Skip to content
Post Views: 1,905
அத்தியாயம்..8
வந்தவர்களிடம் நல்ல விதமாக தான் பேசி கொண்டிருந்தான் வெற்றி. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டிருந்தவன், எதேர்ச்சியாக கிஷோரை பார்க்க, அவனோ கண்கள் மின்ன, ஆர்வமாக சமையலறை திசையை பார்த்து கொண்டிருந்தான். ’இவன் யாரை இப்படி பார்க்கிறான்’ என யோசித்தப்படியே வெற்றியும் திரும்பி பார்க்க அங்கே வெண்பா வந்து கொண்டிருந்தாள்.
Advertisement
அவள் வந்து அனைவருக்கும் குளிர்பானத்தை கொடுக்க, இளங்கோவோ,
“நீ வெண்பா தானே!” என கேட்க, அவளும் ஆமாம் என தலையாட்டினாள்.
Advertisement
Advertisement
“என்ன நீ இங்க இருக்க? உன் அப்பா என்ன பண்றார்?” என விசாரிக்க, அவள் பதில் கூறும் முன்,
“அது ஒரு பெரிய கதை மாப்பிள்ளை. அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ ஜூஸ் குடிங்க” என நாச்சியார் இடைமறித்தார்.
Advertisement
வெண்பாவும் எதுவும் பேசாது அனைவருக்கும் கொடுக்க, கிஷோரிடம் வரும் பொழுது, அவன் பார்வை அவளை மொத்தமாக மேய்ந்தது. அவன் பார்வையின் அர்த்தத்தை சட்டென்று புரிந்து கொண்டாள் வெண்பா. அவன் பார்வை அசவுகரியமாக இருக்க, ஆடையை சரிசெய்தப்படியே அனைவருக்கும் கொடுத்தாள்.
அவன் பார்வை விடாமல் துரத்த, இவையனைத்தும் வெற்றியின் கண்களுக்கு தவறாமல் பட்டது.
கிஷோர் அவள் அங்கிருந்து செல்லும் வரை, அவள் போகும் திசையிலேயே பார்வையை செலுத்த, வெற்றியோ, அவன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை தவறவிடுவது போல, சரியாக அவன் காலை நோக்கி போட்டான்.
விழுந்த வேகத்தில், கண்ணாடி குவளை அவன் காலிலே விழுந்து உடைந்து, அந்த கண்ணாடி துகள்கள் அவன் காலை கிழித்து ரத்தத்தை வரவழைத்திருந்தது.
வலியில் அவன் கத்த, அப்பொழுது தான் அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர்.
“அச்சோ, கை தவறி விழுந்துடுச்சு, சாரி…” என வெற்றி கூற, கிஷோரோ வலியில் அலறினான்.
“ரத்தம் ரொம்ப வருது, டாக்டருக்கு போன் பண்ணுங்க. கதிர் சீக்கிரம் வர சொல்லு பா” என திருநாவுக்கரசு கூற, கதிர்வேலும் உடனே மருத்துவருக்கு அழைத்தான்.
“ரூமுக்கு கூட்டிட்டு போய் படுக்க வைங்க” என நாச்சியார் கூற, அவனை அனைவரும் மெதுவாக அறைக்கு கூட்டி சென்றனர். செல்லும் அவனை பார்க்க பார்க்க வெற்றிக்கு சிரிப்பு தான் வந்தது. அவன் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டு திரும்பி தமிழை பார்க்க, அவளோ கிஷோரை கண்டு பரிதாபப்பட்டு நின்று கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவர் வந்து அவனுக்கு சிகிச்சை அளித்து விட்டு சென்றார்.
“அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் வாங்க போலாம்” என கிஷோரை ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு அனைவரும் வெளிவந்தனர்.
“நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க. சாப்பாடு ரெடி ஆனதும் வந்து குரல் கொடுக்கிறேன்” என நாச்சியார் கூற, இளங்கோவும், அமுதவல்லியும் ஒரு அறையிலும், ராகினி ஒரு அறையிலும் தங்கி கொண்டனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ராகினி அறைக்கு வந்த நாச்சியார் அவளிடம்,
“ராகினி, நம்ம ஊரு, நம்ம வீடுலாம் உனக்கு பிடிச்சு இருக்கா கண்ணு? என மெதுவாக பேச்சை ஆரம்பிக்க,
ராகினியும், “ரொம்ப பிடிச்சு இருக்கு அம்மாச்சி. அவ்வளவு அழகா இருக்கு இந்த ஊர்” என்றாள் புன்னகையுடன்.
“அப்போ உனக்கு வெற்றியை பிடிச்சு இருக்கா?” என அவர் நேரடியாக விஷயத்திற்கு வர,
“ஏன் அம்மாச்சி இப்படி கேட்கிறீங்க? எனக்கு எல்லாரையும் தான் பிடிச்சு இருக்கு” என அவள் பதிலளிக்க, தலையிலேயே அடித்து கொண்டார் நாச்சியார்.
“அப்படி கேட்கல டி, வெற்றிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு இந்த அம்மாச்சிக்கு ஆசை. அதான் அவனை பிடிச்சு இருக்கானு கேட்டேன்” என அவர் தெளிவாய் கேட்க, அவளோ அதிர்ந்து பார்த்தாள் அவரை.
“என்ன அம்மாச்சி சொல்றீங்க? கல்யாணமா? இது.. நான்..” என திணறியவள்
“இதுக்கு நான் என்ன சொல்றதுனு தெரியல அம்மாச்சி. இதைப்பத்தி நீங்க அப்பா கிட்ட பேசுங்க. அவர் என்ன சொல்றாரோ, அது தான் என் முடிவு அம்மாச்சி” என கூறியதும் அவருக்கோ சந்தோஷம் தாளவில்லை.
“என் பேத்தினா பேத்தி தான்” என அவளுக்கு நெட்டி முறித்தவர்,
“வெளிநாட்டில வாழ்ந்தாலும், நம்ம ஊர் கலாச்சாரத்தை மறக்கல பாரு நீ. அதான் நம்ம வம்சம்ன்றது” என பூரிப்படைந்து,
“நான் உன் அப்பாரு கிட்டயே பேசிக்கிறேன். அவர் என்ன வேணாம்னா சொல்ல போறார். நிச்சியம் ஒத்துப்பார். எல்லாம் நல்லப்படியா முடியும்.. என் தாயி மீனாட்சி நடத்தி கொடுத்துருவா” என நம்பிக்கையுடன் அங்கிருந்து வெளியேறினார்.
அவர் சென்றதும் அப்பாடா என்றிருந்தது ராகினிக்கு. அவளுக்கு இந்த ஊரும் பிடிக்கவில்லை. இந்த வீட்டையும் பிடிக்கவில்லை.
வெளிநாட்டில், வேறு கலச்சாரம், வேறு பழக்க வழக்கங்களோடு வளர்ந்தவள் அவள். இங்கு வர வேண்டும் என்று சொன்னதும் முடியாது என்று தான் கூறினாள். ஆனால் அவள் தந்தை இளங்கோ தான், அவளை சமாதானம் செய்து அழைத்து வந்தார்.
அவளுக்கு அவள் தந்தை என்றால் அவ்வளவு பிரியம். அவள் எது கேட்டாலும், உடனே நிறைவேற்றி கொடுப்பவர் அவர்.
எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், விரும்பியவர்கள் கூட பழகலாம், அவர் கட்டுப்பாடு விதித்ததே இல்லை. அத்தனை சுதந்திரம் அவளுக்கு உண்டு.
இங்கு வரும் போதே, அவளிடம், நாச்சியார் இப்படி கேட்பார், அதற்கு இபப்டி பதில் சொல்ல வேண்டும் என எல்லாம் சொல்லி தான் கூட்டி கொண்டு வந்தார். அதன்படி தான் எதுவா இருந்தாலும் தந்தையிடம் கேட்டு கொள்ளுங்கள் என்று பவ்வியமாக கூறி விட்டாள் ராகினி.
சிறிது நேரம் ஓய்வெடுத்தவள், தந்தையை தேடி அவரறைக்கு வந்தாள்.
அமுதவல்லி நாச்சியாரின் அறைக்கு சென்றிருக்க இளங்கோ மட்டும் தனியே இருந்தார்.
அவரருகில் சென்று அமர்ந்தவள்,
“ப்பா, நீங்க சொன்ன போலவே அம்மாச்சி என்கிட்ட வந்து வெற்றியை கல்யாண பண்ணிக்க சம்மதமா கேட்டாங்க” என கூற, அவரும்,
“நான் தான் சொன்னேன்ல, அவங்க இங்க கூப்பிட காரணமே அது தான். உன்னை எப்படியாவது வெற்றிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் தான். சரி நீ என்ன சொன்ன?”
“இதில் நான் முடிவு பண்ண எதுவுமில்ல. அப்பா கிட்ட பேசுங்க. அவர் என்ன சொல்றாரோ, அதான் என் முடிவுனு சொல்லிட்டேன் ப்பா” என கூறியதும்,
“வெரி குட். இப்போ தான் என் பொண்ணு மாதிரி பேசி இருக்க. வந்து என்கிட்ட பேசட்டும். அப்புறம் நான் பார்த்துகிறேன்” என அவளை செல்லம் கொஞ்சினார் இளங்கோ.
“ஆனா அப்பா, என்னால் இங்க இருக்க முடியாது. வெற்றியை கல்யாணம் பண்ணிட்டா, இங்க தானே இருக்கணும். எனக்கு இந்த வில்லேஜ், இங்க இருக்கிற பர்மாலிட்டிஸ் இதெல்லாம் செட் ஆகாது ப்பா. அதனால் நீங்க இந்த கல்யாணம் வேணாம் சொல்லிறீங்களா ப்ளீஸ்” என அவள் கெஞ்ச,
“உனக்கு வெற்றியை பிடிச்சு இருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லு” என கேட்டார் இளங்கோ.
“ஆளு பார்க்க நல்ல தான் இருக்கான். நல்ல ஹாண்ட்ஸம்மா, மேன்லியா. அவனை மேரேஜ் பண்ணிட்டா நல்ல தான் இருக்கும். என் பிரெண்ட்ஸ் முன்னாடி சீன் போடலாம். ஆனால் இங்க இருக்க முடியாதுப்பா. ஒரு நாளைக்கே இந்த ட்ரெடிஷனல் டிரெஸ்லாம் போட்டுட்டு ஒரு மாதிரி இருக்கு. இதில் லைப் லாங்ன்னா கஷ்டம்” என அவள் மனதில் பட்டதை கூற,
“கல்யாணம் பண்ணிட்டு உன்னை யார் இங்க இருக்க சொன்னா? நாம நம்ம ஊருக்கே கூட்டிட்டு போயிடலாம்” என அவர் ஐடியா வழங்க, அவளோ திகைத்து போய் அவரை பார்த்தாள்.
“என்னப்பா சொல்றீங்க? நம்ம ஊருக்கா? வருவானா ப்பா?” என ராகினி சந்தேகமாய் கேட்க,
“வரவைக்கிறேன் அதானே உன் அப்பாவோட டேலேண்ட். கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா, அங்க நாம சொல்றது தானே சட்டம். கல்யாணம் பண்ண மாதிரியும் ஆச்சு, உன் இஷ்டப்படியும் இருக்கலாம். எப்படி?” என கூறியதும் ராகினிக்கோ சந்தோஷம் தாளவில்லை.
“ப்பா, சூப்பர் ப்பா. செம பிரைன் உங்களுக்கு” என அவள் அவரை கட்டி கொண்டு சந்தோஷத்தில் மிதந்தாள்.
“எல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் ரெஸ்ட் எடு” என அவளை அனுப்பி வைத்தவர் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் அணிவகுத்து நின்றன.
இங்கு நாச்சியாரின் அறையில் அமர்ந்திருந்தார் அமுதவல்லி. வெண்பா ஏன் இங்கே. இருக்கிறாள் என்ற கதையை அடி முதல் நுனி வரை அனைத்தையும் அவரிடம் கூறி கொண்டிருந்தார் நாச்சியார்.
“இந்த கனகாக்கு ரொம்ப தான் திமிர் ம்மா. நாம அப்பவே சொன்னோம் தானே! இந்த மாப்பிள்ளை வேணாம் வேணாம்னு, கேட்டாளா? இப்போ பாருங்க அனுப்பவிக்கிறா” என அமுதவல்லி தன் பங்கிற்கு கனகவல்லியை குறை கூற,
“என்ன பண்றது அமுதா? எல்லாம் விதி. நானும் தான் சொன்னேன், இவ்வளவு கஷ்டத்துல அந்தாள் கூட போய் வாழனுமானு?
“ஆமாம், எனக்கு அவர் தான் முக்கியம்னு சொல்லிட்டு போய்ட்டு தினம் தினம் கஷ்டப்படுறா. சரி விடு நம்மள மதிக்காதவ பத்தி நமக்கென்ன பேச்சு” என்றவர் அப்படியே திருமண பேச்சை ஆரம்பித்தார்.
“நீ என்ன சொல்ற அமுதா? நம்ம வெற்றிக்கு ராகினிய கல்யாணம் பண்ணி வச்சுடுவோமா?!! அப்போ தான் சொந்தம் விட்டு போகாமல் இருக்கும். வெளியே இருந்து வரவ, குடும்பத்தை பிரிச்சுட்டா என்ன பண்றது? நம்ம ராகினினுவை, சொந்தமும் விட்டு போகாது, குடும்ப கௌரமும் அப்படியே இருக்கும். நீ என்ன சொல்ற?” என ஆர்வம் மின்ன நாச்சியார் கேட்க,
“எனக்கு சம்மதம் தான். இருந்தாலும், அவரையும் கேட்கணும்ல. அவரை கேட்காம, நான் என்ன முடிவு சொல்றது ம்மா, ராகினி எங்களுக்கு ஒரே பொண்ணு, அவளை பெரிய இடத்தில் கட்டி கொடுக்கணும்னு தான் அவருக்கு ஆசை. அது நம்ம வீடா இருந்தா, அவர் சந்தோஷம் தான் படுவார் . இருந்தாலும் அவர் மனசில் என்ன இருக்கோ? கேட்டு பார்க்கிறேன் ம்மா. என்ன சொல்றார்னு சொல்றேன்” என அவர் நம்பிக்கையூட்ட நாச்சியாருக்கு எல்லாமே கைகூடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
அனைவரும் அவர்களுக்கென தயாரித்த விருந்தை உண்டு, மீண்டும் ஓய்வெடுக்க சென்றனர்.
அன்றைய பொழுது அப்படியே கழிய, இரவு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, வெண்பா இல்லத்திற்கு கிளம்ப, அவளுக்காக வாசலிலே காத்திருந்தார் நாச்சியார்.
அவள் அருகே வந்ததும்,
“இதோ பாரு, உன் பெரியப்பாவும், பெரியம்மாவும் ரொம்ப வசதி படைச்சவங்க, வெளிநாட்டில் சொந்தமா வீடு, காரு, பங்களானு எந்த குறையும் இல்லாமல் இருந்தவங்க. அவங்களுக்கு நம்ம வீட்டில் எந்த குறையும் இருக்க கூடாது. எல்லாமே சரியா நடக்கணும் புரியுதா” என்றதும்,
“நான் நீங்க சொன்னது எல்லாத்தையும் தான் செஞ்சு கொடுத்தேனே அம்மாச்சி” என்றவளுக்கு தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என தோன்றியது.
“நான் சமையலை சொல்லல, சமைக்கிறது ஒருபக்கம் இருந்தாலும் அவங்களுக்கு நேரா நேரத்திக்கு வேண்டியதை பார்த்து கவனிக்கிறதும் நம்ம வேலை தானே!!
வீடு வேலைக்காரங்களை நம்ப முடியாது. அவங்க ஒரு நேரம் செய்வாங்க இன்னொரு நேரம் எனக்கென்னன்னு இருப்பாங்க. அதனால் நம்ம குடும்பத்துல ஒருத்தர் கூடவே இருந்து பார்த்துகிறது தானே நல்லது” என நாச்சியார் கேட்க, அவளும் ஆமாம் என தலையாட்டினாள்.
“அதனால் தான் அவங்களுக்கு என்ன வேணுமோ நீயே கூட இருந்து பார்த்துக்கோ. வேளா வேளைக்கு காபி, ஜூஸ்னு அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ போய் கொடுத்துடு” என நாச்சியார் கட்டளையிட, வெண்பாவோ யோசனையாக நின்றிருந்தாள்.
“என்ன யோசிச்சுட்டு இருக்க?”
“அது வந்து அம்மாச்சி, நீங்க சமையல் கட்டில் என்ன வேலை சொன்னாலும் நான் செய்யுறேன். ஆனால், எல்லாரோட ரூமுக்குள்ளலாம் என்னால் போக முடியாது அம்மாச்சி. நீங்களே பார்த்து இருக்கீங்க தானே, நான் என்னைக்காகவது யார் ரூமுக்காகவது போய் இருக்கேனா?!! எனக்கு அதில் இஷ்டம் இல்ல அம்மாச்சி” என அவள் தன்னிலையை விளக்க நாச்சியாருக்கு கோபம் தான் வந்தது.
“அப்போ நான் சொல்றதை செய்ய முடியாது உன்னால. சரி விடு நீ செய்ய வேண்டாம். பெரிய வீட்டில் மாப்பிள்ளையா போனதுக்கு நல்ல மரியாதை கொடுத்துட்டாங்க. சும்மா பேருக்கு தான் பெரிய வீடு, மத்தப்படி ஒன்னும் இல்லனு ஊரில் இருந்து வந்துருக்க மாப்பிள்ளை சொல்லட்டும்”
உனக்கென்ன போச்சு, இந்த குடும்பத்துக்கு தானே கெட்ட பெயர் வர போது, நீ சந்தோஷமா கிளம்பு”
என கோபமாக கூறிவிட்டு திண்ணனையில் சென்று அமர்ந்து கொண்டார்.
“இந்த வீட்டு மேலே யாருக்கும் அக்கறை இல்ல. எல்லாரும் அவங்கவங்க நலத்தை தான் பார்கிறாங்க. அவ்வளவு சுயநலம். எவ்வளவு செஞ்சு இருப்போம். கொஞ்ச கூட நன்றியே இல்லாமல் போச்சு. என்னத்த சொல்ல, யாரையும் நொந்து பயனில்லை”
என தனக்கு தானே பேசி கொண்டு இருக்க வெண்பாவிற்கு தாளவில்லை. அதிகமாக கோபப்பட்டு, தனக்கு தானே புலம்பி கொண்டு இருப்பவரை கண்டு அவளுக்கு பயம் பிடித்தது. அவர் உடம்புக்கு ஏதாவது வந்து விடுமோ என பயந்தவள்,
அவர் அருகே சென்று கீழே அமர்ந்து
“அம்மாச்சி, கொஞ்சம் பொறுமையா இருங்க. உடம்புக்கு ஏதாச்சும் ஆக போது. இப்போ என்ன அவங்களை நான் கவனிக்கனும் அவ்வளவு தானே, சரி நான் பார்த்துகிறேன். அதுக்காக, நீங்க இப்படி புலம்பி உடம்பை கெடுத்துக்காதீங்க” என கூறியதும் தான் நாச்சியாருக்கு நிம்மதியாக இருந்தது
“சரி, நாளையிலிருந்து நீ பார்த்துக்கோ” என்றவர் உள்ளே சென்று விட வெண்பாவோ யோசனையுடன் இல்லம் வந்து சேர்ந்தாள். அவளுக்கு என்ன தான் செய்வது என்று புரியவில்லை. நாச்சியாரின் மனநிலை என்னவென்றே அவளால் கணிக்க முடியவில்லை.
வாழ்க்கை அது பாட்டுக்கு போகட்டும், என நாச்சியார் சொன்னது போல, வந்தவர்களுக்கு என்ன தேவை, என்ன வேண்டும் என பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.
இரண்டு நாள் கடந்திருந்த நிலையில், வெண்பா கனகவல்லியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நாள் வந்தது.
அதனால் அதிகாலையிலேயே, பெரிய வீட்டிற்கு வந்தவள், வேலைகளை மளமளவென முடித்து விட்டு விசாலாட்சியிடம்,
“அத்தே, நான் கிளம்புறேன். அம்மாவை ஹோஸ்பிடல் கூட்டிட்டு போகணும், எவ்வளவு நேரம் ஆகும் தெரியல. அதனால் நான் நாளைக்கு வரேன்” என கூறியவள், இல்லத்திற்கு கிளம்ப, அங்கே கூடத்தில் இளங்கோ, அமுதவல்லி, ராகினி, கிஷோர், நாச்சியார் என அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
“ஏன் ராகினி வந்து மூணு நாள் ஆச்சு, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு இருக்கியே, அப்படியே நம்ம தோட்டம் துரவுனு சுத்தி பார்த்துட்டு வரலாம்ல” என நாச்சியார் கூற,
“போலாம் தான் அம்மாச்சி, எனக்கும் போர் அடிக்குது தான், ஆனா, யார் கூட்டிட்டு போறது? எனக்கு இந்த ஊரில் வழி தெரியாதே!!” என்றவளுக்கு,
“ஒன்னுக்கு ரெண்டு மாமா பசங்க இருக்காங்க. கூட்டிட்டு போக ஆள் இல்லைன்னு சொல்ற!! நம்ம வெற்றியை கூட்டிட்டு போ. அப்படியே காத்தாட ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க”
என நாச்சியார் கூறி கொண்டிருக்கும் போதே, அவ்விடம் வந்து சேர்ந்தனர் திருநாவுகரசும், வெற்றியும்.
திருநாவுக்கரசு சில தொழில் விஷயங்களை வெற்றியிடம் பேசிவிட்டு உள்ளே சென்று விட, அவனும் கோப்புகளை சரிப்பார்த்தபடி அங்கேயே அமர்ந்து கொண்டான்.
நாச்சியாரோ, மெல்ல வெற்றியிடம்,
“ஏன் ராசா, எப்போ பாரு தொழிலையே பார்த்துட்டு இருக்கியே? கொஞ்சம் நேரம் அதை விட்டுட்டு வெளியே வரலாம்ல.
வெளிநாட்டில் இருந்து ராகினி வந்திருக்கா, அவ கூட பேசுவோம், ஊரை சுத்தி பார்ப்போம்னு இருக்குதா உனக்கு. அவளும் சுத்தி பார்க்கணும் சொல்றா, கொஞ்சம் கூட்டிட்டு போய்ட்டு வா ராசா” என அவர் கேட்க, வெற்றியோ சலிப்பாக ராகினியை பார்த்தான்.
“அப்பத்தா வேலை இருக்கு எனக்கு. கதிர்வேலை கூட்டிட்டு போக சொல்லுங்க”
என்றவன், அன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதை குறித்து கொண்டிருந்தான்.
‘இவனை கூட்டிட்டு போக சொன்னா, இவன் தம்பியை கூட்டிட்டு போக சொல்றான். இவனை வச்சுக்கிட்டு என்ன தான் பண்றதோ” என மனதோடு எரிச்சலடைந்தவர்,
“அதுக்கு சொல்லல பா, கதிர்வேல் அவ்வளவா விவரம் இல்லாதவன், நீ கூட்டிட்டு போறது தான் சரியா இருக்கும். அப்பத்தா சொன்னா செய் ராசா” என அவர் மீண்டும் அவனை வற்புறுத்த, அசையவே இல்லை வெற்றி.
“அப்பத்தா, அதான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல, சும்மா கூட்டிட்டு போ, கூட்டிட்டு போனு ஏன் தொல்லை தரீங்க”
என சட்டென்று கோபப்பட, அனைவருமே திகைத்து பார்த்தனர் அவனை.
“அத்தே, வேலையா இருந்தா விடுங்க. வெற்றி நீ உன் ஒர்க் பாரு ப்பா, அவளை அப்புறம் கூட்டிட்டு போய்கலாம்”
என இளங்கோ சமாதானம் பேச, அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்து வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
“என்னம்மா, வெற்றி இப்படி சொல்றான்? பாரு என் பொண்ணு முகமே வாடி போச்சு. இதில் ரெண்டு பேருக்கும் கல்யாணம் வேற பண்ணனும் சொல்லிட்டு இருக்கீங்க” என அமுதவல்லி சலித்து கொள்ள,
“ஏன் டி இப்படி பேசுற? இன்னைக்கு கூட்டிட்டு போகலைனா, நாளைக்கு கூட்டிட்டு போக போறான். அதுக்கு ஏன் தேவையில்லாமல் முடிச்சு போடுற நீ. அவனுக்கு வேலை தான் முக்கியம். என் பேரன் போல் பொறுப்பான மாப்பிள்ளை உனக்கு எங்க தேடினாலும் கிடைக்காது” என அமுதவல்லியை சமாதானம் செய்தார் நாச்சியார்.
வெண்பா, வெளியே கிளம்ப வந்த நேரம், நாச்சியாரோ,
“வெண்பா, எங்க போற?” என கேட்க, அவளோ அவரருகில் வந்து,
“அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் அம்மாச்சி. அதான் கிளம்புறேன்” என அவள் பதில் கூற, நாச்சியாரும், “சரி கிளம்பு” என்று அவளை அனுப்பினார்.
வெற்றி முன்னிலையில் அவர் வெண்பாவை கடிந்து பேசியதில்லை. அவ்வாறு பேசினால் அவன் கோபப்படுவான் என்பது அவருக்கு தெரியுமே!!
கிஷோர் அவள் பக்கம் திரும்பே இல்லை. இன்னமும் கால்வலி இருந்து கொண்டே தானே இருக்கிறது. வெண்பாவின் குரல் கேட்டதும், வெற்றி முதலில் ஓர கண்ணில் பார்த்தது கிஷோரை தான்.
அதுவரை மேலோட்டமாக பார்த்து கொண்டிருந்த அலைபேசியை அவள் வந்ததும் அதனுள்ளே தலையை விட்டு கொண்டு பார்த்தான் கிஷோர். அதனை கண்டதும் வந்த சிரிப்பினை அடக்கமுடியாமல் அடக்கி கொண்டு வேலை பார்த்து கொண்டிருந்தான் வெற்றி.
வெண்பா கூறியதும் தான் வெற்றிக்கே நியாபகம் வந்தது. மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, தானும் உடன் வருவதாக கூறி இருந்தது.
செய்யும் வேலையை அப்படியே எடுத்து வைத்தவன், சட்டென்று எழுந்து,
“தமிழ் வா போலாம்” என கூற, அனைவரும் அவனை கேள்வியாய் பார்த்தனர். வெண்பாவோ புரியாமல் அவனை பார்க்க,
“என்ன பார்க்கிற? ஹாஸ்பிடல் போகணும் சொன்னல வா போலாம்” என்றவனை திகைத்து பார்த்தாள் வெண்பா.அவள் திரும்பி நாச்சியாரை பார்க்க, அவருக்கும் சற்று அதிர்ச்சி தான்.ராகினியை கூட்டி செல் என்று கூறினால் இத்தனை நேரம் வேலை இருக்கிறது என்று கூறியவன் தற்பொழுது அதனை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடன் செல்கிறானா என்று சற்று கடுப்பு தான் அவருக்கும். அது அப்பட்டமாக தெரிந்தது அவர் கண்ணில். அதனை கண்டு கொண்டவள், வெற்றியிடம்,
“இல்…ல, நா…னே போய்க்கிறேன்” என கூற, அவனோ,
“நான் உன்ன வர சொன்னேன். வா போலாம்” என அழுத்தமாக கூற, அவளோ தவிப்புடன் அவனை பார்த்தாள்.
“வானு சொல்லிட்டே இருக்கேன். நின்னுட்டே இருக்க, நேரமாகுதுல, என்றவன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, அவள் கைபிடித்து இழுத்து கொண்டு போக, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், நாச்சியாருக்கும் வெண்பாவிற்கும் அவன் செய்கை உச்சக்கட்ட அதிர்ச்சியை தந்தது.
அவனும் நானும் அதிகம்
பேசி கொள்வதில்லை
அதிகம் பார்த்து கொள்வதில்லை
இருந்தாலும்,
தேடுதலிலும், தொடுதலிலும்
முற்றுப்புள்ளியாய்
அவனே வந்து நிற்கிறான்!!
கனவுகள் தொடரும்..
error: Content is protected !!