Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 12

அந்தநாளும் வந்தது.
சிறு வயது முதல் இதற்குமுன் பல தடவை சொந்த ஊருக்கு வந்திருந்தாலும் இந்தமுறை வருவதில் வசுமதிக்குப் புதுவித ஆர்வம் இருந்தது. அவர்களை அழைத்துச் செல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கே கார் அனுப்பியிருந்தார் சுரேஷ். நகரத்திலும் சேராமல் கிராமத்திலும் சேராமல், சென்னையின் இரைச்சலோ புழுக்கமோ இல்லாமல் அமைதியான அழகுடன் இருந்தது கிருஷ்ணாபுரம். மறுநாள் நல்ல முகூர்த்த நாளாகையால் ஊரின் பல பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் போட்டி போட்டுக்கொண்டு பாடல்களைப் பொழிந்தன.
வந்ததும் குளித்து முடித்து ஃப்ரெஷ்ஷாகி வெளியே வந்தாள் வசுமதி. அவளும் மாலாவும் சில மேக்கப் பொருட்கள் வாங்க கடைக்குப் போக வேண்டியிருந்தது. வெளியூர் உறவுக்காரர்கள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தார்கள். அடுத்த தெருவில்தான் கல்யாண மண்டபம். அன்று மாலையில் வரவேற்பு. சுரேஷின் தம்பி ராஜேஷும் பிரபாவின் தம்பி பழனியும் மண்டப வேலைகளைக் கவனித்துக் கொண்டார்கள். வந்தவர்களுக்குக் காலை உணவாக இட்லிகளை அவித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் பிரபா. சமையலில் அவளுக்கு உதவியாக பழனியின் மனைவி தனம் இருந்தாள். மலரை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. வயதானவர்ககள், குட்டிக்குளுவான்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டார்கள். சரவணனும் மலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே துரைப்பாண்டி வந்தான்.
“என்ன மாமா.. நேர இங்க வந்துட்டீங்க? நம்ம வீட்டுக்கு வர வேண்டியதுதான. அங்க வருவீங்கன்னு உங்க மச்சான் உக்காந்துட்டு இருக்காரு!”
அவனை சங்கடமாகப் பார்த்தார் சரவணன். மலருக்கும் அங்கே போக வேண்டும்போல்தான் இருந்தது.
“வாரென் துரை.. இப்பத்தானே வந்துருக்கோம். கொஞ்சம் சாவகாசமா வரலாம்னு இருந்தேன்.”
“வா துரைப்பாண்டி.. இட்லி சாப்பிடு” என்றார் சுரேஷ்.
“இல்ல இருக்கட்டும்..” என்றபடி துரைப்பாண்டி மலரைப் பார்த்தான்.
“அத்தை வாங்க அத்தை, சாயந்திரம்தானே ஃபங்க்‌ஷனு? அதுவரைக்கும் அங்கன வந்து இருக்கலாம்ல?”
“ஏ கிறுக்கா.. நான் என்ன வரமாட்டேன்னா சொல்றேன். சரி சரி, நீ வேணா பிள்ளைகளைக் கூட்டிட்டு முன்னாடி போ. நானும் அத்தையும் பின்னால வர்றோம்.”- என்றபடி எழுந்தார் சரவனன்.
பிரபுவையும் வசுமதியையும் பார்த்தான் துரைப்பாண்டி.
“அத்தான் கொஞ்சம் வளையல் எல்லாம் வாங்க வேண்டியிருக்கு. நானும் மாலாவும் கடைக்குப் போகணும். போயிட்டு வந்துடட்டுமா?”
“அது எப்படி பொண்ணுக்காரிய வெளிய கூட்டிட்டுப் போவாங்க? இதென்ன ஒங்க மெட்ராசுன்னு நெனச்சியா?
என்ன வாங்கணும்னு கேட்டுட்டு வா. வாங்கிட்டு வந்துடலாம். அவலை எல்லாம் கூப்புடக்கூடாது. நீ வாடா பிரபு காருக்கு.” என்றான்.
“மூனு பேரா போகக்கூடாது, உங்க அத்தையையும் கூட்டிட்டுப் போ. இந்தா இருக்குற பக்கத்துத் தெருவுக்குக் காரா? போயிட்டு வாங்க!” என்றாள் பிரபா சிரித்தபடி.
துரைப்பாண்டி சந்தோசமானான். “சரி வாங்க.” என்றபடி காருக்குப் போனான்.
“போயிட்டு வாங்க. அப்புறம் எங்க மச்சான் வீட்டுக்குப் போகலாம்.” என்று கூறிய சரவணன், அங்கே இருந்த விஸ்தாரமான திண்ணையில் அமர்ந்தார்.
கார் கிளம்பியதும் சுரேஷ் கேட்டார்.
“என்னப்பா.. தொரை ரொம்பவும் பாசமா இருக்கான்?”
“அதான் எனக்குப் பயமாயிருக்கு!” என்றுவிட்டு சிரித்தார் சரவணன்.
***
சுரேஷ் வீட்டிலிருந்து ரெண்டு தரு தள்ளி இருந்தது பிச்சை வாத்தியார் வீடு. கடை வேலைகளை முடித்துவிட்டு, பிரபுவையும் வசுமதியையும் காரிலேயே தன் வீட்டுக்கு அழைத்துப் போய்விட்டான் துரைப்பாண்டி. மலரும் சரவணனும் பின்னால் நடந்து போனார்கள்.
ஒரு தலைமுறை இடவெளியில் பல்வேறு மாற்றங்களைத் தாங்கி, வயதாகிப்போய் நின்றிருந்தது பார்வ்தியக்காள் வீடு. தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொடிருந்த பிச்சை வாத்தியார் இவர்களைக் கண்டதும் எழுந்தார்.
“மாப்ள, வா வா. வா தாயி.. காலையிலேயே வருவீங்கன்னு நெனைச்சேன்.”
“நல்லாருக்கீங்களா?” என்றபடி படியேறிய சரவணன், வரும்போது பழக்கடையில் வாங்கி வந்த பழங்கள் அடங்கிய பையை அவரது கைகளில் கொடுத்தார்.
“இதென்ன சம்பிரதாயம்.. நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு..” சலித்துக் கொண்டார்.
உள்ளறையில் வசுமதிக்கும் பிரபுவுக்கும் பழைய போட்டோ ஆல்பங்களை காட்டிக் கொண்டிருந்த துரைப்பாண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தான்.
“மாமா, அத்தை வாங்க வாங்க!” கலைந்து கிடந்த சோபாக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அமர வைத்தான்.
“எஸ்தரே..” வாத்தியார் சமையலறையைப் பார்த்துக் குரல் கொடுக்க, வயதான ஒரு அம்மாள் கையில் பலகாரத்தட்டுடன் வந்தாள்.
“இது எஸ்தர், நம்ம மில்லுல வேலை பார்த்தவுகதான். இங்க சமையலைப் பார்த்துக்கிடுதாக. இவுக பையன் மைக்கேல்தான் மில்லுல எல்லா வேலைக்கும் நம்ம துரைக்கு ஒத்தாசையா இருக்கான்.”
முறுக்குகளும் இனிப்புகளும் இருந்த தட்டை அவர்களுக்கு முன்னால் டீபாயில் வைத்துவிட்டு இருவரையும் பார்த்து மெலிதாகச் சிரித்தாள் எஸ்தர்.
“காப்பி குடிப்பீங்களா. டீ தரவா?”
“எதுனாலும் கொண்டு வாங்க, ஆனா இப்ப வேண்டாம். ஒரு பத்து நிமிசம் ஆகட்டும்.”
சரவணன் சொன்னதும் தலையை ஆட்டிவிட்டு உள்ளே போனாள்.
உள்ளேயிருந்து கையில் ஒரு ஆல்பத்துடன் வந்தான் பிரபு.
“அம்மா, இங்க பாருங்களேன் அப்பாவோட பழைய போட்டோ. சட்டை பேன்ட்டை பாருங்க எவ்ளோ
தொளதொளான்னு இருக்கு! அப்புறம் இந்தக் குழந்தை.. யாரு இது?”
“இது துரைப்பாண்டிதான். அப்ப அவனுக்கு ஒரு வயசு இருக்கும்.” என்றார் சரவணன்.
“அக்கா இது அத்தானாம்க்கா..” என்றபடி உள்ளே ஓடினான் பிரபு.
“நானும் ஆல்பம் பார்க்கறேன்,” என்றபடி மலரும் உள்ளே போனாள்
அன்று வசுமதியின் ஆர்வத்துக்கு சரியான தீனி கிடைத்தது.
“ம்மா இதுதான் ரமணி அவங்களாம். எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க.”
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில், பாவாடை தாவணியில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியபடி இடுப்பில் துரைப்பாண்டியை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ரமணி. ஆல்பத்தின் பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களைத் தன் செல்போனில் எடுத்துக்கொண்டாள் வசுமதி. சரவணனுக்கும் அதையெல்லாம் பார்க்கவேண்டும்போல் இருந்தாலும் ஹாலிலேயே உட்கார்ந்துவிட்டார்.
“அப்புறம் துரைப்பாண்டி? மில்லு எல்லாம் எப்படிப் போகுது?”
“அதுக்கென்ன மாமா.. ஏதோ கையைக்கடிக்காம ஓடுது. இங்க சுத்தப்பட்டுல மாடர்ன் ரைஸ்மில் வேற எதுவும் கிடையாதுல்ல.”
சொன்னபடி பத்து நிமிஷத்தில் காபிக் கோப்பைகளோடு வந்தாள் எஸ்தர். மலரும் ஹாலுக்கு வந்து காபி எடுத்துக் கொண்டாள். வசுமதியும் பிரபுவும் காபியை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஆல்பம் பார்க்க உள்ளே போய்விட்டார்கள்.
வாத்தியாரின் உடல்நலன்களை விசாரித்த சரவணன், அப்படியே எழுந்து சுவரில் மாட்டி இருந்த போட்டோக்களைப் பார்த்தார். பார்வதியக்காளின் படத்துக்கு சந்தனமாலை இடப்பட்டிருந்தது. அடுத்து குடும்ப போட்டோ. வாத்தியாரும் பார்வதியும் நடுவில் நிற்க, அவர்களுக்கு இருபுறமும் ரமணியும் துரையும் நின்றிருந்தனர். அடுத்த போட்டோவில் ரமணியும் அவளது கணவனும் திருமணக்கோலத்தில் நின்றிருந்தனர்.
அதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சரவணனைப் பார்த்து தலையைக் குனிந்துகொண்டார் பிச்சை வாத்தியார்.
“யாரும் செய்யாத குத்தத்தை செய்துட்டேன்னு என்னை ஒதுக்கி வச்சிட்டு யாரோ எவரோன்னு போயிட்டா!”
கலங்கிய கண்களை வேட்டி நுனியால் துடைத்துக் கொண்டார்.
“அதெப்படி யாரோ எவரோன்னு வராமப் போவா?.. கண்டிப்பா ஒருநாள் குடும்பத்தோட வீட்டுக்கு வருவா. நீங்க எதையும் நெனைச்சிக் கவலைப்படாதீங்க.” மச்சானின் தோளைத்தொட்டு ஆறுதல் சொன்னார் சரவணன்.
“இப்ப நீ வந்த மாதிரி, அவளும் பிள்ளைகளோட வந்தாள்னா நல்லாருக்கும். நான் அதுக்குத்தான் எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். நான் கண்ண மூடறதுக்குள்ள அது நடக்கணும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!