Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் தேடும் காதல் நீ

நான் தேடும் காதல் நீ….11

நான் தேடும் காதல் நீ….11

இப்போதெல்லாம் தீர்த்தாவின் பொறுமை மிகவும் குறைந்திருந்தது எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டிருந்தாள்.வார விடுமுறையில் வந்திருந்த சிவன்யாவும் இதை கண்டு கொண்டு,

“என்னக்கா எதுக்கு இப்படி எல்லார்கிட்டேயும் சத்தம் போடுற…என்ன ஆச்சு….”என்று கேட்க,

“எங்க சத்தம் போடுறேன்….நான் சாதரணமா பேசுனா கூட உங்களுக்கு சத்தம் போடுற மாதிரி இருக்கா….”என்று அவளிடமே மறு கேள்வி எழுப்ப இப்படி கேட்பவளிடம் என்ன கூறுவது என்று சிவா அமைதியாகி விட்டாள்.



Advertisement

தீர்த்தாவிற்குமே புரிந்தது தான் கொஞ்சம் அதிகமாக தான் போகிறோம் என்று இருந்தும் அவளாள் அவளை சில விடயங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.அமரனிடம் இருந்து விலகிவிட வேண்டும் என்று தன்னை முழுதாக தயார் செய்த பின் அவளின் இதயத்தில் ஏற்படும் வலியை விட அமரன் அவளிடம் இருந்து ஒதுங்க தொடங்கிவிட்டான் என்று உணர்ந்த நொடி மிகவும் உடைந்துவிட்டாள்.ஒரு வாரம் முன்பு,

அன்று நிமலன் வந்து விட்டு சென்றவுடன் தன் கடைக்குள் நுழைந்தவளாள் இரண்டு நிமடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை வேகமாக மண்டிக்கு செல்ல,

“இந்த ஆனந்தன் கணக்கு ஏன் இன்னும் முடிக்காம இருக்கு….அதை என்னனு பாரு கதிரு….”என்று கதிரிடம் பேசிக் கொண்டிருந்தவன் ஏதோ உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்க்க தீர்த்தா தான் வந்து கொண்டிருந்தாள்.அவள் வரும் விதத்திலேயே தெரிந்தது மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் என்று.முன்பெல்லாம் இது போல் அவள் வரும் பொழுதுகளில் அமரனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இழையோடும் அது யாரும் அறியா வண்ணம் அவன் மீசையின் அடியில் மறைந்துவிடும்.ஆனால் இன்று அப்படி எதுவும் இல்லை இன்னும் சொல்லப்போனால் இவள் ஏன் வருகிறாள் என்னும் பாவனை தான் அவன் முகத்தில் தெரிந்தது தீர்த்தாவும் இதை எல்லாம் கவனித்தபடி தான் வந்தாள்.

Advertisement

“டேய் இதோ இருக்கே….”என்று கதிர் நோட்டை எடுத்து காட்டும் போது தான் அமரனின் பார்வை இங்கு இல்லை என்று உணர்ந்து அவனும் திரும்ப தீர்த்தா வருவதை கண்டவுடன்,

Advertisement

“வா பூரி…என்ன உன் கடைக்கு பெரிய ஆளுங்க எல்லாம் வராங்க….”என்று கேட்டு ஒரு கொட்டை அவளிடம் பரிசாக வாங்கினான்.

“ஆஆஆஆ….”

“வாய் ரொம்ப பேசின இப்படி தான் விழும்….”என்றவள் அமரனின் புறம் திரும்ப அவனோ அவளை கண்டு கொள்ளாமல்,

Advertisement

“கதிர் நீ நம்ம பரமசிவம் கடைக்கு போய் தக்காளி லோடுக்கான பணத்தை வாங்கிட்டு வா……”

“எதுக்குடா என்னை துரத்த பார்க்குற…என்ன சண்டை இரண்டு பேருக்கும் சொன்னா தான் இங்கிருந்து போவேன்…..”என்று கதிர் சட்டமாக அமர்ந்துவிட்டான்.தாய்,தந்தையின் இறப்பிற்கு பிறகு தனக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் தீர்த்தாவும்,அமரனும் அவர்களின் மீது தனி மரியாதை உண்டு கதிருக்கு இன்று இருவரும் இருவேறு துருவங்கள் போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிவதை பார்த்ததும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“என்ன தான் பிரச்சனை உங்களுக்குள்ள….”என்று கதிர் கேட்க தீர்த்தா அமரனை முறைத்துக் கொண்டு நின்றாள்.அவளின் கண்களில் அத்தனை கனல் அவ்வளவு தானா நான் உனக்கு என்னும் கோபம் அதை அமரனும் உணர்ந்து தான் இருந்தான்.

“இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா….”என்று கதிர் தன் இயல்பையும் மீறி கத்தி விட்டான்.

“இங்க பாரு தீர்த்தா நீ நினைக்கிறது சரிதான்….என்னால இனி உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது….இனி நீ உன்னை பார்த்துக்க….அது தான் நல்லது….”என்று அமரன் கூறிவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட,கதிர் இவன் என்ன கூறுகிறான் என்று அதிர்ந்து அவனை அழைத்துக் கொண்டே பின் சென்றான் என்றால் தீர்த்தாவோ அந்த இடத்திலேயே அசைவற்று நின்றுவிட்டாள்.

வார்த்தைகள் மனிதர்களை கொன்றுவிடும் என்று ஒருமுறை புத்தகத்தில் படித்திருக்கிறாள் ஆனால் அது உண்மை என்பதை இன்று இப்போது உணர்ந்தாள்.முதல் முறை தன்னை நினைத்தே கழிவிரக்கம் இவ்வளவு தானா நான் என்னை வேண்டாம் என்பவனிடம் இப்படி மீண்டும் மீண்டும் நிற்கிறேனே என்று நினைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துவிட்டது.

“ஏய் தீர்த்தா….ஏய் அழாத…அவனுக்கு ஏதோ கோபம் போல அதான் இப்படி பேசிட்டான்…அவனை உனக்கு தெரியாதா….நான் பேசுன்றேன்….”என்று கதிர் அவளின் தோள்களை தொட மொத்தமாக உடைந்து அழுதவள் அவ்விடம் விட்டு சென்றுவிட கதிர் உடனே சிவன்யாவிற்கு அழைத்துவிட்டான்.

கல்லூரி நூலகத்தில் இருந்த சிவன்யாவின் கைபேசி சிணுங்க யார் என்று பார்த்தவளின் கண்கள் விரிந்தது.இவனா இவன் எதுக்கு எனக்கு கூப்பிடுறான் என்று யோசித்தவாரே நூலகத்தை விட்டு வெளியில் வந்து அழைப்பை ஏற்க,

“ஹலோ சிவா இங்க ஒரு பெரிய பிரச்சனை….”என்று தொடங்கி தீர்த்தாவிற்கும்,அமரனிற்கு நடந்த அனைத்தையும் கூறியவன்,

“தீர்த்தா அழுதுகிட்டே போறா நீ அவ கிட்ட பேசு….”என்று அவள் பேச அனுமதிக்காமல் பேசிவிட்டு வைத்துவிட,சிவன்யா முதலில் கதிர் தனக்கு முதன் முதலில் அழைத்திருக்கிறான் என்று சந்தோஷித்தவள் அவன் கூறிய அனைத்தையும் கேட்டவுடன் அந்த சந்தோஷம் மொத்தமாக வடிந்துவிட்டது. தன் அக்காவிற்கு பலமுறை அழைத்து தோற்றுவிட இனி சரிவராது வீட்டிற்கு சென்று பார்த்துவிடுவோம் என்று கிளம்பும் தருவாயில் தீர்த்தாவே சிவன்யாவை அழைத்துவிட்டாள்.தன் அக்காவின் அழைப்பை பதற்றத்துடன் எடுத்த சிவா,

“க்கா…என்னக்கா பிரச்சனை ஏன் அழுதியாம் கதிர் சொன்னார்….க்கா…க்கா…பேசுக்கா….”என்று கத்த,

“ஒண்ணுமில்லடீ…..சின்ன சண்டை அதான்…நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத….நான் போன் எடுக்கலைனா உடனே நீ கிளம்பி வருவனு தான் போன் போட்டேன்….சரி நான் அப்புறம் பேசவா தலைவலிக்குது…..”என்றவளின் குரலே உடைந்து தான் இருந்தது.

“நீ இன்னும் அழற…என் கிட்ட சொல்லமாட்டியா….நான் வரேன் நீ வை….”என்று சிவா கூற,

“ப்ச் சிவா…நிஜமா நான் இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாகிடுவேன்….நீ இதுக்கா அலையாத…..நீ பாரு….”என்று கூறி தீர்த்தா வைத்துவிட,சிவன்யா கதிருக்கு அழைத்துவிட்டாள்.கதிரிடம் விபரம் கேட்க அவன் தனக்கு தெரிந்த வரை அமரனுக்கும்,தீர்த்தாவிற்குமான சண்டையை கூற சிவாவின் மனதில் தீர்த்தாவின் மனது தெள்ள தெளிவாக புரிந்து போனது.அவளுக்குமே குழப்பம் தான் இதை எப்படி கையால்வது என்று யோசித்தவரே அமர்ந்துவிட்டாள்.

அன்று வந்த நிமலன் அதோடு தீர்த்தாவை விடவில்லை மேலும் இரண்டொருமுறை கடைக்கு வந்து அவளிடம் அடிகளை வாங்கிக் கொண்டு சென்றவன் கடைசியில் செல்வத்தின் உதவியை நாட அவரோ சதாசிவத்திடம் பேசினார்.

“டேய் நீ சொல்லுடா….நீ சொன்னா தீர்த்தா கேட்பா….ஒரு தடவை வந்துட்டு போக சொல்லுடா…..”என்று கேட்க,

“எதுக்கு வரனும் உன்வீட்டு ஆளுங்க அந்த பொண்ணுகளுக்கு பண்ணது பத்தாது…..என்னால செய்யமுடியாது….”என்று சதாசிவம் மறுத்துவிட,

“ப்ளீஸ் டா சிவா…..அந்த மனுஷன் ரொம்ப அழுவுறாருடா….எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…என்ன இருந்தாலும் வயசானவரு கொஞ்சம் மனசு வை டா….”

“என் நாச்சியப்பா கூட வயசானவர் தான்டா….”என்று சிவம் பதில் கொடுக்க செல்வம் அமைதியாகிவிட்டார் இதற்கு என்ன கூறுவது அனைத்தும் தன் பேராசையினால் வந்தது.இன்று நான் திருந்திவிட்டான் என்று கூறினால் கூட நம்புவோர் இல்லை.

“உன்கிட்ட பதில் இல்லைல….எனக்கு தெரியும் உன்னால பதில் சொல்ல முடியாதுனு….இதுக்கு அப்புறம் இதை பத்தி பேசாத வைக்குறேன்…..”என்று கூறி அவர் வைத்துவிட,ஆனால் அடுத்த நாளே நிமலன் அவரின் ஆபிஸ்ற்கே சென்றுவிட்டான்.சிவத்தால் செல்வத்திடம் பேசியது போல நிமலனிடம் பேசமுடியவில்லை அவனை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறார்.மிகவும் நேர்மையானவன் தொழிலில் சுத்தம் என்று அவனின் தந்தையிடம் இருந்த கோபத்தை அவனிடம் காட்ட மனமில்லை அதனால் பொறுமையாக முடியாது என்று கூறிவிட நிமலன் அவரை விடவில்லை.

“அங்கிள் ப்ளீஸ்…..உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லனா நீங்களும் தீர்த்தா கூட வாங்க….நான் தாத்தா கிட்ட கண்டிப்பா தீர்த்தாவை கூடிட்டு வரேன்னு சொல்லிட்டேன்….ப்ளீஸ்….”என்று கெஞ்சுவது போல பேச,மிகபெரிய நிறுவனத்தை நிர்வகிக்கிறவன் தன்னிடம் இத்தனை பணிவுடன் பேசியது ஆச்சிரியம் என்றால் இவன் செல்வத்தின் மகன் தானா என்ற ஐயமும் வந்தது அதை அவர் வாய்விட்டே கேட்டும்விட,

“ஹா….ஹா….நிஜமா நான் செல்வத்தோட பிள்ளை தான்….நீங்க என்னை நம்பலாம்…ப்ளீஸ் நான் சொன்னது கொஞ்சம் கன்சீடர் பண்ணுங்க…..”என்று தன் வேலையில் கண்ணாக இருக்க,

“சரியான ஆளு தான் நீ…..நான் ஒரு தடவை சொல்லி பார்க்குறேன்…ஆனா அவளை வற்புறுத்த மாட்டேன்….ஒருவேளை அவ வரேன் ஒத்துக்கிட்டா நாங்க வரோம்…..”

“ஓகே அங்கிள்…இப்பவே பேசிடுங்களேன்….”என்று நிமலன் கூற,சதாசிவத்திற்கு முழிபிதுங்கியது அவனின் அலுச்சாட்டியத்தில்,தான் பேசாமல் அவன் நகர போவதில்லை என்று உணர்ந்தவர் தீர்த்தாவிடம் பேச முதலில் மறுத்தவளிடம் சதாசிவம் தான்,

“தீர்த்தாமா…..இங்க பாரு அவரை உன் தாத்தானு ஏன் நினைச்சிக்குற ஏதோ வயசான ஒருத்தர் தன்னோட இறுதி கட்டத்துல உன்னை பார்க்கனும் ஆசை படுறார் அவரை நீ பார்க்க போற அப்படி நினைச்சுக்கோயேன்…..”என்று கூற,தீர்த்தாவும் அதற்கு மேல் வாதம் புரியாமல் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டுவிட்டாள்.

தீர்த்தாவிற்கு அத்தனை யோசனை அங்கு செல்ல ஆனால்  கூடவே சதாசிவம் தன்னுடன் வருகிறேன் என்று கூறியவுடன் தான் அதற்கு ஒத்துக்கொண்டது.இப்போது ஒத்துக்கொண்டிருக்க கூடாதோ என்று மனது அடித்துக் கொண்டது.மனதின் அலைப்புறிதலை தடுக்க உடனே தன் தங்கைக்கு அழைத்துவிட்டாள்.

அப்போது தான் வகுப்பு முடிந்து தன் விடுதியின் உள் வந்த சிவன்யா தீர்த்தா அழைப்பதை பார்த்ததும் அடுத்த எதாவது பிரச்சனையோ என்று தான் பயந்து போனாள்.ஏன்னென்றால் கடந்த வாரம் சென்ற போது தீர்த்தா நடந்து கொண்டது அப்படி எதற்கு எடுத்தாலும் கோபம் அவளிடம் நெருங்கவே அத்தனை பயமாக இருந்தது.அமரனிடம் நேரிடையாக பேசிவிடுவோமா என்று கூட நினைத்துவிட்டாள் ஆனால் அவனை அத்தனை சுலபத்தில் பார்க்கமுடியவில்லை அவளால்.

சிவன்யா கைபேசியை வைத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்க அவளின் அறை தோழி,

“ஏய் சிவா போன் அடிச்சிக்கிட்டே இருக்கு நீ எடுக்காம என்ன பண்ணுற…..”என்று கேட்டவுடன் தான் நிகழ்விற்க்கு வந்து அழைப்பை ஏற்க,

“ஹலோ….ஏய் சிவா போனை எடுக்க எவ்வளவு நேரம்….”என்று தீர்த்தாவின் காட்டு கத்தல் தான் கேட்டது,

“க்கா….ஏன் இப்படி சத்தம் போடுற….எனக்கு கொஞ்ச வேலை அதான் எடுக்க லேட் ஆகிடுச்சு….என்னனு சொல்லு….”என்றவளின் குரலில் அத்தனை சலிப்பு பின்னே போன வாரம் முழுவதும் பேசியும் பார்த்து,கத்தியும் பார்த்துவிட்டாள் ஆனால் தீர்த்தா வாயை திறக்கவில்லை அதனால் தமக்கையுடன் கோபித்துக் கொண்டு தான் விடுதிக்கு வந்தது.

“நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்….”என்ற தீர்த்தா சதாசிவம் அழைத்ததையும் நிமலன் தன்னை வீட்டிற்கு அழைத்தையும் கூற,

“என்னக்கா சொல்லுற….என்கிட்ட சொல்லவேயில்லை…எதுக்கு உன்னை கூப்பிடனும்…நானும் வரலை….நீயும் அங்கெல்லாம் போகாத…..”என்று சிவா பயத்துடன் மறுக்க தொடங்கிவிட்டாள்.

“நானும் முதல்ல வேணாம்னு தான் நினைச்சேன் ஆனா அங்கிள் தான் நானும் கூட வரேன்….ஏதோ வயசானவர் பார்க்கனும் நினைக்கிறார் நீ ஒரு தடவை வந்து பார்த்துட்டு போனு சொன்னார்…”என்று கூற,சிவா வேண்டாம் என்று மறுத்தாள்.

“அடியே நான் என்ன உறவை வளர்க்கவா போறேன்…..சும்மா ஒருதடவை பார்த்துட்டு வந்துடலாம்….நீ பயப்படாம வா….”என்று ஒருவழியாக பேசியே தங்கையை வழிக்கு கொண்டு வர அவளோ தயக்கத்துடன்,

“க்கா நாம அவங்க அது அமரன் அவங்களையும் கூட்டிட்டு போகலாமா….”என்று சிவா தன் மனதில் பட்டதை கேட்டுவிட்டாள்.ஏனோ அமரன் வந்தால் தைரியமாக இருக்கும் என்று ஒரு எண்ணம்,மறுமுனையில் மௌனம் சிவாவின் மனதில் தான் நினைத்தது சரிதான் என்ற எண்ணம் இன்னும் உறுதியானது.

“க்கா….இருக்கியா….”என்று அவளே தொடங்க,

“ம்ம்….இருக்கேன்…..அது சரிவராது சிவா அவங்களுக்கு வேலையிருக்கும் எப்போதும் நமக்கு உதவி செஞ்சிக்கிட்டு இருக்கமுடியாதுல்ல…..அதனால வேண்டாம் நான் பார்த்துக்குறேன்….இந்த வார கடைசியில நாம பார்க்க போறோம்…நான் உன் ஹாஸ்டல் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்…..ரெடியா இரு…..”என்றுவிட்டு அவள் வைத்துவிட,சிவன்யா பயத்துடன் தான் இருந்தவள் கதிருக்கு அழைத்துவிட்டாள்.

“இந்த நேரத்தில் இவள் எதற்கு அழைக்கிறாள்….”என்று யோசித்தவாரே அழைப்பை ஏற்க,சிவன்யா தீர்த்தா தன்னிடம் கூறியதை கூறிவிட்டு,

“எனக்கு பயமா இருக்கு….அதனால தான் உங்க கிட்ட சொன்னேன்….”என்றவளின் குரலில் இன்னும் ஏதோ ஒன்று இருப்பது போல் இருந்தது கதிருக்கு,

“என்ன சிவா வேற எதாவது என்கிட்ட சொல்லனுமா….”என்று கேட்டு விட,

“அது ஆமா….அவங்க அமரன் எங்க கூட வருவாங்களா….அவங்க இருந்தா கொடுங்களேன்……”என்று ஒருவழியாக கேட்டுவிட,மறுபக்கம் மௌனம் கதிர் நிமிர்ந்து அமரனின் முகம் பார்த்தான் அவனோ இறுக்கத்துடன் அமர்ந்திருக்க,

“இல்ல அவன் இல்லை….அவன் வந்தவுடனே பேச சொல்லுறேன்….”என்று கூறி வைத்துவிட்டான்.இதற்கு என்ன சொல்ல போகிறாய் என்பது போல் தான் கதிர் அமரனை பார்த்துக் கொண்டு இருந்தான்.

“எதுக்கு இப்ப என் மூஞ்சியவே வெறிச்சி பார்த்துக்கிட்டு இருக்க….”என்று ஒருவழியாக அமரனே கேட்டுவிட,

“என்ன செய்ய போற அமரா….”என்றான் கதிர்,

“என்ன செய்ய சொல்லுற….நான் என்ன செய்யனும்….இது அவங்க குடும்ப விவகாரம் நான் எப்படி தலையிட முடியும்…..அதெல்லாம் அவ பார்த்துப்பா…”என்று கூறிக் கொண்டே எழுந்துவிட,

“அப்ப அவ்வளவு தான் சொல்லுறியாடா….”என்ற கதிரின் குரலில் அத்தனை வலி அதை அவன் முகமும் காட்டிக் கொடுத்தது.அமரன் எதையும் பார்க்கவில்லை எழுந்து சென்றுவிட்டான்.

மறுநாள் காலையிலேயே சதாசிவம் வந்துவிட்டார் தீர்த்தாவை அழைத்து செல்ல காரில் ஏறும் முன் எதிரில் இருந்த மண்டியை பார்க்க அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அமரன். முகத்தில் எந்த உணர்வும் இல்லை சாதாரண பார்வையாளன் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.அதை பார்த்த தீர்த்தாவிற்கு ஏனோ மனதில் சிறு ஆறுதல் தன்னை போல் எழுந்தது.சில நேரங்களில் வார்த்தைகள் தேவை இருக்காது போல பார்வை பரிமாற்றமே போதுமானது.அமரன் தன் காதலான இருப்பானா என்றால் தெரியாது ஆனால் தன் நண்பனாக என்னுடன் என்றும் இருப்பான் அதில் எந்த ஐயமும் இல்லை தீர்த்தாவிற்கு அந்த நம்பிக்கையில் தான் கிளம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!