Skip to content
Post Views: 1,381
“….”
“நான் ரமணி பேசறேம்மா..”
வசுமதிக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்தாள்.
“நீ மட்டும் என்னோட பொண்ணா இருந்திருந்தா, நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன்.”
“ம்மா..!”
திக்கித் திணறிப் பேசினாள் வசுமதி.
“வசுமதி?”
“ம்மா.. நான் உங்களை இப்படிக் கூப்பிடலாமா? நான் உங்க மக இல்லையாம்மா?”
அவளின் வார்த்தைகளில் இருந்த வேதனை ரமணியை உருக்கியது.
“இதென்ன கேள்வி, நானும் உனக்கு அம்மாதான். நீ என் மகதான் கவலைப் படாதே. இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்காது.”
அவளின் இந்த வார்த்தைகளில் வசுமதி அழுதேவிட்டாள். ஓ-வென்று அழுதாள்.
ரமணியின் தாயுள்ளம் பதைபதைத்தது.
“அழக்கூடாதுடா குட்டி.. நீ அழுதா நான் போனை வச்சிடுவேன்.”
“ம்ம்ம்..”
“இந்தக் குடும்பத்து ஆம்பளைங்களுக்கு அறிவே கிடையாது. அறிவிருக்கிறவங்களுக்குத் துணிச்சல் இருக்காது. நான் உன் அப்பாக்கிட்ட பேசவா? வந்து சண்டை போடட்டுமா?”
“வேண்டாம் இப்ப வேண்டாம்.” ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டாள் வசுமதி.
“ம்மா.. நான் அப்புறம் பேசட்டுமா? எ..என்னால இப்பப் பேசமுடியல..”
“சரி சரி.. நீ எப்ப வேணா பேசு. ரிலாக்ஸா இரு.” போனை வைத்துவிட்டாள் ரமணி.
****
அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் தொடர்ந்து ரமணியிடம் பேசினாள் வசுமதி. தனக்கு ஒரு மகள் கிடைத்திருக்கிறாள் என்பது ரமணிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. மகளின் முகத்தைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற தனது ஆசையைச் சொல்ல, தனியாக இருக்கும்போது அறைக் கதவை அடைத்துக் கொண்டு வீடியோ காலில் பேசினாள் வசுமதி..
ரமணிம்மாவிடம் பேசும்போது அவளுக்குள் தன்னம்பிக்கையும் சந்தோஷமும் நிரம்பி, தைரியம் வளர்ந்தது. ரமணியின் கணவர் பிரவீணும் அவளுக்குத் தைரியம் ஊட்டினார்.
“நீ தைரியமா இருப்பா உன்னை மீறி யாரும் எதுவும் செய்துட முடியாது. அப்படி ரொம்பவும் கட்டாயப்படுத்தினா, இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம், நான் படிக்கப் போறேன்னு சொல்லு. கொஞ்ச நாள் ஆறப் போட்டா எல்லாம் சரியாயிடும்.” என்றார் பிரவீண்.
அதையும் கேட்டுக் கொண்டாள் வசுமதி. அதுவும் நல்ல ஐடியாவாகத்தான் இருந்தது.
“ஆமா.. நான்தான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்றேனே ஏன் வேண்டாம்னு சொன்னப்பா? “அதுக்கு இல்லம்மா.. நீங்க இத்தனை வருஷமா பேசாம ஒதுங்கி இருக்கீங்கன்னா, அதுக்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். அது உங்க உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. இந்த விஷயத்துக்காக நீங்க அதிலிருந்து இறங்கி வர வேண்டாம். எனக்காக உங்க கம்பீரம் கொஞ்சமும் குறையக்கூடாது நீங்களா பேசும்போது பேசிக்கோங்க.” வசுமதியின் இந்த பெரிய மனுஷத் தன்மையில் கரைந்து போனாள் ரமணி.
சனிக்கிழமை மாலை மதன் பேசினான்.
“சொல்லுங்க மதன் எப்படி இருக்கீங்க?”
“ம்ம் சூப்பர்.. நாளைக்கு காலைல 11:30- 12க்கு மவுண்ட் ரோடு வந்துருங்க.”
ஒரு குறிப்பிட்ட ஓட்டல் பெயரை சொன்னான்.
“என்ன விஷயம் மதன்?”
“ட்ரீட்டுங்க.. வேலை கிடைச்சதுக்கு ட்ரீட் கேட்டீங்க இல்ல.. நாளைக்கு வேற ப்ரோக்ராம் ஏதும் வச்சுக்காதீங்க. என்னோட பிரண்ட்ஸ் ரெண்டு பேர் வருவாங்க. நாம நாலு பேர் மட்டும்தான்.”
“சூப்பர்! கண்டிப்பா வந்துடறேன்.” வசுமதி உற்சாகமாகப் பேசி போனை வைத்தாள்.
****
அந்த ஞாயிற்றுக்கிழமை..
“ஹேய்.. எப்படி இருக்க பேபி?” என்றபடி சங்கரின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் மித்ரா. எந்தவித் உணர்ச்சியுமில்லாமல் அவளைப் பார்த்தான் சங்கர். அக்குள் தெரியும்படியான சிவப்பு டாப்பும் அதற்கேற்றார் போல் முட்டியில் கிழிந்த ப்ளூ ஜீன்ஸும் போட்டிருந்தாள்.
“எப்பவும் உன்னையே நினைச்சிட்டு இருக்கேன். உன்னத்தான் பார்க்கவே முடியலை”
சங்கரின் இந்தப்பதிலுக்கு அமர்த்தலாகச் சிரித்தாள்.
“என்ன மித்ரா புது வண்டி வாங்கியிருக்கே, ட்ரீட் கிடையாதா?” என்றான் மதன்.
“அதை அடுத்த மாசம் வச்சுக்கலாம். இன்னைக்கு உன்னோட ட்ரீட்டை சிறப்பா செய்து முடி. உனக்குத்தானே முதல்ல வேலை கிடைச்சது.”
நண்பர்கள் மூவரும் ஒரு பிரபலமான அசைவ ஓட்டலின் முன்பாக கூடியிருந்தார்கள். அந்த ஓட்டலில் டேபிள் புக் பண்ணி இருந்தான் மதன். இந்த ஞாயிற்றுக்கிழமை விருந்துக்காக மித்ராவிடமும் சங்கரிடமும் முன்பே சொல்லி வைத்திருந்தான்.
“இன்னும் எதுக்காக வெயிட் பண்றோம், உள்ள போகலாம்ல?” என்றாள் மித்ரா.
“இன்னும் ஒரு முக்கியமான ஃப்ரண்டு வரணும். ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. இல்லன்னா சங்கர், நீயும் மித்ராவும் உள்ள போய் உட்காருங்களேன்.” என்றபடி தனது செல்போனை எடுத்தான் மதன். சரியாக அதேநேரம் அவர்கள் அருகே வந்து நின்றது ஒரு டாக்ஸி. அதிலிருந்து மதனைப் பார்த்து சிரித்தபடியே இறங்கினாள் வசுமதி.
“ஹல்லோ! வாங்க வாங்க. இவங்கதான் நான் சொன்ன முக்கியமான ஃப்ரெண்டு. எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே இவங்கதான், வசுமதி மேடம், இது என்னோட ப்ரெண்ட்ஸ் சங்கர், மித்ரா.”
“ஹை .. ஹலோ!” என்று அவர்களைப் பார்த்து சிநேகமாக சிரித்த வசுமதி, மதனிடம் திரும்பினாள்.
“அப்புறம் நீங்க இன்னொரு முறை என்னை மேடம்னு சொன்னா, நான் இதே டாக்ஸியில் திரும்பிப் போயிடுவேன்.”
“அச்சச்சோ.. ஸாரி ஸாரி. இனிமே அப்படிச் சொல்ல மாட்டேன்.” அவள் சிரித்தாள். இயல்பாக சிரித்த வசுமதி, கருநீல லாங் டாப்பும் வெள்ளை லெக்கின்ஸும் அணிந்திருந்தாள். உண்மையில் இப்படி ஒரு சந்திப்பை சங்கர் எதிர்பார்கவே இல்லை. அவளுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகும் கீழ்த்தாடை மச்சமும் அவனை ஈர்க்கத் தவறவில்லை. இரண்டு நாட்ளுக்கு முன் பார்த்தபோது அவள் முகத்திலிருந்த சோகம் இப்போது இல்லை. அவளைத் தனக்கு ஏற்கெனவே தெரியும் என்று காட்டிக் கொள்ளாமல் கவனமாக இருந்தான்.
ஹோட்டலில் நுழைந்தார்கள். அவர்களுக்கான டேபிள் அந்த ஹோட்டலின் முதல் தளத்தில் ஒரு மூலையில் இருந்தது. மதனும் சங்கரும் எதிரெதிரே அமர, சங்கருக்கு அருகில் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள் மித்ரா. வசுமதி மதனுக்கு அருகில் அமர்ந்தாள். சங்கர் வசுமதியையே பார்த்துக்கொண்டு இருந்தான். மித்ரா, வசுமதியின் ஆபீஸையும் வேலையையும் பற்றி விசாரித்தாள்.
இருவரும் பரஸ்பரம் போன் நம்பரை பரிமாறிக் கொண்டார்கள்.
“ஆமா.. உங்க வண்டி என்னாச்சு? ஏன் கார்ல வந்தீங்க?”
மதனின் இந்தக் கேள்வி சங்கரையும் யோசிக்க வைத்தது.
“அது.. என்ன பிரச்சினைன்னு தெரியலை. கிளம்பும்போது ஸ்டார்ட் ஆகலை. அதான்.”
அவள் சங்கரைப் பார்த்து பதில் சொல்வது போல இருந்தது.
“பார்த்துக்கலாம் விடுங்க.. நம்ம சங்கர் பெரிய மெக்கானிக், தெரியுமா?”
“அதை அப்புறம் பேசிக்கலாம்.. முதல்ல சாப்பிட ஆர்டர் பண்ணு.” என்றான் சங்கர்.
மெனு கார்டை எடுத்துத் தனக்கான உணவுகளைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தாள் மித்ரா.
வசுமதி தன்னிடம் தரப்பட்ட மெனு கார்டைக் கீழே வைத்துவிட்டாள்.
“எனக்குன்னு ஸ்பெஷலா ஒண்ணும் இல்ல.. நீங்க சாப்பிடறதையே எனக்கும் சொல்லிடுங்க.” என்றாள். தனக்கும் சங்கருக்கும் சொன்னதையே அவளுக்கும் ஆர்டர் செய்தான் மதன்.
“அப்புறம்.. வேலையில சேர்ந்ததுக்கு சந்தோசம் மதன், இன்னும் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள்!” அவன் கையைப் பற்றிக் குலுக்கித் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தாள். மற்றவர்களும் வாழ்த்துகளை சொல்ல, மதன் சந்தோசமாக ஏற்றுக் கொண்டான்.
‘வாழ்த்து சொல்வதில்கூட முந்திக் கொண்டாளே!’ அவளது பண்பும் நிதானமும் சங்கரை வியக்க வைத்தன, வசுமதி அடிக்கடி சங்கரைப் பார்ப்பதையும், சங்கர் வந்ததிலிருந்தே அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதையும் மித்ரா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு, அங்கே தன்னுடைய முக்கியத்துவம் குறைவதுபோல் தெரிந்தது.
“நீ இன்னும் என்னை லவ் பண்றதானே டார்லிங்?” என்று சங்கரின் தோளை இடித்தபடிக் கேட்டாள். அவளை விநோதமாகப் பார்த்தான் சங்கர். அவன் இந்தக் கேள்வியை ரசிக்கவில்லை போலத் தோன்றியது. அவன் முகம் சிறுத்துவிட்டது.
“பக்கத்துல ரெண்டு பேர் இருக்கும்போது லவ்ஸா? அதுக்கு நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா வந்துருக்கணும்.” என்றான் மதன்.
‘கிளுக்’ என்று சிரித்தாள் வசுமதி. “ஏன் நீங்க காதலுக்கு எதிரியா?”
“அப்படியெல்லாம் இல்லைங்க.. உண்மையான காதலை எந்த எதிரியும் ஒண்ணும் செய்ய முடியாது. எனக்கென்னவோ இந்த ரெண்டு மூஞ்சிகளுக்கும் இடையில உண்மையான காதல் மலரும்னு தோணலை.” அவன் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், சங்கரின் அமைதியைக் கண்டு அடக்கிக் கொண்டாள் வசுமதி.
ஆர்டர் செய்த உணவுகளை வெயிட்டர் கொண்டு வந்து அடுக்கவும் சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘நேத்து வரைக்கும் சில்லரைப் பயலாட்டம் பேசிட்டு இருந்தவன், இன்னைக்கு வேலைக்குப் போயி, புது ஃப்ரெண்டு கிடைச்சதும் ரொம்ப ஞானி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டானே!’ மதனின் இந்த மாற்றம் சங்கருக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. அதே நேரம் அவனுக்கு வசுமதியின் மீது காதல் கீதல் வந்துவிடக்கூடாது என்றும் மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
“என்ன மதன்.. லவ்ஸா? புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்க போல?” வசுமதி கைகழுவ எழுந்து போனதும் மதனிடம் கேட்டாள் மித்ரா. அவனுக்கு சுர்ர்ரென்று கோபம் வந்தது.
“நீ என்ன எல்லாரையும் உன்ன மாதிரி நினைச்சியா? ஜாயின்ட் பண்ண பத்தே நாள்ல டீம் வீடரை கரெக்ட் பண்ண மாதிரி!” மித்ராவுக்கு முகம் சிறுத்து விட்டது.
“வசுமதி கைகழுவும்போது அருகே வந்தான் சங்கர். உங்களை உற்சாகமா பார்க்க சந்தோசமா இருக்குங்க. பிரச்சினை எல்லாம் சரியாயிடுச்சா?”
“அதுவா எப்படி சரியாகும்? மெக்கானிக்குதான் சரி பண்ணணும்.” அவனைப் பார்த்து மென்மையா சிரித்தவாறே சொன்னாள் வசுமதி.
ஹோட்டலைவிட்டு வெளியே வந்ததும் மித்ரா கேட்டாள்.
“எதாவது சினிமாவுக்குப் போகலாமா?”
“இல்ல.. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.. நான் வீட்டுக்குப் போகணும்” என்ற வசுமதி, மதனைப் பார்த்தாள். “தேங்க்ஸ் மதன், நான் கிளம்பறேன்.” என்றாள்.
சங்கரைப் பார்த்து “வர்றேங்க.” என்றாள்.
“இருங்க இருங்க.. ஏன் ஓடறீங்க என்று மதன் கேட்க,
“வண்டியைக் கொண்டு வாங்களேன். என்ன பிரச்சினைன்னு பார்க்கலாம்.” என்றான் சங்கர்.
“லூஸு.. அதான் ஸ்டார்ட் ஆகலைன்னு சொன்னாங்கள்ல.. எப்படிக் கொண்டு வருவாங்க?”
“அட்ரஸைக் கேள்டா, ஆளை அனுப்பி எடுத்துக்கலாம்.”
“ஐயோ அதெல்லாம் வேண்டாங்க. பக்கத்துல சரி பண்ணிக்கிறேன். இப்ப கார் புக் பண்றேன்.” என்றாள். இவர்கள் மாற்றி மாற்றித் தாங்குவது மித்ராவுக்கு எரிச்சலாக இருந்தது.
“அட்ரஸ் தர ஏன் தயங்குறாங்க.. வீட்டுக்குப் போயிடுவோம்னு பயமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சங்கர். இதை மதன் எதிர்பார்க்கவில்லை. மித்ராவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஒரு புன்னகையுடன் நிதானமாக சங்கரைப் பார்த்த வசுமதி, மதனிடம் சொன்னாள் “எனக்கென்ன பயம்.. வீடு தெரிஞ்சா, வந்து என்னை பொண்ணு கேக்கப் போறாரா என்ன?” என்றாள்.
அவள் இப்படி வெடுக்கென்று சொன்னதில் மதனுக்கு மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது. பேந்தப் பேந்த விழித்தான். அதற்குள் டாக்ஸி வர, பொதுவாக பை சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் போய்விட்டாள் வசுமதி. மித்ராவும் மதனும் தலையில் இடி விழுந்தாற்போல நிற்க. சங்கருக்கு தர்மசங்கடமாக இருந்தது.
“மேடம் கோவிச்சிக்கிட்டாங்களோ?” என்று கவலையுடன் கேட்ட மதனை ஏளனமாகப் பார்த்த மித்ரா, “ரொம்ப அலைவா போலிருக்கே!” என்றாள்.
அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தான் சங்கர். மித்ராவின் இந்தப் பேச்சு நண்பர்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை.
****
error: Content is protected !!