Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!.. அத்தியாயம் 12.

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 12

மித்ரனின் கண்களில் கனிவையும், ஈரத்தையும் கண்ட பிரவீனா…

“சிம்பதி, சென்டிமென்ட் எல்லாம் வேண்டாம் சார்…” என்று அவள் சொல்ல,

“எல்லாரும் சொல்றதை தான் நானும் கேக்குறேன் பிரவீனா. இந்த வாழ்க்கையில உங்களுக்கு என்ன கிடைச்சது. ஒரு… ஒரு வருஷம் வாழ்ந்திருப்பீங்களா? அந்த ஒரு வருச வாழ்க்கையில கையில ஒரு குழந்தை. அந்த குழந்தையை நோக்கி தான் இனி உங்க மிச்ச காலம். இந்த வாழ்க்கை மேல உங்களுக்கு வெறுப்பு வரல.. கல்யாண வாழ்க்கை ஒரு கட்டாயமா தெரியல? இந்த கல்யாணம் மூலமா கிடைச்ச ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உங்கள கட்டிப் போடல…”



Advertisement

“நம்ம சமுதாயத்துல கணவனை இழந்த பெண்களுக்கு கிடைக்கிற மரியாதை என்னன்னு நல்லாவே தெரியும். மிடில் ஏஜ் ஆக இருந்தால் கூட பெருசா கண்டுக்கறதில்ல.. ஆனா யுங்கேஜ்ல, எந்த சந்தோஷமும் அனுபவிக்காம கணவனை இழந்துட்டு, அந்த சத்தத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு காலத்துக்கும் இருக்கிறது கஷ்டமா இல்லையா பிரவீனா. ஒரு முட்டாள் தனமா தெரியல. உங்களோட இந்தியன் கல்ச்சர் நீங்க மதிங்க.. நான் அதை தப்பு சொல்லலை. அதுக்காக அதுல இருக்குற முட்டாள் தனத்தையும் ஏத்துக்கணும்னு அவசியம் இல்ல…” தீவிரமாக மித்ரன் சொல்ல,

“நீங்க சொல்றது எனக்கு புரியுது மித்ரன் சார். ஆனா நாங்க அப்படித்தானே பழகிட்டோம். சில விசயங்கள் மூட நம்பிக்கை, தப்புன்னு தெரிஞ்சாலும் வெளிய வர முடியல. பூ வைக்கிறது தப்பு ஒன்னும் கிடையாதுன்னு அறிவு சொன்னாலும், மனசு அதை ஏத்துக்க மாட்டது. இந்த சமுதாயத்தை சார்ந்தே தான் ஓட சொல்லுது. படிச்சு இருந்தாலும் சில விசயங்களை மீற முடியல…” நடைமுறை என்னவோ அதை சொன்னாள் பிரவீனா.

“பார்த்தீங்களா இப்படி ஒரு வீணா போன சிஸ்டத்துக்காக தான், நான் கல்யாணமே பண்ணிக்கிறது இல்ல. எனக்கு கல்யாணத்து மேலயும் பெருசா நம்பிக்கையும் இல்ல…” என்றான் மித்ரன்.

Advertisement

“அப்படி சொல்லாதீங்க சார். கல்யாணம்ன்றது என்னை பொறுத்த அளவுக்கு ரொம்ப உன்னதமான வார்த்தை. நமக்கான வாழ்க்கை துணை, நம்ம லைஃப்ல நமக்கு கிடைக்கிற ரொம்ப பெரிய விஷயம். அதை நிறைய பேர் உணருவது இல்லை. நீங்களும் அப்படி இருக்காதீங்க…”

Advertisement

“நம்ம வாழ்க்கையில ஒரு துணை வேணும் தான். அதுக்கு கல்யாணம் தீர்வு கிடையாது பிரவீனா. எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. என்னோட எல்லா விசயத்தையும் ஷார் பண்ணிப்பேன், கேர்ள் ப்ரெண்ட்ஸ் ஆல்சோ… கல்யாணத்து மூலமா தான் எனக்கு ஒரு உறவுன்றது அவசியமில்லை. ஏதோ ஒரு கட்டத்துல வேணாம்னு நினைச்சா எந்த டிசப்பாய்மென்ட்டும் இல்லாம ஃப்ரீயா அவரவர் வழியில போக முடியும். அதை விட்டு நம்ம கூட வர ஒருத்தர் வேணும். அதுவும் வாழ்க்கை துணையாக தான் இருக்கணும்.. அவங்களுக்காக வாழனும்ன்றது பழங்கால மெத்தட்.. காலத்துக்கு தக்க நம்மளும் மாறனும் பிரவீனா அட்வான்ஸா யோசிங்க…” என்றதும் லேசாக சிரித்த அவள்,

“காலம் மாறி வந்துட்டோம் அப்படின்றதுக்காக அம்மா, அப்பா எல்லாம் அத்தை மாமாவும் ஆகிட முடியுமா?… எனக்கு ஒரு குடும்பமே தேவை இல்லைன்னு சொல்ற நீங்க, உங்க குடும்பம் யாருன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?.. அம்மா அப்பான்னு தானே.. அந்த சொந்தமே கணவன் மனைவி அப்படின்ற ஒரு குடும்ப அமைப்பிலிருந்து தானே வந்துச்சு மித்திரன் சார்…”

“என் கணவர் என் கூட இருந்த வரைக்கும், ஒரு வெயில் அடிச்சா கூட பால் வாங்க கடைக்கு போக மாட்டேன். பஸ்ல போனா கூட்டமா இருக்குனு பஸ்ல போக மாட்டேன். பணக்கஷ்டம், எதிர்கால சேமிப்பு, சொந்த பந்தங்களுக்கு கொடுக்கிறது, உறவுகளை இழுக்கிறது எதுவுமே எனக்கு தெரியாது. எல்லாமே எங்க மாமா பாக்குறது தான். முழு இல்லத்தரசி நான். கட்டி போட்டா கூட பத்து மணிக்கு எனக்கு தூக்கம் வந்துரும். காலையில சமையல் பண்றது, பிள்ளைய பார்க்கிறது, மதிய ஒரு நேர தூக்கம், துணி துவைக்கிறது, நைட் சமைக்கிறது, வீட்டுக்காரர் பார்க்கிறதுன்னு அப்படியே தான் போச்சு. மிடில் கிளாஸ் ஃபேமிலியா இருந்தாலும் பெருசா நான் எதுக்கும் கவலை பட்டதில்லை. அந்த அளவுக்கு எங்க மாமா என்னை விட்டது இல்ல…” என்றவள்,

Advertisement

“உங்களுக்கு நான் சொல்றது புரியுமா என்னன்னு எனக்கு தெரியல. என்னைக்கு என் கணவர் என்னை விட்டு போனாரோ, அன்னையிலிருந்து நான் தனி.. எங்க அம்மா, அப்பா இருக்காங்க.  தம்பி, தங்கச்சி இருக்காங்க. மாமனார், மாமியார் இருக்காங்க. சொந்தம் எல்லாம் இருக்கு. நான் படிச்சிருக்கேன். நல்ல வேலையில இருக்கேன். ஆனால், நான் கஷ்டப்படுறேன், நிறைய கவலை இருக்கு, வேதனைப்படுறேன். நான் கண்ணை மூடி படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குது. ஏன்னா, என் கூட யாரும் இல்லை. நான் தனி அப்படின்றத நான் உணர்றேன்…” என்று பிரவீனா சொன்னதும்,

“ஆனா, ஏன் மேடம். உங்களை சுத்தி உறவுகள் இருக்கும் போது…” என்றான் மித்ரன். அவனுக்கு, பெண்கள் மன ரீதியான உணர்வுகள் புரியவில்லை.

“யார் இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு புருசன் இருக்கணும் சார். எங்க அம்மா, அப்பாவுக்கு என் மேல நான் தனியா இருக்கேன் அப்படிங்கறதுனால ஒரு பாசம் இருக்கு. எனக்கு செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனா, எங்க வீட்ல நாங்க மூணு பேரு. அதனால, மத்த பிள்ளைக என்ன சொல்லுவாங்களோ அப்படின்னு ஒரு தயக்கம் இருக்கு.. என் தம்பி, தங்கச்சி எனக்கு என்ன செய்வாங்கன்னு நினைக்கிறீங்க. தீபாவளிக்கு ஆதிரனுக்கு ஒரு டிரஸ். எல்லா தீபாவளிக்கும்… சில பொம்மைகள், சின்ன சின்ன கிப்ட் அவ்வளவுதான். அதை தாண்டி ஒரு அவசரத்துக்கு என் தம்பி கிட்ட நான் ஒரு பத்தாயிரம் வாங்குனேன் வச்சுக்கோங்களே, அது கடன். நான் திரும்ப ரிட்டன் பண்ணனும். அதுவும் இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்ப எனக்கு ஒரு எமர்ஜென்சி அப்படின்னு என் தம்பி தானே, என் கூட பிறந்தவன்.. நாம தனியா இருக்கோம். சப்போர்ட்டுக்கு ஆள் இல்லை. நம்ம சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க அப்படின்னு என் சொந்த தம்பி கிட்ட நான் பணம் கேட்கணும்னா அவன் பொண்டாட்டி வரைக்கும் நான் பர்மிஷன் கேட்கணும். அவங்க கிட்ட நான் பணம் வாங்கினேன் அப்படின்னா நிறைய இடத்துல நான் உங்களை அனுசரிச்சு தான் போகணும். நியாயமான கோபத்துக்கு கூட விட்டுக் கொடுத்துப் போகணும். ஏன்னா எனக்கு உதவி செய்யறாங்க. அந்த இடத்துல உரிமை வராது உதவி தான்…”

“என் சொந்த தம்பியா இருந்தாலும் எனக்கு செய்வது உதவி. இதுவே என் ஹஸ்பண்ட் என் கூட இருந்தா அவரோட வருமானத்துல எனக்கு ரைட்ஸ் இருக்கு. அவரோட வீடு என்னோட வீடு. அவரோட பணம் என்னோட பணம். அவரோட மகன், என்னோட மகன். அவரோட வாழ்க்கை இப்ப என்னோட வாழ்க்கை… பையனுக்கு பீஸ் கட்டணும் உதவி செய்யுங்கன்னா புருசன் கிட்ட சொல்ல போறாங்க. நம்மள சுத்தி இருக்கிற எல்லா உறவுகளும் நமக்கு ஆதரவு, கொடுப்பாங்க பரிதாபப்படுவாங்க,ஆறுதல் சொல்லுவாங்க.. ஆனா, ஒரு தீர்வு கிடைக்காது. இன்னைக்கு நான் என்னுடைய எல்லாத்துக்கும் தனியா ஓடிட்டு இருக்கேன். என்னை பாக்கணும், பையனை பார்க்கணும், ஃபீஸ் கட்டணும், எதிர்காலத்துக்கு சேமிக்கணும், திடீர்னு ஹாஸ்பிடல் செலவு வரும், விசேஷம் வரும், வீட்டு செலவு வரும், ஸ்கூல்ல இருந்து அவ்ளோ சொல்லி விடுவாங்க எல்லாம் பாக்கணும், பேங்குக்கு போகணும், வீட்ட பாக்கணும்…” மித்ரனுக்கு பிரவீனா சொல்லும் பொழுதே மூச்சு வாங்கியது.

 ஆனால், இந்தப் பெண் பிரவீனா தினமும் இவற்றையெல்லாம் சமாளித்து தான் ஓடுகிறாள்.

“இவ்வளவு விஷயத்தை நான் பார்க்கும் போது என் உறவுகள் கிட்ட இருந்து எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும், இல்லை என்றால் ஒரு அட்வைஸ். உனக்கு தகுந்த மாதிரி ஒரு பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு.. என்னோட பொறுப்பை யாராவது எடுத்துப்பாங்களா? ஆனா, என் கணவர் என் கூட இருந்தா?… என் கூட சேர்ந்து கஷ்டப்படுறதுக்கும், சிரிக்கிறதுக்கும், முன்னேறதுக்கும், தோள் கொடுக்குறதுக்கும் அவர் இருப்பார் தானே.. எனக்கு இவ்வளவு வலியும் கஷ்டமும் இருக்காது இல்லை. எந்த பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன், இப்படி சொல்ற உறவு நம்ம வாழ்க்கைத் துணையாக தான் இருக்கும். அப்படி ஒரு துணையை நான் இழந்துட்டேன். என் விதி நான் கஷ்டப்படுறேன்…” என்றவள், கொஞ்சம் தயங்கி,

“உங்களுக்கு என்ன? நீங்க ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம் தானே.. பின்னாடி என்னைக்காவது ஒரு நாள் நம்ம வாழ்க்கையை நாமளே சீரழிச்சுக்கிட்டோம், அப்படின்னு ஒரு நினைப்பு வந்துரும். நீங்க என்னுடைய உண்மையான நல்ல ப்ரெண்ட். அதனால தான் சொல்றேன் ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்றதும்,

“எதுக்கு? ஒரு கல்யாணம் பண்ணி, நீங்க இவ்ளோ கஷ்டப்படுறீங்க. பின்னாடி நானும் அந்த கஷ்டத்துல அனுபவிக்கனுமா?.. நல்ல எண்ணங்க உங்களுக்கு!…” என்று கேலி பேசியவாறு அவள் அழுத்தத்தை குறைக்க முயற்சித்தான்.

“பொறந்தா எல்லாரும் சாகத்தான் போறாங்க.. சாகப் போற மனுசன் ஏன் வாழனும்னு யாராவது யோசிக்கவா செய்றாங்க?… இளமையில் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைக்கிற நீங்க, முதுமையில நிம்மதியா வாழணும்னு ஏன் யோசிக்கிறதில்ல. கொஞ்சம் யோசிங்க சார்…” என்றவள்,

“இனி நான் கிளம்புறேன்…” என்று எழுந்து கொண்டாள்.

 பிரவீனாவை பொறுத்தவரை மித்திரன் நல்ல நண்பன். அதனால் அவனோடு சகஜமாக பேசினாள். அவளுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. ஆனால், பார்ப்பவர்களுக்கும் அப்படி இருக்காது அல்லவா?…

“எப்படி போவீங்க?…”

“ஆட்டோவுல…” என்று உறங்கும் மகனை தோளில் போட்டு கொண்டாள்.

“ஆறு மாடி இறங்கணும். கொடுங்க அவன நான் தூக்கிட்டு வாரேன்…” என்று பிள்ளையை தூக்க,

“வேணாம் சார், கை மாத்துனா அழுவான். அதோட, லிப்ட்ல தானே போக போறோம். ஒன்னும் பிரச்சனை இல்ல…” என்று அவள் நாகரும்போதே வலுக்கட்டாயமாக ஆதிரனை தூக்கிக் கொண்டான்.

 பிரவீனாவுக்கு இது பிடிக்காமல் போக, ஏதோ சொல்ல வரும்போது மகன் முழித்து விட்டான். இனி சத்தமாக கத்தி அழுகப் போறான் என்று பிரவீனா நினைக்கும் போது, முழித்து மித்ரனின் முகம் பார்த்த பிள்ளை தூக்க கலக்கத்திலே லேசாக சிரித்து.. அவன் தோளில் படுத்துக்கொண்டது.

அதிர்ச்சியாக பிரவீனா பார்த்துக் கொண்டிருக்க… மித்ரன் கேப் புக் செய்தான். இது அவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.

“நான் ஆட்டோல போறேன்னு தான் சார் சொன்னேன்…”

“எனக்கு ரொம்ப தெரிஞ்ச கேப் பிரவீனா. சோ பயம் இல்லை…” என்றவன், அவர்களை கீழே அழைத்து சென்று, கேப் வந்ததும் கதவைத் திறந்து விட்டு அவள் வசதியாக அமர்ந்ததும், பிள்ளையை அவளிடம் கொடுத்தான்.

என்னவோ வாழ்க்கையைப் பற்றி அவனிடம் அவ்வளவு பேசியவள். இவனின் சின்ன சின்ன அக்கறை அவளை மௌனம் ஆக்கியது. ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறான்.. புரியாமல் வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்து, அவனிடம் விடைபெற்றாள் பிரவீனா. அவர்கள் செல்வதையே பார்த்த நின்றிருந்தான் மித்ரன். இவனை மட்டும் விட்டு, அவர்கள் தனியாக செல்வது போல் ஒரு பிரம்மை. மனம் அழுத்தியது.

 அவனுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்து விட்டது. பிரவீனா மீது அவனுக்கு இருந்த கோபம், ஆர்வமாகி, ஈர்ப்பாகி, அக்கறையில் போய் இப்போது பாசமாகிவிட்டது. பிரவீனா மகனோடு வீடு வரும்போது ஊருக்கு சென்றிருந்த குடும்பத்தார்கள் திரும்பி இருந்தார்கள். காருக்கு பணம் கொடுக்க எவ்வளவு என்று கேட்க.

“வேணாம் மேடம். சார் ஜிபே பண்ணிட்டாரு” என்று நகர்ந்தான் டிரைவர்.

அவளுக்கு மீண்டும் ஒரு திகைப்பு. பொதுவாக நட்பு வட்டத்தில் ஆண் மக்கள் இருக்கும் பொழுது உணவு, சினிமா என்று பொதுவான செலவுகளை ஆண்களை ஏற்க முன்வருவார்கள். ஆனால், இவன் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுகிறானோ என்று ஒரு மனம் பிரவீனாவிடம் சொன்னது. யோசனையாகவே வீட்டுக்குள் செல்ல,

குடும்பத்தாரை பார்த்து பொதுவான நல விசாரிப்புகள் தான். ஆதிரனுக்கு வீட்டு ஆட்களை பார்த்ததும் ஒரே குஷி. தூக்கம் கலைந்து தவ்வாளம் போட ஆரம்பித்தான்.

 “அம்மாச்சி ஊர்ல இருந்து எனக்கு என்ன வாங்கி வந்தீங்க…” என்று ஒவ்வொரு பேக்காக பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

மகேஸ்வரி மகனை பார்த்தவர் “நாங்க முன்னாடியே வந்துட்டோம் பிரவீனா. தம்பி தான் கடைக்கு எல்லாம் போய் வந்தான். பிரேம், அத்துக்குட்டிக்கு என்ன வாங்கி வந்தா? அவனுக்கு புடிச்ச சாக்லேட் வாங்கி வந்தீயா…”

“அச்சோ இல்லமா.. ரொம்ப லேட் ஆயிருச்சு. நாங்க ஆர்த்தி வீடுக்கு போயிட்டு ஆட்டோ ஏறும் போது ரொம்ப லேட்டு. அதனால நாங்க அப்படியே வந்துட்டோம்…” என்றதும்,

“ஆமா அத்தை வீட்டில் இருந்து கிளம்பவே லேட்டு. இங்க இருக்குற கடையில ஏதாவது வாங்கி கொடுத்துக்கலாம்…” என்று ஆர்த்தி சொல்ல, பிரவீனா மகன் முகம் பார்த்தாள்.

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் பிரிந்து இருக்கிறான். ஊரிலிருந்து வருகிறார்கள், தனக்கு என்று ஏதாவது வாங்கி வந்திருப்பார்கள் என்று ஆர்வம் அவனுக்கு… இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தானே என்று நினைத்த பிரவீனா. மகனைப் பார்த்து,

“அத்து சாயங்காலம் மாமா கூட கடைக்கு போயி, உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ…” என்று மகனை சமாதானம் செய்ய, அதற்கு முன்பே ஆர்த்தி அருகில் இருந்த பையை பிரித்து இருந்தான் ஆதிரன்.

அதில் நிறைய பழங்கள், கேக், தேன், ஸ்வீட்ஸ், நட்ஸ் இருந்தது. ஆர்த்தி,

“அது அம்மா எனக்காக வாங்கி கொடுத்து விட்டாங்க. இவனுக்கு பிடிச்ச சாக்லேட் அதுல இல்ல…” என்றதும் சரியென்று பிள்ளையை தூக்கி கொண்டாள் பிரவீனா.

 அவளுக்கு மகனைப் பற்றி தெரியும். இனி, அதையெல்லாம் எடுத்துப் பிரிக்க ஆரம்பிப்பான். அதனால்தான், பிள்ளையை தூக்கி கொண்டாள். பிரேம் தான்,

“அவனை விடு பிரவீ.. நீ வா அத்து.. உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ…” என்று ஆதிரனை இழுக்க,

“அவன்  சாக்லேட் தான்டா கேட்பான். ப்ரூட், ஸ்வீட் எல்லாம் சாப்பிட மாட்டான் விடு” என்று பிரவீனா சொல்ல,

“எனக்கு அவனை தெரியாதா?.. அதெல்லாம் அவன் நல்லா சாப்பிடுவான். அத்து, உனக்கு பால்கோவா புடிக்கும் இல்ல வா வந்து எடுத்துக்கோ…” என்றான் பிரேம். அவனுக்கே ஒரு குற்றவுணர்ச்சி. சின்ன பையன், ஆசையாக ஓடி வந்து பையை பிரித்து பார்த்தான்.

 ஆர்த்தி அம்மா பேக்கரி கூட்டி போய் தான் வாங்கி கொடுத்தார். அப்போது கூட அவனுக்கு ஆதிரன் நினைப்பு வர வில்லை. வீட்டுக்கு வந்ததும் மாமா என்று காலை கட்டி கொண்ட பின் தான் அவன் நினைவே வருகிறது. அத்தோடு இவ்வளவு இருக்க, கொடுக்காமல் இருப்பது எப்படி?…

ஆனால், பிரவீனா நினைவு வேறாக இருந்தது. பிரேம் இவ்வளவு சொல்லும் போதும், ஆர்த்தி வாயில் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை. மெளனமாக நின்று இருந்தாள்.

“நாங்க இப்பதான் வெளியே போயிட்டு வாரோம். நிறைய சாப்பிட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு…” என்றவள் பிள்ளையை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்து விட்டாள்.

அவளின் தந்தை தான், “ஏன்டா வீட்ல ஒரு பிள்ளை இருக்கு. அவன் வந்தது உன்னைத்தான் தேடுவான்னு தெரியுமில்ல. எங்க எங்க போயிட்டு வந்தீங்க. ஒரு கடை கூட தெரியலையா?…”காட்டமாக கேட்டார். அவருக்கு மகள் அமைதியாக பிள்ளையை தூக்கி கொண்டு சென்றது வருத்தமாக இருந்தது.

பெரியவர்கள்.. அவர்களும் ஒன்றும் வாங்கி வர வில்லை. சின்ன பையன் ஏமாந்து விட மாட்டானா? தப்பு தானே!…

“உங்க மக எல்லாத்துக்கும் சுளுக்கு எடுப்பா. சொல்ல சொல்ல கேட்காம எப்படி பிள்ளையை தூக்கி போற பாரு… அதான் இவ்வளவு இருக்கு எடுத்துக்கன்னு தம்பி சொல்றான் தானே. மனுசங்களை அண்ட விடாத ஆளு உங்க மகள் தான்…” குத்தம் சொன்னார் மகேஸ்வரி.

பிரவீனாவுக்கு எல்லாம் கேட்டு தான் இருந்தது. அவளைப் பொறுத்தவரை இவ்வளவு நாள் கழித்து வருகிறோம்.. வீட்டில் குட்டி பையனுக்கு ஒன்று கூட வாங்கி வரவில்லையே என்று ஆதங்கம் இருந்தது. அதற்காக உரிமையாகவா கேட்க முடியும். தன் மகனுக்கு என்று வாங்கி வரவில்லை. அப்புறம் வேற எதுக்கு?…

மறுநாள் பிரவீனாவுக்கு ஆபீஸில் வேலை நெட்டி முறித்தது. லஞ்ச் கூட அங்கே தான் அமர்ந்து உண்டாள். படிப்பறிவு இருந்தாலும் பெரிதளவு அனுபவ அறிவு இல்லாததால் நிறைய விஷயங்களில் பிரவீனாவுக்கு சிரமம் தான். ஒரு வைராக்கியத்துக்காக ஓடிக் கொண்டிருக்கும் பெண்.

தலை வேறு வலிக்க அதை தேய்த்துக் கொண்டே கோடிங் அடித்தாள். அவள் அருகில் இஞ்சி போட்ட டீ வாசம். லேசாக சிரிப்போடு நிமிர்ந்து பார்க்க அங்கு மித்ரன். அவள் நினைத்தது சாய் ஸ்ரீயை…

“சார் நீங்களா?..”

“ஆமா, நீங்க தான் பயங்கர டீ லவ்வராச்சே. ஒரு நாளைக்கு நாலு டீக்கு குறையாமல் குடிப்பீங்க. அதான் கொண்டு வந்தேன்” என்று டீயை வைத்து சென்றான்.

“நான் வாங்கத்தான் நினைச்சேன். அதுக்குள்ள சார் வாங்கி வந்துட்டாரு. போற போக்க பார்த்தா என்ன விட பெஸ்ட் பிரண்டா அவர்தான் இருப்பாரு போல.. அவரு நீயும் முட்டிக்கிட்டது போன ஜென்மம் மாதிரி போச்சு…” முகத்தை தூக்கிக் கொண்டாள் சாய் ஸ்ரீ.

உண்மை தான். இங்கே வேலைக்கு வந்த ஒன்றை வருடங்களில் இல்லாத அக்கறை இப்போது என்ன இவனுக்கு?.. நட்பு என்ற வட்டத்தை தாண்டி யோசிக்கவும் பிரவீனாவுக்கு பயமாக இருந்தது.

 அன்று வேலையும் இழுத்து அடிக்க.. எப்படியும் எட்டு மணிக்கு மேல் ஆகும் என்று சோர்ந்து போனாள் பிரவீனா.

 “வேலை இன்னும் முடியலையா பிரவீனா?…”

“எப்படியும் லேட் ஆகும் சார். பரவால்லை, நான் முடிச்சு குடுத்துட்டே போறேன்…”

“வீட்ல குட்டி பையன் இருக்கானே பிரவீனா. நீங்க கிளம்புங்க நான் பாக்குறேன்…”

“ஐயோ வேணாம் சார். என்னோட வேலை நானே பார்த்துக்கொள்கிறேன். அப்பா கிட்ட போன் பண்ணி சொன்னா அவங்க தம்பிய பாத்துப்பாங்க…”

“இதோட சேர்த்து வேற அசைனும் பண்ணி முடிக்கணும் பிரவீனா. உங்களுக்கு ரொம்ப லேட் ஆகும். நீங்க தனியா போவீங்க. அது இன்னும் சேஃப் கிடையாது. ஆல்ரெடி ஆறு மணிக்கு மேல் ஆச்சு, நீங்க கிளம்புங்க நான் பார்க்கிறேன்” என்று கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தான்.

 அவன் சொன்னதன் காரணம் உண்மையாக இருந்ததால்,

“நான் நாளைக்கு காலைல சீக்கிரம் வந்து முடிச்சு கொடுக்கிறேன் சார். தேங்க்யூ சார்…” என்று கிளம்பி விட,

 “ஓகே பை, டேக் கேர். அன்னைக்கு மால்ல இருந்து வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், பத்திரமா வீட்டுக்கு போயிட்டேன்னு ஒரு மெசேஜ் கூட போடல நீங்க… இன்னைக்கு வீட்டுக்கு போயிட்டு ஒரு மெசேஜ் பண்ணுங்க. அப்படியே அந்த குட்டி மாஸ்டர் கேட்டதா சொல்லுங்க” என்று அவள் முகம் பார்க்காமல் அவள் சிஸ்டத்தை பார்த்துக்கொண்டே சொல்லி முடித்தான்.

 அவனின் அதிகப்படியான அக்கறையும், கவனிப்பும் கண்டு அவள் தான் அதிர்ச்சியும், குழப்பமாக அவனைப் பார்த்தது. நன்றாக பேசிப் பழகும் அளவுக்கு நட்புதான். அதற்காக இது கொஞ்சம் அதிகப்படியோ என்ற யோசனையோடு கீழே வர,

 அங்கு அவளுக்காக கேப் புக் செய்திருந்தான் மித்ரன். என்ன இது என்று பிரவீனா உடனே அவனுக்கு கால் செய்ய,

“சார் நான் கேப் வேணும் உங்க கிட்ட கேட்டேன்னா? நான் ஒரு ஆட்டோ புடிச்சு போயிப்பேன். நானும் சென்னையில் தான் இருக்கேன் .எனக்கு ஒரு பயமும் கிடையாது…” கொஞ்சம் கண்டிப்பாக சொன்னாள்.

“தெரியும் பிரவீனா. காலையில நீங்க வரும்போது ஆட்டோல தான் வந்தீங்க. ஸ்கூட்டில வரல.. அதனாலதான் கேப் புக் பண்ணி விட்டேன். ஒரே இடத்துல வேலை பார்க்கிறோம், பிரண்ட்ஸா இருக்கோம், சின்ன சின்ன ஹெல்ப் பண்றது தானே…” என்று மித்ரன் சாதாரணமாக முடிக்க, அவளுக்கு தான் குழப்பமாக இருந்தது. பெண்களுக்கான உள்ளுணர்வு அவளை எச்சரிக்க தொடங்கியது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!