தந்தையின் கடையை பார்த்துக் கொள்வதற்கும் உதவி செய்தாள். இன்னொரு புறம் தாய்க்காக ஆரம்பிக்க போகும் ஹோட்டல்க்கு தேவையான கடனுக்கு என்னென்ன முடியுமோ அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கினாள்.
அதற்கு முதல் வேலையாக தாய் கணக்கு வைத்திருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு சென்று, அங்கு கொடுக்கப்படும் கடன் பற்றி தீவிரமாக விசாரித்து வந்தாள். இடையில் குருவுடனான அலைப்பேசி அழைப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்தது.
செமஸ்டர் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு இப்போது முழு வேலையாக கடன் வாங்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தயார் செய்து வைத்தாள். மறுபுறம் தந்தையின் கடைக்கென்று அடமானத்தில் இருந்த நகையை மீட்டுவதற்கு அவர்கள் பாதி பணத்திற்கு மேல் சேமித்திருந்தனர்.
கடையை குறித்த திட்டங்கள் ஆரம்பத்திலிருந்து வேலினியிடம் தெளிவாக இருந்ததால் அவளால் அனைத்து வருமானத்தையும் சரியாக பயன்படுத்த முடிந்தது.
Advertisement
தினமும் வரும் வருமானத்தை மொத்தமாக கணக்கு பார்த்து எடுத்து வைத்து விட்டு, மாதத்தின் முடிவில் அதை நான்கு பங்காக பிரித்து வைத்தாள் வேலினி.
முதல் பங்கு வீட்டு செலவிற்கு, இரண்டாம் பங்கு கடைக்கு பொருள் வாங்குவதற்கு, மூன்றாம் பங்கு கடன் அடைப்பதற்கு, நான்காம் பங்கு குழலினியின் எதிர்காலத்திற்கு என்று வைத்திருக்க, நான்காவது பங்கு சேமிப்பு மட்டுமே என்றே மத்தவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அது மிக முக்கியமாக குழலினிக்கு என்று அவள் மட்டும் அறிந்த விஷயமாக இருந்தது. வீட்டு நிலைமை இப்படி இருக்கு, சரியாக இவளுக்கு பரிட்சை முடியும் நேரம் பள்ளி பிள்ளைகளுக்கும் அரையாண்டு விடுமுறை என்பதால் இந்த சமயத்தில் எதை அதிகம் மக்கள் வாங்குவர் என்று யோசித்து, குழலினியில் இருந்து குரு வரை அனைவரையும் கலந்து ஆலோசித்து விட்டு, வர்ணங்கள் தீட்டும் புத்தகங்கள், வர்ணங்கள் தூரிகைகள் போன்ற நிறைய வாங்கி வைத்தாள்.
Advertisement
கூடவே பிள்ளைகள் விரும்பும் சின்ன சின்ன விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைக்க, அவர்களுக்கு நல்ல வருமானமே கிட்டியது.
Advertisement
மீண்டும் கல்லூரி தொடங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில் குரு அவள் தாய் பவானியுடன் அனறு வேலினியின் வீட்டிற்கு வந்திருந்தான்.
வந்தவர்கள் சொன்ன செய்தி அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. வேலினி குருவிடம் இருந்து நிச்சயம் இப்படி ஒரு வேகத்தை எதிர்பார்த்து இருக்கவே இல்லை.
குரு தன் நீண்ட நாள் கனவு திட்டத்தின் படி ஒரு அலுவலகத்தை சிறியதாக தொடங்கி இருந்தான். அதற்கான வேலைகளை முடிக்கவே இத்தனை நாட்களாக வேலினியை நேரில் வந்து சந்திக்க முடியாமல் இருந்தது. இப்போது அனைத்து பணிகளும் சிறப்பாக முடிந்திருக்க, அதன் சிறப்பு விழாக்கு அழைக்கவே தன் தாயை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
Advertisement
அதை கேட்டதும் வேலினிக்கு மகிழ்ச்சியாக இருந்தபோதும் தனக்கு இதை முன்பே சொல்லவில்லையே என்று அவனிடம் ரகசியமாக கோபம் கொண்டிருந்தாள் வேலினி.
மறுநாளே திறப்பு விழா இருக்க வேலினி வீட்டினர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று மரியாதையுடன் அழைத்திருந்தார் பவானி.
மறுநாள் ஆறுமுகம் மட்டும் தனக்கு ஒரு குர்தா ஆர்டர் முடிக்க வேண்டி இருப்பதாக கூறி அன்று கடைக்கு சென்று விட்டார். அவரை தவிர்த்து குடும்பத்தினர் அனைவரும் விழாவை சிறப்பிக்க மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர்.
வேலினி குருவின் கனவுக்கு முன்பாக நின்றிருந்தாள். அந்த கனவு நிறைவேறியது குருவுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருந்ததோ அதே அளவு அவளுக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
வந்து இறங்கியதும் அவள் தேடும் முன்பே அவள் முன் வந்து அவளை வரவேற்றிருந்தான் குரு. தன் கனவை காண வந்திருக்கும் போது அவளுக்கு இப்படியான அழைப்பு இருக்க வேண்டும் தானே.
அவளை அழைத்து எப்படி இருக்கிறது என்று அவன் கேட்க, “சூப்பரா இருக்கு குரு இந்த நிஜமாவே உங்களோட ட்ரீம் முன்னாடி வந்து நிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல உங்க மேல கோவமா இருக்கேன்”. என்று அவர் கோபம் போல் அவள் பேச இவனுக்கு சிரிப்புதான் வந்தது.
அவளிடம், “சாரிடா ஆனா உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு தான் இதை நான் மறைச்சு வைச்சிருந்தேன். உன்னை மீட் பண்ணி ஒன் மந்த்லயே நான் பேப்பர் போட்டுட்டேன். ஆல்ரெடி எனக்கு ஒரு ஐடியா இருந்தது. அதுக்கப்புறம் லோன்ஸ், சில சேவிங்ஸ் எல்லாம் வச்சிருந்தோம் அதெல்லாம் சேர்த்து இதை ஆரம்பிச்சாச்சு”, என்று கூறினான்.
“ஆனால் எப்படி அந்த கடை வாங்கும் போது அதுவும் உங்க சேவிங்ஸ்ன்னு சொன்னீங்களே”
“அதுவும் ஒரு சேவிங்ஸ் தான்டா. இது இன்னொரு சேவிங்ஸ். அப்பா இருக்கும்போதே எனக்காக போட்ட ஒரு டெபாசிட் இதெல்லாம் வச்சுக்கோவேன். அதெல்லாம் இப்பதான் உடைச்சோம். அதுல தான் இந்த கம்பெனிய இப்ப ஆரம்பிச்சு இருக்கேன்”
“குரு, நிஜமா சொல்றேன். நிச்சயமா உங்க அப்பா அம்மான்னு எல்லாரோட உழைப்பும் சேர்ந்தது இந்த கனவு பெருசா மாறும். இதுல நீங்க நிறைய பேருக்கு வேலை கொடுப்பீங்க. அவங்களோட கணவையும் ஜெயிக்க வைக்க போறீங்க, வேணா பாருங்களேன்”, என்று மனதார அவள் வாழ்த்த, அவனுக்கு கேட்க கேட்க மகிழ்ச்சி ஊற்றாக பெருகியது.
அதன் பின் விழாவை தன் தாயை விளக்கு ஏற்ற வைத்து ஆரம்பிக்க சொன்னவன். கூடவே பூஜைக்கும் தாயை தான் அமர வைத்தான். அவன் தன் தாயை வைத்து அனைத்து சுப காரியங்களையும் நிகழ்த்த, தெய்வானைக்கு அவனை கண்டு ஆச்சரியமாக இருந்தது.
பொதுவாக கணவனை இழந்தவர்களை முன்வைக்கவே அனைவரும் சங்கடப்படுவர் தான். பெற்ற பிள்ளைகள் யாரும் அப்படி தாயை விட்டுக் கொடுப்பதில்லையே.
ஆனால் அதே சமயம் அவர்கள் அதை செய்து முடிக்க மற்றவர்கள் பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்கும். இங்கு இன்னும் சிறப்பாக, இவனை எதிர்த்து மற்ற யாரும் பேசக்கூட முயற்சிக்கவில்லை என்பது அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவன் தாய் மேல் கொண்ட பாசத்தை எண்ணி அவருக்கு அவன் மேல் மரியாதை பெருகியது.
விழாவில் குடும்பத்தினருக்கு குரு அவனின் பெரியப்பா தேவேந்திரனையும் அவர் மகனான சிவானந்தனையும் அறிமுக படுத்தினான்.
முக்கியமாக வேலினி சிவானந்தன் தன் கல்லூரியில் செய்த அந்த புற்றுநோய் பரிசோதனை முகாம் பற்றி பெருமையாக கூற, அந்த குடும்பத்தினரும் அவருக்கு தங்கள் பங்குக்கு அவர்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
இது அனைத்தையும் கேட்ட தேவேந்திரன், “இதுக்கெல்லாம் காரணம் உங்க பொண்ணு தான்”, என்று விஷயத்தை போட்டு உடைக்க வேலனின் குடும்பத்தாருக்கு இது குறித்து தெரியாது என்பதால் அவர்கள் என்ன என்பது போல் பார்த்தனர்.
ஆமாம் வேலினி தானே சிவா கிட்ட சொன்னா. இந்த இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணா நல்லா இருக்கும்னு. சிவா உடனே ஆனந்த் கிட்ட கேட்டான், ஆனந்த் என்கிட்ட கேட்க, நானும் சரி நல்ல காரியமா இருக்கேன் பர்மிஷன் கொடுத்துட்டேன். உடனே செஞ்சு முடிச்சிட்டாங்க.
உங்க பொண்ணு தான் இவ்ளோ பெரிய விஷயம் நடக்க காரணம். உங்க பொண்ணுக்கான ரொம்ப நல்ல மனசுங்க இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சு முடிக்கணும்னு எவ்ளோ போராடி இருக்கா தனி மனுஷியா. காலேஜ் மேனேஜ்மென்ட்ல எல்லாம் போய் பேசி இருக்கா.
அதுக்கப்புறம் தான் எங்களுக்கே இந்த விஷயம் தெரிஞ்சது. நாங்களே போய் மேனேஜ்மென்ட் கிட்ட பேசி இந்த முகாம நடத்தி முடிச்சோம். நீங்க உங்க பொண்ண தான் முதல்ல வாழ்த்தணும்”, என்று கூறிவிட்டு வேறு யாரோ அழைக்க, அவர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் தன் மகனுடன்.
வேலினி குடும்பத்தார் அனைவரும் அவளை முறைத்து வண்ணம் நின்றிருந்தனர். “உங்க கிட்ட இப்ப யாரு இந்த புகழாரம் எல்லாம் கேட்டா? எப்படி இந்த குடும்பத்திலிருந்து தப்பிக்க போறேனோ? “என்று எண்ணியவாறு நின்றிருக்க, குரு தான் அவளை காப்பாற்றும் விதமாக,
“ஆன்ட்டி நீங்க போய் சாப்பிடுங்க. அம்மா வேலினிய கூப்பிட்டாங்க கூட்டிட்டு போய்ட்டு வரேன்”, என்று கூறி அவளை அழைத்து சென்று பவானி அருகே நிறுத்திவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
“இப்படி போட்டு கொடுத்திட்டாரே இந்த அங்கிள். ஏன் ?நான் இந்த விஷயத்தை பத்தி வீட்ல சொல்லாம வச்சிருந்தேன்? சொன்னா என்னை பெண்டு நிமித்திடுவாங்கன்னு தான. இப்படி போட்டு கொடுத்தா என்ன பண்ணுவேன் நான்?” என்று தனியாக புலம்ப,
பவானி, “என்னடா ஆச்சு? என்ன புலம்பிட்டு இருக்க”, என்று பாசமாக கேட்டார். அவரிடம் அவள், “ஒன்னும் இல்ல ஆன்ட்டி, சும்மாதான்” என்று சமாளிப்பாக கூறிவிட்டு அமைதியாக இருக்க, பவானி தானாகவே அவளை பேச்சில் இழுத்து வைத்து பேச, அவளுக்கும் அவருடன் பேசுவது இயல்பாக வந்தது.
அவருடன் வெகுநேரமாக சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள். தூரத்திலிருந்து கண்ட குருவிற்கு மனம் நிறைந்திருந்தது. அதன் பிறகு பவானி அங்கிருந்து அகன்றதும், குரு அவள் அருகே வந்து நின்றவன், “அவளிடம் என்ன வேணும் நம்ம வேலினிக்கு எதாவது சாப்பிட்றீங்களா?” என்று கேட்டான்.
“நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன்” , என்றாள்.
அவன், “எதுக்கு மறுபடியும் கோபம்?” என்று குழப்பமாக கேட்டான்.
“பின்ன ஒவ்வொரு ரகசியமா நான் உங்ககிட்ட கேட்டா தான் வெளியே வருது. நீங்களா சொல்ல மாட்டீங்களா?” என்று சொல்லவும்,
” என்ன டா?” என்று மீண்டும் குழப்பம் அவன் முகத்தில்.
“உங்க பேர் என்ன?”
“குரு..”
” உங்க முழு பெயர் குரு தானா?” என்றதும் நாக்கை கடித்துக் கொண்டவன், கண்களில் கெஞ்சல் மொழி பேசி நின்றான்.
“சாரி சாரி நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபுல் நேம் சொன்னதே இல்லல்ல?” என்றான். அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
வேலினிக்கு அவன் பெரியப்பா பேசும் போது அது தெரியவில்லை. ஆனால் மீண்டும் யோசிக்கும் போது புரிந்தது. கூடவே பவானியுடன் பேசிய முழுதிழும் அவர் மகனே இடம் பெற்றிருக்க, அதில் அவன் பெயரை உறுதிப்படுத்தினாள்.
“சாரி டா. தெரியாம…சொல்லக்கூடாதுன்னுலா இல்ல. பொதுவா என்னை எல்லாருமே சிவானு தான் கூப்பிடுவாங்க. அம்மா மட்டும் குருன்னு கூப்பிடுவாங்க. நான் உன்கிட்ட என்ன அறிமுகப்படுத்தும் போது குரு என்று சொல்லிட்டேன். ஆனா உனக்கு தெரியாதுங்கற விஷயமே என் மைண்ட்ல இல்லனா பாரேன்” என்றதும்,
“உங்க பேரு சிவகுருல. ரொம்ப அழகா இருக்கு” என்றவள், சிரித்துக் கொண்டே தொடர்ந்து, “நமக்குள்ள என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் பாத்திங்களா? உங்களுக்கும் எனக்கும் முருகனோட பேரு”,
“என்ன? சிவானா சிவனோட பெயர் இல்லையா?”
“சிவானா தான் சிவன் பேரு. ஆனா சிவகுரு முருகனோட பேரு. ‘அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்’ சிவகுருநாதன் என்றதும் இவனுக்கு அப்போதுதான் அந்த விஷயமே தெளிவாக புரிந்தது.
“ஆமால இந்த விஷயத்தை தெரியாம போச்சே என்று அவன் சிரிக்க இவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக் கொண்டது. அந்த சமயம் தூரத்திலிருந்து தெய்வானை அழைக்க, இவள் அவரிடம் நெருங்கி சென்றாள்.
“வா வந்து சாப்பிடு. உன்னை நான் வீட்ல வந்து பேசிக்கிறேன்” என்று அவள் மறந்திருந்த பயத்தை மீண்டும் தூண்டிவிட்டார். அவளும் சென்று தாயுடன் பவ்யமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு குருவிடமும் அவன் குடும்த்தினரிடமும் விடை பெற்று வீடு திரும்பினாள்.
வருவாள்…..
மகாஆனந்த்…✨
