Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 16

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 16

  அந்த வார இறுதியில் என்ன செய்வது? எங்கு செல்வது என்று தெரியாமல் மாலில் சுற்றி கொண்டிருந்தான் மித்ரன். அக்கா வீட்டுக்கு செல்லலாம் தான்… ஆனால், அங்கு போனதும் அக்கா ஆரம்பிப்பது இவன் கல்யாண பேச்சை தான். முன்பென்றால் தயங்கி இருப்பார்கள். கடந்த ஒன்றை வருடங்களாக மித்ரன் தனியாக இருப்பது தெரியும்.

ஆக, தம்பி கொஞ்சம் மனம் மாறி வருகிறான் என்ற நம்பிக்கை. முன்பு கல்யாணம் பேச்சை எடுத்தாலே மித்ரன் எரிந்து விழுவான். தற்போது கொஞ்சம் அமைதி காக்கிறான். அதற்கு அவன் மனமாற்றம் காரணம் என்று தமக்கைகள் நினைக்க.. அவனுக்கு மட்டுமே தெரியும் காரணம் பிரவீனா. அவள் மீது இவன் மனம் கொண்ட சலனம். ஆம், இன்னமும் பிரவீனா மீது மித்ரன் காட்டும் அக்கறைக்கு சலனம் என்றே பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறான். காதல் என்ற வகையில் கூட தன் நேசத்தை கொண்டு செல்ல அவன் விரும்பவில்லை. அவனுக்கே அவன் மேல் ஒரு பயம்.

பெரிதாக பெண்களோடு பழகுவதற்கு ஆர்வமும் இல்லை. சொந்தம் என்று உறவுகள் வீட்டுக்கு செல்ல மனமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோர்ந்து போன நிலையில் ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது எல்லாம் மித்ரன் அடிக்கடி கண்ணாடியை பார்த்துக் கொள்கிறான் தனக்கு வயதாகி விட்டதோ என்று… முப்பத்தி நான்கை தொட்டாகிவிட்டது. காதோரம் லேசாக ஒற்றை முடி வெள்ளையாக நீட்டிக் கொண்டிருக்க, இரவு முழுக்க தூக்கம் இல்லை.



Advertisement

  தனக்கு ஏற்பட்ட வெறுமைக்கு காரணம் வயது முப்போ என்று நினைத்தவனுக்கு, பிரவீனா மீதான பிடித்தத்தை யோசிக்க தெரிய வில்லை. கண்டமாதிரி மதியம் வரை சுற்றி கொண்டு இருந்தவன், அங்கிருந்த கிட்ஸ் செக்சன் கண்ணை கவர… சும்மா வேடிக்கை பார்க்க பார்வையை திருப்பினான்.

சிவப்பு கலரில் மினுமினுக்கும் குட்டி கார் அவன் கவனத்தை கவர்ந்தது. “சின்ன பசங்களுக்கு கூட எவ்வளவு அழகா கார் வந்துருச்சு… ரொம்ப அழகா இருக்கே. அதிரனுக்கு வாங்கி கொடுத்த ஹேப்பியா இருப்பான். அவனுக்கு பார்ப்போமா” என்று நினைவு ஓட…

அந்த நினைவே அவனுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அவன் உடன் பிறந்த சகோதரிகள் பிள்ளைகளே நான்கு பேர் இருக்க.. அவர்கள் யாரின் நினைவும் வராமல், ஆதிரன் நினைவு ஏன் வந்தது. அவனுக்கே தன்னை குறித்து ஆச்சர்யமாக இருந்தது. எதார்த்த நினைவுகளில் கூட பிரவீனா, ஆதிரன் நியாகபம் மட்டுமே…

Advertisement

மெல்ல உள்ளே நுழைந்து அந்த காரை தொட்டு பார்க்க,

Advertisement

“அந்த கார் பாரு அத்து. கலர்கலரா லைட் எரியுது. எங்க போனாலும் அந்த ரெட் கலர விட்டு மாற மாட்டியா நீ” என்ற பிரவீனா சத்தம் கேட்கவும், அவசரமாக திரும்பிப் பார்த்தான் மித்ரன்.

அவன் நினைத்தது போலவே அங்கிருந்தது பிரவீனாவும் ஆதிரனும் தான்.

“எனக்கு ரெட் கலர் கார் தான் வேணும்” பிடிவாதமாக சொன்னான் ஆதிரன்.

Advertisement

“ஸ்கூல் பேக்ல இருந்து, வாட்டர் பாட்டில் வரைக்கும் என்ன எடுத்தாலும் ரெட் கலர்லே எடுடா.. அப்படி என்னதான் அந்த ரெட் கலர்ல இருக்கோ…” என்று பிரவீனா நிமிர,

“எனக்கும் ரெட் கலர் தான் பிடிக்கும்” என்று வந்தான் மித்ரன்.

“மித்ரன் சார்.. நீங்க எங்க இங்க? உங்க அக்கா பிள்ளைகளுக்கு கிப்ட் வாங்க வந்தீங்களா…” என்று பிரவீனா கேட்டதும்.

என்ன சொல்ல என்று தெரியாமல் சிரித்தவன், ஆதிரனை தூக்கி கொண்டான்.

“அத்து குட்டி.. உங்களுக்கு கார் பிடிக்குமா?” என்று அவன் கேட்டதும்..

“ஆமா மித்து, எனக்கு கார் ரொம்ப பிடிக்கும். நான் ஸ்கூல் போகும் போதே கேட்டேன். அம்மா நான் யுகேஜி போனதும் வாங்கி தாரேன் சொன்னாங்க…” என்று சின்ன வாண்டு சொன்னதும், கேள்வியாக பார்த்தான் மித்ரன்.

“அவன் ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்கலாமே பிரவீனா. அத்துவ விட குட்டி பசங்களுக்கு கூட கார் இருக்கு” அவனுக்கு பிள்ளை ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கி கொடுக்காமல் விட்டாளே என்று ஆதங்கமாக இருந்தது.

பிரவீனா ஒன்றும் பேச வில்லை, அமைதியாக பார்த்தாள். மித்ரன் பிள்ளையை கீழ விடவே இல்லை.

“அத்து வா.. உனக்கு பேக் வாங்கணும்..” நேரடியாக மித்ரனிடம் சொல்லாமல், மகனை மட்டும் அழைக்கிறாள். தன்னை கிளம்ப சொல்கிறாள் என்று புரிந்தாலும் சட்டமாக அவள் கூடவே வந்தான் மித்ரன்.

பிரவீனாவுக்கு சங்கடமாக இருந்தது. ஏதோ ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டால் ஹாய், பாய் ரெண்டு வார்த்தை அவ்வளவுதான். அதை விட்டு அவன் கூடவே தாங்கள் சுற்றுவது சரியில்லை என்று தோன்றியது. மித்ரனின் பழக்கவழக்கம் அவளுக்கு நல்ல நட்பாக இருக்கவில்லை. அவரவர் எல்லையில் நிற்க நினைத்தாள்.

ஆனால், அவள் மட்டும் நினைத்தால் போதுமா? அவன் நினைக்க வேண்டாமா? மித்ரனுக்கு அவள் மனம் புரிந்தது. அவள் தன்னை ஒதுக்கி வைத்து, அவளும் ஒதுங்குகிறாள் என்று நன்றாக தெரிந்தது. அவனுக்கு இனி தள்ளி நிற்பது எல்லாம் ஆகாது.

அதுவும் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு யாரோ போல ஒதுங்கி செல்ல முடியுமா?.. அவளுடைய கோபம் அதுவும் தன் மீது தான கோபம் அவனுக்கு பிடித்திருந்தது. அவளை சமாதானம் செய்யவும் ஆசையாக இருந்தது. பிரவீனா ஒரு வெகுளி பெண் என்று அறிவான். பட்டென்று முகத்துல அடித்தது போல் பேசி அவளுக்கு ஒதுங்க தெரியாது. சங்கடப்பட்டு கொண்டு தான் இருப்பாள்.

அவள் சங்கடம் பார்த்தால் நான் அல்லவா ஒரு நாள் முழுக்க மாலில் தனியாக சுற்ற வேண்டும் என்று நினைத்தவன்,

“எந்த பேக் பிரவீனா” என்றவன், அவனும் ரெட் கலர் பேக்கையே எடுக்க,

 ஆதிரனுக்கு ஒரே கொண்டாட்டம்.. அவன் மித்ரனோடு ஹைபை அடித்துக் கொண்டான். அவர்களை பார்த்தவள்,

“ஜாடிக்கேத்த மூடி தான். இவனும் என்ன எடுத்தாலும் ரெட் கலர்ல தான் எடுப்பான்” என்று பிரவீனா சொன்னதும்,

அவளை மேலும் கீழும் அளந்தவன், எந்த ஜாடிக்கு ஏத்த மூடி நான் என்று குறும்பாக நினைத்தவன்.. அவன் நினைவே ஒரு கற்பனையை கொடுக்க, முகம் கொள்ளா சிரிப்பு அவனுக்கு…

அவன் சிரித்த முகத்தை குழப்பமாக பார்த்தவள், “நான் என்ன சொன்னேன்னு சிரிக்கிறீங்க சார். நீங்களும் ஆதிரன் மாதிரியே ரெட் கலர் சூஸ் பண்ணவும் சொன்னேன்”

“சும்மாதான் பிரவீனா. குழந்தைங்க பொதுவா பளிச்சுனு இருக்குற கலரை தானே எடுப்பாங்க. நீங்க ஆதிரன் பத்தி சொல்லவும், எனக்கு ஒரு சிரிப்பு அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல” என்று சமாளித்தான். பின்னே அவன் நினைத்ததை எல்லாம் சொல்ல முடியுமா?…

மகனைப் பற்றி தொடங்கியதும், “அவனுக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே என்ன எடுத்தாலும் ரெட் கலர் தான். பார்த்ததும் எங்கிருந்தாலும் அதைத்தான் தூக்குவான்…” என்றவள் அங்கிருக்கும் மற்ற பொருட்களை பார்வையிட்டாள்.

 பிரவீனா முன்னே சென்று அங்கிருக்கும் பொருட்களை பார்க்க, மித்ரன், ஆதிரனுக்கு என்னவோ குடிக்க வாங்கி கொடுத்து, அவனைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னோடு சென்றான். மித்திரனுக்கு என்னவோ இதுவரை இருந்த வெறுமை மாறத் தொடங்கியது.

பிரவீனா அவனோடு நெருங்கி நிற்கவோ, சேர்ந்து நடக்கவோ, கலகலவென்று பேசவோ கிடையாது தான். ஆனாலும், பிள்ளையை தூக்கிக் கொண்டு அவள் பின்னே செல்வது அவனுக்கு பிடித்திருந்தது. தன் மனம் இந்த அளவிற்கு அவளை நாடும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.

என்னதான் பொண்டாட்டி டார்ச்சர் என்று பல கடி ஜோக்குகள் விளம்பரமாகவும், வீடியோவாகவும் வெளிவந்தாலும் எதற்கு இந்த ஆண்கள் கல்யாணத்தை தேடி ஓடுகிறார்கள் என்பதன் அர்த்தம் ஓரளவுக்கு மித்ரனுக்கு புரிய ஆரம்பித்தது. ஒரே மாதிரியான வாழ்க்கை போர் அடிக்காதா என்றெல்லாம் யோசித்தவனுக்கு ஆதிரன், பிரவீனாவை பார்த்ததும் குடும்பத்தின் பிணைப்பு லேசாக புரிய ஆரம்பித்தது.

பிரவீனா நிறைய பொருட்களை வாங்கினாள். எல்லாம் தரமாக பிராண்டடாக இருந்தது. மித்ரன் கூட ஏன் இவள் இவ்வளவு வாங்குகிறாள் என்று யோசித்தான். ஆனால், அவன் கேட்காமலே…

“ஆரம்பத்துல ஆத்துவ ஸ்கூல சேர்க்கும் போது என்கிட்ட பெருசா பணம் இல்லை. என்னோட சம்பளம் முழுக்க அவனோட படிப்பு செலவுக்கு, எங்களோட மத்த செலவுக்குமே சரியா வரும். அவனுக்கு வாங்கிக் கொடுப்பதெல்லாம் ஓரளவுக்கு நல்லதா தான் வாங்கி கொடுப்பேனே தவிர, அவன் ஆசைப்பட்டு கேட்ட காஸ்ட்லியான பொருட்களை என்னால் வாங்கி கொடுக்க முடியாது…”

 அது  மித்ரனுக்கும் புரிந்தது. இவன் அக்கா, மாமா இருவருமே டாக்டர்ஸ்… சொந்தமாக ஹாஸ்பிடல் வைத்திருக்கும் அவர்களுக்கு அந்தப் பள்ளியில் பீஸ் கட்டுவது எளிது. ஆனால், பிரவீனாவுக்கு கைக்கும், வாய்க்கும் பத்தாமல் தான் இருக்கும் என்று முன்பே மித்திரன் அறிந்ததுதான்.

 “என்கிட்ட பெருசா சொத்துன்னு நான் என் பையனுக்கு எதுவும் சேர்த்து வைக்கல. ஆனால், நல்ல கல்வியை கொடுத்துடனும்.. அவனுக்கு வேண்டியதை நான் கொடுக்காமல், அவனே தேடுகிற அளவுக்கு ஒரு நல்ல படிப்பு கொடுத்திரணும். வாழ்க்கைன்னா என்னன்னு நான் என் புருசனை இழந்துட்டு தனியா நிக்கிற வரைக்குமே யோசித்ததில்லை சார். என் புருசன் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நான் பிள்ளையை பார்த்துக்கிட்டா போதும்னு ஒரு வட்டத்தில் தான் வாழ்ந்தேன்…” என்றவள், ஒரு பெருமூச்சு விட்டு,

“அவரை இழந்துட்டு நான் தனியா நிக்கும் போது கூட துக்கம் தான் அதிகமா இருந்துச்சு. ஆனா, என் பிள்ளையோட தேவைகளை சுதந்திரமா நிறைவேற்ற முடியாமல் நிக்கும் போது தான் சுய சம்பாத்தியத்தின் அருமை புரிஞ்சது…”

“அப்போ அத்துக்கு ஒன்றை வயசு இருக்கும்.. துருதுருன்னு நிக்காம ஓடிட்டே இருப்பான். ஏதாவது விளையாட வாங்கி கொடுத்தா, அதை வைத்து விளையாட தெரியாது சார்க்கு.. அதை அப்பவே பிரிச்சு பார்த்து அலசி ஆராய்ந்து விடுவான். அப்படித்தான் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பையன் இந்த மாதிரி ஒரு சைக்கிள் வச்சிருந்தான். சாயங்காலம் விளையாட விடும்போது இவனும் போய் சேர்ந்து விளையாடுவான். எவ்வளவு நேரம் ஃப்ரீயாவே கொடுப்பாங்க. இவன் ரொம்ப சின்ன பையன் சொன்னாலும் புரியாது. இவன் அந்த காரை விடவே மாட்டான். அவங்க காரை கேட்டு நிக்க, இவன் விடவே இல்லை. இவனுக்கு முதுகுல ஒன்னு வச்சு பிள்ளைய தூக்குறேன், நான் தூக்கிட்டேன்ற கோவத்துல தலையை திருப்பி அவனை புடிச்சி இருந்தா கைய கடிச்சிட்டான்”

 “என்ன” என்று அதிர்ந்தான் மித்ரன். “ஆதிரன் கடிப்பானா” அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்போ சின்ன பையன் தானே விவரம் தெரியல. எனக்கு ரத்தம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ரெண்டு நாள் ஊசி போட்டேன். அப்புறம் எங்க வீட்டுல சொன்னேன் இந்த மாதிரி தம்பிக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கணும்னு… விலை பார்த்தா எல்லாமே ஆறாயிரம். அம்மா அவ்வளவு பணம் போட்டு எல்லாம் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு அதை வாங்கி கொடுக்கிற அளவுக்கு கெப்பாசிட்டி என்கிட்ட இல்ல…”

    “தினமும் பக்கத்து வீட்ல அந்த காரை பார்த்து ஏங்குவான். எனக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு மனசுல ஒரு எண்ணம் அவங்க அப்பா உயிரோடு இருந்திருந்தா, அவனை ஏங்க விட்டுருக்க மாட்டார் தானே.. அப்போ நான் வேலைக்கு போகல, எங்க வீட்டுக்கு பின்னாடி சோடா குடோன் இருக்கும். அங்க லூஸ்ல வாங்கி போறவங்க அதோட மூடியே கீழ போட்டு போயிருவாங்க. நான் ஆதிரனை விளையாட விட்டுட்டே அதை சேர்த்து வச்சேன். கரெக்டா மூணு மாசம் சேர்த்து வச்சு, ஒரு மூட்டை நிறைய வந்துச்சு.. அத கொண்டு போய் கொடுத்து அவனுக்கு, அவன் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கி கொடுத்தேன்…” என்றதும், மித்ரன் பார்வை பிரவீனாவை விட்டு நகரவே இல்லை.

பெற்றவள் தான் எவ்வளவு உயர்ந்தவள். தான் பெற்றெடுத்த பிள்ளைக்காக எதையும் செய்ய துணியுமோ தாய் மனம். பிரவீனாவை நினைக்கையில் அவன் நெஞ்சு துடித்தது. எப்படி எல்லாமோ அவர்கள் இருவரையும் தாங்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது.

“அப்புறம்” என்றான் மித்ரன்.

“அப்புறம் என்ன வீட்டுக்கு தெரிஞ்சு எனக்கு ஒரே திட்டு. அவங்களுக்கு ரொம்ப அசிங்கமா போச்சாம். உண்மைதான், ஆனா அந்த நேரம் எனக்கு வேற யோசனை இல்ல. அப்போதான் நான் இவங்க அப்பாவை தூக்கி கொடுத்துட்டு இருக்கேன். அவ்வளவு விவரம் தெரியல, ஆதிரனும் சின்ன பையன். அதனால, வேலைக்கு போகணும் சம்பாதிக்கணுன்றளவுக்கு யோசனை இல்லை. அப்புறம் என் பையனுக்காக தான் இந்த ஓட்டம். என்னோட இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இவன் மட்டும் தான்றனால, என் பிள்ளை ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா? வாங்கி கொடுக்காம இருக்க மனசு வரமாட்டேங்குது…”

“காலத்துக்கும் காப்பாற்றுவார்ன்னு நினைத்த என் புருஷன் என் கூட இல்லாம போனப்ப, ஊருக்காக பேருக்கு என்ன படிக்க வைச்ச அந்த டிகிரி தான் எங்க ரெண்டு பேரையும் இன்ன வரைக்கும் காப்பாத்துது. அப்ப நெனச்சேன் எங்கள மாதிரி ஆளுகளுக்கு படிப்பு ஒன்று தான் நிரந்தரம்னு.. கொஞ்சம் வயசிலேயே என் புருசன நான் இழந்திட்டதால, என் வாழ்க்கையோட அத்தியாயம் எவ்வளவு நாள்னு எனக்கு தெரியாது. ஒருவேளை நானும் இல்லாம போயிட்டா என் பையனோட நிலைமை?.. அதனாலதான் அவனுக்கு ஒரு நல்ல படிப்பு கொடுத்திரணும். எனக்குன்னு இந்த உலகத்துல என்ன இருக்கு? என் பையன தவிர… நான், என் உழைப்பு எனக்குறிய எல்லாம் என் பையனுக்கு அவ்வளவுதான்…”

அதுவரை கூட மித்ரன் பேசவில்லை. பிரவீனா ஒரு மாதிரி தனக்கு நெருங்கிய நட்பாக, உறவாக நினைப்பவர்களிடம் மனதில் இருப்பதை மறைக்காமல் கொட்டி விடுவாள். என்னதான் மித்ரன் சரி இல்லை தள்ளி நிற்போம் என்று நினைத்தாலும் அவன் மீது உள்ள நல்லெண்ணம் அவளிடம் சகஜபாவத்தை கொண்டு வந்தது. அதை அறிந்தே மித்ரன் குறுக்கே பேசவே இல்லை. அவளை ஃப்ரீயாக பேச விட்டான்.

உண்மையில் அவளுக்கு மனம் திறந்து பேச உறவாக யாரும் இல்லையோ!.. தன்னிடமாவது புலம்பி விட்டுப் போகட்டும்.. குறுக்கே ஏதாவது கேட்டால் புலம்பி கொண்டிருக்கும் மனம் விழித்துக் கொள்ளும்.. எல்லாவற்றையும் திரும்ப மனதில் போட்டு பூட்டிக் கொள்வாள். அதற்காக தான் மித்திரன் அவள் பேசும் பொழுது அமைதியாக இருப்பானே தவிர, ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வராது.

“முன்னாடி வருமானம் எங்க ரெண்டு பேர் தேவைக்கும் சரியா போகும். இப்போ உங்க புண்ணியத்துல கொஞ்சம் சேவிங் கிடைக்குது. இந்த காரை ரெண்டு வருசமா கேட்டுட்டே இருந்தான். எனக்கு வாங்கி கொடுக்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக ஒரு சேவிங் போடுவேன். ஆனா ஏதாவது ஒரு அவசர செலவு வந்து அந்த சேவிங்ல கை வைத்து விடுவேன். இப்ப கொஞ்சம் பணம் வரதனால இவன் ஆசைப்பட்ட விஷயங்கள நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். அது நிஜமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மித்திரன் சார்…”என்றவள்

 “உங்களுக்கு நான் சொல்றது புரியாது. ஆனா, அப்பா இல்லாம தனியா வளக்குறோம் அப்படின்ற நினைப்பே நிறைய விஷயத்துல அவனை கட்டுப்படுத்தி வைப்பேன். அவன் வயசுக்கு மீறிய மெச்சூரிட்டிய அவன் கிட்ட நான் திணிக்கிறேன். மத்தவங்க யாரும் அவனை ஒரு குறை சொல்லிட கூடாதுன்ற நினைப்பு இருக்கு.. அதே நேரத்துல அவனை நம்ம ரொம்ப கண்ட்ரோல் பண்றோமோ!.. அப்பா இல்லைன்ற ஏக்கம் பிள்ளைக்கு வந்துருமோன்னு பயமாவும் இருக்கும். என்னதான் அம்மா பிள்ளையை ஊட்டி ஊட்டி வளர்த்தாலும், தட்டிக் கொடுத்து வளர்க்கற அப்பா இல்லைன்ற ஏக்கம் ஒரு ஸ்டேஜுக்கு மேல பிள்ளைக்கு வந்துடும். அதை தடுக்க முடியாது. ஆனா, முடிஞ்ச அளவுக்கு நமக்கு அப்பா இல்லை என்ற ஏக்கம் தெரியாத அளவுக்கு அவனை வளர்த்துறனும். அந்த நினைப்பு தான் எனக்கு கடைசி வரைக்கும் இருக்கும்…” என்று பிரவீனா சொன்னதும்,

“அப்புறம் உன் வாழ்க்கை” என்ற கேள்வி மித்ரன் மனதில் மேல் எழுந்தது.

அதற்கான விடை மித்திரனுக்கு நன்றாக தெரியும். பொதுவாகவே நம் நாட்டு பெண்கள் குழந்தை என்று வந்தபின் அவர்கள் வாழ்க்கை, வட்டம், சம்பாத்தியம், பொறுப்பு, கடமை எல்லாம் அந்தப் பிள்ளைகள் பின்னே சென்றுவிடும். அப்படி இருக்க பிரவீனா மட்டும் என்ன விதிவிலக்கா?.. நம்மில் இருக்கும் பல பெண்கள் போல பிரவீனாவும் ஒருத்தி, அவ்வளவுதான்.

அதுவரை கூட மித்ரன் தன்னோடு சேர்ந்து நின்றதையும் பிள்ளை இன்னும் அவன் பிடியில் இருப்பதையும் பிரவீனா உணரவில்லை. அத்தோடு மித்திரனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற அவள் உணர்வும் அந்த இடத்தில் ஞாபகம் வரவில்லை. அடுத்தடுத்து தேவையானவற்றை பிரவீனா வாங்க,

“இதெல்லாம் எதுக்கு” என்றால் மித்ரன்.

“ஆதிரன் ஸ்கூல்ல அவுட்டிங் கூட்டிட்டு போறாங்க.. இதுவரைக்கும் குட்டிப் பிள்ளைகளை கூட்டிட்டு போனதில்லை. ஆனா இப்போ இவனுக்கு அஞ்சு வயசு ஆயிடுச்சு இல்ல. அதான் இந்த தடவை அவுட்டிங்க்கு இவனையும் கூட்டிட்டு போறாங்க. அதுக்கு தேவையான திங்ஸ் தான் வாங்குறேன்…” என்றதும்,

“அப்படியா அத்து. சார் பிக்னிக் போறீங்களா?” என்று மித்ரன் கேட்க. கை விரித்து பாவனையாக கதை சொன்னான் சின்னவன்,

அவனோடு பொழுது மித்திரனுக்கு சுவாரசியமாக போக, பிரவீனா தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மகனை அழைக்க வந்து விட்டாள்.

“வாங்க.. ஏதாவது சாப்பிட்டு போலாம் பிரவீனா. குட்டி பையன் எவ்வளவு நேரம் பசி தாங்குவான்” என்று மித்ரன் நேரத்தை கடத்த பார்க்க,

“இருக்கட்டும் சார். பக்கத்துல தான் எங்க வீடு.. அதோட நான் எல்லாம் சமைச்சு வச்சுட்டு தான் வந்தேன். சாப்பாடு வேஸ்டா போயிடும்…”

“அப்படி என்ன சமைச்சு வச்சுட்டு வந்தீங்க பிரவீனா மேடம்…” அவள் தன்னோடு பிள்ளையை கூட்டிக் கொண்டு சாப்பிட வராத கோபம் அவன் குரலில்,

அவனை கண்டுகொள்ளாமல் “ரசம் சாதம்” என்றவள் பிள்ளையின் கைபிடித்து நடந்து விட்டாள்.

 “ரசம் சாதமா” பல்லை கடித்தான் மித்ரன். என்னோடு ஒரு நாள் உணவு உண்டாள்  என்ன கெட்டுப் போய்விடும். ரொம்ப ஓவரா தான் போறாங்க…

அடுத்த நாளே மான்சியை பிடித்து எங்கு பிக்னிக் போகிறார்கள், எத்தனை மணிக்கு திரும்ப வருவார்கள், அங்கு என்னென்ன நடக்கும் என்று விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டான். பிரவீனாவிடம் கேட்க முடியாது. அவள் சொல்லவும் மாட்டாள். அவளின் மனதில் கிடந்த காயங்களை கொட்டும் இடம் தான் மித்ரன். அதை தாண்டி சில சந்தோசமான தருணங்களையோ, சகஜமான பேச்சுவார்த்தையையோ மித்திரனோடு வளர்க்க மாட்டேன் என்கிறாளே!…

ஒரு வகையில் பிரவீனாகவும் சரியாகத்தான் இருக்கிறாள். அவள் கஷ்டங்களை சொல்லும் பொழுது கேட்கிற யாருக்கும் கூட சேர்ந்து கவலைப்பட தோன்றும்.. இவன் என்றால் சில நேரம் கவலைப்படுவான். பலநேரம் அவள் அருகாமையை தான் ரசிப்பான். அவளை தன்னோடு பிடித்து வைத்துக் கொள்ள அவள் வார்த்தையை தூண்டி விடுவான். அதான் அவள் உஷாராகிறாள் போல…

 இவள் எதுவும் சொல்லாவிட்டால் போகுது.. அதற்காக ஆதிரனை விட முடியுமா?.. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவன் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி தாளாளரிடமும் தனியாக பேசிக் கொண்டான்.

அன்று விடுமுறை தினமாக இருக்க மதியத்திற்கு மேல் பிரவீனா உறங்கி விட்டாள். மாலையில் என்னவோ சத்தம். ஆர்த்தி தான் ஏதோ கத்திக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று வெளியே வந்து பார்க்க,

“என்னம்மா?..”

“டைனிங் டேபிள்ல வச்சிருந்த அவங்க அம்மா கொடுத்த பணம் ஆயிரம் ரூபாயை காணாமல் போச்சாம்…” என்று தாய் சொன்னதும்,

ஓ… என்றதோடு பிள்ளையை தேடியவள், ஆதிரன் வரவும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். மகனின் பின்பக்க பையில் என்னவோ திட்டாக இருக்க, எடுத்துப் பார்த்தால் ஆதிரன் பையில் ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!