Skip to content
Post Views: 3,509
மார்கழி – 19
தினம் வருவதுதான் என்றாலும் எப்போதும் ஏற்றுவிடமாட்டான் அழைப்பினை. இரண்டு நாளுக்கு ஒருமுறை தான் பேசுவான். ஒருமுறை அடித்து ஓய்ந்து இரண்டாம் முறை அழைப்பு வரவும் புருவங்கள் உயர்ந்தது. யோசனையோடு அழைப்பை ஏற்றவன், “நேத்தி தான் பேசுனேனே. எதுக்கு திரும்ப திரும்ப கூப்பிடுறீங்க?”
அவன் குரலில் இருந்த அந்நியத்தை பிரித்தறிந்த மேகலா, “என்கிட்ட பேசுறதுக்கு கூட கசக்குதுல உனக்கு. முன்னாடியெல்லாம் ஒருநாளைக்கு ரெண்டு தடவை பேசுவ.” என்று வருத்தம் மேலிட முறையிட, நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டான்.
“இப்போ என்ன ம்மா?”
Advertisement
“தாமரை வீட்டுக்கு வந்திருக்கா.” என்றவரை இடைமறித்து, “சரி அதுக்கென்ன?”
“என்ன சொல்ல வரேன்னு பொறுமையா கேக்க கூட கஷ்டமா இருக்கா? அப்படி என்ன வீம்பு உனக்கு? எல்லாமே புதுசா பண்ற அறிவு. உன்னை வேணும்னு சொல்லி கட்டிக்கிட்டு இப்போ வேண்டாம்னு விட்டு தள்ளி இருக்குறவளுக்காக நீயும் அங்க போய் உக்காந்திருக்க. வீட்டுக்கும் வர்றதில்லை. எதிர்த்தே பேசாதவன் இப்போல்லாம் சலிப்பா பேசுற இல்லையா பேசுறதே இல்லை.” மேகலா அடுக்கிக்கொண்டே போக, தலைமுடியை அழுந்த பிடித்திழுத்தவன், “தாமரை எப்படி இருக்கா?” பேச்சை திசை திருப்ப முயன்றான்.
“நான் இவ்ளோ பேசுனதுக்கு அப்புறம் தான் அவளை பத்தி விசாரிக்க தோணுதுல்ல உனக்கு.” அவர் அதற்கும் பேச, எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது அறிவழகனுக்கு.
Advertisement
மனைவியை நெருங்கமுடியவில்லை, தாயை சமாளிக்க முடியவில்லை, கடினமாக செல்லும் புது வேலை, குறிப்பிட்ட கால நேரத்திற்குள் முடியாமல் நீட்சியாகும் வேலை நேரங்கள், மனதை அரிக்கும் குற்றவுணர்வு என தன் இறுக்கங்களை யாரிடமும் பகிர முடியாது தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. ஆறுதல் வார்த்தை எதிர்பார்த்தவனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கன்னிவெடியாய் இருக்க வாய் திறக்கவே பயம்தான்.
Advertisement
“தாமரை மாமியார் கல்யாணமாகி வருஷம் ஒண்ணாச்சு இன்னும் நல்ல செய்தி சொல்லல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்கன்னு சொல்லி இங்க விட்டுட்டு போயிருக்காங்க.”
“அவ வீட்டுக்காரர் ஒன்னும் சொல்லலையா?”
“ராத்திரி வரேன்னு சொல்லியிருக்காரு. தாமரை கலங்கி போய் உக்காந்திருக்கா. உன் வாழ்க்கை தான் இப்படி இருக்குன்னா இப்போ இவ வந்து இப்படி நிக்குறா. யாருக்குனு பாக்க நானு?” மேகலாவின் குரல் கலங்கிப்போய் வந்ததோ.
Advertisement
“தைரியமா இருக்க சொல்லுங்க அவளை. பாத்துக்கலாம். அவங்க சொல்றாங்கன்னு உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நிக்காதீங்க. தாமரை விருப்பம் என்னவோ அதுபடியே செய்யலாம்.” என்று சொல்ல, மகன் வார்த்தையில் தெம்பு பெற்றவராய், “ராத்திரி மாப்பிள்ளை வந்ததும் பேசிட்டு முடிவு பண்ணலாம்னு அப்பா சொன்னாங்க. வேலை முடிஞ்சிடுச்சா? டீ, காபி எதுவும் குடிச்சியா?” என்ற பொதுவான விசாரிப்புகளுக்குப் பின், “இன்னைக்கு சாமான் வாங்க போனப்போ உமாவை பாத்தேன். உன்னை மாதிரியே ஆளே வாடிப் போய் இளைச்சாப்புல இருக்கா. உன் அத்தை கூட அவ முன்ன மாதிரி கலகலன்னு இல்லைனு புலம்புனாங்க.” என்று தொடர, பேச்சு செல்லும் திசை அவனை திடுக்கிட வைத்தது.
“ம்மா எனக்கு ஆபீஸ் கால் வருது. அப்புறம் பேசுறேன்.” என்று அவசரமாக வைத்துவிட்டான்.
அழைப்பை துண்டித்துவிட்டாலும் உமா குறித்து அவர் கடத்திய வார்த்தைகள் அவனைக் குடைந்தது, ‘அன்னைக்கு பேசும் போது நல்லாயிருந்தாளே. அதுக்குள்ள என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அம்மா எதுவும் பேசி அவ மனசுல திரும்பவும் ஒரு எண்ணம்…?’ தன் மீது எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டிருப்பாளோ என்ற எண்ணமே அவனை பதறச் செய்ய, தலையை உலுக்கிக்கொண்டான். கூடவே கைவிட்டுப் போன காதல் கொடுத்த வருத்தம் கொஞ்சமும் தன்னைப்போல் தத்தளிக்காமல் அவள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும்.
சில நிமிடங்கள் தாய் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் மனதில் வந்து போக, தாமரை குறித்து யோசித்தவன் எண்ணத்தில் கடைசியில் வந்தது என்னவோ உமா தான். எப்போது பேசினாலும் உமாவை இழுக்காது மேகலா இருப்பதில்லை என்பதால் தான் தவிர்த்துவிடுவது. சில நேரங்கள் இதுபோல் தவிர்க்க முடிவதில்லை.
‘இதுக்குத்தான் அவங்க போனே எடுக்கக்கூடாது. எப்படி டிஸ்டர்ப் ஆகுற பாரு.’ என்று தன்னைத்தானே கடிந்துகொண்டவன் உடனே இயலணிக்கான பக்கத்தை வாட்ஸ்அப்பில் திறந்தான்.
‘பீலிங் டிஸ்ட்டர்ப்ட்’ என்று ஒரு செய்தியை தட்டிவிட்ட பின்தான் அவளது முகப்பை பார்த்தான். இத்தனை நாள் வெறுமையாக இருந்த இடத்தில் இன்று சுவாமி படம் இருந்தது.
காற்றை நன்றாக உள்ளிழுத்து சத்தமின்றி இதழ் குவித்து அதனை வெளியேற்றியவன், ‘என் நம்பரை சேவ் பண்ணிட்டாளா?’ என்று குதூகலிக்க, சட்டென வானிலை மாறியது போல் கலக்கங்கள் நீங்கி உல்லாச சாரல். இறுக்கம் கொண்டிருந்த தசைகள் தளர்ந்து இலகுவாகியது. மனதின் அழுத்தங்கள் மட்டுப்பட, ‘இன்னைக்காவது சீக்கிரம் வேலை முடிச்சி இவனுங்க கிளம்ப விட்டா பரவாயில்லை.’ என்று கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டான். அவள் பள்ளி முடியும் நேரம் நெருங்கியிருந்தது.
‘ஊஃப்… ஈவினிங் அவளை பாக்கவே முடியல. இவனுங்க வேற ராத்திரி வரை வச்சி செய்யுறாங்க.’ மனதின் புலம்பல்கள் அதிகரித்தது.
‘தினம் அவளை பாக்குறத்துக்காக அவ போற பஸ்ல வரேன்னு நேத்திக்கே கண்டுபுடிச்சிருப்பா. ஆனா எதுவும் சொல்லலையே.’ என்றவனுக்கு, ‘கோவப்பட்டு உன்னை திட்டக்கூட இல்லைடா. எப்போதும் சொல்ற டிஸ்டர்ப் பண்ணாதேன்னும் சொல்லல.’ என்று சிந்தை எடுத்துக்கொடுத்து அவனை மலர்ச் செய்தது.
‘கோபம் குறையுது டீச்சர் அம்மாவுக்கு.’ சொல்லிக்கொண்டவன் இதழ்களில் வாடாப்புன்னகை குடிகொள்ள, அதே மனநிலையுடன் மறுநாள் காலை பேருந்து ஏறினான்.
சில நிறுத்தங்கள் தள்ளி அவள் ஏறிக்கொள்ள, அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் விழிகள் சட்டென வெளிச்சம் கொண்டது. பேருந்தில் ஏறியதும் காலி இருக்கை தேடி அமர்ந்துவிடுபவள் விழிகள் இன்று காலி இருக்கையை விட்டு பேருந்தை அலசியது. தன்னைத்தான் தேடுகிறாள் என்று புரிந்துகொண்டவன் சற்று நிமிர்ந்து அமர, அவனை கண்டுகொண்டதும் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்.
‘என்ன ஒரு ரியாக்ஷனும் காணும்?’ என்று அவன் எண்ணிய கணமே மின்னலென அவனை திரும்பிப் பார்த்து மீண்டும் திரும்பிக்கொண்டாள்.
‘என்னவாம்?’ என்ற யோசனையுடன் லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு எழுந்தவன் நகர்ந்து அவளருகில் சென்றான்.
இருக்கைக்கு நேரே அவன் வந்து நின்றதும் நிமிர்ந்து பார்த்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை. அதுவே அவனை தைரியமூட்ட, கவனமாக அவளை உரசாத வண்ணம் அருகில் அமர்ந்துகொண்டான். அதற்கும் எதிர்வினை இல்லை அவளிடம்.
‘புடிச்சி தள்ளிவிடாம உக்கார விட்டதே பெருசு. அமைதியா கிட’டா.’ அவளிடம் பேச முயலச் சொல்லும் மனதை தட்டி வைத்தவன் நடத்துனர் வரவும் அவளுக்கு அவனே பயணச்சீட்டு எடுத்தான். பயணச்சீட்டு எடுக்க கையில் வைத்திருந்த பணத்தை மீண்டும் பையினுள் இயலணி திணித்துவிட,
“மன்த்லி பாஸ் எடுத்துக்கலாம்ல.” டிக்கட்டை தன் சட்டை பையினுள் வைத்தபடி பேச்சு கொடுத்துப் பார்த்தான்.
ம்கூம் பதில் இல்லை.
“இயல்.”
“அமைதியா இருக்கேனு அட்வான்டேஜ் எடுக்க ட்ரை பண்ணாதீங்க.” நிதானமாக வந்தது அவள் குரல்.
“இயல் அப்படி இல்லை… நான்…” ஏதோ பேச வந்தவனை கைகாட்டி தடுத்தவள்,
“இப்படி என்னை பாலோ பண்றதாலையோ டிக்கெட் எடுக்குறதாலேயோ எதுவும் மாறப்போறதில்லை. தேவையில்லாம என் பின்னாடி வர்றதை விட்டுட்டு உங்க வேலையை பாருங்கனு சொல்றதுக்கு தான் நீங்க பக்கத்துல உக்காந்ததுக்கு எதுவும் சொல்லல.” என்றவள் அவள் பள்ளி வரவும் எழுந்துகொண்டாள்.
பெருமூச்சுடன் நகர்ந்து வழிவிட்டவன் அவள் இறங்கி நடப்பதை பார்த்துக்கொண்டே அமர்ந்தான். பேருந்து நகர, பார்வை வட்டத்தை விட்டு அவள் மறைந்து போனாள்.
‘எந்த பக்கம் போனாலும் அணை கட்டுனா என்னதான் பண்றது?’ என்று புலம்பியவன் தன் முயற்சியை விடவில்லை. தினம் காலை நேர பயணத்தை அவளுடன் அவளருகில் செலவிட ஆரம்பித்தான். பேச்சுக்கள் எதுவும் இருவருக்கிடையில் இருக்காது. ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் அவன் பேசினால் அதை காதில் வாங்கிக்கொண்டது போல் காட்டிக்கொள்ள மாட்டாள். அன்றும் அமைதியாக இருக்க, இயலணியின் உடல்மொழியை கவனித்தவனுள் யோசனை.
“உடம்புக்கு முடியலையா இயல்?” புருவம் சுருங்கி முகம் சோர்ந்து தளர்ந்து இருப்பவளை கண்டு கேட்டான் அறிவழகன்.
எச்சில் கூட்டி விழுங்கியவள் வலியை பொறுப்பது போல் கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் தளர்வாய் சாய்ந்தாள்.
“உன்னைத்தான் என்ன பண்ணுதுனு சொல்லு. டாக்டர்கிட்ட போலாமா?” விடாமல் அவள் தோள் தட்டி கேட்க,
“வயிறு வலிக்குது.” என்றாள் முயன்று வறண்டு போன குரலில்.
“ஏன் திடீர்னு? என்னாச்சு? உனக்கு இப்படி வலிக்காதே?” மெல்லிய குரலில் புருவம் சுருக்கி அவளைப் பார்க்க, இடவலமாய் தலை அசைத்தாள்.
“அந்த வலி இல்லை.” என்றவளால் முடியாது போக, உதட்டை கடித்து பையை வயிற்றோடு இறுக பிடித்துக்கொண்டு இருக்கையில் சுருண்டு போக, அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“ஹாஸ்பிடல் போலாம் இயல். இதோட இன்னைக்கு நீ ஸ்கூல் போக வேண்டாம். பக்கத்துல எங்க ஹாஸ்பிடல் இருக்குனு பாக்குறேன்.” என்று அலைபேசியை எடுத்துப்பார்க்க, வாகாக அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“ரொம்ப வலிக்குது.” முனகலுடன் அவள் கரங்கள் அவன் புஜத்தை இறுக பற்றிக்கொண்டது.
தன் கரம் சுற்றிய அவள் கரத்தின் மீது கை வைத்து அழுத்தியவன் நடத்துனரை கைகாட்டி அருகில் அழைத்து மருத்துவமனை அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தை கேட்டுக்கொண்டு அவ்விடம் வரை பயணசீட்டு வாங்கிக்கொண்டான்.
“இன்னும் மூணு ஸ்டாப்ல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. போயிடலாம்.” மெல்லிய குரலில் ஆதரவாய் பேசியவன் தன் தோள்பட்டையில் பதிந்திருந்த அவள் தலையை மென்மையாக கோதிவிட்டான்.
வலி கூடும் சமயம் பிடித்திருக்கும் அவன் கரத்தை அழுந்தப்பற்றி முகத்தை அவனுள் புதைக்க முயல்வதுமாய் பின் பிடிமானத்தை தளர்த்துவதுமாய் இருக்க, அவளது வலி அளவினை உணர்ந்து கொண்டான் அறிவழகன்.
“கொஞ்சம் தண்ணி குடிச்சி பாக்கறியா இயல்?” அவள் பக்கமாய் தலை சரித்து கிசுகிசுக்க, மறுப்பாய் அசைந்தது அவள் தலை.
“கொஞ்சமா குடி இயல்… வலி குறையுதான்னு பாப்போம்.” மெல்ல பேசி பேசி கொஞ்சமாய் அவளை தண்ணீர் பருக வைக்க, வலி மட்டுப்படுவது போலிருந்தது. வாயை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள் வலி திரும்ப வரவும் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“இன்னும் ஒரு ஸ்டாப்தான்.” பேச்சு கொடுத்தபடியே அவள் கையை பற்றுவதுமாய் சிகை கோதுவதுமாய் இருந்தவன் இறங்குமிடம் வரவும் அவளது கைப்பையை எடுத்துக்கொண்டு அவளையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு இறங்கினான்.
“பையை நான் வச்சிக்கிறேன்.” கை நீட்டி தன் கைப்பையை வாங்க முனைந்தவளிடமிருந்து கையை பின்னகர்த்தியவன், “இப்போ என்ன நாந்தான. வா.” அருகிலேயே இருந்த சிறிய மருத்துவமனைக்கு வந்தவர்களை காத்திருக்க சொல்லியிருந்தனர்.
அவளை அமர வைத்து அருகில் அமர்ந்துகொண்டவன், “காலையில என்ன சாப்பிட்ட?”
“இட்லி.” என்றவள் முகத்தை துடைத்துக்கொண்டு, “நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க. ஆபீஸ் போகணும்ல.”
“ம்ச்… அதுவா முக்கியம் இப்போ. எதுவும் வேணுமா? வாங்கிட்டு வரவா? ஜுஸ் குடிச்சி பாரேன்.” என்று கேட்க அனைத்திற்கும் மறுப்பாகவே அசைந்தது அவள் சிரம்.
பொறுத்துப்பார்த்தவன் இரு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவன் வரும் போது கையில் பழச்சாறுடன் வந்தான்.
“வேண்டாம் சொன்னேனே.” சோர்வாய் நினைவுப்படுத்தினாள் இயலணி.
“எவ்ளோ முடியுதோ அவ்ளோ குடி. வயிறுக்கு நல்லதுதான்.” அந்த கப்பின் மூடியில் ஒரு ஓட்டை போட்டு ஸ்ட்ராவை திணித்து கொடுத்தான்.
அவன் வற்புறுத்தலில் கொஞ்சம் குடித்தவள் மீதியை கையிலேயே வைத்திருக்க, “இன்னும் ஒரு வாய் குடியேன்.” என்றவனிடம் விழி விரித்து மறுக்க, அதனை வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டான்.
இயலணி அதிர்வாய் பார்க்க, “லைட்டா பசி.” கண்கள் சுருக்கி அவன் சொன்ன பாவனையில், “இன்னும் சாப்பிடலையா?” என்று இயலணியிடமிருந்து இயல்பாய் வந்தது கேள்வி.
“ஆபீஸ் பக்கத்துல ஒரு கடையில தான் சாப்பிடுவேன்.”
“நீங்க போய் சாப்பிட்டு வாங்க. டாக்டர் வர லேட்டாகுமே.”
“இப்போ பசிக்கல.” என்றவன் நகர மாட்டேன் என்பது போல் கைகட்டி அமர்ந்துவிட்டான். அதற்கு மேல் அவனை வற்புறுத்த உடல் ஒத்துழைக்காததால் கண்களை மூடி இயலணி அமர்ந்துவிட, தயக்கத்துடன் அவளைப் பார்த்தவன் அவள் தோள் சுற்றி கைபோட்டு தன் மேல் சாய்த்துக்கொண்டான். உள்ளுக்குள் லேசாக பயம்தான் எங்கே முகம் காண்பித்துவிடுவாளோ, தள்ளிவிடுவாளோ என்று. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை இயலணி. அந்த நேரத்திற்கு அவன் அருகாமையும் அவன் இதமும் தேவையாய் இருந்தது. வறண்டு வெடித்திருந்த வரப்புக்கு கிடைத்த நீர் போல் அவன் ஆதரவு மனதிற்குள் குளுமை பரப்ப, காலையிலிருந்து படுத்தும் வலி கூட குறைந்து தெம்பு கூடுவது போல் இருந்தது. அதன் தாக்கத்தில் லேசாக முனங்கியவள் முகத்தை அவன் தோளில் புரட்டி இன்னும் நன்றாக சாய்ந்துகொள்ள, அவன்தான் விழிகளை அலைபாயவிட்டு நெளிந்தான்.
சிறிது நேரத்தில் மருத்துவர் வர, அவளை பரிசோதித்தவர் இரவு விடுதியில் உண்ட பரோட்டா தான் பிரச்சனை என்று கண்டுகொண்டு மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். ஒரு வாரத்திற்கு காரம் குறைவான எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் எடுக்கச் சொல்ல, அவளை பார்வையாலே அடக்கி மாத்திரை வாங்கி, மருத்துவருக்கான கட்டணம் செலுத்தி அழைத்து வந்தான் அறிவழகன்.
“இப்போவாச்சும் பையை குடுப்பீங்களா?” வெளியே வந்ததும் இயலணி கை நீட்ட, “தூக்கிட்டா ஓடிட போறேன். கேட்டுட்டே இருக்க.” என்றவன் அவள் பையை நன்றாக மேலுயர்த்தி மாட்டிக்கொண்டான்.
‘ரொம்பத்தான் அக்கறை.’ என்று முணுமுணுத்தவள் சற்று தெளிந்திருக்க, ஆட்டோ வந்து நின்றது அவர்கள் எதிரே.
“ஏறு இயல்.” என்றவனை புரியாது பார்க்க, அவள் கைபிடித்து உள்ளே அமரும்படி நகர்த்தினான். மண்டையை பொளக்கும் வெயிலை அண்ணாந்து பார்த்தவள் ஆட்டோவில் ஏறினாள். ஓ.டி.பி சொல்லி அவனும் ஏறிக்கொள்ள,
“ட்ராப் லொகேஷன் எங்க போட்டிருக்கீங்க?”
“இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடு.” என்றான் அவன்.
“நான் கேட்ட கேள்விக்கு இதில் பதில் இல்லையே.” என்று அவள் அழுத்தமாய் பார்க்க,
“டீச்சரம்மா தான நீ. பதில் சரியில்லைன்னா தப்பு போடு.” என்றான் இலகுவாய்.
அப்பட்டமாக முறைத்தவள், “கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே…” என்று ஆரம்பிக்க,
“இப்போ பாத்த டாக்டர் நல்ல டாக்டர் தான்ல.” என்று சம்மந்தமில்லாமல் பேசினான்.
நெற்றி சுருக்கியவள், “என்ன?” என்று அதட்டலாய் கேட்டிட,
“கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் பேசவே முடியாம இருந்த பொண்ணு இப்போ சண்டை போட ரெடியா இருக்காளே… அப்போ அவர் நல்ல டாக்டர் தான்ல?” கண்சிமிட்டி பார்த்தான் அவளை.
“அவர் ஊசியும் போடல, மாத்திரை மட்டும்தான் கொடுத்திருக்காரு. அதுவும் இனிமேதான் போடணும்.” மருந்து என்று எதுவும் உட்செல்லவில்லை என்றாள் அவள்.
“பார்த்ததுக்கே இப்படியா அப்போ… சூப்பர்.” என்று அவன் இதழ் விரிக்க, பல்லைக் கடித்தாள் இயலணி.
“எங்க போறோம்?” அவள் பள்ளியைத் தாண்டி ஆட்டோ சென்றுகொண்டிருக்க, விடுதிக்கு தான் ஆட்டோ போட்டிருக்கிறான் என்று நினைத்துக் கேட்டாள்.
“இன்னைக்கு ஒரு நாளாச்சும் உனக்கு ரெஸ்ட் வேணும் இயல். நான் வீடு எடுத்துதான் தங்கி இருக்கேன். இன்னைக்கு மட்டும் அங்க வந்து ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு உன் ரூம் போயிடலாம்.” தன்மையாகவே சொன்னான். எங்கே அவன் வீடு வரை அழைத்து சென்ற பிற்பாடு அவள் முடியாது என்று நடுவீதியில் நின்று மறுத்தால் காட்சிப்பொருள் ஆக நேரிடுமோ என்றும் அவ்வளவு தூரம் சென்று அவளை கோபப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் அவன் யோசனையை சொல்லியிருக்க, ஜிவுஜிவுவென்று ஏறியது சினம்.
“யாரை கேட்டு முடிவு எடுத்தீங்க?” ஆட்டோ ஓட்டுனரை கருத்தில் கொண்டு மெல்லமாகவே பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.
“வலிக்குதுன்னு தெரிஞ்சும் உன் ரூம்ல இருக்க முடிஞ்சிருந்தா நீ ஏன் ஸ்கூலுக்கு கிளம்பி வந்திருக்கப் போற? அங்க இருக்க முடியாம தான வந்த. திரும்ப அங்க போய் எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும்? என் கூட வா, அந்த வீடு அமைதியா இருக்கும். ஒரு தொந்தரவும் இருக்காது, என்னாலையும் வராது.” கடைசி வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுத்தவன்,
“அந்த தெருவுல வீட்ல சமைச்சி கொடுக்குறவங்க கொஞ்ச பேர் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லி உனக்கு ஏத்த மாதிரி சாப்பாடு வாங்கிக்கலாம். ரூம்ல நீ தூங்கு, நான் ஹால்ல ஒர்க் பண்ணிப்பேன்.” என்று நீளமாக பேசி முடிக்க, அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
அவள் பார்வை உணர்ந்து உள்ளுக்குள் பதறினாலும், “என்ன இயல் கோவமா?” என்று மென்மையாகவே கேட்க,
“இவ்வளவு அக்கறையா பேச வருமான்னு பார்த்தேன்.” என்றாள் மனதை மறைக்காது.
“ஏன் எனக்கு அக்கறை இல்லைனு தோணுது உனக்கு?” குழப்பமாய் அவன் கேட்க,
“அக்கறை இல்லைனு இல்லை. என்கிட்ட காமிக்குறீங்களேனு பாத்தேன்.” என்றாள் அவளும் அசராமல்.
“இயல், என்ன பேசுற நீ?” நெஞ்சம் உறுத்த கலக்கமாக அவன் பார்க்க, தோள் குலுக்கியவள், “விடுங்க. எல்லாம் புதுசா இருக்கு.”
“நடுவுல தப்பு பண்ணேன் தான். ஆனா உன்னை பார்த்த நாள்லேந்து அக்கறையா தான பாத்துக்கிட்டேன் உன்னை.”
“ப்ச்… அதுக்கும் இப்போக்கைக்கும் ஏதோ வித்தியாசம் இருக்கு.” என்றவள் மெளனமாய் ஏதோ சிந்தனையில் இருப்பவள் போல் அமர்ந்துவிட, என்ன சொல்கிறாள் இவள் என்று தலைகோதி நேராய் அமர்ந்தான்.
‘இப்போ வீட்டுக்கு வருவாளா மாட்டாளா?’ என்ற அவன் கேள்விக்கு பதிலாய் அவள் விடுதியை கடந்து செல்கையில் அதனை கவனித்தாலும் பேசாதிருக்க,
‘அப்போ என் பொண்டாட்டி என்னோட வீட்டுக்கு வரா டோய்.’ இனிய அதிர்வு அறிவழகனிடம்.
error: Content is protected !!