Skip to content
Post Views: 437
2
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
Advertisement
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
நிச்சயதார்த்த தேதி நெருங்கிக் கொண்டிருக்க பெண் வீட்டில் தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது., பார்லரில் இருந்து வந்திருந்த பெண் மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பாட்டி தான் “யாத்தா, பேத்தி பொண்ணே கொஞ்சம் உங்க அம்மைய கூப்பிடு”, என்று சொல்லவும்.,
Advertisement
அருகில் இருந்த பெரிய மருமகளும், மூன்றாவது மருமகளும், திரும்பி பார்க்க., சரிகாவின் அம்மாவானவர்., “என்னத்தே எப்பவும் போல என்னை கூப்பிட வேண்டியதுதானே., அது என்ன உங்க அம்மாவை கூப்பிடு ன்னு சரிகா ட்ட சொல்லுதேயே”, என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
Advertisement
இவரும், “காரணமாக தான் கூப்பிடுதேன், வீட்ல ஆம்பளைய யாரும் இல்ல தானே”, என்று பெரிய மருமகளை பார்த்து கேட்டார்.
அவரோ “இல்லத்தே எல்லாரும் வெளியே போயிருக்காங்க”, வீட்டுல நம்ம மட்டுதேன்”, என்று சொன்னார்.
“எல்லாரும் இங்கின உட்காருங்க”, என்று உட்கார வைத்தார்.
Advertisement
மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தவளோ இங்கே திரும்பிப் பார்த்தாள்.
“இங்கன என்ன பார்வ, உம்ம வேலைய பாரு”,என்ற பாட்டி,
“நீ இங்கன பாரு, உன்னை சொல்லுத்தேன் கேட்டுக்கோத்தா, நிச்சயம் நடந்து முடிஞ்ச உடனே, கல்யாண தேதி குறிக்கும் போது, மாப்பிள்ளை வீட்ல என்ன தேதி சொல்லுறாகளோ அது தோதா வருதா ன்னு பாரு.,
ஒருவேளை இவளுக்கு தோது பட்டு வராத நாளா இருந்தா மட்டும் நா பேசுதேன், மத்தபடி நீ அந்த தேதியில் வைப்போம், இந்த தேதியில் வைப்போம் ன்னுட்டு எதுவும் சொல்லிட்டு திரியக்கூடாது.,
ஆமா நீ ஏன் அன்னைக்கு அப்படி சொன்னே, நிச்சயதார்த்த தேதி அம்புட்டு வெரசா ஏன் சொன்னே, உன் மகளுக்கு தான் அவங்க குறித்த மூணு தேதியும் ஒத்துவர தேதி தான”, என்று சொன்னார்.
“அது அத்த”, என்று இழுக்கவும்.,
“நீ எனத்தையோ காரியம் நினைச்சு தான் சொல்லி இருக்கே ன்னு தெரியும்., நீ அன்னைக்கு அவ்வளவு வெரசா சொல்லும்போதே எனக்கு புரிஞ்சுச்சு., சரி நானும் கேட்க கூடாதேன்னுட்டு நினைச்சேன்., ஆனா அன்னைக்கு உங்க மாமா என்ன சொன்னாரு., நீ அவசரப்பட்டு தேதி சொன்ன, உடனே அவக வீட்ல அத்தினி பேர் முகம் மாறுச்சுனாரு., ஆனாலும் சரின்னு சொல்லிட்டு போனாங்க அப்படின்னு சொன்னாரு., இப்ப நீ எனக்கு சொல்லுதே அம்புட்டு தான்”, என்று சொல்லவும்.,
சரிகவும் அவள் அம்மாவை உத்துப் பார்த்தாள்.
அவரோ மெஹந்தி வைக்கும் பெண்ணை பார்க்க.,
“சொல்லுத்தா, சொல்லு உன்ன பத்தி எல்லாருக்கும் தெரியும்., அவ ஒன்னும் தெரியாதவன் வீட்டு பிள்ளையா உனக்கு., அறிஞ்சவன்வூட்டு பிள்ளையாக போய் தானே, உம்ம மவளுக்கு மருதாணி வைக்க வந்து இருக்கா., ரோசிக்காம சொல்லு”, என்று சொன்னார்.
கம்மி போன குரலில், “இல்ல அன்னைக்கு பேசிட்டு இருக்கும் போது, இந்த தேதி வசப்படுமா அப்படின்னு கேட்டாய்ங்களா., கேட்கும் போது மாப்பிள்ளை பையன் தான், தங்கச்சிக்கு பரீட்சை இருக்குன்னு சொன்னாரு., தங்கச்சி கிட்ட கேட்டுட்டு சொல்லுவோம் ன்னு சொன்னாரு”, என்று சொல்லவுமே,
பாட்டி, “ஓ அப்ப நீ அவன் தங்கச்சிக்கு எந்த தேதி தோதுப்படாதோ அந்த தேதியை சொல்லி இருக்க அப்படித்தானே”, என்று சொல்லவுமே,
தலையை குனிந்தார், சரிகாவின் அம்மா.
இன்னொரு தடவை இந்த வேலையை செஞ்சிபோடாத, இந்த வீட்டில் பொம்பள புள்ள இல்ல, ஆனா மூணு மருமக்கமாறு வந்திருக்கிய மூணு பேரும் சரியாக எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போறீங்க, நீ அப்படி இப்படி ன்னு இருந்தாலும் மத்த ரெண்டு பேரும் அமைதியா போறாங்கே, இந்த குடும்பத்தில் என் பயலுக மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துமையா இருக்கான், அது கெடுத்துற கூடாது பாத்துக்கோ.,
அது மட்டும் இல்லாம அடுத்த வீட்டுல வாழப்போற பிள்ளைக்கு நல்ல புத்தியை சொல்லி அனுப்பனும்., ஒரே பையன், அந்தப் பிள்ளையும் ஒத்த பொம்பள புள்ளயா இருக்கு, நாளைக்கு எங்க போகும்., அவன் தங்கச்சிக்கு ஒத்து வர தேதியை அவன் பார்க்கக்கூடாது ன்னு நீ நினைக்கே, அப்போ உன் மனசுல என்ன நினப்பு இருக்கு”, என்றார்.
“இப்பவே தங்கச்சி தங்கச்சி ன்னு சொன்னா”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,
“வாய மூடு இவ நடந்துக்கிற வகையில தான் இருக்கு., அவன் தங்கச்சி இவகிட்ட பாசமா இருக்குறதும், அவன் தங்கச்சி விட்டுக் கொடுத்து பேசுறதும், விட்டுக் கொடுக்காமல் பேசுறதும், உன் மகளுக்கு நீ நல்ல புத்தி சொல்லி அனுப்புவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை”, என்றவர்.,
“உங்க ஆத்தா சொல்லுதான்னுட்டு அங்க போய் ஆடிடாத, வாழ்க்கை சீரழிஞ்சு போவும் ஞாபவம் வச்சுக்கோ., ஒரே தங்கச்சி விட்டுக் கொடுத்து போக கத்துக்கோ., அந்த புள்ள கல்யாணம் ஆகாத பிள்ளை., படிச்சிட்டு இருக்குற புள்ள., உன்ன விட அதிகமா படிச்சிருக்கா., நீ வெறும் டிகிரி தான் முடிச்சிருக்கே,
நீ டிகிரி முடித்ததற்கே உனக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிருக்கே, அவங்க வீட்ல ஒத்த பொம்பள புள்ள தானே , இங்கைய விட நல்ல வசதியான குடும்பம்., நல்ல போட்டு நல்ல செஞ்சி நல்ல மாப்பிள்ளையா பார்த்து தான் கட்டி குடுப்பாங்க இல்ல.,
“டாக்டரு படிக்குற பெரிய படிப்பு படிச்சிட்டு இருக்காளாம், அப்படித்தான் அவங்க அப்பனாத்தா சொன்னாக, உங்க அம்ம பேச்ச கேட்டுகிட்டு ஆடுன, வாழ்க்கை சீரழிஞ்சு போகும் பாத்துக்கோ., உன் வாழ்க்கைய காப்பாத்திக்கிறது உன் கையில இருக்கு”, என்றார்.
“இல்ல பாட்டி, நான் அப்படி எல்லாம் கேட்க மாட்டேன்”, என்று சரிகா சொல்லவும்.
“இல்ல அய்த்த இப்பவே மாப்பிள்ளை தங்கச்சி தங்கச்சி ன்னு”,
“நீ வாய மூடு, நீ இனிமேட்டுக்கு பேசின, உன் புருஷன்ட்டையும், உங்க மாமாட்டையும் சொல்லிடுவேன், அப்புறம் என்ன நடக்கும்னு முடிவு பண்ணிக்கோ., உன் மவ நல்ல வாழனும்னு நினைச்சின்னா வாயை மூடிக்கிட்டு இரு”, என்று சொன்னவர்,
“உன் வீட்டுக்கும் ஒரு மருமக வருவா சரியா., அவ வீட்டில இதே மாதிரி மருமகளோட அம்மா சொல்லிக் கொடுத்து அனுப்புனா, அப்போ உன் மவ இந்த வீட்டுக்கு நாள பின்ன வந்து போய் இருக்க முடியாது., அதை ஞாபகம் வச்சுக்கோ, அது மட்டும் இல்லாம இன்னும் இந்த வீட்டில் மூன்று பயல்வ இருக்கான்., மூத்தவனுக்கு கல்யாணம் முடிஞ்சு மூத்தவளா ஒரு மருமக வருவா., அவ என்ன சொல்லுவா இந்த வீட்டில் பொம்பள புள்ள வரக்கூடாதுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ”,என்றார்.
“அது எப்படி சொல்ல முடியும்”, என்றார் சரிகா அம்மா.
“அதே மாதிரி தான், அது எப்படி நீ சொல்ல முடியும் அவுக வீட்டு பிள்ளை வரணுமா, வரக்கூடாதா ன்னு, அவக வீட்டுல அந்த பிள்ளைக்கு என்ன செய்யணும், எப்படி அந்த பிள்ளையை நடத்திக்கணும்னு அவுகளுக்கு தெரியும் சரியா., அவிய வீட்டு விஷயத்தில் நீ தலையிடக்கூடாது., உன் மவள நல்லபடியா கட்டி கொடுத்தோமா, அவ நல்லா இருக்காளா, அவ சந்தோசமா இருக்காளானுட்டு பாரு., அவளை அங்க யாரும் கொடுமை படுத்தினா சொல்லு., நானே என்னன்னு போய் கேப்பேன், அதை விட்டுட்டு நீ பேசக்கூடாது சரியா, கல்யாணம் ஆகாத பிள்ளையை வச்சிருக்க வீட்ல நீ அவசரப்பட்டு வார்த்தையை விடக்கூடாது., பரீட்சை இருக்குன்னு தானே சொன்னாங்க அதைக் கேட்டு நீ இந்த பேச்சு பேசி இருக்கேயே, எனக்கு இது முதலிலேயே தெரியாதே, தெரிந்திருந்தா நான் தேதியை மாத்துங்கன்னு சொல்லி இருப்பேனே”, என்று பாட்டி புலம்பவும்.,
சரிகா தான், “சரி பாட்டி விடுங்க, அம்மா ஏதோ தெரியாம பேசி இருப்பாங்க., இனிமேல் அந்த மாதிரி இல்லாத அளவுக்கு நான் பாத்துக்கிடுதேன் பாட்டி”, என்று சொன்னாள்.
அவர்கள் வீட்டு மற்ற மருமகள்களும் அதையே சொல்ல, பாட்டியோ சரிகாவின் அம்மாவை தன் வாய்க்கு வந்தபடி நல்ல வார்த்தைகளாக உபயோகித்து பேசினார்,
சரிகாவின் அம்மாவிற்கு அத்தனை பேர் முன்னாடியும் தன்னை பேசியது கொஞ்சம் தலைகுனிவாக இருப்பதாக நினைத்தார்.
அதேநேரம் அங்கு மணமகன் வீட்டில் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க கல்லூரி முடிந்து தன்னை ரெபிரேஸ் செய்து கொண்டு வந்தவள்., நிச்சயதார்த்தத்தை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க., பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
பின்பு அவர்கள் அனைவரும் நிச்சயதார்த்தன்று அதிகாலையில் இங்கிருந்து மதுரைக்கு கிளம்புவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்,
இவள் பரீட்சை முடித்து இங்கிருந்து 3 மணி விமானத்தில் கிளம்புவதாகவும், 5 மணிக்குள் மதுரை வந்து அங்கிருந்து நேராக கோயிலுக்கு வந்து சேர்வதாகவும் பேசிக்கொண்டிருந்தனர்.
இவள் தான் “நான் வந்து கொள்வேன்., நீங்க யாரும் இதுக்காக ஏர்போர்ட் க்கு அலைய வேண்டாம்”, என்று சொன்னாள்.
பாட்டி தான் “நகையெல்லாம் போட்டுட்டு பிளைட்ல வருவியா”, என்று கேட்டார்.
“நான் என்ன கல்யாண வீட்டுக்கு வர்ற மாதிரி எல்லாத்தையும் அள்ளி போடவா போறேன்., ஒரே ஒரு மாலை போட்டு நீட்டா சாரி கட்டி., இங்க இருந்தே கிளம்பி வாரேன்”, என்று சொன்னவள்., “அங்க வந்து தான் மல்லிகை பூ வாங்கணும்”, என்று சொல்லவும்.,
“மெட்ராஸ்ல கிடைக்காத பூவா உனக்கு மதுரையில கிடைக்குது”, என்றார் பாட்டி .
“மல்லிகை பூனா அது மதுரை தான் பாட்டி”, என்று சொன்னாள்.
அவள் அம்மாவோ, “மல்லிகைப்பூக்கு பிராண்டட் அம்பாசிடர் இவதான் ன்னு சொன்னமாதிரி இல்ல, மதுரைக்கு மல்லிகை பூ ன்னு பாட்டு பாடுறா”, என்றார்.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க., அங்க இருக்க பூ வாசமே தனி., அவங்க பூ கட்டுற அழகே தனி”, என்று சொல்லவும்.,
“சரி சரி நீ வா., நாங்க வாங்கி வைக்கிறோம்”, என்று சொன்னார்கள்.
“நீங்க வாங்கி வைக்க வேண்டாம், நான் வரும் போது வாங்கி வச்சிட்டு தான் வருவேன்”, என்று சொன்னாள்.
பாட்டி தான், “எப்பா இவ இருக்காளே”, என்று சொல்லிவிட்டு,
“அது எப்படி ன்னு, எனக்கு இப்ப வரைக்கும் ஒரு சந்தேகம்”, என்று பாட்டி ஆரம்பிக்க.,
“ப்ளீஸ் பாட்டி ஆரம்பிச்சிடாதீங்க, என்ன சொல்லுவீங்க, சேலை கட்டுற, பூ வைக்கிற, கொஞ்சம் கூட பாக்குறதுக்கு மாடன் லுக்கே இல்ல., இதை தானே சொல்ல போறீங்க., இருந்துட்டு போறேன் விடுங்க., எனக்கு இது பிடிச்சிருக்கு., நான் இப்படி இருக்கிறேனா இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்களேன்., இப்படித்தான் எல்லாரும் இருப்பாங்க”, என்று சொல்லவும்.
“அப்படிலாம் இல்ல, எல்லாரும் போட்டோவுக்கு தான் அப்படி இருக்காங்க., நீயும் அப்படி இருன்னு சொன்னா கேட்டியா”, என்று சொன்னார்.
“பாட்டி நீங்க ஓவர் மாடர்னா போறீங்க, சரி இல்ல பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு,
“சரி கரெக்டா பிளைட்ல கிளம்பி நான் வந்துருவேன் நீங்க உங்க வேலைய பாருங்க”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு செல்ல எழுந்து நின்றாள்.
அண்ணனோ, “நீ தனியா வருவியா, நான் வேணா ஏர்போர்ட் கூப்பிட வரவா”, என்று கேட்டான்.
“நீ கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா உன் வேலையை மட்டும் பாரு., உனக்கு வரப்போற அண்ணியை சைட் அடிக்கிற வேலையை மட்டும் பாரு., என்னை பத்தி நானே பாத்துக்கிடுவேன்., நான் தனியா தான் வரணும்”, என்று சொன்னாள்.
“ஏன்”, என்று கேட்டான்.
“தனியாக வரும்போது யாரையாவது பார்த்தேனா”, என்று தொடங்கவும்.,
“ஏம்மா போதும், உன் டயலாக் ஆரம்பிச்சுராத, விடு நாங்க பார்த்துக்கிறோம்”, என்று சொல்லி அனைவரும் ஒன்று போல சொல்லவும்.
சிரித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவளுக்கு “என்ன எதிர்பார்க்கிறோம் நாம” என்று அவளை அவளே கேட்டுக்கொண்டாள்.
ஒரு பெருமூச்சோடு “நான் எப்படி எதிர்பார்க்கிறேன்னு எனக்கே தெரியலையே” என்று கண்ணாடி முன்பு நின்று தன் பிம்பத்தை பார்த்து கேட்டவள்,”ம்ம் ம்ம் புரியவே இல்லை, என்ன எதிர்பார்க்கிறோம், எப்படி எதிர்பார்க்கிறோம்., தனக்கு வரப்போறவன் எப்படி இருக்கனும் என்ற எந்த எண்ணமும் துளியும் வரமாட்டேன் ன்றதே., ஒருவேளை ஹார்மோன் ஏதும் டிஃபெக்ட்டா இருக்குமோ”, என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்,
“எதுக்கும் கூகுள்ல செக் பண்ணிடுவோமா”, என்று யோசிக்க பின்பு, ‘நோ நோ நோ நோ, டாக்டர் மாதிரி யோசி., உங்க பாட்டி மாதிரி யோசிக்காத’, என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு படுத்து கண்ணை மூடியவள்.,
“கனவிலாவது வாயேண்டா., உன்னை ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன்”, என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.
“யார் என்றே தெரியாது, எங்கேயோ இருக்கிறாய், எப்படி இருப்பாயோ, ஒருமுறை கண் முன் வா”, என்று சொல்லி தனக்கு தானே சிரித்துக்கொண்டவள்.,
‘காதல் வருமா அதுவும் எனக்கா’, என்று நினைத்து சிரித்துக் கொண்டே நிம்மதியான தூக்கத்தை தொடர்ந்தாள்.
error: Content is protected !!