Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 21

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 21

  மகள் வாழ்க்கை பற்றி பேசி முடிவெடுக்க தான் தேவ தாஸ் வேகமாக மித்ரன் வீடு தேடி வந்தது. அங்கு வந்ததும் ஒரு தயக்கம். விஷயம் எதுவும் நேராக இவர் பார்க்க நடக்க வில்லை.. சொன்னதும் பேரன் தான். சின்ன பையன் பேச்சை எத்தனை தூரம் நம்புவது.. கொஞ்சம் தயங்கி தான் மித்ரன் வீட்டுக்கு வந்தார்.

 தயக்கமே தேவையில்லை என்பது மாதிரி தான் மித்ரன் வரவேற்றான்.. உடன் அவன் அக்கா கணவர்கள் இருவர் இருந்தார்கள். தேவ தாஸ் கொஞ்சம் திடம் கண்டார். முதலில் ஆர்த்தியை சொல்லி தான், தன்னைஅறிமுகம் செய்து கொண்டார். அந்த உறவு முறை தானே அவர்களுக்கு தெரியும். முதலில் குடும்ப விஷயங்களில் நலம் விசாரித்தல் என்று தான் சென்றது.. ஒரு கட்டத்தில் தேவதாஸ் அமைதியாக இருக்க புவனன் , தன் மச்சனை பார்த்தான்.

மித்ரன் தன்னை தயார் படுத்திக் கொண்டான், “ சார் எனக்கு உங்க பொண்ணு பிரபவீனாவ ரொம்ப பிடிச்சு இருக்கு.. அவங்களை கல்யாணம் செய்துக்க ஆசை படுறேன். முறையா அந்த விஷயத்தை நான் அவகிட்ட சொல்லவும் செஞ்சுட்டேன். அவளுக்கு விருப்பம் இல்லை. பிரவீயோட சூழ்நிலை அப்படி.. அது பிரச்சனை இல்லை. முறையா நான் உங்களுக்கு சொல்லணும்”என்றவன், தான் மாமாவை பார்க்க…



Advertisement

 மேலே சொல்லு என்று புவன் தலையாட்ட,

“நான் யுவி மித்ரன். எனக்கு முப்பத்தி அஞ்சு வயசு ஆச்சு. சொந்த ஊர் குன்னூர். அம்மா, அப்பா அங்க தான் இருக்காங்க. ரெண்டு அக்கா இருக்காங்க. அவங்களை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம். சென்னையில தான் இருக்காங்க”

மித்ரன் பேச பேச புவன்க்கு லேசாக சிரிப்பு வந்தது. ரொம்ப பொறுப்பாக, குடும்பத்தோடு இணைந்திருக்கும் நல்ல மகனாக, கடமையை தட்டிக் கழிக்காதவனாக சிறப்பாக பேசிக் கொண்டிருந்தான் மித்ரன். ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது. மித்ரன் அந்தப் பெண்ணை மிகவும் விரும்புகிறான் என்று…

Advertisement

“நான் படிச்சது வெளிநாட்டில, அங்க தான் வேலை பார்த்தேன். கொஞ்சம் வருஷமா தான் சென்னையில இருக்கேன். என்னோட சம்பளம் ஒன்றை லட்சம். இது என்னோட சொந்த வீடு. அப்புறம் தனியா ஒரு வீடும் இருக்கு.. ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். ஒரு ரெண்டு கோடி கிட்ட சேவிங் இருக்கு…” என்றவன் கொஞ்சம் தயங்கினான்.

Advertisement

நான் அப்படித்தான் என்று பெற்றவர்களிடம் கூட தன் வாழ்க்கை முறை குறித்து தயங்காமல் பேசியவன். இன்று பெண் கேட்கும் இடத்தில் கொஞ்சம் தயங்கினான். எவ்வாறு தன் முந்தைய வாழ்க்கையை சொல்ல முடியும்.

“சார் இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.. நான் கொஞ்சம் வெளிநாட்டுல படிச்சு, அங்கேயே ஒரு பதினைந்து வருஷத்துக்கு மேல இருந்துட்டேன். அதனால, என்னுடைய பழக்க வழக்கம் கொஞ்சம் தப்பா தான் இருந்துச்சு.. அப்ப எனக்கு வாழ்க்கையே பத்தின புரிதல் எதுவும் கிடையாது. அங்க நான் என்ன பார்த்தேனோ.. அதை வாழ்க்கைன்னு நினைச்சு அப்படியே நான் இருந்துட்டேன்” என்றவன், ஒரு பெருமூச்சு விட்டு,

“பிரவீனாவை நான் ரொம்ப உண்மையா நேசிக்கிறேன். வாழ்க்கையை குறித்த புரிதல் எனக்கு தொடங்கி வச்சதே அவ தான். என்னை பெத்தவங்க கிட்ட கூட ஒதுங்கி தான் இருந்து இருக்கேன். குடும்பத்தை என் சந்தோச வாழ்க்கைக்கு தடையா தான் நினைச்சேன். இன்னைக்கு நான் ஒரு குடும்பத்தை உருவாக்க நினைக்கிறது அவளால தான். ஹீ இஸ் மை ஏஞ்சல். இவங்களோட வாழ்ந்தால் என் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். இவங்களோட வாழ்வதுதான் என் வாழ்க்கைக்கு அர்த்தம்னு நான் நினைக்கிறது பிரவீனாவை மட்டும்தான். கண்டிப்பா உங்க பொண்ண நான் நல்லா பாத்துப்பேன். என்னை நீங்க நம்பலாம். என் வாழ்க்கையில மனைவியா பிரவீனா வந்ததுக்கப்புறம் வேற யாருக்கும் அங்க இடம் இருக்காது. அதை மட்டும் உறுதியாக சொல்லுவேன்”

Advertisement

“ப்ளீஸ் ஓகே சொல்லிடுங்க சார். பிரவீனா இல்லாத ஒரு கல்யாண வாழ்க்கையை என்னால யோசிக்கவே முடியாது. இந்த வாழ்க்கை அவளுக்காக தான். நான் இன்னைக்கு சொல்றதுதான். கண்டிப்பா உங்க பொண்ணுக்கு உண்மையா இருப்பேன். என்னை நம்பி நீங்க உங்க பொண்ணை கொடுக்கலாம். ப்ளீஸ் சார்” பொண்ணு கேட்டு விட்டான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் நெகிழ்ந்து போய் அமர்ந்து இருந்தார் தேவதாஸ். பிரவீனா தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு தந்தையிடம் அடைக்கலம் தேடி வந்த பின்.. அவரும் சில வரன்களை பார்த்தார் தான். மகள் விதவையாக இருக்கும்பொழுது அப்படியே வைத்துக்கொள்ள எந்த பெற்றோர்களுக்கு மனம் விரும்பும்.

  அப்படி பார்த்த சில வரன்களும் மித்ரன் போல விரும்பி எல்லாம் பெண் கேட்க வில்லை. ரெண்டாம் திருமணம் என்பதாலே நிறைய காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியதாக இருந்தது. அத்தோடு பிரவீனா இரண்டாம் திருமண பற்றிய பேச்சு எடுக்க விடவில்லை. கொஞ்ச நாள் சென்று, எப்படியும் மகளுக்கு மற்றொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

“சார்” என்று மித்ரன் அழைக்க, அவன் கைகளை பிடித்து கொண்டவர்,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி. மன நிறைவா இருக்கு. நான் என்னமோ நினைச்சு வந்தேன். என் நெஞ்சில் பாலை வார்த்துட்டீங்க. என் மகன்றதுக்காக சொல்லலை… உண்மையிலேயே பிரவீனா ரொம்ப தங்கமான பொண்ணு, அப்பாவி.. கடவுள் அதுக்கு தான் நிறைய கஷ்டத்தை கொடுத்துட்டான். என் பொண்ண நான் சமாளித்துக்கொள்கிறேன் தம்பி. பிரவீனா உங்களுக்கு கொடுக்க எனக்கு மனப்பூர்வமான சம்மதம்” என்றவர்,

“எனக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல பென்ஷன் வருது. நானும், என் மனைவியும் நல்ல திடமா தான் இருக்கோம். ஆதிரனை நாங்களே பார்த்துப்போம். கண்டிப்பா உங்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டோம். எங்க அக்கா இப்ப கொஞ்சம் கோவமா இருந்தாலும்.. பின்னாடி பேரன்ற பாசம் வந்துரும்.. அவனுக்கு, அவங்க அப்பா வீட்டு சொத்தும் இருக்கு. அதனால உங்களுக்கு எந்த பிக்கள் புடுங்கலோ இருக்காது” என்று அவர் பேசி கொண்டே போக,

“சார் என்ன பேசுறீங்க. எனக்கு பிரவீனாவோட சேர்த்து ஆதிரனும் தான் வேணும். நான் எப்போ ஆதிரனை தள்ளி வைக்கிறத சொன்னேன். பிரவீனா என்னோட மனைவியாவும், ஆதிரன் என்னோட மகனாவும் தான் இருப்பாங்க.. அதுல மாற்று கருத்து கிடையாது. உங்களுக்கே தெரியும் நானும், அத்துவும் எவ்வளவு நெருக்கம்னு… நான் எப்படி அவனை? என்ன சார் நீங்க அவன் சின்ன குழந்தை.. பிரவீனா அவனோட அம்மா. பெத்த தாய்க்கிட்ட இருந்து பிள்ளையை எப்படி சார் பிரிக்க முடியும். நான் குடும்பத்தோடு சேர்ந்து வளரலையே தவிர குடும்பத்தோட அருமை எனக்கு தெரியும்”

“அவங்க ரெண்டு பேரோட சேர்ந்து நாங்க மூணு பேரும் இருக்கத்தான் ஆசைப்படுகிறேனே தவிர, அவங்க ரெண்டு பேரையும் தனித்தனியா பிரிக்கிற எண்ணமே எனக்கு கிடையாது. நீங்க பாட்டுக்கு போய் பிரவீனா கிட்ட இப்படி பேசிடாதீங்க. ஏற்கனவே அவ கோவத்துல இருக்கா.. இதெல்லாம் தெரிஞ்சா அவ்வளவுதான். நான் எந்த அளவுக்கு பிரவீனாவை நேசிக்கிறனோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே அதிரனை நேசிக்கிறேன். நான் பிரவீனாவை உண்மையா காதலிக்கிறேன். ஆனா, எங்க கல்யாணம்ன்றது மித்ரன், ஆதிரனோட அப்பாவா தான். நீங்க நிதர்சனம், எதார்த்தம் அப்படியெல்லாம் யோசிக்காதீங்க அப்படி யோசிச்சா இதுக்கு விடை கிடைக்காது. எங்களுக்குள்ள ஏன் இப்படி ஒரு பிணைப்பு வந்துச்சுன்னு தெரியாது. பட் ரியாலிட்டி என்னன்னா பிரவீனா என் மனைவி, ஆதிரன் என் மகன். எனக்கான குடும்பம் அவங்க.. எங்கள சேர்த்து வையுங்க” என்று எல்லோரையும் பார்த்து பொதுவாக சொல்லி விட்டான் மித்ரன்.

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள். இவ்வளவு தூரம் மித்ரன் தெளிவாக விளக்கிய பின் வேற என்ன என்று யாருக்கும் யோசிக்க தோன்றவில்லை. எப்படியாவது சேர்த்து வைப்போம் என்று நினைப்புதான் இருந்தது.

இதில் கவனிக்கத்தக்கது பிரவீனாவின் அப்பாதான். மனிதர் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருந்தார். பிரவீனாவுக்கு இரண்டாவதாக ஒரு வாழ்க்கையை அமைக்க அவர் வெளியில் சம்மந்தம் பார்க்கும் பொழுதெல்லாம், சொன்னவர்கள் எல்லாம் முதலில் தடையாக நினைத்தது ஆதரனை தான்.

“அது எப்படிங்க முடியும். பொண்ணு கூட விடுங்க, அது படிச்சிருக்கு. நல்ல வேலையில இருக்கு. அதெல்லாம் சரி தான். எங்க பையனுக்கும் இது இரண்டாம் கட்டு தான். ஆனா, உங்க மகளோட மகனுக்கு என் பையன் எப்படிங்க பார்க்க முடியும். குழந்தை பொறுப்பு என்பது சாதாரண விஷயமா? அவன் இன்னும் ஸ்கூல் கூட போக ஆரம்பிக்கல.. இந்த காலத்து வரவு, செலவு யோசிங்க. விலைவாசி கூடி போய் கிடக்கு.. இதுல படிக்க, வைத்து சொத்து சேர்த்து அவனை செட்டில் பண்ணி இதெல்லாம் நடக்கிற காரியமா? அந்த சின்னப் பையன் வேணாம். பொண்ண மட்டும் தாரேன்னு சொன்னா மேல பேசுவோம்” தேவதாஸ் விசாரித்தவரை எல்லோரும் சொன்னது இந்த பதிலை தான்.

பெற்ற பிள்ளையை விட்டு பிரவீனா தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பாளா? அதனாலே பிரவீனா வாழ்க்கையை குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் தேவதாஸ்.

தற்போது மகனுக்கும் திருமணமாகி வீட்டுக்கு வந்த பெண், மறைமுகமாக கூட பிரவீனாவை தள்ளி வைக்க.. துடித்து போனார் தந்தை. பேரன் மட்டுமே மகளின் வாழ்க்கை ஆகுமா? கடவுள் எப்படியாவது மகளின் வாழ்க்கையை மலரச் செய்ய மாட்டாரா என்று ஏக்கத்தில் இருக்கும் பொழுது தான், மித்ரன் பேசி வந்தது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்.

தேவதாஸ், மித்ரன் கை பிடித்து கண் கலங்கி விட்டார். வேற வார்த்தையே வரவில்லை.

“சார், என்ன இது?” இவ்வளவு பெரிய மனுஷன் கலங்கும் பொழுது சங்கடமாக இருந்தது மித்ரனுக்கு…

“நீங்க ரொம்ப பெரியவங்க தம்பி. உண்மையா அவன் உங்களோட வாரிசு கிடையாது. அவனுக்கு உரிமையான இடத்தில கூட என் பேரனுக்கு இடம் இல்லை. என்னோட சொந்த அக்கா தான்.. அவங்களே கூட என் மகளையும், பேரனையும் ஒதுக்கி வச்சுட்டாங்க. சொந்தத்தில் கட்டி கொடுத்தா கஷ்ட, நஷ்டத்தையும் இழுத்துட்டு போகும் நெனச்சு தான், எல்லாம் தெரிஞ்சும் என் மகளை அக்கா மகனும் கட்டிக் கொடுத்தேன். இன்னைக்கு என் பிள்ளை தான் வாழ்க்கை இழந்துட்டு வந்து நிக்குது.. எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். என் பிள்ளையை பார்க்கும் போதெல்லாம் என்னால பேசவே முடியல.. நான் தானே சொந்தம் என்று அவசரப்பட்டு முடியாதவன்னு தெரிஞ்சும் கட்டிக் கொடுத்துட்டேன். எல்லாம் என் தப்பு தான்”

“கடைசில பழி எல்லாம் பிரவீனா மேல தான் விழுந்துடுச்சு. இந்த புள்ளை பிறந்த நேரம் தான் அப்பனை கொன்னுடுச்சுன்னு பிள்ளையையும் ஒதுக்கவச்சிட்டாங்க. அவ்வளவு தூரம் பார்த்த என் மகளையும் ஒதுக்கி வச்சுட்டாங்க. அவங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையும், சொத்தும் போச்சு. சந்தோஷமா வாழ வேண்டிய வயசுல கணவனை இழந்துட்டு ஒத்த பிள்ளையோட.. அப்பா, தம்பியோட நிழல்ல கூட நிக்காம இன்னைக்கு மகன காப்பாத்த ஓடிட்டு இருக்கு.. விடிவே இல்லை இப்படித்தான் வாழ்க்கை போகும்ன்னு சோர்ந்து போய் கிடந்த நேரத்துல, நீங்க வந்து?” மிக உணர்ச்சி வச பட்டவர்,

“சாமி இருக்கு தம்பி. நிச்சயமா என் மகள் கும்பிட்ட அந்த மதுரை மீனாட்சி எங்களை கைவிடல” மனிதர் ஒரு நிலையில் இல்லை.

மித்ரனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிந்தது. அந்த நேரம் அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. புவனேந்திரன், குமரனுக்கு கூட சூழ்நிலை ஒரு மாதிரியான மன அழுத்தத்தை கொடுத்தது. இன்னும் பார்த்தே அறியாத பிரவீனா மேல் ஒரு இரக்கம் வந்தது.

பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிய, எல்லோருக்கும் திருப்தி. புவனேந்திரன் மனதில் மட்டும் சிறு உறுத்தல். அவனுக்கு தெரியும் மித்ரன் பற்றிய பெற்றவர்கள் கனவு. முதன் முதலாக அவனுக்கான கல்யாண பேச்சு வார்த்தை, பெற்றவர்கள் இல்லாமல் பேசியது தவறாக பட்டது. என்ன தான் ஒட்டுதல் இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். நாளை தெரிய வரும் போது தங்களை பற்றி என்ன நினைப்பார்கள்.

 “சரி மித்ரன்.. நாங்க கிளம்புறோம். பாப்பாக்கு ஃபாதர்ஸ்டே ப்ரோகிராம் இருக்கு.. கண்டிப்பா போயாகனும்” என்றதும்,

“அப்படியா? ஃபாதர்டேஸ் செலிபிரேஷன் இருக்கா? நம்ம மானுக்கு இருந்தா, அத்துக்கும் இருக்கும் தான?” என்று மித்ரன் கேட்டதும்.

“ஆமா, தம்பி. பிரேம் போயிருக்கான்” என்று தேவ தாஸ் சொன்னதும்,

“மாமா, உங்களோட நானும் வாரேன். அத்து என்ன பண்றான்னு பார்க்கணும்” என்று ஆவலாக சொல்ல,

தேவ தாஸ்க்கு மனம் நிறைவாக இருந்தது. தந்தை என்ற உறவு சாதாரணம் கிடையாது. தன் இரத்த சொந்தம் அல்லாத குழந்தைக்கு தந்தையாக பொறுப்பேற்க துணிவது பெரிய விசயம். அதுவும் மித்ரன் மாதிரி ஒருவனுக்கு, ஒரு முழு குடும்பத்தை தூக்கி கொடுத்து பார்த்து கொள்ள சொன்னால்.. கடமையேற்று, குடும்ப தலைவனாக முன் நிற்பதற்கு நிச்சயம் உண்மையான அன்பு இருக்கணும்… மித்ரனுக்கு, அத்தகைய அன்பு ஆதிரன் மேல் உள்ளது.

 மித்ரன் மதியத்திற்கு மேல் தான் பள்ளிக்கே வந்தான். அவனுக்கு பார்வை ஆதிரனை தேடி தான் சென்றது.

“சரி மித்ரன், நான் போய் பாப்பாவ பாக்குறேன். நீ போய் உன் பையனை பாரு” என்று புவனன் சொல்லவும், மித்ரன் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டான்.

 “ரொம்ப தேங்க்ஸ் மாமா”

“தேங்க்ஸ் எதுக்கு? உண்மையை சொல்லணும்ன்னா உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு” என்று அவன் தோளை தட்டி கொடுக்க,

“உங்களுக்கு என்னை பார்க்கும் போது தியாகி மாதிரி, ரொம்ப நல்லவன் மாதிரி கூட தெரியலாம். ஆனா, நான் எல்லாரையும் மாதிரி எனக்கான வாழ்க்கையை தான் தேடி இருக்கேன்.பட், எல்லாரையும் மாதிரி இல்லை” என்றவன் மகனை பார்க்க சென்றான்.

 ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்கு செல்ல.. அங்கு சொன்னார்கள், “சார் குட்டி பசங்களுக்கெல்லாம் காலையில் முடிந்துவிட்டது சார். இப்ப எல்லாம் பெரிய பசங்க தான் விளையாடுறாங்க”

“ஐயோ, அத்து விளையாடுவதை பார்க்க மிஸ் பண்ணிட்டேனே. ஆனா, சார் எங்க போனாரு பாக்கவே முடியல” சிறிய பிள்ளைகள் இருக்கும் இடம் நோக்கி நகர, அங்கு ஆதிரன் இல்லை.

 சுற்றியும் தேட, அங்கு ஒரு மரத்தை தன் இரு கைகளால் பிடித்து, அதில் தலை சாய்த்து நின்றிருந்தான் ஆதிரன். முகத்தில் சோகம் அப்பி கிடக்க, உதடு தொங்கி போய் அழுகைக்கு தயாராக நின்றது. கண்கள் கூட கலங்கி இருந்தது. ஆனால், கண்ணீர் இமை தாண்டி வெளியே வரவில்லை. பதறிப்போய் மித்ரன் பையனை நெருங்கினாலும், மனம் அப்படியே பிரவீனா போல என்று சொல்லிக் கொண்டது.

 அவளும் அப்படித்தான் இவன் திட்டும் பொழுது லேசாக கண் கலங்கி நிற்பாளே தவிர, ஒரு நாளும் அந்த கண்ணீர் இமை தாண்டி வெளியே வந்ததில்லை.

“ஆதிரன்” என்று அழைக்க, நிமிர்ந்து யாரென்று பார்த்தவன், மித்ரனை கண்டதும் ஓடி வந்து அவன் காலை கட்டி கொண்டான்.

“என்னாச்சு என் ராக்கி பாய்க்கு” என்று அவனை தூக்க முயல.

எங்கே இடம் கொடுக்கவே இல்லை சின்னவன். “அத்து”

 “என்னடா கண்ணா ஆச்சு” பூ முக சிரிப்பும், துள்ளல் நடையும் எங்கே? மெல்ல அவன் தலையை வருடிக் கொடுக்க…

“மாமா, என்னை மறந்துட்டாங்க” சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.

“அத்து.. இங்க பாரு என் முகத்தை பாரு” என்று கட்டாயப்படுத்தி அவனை தூக்கியவன்,

“ என்னாச்சு, மாமா வரலையா?” என்று கேட்க.

“வரலை. மாமாவுக்கு என்ன பிடிக்கலையா? என் கூட விளையாடல? என்னை வண்டில தூக்கிட்டு போகல? எனக்கு சாக்லேட் வாங்கி தரல? என் கூட தூங்கல? என்ன மாமாவுக்கு பிடிக்கலையா? ஆதிரன் குட் பாய் இல்லையா? அதான் மாமாக்கு என்னை பிடிக்காம போச்சா”

“இல்லையே அப்படி எல்லாம் கிடையாது. என் அத்து குட்டி குட் பாய் தானே.. அவனை எல்லோருக்கும் பிடிக்கும். நீ என்ன தப்பு செஞ்ச உன்ன பிடிக்காம போக.. மாமாவுக்கு வேலை இருக்கும் கண்ணா”

 “ஆர்த்தி அத்தை சொன்னாங்க மித்து. அவர்களுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போதாம். அந்த பாப்பா தான் மாமாவுக்கு செல்லமாம். அந்த பாப்பாவ தான் தூக்குவாராம், வண்டியில கூட்டிட்டு போவாராம், சாக்லேட் வாங்கி கொடுப்பாராம்” என்று சோகமாக சொன்ன சின்னவன்,

“நான் யாருக்குமே செல்லம் இல்லையா?” என்று ஆதிரன் கேட்ட கேள்வி, மித்ரன் மனதை பிசைந்தது.

“அப்படி இல்ல அத்து. எனக்கு நீ தான் செல்லம்”

“எனக்கு அப்பா இல்லையாம். எங்க அப்பா செத்துப் போயிட்டாராம்” என்றதும், திகைத்தவன்..

“உனக்கு யார் சொன்னது?”

 “அம்மா” என்று குழந்தை சொன்னதும், மித்ரனுக்கு, அவள் மேல் அவ்வளவு கோபம். சின்ன குழந்தையிடம் என்ன சொல்லி வைத்து இருக்கிறாள்.

“பிரவீனா” என்று பல்லை கடித்தவன்,

“அப்படியெல்லாம் கிடையாது அத்து”

“எனக்கு தெரியும். அம்மா என்னை அடிக்கும் போது அன்னைக்கு அம்மாச்சி சொன்னாங்க, அப்பா இல்லாத பையன் மேல கை வைக்காதன்னு” உதட்டைப் பிதுக்கி கொண்டு ஆதிரன் சொல்ல,

மனம் கனத்தது மித்திரனுக்கு… சின்ன பிள்ளைகள் கவனிக்கிறார்கள். பேசும் பொழுது கவனம் வேண்டாமா… பிரவீனா வீட்டு ஆட்களை நினைத்து எரிச்சல்தான் வந்தது. குழந்தை தான் என்றாலும் அந்த குட்டி மனசிலும் பேசுகிற, பார்க்கிற விஷயங்கள் பதியுமல்லவா…

“உன்னோட விளையாட்டு எல்லாம் முடிஞ்சுதா அத்து”

“ஆமா, எனக்கு மட்டும் தான் வீட்டில் இருந்து ஆளே வரல.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் ஜாலியா அவங்க அப்பா கூட விளையாண்டாங்க..” என்று சொல்லும் போதே உதடு நடுங்கி அழுகை வந்தது. ஆனால், அழுக வில்லை.

மித்ரன் குழந்தையை அணைத்துக் கொண்டான். என்னவோ அவன் மனதை பெரிதாக அழுத்தியது. இவன் வீட்டிலும் குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் யாரும் இப்படி அழுகையை அடக்கி, அதையும் மீறி கண்ணீர் வழிந்து கண்டதில்லை.

இவன் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் சத்தமாக அழுவார்கள். மற்றவர்கள் தன்னை திரும்பி பார்க்க வேண்டும். தன் குறை என்னவென்று கேட்க வேண்டும் என்பதற்காகவே அழுகை சத்தமாக வரும். அவர்களை சமாதானம் செய்து கேட்டதை வாங்கி கொடுக்க வேண்டும்.

ஆனால், ஒரு ஐந்து வயது சிறுவன், பெரிய மனிதனாக தன் அழுகையை அடக்குகிறான். ஏன் அவ்வாறு அழுகையை அடக்க வேண்டும். தான் அழுதாலும், யாரும் தன்னை பார்க்க மாட்டார்கள் என்றா? தனக்கு செல்லம் கொடுக்க ஆள் இல்லை என்றா?

பிரவீனா நிச்சயம் மகனின் தேவையை நிறைவேற்றுவாள். ஆனால், ஆசையை நிறைவேற்றுவாளா? பொதுவாக பணக்கார வட்டாரங்களில் குழந்தைகளின் தேவை, ஆசை எல்லாம் ஒரே மாதிரி நிறைவேற்றப்படும். ஆனால், நடுத்தர வர்க்க குடும்பங்களில் தேவைகள் நிறைவேற்றப்படும். குழந்தைகளின் ஆசைகள் தேவையற்ற ஒன்றாக தோன்றும். பிரவீனா எப்படி? அவள் கொஞ்சம் கண்டிப்பு.

தேவையறிந்து நிறைவேற்றுபவர் தாய் என்றால் பிள்ளையின் ஆசை அறிந்து வாங்கி கொடுப்பவர் தந்தை அல்லவா!… ஆக, ஆதிரன், அவன் தந்தையை தேடுகிறான்.

“அத்து, உன் அப்பாவை பார்த்து இருக்கியா?” என்றான் மித்ரன்.

“போட்டோல பார்த்து இருக்கேன்”

“கரெக்ட் போட்டோல தான் அவர பாக்க முடியும். நேர்ல அவரால வர முடியாது. அவங்க சாமிகிட்ட இருக்காங்க. சாமிய போட்டோல தான பார்க்க முடியும்” என்றவன்,

“நீ பிரேம் மாமா கூட விளையாடுறியா இல்லை மித்து கூட விளையாடுறியா” என்று கேட்டதும்,

சிறுவன் யோசிக்கவே இல்லை, “மித்து கூட தான் விளையாடுவேன். எனக்கு உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்”

 “குட் வா.. நம்ம போய் விளையாடுவோம். உனக்கு என்ன வேணுமோ என்னை கேளுடா அத்து. எனக்கு நீ தான் செல்லம். நான் உனக்கு மட்டும் தான் செல்லம் குடுப்பேன். நம்ம ரெண்டு பேருக்கு இடையில உங்க அம்மா கூட வர முடியாது” என்றவன் பிள்ளையை தூக்கிக் கொண்டு நகர்ந்தான்.

சிறுவர்களுக்கான போட்டியில் போய் கேட்க,

“கே ஜி பிள்ளைகளுக்கு முடிஞ்சிருச்சு சார். சும்மா விளையாட வேணாம் செய்யலாம்” என்றார்கள்.

 ஆதிரனுக்கு போட்டி, பரிசு என்றெல்லாம் மனதில் பதியவில்லை. எல்லோர் வீட்டிலும் பெற்றோர் வந்திருக்க.. தனக்கு எங்கே? சிறுவன் என்பதால் குடும்பத்தில் நடக்கும் அரசியல் அவனுக்கு தெரியவில்லை.

ஆர்த்தியின், கணவன் மீதான அதிகப்படியான உரிமை. ஆதிரனின், தாய்மாமன் உடனான சின்ன சின்ன சந்தோஷங்களை வெட்டி விட்டது. எப்படித்தான் பிரவீனா பிள்ளையை வளர்த்தாலும், விவரம் தெரியும் பொழுது மற்ற பிள்ளைகளின் தந்தையை பார்த்து சிறுவன் மனம் ஏங்க ஆரம்பித்தது.

பள்ளி விட ரெண்டு மணி நேரம் இருக்க… ஆதிரனை அழைத்துக் கொண்டு மித்ரன் கிரவுண்டுக்கு சென்றான். அங்கு இருக்கும் ஆசிரியரிடம் என்னவோ பேசியவன், அடுத்து பெரிய பசங்களுக்கான விளையாட்டில் ஆதிரனோடு சேர்ந்து நின்று கொண்டான்.

மித்ரன் முன்பே சொல்லிவிட்டான். பரிசு எல்லாம் தேவையில்லை. சும்மா மகனின் சந்தோஷத்திற்காக விளையாட்டில் பங்கெடுப்பது மட்டுமே என்று…

ஒரு கூட நிறைய பந்து வைத்திருக்க, குழந்தைகள் ஒவ்வொரு பந்தாக எடுத்து சற்று தூரத்தில் இருக்கும் கூடையில் நிரப்ப வேண்டும். பெற்றோர் அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். மித்ரன் ஆதிரனை தூக்கி வைத்திருக்க, சின்னவன் ஆர்வமாக ஒவ்வொரு பந்தாக எடுத்தான்.

ஆதிரனுக்கு சின்ன வயதில் இருந்தே தூக்கி போட்டு பிடிப்பது மிகப் பிடிக்கும். இன்று மித்ரன் அவனை தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் ஓட… அவ்வளவு சந்தோஷம், சத்தமான சிரிப்பு.

ஆதிரனை விட பெரிய பசங்களோடு போட்டி என்பதால், சின்னவன் கிரிக்கெட் விளையாடுவது மற்றவர்களுக்கு சிரிப்பாக இருந்தது. ஆதிரனை பார்த்து கைதட்ட, அவனுக்கு ஒரே உற்சாகம். இங்கு என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. எனக்கும் தந்தை இருக்கு.. என்னையும் தோளில் தூக்கிக் கொண்டு ஓட ஆள் இருக்கு.. நானும் செல்லம் கொஞ்சுவேன் என்பதுதான் அவன் சிரிப்பிற்கு காரணமாக இருந்தது.

இறுதியாக, லக்கி ட்ரா நடந்தது. ஒரு பாஸ்கட் நிறைய குழந்தைகள் பேர் எழுதி இருக்கும். பெற்றவர்கள் ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். அதில் அவர்கள் பிள்ளையின் பெயர் யாருக்கு வருதோ அவர்களே லக்கி. முதல் மூன்று பேருக்கு மட்டும் பரிசு.

ஆதிரன் துள்ளிக் கொண்டிருந்தான். நமக்கு தான் கிடைக்க வேண்டும் என்று… முதல் இரண்டு பரிசு வேற யாருக்கோ கிடைத்து விட்டது. அவ்வளவுதான் ஆதிரன் முகம் ஏகத்திற்கும் டென்ஷனாகியது.

மித்ரன் முறை வந்து அவன் எடுக்க வரும் பொழுது, “நல்லா பிரேயர் பண்ணி என் பேரை எடுங்க” கூட்டத்திலிருந்து கத்தினான் ஆதிரன்.

அதிர்ஷ்டவசமாக மித்ரன் கையில் கிடைத்தது ஆதிரன் பெயர். அவ்வளவுதான் சிறுவனை கையிலே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு பிள்ளைகளில் தன் பெயர் வந்து விட்டதே. அவனுக்கு வேற எந்த பரிசும் கிடைக்கவில்லை. லக்கிட்ரா பரிசு மட்டும்தான். அதைப் பற்றி எல்லாம் ஆதிரனுக்கும் கவலையில்லை.

பிரவீனா மிகுந்த கவலையோடு அமர்ந்திருந்தாள். தந்தை அழைத்து வருவதாக போன் செய்திருந்தார். மகன் அழுக முகத்தோடு வருவானே என்று வேதனையில் இருந்தாள். எப்படி அவனை சமாதானம் செய்ய?…

ஆதிரன் கையில் கிப்டோடு துள்ளிக் கொண்டு வந்தான், “அம்மா எனக்கு லக்கி ட்ரால பிரைஸ் கிடைச்சிருக்கு” என்று வந்து தாயிடம் காட்ட.

பாதர் இல்லாம எதிலும் கலந்துக்க முடியாது என்றவாறு மகன் கொடுத்தவற்றை பார்த்தாள். அதில் ஆதிரனுக்கு ஒரு சர்டிபிகேட் இருந்தது. என்னவென்று பார்க்க மகன் பெயர் இருக்கும் இடத்தில் ஆதிரன் யுவி மித்ரன் என்று இருக்க…

அதிர்ந்து போய் தந்தையை பார்த்தாள், “அப்பா”

மித்ரன் ரொம்ப நல்ல தம்பிமா. நான் நேரிலேயே போய் பார்த்து பேசி விசாரிச்சிட்டேன். எனக்கு சம்மதம். நீயும் சம்மதிக்கணும். நம்ம அத்து குட்டிக்கு அவர விட வேற யாரும் அப்பாவ வர முடியாது. அந்த தம்பி அவங்க வீட்ல பேச போகுதாம். ஒரு வாரம் எல்லாம் முடிஞ்ச மாதிரி தான் மகள் முகம் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து சொன்னார் தேவதாஸ்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!