Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 13

“அடடடா.. அவங்க ஒரு நல்ல காரியத்துக்கு வந்துருக்காங்க.. ஒரு பெரியாளு இப்படித்தான் பேசுறதா?
வேற பேச்சைப் பேசுங்க.” தந்தையைக் கண்டித்தான் துரைப்பாண்டி.
“சரி அதை விடு. மாரிமுத்து உன்னைப் பார்க்கணும்னு சொன்னாப்ல.” என்றபடி சகஜ நிலைக்கு வந்தார் பிச்சை வாத்தியார்.
“பார்ப்போம் மச்சான். சுரேஷ் வீட்டு ஃபங்ஷன் முடியட்டும். ரெண்டு நாள் இருந்துட்டுதான் ஊருக்கு கிளம்புவோம். அப்ப பார்த்துக்கலாம்.”
மெதுவாக தாழ்வாரத்தை விட்டு இறங்கி, வீட்டின் பின்புறம் வந்தார் சரவணன். அவரைத் தொடர்ந்து மலரும் வந்தாள். கொல்லைப்புறம் பழைய பசுமையை இழந்து வறண்டு கிடந்தது. காய்கறித் தோட்டமும் குருவிக் கூடுகளும் காணாமல் போயிருந்தன. பார்வதி துணி துவைக்கும் அந்த நீளமான கருங்கல் பலகை வெறுமையாய்க் கிடந்தது. சரவணனுக்கும் ரமணிக்கும் வீட்டுப்பாடம் எழுத நிழல் தந்த வேப்பமரமும் இப்போது இல்லை. அது ஒரு தோட்டம் என்பதற்கு அத்தாட்சியாக ஒரு மாமரமும் கொய்யா மரமும் மட்டுமே நின்றிருந்தன. தானாக வளர்ந்த சில தக்காளிச் செடிகளும், மணத்தக்காளிச் செடியும் வாடிக்கிடந்தன. தோட்டத்தைப் பார்த்தபடி இருந்த, வீட்டின் பின்புற வாசலை ஒட்டி சமையலறை இருந்தது.
உள்ளறையிலிருந்து சமையலறை வழியாக வசுமதியும் பிரபுவும் தோட்டத்துக்கு வந்தார்கள்.
“பாப்பா முள்ளு இருக்கப்போவுது, கால்ல செருப்புப் போடுக்கங்க!” என்றபடி துரைப்பாண்டியும் அவர்களுக்குப் பின்னே வந்தான். தோட்டத்தை அடுத்து இருந்த வயல்வெளி எல்லாம் இப்போது வீடுகளாகிவிட்டதால் அதிக நேரம் அங்கே நிற்கமுடியாமல் சரவணனும் மலரும் மீண்டும் கூடத்துக்கே வந்துவிட்டார்கள்.
“ஏன் அத்தான், இந்த செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்தலாம்ல? இப்படியா காயவிடுவீங்க?”
துரைப்பாண்டியிடம் வசுமதி கேட்டது ஹால் வரைக்கும் கேட்டது.
‘இவனாவது தோட்டத்துக்கு தண்ணி விடுறதாவது.. அதுக்கெல்லாம் ஒருத்தி வந்தாத்தான் உண்டு’
தனக்குள் சொல்லிக்கொண்டார் பிச்சை வாத்தியார்.
துரைப்பாண்டி முன்னரே திட்டமிட்டபடி அவர்களுக்கான மதிய சாப்பாட்டை தயார் செய்துவிட்டாள் எஸ்தர்.
சரவணனால் மறுக்கமுடியவில்லை. எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். சமையலின் ருசிக்காக எஸ்தரை வெகுவாகப் பாரட்டினாள் வசுமதி. அவள் ஆண்ட்டி ஆண்ட்டி என்று அழைத்தது எஸ்தருக்குப் பெருமையாக இருந்தது.
“மாமாவுக்குப் போரடிக்குதுன்னு நெனைக்கேன், ஏ பிள்ளைகளா, மில்லுக்குப் போவமா?” என்றான் துரைப்பாண்டி.
“ஓ..போகலாமே!” என்றான் பிரபு.
“இல்லத்தான்.. ஆறு மணிக்கு மண்டபத்துக்குப் போயிடணுமாம். நாலு மணிக்கே பிரபா ஆண்ட்டி வரச்சொல்லியிருக்காங்க. மாலாவுக்கு மேக்கப் போட வந்துருவாங்களாம்.” என்றாள் வசுமதி.
“ஆமா துரைப்பாண்டி, நாளைக்கு மதியம், இல்லை நாளை மறுநாள் போகலாம். இப்ப அங்க தேடுவாங்க.” என்று சரவணன் மலரைப் பார்க்க,
“ஆமாமா, போயி பிரபாண்ணி மொக்கை போடுறதையெல்லாம் கேக்கணும்.”என்று சிரித்தபடியே எழுந்தாள் மலர்.
*****
திருமண வரவேற்பு கோலாகலமாக நடந்தது. சரவணன் குடும்பம் வந்திருந்ததாலோ என்னவோ, துரைப்பாண்டி எல்லா வேலைகளிலும் நடுநாயகமாக இருந்தான். மாலாவின் கணவன் வருண் படு ஸ்மார்ட். ரொம்பவும் ஜாலியாக அதேநேரம் பெரியவர்களிடம் மரியாதையாகவும் பழகக்கூடியவனாக இருந்தான். மாலாவின் அருகிலேலே பெண்ணுக்குத் தோழியாக நின்றிருந்தாள் வசுமதி. நொடிக்கொருமுறை வருணும் மாலாவும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் பண்றதைப் பார்த்தா, சத்தியமா இது அரேஞ்சுடு மேரேஜ் மாதிரி எனக்குத் தெரியலை. கொஞ்சமாச்சும் வெட்கப்படுறமாதிரி நடிக்கவாவது செய்டி.” மாலாவின் காதருகே சொன்னாள் வசுமதி.
“ஆமா, வெட்கப்படுறதுக்கு எதுக்கு ஊரைக்கூட்டி கல்யாணம் வைக்கணுமாம்.. நீ உன் வேலையை மட்டும் பாரு பாட்டியம்மா. நான் அவரோட தனியா இருக்கும்போது வெட்கப்பட்டுக்கறேன்.” சிரித்துக்கொண்டே அவளுக்கு மட்டும் கேட்கும்படியாகக் கூறினாள் மாலா.
“அடேங்கப்பா.. தைரியம்தான்.” வசுமதி சிரித்தபடியே தோழியின் தலைமுடியைத் திருத்தி, நெற்றியில் வழிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்தாள்.
****
வரவேற்பு வெகு சிறப்பாக நடந்தது. பொண்ணுக்குப் பக்கத்துல நிக்கிற அந்தப் பொண்ணு யாரு.. அந்தப் பொண்ணு யாரு? என்றே எல்லோரும் யோசிக்கும், கேட்கும் விதத்தில் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தாள் வசுமதி.
‘யாரு சரவணன் மகளா? சரவணனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா? படிக்குதா, வேலை பார்க்குதா? பொண்ணு கேட்டா தருவாங்களா?’ என்பது மாதிரியான விசாரணைகள் துரைப்பாண்டியின் காதுபடவே கேட்டது. யார் யாரோ முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் சரவணனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை வசுமதியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். இடையிடையே வசுமதியையும் பிரபுவையும் அழைத்து, அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் சரவணன். அவர்கள் பெரும்பாலும் தூரத்துச் சொந்தமோ அல்லது சரவணனோடு கூடப் படித்தவர்களாகவோ இருந்தார்கள். பால்ய கால நண்பர்களைப் பார்த்ததும் அவர்களிடம் தன் மனைவி மக்களை அறிமுகப்படுத்தி வைத்ததும் சரவணனுக்கு ஒரு இனம்புரியாத சந்தோசத்தைக் கொடுத்தது. சுரேஷும் பிரபாவும் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தனர். பழனியும் அவன் நண்பர்களும் சாப்பாடு நடக்கும் பகுதியைப் பார்த்துக்கொண்டனர். எல்லாம் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கரைய மணி ஒன்பதுக்குமேல் ஆகிவிட்டது. மணமக்கள் சாப்பிடும்போதுதான் சரவணன் குடும்பத்தார் சாப்பிட்டார்கள். துரைப்பாண்டியும் பழனியும் விழுந்து விழுந்து கவனித்தார்கள்.
வசுமதி முறைத்தாலும் அதை சட்டை செய்யாமல் அவளுக்கும் பிரபுவுக்கும் அப்பளங்களை அள்ளி வைத்தான் துரைப்பாண்டி.
“அத்தை, நம்ம ஊரு பாயாசம் மாதிரி நீங்க எங்கேயும் சாப்ட்டுருக்க மாட்டீங்க..” என்றபடி மூவருக்கும் தனித்தனியாக டம்ளரில் பாயசத்தை எடுத்து வந்தான்.
‘இவன் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலை’
“யப்பா..துரை போதும்ப்பா!” என்றாள் மலர்.
இன்னொரு பக்கம். மாலாவின் உதட்டோரம் இருந்த சோற்றுப்பருக்கையை மென்மையாகத் தட்டிவிட்டு சரிப்படுத்தினான் வருண். அப்போது உண்மையிலேயே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள் மாலா.
****
மறுநாள் காலை ஆறு-ஏழேகால் முகூர்த்தத்தில் வருண், மாலா கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
மிடுக்காக வந்து மணமக்களை ஆசீர்வதித்தார் பிச்சை வாத்தியார். மணமக்களுடன் போட்டோவுக்கு நிற்கும்போது, சரவணன் குடும்பத்தினரையும் வற்புறுத்தித் தன்னருகே நிற்கவைத்துக் கொண்டார்.
சாப்பிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைய, மாலையும் கழுத்துமாக புகுந்த வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள் மாலா. பிறந்த வீட்டு சீர் பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பெண்ணை விடுவதற்கு மாப்பிள்ளை வீட்டுக்கு, மலரும் வசுமதியும் கூட வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டாள் பிரபா.
‘இந்தா இருக்குற ஸ்ரீவில்லிபுத்தூர்தானே.. போயிட்டு சாயந்தரத்துக்குள்ள வந்துடலாம்’ என்று சுரேஷும் சொன்னதால், வேறுவழியில்லாமல் சரவணனும் போகவேண்டியதாகிவிட்டது. அன்று மதியம் அவர்கள் தன்னுடைய மில்லுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த துரைப்பாண்டிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!