Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மார்கழி மத்தாப்புக்கள்

மார்கழி மத்தாப்புக்கள் – 22

மார்கழி – 22

இனிமையான அதிர்வில் துவங்கி இதமான மனநிலையில் ஊர் சுற்ற வந்தவர்களின் நாள் இப்படி பாரமேறிப் போகும் என்று இருவருமே எண்ணவில்லை. முடிவு கிடைத்துவிடும் என்று பேசி அவள் முடிவை தெரிந்துகொண்டவனோ நெஞ்சம் அடைக்க நடந்தான். 

அவனே மறக்கத் தடுமாறி கடக்கத் தவிக்கும் ஒன்றை மறக்கடிக்க வேண்டுமாம். சாத்தியமா? எப்படி முடியும் தன்னால்? முள்ளென கூர்ந்து நிற்கும் அவ்விரவை எப்படி விரட்டுவது? சட்டென்று ஒன்றும் புரியவில்லை. வெளியே அழைத்து வந்தவனே, “கிளம்பலாமா?” என்று கேட்டிருந்தான். 

கலங்கி நின்ற கண்கள் இயல்புக்கு திரும்பியிருக்க, வெறுமையாய் அவனை ஏறிட்டவள் முகத்தினில் எதிர்பார்ப்புடனான பாவனை. 



Advertisement

“இயல்?”

“ஹான்… கிளம்பலாம்.” தடுமாறி சொன்னவள் முகத்தினை திருப்பிக்கொண்டாள். 

எப்படியெல்லாமோ சென்றிருக்க வேண்டிய நாள் என்று இயலாமையுடன் எண்ணிக்கொண்டே அவன் வாயில் நோக்கி நடக்க, பின்னோடே அமைதியாய் அவள். அழைத்து வந்தது போலவே பத்திரமாக விடுதியில் வந்து விட்டவன் சிறிய தலையசைப்புடன் நகர்ந்துவிட்டான்.

Advertisement

‘அவ்வளவுதானா?’ ஏமாற்றம் தாங்கிய பார்வை அவனை தொடர்வதை கவனிக்கவில்லை.

Advertisement

பெருமூச்சுடன் உள்ளே வந்தவள் சோர்வாய் அறையினுள் சுருண்டுவிட்டாள்.

“உங்க ஹஸ்பண்ட் வந்திருக்கிறதா சொன்னாங்க. அதுக்குள்ள வந்துட்டீங்க. எங்களுக்கு இன்ட்ரோ எல்லாம் கிடையாதா அக்கா?” அப்போதுதான் காலை உணவு முடித்து சாவுகாசமாக அறைக்குள் நுழைந்த அறைத்தோழி கேட்க, எரிச்சலுடன் திரும்பி அவளுக்கு முதுகு காட்டிப்படுத்தாள் இயலணி. இருக்கும் சோர்வில் இவளது விசாரணை வேறா என்ற தொய்வு அவள் உடலில் தெரிய,

‘ம்க்கும்… வாயே திறக்க மாட்டாங்க.” என்ற முணுமுணுப்புடன் அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

Advertisement

தனக்குள்ளேயே நொந்து பெற்றவர்களை வதைத்து என்ன கிடைத்துவிடப்போகிறது? அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருந்தவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பினை காதல் என்று அர்த்தம் கொண்டு அவனை திருமணம் செய்ததோடு நில்லாமல் அவன் மீது விருப்பமில்லை என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும். ஆசைப்பட்ட வாழ்வு கிடைக்காமல் கிடைத்த வாழ்க்கையை வாழ நினைத்தவனோடு வாழ்ந்திருக்க வேண்டும் இல்லையேல் விட்டு விலகியிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் மதில் மேல் பூனையாய் எத்தனை நாளுக்கு கண்ணாம்பூச்சி ஆட? தவறு செய்துவிட்டான் தான் அதற்காக தவறானவன் என்று முத்திரை குத்துமளவுக்கு தாழ்ந்தவன் இல்லையே. ஒன்றாய் இருந்த மூன்று மாதங்கள் எப்படி பார்த்துக்கொண்டான். நொடியேனும் தவறான பார்வை அவனிடமிருந்து வந்திருக்குமா? பாதுகாப்பாகவே உணர்ந்தாள் அவனுடன் இருக்கையில். நிறைகள் பல இருக்க குறைகளை ஒதுக்க முயல்வோம் அவனும் செய்த தவறை உணர்ந்து பிடித்த வேலையை விட்டு வந்து இங்கு வருந்துகிறான். பார்க்கும் பார்வையில் குற்றவுணர்வு கொட்டிக்கிடக்கிறது. ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே, ஒருவேளை அவனை பிடிக்கவும் செய்யலாம் என்று ஒருவாறு யோசித்து அவள் முடிவெடுத்த தருணம் அவன் வந்து வெளியே அழைக்கவும் இதமான மனநிலையில் உடன் சென்றாள். உடன் வந்துவிடு என்று அவன் கேட்கவும் சம்மதமாய் தலையசைக்கப் போனவளிடமிருந்து அவளையும் அறியாது வெளிவந்த வார்த்தைகள் அவை. 

அவ்விரவின் சுவடு இன்னும் மனதை விட்டு அகலவில்லை என்று தெரிந்தாலும் அவனிடம் அப்படி தவித்துப் போய் சொல்லவும்தான் தன்னுள் ஊடுருவி இருக்கும் அதன் தாக்கத்தை உணர்ந்தாள்.

‘அந்த இரவை மறந்துவிட மாட்டோமா?’ என்று இப்போது அவளுக்கே தோன்றிவிட்டது. நிதம் அதனை பிடித்து தொங்கிக்கொண்டு மனதை இறுக்கமாகவே வைத்திருப்பது சோர்வை தர, மாற்றம் வந்துவிடாதா என்ற ஏக்கம். அலைபேசியை எடுத்துப் பார்த்தாள், அழைப்பு எதுவும் வந்திருக்கவில்லை. வாட்ஸ்ஆப் திறந்து அவன் பக்கம் சென்று பார்த்தாள். பதினைந்து நாள் முன் வந்திருந்தது கடைசி செய்தி.      

‘ப்ச்… என்ன எதிர்பாக்குற நீ? அப்படி நீ பட்டுனு சொல்லவும் மூஞ்சே செத்து போச்சு. திரும்ப எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு பேசுறதுனு இருப்பார்.’ என்று சரியாக கணித்து அலைபேசியால் நெற்றியை தட்டிக்கொண்டாள்.

அடுத்த ஒரு பதினைந்து நாள் எந்த தொடர்பும் இன்றி கழிந்தது.

‘என்னை தேடுனேனு சொல்லிட்டு திரும்ப ஆள் எஸ்கிப். ஒருவேளை முன்னாடி மாதிரி எனக்கே தெரியாம பாலோ பண்ணுவாரோ?’ செல்லும் இடமெல்லாம் அவனைத் தேடி அலைந்தது அவள் விழிகள்.

‘காலாண்டு பரீட்சை லீவ் வரப்போகுது. ஊருக்கு போனா இவரை எங்கன்னு பாக்க நானு. இப்போவே கண்ணுல படமாட்டேங்குறாரு.’ இம்முறை இவள்தான் அவனுக்காக ஓய்ந்து போனாள்.

அந்த வருட காலாண்டுத் தேர்வு விடுமுறையும் முடிந்து பள்ளிகள் திறந்த பிற்பாடு அமைதியாக இருக்க முடியவில்லை அவளால். 

‘என்ன நினைச்சிட்டு இருக்காங்க. இவங்க கூப்பிட்ட உடனே வரலைனா கண்டுக்க மாட்டாங்களாமாம்?’ கோபத்துடன் அன்று மாலை பள்ளி முடித்து அவன் வீடு தேடி சென்றுவிட்டாள். வீடு பூட்டியிருந்தது.

‘போன் பண்ணிப் பாரு.’ என்ற மனதை, ‘எதுக்கு? இத்தனை நாள்ல ஒரு மெசேஜ் வந்துச்சா. வரட்டும் பாத்துக்குறேன்.’ என்று ஏத்திவிட்டது இன்னொரு மனது. நேரத்தை பார்க்க ஆறரை தொட்டு நின்றது. எப்போது வருவான் என்று தெரியவில்லை எனினும் அவனை சந்திக்காமல் செல்லப் போவதில்லை என்று அரை மணி நேரம் அங்குமிங்குமாய் நடந்து நேரத்தை போக்க, அதற்கு மேல் முடியவில்லை. உடலில் அசவுகரியம் தோன்றிட, அங்கிருந்து கிளம்பியாக வேண்டிய சூழல். பெருமூச்சுடன் கிளம்பியவள் அடுத்த மூன்று நாட்களுக்கு அவனை பற்றி யோசித்த வண்ணம் இருந்தாள். 

‘என் நினைப்பு இருக்குமா அவங்களுக்கு?’ இடையிடையே சந்தேகம் வேறு.

‘நானும் கொஞ்சம் முயற்சி எடுத்தா தான் சுமூகமாக்க முடியும். எல்லாத்துக்கும் அவங்களையே பாத்து நின்னா இப்படி புலம்பிட்டே இருக்க வேண்டியதுதான்.’ என்று நினைத்துக்கொண்டவள் அந்த வார இறுதியில் மீண்டும் அவன் வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்த நேரம் அவன் வந்து நின்றான்.

“இப்போ தான் உங்க நியாபகத்துக்கு வந்தேனா நானு?” அத்தனை நேரம் அவனை தேடி செல்ல வேண்டும் என்றதெல்லாம் பின்சென்று முரடு பிடித்தாள்.

“மறந்தா தான நியாபகத்துக்கு வர.” என்றதும் வெளிவரத் துடித்த புன்னகையை மென்றவள், 

“இந்த உருட்டு எல்லாம் வேற எங்கேயாவது உருட்டுங்க.” முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நகர்ந்தாள்.

“சரி சரி உடனே கோவிச்சிக்காத. கிளம்பு வீட்டுக்கு போகலாம்.”

“பதினைஞ்சி நாள் இருக்கேனா இல்லையானு பாக்காம இன்னைக்கு வந்து கூப்பிட்டா வந்துறணுமா நானு?” கழுத்தை வெட்டிச் செல்ல, லேசாக விரிந்த இதழ்களை நன்றாக வளைத்து புன்னகை முகமாய் வண்டியை நிறுத்திவிட்டு அவள் பின் நடந்தான்.

“என் பின்னாடி யாரும் வரவேண்டாம்.” திரும்பிப் பார்த்து முறைத்தவண்ணம் மொழிந்தவளைக் கண்டு இன்னுமே விரிந்தது அவன் இதழ்கள். அதனை கவனித்தவள் உதட்டை சுழித்துக்கொண்டு நடந்தாள்.  

“கடைசி சான்ஸைல எதுவும் மிஸ் ஆகிடக்கூடாதுனு கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்.” என்றவன் வேக எட்டுக்கள் வைத்து அவளை நெருங்கினான்.

“ஒன்னும் அவசரமில்லை. இன்னும் டைம் எடுத்துக்கோங்க.” வீம்பு பிடித்தவள் பையை இறுக்கிப்பிடித்து நடையின் வேகத்தை கூட்ட, எட்டி அவள் கரத்தை பிடித்து நிறுத்தியவன், “ரொம்ப முறுக்காத இயல். இதுக்கு மேல முடியாது.”

“என்ன முடியாது?”

“நடக்க முடியாதுமா. இப்போவே விறுவிறுன்னு அரை கிலோமீட்டர் நடந்து வந்துட்ட. திரும்ப போய் வண்டி எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பணும்.” 

“ப்ச்… நடங்க கொழுப்பு குறையும்.” என்றவள் குரலில் காரம் குறைந்து இலகுத்தன்மை வந்தது.

“சரிதான். வீட்டுக்கு போவோமா?”

“உடனே எல்லாம் வர முடியாது.”

“அப்போ எப்போ முடியுமாம்?” உள்ள சென்றுவிட்ட குரலில் அவன் பார்த்து நிற்க,

“இன்னும் ஒரு மாசம் ஆவும்னா என்ன பண்ணுவீங்களாம்?” வேண்டுமென்றே கேட்டாள். 

“வெயிட் பண்ணுவேன் இயல். உன்னை எதுக்கும் போர்ஸ் பண்ண மாட்டேன்.” உணர்ந்துவிட்ட குரலில் அவன் தழைந்து பேச, அதற்கு மேல் வீம்பு பிடிக்கவில்லை இயலணி.

“இன்னைக்கே ரூம் காலி பண்ணிடவா?”

“இதுக்கு மேலையும் லேட் பண்ணனுமா உனக்கு?” என்றதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள, அறிவழகன் திரும்பி நின்று அவளிடம், “வண்டி அங்க இருக்கு.” என்று கை காட்டிட, கையிலிருந்த உணவுப்பையை அவனிடம் நீட்டினாள்.

“இப்போலேந்தே ஹஸ்பண்ட் டியூட்டி பாருடாங்குற.” இன்பமாய் சலித்துக்கொண்டே அதனை வாங்கிக்கொண்டான் அறிவழகன். 

“அன்னைக்கு ஹேண்ட்பேக் எல்லாம் மாட்டிக்கிட்டிங்க.” மருத்துவமனை சென்ற அன்று அவன் செய்ததை சுட்டிக்காட்டி கேட்டபடி அவள் நடக்க, உடன் நடந்தவன், “இப்போவும் வேணும்னா குடு மாட்டிக்குறேன்.”

“ஆஹான். அவ்வளவு நல்லவரா நீங்க.” எதேர்ச்சியாய் அவள் கேட்க,

“அதை நீதான் சொல்லணும் இயல்.” என்று அவன் பதில் கூற,

‘ஒருத்தன் நல்லவனா இல்லையானு அவன் பொண்டாட்டி சொல்லணும்.’ என்று என்றோ இயலணி கூறிய வார்த்தைகள் தேவையற்ற நேரத்தில் சரியாய் சூழ்ந்து ஆக்கிரமித்துக்கொண்டது இருவரையும். 

புதிதாய் துவங்கப்போகும் வாழ்க்கையில் பழையதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று இருவருமே தலையை உலுக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, சங்கடமாய் திரும்பிக்கொண்டனர் இருவரும். 

“மார்னிங் நானே உன்னை ஸ்கூல்ல டிராப் பண்ணிடுறேன். ஈவ்னிங் மட்டும் என்னனு பாக்கணும்.” அறிவழகன் முயன்று கவனத்தை திசை திருப்பினான்.

“ஒன்னும் பிரச்சனையில்லை. அங்க போய் பாத்துக்கலாம்.” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடக்க, நெற்றி சுருக்கினான் அறிவழகன்.

“என்ன இயல்?”

“ஒண்ணுமில்லை.”

“இயல்…”

“ஸ்ஸப்பா… இதெல்லாம் நிஜமானு பாத்துக்கிட்டேன். ஆறேழு மாசமாவே ஒரே குழப்பம், குடைச்சல். என்னமோ உறுத்திக்கிட்டே நெருடிகிட்டே இருந்துச்சு. அதான் பாத்தேன்.” என்று அவள் சொல்ல, தலையாட்டிக்கொண்டவன் பட்டென அவள் கையில் கிள்ளிவிட,

“என்ன பண்றீங்க?” துள்ளி நகர்ந்து முறைத்தாள் இயலணி. 

“நிஜமானு கிள்ளி பாத்து தெரிஞ்சிக்கணும்.”

“எப்படி இப்படியா?” என்று அவள் அவன் கையை கிள்ளி வைக்க, 

“டீச்சர் அம்மானு ப்ரூப் பண்றீங்க.” என்று அவன் முனகிக்கொண்டே அவளை போலியாய் முறைக்க, மறுநொடியே மலர்ந்து விரிந்தது அதரங்கள். கசப்புகள் பின்சென்று மனதிலிருந்து அழகானதொரு மலர்ச்சி. 

“நீ சிரிச்சா அழகா இருக்க இயல்.” சட்டென மனதில் தோன்றியதை அவன் சொல்லிவிட,  

மறுபக்கம் திரும்பிக்கொண்டாள் இயலணி, “இன்னைக்கு தான் தெரியுதாக்கும்.”

“இன்னைக்கு தான் பாக்குறேன்.”

“நல்லா பாத்தீங்க. உங்களை ஊரே வேடிக்கை பாக்குது வண்டியை எடுங்க.” நாணம் கொண்டு மின்னிய கன்னத்தை மறைக்க முடியாமல் பையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு வண்டியின் பின்னே நின்றுகொள்ள, அவளிடமிருந்து பையை பிடுங்கி முன்னால் மாட்டி வண்டியைக் கிளப்பினான். பின்னால் ஏறிக்கொண்டாள் இயலணி.

நெரிசல் குறைவான இடத்தில் மாலை நேரக் காற்று வந்து முகத்தில் மோத, பக்கவாட்டு கம்பியை இறுக பிடித்துக்கொண்டவள் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.

“உனக்கு ஒரு ஹெல்மெட் வாங்கணும் இயல்.” அவன் சொல்லியது காதில் விழவில்லை என்று முன்னே நகர, சிக்னலுக்காக வண்டியை நிறுத்தியிருந்தான் அறிவழகன்.

அவன் நிறுத்திய வேகத்தில் அவன் முதுகோடு ஒன்றி விலகியவள் லேசாக அவன் தோளில் அடித்து, ‘பிராடு. பொறுமையா போனா என்னவாம்.’ அவள் கோவமின்றி முனங்க, அந்த சிறு சிறு சிணுங்கல்களும் இதமாய் இருந்தது இருவருக்கும்.

முதலில் அவள் விடுதிக்கு சென்று அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல, பல புதியவைகள் இடம்பெற்றிருந்தது.

“அன்னைக்கு இதெல்லாம் இல்லையே.” என்று அறையிலிருந்த மெத்தை, நாற்காலி, மேசையை கவனித்து அவள் கேட்க,

“நீ வரும்போது வாங்கிக்கலாம்னு அப்படியே ஓட்டிட்டு இருந்தேன்.” என்றவன் அவள் பின்னோடே நடந்தான்.

அன்றைக்கு இருந்த உடல்நிலையில் சரியாக கவனிக்காத இயலணி இன்று நிதானமாக வீட்டை சுற்றிப்பார்த்தாள். சமையலறை வரவும், “இனியும் சாப்பாடு வெளில வாங்குனா கட்டுப்படி ஆகாதுமா.” என்ற அறிவழகன் அங்கிருந்த ஜன்னலை திறக்க, 

“அப்போ சமைக்க கத்துக்கோங்க.” என்று இலகுவாய் அதிர்ச்சி கொடுத்தாள் இயலணி.  

“நானா?”

“அப்போ நான் சமைக்கணுமா?” என்று அவள் விழிகளை உருட்டியதில் எச்சில் கூட்டி விழுங்கியவனோ, “கண்டிப்பா நாந்தான் செய்யணுமா?” 

தாடையைத் தடவி யோசிப்பது போல் பாவனை செய்தவள், “என் உயிர் எனக்கு முக்கியம் அதனால ஹெல்ப் மட்டும் பண்ணுங்க போதும்.”

“அப்போ என் உயிருக்கு யார் கேரண்டி?” அதிர்வது போல் அவன் நெஞ்சில் கை வைக்க, சிரிப்புடன் அவன் கையை லேசாக தட்டியவள், 

“சுடுதண்ணி நல்லா வைப்பேனே…”

“அப்போ மூணு வேளையும் தண்ணிய குடிச்சிட்டு படுக்க வேண்டியதுதானா?”

கேலி பேசிக்கொண்டே இருவரும் வீட்டை சுற்றிவர, இயலணி அவளுக்கு ஏற்றார் போல் சிலவற்றை மாற்றி வைத்தாள். 

“வேறெதுவும் வாங்கணுமா இயல்? கிட்சன் திங்ஸ் எதுவும் இன்னும் வாங்கல.”

“கொஞ்ச கொஞ்சமா வாங்கிக்கலாம்.” என்று அவள் சொல்லவும் அறைப் பக்கம் நகர்ந்தவன், 

“ரூம்ல உன் ட்ரெஸ் எல்லாம் ஷெல்ப்ல அடுக்கிடலாம்.” என்றிட, அத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை குறைவது போல் உணர்ந்தாள் இயலணி.

என்னதான் ஒரே வீட்டில் இருக்க சம்மதித்துவிட்டாலும் எதுவோ குறைவது போலிருந்தது. என்ன என்றுதான் தெரியவில்லை. அவன் அருகாமையை நினைத்து சங்கடம் என்று யூகித்துக்கொண்டவள் முயன்று கால்களை இழுத்துக்கொண்டு சென்றாள். அவள் வரும்வரை காத்திருக்காமல் அவனே அவள் பைகளை திறந்து உடைகளை மெத்தையில் பிரித்து வைத்துக்கொண்டிருந்தான்.

“நான் பண்றேன்.” விரைந்து சென்று உடைகளை கைகளில் எடுக்க,

“நானும் பண்றேனே.” என்று இலகுவாக அடுக்க ஆரம்பித்துவிட்டான்.

“இங்க உன் புடவை வச்சிக்கோ, இங்க உன் நைட் வியர்ஸ், சுடிதார்…” என்று ஒவ்வொன்றாய் எடுத்து அதற்கான இடத்தை ஒதுக்கி அடுக்க, பாய்ந்து வந்து அவன் கையிலிருந்த பையை பிடுங்கிக்கொண்டாள் இயலணி.

“ஏன் நான் ஹெல்ப் பண்ணக்கூடாதா? கிட்சன்ல மட்டும்தான் என்கிட்ட வேலை வாங்குவியா?” அதிருப்தியாய் அவன் பார்க்க, அவன் பார்வையில் நெளிந்தவள், 

“ஐயோ நீங்க எடுத்து வச்ச வரைக்கும் போதும். நகருங்க.” என்று கைவைத்து தள்ளாத குறையாக அவள் பரபரக்க, 

“ஏன் என்னை விரட்டுற?” என்று புரியாமல் பார்த்தான் அறிவழகன். 

“புரிஞ்சிக்கோங்களேன்.” இறைஞ்சுதலாய் பார்த்தவள் அவனை திசைதிருப்பும் பொருட்டு, “இதை அப்புறம் கூட வச்சிக்கலாம். எனக்கு பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வாங்க.”

அழைத்து வந்து இத்தனை நேரமாகியும் கவனிக்காமல் விட்டோமே என்று நெற்றியில் அடித்துக்கொண்டவன், “ரெண்டு பேரும் இன்னைக்கு வெளில சாப்புட்டு வரலாமா?” 

அவள் சரியென்கவும் அவன் நகர, அவசர அவசரமாக அவளது பையிலிருந்த மீதி ஆடைகளை ஷெல்பில் வைத்து கதவை மூடினாள்.

“அப்படி என்ன எனக்கு தெரியாம ஒளிச்சி வைக்குற?” திடுமென ஒலித்த அவன் குரலில் திகைத்து திரும்பியவள் அறை வாயிலில் நின்று தன்னையே குறுகுறுவென அவன் பார்க்கவும் நாணம் கொண்டவளாய் தொண்டையை செருமிக்கொண்டாள்.

“என்னத்தை ஒளிச்சி வைக்க போறேன் நானு.” போகிற போக்கில் மெலிதாய் முனகிவிட்டு அவனை கடந்து செல்ல,

“அதான் ஒளிச்சி வைக்குற அளவுக்கு எதுவுமில்லை. நீ ஃப்ரீயா இருக்கலாம்.” என்றான் அவனும் வண்டி சாவியை எடுத்தபடி.

‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று விழித்தது நொடிநேரம்தான். அவனது பார்வை அவளை சீண்டுவது போல் உரசி செல்லவும் எதுவும் நடவாதது போல் விறுவிறுவென வெளியேறினாள்.

“ப்ரெஷ் ஆகிட்டு வா இயல்.”

“ஏன் டல்லா இருக்கா முகம்?” நின்று அவனிடம் கேட்க, கண்களை சுருக்கி அவன் உற்று பார்க்கவும் உடல் குறுகுறுக்க, “நான் வந்துறேன்.” என்று அறைக்குள் ஓடிவிட்டாள்.

‘என்ன இது புதுசா? அவர் பார்த்தாலே ஒருமாதிரி ஆகிடுறேன்?’ மனதிற்குள் புலம்பியபடி முகம் கழுவி வந்தவள் அவன் பார்வையை சந்திக்காது வெளியே சென்றுவிட்டாள். வீட்டை பூட்டி சாவியை அவளிடமே கொடுத்தவன் அருகிலிருந்த கடைக்கு அழைத்துச் சென்றான்.

செல்லும் வழியெல்லாம் எது எங்கிருக்கிறது எதுஎது எங்கு கிடைக்கும் என்று கடைகளை காட்டியபடி வந்தான். சிரத்தையாக கேட்டுக்கொண்டவள் சுற்றத்தை மனதில் பதித்துக்கொண்டாள்.

“உங்களுக்கு இந்த ஏரியா எல்லாம் தெரியுமா?”

“நானும் சென்னைக்கு புதுசுதான் இயல். பிரெண்ட்ஸ் இருக்காங்க, அவங்ககூட பேசுறப்போ இங்க இருக்குறதெல்லாம் கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.”

“நான் பீச் போவேன். அன்னைக்கு உங்களோட மால் வந்தேன். வேற எங்கேயும் போனதில்லை.” பேச்சுக்கு இடையில் சென்னையில் தான் சென்ற இடங்களை பட்டியலிட்டு அவள் பகிர்ந்துகொள்ள, மறுநாள் அவள் போகாத இடங்களுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்துக்கொண்டனர். 

வீட்டிற்கு வரும் வழியில் அவளுக்கு ஒரு ஹெல்மெட் வாங்கிக்கொண்டு வந்து சேர, களைப்பாய் இருந்தது இருவருக்கும்.

“தூங்கலாமா?” என்று அவன் பார்க்க, இமைகள் படபடக்க திரும்பிக்கொண்டாள் இயலணி. அவன் எங்கு படுப்பான்? முன்பு போல் வெளியேவா இல்லை உடன் உறங்குகிறேன் என்று அருகில் வருவானா என்ற படபடப்பில் வியர்வை மொட்டுக்கள் அவள் கழுத்தை அணிவகுத்தது. அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவன் அவனும் தடுமாறிப் போனான். தொண்டையை செருமிக்கொண்டவன், 

“கதவை பூட்டிட்டு வரேன்.” என்று வாசல் நோக்கி நடக்க, வேகமாக அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துவிட்டாள் இயலணி.

வெளிச்சத்திலிருந்து தப்புவது போல் கண்களை இறுக மூடி உறங்க முயன்றவளின் செவிப்புலன் கூர்மையாக அவன் கதவை தாழிடுவது, விளக்கை அணைப்பது, அறைக்குள் நுழைவது என்று அனைத்தையும் கவனித்து பதிந்துகொண்டது.

‘என்ன ரூமுக்கு வராங்க. இங்கதான் தூங்க போறாங்களா?’ என்று அவள் எண்ணும் போதே கப்போர்டை திறக்கும் சத்தம். உடை மாற்றுகிறான் போல என்ற யோசனையில்தான் பள்ளிக்கு கட்டிச் சென்ற சேலையிலேயே அவள் இன்னும் இருப்பது புரிந்தது இயலணிக்கு.

‘ம்ச். இவங்க இங்க இருந்தா எப்படி மாத்த?’ உள்ளுக்குள் முனகிக்கொள்ள, அவள் அருகில் மெத்தை அமிழ்வதை உணர முடிந்தது.

“இயல்.” வெகு அருகில் அவன் குரல் ஒலிக்கவும் இமைகளை இன்னும் நெருக்கிக்கொண்டாள்.

“மறக்க வைக்க முடியுமான்னு தெரியல. ஆனா அந்த நியாபகம் வராம உன்னை பாத்துக்க நினைக்குறேன் இயல். தள்ளி தள்ளி போனா மனசை உறுத்திக்கிட்டே தான் இருக்கும். அதை கடந்து வரமுடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இயல்பா இருக்கோமோ அந்தளவுக்கு நாம நமக்கான வாழ்க்கையை அழகாக்கிகலாம். உனக்கு புடிச்சது புடிக்காதது எல்லாத்தையும் தயங்காம என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ. உன் விருப்பம் இல்லாம இங்க எதுவுமே நடக்கப்போறதில்லை இயல். கண்டதை போட்டு குழப்பிக்காத. இது உன் வீடு, உன் வீட்டுல எப்படி இருப்பியா அப்படி இரு. போய் டிரெஸ் மாத்திக்கோ.” அறை பகிர்ந்துகொள்வதற்கான காரணமாக அவன் தன் பக்கத்தை முன்வைக்க, நிம்மதி மூச்சுவிட்டாள் இயலணி. 

முன்பு போல் அவன் அருகாமை அசூயை தரவில்லை என்றாலும் அதனை ஏற்கவும் சட்டென வரவில்லை. அவனும் புரிந்துகொண்டு சிறு இடைவெளி விட்டே படுத்திருக்க, குறுக்கிய உடலை மெல்ல தளர்த்தினாள். 

“நான் திரும்பமாட்டேன். நீ டிரெஸ் மாத்திக்கோ.” ஐயமின்றி அவள் நடமாட மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டவன் கண்களை புறங்கையால் மறைத்துக்கொண்டான். 

அவன் திரும்பியதும் நன்றாக படுத்தவள் மெதுவாக எழுந்து அமர்ந்து அவனை பார்த்தாள். டீசர்ட் மற்றும் கைலிக்கு மாறியிருந்தவன் அவளுக்கு முதுகு காட்டி அசையாது படுத்திருந்தான். குனிந்து தன்னை பார்த்துக்கொண்டாள். கழிப்பறையோடு சேர்ந்திருக்கும் அந்த சிறிய குளியறையில் புடவை மாற்றுவது சிரமமாக இருக்கும் இங்கேயே தான் மாற்றியாக வேண்டும். சங்கடம் வந்து ஒட்டிக்கொள்ள நன்றாக அவன் புறம் சரிந்து அவன் பார்க்கிறானா என்று பார்த்தாள்.

“கண்ணை திறக்க மாட்டேன் இயல். சந்தேகமா இருந்தா சொல்லு ஹால்ல வெயிட் பண்றேன்.” கண்களை திறவாமலேயே அவன் சொல்ல, 

“இல்லை சும்மா… நீங்க தூங்குங்க.” இயல்பாய் இல்லாமல் ஒவ்வொன்றிற்கும் யோசித்து நின்றால் அந்நாளின் நினைவுகள் அரிக்கத்தானே செய்யும். கடந்து வர வேண்டுமென்றால் துணிந்தாக வேண்டும் என்று முடிவெடுத்தவளாய் சிறிய விளக்கை போட்டுக்கொண்டு உடை மாற்றி வந்து அவன் அருகில் படுத்துக்கொண்டாள்.

அதற்காகவே காத்திருந்தவன் போல் பட்டென்று அவள்புறம் திரும்பியவன் தலையணையில் இருந்த அவள் கரத்தை எடுத்து தனக்குள் பொதித்துக்கொண்டவனாய், “குட் நைட்.” என்று கண்களை மூடிவிட, அவன் கைசூட்டை தன் கரத்தில் உணர்ந்தபடி மலங்க மலங்க விழித்துக்கிடந்தாள் இயலணி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!