Skip to content
Post Views: 3,755
நான் தேடும் காதல் நீ…..17
செல்வத்தின் வீட்டில் காலையிலிருந்தே சத்தமும் கூச்சலும் அதிகமாக இருந்தது.சாருலதா தான் கத்திக் கொண்டிருந்தார்.அவருக்கு நேற்று இரவு தான் மகனின் திருமண விஷயம் பகிரப்பட அத்தனை ஆத்திரம் அதுவும் மணபெண் தீர்த்தா என்றவுடன் இன்னும் தான் ஆடிக் கொண்டிருந்தார்.தன் கோபத்தை கணவன்,தந்தையிடம் காட்டி ஓய்ந்தவர் மகனிடம் நயமாக பேசி இதை தடுக்க எண்ணி அவனிற்கு அழைக்க அவனோ அழைப்பை ஏற்கவேயில்லை அது இன்னும் அவரின் கோபத்திற்கு தூபம் போட இதோ காலை எழுந்ததிலிருந்து கத்திக் கொண்டிருக்கிறார்.
“என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்….எல்லாம் உங்க இஷ்டப்படி நடக்கும் நினைப்பா….நான் இருக்குற வரைக்கும் இந்த கல்யாணத்தை நடத்தவிடமாட்டேன்….”என்று அவர் கத்த,
“நீ இல்லைனாலும் என் மகனோட கல்யாணம் நடக்கும்….”என்ற செல்வத்தின் உறுதியான பதிலில்.தன் நிதானத்தை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கினார் லதா.
Advertisement
“உன்னை எல்லாம் என் விட்டுக்குள்ள விட்டதே தப்பு……ஏதோ படிச்சிருக்க பார்க்க நல்லா இருக்க…என் பேச்சை கேட்டு எனக்கு பின்னாடி இருப்பனு தான் உன்னை கல்யாணம் கட்டினேன் ஆனா இன்னைக்கு எனக்கு எதிராவே பிளான் பண்ணுறியா….”என்று ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று புரியாமல் வார்த்தைகள் ஒருமைக்கு தாவியது.மனைவியின் உண்மை சுயரூபம் தான் முன்பே தெரிந்தவர் ஆயிற்றே செல்வம் அதனால் விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்தவர்,
“நீ நினைக்கிற மாதிரி தான் நானும் இருந்தேன்…அதனால தான் எனக்கு யாரும் இல்லாம போயிட்டாங்க என் பிள்ளையும் அப்படி இருக்கக்கூடாதுனு தான் இந்த முடிவு எடுத்தேன்…..”என்றவரை அழுத்தமான பார்வை பார்த்த சாருலதா ஒரு எள்ளல் சிரிப்புடன்,
“என் அண்ணனுக்கு உங்க தங்கச்சியை ஏன் கல்யாணம் செஞ்சு வச்சீங்கனு உங்களுக்கு நியாபகம் இருக்கா….”என்று கேட்க செல்வத்தின் முகம் முற்றிலுமாக மாற துவங்கியது.தான் செய்த பெரிய பாவம் அது அதிலிருந்து தான் மீளப்போவது இல்லை என்று தெரிந்த ஒன்று தான் ஆனால் அதை எதற்கு இவள் இப்போது கூறுகிறாள் என்று யோசிக்கும் முன் லதா,
Advertisement
“என்ன சொன்னீங்க என்கிட்ட நம்ம பிள்ளை மட்டும் தான் இந்த வீட்டுக்கு வாரிசா வரனும் அதுக்கு என் தங்கச்சியை உன் அண்ணனுக்கு கட்டிக் கொடுத்தா அவ நமக்கு அடங்கி இருப்பா அதோட அவ பிள்ளைகளையும் நமக்கு கீழே வச்சிக்கிலாம்னு சொன்னீங்க தான்….இப்ப என்ன திடீர் கரிசனம் பொங்குது உங்க தங்கச்சி பிள்ளைங்க மேல…..”
Advertisement
“அந்த பாவத்துக்கு தான் நான் இப்ப வரை மன்னிப்பை யாசிக்கிட்டு இருக்கேன்….என்னோட சுயநலம் தான் இன்னைக்கு என்னை இப்படி கூனி குறுகி நிக்க வச்சிருக்கு….என்னோட மன்னிப்பை வாழ்நாள் முழுசும் என் தங்கை பிள்ளைகள் கிட்ட கேட்டு தான் இருப்பேன்….”என்ற செல்வத்தின் குரலே கரகரத்து போயிருந்தது.
“அதை ஏன் என்கிட்ட சொல்லுறீங்க…அதோ உங்க பின்னாடி நிக்குறாங்க பாருங்க உங்க தங்கச்சி பிள்ளைங்க அவங்க கிட்ட கேளுங்க….”என்று சாரு வாசல் பக்கம் கையை காட்ட செல்வத்தின் உடல் வெளிப்படையாகவே அதிர்ந்து நின்றது.யாருக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் என்று நினைத்திருந்தாரோ அவர்களின் முன்னே அனைத்தும் தெரிந்துவிட திரும்பி வாசலை பார்த்தவர் கண்களில் விழுந்தது தன்னை கோபத்துடன் பார்க்கும் தீர்த்தாவையும்,நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிவன்யாவையும் தான்.
“தீர்த்தாமா….”என்றவரின் குரலே உடைந்துவிட,
Advertisement
“ரொம்ப நல்லாயிருக்குடா…ரொம்ப நல்லாயிருக்கு….ச்சீ….நீயெல்லாம் ஒரு மனுஷனா…..உன்னை போய் நம்பினேன் பாரு….என்னை சொல்லனும்….நல்லவேளை கைமீறி எதுவும் போகலை….வாம்மா…..வாங்க நாம போகலாம்….”என்ற சதாசிவம் இருவரின் கைபற்றி அழைத்து கொண்டு வெளியில் செல்ல,
“நில்லுமா….நில்லு….”என்று கத்திக் கொண்டே செல்வம் அவர்களின் பின்னே சென்றார்.அவர்களை பார்த்து எள்ளல் சிரிப்பு சிரித்த சாருலதா தான் நினைத்ததை சாதித்த திமிருடன் உள்ளே சென்றுவிட்டார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அமரன் மிகவும் நிலைகுலைந்து போயிருந்தான் தான் கேட்ட செய்தி உண்மை தானா என்று மீண்டும் கேட்க மறுமுனையில்,
“சார் நாங்க நல்லா பார்த்துட்டு தான் சொல்லுறோம்….”என்று அந்த நபர் கூறி வைத்துவிட,முற்றிலுமாக மூளை மறத்த நிலையில் தான் இருந்தான்.நேற்று இரவில் இருந்து தன் கைபேசியில் இருக்கும் படத்தை பார்த்தவனுக்கு இது உண்மையாக இருக்கக்கூடாது என்று நினைத்தாலும் ஆனால் நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறது தானே அதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.இதோ காலைவேளை கடைக்கும் செல்லவில்லை கதிரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டான்.என்ன செய்வது எப்படி இதை சரி செய்வது என்று தான் யோசனை தான் ஓடியது.அந்த நேரம் கடையில் இருந்து அவனிற்கு விடாமல் அழைப்பு வரவும்,
“ப்ச்…டேய் போனை எடுக்கலைனா வேலையா இருக்கேன்னு உனக்கு தெரியாது…சும்மா போன் பண்ணிக்கிட்டு இருக்க….”என்று கத்த,
“தீர்த்தாவுக்கு கல்யாணம் பேசியிருக்காங்க…..அடுத்த மாசம் நிச்சயம் வைக்க போறாங்க போல…..”என்று கதிர் தனக்கு செந்தா மூலம் தெரிந்த விஷயத்தை அமரனிடம் பகிர அதுவரை கத்திக் கொண்டிருந்தவன்,
“என்…என்ன சொன்ன….”என்று திக்கி திணறி மீண்டும் கேட்க,
“தீர்த்தாவுக்கும்,நிமலனுக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க…..”என்று கதிர் கூற,தீர்த்தாவிற்கு திருமணம் என்றதிலேயே அதிர்ந்திருந்தவன் அவளிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை யார் என்று தெரிந்தவுடன்,
“ஓஓஓ…அந்த நாயிக்கு ஒண்ணுக்கு இரண்டு பொண்ணு கேட்குதோ….இன்னைக்கு கிழிக்கிற கிழில அவன் யார் பக்கமும் பார்க்க முடியாத படி பண்ணிடுறேன்….”என்றவன் போனை வைத்துவிட்டு நிமலன் வீடு நோக்கி புறப்பட்டுவிட்டான்.
ஆம் தாமரை விரும்பும் நபர் நிமலன் என்று இப்போது தான் அவனிற்கு தகவல் வந்திருந்தது.அவர்கள் தாமரையும் நிமலனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவனிற்கு அனுப்பியிருந்தனர்.அதை தான் நம்ப முடியாமல் அவர்களிடம் மீண்டும் பேசியில் அழைத்து கேட்க அவர்கள் உறுதி செய்யவும் இதோ புறப்பட்டுவிட்டான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“தீர்த்தாமா…தீர்த்தா நில்லுமா….நான் சொல்லுறதை கேளு…”என்று செல்வம் மண்றாடிய படி அவர்களின் பின்னே செல்ல,அவர்களோ செல்வம் கூறும் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை.
“நீ பேசாதடா….பேசாத….ச்சீ….இப்படியும் ஒரு அண்ணன் இருப்பானா….சொந்த தங்கச்சியவே தன்னோட சுயநலத்துக்கு உபயோகிச்சவன் நாளைக்கு அவங்க பிள்ளைகளை உபயோகிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்…..”என்று சதாசிவம் அத்தனை ஆவேசத்துடன் செல்வத்தின் சட்டையை பிடித்துவிட,
“அங்கிள்…..”என்ற நிமலனின் கோபக்குரல் அந்த வரவேற்பறையில் அத்தனை அழுத்தமாக கேட்டது.அனைவரும் வாயிலை பார்க்க அங்கு தாமரையுடன் நின்றிருந்தான் நிமலன்.தீர்த்தாவிற்கு நிமலனுடன் நின்றிருந்த தாமரையை கண்டவுடன் அதிர்ச்சி,
“சிவா….இது தாமரை இல்ல….இவ எங்க இங்க….”என்று தீர்த்தா அதிர்ந்து கேட்க,
“க்கா….இங்க உன் வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு….நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க….”என்று சிவன்யா பல்லை கடிக்க,
“இல்லடீ…அது….”என்று அவள் அந்த இடத்தில் எதுவும் சொல்லமுடியாமல் அமரனிற்காக தவிக்க அதே நேரம் தன் புல்லட்டில் புயல் போல வந்திறங்கினான் அமரன்.வந்தவனின் கண்கள் அங்கு ஜோடியாக நின்றிருந்த தாமரையையும்,நிமலனையும் பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டது.அவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
“நிமலா….யாரிப்பா இது…..”என்று ஏற்கனவே உடைந்திருந்தவர் மகன் ஒரு பெண்ணுடன் வந்து நிற்கவும் பயந்து தான் போனார்.
“என்னப்பா உங்களுக்கு நியாபகம் இல்லையா அன்னைக்கு போட்டோ பார்த்துட்டு சொன்னீங்களே….என்னோட விருப்பம் தான் உங்க விருப்பம்னு…..”என்று நிமலன் அடுத்த குண்டை போட அனைவருமே அதிர்ந்துவிட்டனர்.தாமரையோ ஏற்கனவே தீர்த்தாவை இங்கு கண்டதில் பயந்திருந்தவள் அமரனை கண்ட நொடி மொத்தமாக செயலிழந்த நிலையில் நின்றாள்.ஆனாலும் நிமலனின் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டு நின்றாள்.தன் மகன் வந்துவிட்டான் என்று அவனிடம் பேச வந்த சாருலதாவும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
“ஓ….குடும்பமே சேர்ந்து தான் நாடகம் ஆடுனீங்களா….இன்னும் என்னல்லாம் பிளான் பண்ணியிருந்தீங்க….”என்று சதாசிவம் எகிறி கொண்டிருக்க,தீர்த்தாவோ மெல்ல நகர்ந்து அமரனின் புறம் வந்தாள்.அவள் முகத்தில் அத்தனை தவிப்பு அவன் மனது எத்தனை பாடு படும் என்று நினைத்துக் கொண்டே அவனின் அருகே வர,அவள் வருவதை கண்டவன் அவளின் கைகளை பிடித்து இழுத்து தன் பின் பக்கம் விட்டுவிட்டு,
“உன்னை கொன்னுடுறேன்….எவ்வளவு தைரியம் உனக்கு….இரு இப்ப சூழ்நிலை சரியில்லை….”என்றவன் பக்கத்தில் இருந்த சிவன்யாவிடம் கண்ணனை காட்டி,
“பார்த்துக்கோ…வரேன்….”என்றுவிட்டு செல்ல தீர்த்தா அமரனின் செயலில் சிலை போல நின்றுவிட்டாள்.சத்தியமாக அவளுக்கு புரியவில்லை அமரனின் மனதில் என்ன இருக்கிறது என்று இன்னும் அறியமுடியவில்லை.
அமரனோ இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உடனே கதிருக்கு அழைத்து விஷயத்தை கூறி தன் வீட்டில் உள்ளவர்களை அழைத்து வரும்படி கூறினான்.அவர்களிடம் தாமரையை பற்றி எதுவும் கூறாமல் அழைத்துவரும்படியும் பணிந்தான்.
“அய்யோ….சதா இருடா எனக்கும் ஒண்ணும் தெரியாது…..”என்ற செல்வம் நிமலனிடம் திரும்பி,
“என்னடா என்ன சொல்லுற நீ……”என்று அதிர்வுடன் கேட்க,
“நீங்க தான சொன்னீங்க உன் விருப்படி தான் உன் கல்யாணம்னு இதோ நான் விரும்புன பொண்ணோட வந்துட்டேன்….”என்று தன்னுடன் ஒன்றி நின்ற தாமரையின் தோளில் கை போட்டுக் கொண்டே கூற,
“என்னமா தாமரை சார் சொல்லுறது உண்மையா…..”என்ற அமரன் அழுத்தமாக கேட்டவாரே அவர்களை நெருங்க,
“ஏய் மிஸ்டர் நீ எங்க இங்க….”என்று கேட்க,
“நான் யாருனு இதோ உன் பக்கத்துல் இருக்காளே என் அத்த மவ அவ சொல்லுவா….சொல்லுமா நான் யாருனு….”என்று எள்ளலுடன் கூற,அமரனின் இந்த புதிய பரிமாணத்தில் தாமரை இன்னும் தான் பயந்து போனாள்.நிமலன் அதிர்ந்து தாமரையை பார்க்க அவளோ இன்னும் அவனுள் ஒண்டினாள்.
“எவ்வளவு தைரியம் உனக்கு….”என்று அமரன் பல்லை கடித்துக் கொண்டு அவளிடம் நெருங்க,அதற்கு முன் அவனை நெருங்கிய தீர்த்தா அவனின் கை பற்றி,
“அமரா வேண்டாம்….”என்று பிடித்து இழுத்தாள்.
“நீ சும்மா இரு…”என்று அவளின் கைகளை உதறியவன் ஏதோ பேசவரும் முன்,
“யாருடா இது….கண்டவளை கூட்டிட்டு வந்து இவளை தான் கட்டிக்க போறேன்னு சொல்லுற….”என்று லதா வார்த்தைகளை விட,தாமரை அந்த வார்த்தைகளில் கூனி குறுகி விட்டாள்.
“இந்தாம்மா பார்த்து பேசு இல்ல….”என்று நாக்கை மடித்து அமரன் சாருலதாவை மிரட்ட அவனின் தோரணையில் இரண்டடி பின்னுக்கு சென்றார் அவர்.
“ம்மா….என்ன பேச்சு இதெல்லாம்…இவ என்னோட மனைவியாக போறவ….மரியாதையா பேசுங்க….”
“என்ன என்னடா பேசுற நீ….நான் உனக்கு தீர்த்தாவுக்கும் கல்யாணம் பேசியிருக்கேன்….இப்ப இப்படி வந்து நிக்குற….”என்று செல்வம் மகனிடம் கோபமாக கேட்க,
“என்னப்பா சொல்லுறீங்க நீங்க….”
“நீ சம்மதம் சொன்னவுடனே தானே கல்யாணத்தை ஏற்பாடு பண்ணனேன்….உன்னோட ரூம்ல கூட அவ போட்டோவை காமிச்சு தான கேட்டேன்….நீ ஆமான்னு சொன்ன…இப்ப….இங்க பாரு நான் முடிவு பண்ணிட்டேன் தீர்த்தா தான் இந்த வீட்டு மருமக….”என்று செல்வம் உறுதியாக கூற,நிமலன் அதிர்ந்துவிட்டான்.
“அய்யோ அப்பா நான் தீர்த்தாவோட போட்டோ வச்சிருந்தது உண்மை தான் ஆனா நீங்க நினைக்கிறது போல இல்லை….அது தாத்தா தான் தீர்த்தாமா போட்டோ இருந்த எடுத்துட்டு வாடானு சொன்னார் அவருக்காக நான் தான் அவ வீட்டுக்கு போயிருந்த போது எடுத்துட்டு வந்தேன்….ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…”என்று அவசராமாக மறுக்க,
“இந்தா உண்மை வந்துடுச்சுல….அப்பனை போல தான் பிள்ளையும் இருப்பான் போல….வாங்கமா போலாம்….”என்று சதாசிவம் பெண்களை அழைக்க,
“அங்கிள் பார்த்து போசுங்க….இங்க ஏதோ தப்பு நடந்திருக்கு…அது என்னனு எனக்கும் புரியலை அதுக்குள்ள வார்த்தைகளை விடாதீங்க……”என்று நிமலன் எச்சரிக்கும் விதமாக கூற,
“ஆமா ஆமா தப்பு தான் பெரிய தப்பு தான் நான் உன் பேச்சையும் உன் அப்பன் பேச்சையும் கேட்டது என் தப்பு தான்….நாங்க கிளம்புறோம்….”என்ற சதாசிவத்தை தடுத்தான் அமரன்.
“ஒரு நிமிஷம் நல்ல காரியம் பேச வந்துட்டு இப்படி போகக்கூடாது வெயிட் பண்ணுங்க….பேசிட்டே போகலாம்…..”என்று அமரன் தீர்த்தாவை முறைத்துக் கொண்டே கூற,
“எதுக்குடா என்னை முறைக்குற….என்ன பேச போற….நாங்க கிளம்புறோம்….நீ உன் வீட்டு பஞ்சாயத்தை பாரு….”என்று அவளும் கோபத்தில் கத்த,
“எனக்கு தெரியும் நீ உன் வாயை மூடிக்கிட்டு ஓரமா நின்னன்னா நல்லது இல்லை பல்லு கழண்டுடும்…..”என்று கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்ப,
“நீ என்னப்பா சொல்லுற….நானே பெரிய தப்பு பண்ணிட்டேன் தம்பி….எனக்கு மனசே சரியில்லை நாம அப்புறம் பேசலாம்….வாங்கமா….”என்று சிவம் கிளம்புவதிலேயே குறியாக இருக்க,
“உங்க கண்ணுக்கு நான் எல்லாம் மாப்பிள்ளை மாதிரி தெரியலை போல….பரவாயில்லை தெரியவச்சிடுவோம்…..”என்று கூற அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர் என்றால் அப்போது தான் கதிருடன் வந்திறங்கிய அகிலா,அமரனின் பேச்சை கேட்டுவிட்டு,
“அமரா…என்ன பேசுற….”என்றபடி அவனின் அருகில் வந்தவர்,
“பளார்…..”என்று அறைந்துவிட்டார்.ஒருநொடி அந்த இடமே அமைதியாகிவிட்டது.கற்பகமோ என்ன நடக்கிறது இங்கே என்று எதுவும் புரியாமல் நின்றார்.அகிலாவும்,கற்பகமும் இன்னும் தாமரை பார்க்கவில்லை அவள் செய்து வைத்திருக்கும் காரியம் தெரிந்தால் அவர்களின் நிலை.
error: Content is protected !!