வேலைகாரர்களுக்கு தான் பெண்டு நிமிர்ந்தது.
வெண்பா எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவள் பாட்டுக்கு அவள் வேலையை சரிவர செய்து கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை எப்பொழுதும் எழும் நேரம் முன்பே எழுந்து விட்டார் நாச்சியார்.
நேராக பூஜை அறைக்கு வந்து விளக்கேற்றி வைத்தவர்,
“அம்மா தாயே மீனாட்சி, நான் நினச்சா போல என் பேரனோட வாழ்க்கையை அமைச்சு கொடுத்துடு மா. எல்லாம் நல்ல படிய முடிஞ்சா போதும் மா” என மனதார வேண்டி கொண்டார்.
எல்லாமே அவர் நினைத்தது போல் நடந்து விடும் என்ற பூரிப்புடனே வந்து வாசலில் அமர, அந்நேரம் சரியாக வெண்பா உள்ளே நுழைந்தாள். அவளுக்கு தெரியாதா, எப்படியும் நாச்சியார் இன்று சீக்கிரமே விழித்து விடுவார் என்று!!
எப்பொழுதும் போல, வாசலை கூட்டி, கோலம் போட ஆரம்பிக்க, நாச்சியாரோ அவளிடம்,
“கோலம் கொஞ்சம் பெரிசா அழகா போடு. வரவங்க சந்தோஷமா வீட்டுக்குள்ள வரணும்”
என எங்கேயோ பார்த்தப்படி கூற, வெண்பாவும்
“சரி அம்மாச்சி” என்றாள் அவரை பார்த்து.
அடுத்தடுத்து வள்ளியும் லட்சுமியும் வந்துவிட, வருபவர்களுக்காக தடல்புடலாக விருந்தை ஏற்பாடு செய்ய சொல்லி கொண்டிருந்தார்.
அனைவரும் தயாராகி கூடத்திற்கு வர, நாச்சியாருக்கு இருப்பு கொள்ளவில்லை, வாசலுக்கும் வீட்டிற்கும் இடையே நடையாய் நடந்து கொண்டிருந்தார்.
“அப்பத்தா, வீட்டு வாசல் வரைக்கும் வரவங்களுக்கு வீட்டுக்குள்ள வர தெரியாதா?!! எதுக்கு இப்படி வாக்கிங் போய்ட்டு இருக்கீங்க? அப்புறம் கால்வலினு சொல்ல போறீங்க பாருங்க” என கதிர்வேல் கிண்டல் செய்ய,
மீனாட்சியும் “அதானே, கொஞ்சம் ஓவரா தான் இருக்கு அப்பத்தா நீங்க பண்றது” என்றாள் சிரிப்புடன்.
“ரெண்டு பேருக்கும் ரெண்டு போட போறேன் பாரு. அவர் நம்ம வீட்டோட மூத்த மாப்பிள்ளை, அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுத்து தான் ஆகணும். அதுவும் அவர் வெளிநாட்டில் இருந்து வரார். எவ்வளவு பெரிய மனுஷன், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர், இதெல்லாம் எதிர்பார்பார்ல, நாம வாசலுக்கே போய் வரவேற்கிறது தானே மரியாதை.
என் பொண்ணும் பேத்தியும் வேற வராங்க. அவங்க வர நேரம் நான் வாசலிலே இருந்தா தானே, அவங்க சந்தோஷப்படுவாங்க. அதான் அங்கேயே நிக்கிறேன்” என்றவர்,
“என்ன? இன்னும் காணும், அப்பவே கிளம்பிட்ட தானே சொன்னாங்க. இன்னும் வரலையே!! என பேசி கொண்டே இருந்தார்.
“ஐயா, அமுதாக்கு ஒரு போன போட்டு எங்க வாரங்கனு கேளு யா,” என திருநாவுகரசையும் வேலை வாங்க,
“ம்மா, நான் கேட்டுட்டேன் வந்துட்டு இருக்காங்க. சும்மா சும்மா போன் போட்டா என்ன நினைப்பங்க. வருவாங்க இப்படி வந்து உட்காருங்க”
என திருநாவுக்கரசு கூறி அவரை அமர செய்தார்.
“யார் வராங்க? வீடே ஒரே பரப்பரப்பா இருக்கு. அப்படி யார் வர போற? என கேட்டப்படி அங்கு வந்து சேர்ந்தான் வெற்றி. நாச்சியாருக்கோ அவன் சொன்னதை கேட்டு சற்று அதிர்ச்சி தான்.
“என்ன வெற்றி? யார் வராங்கனு கேட்கிற, உன் பெரிய மாமாவும், அத்தையும் வெளிநாட்டில் இருந்து வராங்க. கூடவே உன் அத்த பொண்ணு ராகினியும் வரா”
என அவர் பூரிப்புடன் கூற, அவனோ “ஒஹ்ஹ்” என்பதோடு முடித்து கொண்டான்.
அவன் ஒற்றை வார்த்தையில் அதுவும் சாதரணமாக கூறியதில் சப்பென்று ஆனது நாச்சியாருக்கு. இருந்தாலும் மனம் தளரவில்லை அவர். முதலில் அவர்கள் வரட்டும், பிறகு ஒவ்வொன்றாய் நடத்தி காட்டிட வேண்டியது தான் என மனதுக்குள் நினைத்து கொண்டார்.
“தமிழ் காபி கொண்டு வா,” என வெற்றி குரல் கொடுக்க, அவளும் காபியை தயாரித்து வள்ளியிடம் கொடுதனுப்பினாள்.
அதனை வாங்கி பருகி கொண்டே அவன் அலைபேசியை பார்த்து கொண்டிருக்க,
“ஏன் யா, உன் பெரிய மாமாவும் அத்தையும் வராங்க சொல்றேன் ஒஹ்ஹ் அப்படின்னு சப்புன்னு சொல்ற, உன் முகத்தில் ஒரு சந்தோஷத்தையும் காணுமே! என நாச்சியார் கேட்க,
“அவங்க வரது எனக்கு சந்தோஷம் தான் அப்பத்தா, அதுக்காக என்ன பண்ணனும் நான். நீங்களே சொல்லுங்க”
என அவரையே மடக்க, அவருக்கு இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாகவே இருந்தார். இவனோ, வெண்பா கொடுத்த காபியை ரசித்து சுவைத்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கார் சத்தம் வீட்டின் வளாகத்தினுள் நுழைய, நாச்சியார் வேகமாக வாசலுக்கு ஓடிசென்று நின்று கொண்டார்.
இளங்கோ, அமுதவல்லி ,ராகினி மற்றும் இளங்கோவின் நண்பன் மகன் கிஷோர் என நால்வரும் வாகனத்திலிருந்து இறங்க, நாச்சியாருக்கு பெற்ற மகளை வெகு வருடங்கள் கழித்து நேரில் கண்டதும் கண்ணில் நீர் கசிந்தது. அமுதவல்லியும் அம்மா என அவரை ஓடிவந்து கட்டிக்கொண்டார்.
“எப்படி ம்மா இருக்க?” என அமுதவல்லி கேட்க,
“நான் நல்ல இருக்கேன்மா. நீங்க? உன்னை பார்க்காம தான் கஷ்டமா இருந்துச்சு. இப்போ நீ வந்ததும் தான் என் உயிரே என்கிட்ட வந்த போல இருக்கு” என அன்னையும் மகளும் செல்லம் கொஞ்சினர்.
கண்களை துடைத்து கொண்ட நாச்சியார்,இளங்கோவை பார்த்து
“வாங்க மாப்பிள்ளை, எப்படி இருக்கீங்க? பயணம்லாம் நல்ல இருந்துச்சா? என விசாரிக்க, இளங்கோவும்,
“நான் நல்ல இருக்கேன். எல்லாமே நல்ல இருந்துச்சு” என மிடுக்காக பதிலளித்தார்.
“என் பேத்தி ராகினியா இது? யம்மாடி என்னமா வளர்ந்துட்டா, அப்படியே செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காளே” என ராகினியையும் அவர் கொஞ்ச, அவளும் “அம்மாச்சி” என அவரை அணைத்து கொண்டாள்.
“இவன் கிஷோர், அவர் பிரெண்ட் பையன். நம்ம ஊரை சுத்தி பார்க்கலாம்னு வந்து இருக்கான்” என கிஷோரை அமுதவல்லி அறிமுகப்படுத்த,
“அப்படியா, தராலாமா சுத்தி பார்க்கட்டும். கொள்ளை அழகு கொட்டி கிடக்கே நம்ம ஊர்ல. அப்புறம் என்ன?” என்றவர்,
“நான் பாரு வந்தவங்களை உள்ளே கூப்பிடாம இங்கேயே நிக்க வச்சு பேசுறேன். வாங்க எல்லாரும் உள்ள வாங்க” என அவர் அனைவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.
திருநாவுக்கரசும் அவர்களை வரவேற்று அமர சொல்ல, வெற்றியும், “வாங்க மாமா, வாங்க அத்தை” என மரியாதையாக அவர்களை வரவேற்றான்.
“நம்ம வெற்றியா இது? எவ்வளவு வளர்த்துட்டான்” என அவனை சிலாகித்து அமுதவல்லி கூற, இளங்கோவும்,
“ஹலோ வெற்றி? ” என அவனுக்கு கைகுலுக்க வந்தார். அவனோ இரு கைகளையும் கூப்பி, “வணக்கம் மாமா,” என வணக்கம் வைக்க, அவருக்கோ ஒருமாதிரி ஆகிவிட்டது.
இதனை கவனித்த நாச்சியாரோ அவசரமாக,
“என்ன நின்னுட்டே இருக்கீங்க. உட்காருங்க” என்றவர், சமயலறை நோக்கி,
“வெண்பா எல்லாருக்கும் ஜூஸ் கொடுதனுப்பு” என குரல் கொடுத்தார்.
அனைவரும் வந்திருப்பதும், அவர்கள் பேசிக்கொள்வதும் எல்லாமே அவளுக்கும் கேட்டது. இருப்பினும் எதையும் அவள் கருத்தில் கொள்ளவில்லை.
“என்ன பாப்பா, உன் பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்து இருக்காங்க, நீ அங்க போகாமல் இருக்க?” என வள்ளி கேட்க, வெண்பாவோ,
“அவங்களாம் என்கிட்ட பேச மாட்டாங்க கா. அவங்களே பேசணும் நினைச்சாலும் அம்மாச்சி பேச விடமாட்டாங்க. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை. நாம நம்ம வேலையை பார்ப்போம். இந்தாங்க ஜூஸ் எல்லாருக்கும் எடுத்துட்டு போய் கொடுங்க” என அவரிடம் கொடுத்தனுப்பினாள்.
வள்ளி அனைவருக்கும் குளிர்பானத்தை எடுத்து வருவதை பார்த்து, இளங்கோவோ முகத்தை சுழித்து கொள்ள, அதனை கவனித்த அமுதவல்லியோ, அன்னையிடம்,
“ம்மா, என்ன ம்மா, இவளை எடுத்துட்டு வர சொல்லி இருக்கீங்க. அவ ஆளும் மூஞ்சியும், அவர் ரொம்ப டிசென்சி பார்ப்பார் ம்மா. வீட்டு வேலைகாரங்க கூட நல்ல இருக்கணும் நினைப்பார். இவ கொடுத்தா கண்டிப்பா குடிக்க மாட்டார் பாருங்க” என மெல்ல நாச்சியாரின் காதில் ஓத, அவரோ, வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து வள்ளியின் வந்தார்.
“உன்னை யார் டி எடுத்துட்டு வர சொன்னா? போய் வெண்பா கிட்ட கொடுத்தனுப்பு” என பல்லை கடிக்க அவரும் பயந்து போய் மீண்டும் சமயலைறைக்குள் நுழைந்து கொண்டார்.
“பாப்பா, நீ தான் எடுத்துட்டு போய் கொடுக்கணுமாம். நான் கொண்டு போனதும் உங்க அம்மாச்சி கண்ணாலையே எரிக்கிறாங்க. நீயே எடுத்துட்டு போ” என அவளிடம் தட்டை நீட்ட, “அச்சோ நானா? நான் எப்படி போறது?.. என யோசித்தபடி நின்றவள்,
“சரி கொடுங்க” என அதனை வாங்கி கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
“ம்மா, இவ வெண்பா தானே, இங்கேயேவா இருக்கா?” என அமுதவல்லி நாச்சியாரிடம் மெல்லமாக கேட்க, நாச்சியாரும்,
“ஆமாம், ஆமாம், வேற என்ன பண்றது? எல்லாம் தலையெழுத்து” என்று முணுமுணுத்தார்.
அவள் வந்து அனைவருக்கும் குளிர்பானத்தை கொடுக்க, கிஷோர் மட்டும் அவள் அறையில் இருந்து வெளி வந்தது முதல், அருகே அவள் வரும் வரை அவளையே தான் வைத்த கண் எடுக்காமல் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.
வெண்பாவிற்கு சட்டென்று அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது. ஆடையை சரிசெய்து கொண்டே இருந்தாள். அவன் பார்வை அசைவுகரியத்தை கொடுக்க, அவளால் அங்கு நிற்கவே முடியவில்லை. இருந்தாலும் அனைவருக்கும் குளிர்பானத்தை கொடுத்து முடித்தவள், வேகமாக அங்கிருந்து நகர,
“அம்மா..” என்ற கிஷோரின் அலறல் அவள் நடையை நிறுத்தியது. எதற்கு கத்துகிறான் என அனைவரும் அவனை திரும்பி பார்க்க, அங்கே, கிஷோரோ, ரத்தம் வழிந்து கொண்டிருந்த காலை பிடித்தப்படி, வலியில் கத்தி கொண்டிருந்தான்.
வெற்றி குடித்து கொண்டிருந்த கண்ணாடி டம்ளர் அவன் காலில் விழுந்து, உடைந்து, காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
அனைவரும் என்னவோ? ஏதோவென்று பதற, வெற்றி மட்டும் உதட்டை மடக்கி புன்னகையை அடக்கி கொண்டிருந்தான்.
தூரத்தில் அவனையும்
அருகில் அவன் நினைவையும்
வைத்து அழகு பார்க்கிறது
அவன் மீதான
இந்த பாழாய் போன காதல்!!
தொடரும்…
error: Content is protected !!