Skip to content
Post Views: 3,446
மார்கழி – 13
காலை விடிந்தது கூடத் தெரியாமல் உறங்குபவனை கடுப்புடன் பார்த்தபடி அறை வாயிலில் நின்றாள் இயலணி. வெறுந்தரையில் கால்களைச் சுருக்கி தன்னை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தவனை தாண்டித் தான் அவள் உடைகள் இருக்கும் அலமாரி இருந்தது. அவன் எழுந்தால் உடை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம் என்று பார்த்தால் அவன் அசைவேனா என்று கிடந்தான். உள்ளே சென்று அவனை எழுப்ப நொடி நேரமாகாது, எழுந்தபின் அவன் கொடுக்கப்போகும் அந்த அடிபட்ட பார்வையும் இறைஞ்சலான யாசிப்பும் அவளை எரிச்சல் படுத்துவதாய் இருக்கையில் அவனை நெருங்கவே விருப்பப்படவில்லை அவள். சில நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள் சமையல் அறைக்குச் சென்றாள்.
“அம்மா காபி.”
“இது உனக்கு, இது அந்த தம்பிக்கு.” என்று ஒன்றை அவளுக்கு கொடுத்துவிட்டு இன்னொன்றை நீட்ட, எரித்துவிடும் பார்வை மகளிடம்.
Advertisement
“என்ன இயலு?” மகளின் மனம் புரியாதவர் முகம் சுருக்க, ஆயாசமாய் வந்தது இயலணிக்கு. தந்தை தன்னை புரிந்துகொண்ட அளவுக்கு தாய் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆற்றாமையை முகத்தில் காண்பித்தாள்.
“எதுவுமே நடக்காத மாதிரி எப்படிம்மா காபி போட்டு வச்சிட்டு கொண்டு போய் கொடுன்னு சொல்ற? இங்க நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்னன்னா மாமியார் வீட்டு விருந்துக்கு வந்த மாதிரி அவரை கவனிக்க ரெடி ஆகிட்ட. நைட் ரூம்ல தூங்க ஒத்துக்கிட்டேங்குறதுக்காக என்னோட முடிவு மாறுனதா அர்த்தம் கிடையாது.” அழுத்தமாகவே சொன்னாள் இயலணி.
“வீட்டுக்கு யார் வந்தாலும் உபசரிக்குறது நம்ப பண்பு இயலு. உன் கோவத்தை காட்ட இது இடமில்லை.”
Advertisement
“அப்போ வேற எங்க காட்டலாம்னு நீயே சொல்லு. இது மாதிரி எதையாவது சொல்லி சொல்லி தான் அடக்கி வைக்க பாக்குறீங்க. நெருப்புல வாழ முடியாதுனு சொல்றேன் அதை கேட்டுட்டும் நீ இப்படி பண்ணா என்னமா அர்த்தம்? அவர் என்ன பண்ணி இருந்தாலும் எதுவும் சொல்லாம அவருக்கு அடங்கி வாழனும் அதைத்தான செய்யணும்னு எதிர்பாக்குற? நிமிரவே விடமாட்டீங்கன்னா இன்னும் எத்தனை வருஷத்துக்கு எல்லாத்தையும் அடக்கிட்டு உணர்வில்லாத கல்லு மாதிரி வாழணும்னு சொல்லிடுங்க.” கோபத்தின் வெளிப்பாட்டில் மூச்சுக்கள் வேகமெடுக்க மனத்தாங்கலை கொட்டிவிட்டாள்.
Advertisement
மகளின் கேள்விகளில் கலங்கினாலும் தெளிந்தது போல் தீர்க்கமாய் பார்த்தவர், “நேத்தி என் முன்னாடி எப்படி நீ நிமிர முடியாம உக்காந்திருந்தியோ அதே மாதிரி அந்த தம்பியும் உக்காந்திருந்துச்சு. ஏதோ செய்யக்கூடாத தப்புனு புரியுது.”
“புரியுதுல்ல அப்புறம் ஏன்மா?”
“அது தப்புனு புரிஞ்சி ஏத்துக்குற அளவுக்கான பக்குவம் இருக்கே அந்த தம்பிகிட்ட, அதான் யோசிக்க வைக்குது இயலு. நீ சொல்லாட்டியும் ராஜேஷையும் அந்த தம்பியையும் ஒரே தராசுல பாக்குறேனு புரியுது. ஆனா அந்த ராஜேஷ் எல்லாம் எந்த காலத்துலையும் அவன் செய்யுறது தப்புனு உணரப்போறதில்லை.”
Advertisement
“அதுக்காக இவரோட போகணுமா நான்?” இயலாமை தான் எஞ்சியிருந்தது அவள் குரலில். மகளாக அன்றி ஒரு பெண்ணாக யோசித்து தன்னை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லையே என்ற ஆதங்கம் நிரம்ப இருந்தது.
“அப்படி சொல்லல இயலு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி வாழ்ந்தாலே மனத்தாங்கல் வர்றது சகஜம். இங்க அவருக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் நடந்திருக்கு. யாராவது ஒருத்தர் கொஞ்சம் விட்டுக்கொடுத்து புரிஞ்சிக்க முயற்சி பண்ணாம இப்படி ஒரேடியா வேண்டாம்னு சொல்றதெல்லாம் சரி கிடையாது.”
“நீ சொல்றதெல்லாம் மன்னிக்க முடிஞ்ச தவறான புரிதலுக்கு.” இறுக்கமாய் இதழ் பூட்டியவள் இதற்கு மேல் இவரிடம் பேசி புரியவைக்க முடியாது என்று நகர்ந்து சென்றுவிட்டாள்.
“பேசிட்டு இருக்கும் போதே மூஞ்சை திருப்பிட்டு போறதெல்லாம் என்ன பழக்கமோ. நல்லதுன்னு எதுவும் சொல்லிடக்கூடாது காதுல வாங்கிட்டு தான் அடுத்த வேலை பாப்பாங்க.” வேம்புவின் புலம்பல் செவி எட்டினாலும் கண்டுகொள்ளாமல் காபி பருகியவள் விழிகள் அறை நோக்கித்தான் இருந்தது. அவன் எப்போது எழுந்து வருவான் பேசிமுடித்து அவனை கிளப்புவார்கள் என்று காத்திருந்தாள். ஒரு ஓரத்தில் தந்தை எதுவும் சமாதானம் பேசி அவனுடன் அனுப்பி வைக்க முயன்றால் என்ன செய்வது என்ற ஐயமும் வியாப்பித்திருந்தது. கண்களை இறுக மூடித்திறந்தாள் அவனது வன்மை நினைவுக்கு வர, என்ன நடந்தாலும் அவனுடன் செல்லக்கூடாது என்று தீர்மானம் கொண்டாள்.
அவள் எண்ணத்தின் நாயகன் திடுக்கிட்டு விழித்து முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தமர்ந்தான். அன்னிச்சையாய் மணியை பார்த்துவிட்டு வாயிலில் கவனம் பதிக்க, சன்னமாய் பேச்சுக்குரல்கள் கேட்டது. எழுந்து செல்ல மனம் உந்தினாலும் இயலணியை விட்டு விலகிச் செல்வது என்று எடுத்த முடிவு அவனை தேங்க வைத்தது. அவளுக்கு அநியாயம் செய்துவிட்டதாக குறுகி சிறுத்த மனது அவளை பிரிய நினைக்கையில் உறுத்தியது. அவளின் மன்னிப்பு கிடைத்தால் உறுத்தல் நின்றுவிடும் ஆனால் அது கிடைக்குமா என்ற கேள்விக்கு விரக்தியில் சுருங்கியது முகம்.
‘உனக்கு இது தேவைதான். எங்கேயோ உன் மனசுலையும் அழுக்கு இருந்திருக்கு.’ தனக்குள் மருகியவன் முன்னுச்சி முடியை பற்றி இழுத்து வலிக்கச் செய்து தன்னை நிதானமாக்க முயன்றான். முடியை இழுத்ததினால் சுருக்கென்று ஏற்பட்ட தற்காலிக வலியில் மனவலி குறைந்து போக, பையை வாரி சுருட்டி எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
இவன் வரவுக்காகவே காத்திருந்த இயலணி முகம் இறுகியது. அவளை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தடுமாறியவன் அவள் முன் நின்று தலை கோதி, முகத்தை பக்கவாட்டில் திருப்பி, மேலே பார்த்து, காலை இப்படியும் அப்படியும் மாற்றி வைத்து சஞ்சலமான தன் மனதை உடல்மொழி மூலம் வெளிப்படுத்தியவன் நீண்ட மூச்சிழுத்து, “நான் போயிடுறேன். நீ ப்ரீயா இரு. எந்த பிரச்சனைனாலும் எனக்கு ஒரு போன் போடு. வந்துடுவேன்.” என்றபடி லேசாக விழி உயர்த்தி அவளை சந்தித்தவன் அதற்கு மேல் முடியாது வாசல் நோக்கி நடந்தான்.
“என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க?” அவள் தந்தை பரந்தாமனின் குரல் அவனை முன்னேற விடாமல் நிறுத்தியது. உடல் தளர, கண்களை இறுக மூடித் திறந்தவன் ஒரு முடிவுடன் திரும்பி, “என் மேல தான் சார் தப்பு. இயல் விருப்பத்துக்கு இங்கேயே இருக்கட்டும். நான் விலகிடுறேன்.”
“இந்த காலத்துல எல்லாமே ஈஸியா போச்சுல்ல. வேணும்னா கல்யாணம் பண்ணிக்குறது வேண்டாம்னா முடிச்சிக்கலாம்னு ஒத்தை வார்த்தை சொல்லிட்டு கிளம்பி போயிடுறது. எதுக்கும் மதிப்பு மரியாதை கிடையாது. உறவை சேக்குறதும் இல்லை, பேச்சுக்கு செவி சாய்க்குறதுமில்லை. சின்ன சஞ்சலம் வந்தா உடனே உறவை விட்டுட்டு போயிடுறது.” நேற்று நிதானமாக பேசிய மனிதர் இன்று கொந்தளிக்கவும் திணறலாக பார்த்தான் அறிவழகன்.
மனைவி என்ற உறவை விட்டு செல்லும் யோசனை அவளை கட்டாயத்தில் மணந்துகொண்ட போதே அவன் எண்ணங்களில் எங்குமில்லை. இப்போதும் தான். ஆனால் செய்த தவறு காலத்திற்கும் வடுவாய் மாறி பார்க்கும் போதெல்லாம் வலிக்கச் செய்யுமே. இதை எப்படி சரி செய்வேன் என்று உள்ளம் மீண்டும் கலங்கித் தவித்தது.
தேவையான அவகாசம் கொடுத்தால் ஈரக்காயமும் ஒருநாள் ஆறி வடுவாகி வலியின் தாக்கத்தை குறைக்கச் செய்யும் என்ற நிதர்சனம் வாழ்ந்து பார்த்தால் தெரியுமோ.
“அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்ச உங்க வீட்டுக்கு நீங்க இப்படி வேண்டாம்னு சொல்றதை சொல்லிட்டீங்களா?” என்ற பரந்தாமனின் அழுத்தமான பார்வையில் அடுத்து தன் வீட்டினரை சமாளிக்க வேண்டுமா என்ற ஆயாசம். அதுவும் அவன் தந்தை என்ன சொல்வாரோ என்று கலக்கம். அதை காண்பித்துக்கொள்ளாமல், “நான் பேசிக்குறேன் சார்.”
“இது ஒன்னும் சின்ன சமாச்சாரம் இல்லை. எங்களை பத்தி தெரியாம கல்யாணம் நடத்தி வச்சிருந்தாலும் எல்லாம் முறையா நடந்திருக்கு. எங்களுக்கு தெரிஞ்சப்புறம் மறைக்கிறது தப்பு. அவங்க நம்பர் கொடுங்க நான் பேசுறேன்.”
இயலணியை ஒரு பார்வை பார்த்தவன் மறுப்பாய் தலையசைத்து, “அதுக்கு அவசியம் இல்லை சார். நான் சொல்லிக்கிறேன்.”
அவன் பார்வையை தொடர்ந்து பரந்தாமனின் கவனமும் மகளிடம் சென்றது. முகம் சிறுத்து என்னவோ போல் நின்றிருந்தாள். என்ன நினைக்கிறாள் என்று புரியவில்லை தந்தைக்கு.
“என்னாச்சுடா பாப்பா?”
தொண்டை அடைக்க, இடவலமாய் அசைந்தது அவள் தலை.
“அவ்வளவு தானா இயலு. என்னடி இப்படி நிக்குற?” வேம்புவுக்கு பொறுக்க முடியவில்லை. நேற்றெல்லாம் மகள் வேண்டாம் என்கவும் சமாதானம் செய்துவிடலாம் என்று எண்ணியிருந்தார். இப்போது அறிவழகனும் வேண்டாம் என்று நிற்க, மகள் வாழ்க்கை இப்படி துவங்கும் முன்னே முடிகிறதா என்று ஆதங்கமும் வேதனையும் அவர் நெஞ்சைக் கவ்வியது.
பரந்தாமனுக்கே ஒரு நொடி என்ன செய்வது என்று புரியவில்லை. இரவோடு இரவாய் கிளம்பி வந்தவன் முகத்தில் மகளுக்கான தேடலும் யாசகமும் நிறைந்திருந்தது. அதன் பொருட்டே விடிந்த பின் பேசி பார்க்கலாம், ஏதோ தவறான புரிதலில் பிரிய முனைகிறாள் பெண். கலந்து ஆலோசித்து பிரச்சனையை கலைந்தால் உறவு சீராகிவிடும். அவன் பெற்றோரையும் அழைத்து அறிமுகப்படுத்திக்கொண்டு தகவல் சொல்லிட வேண்டும் என்று நினைத்திருந்தார். இப்போது இவனும் அழுத்தமாய் மறுக்க, என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. பார்வை மகளிடம் சென்று வந்தது.
ஒரு வார்த்தை பேசவில்லை அவள். இறுக்கமாய் முகம் கலங்க அதனை மறைத்தபடி குனிவதுமாய் நிமிர்வதுமாய் தவித்து நின்றாள். மனதில் பாரம் ஏறியது. இந்த பிரிவுக்கு தான் உடன்பட்டால் அடுத்து ராஜேஷ் வந்து நிற்பானே. அவனை எங்கனம் சமாளிக்க. அவனை சமாளித்தாலும் அடுத்து அவள் வாழ்க்கை? மகள் வாழ்க்கை அந்தரத்தில் ஊசலாடுவது தாள முடியாத வேதனையை கொடுக்க, உச்சந்தலை வியர்த்து கோடாய் இறங்கியது உவர் நீர். உடலில் லேசான நடுக்கம். சுற்றி இருப்பவர்கள் கலங்கலாக தெரிய, தடுமாறியவர் கை பற்றி இருந்தான் அறிவழகன்.
“சார் என்னாச்சு?” பதட்டமாய் அவன் இயலணியைப் பார்க்க, பதறிப் போய் தந்தை அருகில் வந்தாள்.
“ப்பா…”
கணவனின் தள்ளாட்டத்தில் அதிர்ந்து நின்ற வேம்புவை இயலணியின் அழைப்பு உசுப்ப, சில நொடி தடுமாற்றத்திற்கு பின் மாத்திரை எடுத்து வந்து கொடுத்தார்.
“ராத்திரியே பிரஷர் மாத்திரை போட்டிருக்கணும். போடலை.” என்ற வேம்புவை குழப்பமாக பார்த்தாள் இயலணி.
“காலையில மட்டும்தான அப்பா மாத்திரை போட்டுட்டு இருந்தாங்க?”
“ம்ச்… மூணு மாசமா உன்னை நினைச்சி அதிகம் டென்ஷன் ஏத்திக்குறாங்க. பிரஷர் கண்ட்ரோல் ஆகல. நைட்டும் பாதி மாத்திரை போட சொல்லியிருக்காங்க டாக்டர்.” என்று கணவருக்கு மாத்திரையை கொடுக்கப் போக,
“இன்னும் சாப்பிடலையே. சாப்பிடாம போடலாமா?” என்று கேட்டு நிறுத்தியிருந்தான் அறிவழகன்.
தலையில் அடித்துக்கொண்டவர் வேகமாக சென்று இட்லியை தட்டில் போட்டு எடுத்துவந்து கணவரிடம் கொடுத்தார். அதற்குள் தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி இருந்தாள் இயலணி. மெதுவாக எழுந்து கைகழுவி வந்து இட்லியை பிட்டு உண்ண, அங்கிருந்து உடனே கிளம்ப முடியாமல் நின்றான் அறிவழகன்.
“நேரமாகிடுச்சு. நீங்களும் சாப்பிடுங்க.” வேம்பு தட்டை நீட்டிவிட, சங்கடமாய் பார்த்தான் அறிவழகன். இயலணி அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கவனம் எல்லாம் தந்தையிடம் இருந்தது. வெகு வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரைகள் சாப்பிடுகிறார். என்றுமே இப்படி தலை சுற்றி தள்ளாடியதில்லை. இன்று தன்னால் தான் இப்படி என்ற எண்ணம் கவலை கொடுத்தது.
“எல்லாம் சரியாகிடும் அப்பா. நீங்க டென்சன் ஏத்திக்காதீங்க.” அவர் மாத்திரை போடவும் இயலணி பேச, கண்களை அழுந்த துடைத்தவர், “உனக்கு இவரோட இருக்க புடிக்கலைனு அப்பாவுக்கு புரியுதுடா. கட்டாயப்படுத்தி வாழ சொல்லணும்னு நினைக்கல ஆனா இப்படியே நீ இருக்க முடியாதுனு உனக்கு புரியுதா? அந்த ராஜேஷ் ஒரு பக்கம் குடைச்சல் கொடுப்பான். எவ்வளவு நாளைக்கு சமாளிக்க முடியும்னு நினைக்குற? அதோட அவங்க ஊர்ல எல்லாரும் கூடியிருக்க கல்யாணம் நடந்திருக்கு. அதை நீங்க சொல்ற மாதிரி அத்தனை சுலபமா வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட முடியாது. அப்படியே எல்லாரும் உக்காந்து பேசி பிரிஞ்சாலும் அடுத்த வாழ்க்கை அமையுறது அத்தனை சுலபம் இல்லை பாப்பா. ராஜேஷ் சும்மா இருக்க மாட்டான்.” தந்தையாய் நிதர்சனம் பேச, தலையிடியாய் இருந்தது இயலணிக்கு. உணர்வு ரீதியில் நெருக்கி தன்னை அறிவழகனுடன் சேர்ந்து வாழ அழுத்துவது போல் உணர்ந்தாள்.
“ராஜேஷை ஒரு வாரம்தான் கட்டுப்படுத்த முடியும்னு வேந்தன் சாரே சொல்லி இருக்காரு. அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு யோசி.” வேம்புவும் சேர்ந்துகொண்டார். அறிவழகன் உணவை வாங்கவில்லை எனவும் அதனை அங்கேயே வைத்தவர் மகளின் முடிவை மாற்றவே முயன்றார்.
கண்களில் தேங்கிவிட்ட நீருடன் அன்னையை ஏறிட்டவள், “அவனுக்கு பயந்து நான் இவரோட போகணுமா?”
“நேத்தி அவன் எப்படி நடந்துகிட்டான்னு பார்த்த தான நீ? அப்பாவை தள்ளிவிட்டு உன் தாலியை அறுக்கப் பார்த்து… போலீஸ் வரலைனா என்ன நடந்திருக்குமோ.” நினைக்கவே நடுங்கியது வேம்புவுக்கு. அதே நிலை தான் பரந்தாமனுக்கும். மகளின் மனதை உணர்ந்து அவள் மண வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்தால் வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட கதையாகிவிடும்.
“இவரோட போயிட்டா ராஜேஷ் தொல்லை இருக்காதுன்னு நினைக்கறீங்க அப்படித்தான?” கண்களில் தழும்பிய நீர் கிழிறங்க அதனை துடைத்தபடி கேட்ட மகளை வேதனையுடன் பார்த்தனர் பெற்றோர்.
“அவன் எதிருல இல்லாம கல்யாணம் ஆகி உன் வீட்டுக்காரரோட வாழ்ந்தா அவன் ஒதுங்கித்தான ஆகணும். ஒதுங்கிடுவான். இல்லைனா விட்டிருவோமா நாங்க?”
இயலணி கணவனுடன் சென்றுவிட்டால் அவன் வீட்டாள்கள் உதவியும் கிடைக்கும், சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை பெற்றவர்களுக்கு. அறிவழகன் மீதும் பெரிதாக எதிர்மறை எண்ணங்களும் இல்லாது இருக்க, மகளை அவனுடன் செல்ல கட்டாயப்படுகிறோம் என்பதை உணராமலேயே சூழ்நிலை என்று கைகாட்டினர். அவள் வாழ்க்கையே முதன்மையாகிப்போனது அவளது விருப்பத்திற்கு முன்.
“ஓ… இப்போ அவனை எதுவும் செய்ய மாட்டீங்க?” கணவனுடன் சென்றபின் ராஜேஷ் தொல்லை செய்தால் விடமாட்டேன் என்று சொல்லும் இதே பெற்றோர் இப்போது ஏன் உடன் நிற்கவில்லை என்ற விரக்தியில் இயலணி கேட்க, மழுக்கென்று பரந்தாமன் கண்களில் கண்ணீர் ஊற்று.
“முடியலையே பாப்பா… ரவுடி மாதிரி வீடு புகுந்து ரகளை பண்றப்போ இந்த அப்பாவை கீழ தள்ளிட்டானே. இந்த கிழவனால எழுந்து வந்து உன்னை காப்பாத்த முடியலையே.” உடல் குலுங்க தன் கையாலாகாத்தனத்தை எண்ணி அவர் முகத்தை மூடிக்கொள்ள, தாளவில்லை மகளுக்கு.
“அழாதீங்க அப்பா. நான் பாதுகாப்பா இருக்கணும்னா இவரோட போகணும்ல. போறேன். நாளைக்கு கோர்ட்டுல சாட்சி சொல்லிட்டு போறேன்.” என்றவளை பெற்றவர்கள் நிம்மதியாய் பார்க்க, நம்ப முடியாமல் அதிர்ச்சியாய் பார்த்துவைத்தான் அறிவழகன்.
அவன் அதிர்ச்சியை மெய்ப்பிப்பது போல் தடங்கல்களைத் தாண்டி நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவள் வீடு திரும்பும் முன் மாயமாய் மறைந்திருந்தாள் மீண்டும்.
error: Content is protected !!