Skip to content
Post Views: 13,047
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 24
தன் பிள்ளைகளின் சுயநல குணம் கண்டு திகைத்து நின்றார்கள் தேவதாஸ் தம்பதிகள். தன் உடன் பிறந்த அக்கா, கணவனை இழந்து ஒற்றைப் பிள்ளையோடு வாழ்க்கையில் கஸ்டபடுகிறாள். அதை கண்ணார காண்கிறார்கள் உடன் பிறப்புகள். ஆனாலும், அவளுக்கு என்று சிலதை விட்டு கொடுக்க பிடிக்க வில்லை. அவ்வளவு சுயநலம்.
பிரவீனாவும் அங்கு தான் இருந்தாள். எதுவும் பேச வில்லை. அமைதியாக தான் நின்று இருந்தாள்.
தன் பெரிய மகளை ஒரு பார்வை பார்த்த தேவ தாஸ், “உங்களுக்கு என்ன அநியாயம் நடந்துச்சு” நிதானமாக கேட்டார்.
Advertisement
“அக்காக்கு மட்டும் தனியா நகை எடுத்து இருக்கீங்க. அதுக்கு தக்க எனக்கும் எடுத்து தாங்க” என்றாள் பிரீத்தி.
“எனக்கு பணமா கொடுத்துடுங்க” என்றான் பிரேம்.
தேவதாஸ், “பிரவீனா உங்க அக்கா தானே. எவ்வளவு கஷ்டப்பட்டான்னு உங்களுக்கு தெரியும். இன்னைக்கு அதுக்கு ஒரு நல்ல காரியம் ஏற்பாடு பண்ணி இருக்கோம். எவ்வளவு சுயநலவாதிகள் தான் நீங்க ரெண்டு பேரும்.. யாரோ சொல்லி வந்து நிக்கிறீங்க” என்றதும்,
Advertisement
ஆர்த்தி முகம் மாறி போனது…
Advertisement
“யார் சொன்னா என்னப்பா? ஆமா, ஆர்த்தி தான் சொன்னா.. நீங்க பாரபட்சம் பார்க்குறீங்களே. பெத்த பிள்ளை கிட்ட பாரபட்சம் பார்க்குறீங்க” நியாயம் கேட்டான் பிரேம்.
“யாருடா பாரபட்சம் பாக்குறா? நீதான பாரபட்சமா நடந்துக்குற… பத்து பவுன்னு நகை உங்க அக்காவுக்கு எடுக்கிறாங்கன்னு சொல்லிக் கொடுத்த மனைவி, எதுக்கு எடுக்குறாங்கன்னு சொல்லி இருப்பாங்க தானே.. ஆமா, பிரவீனாவுக்கு நாங்க கல்யாணம் வைக்க ஏற்பாடு பண்றோம். தம்பி, தங்கச்சி இரண்டு பேருக்கும் அந்த பத்துப்பவுன் நகை மேல தான் கண்ணு போதே தவிர, இவ்வளவு வருஷம் கழிச்சு நம்ம கூட பிறந்தவளுக்கு ஒரு நல்ல காரியம் நடக்குதேன்னு நினைப்பு உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது இருக்கா?” கோபமாக தேவதாஸ் கேட்க,
இருவரும் முகம் கருக்க வாய் திறக்காமல் நின்றனர்.
Advertisement
“கடைசி தங்கச்சி செல்லம்னு உன்னை எவ்வளவு தாங்குச்சு அந்த பொண்ணு.நியாயமா நீ என்ன நினைத்து இருக்கணும்.. ஒரு தாய் வயித்துல பிறந்த நம்ம மூணு பேருல மூத்த பிள்ளை வாழாமல் கிடக்கே, அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது உண்மையா சந்தோஷப்பட்டு இருக்கணும். முதல் ஆளா இந்த வீட்டு படியேறி வந்து, நான் என்னப்பா பண்ணனும்னு கேட்டு இருக்கணும். ஆனா, நீ என்ன பண்ற?” என்று சின்ன மகளை பார்த்து கேட்டவர் மகன் புறம் திரும்பி,
“இவங்க ரெண்டு பேரை விட நீ என்ன கேட்டாலும் உனக்கு கிடைச்சிருக்கு.. உங்க அம்மாவுக்கு நீ தான் செல்லம். ரெண்டும் பொண்ணு பிள்ளைகளை பிறந்த ஒத்த ஆம்பள பையன்னு உன்னைய தான் எல்லாத்துக்கும் முன்னாடி வைப்போம். பொம்பள பிள்ளைன்னு அந்த ரெண்டு பிள்ளைகளை கூட அடக்கி வளர்த்திருக்கோம். ஆனா, நீ நினைச்சது தான் இந்த வீட்ல நடக்கும். உனக்காகத்தான் உன் மனைவி பண்ற அதிகாரத்தை எல்லாம் தாங்கிப் போனோம். எதுக்கு.. நம்ம பிள்ளை ஒன்னு இங்க வாழாம இருக்கு. நம்ம காலத்துக்கு அப்புறம் தம்பி உறவு என் பிள்ளைக்கு வேணும். குடும்பம்ன்னு இருந்தா கூட குறைய ஒரு சில சண்டை வரத்தான் செய்யும். நம்ம மருமக தானே. நம்ம வீட்டு பொண்ணு, நம்ம மகனோட மனைவின்னு பொறுத்து போனோம்” என்றவர் மகனை கோபமாக பார்த்து
“ஆனா, நீ என்ன பண்ண, வெறும் பத்து பவுன் நகை. அது உன் சம்பாத்தியம் கூட கிடையாது. என்னுடைய சுய சம்பாத்தியம். என் மகளுக்கு நான் கொடுக்கிறேன். அதை நீ கேட்கவே ரைட்ஸ் இல்லை. அதை கேட்க உன் மனைவி யார் பிரேம்? உண்மையா நீ ஒரு நல்ல அக்கறையான தம்பியா இருந்தா.. கல்யாண விஷயம் எப்படியோ உன் காதுக்கு வந்துருச்சில்ல, நீ என்கிட்ட வந்து என்ன கேட்டுக்கணும். மாப்பிள்ளை யாரு? குடும்பம் எப்படி? அக்காவுக்கு புடிச்சிருக்கா? என்ன? ஏதுன்னு? ஒரு நல்ல கூட பிறந்தவன்னா விசாரிச்சு இருக்கனும் தானே” கேட்டதும் பிரேமுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
ஆர்த்தி சொன்னதும், அவன் மனதில் நின்றதெல்லாம் தான் இடம் வாங்க பணம் கேட்ட போது தராத தந்தை.. அக்காவுக்கு நகை எடுக்க மட்டும் பணம் கொடுத்தாரா என்று ஆதங்கமும், கோபமும் முன் நின்றது.
“பாத்துக்க மகேஷ், இதுதான் நீ வளர்த்து ரெண்டு பிள்ளைகளோட லட்சணம்” என்றதும், மகேஸ்வரி வாயவே திறக்கவில்லை.
அவர் எப்போதும் பிரவீனாவே விட்டுக் கொடுத்துப் போக சொல்வார். வீட்டுக்கு மூத்த பெண் உனக்கு பின் இரண்டு பிள்ளைகள் இருக்கு.. மூத்தவளாக நீ தான் கொஞ்சம் அனுசரித்து போக வேண்டும் என்று சொல்லியே பழகியவர். அது அப்படியே பிள்ளைகள் கல்யாணத்திற்கு பின்பும் கடைபிடிக்க, ஆர்த்திக்கு எல்லாம் தன் உரிமை என்ற எண்ணம் வந்து விட்டது. இது என் வீடு, எனக்குரிய வீட்டில் தான் நாத்தனார் உடன் இருக்கிறார் என்று எண்ணம் மிகுந்திருக்க, சட்டமாக வாய் பேச ஆரம்பித்தாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா தான் சொல்றேன். வீட்டுக்கு மூத்த பொண்ணு பிரவீனா. அது பிறந்ததிலிருந்து எல்லாமே உங்க பாட்டி வீட்டுல தான். நாங்க பெருசா எதுவும் செஞ்சது இல்லை. பிரேம் உனக்கு பிரைவேட் காலேஜ்ல தான் சீட் கிடைச்சது. ஆனா, பிரவீனா படிச்சது கவர்ன்மென்ட் காலேஜ்ல. அப்போ உனக்கு தான் செலவு அதிகம். அந்த செலவுக்கு பிரவீ க்கு என்ன செய்யப் போற?” என்றவர், சின்ன மகள் புறம் திரும்பி,
பிரவீனா கல்யாணம் முடிஞ்சு ஒன்றை வருசத்துலே நம்ம வீடு வந்தாச்சு. இளங்கோவோட ஹாஸ்பிடல் செலவுக்கு தான் என் மகளோட நகை எல்லாம் வித்தோம். அப்ப கூட நாங்க எந்த உதவியும் செய்யல . ஏன்னா, அப்ப நீ கல்யாணம் ஆகாம வீட்டுல இருந்த”
“அப்பவும் பிரவீனா தான், வேண்டாம் என் நகையை வைத்து அவர் ஹாஸ்பிடல் செலவை பார்ப்போம். பிரீத்திக்கு என்னதான் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும், வெறுங்கையோட அனுப்ப முடியாது. என் புருஷனுக்கு என் நகையை கொடுக்கிறேன். நம்ம வீட்ல கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு இருக்கும்போது இவ்வளவு பணத்தை நீங்க எனக்கு செலவு செய்யாதீங்கன்னு.. உனக்காக தான் விட்டு கொடுத்து போச்சு. அந்தப் பொண்ண என்னைக்காவது அக்கான்னு மதிச்சு இருக்கியா நீ? நேத்து வந்த பொண்ணு உன் அண்ணி. ஒரு நாளைக்கு எத்தனை போன் பண்றே… இன்னும் பிறக்காத குழந்தையை என் மருமகன்னு எவ்வளவு உரிமை கொண்டாடுற.. ஆனா, அதுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே இங்க ஒருத்தன் பிறந்து இருக்கானே. உன் சொந்த அக்கா பையன் தானே… எத்தனை லீவு, விசேஷம் வருது. ஒரு நாளைக்காவது உன் அக்காவையும், அக்கா பையனையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக நினைப்பு இருந்துச்சா… நேத்து வந்த பொண்ணுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், உன் கூட பிறந்த ஒருத்திக்கு இல்லை” என்றவர் தன் பெரிய மகளை பார்த்து,
“பாத்துக்க மகளே! இதுதான் உலகம். நமக்கு ஒரு நிலையான வாழ்க்கை இல்லன்னா, நம்மளோட சொந்த ரத்தம் கூட நம்மள மதிக்காது மகளே!… என் பிள்ளையோட குணத்தையே நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். நானும், உங்க அம்மாவும் எவ்வளவு நாளைக்கு இருப்போம். நாங்க இருக்க வரைக்கும் தான் இந்த வீட்ல ஓட உன்ன வச்சிருப்பாங்க போல…அதுக்கு முன்ன உன்ன ஒரு நல்லவன் கையில் புடிச்சு கொடுக்கணும். கடவுள் கொடுத்த வரம் மாதிரி சம்பந்தம் வந்து இருக்கு.. இனி, நான் அதை விட மாட்டேன். இன்னைக்கு நம்ம வீட்டு ஆளுகளை பார்த்ததுக்கு அப்புறம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உன்னை அந்த தம்பி கைல புடிச்சு கொடுத்தாதான் நிம்மதி எனக்கு” என்றவர், பொதுவாக தன் வீட்டு ஆட்களை பார்த்து,
“ஆமா எம் பெரிய மகளுக்கு நகை எடுத்தேன். இன்னும் எடுப்பேன். அதுக்கு உங்க சம்மதம் எனக்கு தேவையில்லை. உங்க காசு, பணத்தை நான் தொடவும் இல்லை. பிரவீனா ஓட புருஷன் வீட்டோட நமக்கு எந்த தொடர்பும் இல்லாததால் பிரவீனாக்குனு நம்ம தனியா எந்த சீரும் இதுவரைக்கும் செஞ்சதில்லை. ஆனா, ப்ரீத்தி.. உனக்கு வருசா வருசம் சீர் போயிட்டு தான் இருக்கு. உன் சின்ன மாமியார் இறந்தாங்க, மாமனார் இறந்தாங்க குழந்தைகளுக்கு பார்த்தோம், கொழுந்தன் கல்யாணம் நடந்துச்சு, நாத்தனார் விசேஷம் வச்சாங்க… எல்லாத்துக்கும் தனித்தனியா உன் பேர் சொல்லி நாங்க சீர் செஞ்சோம். பிரவீனாக்கு நாங்க எதுவும் பண்ணல. உனக்கு செஞ்சத கணக்கு பண்ணி பார்த்தா, இன்னும் பிரவீனாவுக்கு தான் செய்றது பாக்கி இருக்கு… அதனால, நீ பேசாத” பட்டென்று சொல்லி விட, முகம் கறுத்து போனாள் பிரீத்தி.
அதுவரை கூட பிரவீனா ஒரு வார்த்தை பேச வில்லை. மெளனமாக தான் நின்று இருந்தாள். ஆனால், ஆர்த்திக்கு பொறுக்க முடியவில்லை.
“நீங்க பேசறது எனக்கு நியாயமாபடல மாமா. பிரவீனா அண்ணி நாலு வருஷமா இங்கதான் இருக்காங்க. இப்பதான் அவங்களுக்கு கல்யாணம்னு ஒன்னு நீங்க பேசிட்டு வரீங்க. அதுக்கு முன்ன இருந்து, அவங்க இங்கதான் இருக்காங்க. நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தா… அவங்க தனியா இருந்தா வீட்டு வாடகை, கரண்ட் பில்லு, தண்ணி பில்லு, சாப்பாட்டு செலவு, பிள்ளைகளை பாக்குறதுன்னு எவ்வளவு இருக்கு? அதெல்லாம் யார் பார்த்தது?” வெளிப்படையாகவே ஆர்த்தி கேட்க மகேஸ்வரி கூட ஒரு நிமிடம் அசந்து போனார் மருமகள் பேச்சில்…
“யார் பார்த்தது? நீ பார்த்தேன் ஆர்த்தி?” உள்ளே வந்தால் பிரவீனா. இவள் வருவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
“நான் பொதுவா தான் அண்ணி சொன்னேன். மாமா தானே சொன்னாரு. பிள்ளைகளை படிக்க வச்சதுல இருந்து, சீர் செஞ்ச வரைக்கும் சொல்லிக் காட்டினார் தானே.. அப்ப இத்தனை வருஷமா நீங்க இங்க தானே இருக்கீங்கங்க.. இதுவே, வெளியே இருந்தா உங்களுக்கு எவ்வளவு செலவு. அப்படி பாத்தா நீங்களும் தான் நிறைய மிச்சம் பண்ணியிருக்கீங்க” ஆர்த்தி விடவில்லை.
மகேஸ்வரி ஏதோ கோபமாக பேச வரும் பொழுதே ஆர்த்தி தொடங்கி விட்டாள்.
“நான் எங்க இருந்தேன் ஆர்த்தி. என் பிறந்த வீட்ல தானே நான் இருந்தேன். உன் வீட்ல நான் இல்லையே? உன் வீட்ல நான் இருந்தா, நீ கணக்கு சொல்லு நான் கேட்கிறேன்” அவளுக்கே கோபம் வந்து விட்டது.
“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க. இது எனக்கும் வீடு தான்”
“ஆமா, உனக்கும் வீடுதான். உன் வீடா இருக்கிறது, எனக்கு எப்படி வீடா இல்லாம போகும் ஆர்த்தி. பிரேம கல்யாணம் பண்ணிட்டு வந்ததால இது உன் வீடு. அதாவது, எங்க அப்பாவோ, பையனோட மனைவி. உனக்கு உரிமை இருக்கு. எங்க அப்பாவோட பொண்ணு நான் எனக்கு உரிமை இல்லையா?”
“நான் வந்து உன் புருஷன் கட்டுன வீட்ல இல்லை. எங்க அம்மா, அப்பாவோட வீட்டுல தான் நான் இருக்கேன். ஆதிரனுக்கு ரெண்டரை வயசு ஆகும்போது நான் வேலைக்கு போயிட்டேன். இன்னவரைக்கும் நான் போயிட்டு தான் இருக்கேன். இந்த வீட்டுக்கு கரண்ட் பில் எங்க கட்டுறாங்க தெரியுமா? சிலிண்டர் யார் பெயரில் போடுறாங்க தெரியுமா? மாசம் மாசம் அரிசி, சீனி, உளுந்து பருப்பு எல்லாம் யார் வாங்கி கொடுக்குறா தெரியுமா? எல்லாம் நான்தான் பாக்குறேன். இதுவரைக்கும் ஒரு நாளாவது நான் சொல்லிக் காட்டி இருக்கேனா? ஏன்னா, நான் என் தம்பி, என் தம்பி பொண்டாட்டி என் குடும்பம்னு நினைச்சேன். எனக்கு முப்பது வயசு ஆகுது. இத்தனை வருஷம் பிறந்து வளர்ந்த வீட்ட, நேத்து வந்து நீ எனக்கு உரிமை இல்லைனு சொல்லுவியா?”
“நான் அப்படி என்னத்த மிச்சம் பண்ணி இருக்கேன். உன் குழந்தை பிறந்து வர இன்னும் அஞ்சு மாசம் இருக்கு. இப்பவே இடம் வாங்கணும், வீடு கட்டனும் ரேஞ்சுக்கு நீயும் உன் புருஷனும் பிளான் போட்டு வைக்கிறீங்க. என் பிள்ளைக்கு அஞ்சு வயசு முடிய போகுது. நாலு வருஷம் நான் வேலை பார்க்கிற பணத்தை எல்லாம் இந்த வீட்டுக்கும், என் பிள்ளை படிப்புக்கு தான் போட்டு வச்சிருக்கேன் தவிர, எனக்குன்னு தனியா எந்த சேவிங்கும் வைக்கல”
“பிரவீனா” என்று தந்தை தவிப்பாக அழைத்தும் கூட அவள் காதில் விழவில்லை. மனதில் அப்படி ஒரு அழுத்தம். ஆர்த்தி இந்த வீட்டிற்கு வந்தே ஆறு மாசம் தான் ஆகுது. அதற்குள் என் வீடு என் உரிமை என்று பேச.. தான் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம் என்று புரியத் தொடங்கியது.
“நம்மள விட சின்ன பிள்ளைகள் தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க போல.. நான் விதவை” சொல்லும் போதே அவள் கண்களில் நீர் நிறைந்து நின்றது.
“என் நிலையை சொல்லி இரக்கம் சம்பாரிச்சு என்னை பெத்தவங்க கிட்ட நான் என்ன சேர்த்து வச்சிருக்கேன் வாங்குற சம்பளத்தையும், வீட்டுக்கு போட்டு இழந்துட்டு தான் நிக்கிறேன். இந்த வீட்ல இருக்காங்க, நாங்க பார்க்கிறோம். அப்படி எல்லாம் பேசுற நீ? என்ன பார்த்த எனக்கு? இதோ உன் புருஷன் நிக்கிறானே அவன் கிட்டயும் கேளு எனக்கு என்ன பார்த்தான். மிஞ்சி மிஞ்சி போனா என் பிள்ளைக்கு ஸ்னாக்ஸ் வாங்கி கொடுப்பான். அதுகூட உன் கண்ணை உறுத்துச்சு தானே. எனக்கு புருஷன் இல்ல வாழ வெட்டியா பெத்தவங்க வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கேன்னு கூட பொறந்தவெல்லாம் இவனுக்கு ஏதாவது செய்யாம இருந்திருக்கேனா? என் நிலையை காட்டி இரக்கம் சம்பாதிச்சு அக்கா, தங்கச்சி செலவு செய்கிற முறையில இருந்து ஒதுங்கி இருக்கேனா?” என்றவள்,
“குத்து கல்லு மாதிரி நிக்கிறியேடா சொல்லு? என் பிள்ளைக்கு கற்ற ஃபீஸ் குறைச்சுக்கிட்டு கூட இவனுக்கு இரண்டு பவுனுக்கு செயின் எடுத்து போட்டேன். அதே ரெண்டு பவுன் தானே பிரீத்தி போட்டது. என் புருஷன் இல்லைன்னு என் தம்பிக்கு நான் எதுவும் செய்யாம வா இருந்தேன். ஆனா, இவன்.. என் பிள்ளை ஒத்த பையனுக்கு மொட்டை எடுக்க கூட கிட்ட வரல. ஒரு டிரஸ் விலை ஐநூறுரு ரூபாய் வருமா? உங்ககிட்ட சொல்லாம தானே போய் மொட்டை எடுத்துட்டு வந்தேன் அதுக்கு அப்புறமா இந்தா அப்படின்னு ஒரு டிரஸ் எடுத்து கொடுத்து இருப்பானா… ஒரே வீட்ல இருக்கோமே தவிர எனக்கும், என் பையனுக்கும் நீங்க எந்த செலவு செஞ்சது கிடையாது” பிரவீனா கண்களில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
“இன்னைக்கு என்னால தனியா போய் நிக்க முடியும். உங்க யாரோட உதவியும் என் பிள்ளையை வளர்க்க எனக்கு தேவைப்படாது. ஆனாலும் என் வயசு, இந்த சமூகம் கொடுத்திருக்க விதைவைன்ற பட்டம், சமூக பாதுகாப்பு எல்லாம் யோசித்து தான் இந்த வீட்ல இருந்தேன். நாளைக்கு நாங்க தான் பார்த்தோம்னு ஒரு சொல்லு வந்துற கூடாதுன்றதுக்காகத்தான் என் சக்திக்கு மீறி இருக்கிற செலவெல்லாம் செஞ்சேன். அப்படி இருந்தும் நீ ஒரு வார்த்தை சொல்லிக் காட்டுற?”
ஆர்த்தி முழுதாக அடங்கி விட்டாள். அவள் இப்படி ஒரு எதிர்வினையை பிரவீனாவிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு நாளும் கூட குறையாக எது பேசினாலும் கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்வது பிரவீனா தான்.
“தப்பு உன் மேல கிடையாது ஆர்த்தி. என் கூட பிறந்தவன் சரியில்லை” சொல்லும் பொழுதே தொண்டை அடைத்தது.
“அவன் சொல்லாம, அவன் தைரியம் கொடுக்காம இந்த வீட்டில் பிறந்த மூத்த பொண்ணு என்னை நீ கேள்வி கேட்டிருக்க மாட்ட. அப்ப அவன் மனசுலயும் இருக்கு.. நான் இங்க ஓசில தான் இருக்கேன்னு”
“அக்கா, அப்படியெல்லாம் இல்லை” ஏதோ சொல்லிக்கொண்டு பிரேம் உன்னை வந்தான்.
பிரவீனா, அவன் பக்கம் திரும்பவும் இல்லை. அவன் என்ன சொல்ல வந்தான் என்று காது கொடுத்து கூட கேட்கவில்லை.
“இது நான் பொறந்து வளர்ந்த வீடு ஆர்த்தி. எனக்கு அப்புறம் தான் உன் புருசன் வந்தான். எங்க அப்பா, அம்மா காலத்துக்கு அப்புறமும், எனக்கு இந்த வீட்ல உரிமை இருக்கு. நீ கிராமத்தில் இருந்து வந்தாலும் படிச்சிருக்க தானே.. அவங்க காலத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் நீ எடுத்துக்கலாம்ன்னு நினைக்காத.. ப்ரீத்தி சப்போர்ட் மட்டும் பத்தாது. நானும் கையெழுத்து போட்டா தான் ஒரு படி மண்ணு கூட நீ எடுக்க முடியும்”என்றவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
ஆத்தியிடம் கூட அவ்வளவு விளக்கம் கொடுத்தவள் தன் தம்பி, தங்கை முகத்தை கூட திரும்பிப் பார்க்கவில்லை. சிலரின் முகத்தில் முழிக்காமல் கூட ஒதுக்கி வைப்பது நல்லது. பிரவீனா ஒதுங்கி கொண்டாள்.
மகேஸ்வரி பிடித்துக் கொண்டார், “என்ன தைரியம் உனக்கு? எம் மகள், என் வீட்ல இருக்குறத நீ சொல்லி காட்டுவியா? என் பிள்ளைகளை கூட நான் அதட்டி தான் வளர்ப்பேன். என்னைக்காவது பிரவீனாவை அனுசரிச்சு பார்த்து இருக்கியா. என் குணமே அதான்.. அப்படி இருந்தும் உன்னைய சரிகட்டி போனதுக்கு காரணம் வந்ததும் நீ மசமாயிட்ட. சரி, நம்ம வீட்டு வம்ச வாரிசு ஆரம்பத்திலே உன்ன அதட்ட கூடாது நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் நீ சொன்னதுக்கு எல்லாம் கண்டுக்காம போனேன். கடைசில என் பிள்ளைக்கு நான் செய்றதுவே சொல்லிக் காட்டுவியா நீ? இது எங்க வீடு. என் பிள்ளைக மூணு சமம் தான். பிரவீனா இங்கதான் இருப்பா.. அவளோட சேர்ந்து இருக்க முடிஞ்சா இரு, இல்லேன்னா தனியா போயிடு”என்று ஒரு பிடி பிடிக்கவும் நிஜமாகவே ஆர்த்தி பயந்து போனால் பின்ன அவள் பெரிதாக நினைப்பதே அவள் கணவனையும் மாமியாரையும் தானே..
அக்கா பேசிய பேச்சுக்கே வேப்பிலை அடித்தது போல அரண்டு நிற்கிறான் பிரேம். இங்க மாமியார் ஒரு பக்கம் தன்னை அதட்டி கொண்டிருக்கிறார். எதுவும் பேசாமல் வாய் மூடி கொண்டாள் ஆர்த்தி.
பிரவீனாவுக்கு என்னவோ ரொம்பவும் மன அழுத்தமாக இருந்தது. அங்கு இருப்பதே ஒரு மாறி மூச்சு முட்ட.. பேசாமல் இரண்டு உடைகளை எடுத்துக்கொண்டு, பிள்ளையையும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் மதுரைக்கு…அப்பா, அம்மா யார் சொல்லியும் அவள் கேட்கவில்லை. என்னவோ அங்க போக வேண்டும் என்று மனம் பெரிதாக உந்தியது.
தேவதாஸ், அவள் இருக்கும் நிலையில் போக வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் மகள் பிடிவாதமாக இருக்க… மித்ரனுக்கு மட்டும் போன் செய்து சொல்லிவிட்டார்.
மித்ரன் இருப்பதோ குன்னூர். அங்கே பிரவீனா கிளம்பிவிட்டாள் மதுரைக்கு… இனி, சென்னை வந்து மதுரை வருவதற்கு பேசாமல், மதுரை செல்லலாம் என்று மித்ரனும் மதுரைக்கு கிளம்பிவிட்டான், அவசரமாக ஒரு பஸ்ஸில்…
இரவு எட்டு மணிக்கு மதுரை வந்தாள் பிரவீனா. ஆதிரன் பசிக்கு சிணுங்க, ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்து சமாளித்தவள்.. அங்கிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து கிளம்பி,ஒரு இடத்துக்கு போனாள். பிரவீனா ஆட்டோ ஏறும் பொழுது தான் மித்ரன் அவளை கண்டுபிடித்தது. வேகமாக அவளிடம் பேச வர, அதற்கு முன்பே பிரவீனா ஆட்டோ கிளம்பிவிட்டது.
மித்ரன் அவளை பின்தொடர்ந்தான். அழும் பிள்ளையை வைத்துக் கொண்டு பிரவீனா எங்கு செல்கிறாள். கொஞ்சம் அவள் மீது எரிச்சல் வந்தது. இவளுக்கு பிறந்த பாவத்திற்கு பிள்ளையும் அவள் கஷ்டத்திற்கு இழுபடுகிறது. மதுரையின் ஒதுக்கு புறமான இடத்திற்கு ஆட்டோ செல்ல, இரவு வேலை என்பதால் இருட்டு பயமுறுத்தியது. நன்றாக மதுரையை கடந்து காட்டுப்பாதையில் பயணித்து ஒரு தென்னந்தோப்பில் ஆட்டோ நின்றது.
பிரவீனா என்னவோ பேய் பிடித்தவள் போல எதையும் உணராமல் பிள்ளையை தூக்கிக் கொண்டு முன்னே சென்றாள். தன்னை பின்தொடரும் மித்ரனை கூட அவள் உணரவில்லை. அவனுக்கு கோபம்.. முதலில் அவள் நிதானம் ஆகட்டும் என்று அமைதியாகி கொண்டான்.
அந்த இருட்டில் பிள்ளையை தூக்கிக் கொண்டு வேகமாக தோப்பிற்கு அந்தப் பக்கம் இருந்த கரடு முரடான பாதையில் நடந்தாள். ஆதிரன் பயந்து அழுதான். இது சரிவராது என்று மித்ரன் பிள்ளையை தூக்க வேகமாக முன்னே செல்ல, ஒற்றை விளக்கோடு வேப்ப மரத்துக்கு அடியில் ஒரு சமாதி இருந்தது. பார்த்ததும் கரண்ட் ஷாக் அடித்தது போல மித்ரன் நின்று கொண்டான். அது யாருடையது என்று கண்டுபிடிக்க பெரிதாக யோசனை தேவையில்லை.
இளங்கோவின் இருப்பிடம் அது… “பிரவீனா”நெஞ்சு வலித்தது அவனுக்கு… இதுவரை அவள் மீது இருந்த கோபம் போய் அனுதாபம் வந்தது. ஒற்றை விளக்கை கண்டதும் பிரவீனா நடை வேகமாகியது. எல்லையை நெருங்கியதும் பிள்ளையை இறக்கி விட்டவள் அழுகை சத்தம் அவன் காதை எட்டியது.
உண்மையில் அந்த இடத்தில் மித்ரனுக்கு பயம் வந்தது. நடுகாடு, சுற்றிலும் ஆள் நடமாட்டமோ , ஊரோ கண்ணு கெட்டியது வரை தென்படவில்லை. அதுவும் அந்த ஒற்றை வேப்ப மரமும். அதற்கு கீழ் இருந்த சமாதியும்.. அவனை பயங்கரமாக அச்சுறுத்தியது. ஆதிரனும் அவ்வாறே.. மித்ரன் போலவே அவனும் பயம்தான். அவனுக்கு இது தன் தந்தை என்றா தெரியும்.
பிரவீனா என்று மித்ரன் முன்னே வந்ததும், அதன் அருகே கூட ஆதிரனை செல்ல விடாமல் தூக்கிக் கொண்டதும் அவள் கவனத்தில் பதிந்தாலும், என்னவோ நினைவில் இல்லை. மித்ரனுக்கு சூழல் பயமுறுத்த கூடியதாக இருக்கலாம். ஆனால், பிரவீனாவுக்கு இளங்கோவின் இருப்பிடம் எவ்வாறு பயத்தை கொடுக்கும். அது பெரிய அமைதியை கொடுத்தது. இதுவரை இருந்த மன அழுத்தத்தை மாயமாக போக்கியது.
அதன் நிழலில் கால் வைக்கும் போதே, தொண்டையை கவ்வி பிடித்தது வலி. பிரவீனா உடல் நடுக்கம் கண்டது. ஆதிரன், மித்ரனை கண்டதும் பயம் போய், அவன் கழுத்தை கட்டிக் கொண்டான். தன் கணவன், தன்னோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவன், சாகும் வரை உன்னோடு தான் என் வாழ்க்கை என்று பிணைத்துக் கொண்டவன். இன்று ஏதோ ஒரு காட்டில் உறங்கிக் கொண்டிருக்க, அவன் மனைவியை ஊரே விரட்டிக் கொண்டிருக்கிறது.
தாங்கவில்லை அவளுக்கு கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தாள். அழுகை, அழுகை அப்படி ஒரு அழுகை. ஆதிரன் பயந்து மித்ரனோடு ஒண்டிக்கொண்டான். தன் அம்மா என்று கூட அவளை அண்டவில்லை. சத்தமாக அழுதால், கதறி கதறி தலையில் அடித்து நெஞ்சில் அடித்தெல்லாம் அழுதாள்.
மித்ரன் அமைதியாக அவளை அழவிட்டான். முன்பிருந்த பயம் இப்போது இல்லை.. அவள் நம்புகிறாள் இந்த இடத்தில் தன் கணவன் இருக்கிறான் என்று… என்னவோ ஒரு மன அமைதி, ஆறுதல் கிட்டட்டுமே!… இறந்தவர்களின் சமாதியில் கிடைக்கும் ஆறுதல். உயிரோடு இருக்கும் மனிதர்களிடம் கிடைக்கவில்லை என்றால் இந்த உலகில் மனிதாபிமானத்தை என்ன சொல்ல?…
வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்இருக்கும் புண் சீல் வைத்துப் போனால், வலியோடு தான் வெளிவரும். பிரவீனாவுக்கும் வெளிவரட்டும் என்று அமைதி காத்தான். மித்ரனுக்கு, அவள் இளங்கோவின் கல்லறையை கட்டிக்கொண்டு அழுததில் அவள் மேல் இரக்கம் தான் வந்தது. மித்ரனுக்கு, பிரவீனா என்ன உறவு!…
அவள் மேல் காதல் கொண்டு கைபிடிக்க காத்திருக்கிறான். அவ்வளவு தானே!.. அப்படி இருந்தும் அவள் நலனிலும், பாதுகாப்பிலும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான். ஆனால் பிரவீனாவுக்கு, இளங்கோவன்? அந்த வலியை அவள் எங்கு போக்க.. மனம் விட்டு அழுதாவது ஆறுதல் அடையட்டும் என்று விட்டு விட்டான்.
error: Content is protected !!