Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 25

அத்தியாயம் 25 

“அப்புறம் மச்சான்.. அங்க நிலவரம் எப்படி இருக்கு? இங்கே ரொம்ப நல்ல மாற்றம் எல்லாம் தெரியுது” என்று குதூகலமாக பேச்சை ஆரம்பித்தார் ஆனந்தன்.



Advertisement

“என்ன மாற்றம் தெரியுது? தஞ்சாவூர்ல இப்ப பனி மழை பொழியுதா என்ன? கும்பகோணத்துல வெய்யில் மண்டைய பொளக்குது” என்றார் வடிவேலு.

“உனக்கு குசும்பு தான்ய.. இங்கே எங்க அம்மாவும் மஞ்சுவும் ரொம்பவே மாறிட்ட மாதிரி இருக்கு. அவங்க தப்பை உணர்ந்துட்டாங்க தெரியுமா?”

Advertisement

Advertisement

“ஹி..ஹி.. ஹு..ஹு.. ஹா .. ஹா” என்று நக்கலாக சிரித்தார் வடிவேலு.

“எதுக்குய்யா இப்படி லூசு மாதிரி சிரிக்கிற, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு சிரிக்கிற?”

Advertisement

“ஆனந்தா.. உன்னை நினைச்சா சிரிக்கிறதா அழுகிறதா தெரியல போ… இப்படி அப்பிராணியா இருக்க?”

“என்னய்யா சொல்ற? நிஜமாவே என் சம்சாரம் அருணாவை நினைச்சு வருத்தமா பேசுச்சுய்யா, எங்க அம்மா கூட அவளை பார்க்கனும்போல இருக்குன்னு சொல்லிட்டே இருக்காங்க”

“சரி, அதுக்கும் அவங்க திருந்தறத்துக்கும் என்ன சம்பந்தம்? உன் தங்கச்சி கூட தான் இங்கே செண்டிமெண்ட் படத்தை ஓட்டிட்டு இருக்கா”

“அப்ப நான் சொன்னது தானே சரி.. எல்லாரும் மனசு மாறுறாங்க தானே”

“லூசாய்யா நீ, அவங்க எல்லாரும் எப்ப பாசம் இல்லாம இருந்தாங்க. பாசத்துல அவங்களை எல்லாம் எப்பவுமே குறை சொல்ல முடியாது. ஆனா, பாசத்தை பாயாசமாவும் வைப்பாங்க பாய்சனாவும் வைப்பாங்க. எப்ப எதை வைப்பாங்கன்னு அவங்களுக்கே தெரியாது, இது புரியாமலேயா இத்தனை வருஷம் குடும்பம் நடத்துன?”

“உன் கிட்ட போய் சொன்னேன் பாரு. வைய்யா போனை”

“கோச்சிக்காத மச்சான், நிதர்சனத்தை புரிய வைச்சேன். அப்புறம் நம்ம எப்ப போலாம்ன்னு சொல்லு?”

“அதை  ஏன் மச்சான் கேக்குற? இந்த  தடவை போகும் பொழுது என் சம்சாரம் கூட வரேன்னு சொல்லிட்டு இருக்கா. அதை சொல்ல தான் போன் போட்டேன்”

“யோவ்.. எவ்வளவு பெரிய தில்லாலங்கடி நீ. நீ ஜாலியா ஹனிமூன் போலாம்னு முடிவு பண்ணிட்டு என்னை கழட்டிவிட போன் போட்டுட்டு, அங்கே நிலவரம் என்னன்னு கதை விட்ற?”

“நீ வேற ஏன்யா.. எங்க அம்மா நானும் வரேன்னு சொல்றாங்க. அதுக்கு என் சம்சாரம், ஹனிமூனுக்கே மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்த ஆள் தானே நீங்க. இப்ப என்ன பண்ண போறீங்க, அங்காளி பங்காளி எல்லாம் சேர்த்துக்கிட்டு பஸ் வச்சு கூட்டிட்டு போக போறீங்களான்னு கேக்குதுய்யா?”

“ஹி..ஹி.. ஹு..ஹு.. ஹா .. ஹா.. நான் சிரிச்சா உனக்கு கோவம் வேற வருது பாரேன்..ஹி..ஹி..”

“எங்க அம்மாவும் மஞ்சுவும் எப்பவும் ராசியா தான் இருப்பாங்க. இப்படி ஒரு சிக்கல் வரும்னு நான் நினைக்கலை, என்னத்த சொல்றது?”

“மச்சான்.. இன்னொரு விஷயம் சொல்லவா? “

“என் சம்சாரம் இருக்காளே.. அதான்ய்யா உன் தங்கச்சி”

“யோவ்.. என் தங்கச்சி தான் உன் சம்சாரம்னு எனக்கு தெரியாதா?”

“அவ சொல்லிட்டு இருக்கா.. மஞ்சு போறதுக்கு முன்னாடி நான் என் பையன் வீட்டுக்கு போகணும்னு”

“யோவ்.. அப்ப இப்ப இவங்க இரண்டு பேரும் எதிர் கட்சியா? கூட்டணி கலைஞ்சிடுச்சா? அப்ப நிலவரம் இப்ப நல்லதா மாறி இருக்கா? மோசமா மாறி இருக்கா ?”

“நம்ம பாடு எப்பவும் திண்டாட்டம்  தான்யா.. அதனால கனவு காணாம ஆபிஸ் வேலையை பாரு, போ”

————————–

மஞ்சுளா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ப்ரோமோஷன் அவருக்கு கிடைப்பதாக இருந்தது. அதானல் அவரால் இன்னும் இரண்டு மாதத்திற்கு லீவ் எடுக்க முடியாத சூழ்நிலை.

“ஏங்க, இப்ப லீவ் போட்டா இது தான் சாக்குன்னு வேற யாராவது தட்டிட்டு போய்டுவாங்க. என்னோட இரண்டு வருஷ உழைப்பு வீனா போய்டும். என்ன செய்றது?”

“இது நல்ல சான்ஸ் மஞ்சு, இப்ப இந்த ப்ரோமோஷன் வந்தாதான் சரியா இருக்கும். இந்த போஸ்ட்டுக்கு மேலே இன்னும் மூணு லெவல் இருக்கு. அப்ப தான் ரிட்டையர்மென்ட் குள்ள டாப் பொசிஷன் ரீச் பண்ண முடியும்” என்றார் ஆனந்தன் உற்சாகமாக.

“எவ்வளவு நல்ல விஷயம், வாழ்த்துக்கள் மஞ்சு”

“அது இல்லைங்க.. அருணாவை போய் பார்க்கணும் இல்ல?”

“விஷயத்தை சொல்லு, அருணா ரொம்ப சந்தோஷப்படுவா. இதுக்கு போய் ஏன் கவலை படுற? ப்ரோமோஷன் வந்தப்புறம் நாலு நாள் போயிட்டு வரலாம். அவ்வளவு தானே?”

“நல்லா சொல்லு டா… எத்தனை பெரிய விஷயம். சந்தோசப்படாம மூஞ்சிய தூக்கி வச்சிருக்கா.  ஊர் கண்ணே நம்ம மஞ்சு மேல தான் தெரியுமா? இந்தா இந்த நல்ல விசேஷத்தை கொண்டாட கேசரி பண்ணேன், சாப்பிடுங்க.. நான் போய் அஞ்சுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்றேன்” என்று மகன் மருமகள் இருவருக்கும் கேசரியை கொடுத்துவிட்டு வந்தார் பாரு பாட்டி.

அருணாவிற்கு அழைத்து விஷயத்தை கூறினார்கள், ஆனந்தனும் மஞ்சுவும்.

“ரொம்ப சந்தோசம் அம்மா, காங்கிராட்ஸ்” என்றாள் அருணா மகிழ்ச்சியாகவே.

“இப்ப உடனே வர முடியாது போல இருக்கு அருணா.. நீ இங்கே வரியா? நீ வீட்ல தானே இருக்க?” என்றார் மஞ்சு.

ஆனந்தனுக்கு வடிவேலு கூறியது தான் நியாபகத்திற்கு வந்தது.

“பார்க்கலாம் ம்மா.. குருவை தனியா விட்டுட்டு வர முடியாது. அதுவும் இல்லாமல் ட்ராவல் பண்ண முடியுமான்னு தெரியல, கொஞ்ச நாள் போகட்டும்” என்று நல்ல விதமாகவே கூறினாள் அருணா.

“குரு கிட்ட போன் கொடும்மா.. அவர்கிட்டயும் சொல்லிடறோம்” என்றார் ஆனந்தன்.

“குரு வெளியே போய் இருக்காரு ப்பா.. வந்ததும் நாங்களே கூப்பிடறோம்”

“வச்சிருக்க டீ கடைக்கு ரொம்பத்தான் பில்ட் அப். என் மருமக எவ்வளவு பெரிய பதவிக்கு போக போறா, நாங்க அதை சொல்ல கூடாதா.. அது என்ன நாங்களே கூப்பிடறோம்னு சொல்றது? ” என்று நொடித்துக்கொண்டார் பாரு பாட்டி. போன் ஸ்பீக்கரில் இருந்ததால் அருணா பேசுவதை கேட்டிருந்தார். அவர் கூறியதும் அருணாவிற்கு கேட்டிருக்கும்.

“ஏன் மா?” என்றார் ஆனந்தன் ஆதங்கமாக.

“சரிப்பா.. நான் வச்சிடறேன்” என்று அருணா வைத்துவிட்டாள்.

——————————————

“பார்த்தீங்களா எங்க அண்ணியை..“ என்றார் அஞ்சு வடிவேலுவிடம்.

“ஏன் என்னாச்சு?”

“அவளுக்கு ப்ரோமோஷன் கிடைக்க போகுதாம். ஏற்கனவே அவளை கையில பிடிக்க முடியாது. இனி கேக்கவே வேண்டாம், மஞ்சு கூட பரவாயில்ல, எங்க அம்மாவை தான் சுத்தமா பிடிக்க முடியாது”

“நல்ல விஷயம் தானே அஞ்சு “

“அது இல்லை.. அருணாவை பார்க்க போறதா சொன்னா இல்ல, இப்ப போக முடியாதாம்“

“ஓ.. ப்ரோமோஷன் கிடைக்கிற சமயத்துல லீவ் போட முடியாது தானே”

“அவ போயிட்டு வரும் போது அத்தையை கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருந்தா”

“அதனால என்ன அஞ்சு? நம்ம இரண்டு பேரும் போய் பிள்ளைகளையும் பார்த்திட்டு அம்மாவையும் கூட்டிட்டு வந்திடலாம்”

“போலாம் தான், ஆனா ஒரு வாரம் லீவ் போடற மாதிரி இருக்கும். மஞ்சு இப்ப போறேன்னு சொன்னதால தான் நான் இந்த புது ப்ராஜெக்ட் ஒத்து கிட்டேன். இரண்டு மாசம் லீவ் எடுக்கிறது கஷ்டம்”

“இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் போவோம்”

“அத்தை அதுவரைக்கும் அங்கேயே இருப்பாங்களா? அவங்க போய் ஒரு மாசம் மேலே ஆயிடுச்சு”

“நான் மட்டும் போய் கூட்டிட்டு வந்துடறேன்“

“நீங்க போய் அத்தையை கூட்டிட்டு வாங்க, இல்ல குருவை கொண்டுவந்து விட்டுட்டு போக சொல்லுங்க. நான் டெலிவரி சமயத்துல இரண்டு மாசம் லீவ் போட்டுட்டு போய் இருந்துகிறேன்”

“நல்லா யோசிச்சு சொல்லு அஞ்சு, அப்புறம் கிளம்பினதும் என்ன கூட்டிட்டு போகலைன்னு சொல்ல கூடாது” என்று கூறி சென்றுவிட்டார்.

“வேற வழி என்ன இருக்கு, நிச்சயம் லீவ் கிடைக்காது. போயிட்டு வாங்க.. இவ தெளிவா சொல்லி இருந்தா நான் ப்ராஜெக்ட் ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்”

“ஏம்மா.. இந்த ப்ராஜெக்ட் கிடைச்சது பெரிய விஷயம்ன்னு சொன்ன, இதை முடிச்சா உனக்கும் ப்ரோமோஷன் கிடைக்கும்ல?” என்றாள் அபி.

“ஆமா சொன்னேன், இப்ப என்ன அதுக்கு? சும்மா அப்பாவும் மகளும் நொய் நொய்ன்னு”

“ஏம்மா.. நாங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தோம், நீயா கூப்பிட்டு புலம்பிட்டு”

“வர வர எல்லாரும் என்னை எதிர்த்துப்பேசுங்க, என் நேரம்.. கட்டுனதும் சரி இல்ல, பெத்ததும் சரி இல்ல” என்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.

 

வடிவேலு மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

“என்னப்பா.. அம்மா திட்டிட்டு போறாங்க, உங்க மூஞ்சி இப்படி பிரைட்டா இருக்கு“

“ஆனந்தனும் நானும் மட்டும் போலாம்னு நினைச்சோம். எப்படி உங்க அம்மா, அத்தை எல்லாரையும் கழட்டி விடறதுன்னு தான் யோசிச்சோம் டா. அதுவா எல்லாம் நடக்குது இல்ல?” என்று மகளிடம் ரகசியம் பேசினார்.

“கடவுள் உங்க பக்கம் தான் போல.. என்ஜாய்..என்ஜாய்..” என்று மகளும் ரகசியமாக அப்பாக்கு வாழ்த்துக்கள் கூறினாள்.

“யோவ்.. நான் ஹல்த்வானி போக உன் தங்கச்சியே ஓகே சொல்லிடுச்சுய்யா, நீ எப்படியாவது அங்க சாமாளிச்சிட்டு சொல்லு. நாம இரண்டு பேரும் போயிட்டு வந்துடுவோம்”

“எப்படிய்யா? உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல. எல்லாம் அதுவா உனக்கு நடக்குது. நான் ஏதாவது ஐடியா பண்ணிட்டு சொல்றேன். ஒரு நாள் டைம் கொடு”

டெல்லியில் ஒரு மீட்டிங் இருப்பதாகவும், அதனால் மீட்டிங் முடித்து அப்படியே பிள்ளைகளை பார்த்துவிட்டு வருவதாகவும் கூறி மஞ்சுவையும் பாரு பாட்டியையும் சமாளித்துவிட்டார் ஆனந்தன்.

இப்படி மீண்டும் அப்பாக்கள் அணி ஹல்த்வானி புறப்பட்டு சென்றது.

இருவரும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சித்தாய் கோலு ஆலயத்திற்கு சென்று வேண்டுதல் மணியை கட்டிவிட்டு, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி அருணா குருவிற்கு அவர்கள் தங்கத்தை கொடுத்து ஆசிர்வதித்தற்காக நன்றி கூறிவிட்டு வந்தனர்.

பின், சொர்ணம் பாட்டியையும் அழைத்து கொண்டு கிளம்பினார்கள். 

“பத்திரமா இருக்கனும்  அருணா, குரு பொறுப்பா பார்த்துக்கோப்பா. எப்ப தேவைன்னு தோணுனாலும் உடனே சொல்லுங்க, நான் வந்துடறேன் “ என்று பல முறை அருணாவிடமும் குருவிடமும் கூறியே அங்கே இருந்து கிளம்பினார் சொர்ணம் பாட்டி.

 

கம்லா பாட்டி, கோலு, ருக்மணி என்று அங்கே எல்லாரும் பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள் சொர்ணம் பாட்டியை.

பேரன் வீட்டில் இருந்து மிகவும் நிறைவான மனதுடன் திரும்பி வந்தார் சொர்ணம் பாட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!