Skip to content
Post Views: 3,759
மார்கழி – 16
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கொள்கிறேன் என்று கெஞ்சிய விழிகளை பிரயத்தனப்பட்டு திறந்தவள் பக்கவாட்டில் கையை அலையவிட்டு அலைபேசியைத் தேடினாள். அது கையில் அகப்படவும் எடுத்து நேரம் பார்த்தவள் சடாரென எழுந்து அமர்ந்தாள். விடிந்து காலை உணவு நேரம் முடியும் தருவாயில் இருந்தது.
இனிமேல் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று ஒருவேகத்தில் அழைத்து சொல்லிவிட்ட பின்தான் அப்படி செய்திருக்க கூடாது என்ற வருத்தம். அழைப்பில் அவன்தான் என்று உறுதியாக தெரியாத போது யூகத்தில் கண்டித்துவிட்டது எத்தனை பெரிய அபத்தம். ஒருவேளை அழைப்பில் அவன் இல்லாதிருந்தால்? வேறு யாரேனும் அழைத்திருந்தால்? இவள் கட்டளை போல் சொன்னதை மறுத்து பேசி இருப்பார்களே. அப்படி எவ்வித எதிர்வினையும் அந்த எண்ணிலிருந்து வராதிருக்க அது அவன் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டவளுக்கு அடுத்த கவலை. பேச விருப்பமின்றி அமைதியாக இருந்தவனுக்கு வலிய சென்று அழைப்பு விடுத்திருக்ககூடாதோ? சும்மா இருப்பவனை சீண்டிவிட்டது போல் ஆகிவிடுமோ? வீம்புக்கென்று வந்து நிற்பானோ? சேர்ந்து இருந்து தண்டனை கொடு என்று வாழ அழைப்பானோ? இரவு முழுதும் யோசனைகள். விளைவு தூக்கம் கெட்டுப்போனது.
‘தினம் லேட்டா தூங்க ஏதாவது காரணம் தேடிக்குற இயலு. உருப்படியா எதுவும் பண்ணாம எதையாவது யோசிச்சி யோசிச்சி போகாத ஊருக்கு வழி தேடிட்டு இருக்க.’ தன்னைத்தானே கடிந்துகொண்டவள் எழுந்து சென்று காலை கடன்களை முடித்துவிட்டு உணவுக்கூடத்திற்கு விரைந்தாள். அனேகம் வேலைக்குச் செல்வோரே அங்கு தங்கியிருக்க, அந்நேரமே விடுதி வெறிச்சென்று இருந்தது. உணவு இருக்குமா என்ற சந்தேகத்துடன் சென்றவளுக்கு கொஞ்சம் கிச்சடி மட்டும் எஞ்சி இருக்க, பல்லை கடித்துக்கொண்டு வயிற்று பசிக்கு உண்டாள்.
Advertisement
“ஒருவாரமா ரூம்லையே இருக்குற மாதிரி இருக்கு. இன்னும் வேலை கிடைக்கலையாமா?” உணவருந்திவிட்டு கிளம்பிய விடுதியின் கண்காளிப்பாளர் அவளை கவனித்து வந்து கேட்க, “ஹான், ஆமா மேம்.” தடுமாறி சமாளித்தாள் இயலணி.
“சீக்கிரம் கிடைச்சுடும். டென்சன் ஆகாம தேடுங்க.” என்றுவிட்டு செல்ல, பெருமூச்சு இவளிடம்.
ஊரிலிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டை விட்டு வந்தவளுக்கு எங்கு செல்வது என்று புரியாமல் அலைபேசியை நோண்டியபடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். அந்நேரம் பார்த்து வந்து விழுந்தது அந்த செய்தி. பொதுவான தனியார் பள்ளி ஆசிரியர்கள் குழுவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அறிவியல் விழாவிற்கான அழைப்பிதழ் வந்திருந்தது. அனுப்பியவர் அவளுக்கு பரிட்சையமானவர். இதர பள்ளி விழாக்களுக்கும் பயிற்சி வகுப்புகளும் சென்ற போது பார்த்து பேசி பழக்கம். சென்னையில் இருக்கும் பள்ளியில் வேலைப் பார்ப்பவர். தம்பி அவ்வூரில் இருக்கிறான் என்றுகூட அந்நேரம் தோன்றவில்லை. யோசிக்காமல் உடனே அவருக்கு அழைத்துவிட்டாள். வேலை விஷயமாக சென்னை வருவதாகவும் சில மாதங்கள் தங்க பாதுகாப்பான இடம் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள, அவர் விசாரித்து சொன்னது தான் இந்த விடுதி. கூகுளின் உதவியுடன் விசாரித்து வந்து சேர்ந்துவிட்டாள்.
Advertisement
ஆனால் விடுதியில் சேரும் போது சொன்னது போல் வேலை பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை. இப்போது யோசனை வந்தது. வேலையில் சேர்ந்தால் கவனம் வேறிடத்தில் குவியும். உள்ளிருந்து அழுத்தும் வலியை உணந்து அனுபவிக்க நேரம் போதாது. அவன் குறித்த எண்ணங்களும் மட்டுப்படும். தெளிவு பிறக்கும். இங்கு யாரையும் தெரியாதே. எங்கு சென்று வேலை தேடுவது என்று யோசித்தபடியே அலைபேசியில் நோண்டினாள்.
Advertisement
முன்னர் வேலைப் பார்த்த பள்ளியில் இவள் சாட்சி சொல்லப்போவது தெரிந்து பணி விலக சொல்லிவிட்டனர். பாலியல் வழக்கு என்பதால் அனைவரின் கவனமும் இந்த வழக்கின் மீதிருக்க, முக்கிய சாட்சியான இயலணியின் பின்புலம் துவங்கி அவள் சார்ந்த அனைத்தும் அலசப்படும். அதில் தங்களின் பள்ளி பெயர் அடிபட்டு அதனால் எதிர்மறை தாக்கங்களும் பிரச்சனைகளும் வந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்று சொல்லி அப்போதே அவளை விலக்கி விட்டனர். பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த பின் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வந்து சேர்ந்துகொள்ளலாம் என்றிருந்தனர். இப்போது இருக்கும் சூழலில் அது சாத்தியமா என்று தெரியவில்லை.
அனைத்தும் இயல்புக்கு திரும்பிய பின் பெற்றவர்கள் அவளை அந்த ஊரிலே இருக்க விடுவது சந்தேகமே. அதிலும் அந்த ராஜேஷை வேறு சமாளிக்க வேண்டும். பேசாமல் இங்கேயே இருந்துவிடலாம், இந்த ஊரின் பரபரப்பாவது தன்னை இழுத்துக்கொள்ளட்டும் என்று முனைந்து பணியிடங்கள் தேடியவள் அந்த ஆசிரியையிடமும் காலிப்பணியிடம் இருந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன் சான்றிதழ்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி அலைபேசியிலேயே சுயவிவரங்கள் தயார் செய்து வைத்துக்கொண்டாள். இதற்கே மாலை ஆகிட, வேலைகள் முடிந்தபின் பெற்றவர்கள் நியாபகம். என்ன செய்கிறார்களோ. தான் சாட்சி சொல்லப்போய் இப்போது அவர்களும் முகம் தெரியா யாரோ ஒருவர் வீட்டினில் பாதுகாப்புக்கு அடைக்கலம் புகும் நிலை வந்துவிட்டதே. உடன்பிறந்தது போல் வந்து ஒட்டிக்கொண்டது வலியும் வேதனையும். அழைத்துப் பேசலாமா, எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிந்துகொண்டுவிடலாம் என்று அழைத்துவிட்டாள்.
“எங்கடா பாப்பா இருக்க ஒரு வாரமா? பத்திரமா இருக்கீல்ல? உன் நம்பர்லேந்து கூப்பிட்டிருக்க?” பதட்டமாக வரவேற்றது தந்தைக் குரல்.
Advertisement
“பத்திரமா நல்லா இருக்கேன் அப்பா. நீங்க?”
“மாப்பிள்ளை வந்து வேந்தன் சாரோட சென்னைக்கு அனுப்பி வச்சாருடா. உன்னை பாதுகாப்பா வேற இடத்துல தங்க வச்சிருக்கிறதா சொன்னாங்க. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” மகளின் நலன் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னர்,
“எல்லாம் பேக் பண்ணி ரெடியாகிட்டோம் பாப்பா. இனிமே பயப்பட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நைட் பஸ்ல டிக்கெட் போட்டிருக்காங்க. தம்பி அப்படியே காலேஜ் போயிடுறேனு சொல்லிட்டான். உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தான் கொடுக்குறேன் பேசு.” அலைபேசி அவள் தம்பியிடம் சென்றது. மீண்டும் ஒரு சுற்று நலவிசாரிப்புகள்.
“உனக்கு கல்யாணம் ஆனதை என்கிட்டகூட சொல்லல நீ. இன்னும் அத்தானை பாக்கல நான்.” இருக்கும் நிலவரம் அறியாது குறைபட்டுக் கொண்டான் அவள் உடன்பிறப்பு.
‘அதுக்கென்ன இன்னும் ரெண்டு நாள்ல மாப்பிள்ளையை வீட்டுக்கு கூப்பிட்டு இயலை அனுப்பலாம்னு இருக்கோம். அப்போ பாத்துக்கோ.’ பின்னே மெலிதாக ஒலித்த வேம்புவின் பதிலில் திடுக்கிட்டாள் இயலணி.
அவர்களை வழியனுப்ப பேருந்து நிலையம் சென்று வரலாம், பார்த்த மாதிரியும் இருக்கும் என்ற துரித யோசனையை உடனே அழித்தவள் எங்கிருக்கிறேன் என்று தெரிந்தால் பேசி பேசியே அவனோடு அனுப்பிவிடுவார்கள் என்ற ஐயத்தில் பிறகு பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டாள்.
‘சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்கணும். அப்போதான் இங்கேயே இருக்க முடியும்.’ முடிவெடுத்தவளாய் மீண்டும் ஒரு சுற்று கூகிளில் காலிப்பணியிடங்களை தேடி வலம் வந்தாள். கவனமெல்லாம் வேலை தேடுவதில் பதிய வலிக்க வலிக்க நினைவுக்கு வந்த நிகழ்வுகள் பின் சென்றது. உறக்கம் கூட தொல்லை தராமல் உடனே தழுவிக்கொண்டது.
ஆனால் பல மையல்கள் அப்பால் அவன் உறக்கம் தொலைத்திருந்தான். இயலணி சென்னையில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் இரவே பேருந்து ஏறி குடந்தைக்கு வந்திறங்கியவன் பத்து நாள் கழித்து அன்றுதான் பணியில் சேர்ந்திருக்க, வீட்டு நினைவு அப்போது தான் பெரிதாய் தெரிந்தது. அன்றைய இரவுக்கு பின் வீட்டிலிருந்து வந்த எந்த அழைப்புகளையும் ஏற்கவில்லை. கவலை கொள்வார்கள் என்று நலமாய் இருப்பதாய் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி வைத்தான். ஆனாலும் விடவில்லை திரும்பத் திரும்ப அழைப்பு வந்துகொண்டே இருந்தது. இனியும் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது என்பது உரைக்க, உண்மையை தெரியப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதை எண்ணி கலக்கமாய் இருந்தான்.
முன்பு இருந்த கோவத்திற்கு இயலணியைப் பற்றி வீட்டினர் என்ன நினைக்கின்றனர் என்ற கவலையெல்லாம் இல்லை இப்போதோ அவளை தவறாக புரிந்துகொண்டு விடக்கூடாதே என்ற தவிப்பு. அவளை எதுவும் பேசிவிடக்கூடாது என்ற கலக்கம். வீட்டினில் உண்மையை எப்படி பக்குவமாய் சொல்வது என்று யோசிக்கும் வேளையில் இயலணியின் தந்தை வேறு அழைத்து அவன் வீட்டினரிடம் பேச வேண்டும் என்று கேட்டிருந்தார். இயலணிக்கோ அவன் அருகாமையே சுகிக்கவில்லை. எப்படி இந்த சூழ்நிலையை கையாள்வது என்று புரியாது தடுமாறிப்போனான்.
‘ஐயோ.’ என்று வாய் திறந்து கத்த வேண்டும் போல் இருந்தது. முடியவில்லை. விழுங்கிக்கொண்டான். தொண்டை அடைத்தது. தலை கோதி முகத்தை அழுந்த தேய்த்து உறங்க முயன்றான். யோசனைகளின் ஆக்கிரமிப்பில் தூக்கம் வருவேனா என்றது.
‘இயல் அப்பா எப்படி நிதானமா பேசுறாரு. அவரை பாத்து கத்துக்கோ. சமாளிச்சிடுவ.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் எப்படியோ மறுநாளை வரை நெட்டித்தள்ளி வாரக்கடைசி வரவும் இரவே ஊருக்கு பயணப்பட்டான்.
“என்ன நீ மட்டும் வந்திருக்க? இயல் எங்க? ஏன் போன் எடுக்கல பத்து நாளா? அப்படி என்ன தலை போற வேலை? அந்த பொண்ணை தனியாவா விட்டுட்டு வந்த? ஏன் வாயை பாத்துட்டு இருக்க, பதில் சொல்லுடா.” உலுக்கி எடுத்துவிட்டார் மேகலா.
“அம்மா…” கலக்கமாய் அன்னையை பார்த்துவிட்டு தந்தையை பார்த்தான். பதில் சொல் என்று தான் பார்த்து வைத்தார் அவரும்.
பையை பொத்தென்று போட்டுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் இயலணி தலைமறைவாக இருந்ததற்கான காரணம் மற்றும் அவள் பெற்றோர் பற்றி எல்லாம் சொல்லி முடிக்க, ஊசி விழுந்தாலும் பெருஞ்சத்தம் கேட்குமளவுக்கு அமைதி.
“என்னவும் இருக்கட்டும் யாருமில்லைனு நினைச்சி நாமளே எல்லா கல்யாண ஏற்பாடு பண்ணா அப்பா அம்மா இல்லாம எப்படி கழுத்தை நீட்டுனா அவ? குத்துக்கல்லாட்டம் ரெண்டு பேரும் இருந்தும் இல்லைனு சொல்ல எப்படி மனசு வந்துச்சு?” எதிர்பார்த்தது போல் மேகலாவிடமிருந்து வந்தது அதிருப்தி.
“அப்பா…” மாறன் எதுவும் சொல்லாமல் இருக்க, தயக்கமாய் பார்த்தான் அறிவழகன்.
அவசரப்பட்டு மகன் வாழ்க்கையை சிக்கலாக்கிவிட்டோமோ என்ற கேள்வி தந்தையினுள் எழ, “அந்த பொண்ணு எங்க இப்போ?” என்று நெற்றி சுருக்கி கேட்டார்.
தயங்கியவன் சென்னையில் இருப்பதாய் சொல்லி, “அவங்க அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வந்து பேசணும்னு சொல்லிட்டு இருக்காங்க.”
“ஓ… அதான் சாட்சி எல்லாம் சொல்லியாச்சு பிரச்சனை முடிஞ்சுடுச்சுனு சொல்றியே. இன்னும் எதுக்கு இப்போ சென்னையில போய் உக்காந்திருக்கா அவ?” ஏற்கனவே உறுத்திக்கொண்டிருந்த விஷயம் இப்போது தெளிவாக புரிவது போலிருக்க, மேகலா சிறிது பதட்டத்துடன் தான் கேட்டார்.
தொண்டையை செருமிக்கொண்டவன் பதில் சொல்ல சிரமப்பட, பெற்றவர்கள் பார்வை கூர்மையாகியது.
“என்னடா?”
உண்மையை சொல்வதா இல்லை பாதுகாப்பு என்று சொல்லி சமாளித்துவிடுவதா என்ற யோசனையில் அவள் பெற்றவர்கள் வந்து பேசுகையில் எப்படியும் தெரியத்தானே போகிறது நாமே ஒருவாறு சொல்லிவிடலாம் என்ற முடிவெடுத்தவனாய், “எங்களுக்குள்ள சின்ன மனஸ்தாபம். அதான் அங்க இருக்கா.” என்று மட்டும் சொன்னான். எங்கே தன்னை பிடிக்கவில்லை என்று அவள் சொல்லியதாக சொன்னால் மேகலா அதற்கு வேறு தனியாக ஆடித்தீர்த்துவிடுவாரோ, இயலணியை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற பயத்தில் அதனையும் மறைத்தான்.
“கல்யாணம்னா அவ்வளவு ஈஸியா போச்சா அவளுக்கு. உண்மையை மறைச்சி உனக்கு விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் கல்யாணம் கட்டிக்கிட்டது மட்டுமில்லாம கோச்சிக்கிட்டு போய் வேற ஊருல இருப்பாளாமா. அவ நம்பர் கொடு. நான் பேசுறேன்.” மேகலாவிற்கு தாங்கவே இல்லை. மகனின் வாழ்க்கையில் புயலாய் நுழைந்து சூறாவளியாய் சுழன்று அடித்து சென்றுவிட்டாளே. என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள், எப்படி இவளோடு மகன் வாழப்போகிறான் என்று குறையும் ஆற்றாமையுமாய் கருவிக்கொண்டார்.
“என் மேல தான் தப்புமா. அவளை சொல்லாத.” மகனோ மனைவிக்கு பரிந்துகொண்டு வந்தான்.
“உன்மேலையே தப்பு இருக்கட்டுமே. அதுக்குன்னு இப்படி விட்டுட்டு வேற எங்கேயோ போய் இருந்தா சரியா போச்சா? அதுவும் அவங்க அப்பா அம்மா கூட வீட்ல இல்லாம எங்கேயோ போய் உக்காந்திருக்கா… என்ன அமைதியா இருக்கீங்க? புடிப்புடின்னு இருந்து நீங்கதான கட்டி வச்சீங்க. புடிச்சிருக்குனு சொல்லி கட்டிகிட்டு விட்டுட்டு போயிட்டா பாருங்க.” கணவரிடமும் பாய்ந்தார் மேகலா.
“அம்மா…”
“மருமக பொண்ணு இங்க வர வேண்டாம். நாம போய் பேசலாம் அறிவு. மருமக சமாதானம் ஆகட்டும் அப்புறம் அவங்க வீட்ல பேசலாம்.” என்றார் மாறன் யோசனையூடே. இந்த உறவு நிலைக்குமா என்ற சந்தேகமே வந்துவிட்டது மாறனுக்கு.
“அதெல்லாம் வேண்டாம் அப்பா. அவளை அவ போக்குல விட்டுறலாம். நாந்தான் கோவத்துல ரொம்ப படுத்திட்டேன்.” குரல் உள்ளே சென்றது. செய்த தவறை பகிரங்கமாய் ஒப்புக்கொள்ளக்கூட முடியாத கீழ்தரமான தன் செயலை எண்ணி உடல் தன்னால் குறுகியது.
மகனின் உடல்மொழியை கூர்ந்து கவனித்த தந்தைக்கு மனது பதறியது. என்ன நடந்திருக்கும்? மகன் இத்தனை மருகுகிறானே. அந்த பெண்ணுடன் ஒத்துவரவில்லையோ? தவறு செய்துவிட்டோமோ? உமாவை தான் பிடித்திருக்கிறது என்று அத்தனை இறைஞ்சினானே… துடித்தது அவர் நெஞ்சம். மேகலாவுக்கு மகனின் தலை குனிந்த நிலை புரியவில்லை. மருமகள் விட்டுச் சென்றுவிட்டாள் என்றதிலேயே நின்றுவிட்டார்.
“என்னங்க அமைதியா இருக்கீங்க? அவங்க அப்பா அம்மா பேசணும்னு சொல்றதா சொன்னானே. அவங்களை கூப்பிட்டு பேசுங்க. இப்படி பாதில விட்டுட்டு போகவா அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சோம்? அந்த பொண்ணு புடிச்சிருக்குனு சொன்னதை எடுத்துக்கிட்டு இவனோட விருப்பத்தை கூட பாக்காம கட்டி வச்சது இதுக்காக தானா? என்ன வளர்த்திருக்காங்க?” அவரது வளர்ப்பு பொய்த்துப்போனது தெரியாமல் பொருமினார் மேகலா.
“அவசரப்பட வேண்டாம். அறிவு தான் சொல்றானே அந்த பொண்ணு போக்கிலேயே விடச்சொல்லி. ஆறப்போடலாம். சரிதானே அறிவு? நீ சொல்றதுதான்.” என்று மகன் முகம் பார்க்க,
இப்போது தன் முகம் பார்த்து முடிவெடுக்கும் தந்தை இதனை முன்னமே செய்திருந்தால் இந்தளவிற்கு வந்திருக்காதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அறிவழகனால். தொண்டை இறுக்கிப்பிடிக்க சம்மதமாய் தலையசைத்தான்.
“ப்ச்… இதை முன்னாடியே செஞ்சிருந்தா இந்நேரம் உமா இங்க வளைய வந்திருப்பா. என் பையனும் இவ்ளோ கஷ்டத்தை மென்னு முழுங்கி அலைஞ்சிட்டு இருந்திருக்க மாட்டான்.” மகன் நினைத்ததை மேகலா வார்த்தையாய் சொல்லிவிட்டார். ஆனால் அதை கேட்கையில் சுகிக்கவில்லை அறிவழகனுக்கு.
“அம்மா… இனி இப்படி பேசாத.” என்று அதட்டியவனே மறுநாள் உமா முன் நின்று அவள் சொன்ன அத்தனைக்கும் மலர்ச்சியுடன் தலையாட்டிக் கொண்டிருந்தான். பார்த்த மேகலா மகனின் மலர்ச்சி உமாவிடம் தான் என்று முடிவுகட்டி காய் நகர்த்த ஆரம்பித்தார்.
error: Content is protected !!