32.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,940
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 32.2
.
Advertisement
“என்ன… என்ன சொல்ற கௌதம்?”
என்ன கூறப்போகிறாள்? யாழியை வேண்டாம் என்றுவிட்டால்? மனம் வேகமாகத் துடித்தாலும், “ஒண்ணும் சொல்லல. கேட்டேன்” என்றான் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது.
“அப்போ… யாழி உன் மக இல்லையா?” என அதிர்ந்து கேட்பவளிடம் ஏனோ இதைப் பற்றி விளாவாரியாகப் பேச மனமில்லை. மகளை பார்க்க, அவன் குட்டி மகள் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள். எப்படி அவன் வாயால் யாழி தனக்கு பிறக்கவில்லை என்பான்? எந்த உண்மையைப் புதைத்திருந்தானோ அதை அவனே வெளியெடுத்துக் கூறு போட வேண்டுமா? மனம் ஒப்பவில்லை.
Advertisement
தாக்ஷாவின் அதிர்வு எல்லாம் நொடி நேரம் மட்டுமே. முகம் புன்னகையைப் பூசிக்கொள்ள, அவனுக்குத் தான் அவளின் மனவோட்டம் புரியவில்லை. தாக்ஷாயினியின் மனம் சிறகில்லாது பறந்தது. கல்லூரிக் காலத்தில் கௌதமனின் கடைக் கண் பார்வைக்காகக் காத்திருந்த நாளிலிருந்து இன்று வரை அவனை மட்டுமே காதலிக்கும் மனது உண்மையிலுமே சிறகில்லாது பறந்து கொண்டு தான் இருக்கிறது.
Advertisement
கல்லூரிக் காலம் முடியும் வரை காதலில்லாது ‘கேர்ள் ஃபிரெண்ட்’ என இவன் தாக்ஷாவை ஏற்றுக் கொண்டபோதும் இவள் காதலோடு அவன் பின்னே சென்றாள். ஆறு மாதங்களுக்கும் மேல் இவரும் ‘கமிட்டெட்’ உறவில் இருந்த போது, இவள் உயிர் வரை கௌதமன் ஊடுருவியிருக்க, அவனுக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை என அவளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும்… அவன் அவளில் மயங்கி அவளை முழுவதுமாக கேட்டு நின்ற வேளை, எதுவும் யோசிக்காது அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
அன்றும் சரி இன்றும் சரி கௌதமனுக்காக எதுவும் செய்யும் நிலை தான் அவளுக்கு. அவன் கூறியது போலவே கல்லூரிக் காலம் முடிந்தது, கல்பட்ட பறவைகளாக ஆளுக்கு ஒரு பக்கம் சென்றனர். மீண்டும் பார்த்த போது குழந்தையோடு அவன் இருக்க, இதயம் நின்று துடித்தது தாக்ஷாயினிக்கு.
பல பெண்களோடு அவன் சுற்றியிருந்தாலும், தன்னிடம் மட்டுமே உருகிக் கரைந்தவனால் எப்படி உடனே ஓர் உறவில் விழ முடிந்தது? பல பெண்கள் அவன் வாழ்வில் வந்து சென்றிருந்தாலும் அவன் மேனி தழுவிய முதல் பெண் தான் தான் என தாக்ஷாவிற்கு நன்றாகவே தெரியும். நிலைமை அப்படி இருக்க, இவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களிலேயே ஒரு பெண்ணை விரும்பி அவளோடு கலவி கொண்டு பிள்ளையைப் பெற்றுக் கொண்டான் என்றால்… தாக்ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை.
Advertisement
இவன் எவளோடோ கொண்ட கலவியின் பயனால் பெற்றெடுத்த குழந்தைக்குத் தான் தாயா என்ற சுணக்கம் ஓர் ஓரம் இருந்து கொண்டே இருந்தது. யாழியை மிகவும் பிடிக்கும்… ஆனாலும் குழந்தை, அவன் கொண்ட கலவியை நினைவுபடுத்த தாக்ஷாவால் அம்மாவாக மாற முடியவில்லை. இன்று… இந்த நொடி? எல்லாம் மாறிப் போனது. மனம் இலேசாக மாறிவிட்டிருக்க, “லவ் யூ… லவ் யூ சோ மச் கௌதம்” என அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“தனியா இருந்தா… உன்ன அப்படியே… எப்படிச் சொல்ல…. ஐ ஆம் சோ ஹேப்பி கௌதம்” என முகம் கொள்ளா புன்னகையோடே பூரித்துப் பேசுபவளைக் குழப்பமாகப் பார்த்தான் கௌதமன்.
“அப்போ… உன் வாழ்க்கையில நான் மட்டும் தானே?” என்றவள் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி இருக்க, “ம்ம்” என்றான் அதே குழப்பத்தோடு.
“யாழியோட பேரன்ட்ஸ்?” அவள் யாழியின் வேரைப் பற்றின ஆராய்ச்சியில் இறங்க, கௌதமனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒவ்வாமை.
“யாழி எப்பவும் என் மக. நான் அவ அப்பா. இது மட்டும் தான் உண்மை.” என்றான்.
“நம்ம மக” என தாக்ஷாயினி புன்னகைக்கவும், சட்டென மனதின் பாரமெல்லாம் இறங்கியது கௌதமனுக்கு. பாறாங்கல்லாக கனத்த இதயம் சருகாக மாறியிருந்தாலும், “இது உன்னைத் தாண்டி வெளில வரக் கூடாது தாக்ஷா” என்றான் கண்டிப்பான குரலில்.
“நான் ஏன் சொல்ல போறேன்?” இவள் முடிக்கும் முன்பே குழந்தை அப்பா அமர்ந்திருந்த மேசையை நோக்கி ஓடி வந்தாள்.
“அப்பா… கலும்பு ஜூஸ் இனிச்சு. போடும்” என ஓடி வந்த குழந்தை, “அம்மி ஜூஸ் தாச்சா ஆந்தி. டேங்கஸ் ஆந்தி” என தாக்ஷாவின் கால்களுக்கு இடையே வந்தவள் தாக்ஷாவை வயிற்றோடு கட்டிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். இப்போ விளையாட போகலாமா?” சின்னவளின் கரம் பற்றி தாக்ஷா எழுந்துகொள்ள, கௌதமனும் எழுந்து கொண்டான்.
அன்றைய பொழுது யாழிக்கு குதூகலமாகவே சென்றது. அந்த இடம் முழுவதையும் தாக்ஷாவின் கரம் பற்றி குட்டிக் கால்கள் அளந்தன. குழந்தை வருகிறாள் என்றாலே அவளுக்காக இரு படுக்கையறையைக் கொண்ட குடில் ஒன்றை ஒதுக்கி விடுவாள் தாக்ஷா. இன்றும் குடிலுக்குள் செல்ல, அதன் பின் இருந்த ஜக்கூசியை பார்த்ததும், “அப்பா தண்ணில நானுக்கு போவாம்” எனத் தந்தையின் கரத்தில் தொங்கினாள் குழந்தை.
“எனக்கு தண்ணியில இறங்கிற மூடே இல்ல பேபி. ஈவ்னிங் பீச்ல நனையலாம். இப்போ வேண்டாம்” என்றதை மகள் காதில் வாங்கினாள் இல்லை.
“அப்பாக்கு வேண்டாம்ன்னா பிடிவாதம் பிடிக்கக் கூடாது… அம்மாட்ட வா, நாம தண்ணில விளையாடலாம்” எனக் குழந்தையை அழைக்கவும் யாழியின் கண்கள் விரிந்தது. “தாச்சா ஆந்தி, அச்சோ அம்மா” என்றாள் குழந்தை.
“தாக்ஷாவும் அம்மா தான் பேபி. பால் ரூம்ல குட்டி பிள்ளைகளோட விளையாடினியே…” எனக் கூற ஆரம்பித்ததும், பிள்ளைகளின் பெயர்களோடு இடையிட்டாள் யாழி.
“அச்சிலி, டிவாக்கல், இசானா” மகள் அடுக்கிக்கொண்டே போக இவள் விழிகள் விரிந்தன.
“உன்ன டிரெயின் பண்ணினா கினஸ் புக்ல உன் பேர ஏத்திடலாம் போலவே” என முணுமுணுத்தவள், “ம்ம்ம்… அவங்க யார் கூட விளையாட வந்தாங்க?” எனக் குழந்தையைப் பார்க்க, அவளும் குட்டி விரலைக் கொண்டு கன்னம் தட்டி, “அம்மா” என்றாள்.
“என் குட்டி யாழி பேபி யார் கூட அங்க விளையாட போனீங்க?”
“நீங்க கூட”
“என் கூட. அப்போ நான் தானே உன் அம்மா?”
“ஓ” எனக் குட்டி வாய் குவித்து நின்றிருந்த குழந்தையின் குட்டி மனதிற்கு என்ன புரிந்ததோ, பார்வை அப்பாவை நோக்க, “என்ன பேபி?” என்றான் கௌதமன்.
“தாச்சா நானுக்கு அம்மாவா அப்பா?” என்ற குழந்தையின் கேள்விக்கு அவன் பார்வை தாக்ஷாவை நோக்கியது. இன்று வரை, “அவ எப்படி கூப்பிடணும்ன்னு ஆசைபடறாளோ அப்படியே கூப்பிடட்டுமே” என்றவள் தன்னை ‘அம்மா’ எனக் குழந்தையின் மனதில் பதிக்க எண்ணுவது கௌதமன் அகத்திலும் முகத்திலும் புன்னகையை அரும்பச் செய்ய, “அப்பாஆஆ” என யாழி தந்தையை உலுக்க ஆரம்பித்தாள்.
“ஆமா டா பேபி. தாக்ஷா தான் உன் அம்மா” என்றான் குழந்தையின் முகம் பார்த்து.
“அச்சோ அம்மா?” என்ற குழந்தையின் உதடு பிதுங்கத் தயார் ஆகவும். “யசோ அம்மா அவங்க வீட்டுல இருக்காங்க. பேபி கூட விளையாட, கதை சொல்ல, தூங்க… எப்பவும் உன் கூடவே இருக்க அம்மா வேணுமா வேண்டாமா?”
“நேணும் அப்பா”
“யசோ அம்மா வேற வீட்டுல இருக்கனால, தாக்ஷா உன் கூடவே அம்மாவா இருப்பாங்க” என்றான் மடியில் அமர்ந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தையிடம்.
“ஓ” என்ற குழந்தைக்கு என்ன புரிந்ததோ… நான்கு விரல்களை காட்டி, “டூ அம்மா நானுக்கு” எனத் துள்ளிக் குதித்தாள்.
யாழியும், தாக்ஷாவும் ஜக்கூசியில் ஆட்டம் போடுவதை வேடிக்கை பார்த்திருந்தவன் நீரில் இறங்கவில்லை.
விளையாட்டும், குட்டி குளியலும், வயிறு நிறைய உணவும் யாழியைக் கௌதமன் தோளில் துயில் கொள்ளச் செய்தன. மகளை மெத்தையில் படுக்க வைத்தவன் குடிலுக்குப் பின்னால், ஜக்கூசியின் அருகே, சரிந்த வண்ணம் இருந்த நீள இருக்கையில் கால்களை நீட்டிச் சாய்ந்து அமர்ந்தான்.
“யாழிய படுக்க வை. எனக்குச் சின்ன வேலை ஒண்ணு இருக்கு… ஒரு மணி நேரத்தில வந்திடுறேன்” எனக் கூறி சென்றிருந்தவள் இன்னும் வந்திருக்கவில்லை.
கூற வேண்டுமா.. வேண்டாமா எனக் குழப்பிக் கொண்டிருந்த இரு விஷயங்களையுமே ஒன்றுமில்லாது தாக்ஷாயினி மாற்றி இருக்க, நிம்மதியாகக் கண்களுக்கு எதிரில் தெரிந்த நீல வானை வெறித்தான். படம் எடுப்பதற்கான வேலையை முழு மூச்சில் ஆரம்பிக்க வேண்டியது தான்… என மனம் அடுத்தகட்ட வேலையினை அசைபோட ஆரம்பித்தது.
‘பிரச்சனை எல்லாம் முடிஞ்சுது. உயிரா நேசிக்கிற தாக்ஷா… உயிரா மாறிப்போன யாழி, ரெண்டு பேரும் அம்மா பொண்ணா என் கூடவே காலம் பூரா இருக்க போறாங்க! அதிர்ஷ்டசாலி டா நீ கௌதமா! சோ… இப்போ எல்லாத்தையும் மூட்டை கட்டி போட்டுட்டு… இந்த நிமிஷத்த என்ஜாய் பண்ணுடா’ என்ற மனதின் பேச்சைக் கேட்டவன் மீண்டும் வானை வெறித்தான்.
பஞ்சு மூட்டைகளைக் குவியல் குவியலாகக் கொட்டியது போல் குவிந்து கிடந்திருந்த மேகக் குவியலைப் பார்க்க அத்தனை வெண்மையாகவும் அழகாகவும் இருந்தது. பார்ப்பதற்குப் பஞ்சு பொதி போல் இருந்தாலும் அதனுள் இறங்கி வருபர்களுக்கு மட்டுமே அது கொடுக்கும் வலி தெரியும். ஸ்கை டைவிங் சென்ற வேளை, வேண்டுமென்று மேகத்தினுள் குதிக்கவில்லை என்றாலும் கௌதமனுக்கு மேகத்தை அணைக்க எழுந்த ஆவலைத் தடுக்கவும் இல்லை.
உறைந்து பனித்துகள் நடுவே 200 மைல் வேகத்தில் விண்ணிலிருந்து பூமிக்கு வந்து கொண்டிருந்தவனைப் பஞ்சுப் பொதி அணைத்து ஆயிரக் கணக்கான ஊசிகளால் முத்தமிட்டதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான். அந்தக் கௌதமன் எங்கே போனான்? அந்த ஆத்திரம், அவசரம், அந்தப் போதை… இதெல்லாம் எங்குச் சென்றது? அன்பு, காதல், குடும்பம் என மனம் எப்பொழுது மாறிப்போனது? கௌதமன் என்ற தான் எங்கோ மறைந்துவிட்டது தெரிகிறது. அதற்கான வருத்தம் இல்லாமல் போனது தான் கௌதமனுக்கு வியப்பு.
வானம்… மேகம்… வாழ்க்கை என எதை எதையோ எண்ணிக் கொண்டே படுத்திருந்தவன், தலைக்கடியில் ஒரு கரம் இருக்க, மற்றதை அசைக்கமுடியவில்லை. தலை திருப்பிப் பார்த்தான், அவன் கரத்தை தலையணை ஆக்கியிருந்தாள் அவள்.
“மேகம் என்ன அழகா இருக்கில்ல?” என வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தவள் கேட்டாள். யார் இவள் என்ற ஆராய்ச்சி இல்லாது, அவனும் பதில் கேள்வி கேட்டான்.
“சொல்லு… அந்த மேகம் எனக்குப் பூனை மாதிரி தெரியுது. உனக்கு?” என இவன் கேட்க, “பூனையோட வாலு காத்துக்கு பறக்குது பாரு. அது தான் தெரியுது எனக்கு” என கிளுக்கி சிரித்தாள்.
யார் அவள்? அவள் தலையைத் திருப்பினால் பார்க்கலாம். ஆனால், அவளை முற்றிலும் அறிந்தவன் போல் அவன் அவளோடு சிரித்துக் கொண்டிருந்தான்.
“வானத்தில ஜெட் வச்சு ஹார்ட் வரைஞ்சு ‘ஐ லவ் யூ’ன்னு முட்டி போட்டு பிரப்போஸ் பண்ணுவியா?” என அவள் கேட்க, “வேணும்ன்னா இப்படி மொட்டை மாடியில வச்சு ஆயிரமாவது முறை பிரப்போஸ் பண்றேன்” எனக் கௌதமன் சிரித்தான்.
“போடா கஞ்சூஸ். எவனாது நான் கேட்டது மாதிரி வானத்தில வரைஞ்சு கேக்கட்டும், அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன் பாரு” என்றாள் அவள்.
“வானத்துல வரையணுமாமே… வேணும்னா கனவு காணு. கனவுல மேகத்த வச்சு நீ கேக்கிறத வரைஞ்சு, வானவில்ல வச்சு கலர் கொடுக்கிறேன்” என அவன் சிரித்தான்.
“அப்படியே வெள்ள பேன்ட் ஷர்ட் போட்டு மேகத்துல வந்து கே.ஆர்.விஜயா மாதிரி பாடுவியா?”
“இது வேறையா? சரி… என்ன பாடட்டும்?”
“நீ பாட, கண்ணதாசனா வரி எழுத வருவாரு? மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா… உன்னுயிராய் நானிருக்க, என்னுயிராய் நீ இருக்கன்னு, அவங்க பாடினதையே பாடு”
கைப்பேசியை எடுத்து அந்தப் பாடலைப் பார்த்தவன், “உன்ன காதலிச்ச குத்ததுக்கு, என்னை ஆவியா மாத்தினது மட்டும் இல்லாம… வேற ஒருத்தனோடு உன்ன சேர்த்து வச்சு பாடணுமா? தேவை தான் டி” எனச் சிரித்தான். ஆனாலும் அவள் கேட்டதற்காக, வார்த்தைகள் சிலதை மாற்றி போட்டு பாடினான்.
“கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தன் உடலெடுத்து
இருப்பவனும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல்
கலங்குவதும் வீணல்லவா…”
அவன் பாடிக் கொண்டே போக… “சகிக்கல வாய மூடு” எனக் கத்தியவள் அப்படியே சரிந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“லூசு… விளையாடிட்டு தான இருந்தோம்… எதுக்கு இப்போ எமோஷ்னல் ஆகிற?” என்றவனுள் புதைவதைப் போல் அணைத்தவளை, “நெருப்புன்னு சொல்றதுக்கு எல்லாம் வாய் சுடாது டி” என அவனும் அணைத்துக் கொண்டான்.
“நெருப்புன்னு சொன்னா சுடுமா சுடாதான்னு நான் தெரிஞ்சுக்க விரும்பல.” என்றவளின் குரல் உடைந்திருக்க, தன் அணைப்பை இறுக்கியவன், “என் இதயம் துடிக்கிறது கேக்குதா?” என ஆழ் குரலில் கேட்டான்.
“ம்ம்ம்… நல்லா” என்றாள்.
“உன் துடிப்பு இருக்க வரைக்கும் அதுவும் துடிக்கும். இந்த இதயத்தோட துடிப்பு இருக்க வரைக்கும், உன்ன விடவே மாட்டேன் போதுமா?” என்றான் கண்கள் மூடி.
கண்கள் மூடியே இருக்க, “என் உயிர் டி நீ…” என்றான் தன்னை தழுவியவளை அணைத்து.
“எழுப்பிட்டேனா கௌதம்?” என்றவளை “ம்ம்” என இன்னும் இறுக்கமாக அணைத்தவன் கண்கள் சட்டென திறக்க, அவன் இருந்த இடத்தை உணர நேரம் படித்தது. ஏனோ… கண்களை மீண்டும் மூடிக் கொள்ளத் தோன்றியது. விட்ட கனவை நீடிக்க மனம் ஆசை கொண்டது. ஆனால்… யார் அவள்? மீண்டும் மீண்டும் அவனுள் எதையோ செய்து, அவனைப் பாடாய்ப் படுத்தும் அவள் யார்… என்ற கேள்வி பல முறை வந்திருந்தாலும், ‘தான் உணர்ந்த அவன் யார்?’ என்ற கேள்வி முதல் முறை வந்தது. ஒவ்வொரு முறையும் கனவில் வருவது தான் தான், என நினைத்தவன், முதல் முறையாக ‘அவன்… தான் தானா?’ என ஐயம் கொண்டான். வருவது கனவு தானா? என்ற சந்தேகமும் கொசுறாய் எட்டிப்பார்த்தது.
“கௌதம்… பசிக்குது. சாப்பிடுவோமா?” என்ற தாக்ஷாயினி கௌதமனை கனவுலகிலிருந்து மீட்டு வந்தாள்.
‘உண்மையிலுமே மீட்டு வந்தாளா?’ என்பது கேள்வி. கேள்விக்கான விடையைக் காலம் தான் கூற வேண்டும்.