Skip to content
Post Views: 14,247
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 27
ஆர்த்தியின் அம்மா வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை.
“அப்ப என்ன சொல்ல வாறீங்க. உங்க அக்கா மகளுக்கு கூட ரெண்டாம் கட்டு தான். அதுவும் பத்து வயசு பிள்ளையை வச்சு கிட்டு. அப்ப நீங்க சொன்னது தான் காரணமா… உங்க மகளை கூட படிப்பு முடிஞ்ச உடனே கட்டிக் கொடுத்துட்டிங்களே நாங்க எதுவும் பெருசா விசாரிக்கல” என்று மகேஸ்வரி சொல்லும் போதே,
“அண்ணி என்ன பேசுறீங்க. எம் மகளே குறை சொல்லாதீங்க. அவ பத்திரமா பாத்து தங்கம்”
Advertisement
“அப்ப எம் மகள மட்டும் நீ குறை சொல்லலாமா? ஊர் உலகத்துல எல்லா பெத்தவங்களும் வயசு வரும்போது பிள்ளைகளை கட்டிக் கொடுக்கிறது தான். நீ உன் மகளை என்ன காரணத்துக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாயோ.. அதே காரணம் தான் நான் என் மகளை கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன். சும்மா வாய் இருக்குன்னு எங்க வீட்ல வந்து உட்கார்ந்து என் மகளை பேசக்கூடாது” என்று அதிகாரமாக மகேஷ் சொல்ல,
“மகேஷ் வாய மூடு” என்று அதட்டல் போட்டார் தேவதாஸ்.
சம்பந்தி வந்ததும் ஆர்த்தியின் அம்மா நிற்கவில்லை, கிளம்பிவிட்டார்.
Advertisement
“அந்த பொம்பள என்னென்ன பேசிச்சுன்னு கேட்டீங்க தானே. அவ மாக இந்த வீட்டில் வாழ்கிறான்ற நினைப்பு இல்லாம என்னென்ன பேசிட்டு போகுது” என்று மகேஸ்வரி குதிக்க,
Advertisement
“முதல் தப்பு உன் மேல தான் மகேஷ். ஆரம்பத்தில் இருந்து அந்த அம்மா ஏதாவது சொல்லி நம்ம பிரவீனாவை ஒதுக்கி வைத்துக்கொண்டே தான் இருந்துச்சு. நீ அமைதியாவே போன, பொண்ணு கிடைச்சா போதும்னு, சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுன… கடைசியில நம்ம வீட்ல உட்கார்ந்து நம்ம மகளை குறை சொல்லுது.. ஒருத்தங்க ஒன்னு சொன்னா அதுக்கு எதிர்த்து பேசணும்னு அவசியம் கிடையாது. நமக்கு வீரியம் பெருசு இல்ல. காரியம் தான் பெருசு”என்றவர்,
“இவங்க பேசுறத பாத்த தானே. இவங்க கிட்ட மாப்பிள்ளை குடும்பத்தை விசாரிக்கணும்னு நினைச்ச, பாரு அவங்க குணத்தை… ஊருக்கு நாலு பேர் இப்படி நியாயம் பேசுறேன்னு என்னத்தையாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க. நம்ம தான் கமுக்கமா இருந்து மக கல்யாணத்த முடிக்கணும்” என்று கணவர் சொல்வது நியாயமாக பட, முதலில் மகள் கல்யாணம் முடியட்டும் என்று நினைத்துக் கொண்டார்.
ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால் அவருக்கு பதில் கொடுக்க நாமும் நம்மளுடைய தரத்தை குறைக்க கூடாது. அவர்கள் கண் முன் நல்லபடியாக பிரவீனா கல்யாணத்தை முடிப்பதே பிரதானமாக இருந்தது.
Advertisement
பிரவீனா மீண்டும் தன் கூட்டுக்குள் ஒடுங்கி கொண்டாள். எப்பவும் போல மித்ரன் போன் செய்ய சாதாரணமாக கூட பேச முடியாமல் திணறிப் போனாள் பிரவீனா. அவளிடம் என்னவோ மாறுதல் என்று கண்ட மித்ரன், உடனடியாக தன் மாமனாருக்கு அழைத்து விஷயத்தை வாங்கிக் கொண்டான்.
இனி தாமதிக்கவில்லை மித்ரன்.. உடனடியாக தன் பெற்றோர், பிரவீனா பெற்றோர் என்று பேசி கல்யாணத்தை முடிக்க நாள் குறித்தான். கணவனை இழந்து ஐந்து வயதில் ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியாகவும், குடும்ப அமைப்பிலும், சமுதாய மதிப்பிலும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தன்னந்தனியாக போராடி வாழ்ந்தாள், அவள் தான் உத்தமியா?…
யாருக்கு வேண்டும் உங்கள் நல்லவள் என்ற பட்டம். கணவனை இழந்த பெண் எந்த சுபகாரியத்திலும் முன்னிருக்கக் கூடாது, அழகான உடை அணிய கூடாது, தன்னை அலங்காரம் செய்யக்கூடாது, உறவுகளும் மதிப்பு கொடுக்காது, சுயமாக முடிவெடுத்து சிந்தித்து தனித்து நின்று முன்னேறி… அப்படி எது செய்தாலும் விமர்சனம் செய்ய ஊர் வந்துவிடும். அப்படி சமுதாயத்தின் விமர்சனத்தையும், விதவை என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டு தான் வாழ வேண்டுமா? அப்படி வாழ்ந்தாலும் அவளுக்கு சமூக அந்தஸ்து கிடைக்குமா?…
சரி சுமங்கலிகளே சுபா காரியத்திற்கு உரியவர்கள் என்றால்… கைம்பெண்கள் சுமங்கலிகளாக மாற கூடாதா?.. அந்த வரத்தை மறுத்தது யார்? கடவுளா.. இல்லையே மனிதர்கள் தானே. ஆக, விதவையான ஒரு பெண் சுப காரியங்களுக்கு வரக்கூடாது. சுமங்கலியாகவும் வாழ கூடாது என்றால் மனித மனநிலை அல்லவா வக்கிரமானது.
மனிதன் கொண்டு வந்த சட்ட திட்டங்கள், மனித குலத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது. இப்படியான சில கோட்பாடுகள் தான் இன்றைய நாகரீக இளம் தலமுறையினருக்கு தன்னுடைய கலாச்சாரமும், ஒழுக்க நெறிமுறைகளும்… கட்டுப்பெட்டி தனமாகவும், மூடநம்பிக்கையாகவும் இருக்கிறது.
உண்மையில் முன்னேறி வரும் நாகரீக சமூகம் என்பது நம்முடைய கலாச்சாரத்தை ஒழிப்பது அல்ல… கலாச்சாரத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதுவே ஆகும்.
மித்ரன் தெளிவாக சிந்தித்து பிரவீனாவுக்கு புரிய வைத்தான். என்னுடைய கலாச்சாரமே, எனக்கு மேல் என்று நின்ற பிரவீனாவுக்கு அதில் இருக்கும் மூடநம்பிக்கைகளை விளக்கி தெளிவடைய செய்தவன். தன்னுடைய கலாச்சாரத்தில் இருக்கும் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடிக்க முன்வந்தான். கணவன் மனைவியாக வாழ்வதே முறையான வாழ்க்கை என்றும்… அதில் ஒரு பகுதி தான் காமத்தை சேரும். கணவன் மனைவி உறவு என்றாலே காமம் என்றல்ல என்பதை புரிந்து கொண்டான் மித்ரன். ஒருவனுக்கு ஒருத்தி என்பதன் கலாச்சாரத்தை உறுதியாக பற்றி கொண்டு தனக்கு அந்த ஒருத்தியாக பிரவீனாவை கைப்பிடித்தான்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு கூட்டம் எல்லோராலும் திருக்கல்யாணத்தை காண முடியாது… இருப்பினும் கோயில் சுற்றுவட்டாரத்தில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். கோவில் உள்ள திருக்கல்யாணம் நடக்கும் பொழுது வெளியில் பல பெண்கள் தனது மஞ்சள் கயிற்றை தாலி பிரித்து மாற்றிக் கொள்வார்கள்.
பிரவீனா படபடப்பிலும் பயத்திலும் நின்று இருந்தாள். ஆதிரனை தூக்கி வந்து மித்ரன், பிரவீனா அருகே வந்து நின்றான். மகனை கையில் வாங்கிய பிரவீனாவுக்கு லேசாக கண் கலங்கியது. அவளை கண்களால் திடப்படுத்தியவன் தன் உடன் பிறந்தவளை பார்க்க, மீனாட்சி சுந்தரேஸ்வரர் குடியிருக்கும் பொன் தாலியை மிக பயபக்தியோடு தமையன் கையில் கொடுத்தாள் சுமித்ரா.
அவர்களுக்கு அருகில் தான் சத்தியமூர்த்தி தம்பதிகள், தேவதாஸ் தம்பதிகள், புவநேந்திரன் குடும்பம், திருக்குமரன் குடும்பம், சாய் ஶ்ரீ, ரஞ்சன் என்று அவர்கள் நலம் விரும்பும் நல்ல உள்ளங்கள் நின்றிருந்தார்கள். கோவில் உள்ளே கெட்டி மேளம் ஒழிக்க, சத்தம் காதை கிழித்தது. பெண்கள் பலர் தங்கள் கழுத்தில் இருக்கும் பழைய மஞ்சள் கயிறு மாற்றி புது மஞ்சள் தாலி அணிவிக்க, மித்ரனும் பிரவீனா வாழ்க்கையில் இருந்த கசப்பான பழைய விஷயங்களை மாற்றி புதுமஞ்சள் தாலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.
பிரவீனா கண்களில் நீர் வழிந்தது. மித்ரன் தமைக்கைகள் உடன் நின்று அவளை திட படுத்தினார்கள். ஆதிரன், கை தட்டி கொண்டாட… மாங்கல்யம் அணிவித்ததும், பிள்ளையை வாங்கி கொண்டான் மித்ரன்.
மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் சாமியை காண அவர்களுக்கு இடம் கிடைத்தது. அப்போது தான் இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள். பிரவீனா முழு அமைதியில் நின்று இருந்தாள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் எல்லாவற்றையும் மெதுவாக உள்வாங்கினாள். புரிந்தது மித்ரன் தன் கணவன் என்று… என்ன ஒன்று எல்லாவற்றையும் அடிதடியாக நடத்திக் கொண்டான். பிரவீனா மருகி மருகி நிற்பாளே தவிர, அவள் மனமே விரும்பினாலும் மித்ரனிடம் காதல் சொல்ல மாட்டாள்.
பெரியவர்கள் மனதில் பல பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், தம்பதிகளாக நிற்கும் பிள்ளைகளை பார்க்கும் பொழுது மனம் நிறைந்தது. மித்ரனின் தமக்கைகள் தான் கோவில் வாசலில் இருக்கும் தாழம்பூ குங்குமத்தையும், மல்லிகை பூவையும் பிரவீனாவுக்கு சூடிவிட்டார்கள்.
கழுத்தில் தாலி ஏறாமல் தலையில் பூ வைக்க என்னவோ பிரவீனாவுக்கு மனதில்லை. யார் வற்புறுத்தியும் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது மித்ரனின் மனைவி அல்லவா!… பிரவீனாவின் மனநடுக்கம் புரிந்து, அவர்களே வைத்து அழகு பார்த்தார்கள். அங்கு இருக்கும் ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு, எல்லோரும் சென்னையை நோக்கி பயணித்தார்கள்.
பிரவீனா அமைதியாக வர, மித்ரன் எந்த வகையிலும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவளை, அவளின் இயல்புக்கே விடுவது தான் நல்லது என்று முடிவு செய்தான்.
மகேஸ்வரி தான் “என்ன இருந்தாலும் சித்திரையில கல்யாணம் வைக்கிறது?” என்றதும்,
“மீனாட்சி அம்மனுக்கே சித்திரமாசம் தான் கல்யாணம் நடக்குது… காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் மாசம், தேதி எல்லாம் பாக்குறாங்களா என்ன? விடு மகேஸ்வரி, மனசுல நல்லது நினைச்சு செஞ்சா, எல்லாம் நல்ல காரியம் தான்” என்றார் தேவதாஸ்.
மாலை ஆறு மணிக்கு சென்னை வந்தடைந்து விட்டார்கள். முதலில் பிரவீனா வீட்டுக்கு தான் சென்றது. தன் வீட்டு வாசலில் நாலு ஐந்து கார் நிற்கவும் என்னவோ என்று வெளியே வந்து பார்த்த ஆர்த்தி… திருமண கோலத்தில் பிரவீனா, மித்ரன் தம்பதிகள் மகனோடு நிற்க..
தன் வாழ்க்கையில் இதுவரை அடையாத உச்சபட்ச அதிர்ச்சியில் பார்த்திருந்தாள் ஆர்த்தி. அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஏதோ தன் மாமனார் மகளுக்கு கல்யாணம் முடிப்பே அப்படி இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் வெறும் வாய்ச்சவடால்தான் என்று நினைத்திருந்தாள் ஆர்த்தி.
ஆனால், அது அப்படி அல்லாமல் சொன்னது போலவே மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டாரே… அதுவும் பிரவீனாவின் கணவன் தான் ஆர்த்தியின் அதிகபட்ச அதிர்ச்சிக்கு காரணம். சொந்தப் பெரியப்பா பையன்… ஒரு வார்த்தை கூட இவளுக்கு சொல்லவில்லை. எவ்வளவு தந்திரம், என்ன நேர்த்தியான திட்டமிடல் யாருக்கும் சந்தேகம் வராதவாறு காதும் காதும் வைத்தது போல கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாங்களே!… ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஆர்த்தியால்…
“என்னடி, வாய் பார்த்துட்டு நிக்கிற.. புதுசா கல்யாணம் ஆனவங்க எவ்வளவு நேரம் வெளிய நிப்பாங்க, போய் ஆளாத்தி கரைச்சு எடுத்துட்டு வா” என்று மகேஸ்வரி சத்தமிட அதற்கப்புறம் தான் சுயநினைவு வந்தவள் போல வேகமாக உள்ளே ஓடினாள் ஆர்த்தி. ஆளாத்தி கரைக்க அல்ல, விஷயத்தை அவள் கணவன் காதில் போட…
பிரேமாலும் கேட்ட விஷயத்தை நம்பவே முடியவில்லை. அவனும் வேகமாக வெளியே வர, மகேஷ்வரியே சென்று ஆளாத்தி கரைத்து வந்து மணமக்களுக்கு சுற்றினார். மித்ரன் மகனை கையில் வைத்து மனைவியோடு ஜோடி சேர்ந்து நின்றிருந்தான்.
தன் தந்தை இப்படி ஒரு காரியத்தை செய்வார் என்று பிரேம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அக்காவுக்கு கல்யாணம் என்றால் நிச்சயம் தன்னை கலக்காமல் செய்ய மாட்டார். அவராக வந்து பேசட்டும் என்று அமைதி காத்தான் பிரேம். இரு பெண் பிள்ளைகளுக்கு ஒற்றை தாய் மாமன் தான் என்று…
ஆனால், தேவதாஸ் என்று பிரவீனாவுக்கு எதிராக உடன்பிறப்புகளே நின்றார்களோ!… தன் கூட பிறந்தவள் தானே என்ற நினைப்பு இல்லாமல் வெறும் பத்து பவுனுக்கு முட்டி கொண்டார்களோ!… அதையும் விட உடன் பிறந்தவளுக்கு பேசும் ஒரு நல்ல காரியத்தையும் காதில் கேட்டும் கண்டு கொள்ளாமல் தள்ளி நின்றார்களோ!… அப்போதே முடிவு செய்துவிட்டார் இவர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று…
தேவதாஸ் மகனை பார்த்த பார்வையில் வெற்றி நிமிர்வு இருந்தது. பிரேம் எதுவும் பேச முடியாமல் மௌனமாகி போனான். மகேஸ்வரி மகனையோ, மருமகளையோ கண்டு கொள்ளாமல் வந்திருந்தவர்களை உபசரிப்பது, அவர்களுக்கு குடிக்க கொடுப்பது என்று பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார். பொதுவான பேச்சுக்கள் முடிந்து சத்தியமூர்த்தி,
“மறு வீடு மாதிரி பொண்ணு மாப்பிள்ளையும் இன்னைக்கு ராத்திரி இங்கே இருக்கட்டும் சம்மந்தி. நாளைக்கு காலைல நாங்க வந்து முறையா கூட்டிட்டு போறோம்” என்று சொல்ல எல்லோருக்கும் சம்மதம்.
ஒருவாறு இரவு நெருங்கும் நேரத்தில் தான் வீட்டுக்கு வந்ததால், உணவு கொடுத்து மணமக்களை உறங்க சொல்லி அனுப்பிவிட்டார் மகேஸ்வரி. எந்த சடங்கும் வேண்டாம் என்று விட்டான் மித்ரன். அவனை பொறுத்தவரை பிரவீனாவின் மனதை காயப்படுத்தும் வகையில் எதுவும் நடக்கக்கூடாது. தாம்பத்திய வாழ்க்கை என்பது கணவன், மனைவிக்கு உரியது. அதை அவர்கள் விருப்பம் போல வாழ்வை தொடங்கட்டும் என்று பெரியவர்களும் விட்டுவிட்டார்கள்.
முதலில் ஆதிரன் உறங்கி விட்டான். அவனை நன்றாக படுக்க வைத்தவன்,
“பிரவீ, நான் குளிக்கணும்” என்றான். பிரவீனா பாத்ரூமயை கொஞ்சம் சரி செய்து கொடுக்க, குளித்து வந்தவன் மகன் அருகில் படுத்து விட்டான்.
“இன்னைக்கு ரொம்ப அலைச்சல்.. எனக்கு தூக்கம் வருது பிரவீ. நீயும் சீக்கிரம் தூங்கு, காலைல நம்ம வீட்டுக்கு கிளம்பனும்” என்னவோ நீண்ட நாள் வாழ்ந்த தம்பதிகள் போல, ஒரு குழந்தைக்கு அப்பாவாகவே நடந்து கொண்டான் மித்ரன்.
ஆசையாக காதலித்து புதிதாக திருமணமானவன், ஒரு பார்வையில் கூட அவளுக்கு எதையும் உணர்த்தவில்லை. மிக மிக எதார்த்தமாக இருந்தான். படுத்ததும் மித்ரன் உறங்கிவிட, பிரவீனாவுக்கு தான் உறக்கமே இல்லை.
என்னதான் அவளை சங்கட படுத்த கூடாது என்று மற்றவர்கள் பார்த்து நடந்து கொண்டாலும், அவள் மனதிற்கு தெரியுமே… இந்த மாதிரி புது மஞ்சள் தாலியும், தலை நிறைய மல்லிகை பூவும் முன் ஒரு காலத்தில் வைத்து நின்றவள் தானே… ஏதேதோ என்ன அலைகள் மனதில் முட்டி மோதி தொண்டை அடைக்க செய்ய, வேண்டாம், எதுவும் வேண்டாம். இந்த வழி வேண்டாம். எல்லாவற்றையும் வெறும் நினைவாகவே மாற்றி கடந்த காலத்தைக் கடந்து நிகழ்காலத்தை நல் முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள் பிரவீனா.
தனக்காக இல்லாவிடினும், தன்னை நம்பி இந்த வாழ்க்கையில் நுழைந்த மித்ரனுக்காக, குடும்ப அமைப்பில் சந்தோஷமாக வாழும் தன் மகனுக்காக.. என் கடந்த காலத்தை கடந்து வந்தே ஆக வேண்டும். இதுதான் என் குடும்பம், மித்ரன் தான் என் கணவன், இவர்கள்தான் என் வாழ்க்கை, எனக்கான எதிர்காலம். மனதில் பதிய வைக்க முயற்சித்தாள் பிரவீனா.
காலம் எவ்வளவு பெரிய காயத்தையும் ஆற்றி, தன் ஆயுளை கடக்க கூட்டிச் சென்று விடும். இளங்கோ இறந்தபோது, இனி என் வாழ்க்கை என்ன என்று பெரிய கேள்விக்குறியோடு தான் நின்றிருந்தாள் பிரவீனா. முழு இருட்டான வாழ்க்கையில் மகனை கைபிடித்து அடுத்த வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து நடக்கவில்லையா?… மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேற ஒருவனை ஏற்கவே முடியாது தன்னால் என்று உறுதியாக நம்பியவள். இன்று மித்ரன் கையால் தாலி வாங்கவில்லையா!…
உற்றாரும் உறவுகளும் சுற்றி நிற்க தன் கழுத்தில் இருந்த மாங்கல்யமும், நெத்தியிலிருந்த குங்குமம், தலையில் இருந்த பூவும் அழிக்கப்பட்டது. அன்று அவள் துடித்த துடிப்பு, மனம் அடைந்த வேதனை, இதயத்தில் கத்தியை வைத்து சொருகியது போல ஒரு வலி… வார்த்தையில் சொல்லவே முடியாது.
இன்று எல்லாம் அவள் கையில்… தனக்கென்று ஒரு குடும்பம், தன்னை தாங்கும் கணவன். நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எதிர்காலம், அதையெல்லாம் விட.. நீ தனி அல்ல, உனக்கான உறவு இருக்கு என்று சொல்லும் கணவன். இந்த வாழ்க்கை மிக கனமானது தனியாக நிற்கும் பொழுது, அதைப் பங்கிட வேண்டும் தன் வாழ்க்கைத் துணையோடு…
இதுவரை இல்லாத ஒரு ஆறுதல் மனதில் கிடைக்க, மகனுக்கு அந்தப்புரம் வந்து படுத்துக்கொண்டாள் பிரவீனா.
மணமக்கள் தங்கள் அறைக்கு செல்லும் வரை அமைதியாக காத்திருந்த பிரேம். அவர்கள் சென்றதும்,
“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல ப்பா” என்றான்.
“வேற என்ன எதிர்பார்த்த பிரேம். உங்க அக்காவுக்கு கல்யாணம் செய்யப் போறோம். தம்பியா ஏதாவது பண உதவி செய், மாப்பிள்ளை பார், கல்யாண வேலை செய் என்றெல்லாம் சொல்லுவேன் நினைச்சையா பிரேம்”
“கல்யாணம் நடக்கு போகுதுன்னாவது என்கிட்ட சொல்லி இருக்கணும் தானே”
“சொல்லி இருப்பேன், ஓரளவுக்காவது நல்ல தம்பியா நடந்து இருந்தா… பண பிரச்சினை எல்லா குடும்பத்திலும் இருக்கிறது தான். ஆனாலும் நீ ஒரு வார்த்தை கூட அக்காவுக்கு மாப்பிள்ளை பாக்கறீங்களா என்று கேட்கவே இல்லையே.. அதை கண்டுக்கவே இல்லை. நேத்து பிறந்து இன்னைக்கு வளர்ந்து நிக்கிற நீ… பெரிய மனுஷன் மாதிரி நிமிர்ந்து நிப்ப, நான் உன்கிட்ட வந்து என் மகளுக்கு கல்யாணம் ஆகணும்… நீ தான் எல்லாம் பாக்கணும்னு சொல்லுவேன் நெனச்சியா? என் மக நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை வந்துச்சு. கடவுள் துணை இருக்க, நல்லபடியா அமைத்துக் கொடுத்தோம்”
“அதையாவது சொல்லிட்டு செய்யணும் தானே மாமா. என்னை கூட விடுங்க நான் அடுத்த வீட்டு பொண்ணு.. இவர் உங்க பையன் தானே. இவர்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம திருட்டுத்தனமா எதுக்கு செய்யணும்” என்று ஆர்த்தி கொதிப்போடு கேட்க.
என்னது திருட்டுத்தனமா? பேச்ச பார்… என் மக என்ன கூட்டிட்டா ஓடிப் போனா, திருட்டுத்தனம்னு சொல்லுற… நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? நீ இல்லாம கல்யாணம் பண்ணா அது திருட்டுத்தனமா? பொண்ண பெத்தவங்க நாங்க இருந்தோம். பையன பெத்தவங்க இருந்தாங்க, பையன் கூட பிறந்தவங்க இருந்தாங்க, நாலு பெரியவங்க இருந்தாங்க… நல்லபடியா கல்யாணம் முடிச்சோம். வேற யார் வேணும். உங்களை கூப்பிட எங்களுக்கு மனசு வரல. உங்களை தள்ளி வைத்து கல்யாணம் பண்ணனோம். திருட்டுத்தனமா பண்ணலை” காட்டமாக சொன்னார் மகேஸ்வரி.
காலையில் ஒன்பது மணிக்கு நல்ல நேரம் இருக்க, கிளம்ப சொல்லி அவசரப்படுத்தினார் மகேஸ்வரி. பிரவீனா இளமஞ்சளில் மின்னும் கல் வைத்த சேலையும் வைலட் கலரில் ஒர்க் வைத்த பிளவுஸ்சும் அணிந்து இருந்தாள். இது ஆதிரன் பிறந்ததற்கு அம்மா வீட்டில் எடுத்துக் கொடுத்த சேலை. அப்போதிருந்த சூழ்நிலை கட்ட முடியாமல் போனது, அதற்குப்பின் கட்டவே இல்லை. பிரவீனாவுக்கு பார்டரில் மட்டும் கல் வைத்து ஒர்க் வைத்த சேலை மிகப் பிடிக்கும். மித்திரனின் பார்வை பிரவீனாவை வட்டமிட்டது. அவள் அறியாமல் அவளை ரசித்துக்கொண்டான்.
தலை ஈரமா இருக்க அப்படியே விட்டவள். மித்ரன் எழுந்ததை பார்த்ததும்,
“காபி கொண்டு வரவா?”
“ம்ம்… வேணும் பிரவீ. எனக்கு டீ, காபி இல்லாம வேலையே ஓடாது” என்றதும் வெளியே வந்தாள் பிரவீனா.
நேற்று தான் அவள் நாத்தனார் கை நிறைய கண்ணாடி வளையல்களை அவளுக்கு அடுக்கி விட்டு இருந்தனர். குறைந்தது பத்து நாளைக்காவது கழட்ட வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள்.
குலுங்கும் வளையல் சத்தம் கேட்டு, நம் வீட்டில் யார் இவ்வளவு வளையல் போடுவது என்று திரும்பிப் பார்த்தாள் ஆர்த்தி. அந்த நேரம் அவளுக்கு பிரவீனா மனதில் வரவில்லை.
“இது யாரு பிரவீனா வா” திகைத்துப் போனாள். பெண்களுக்கே உரிய கல்யாண கலை அவள் முகத்திலும் வந்திருந்தது.
பிரவீனா அவசரமாக காபி போட, “அங்க டீ வச்சிருக்கேன் பிரவீ, சூடு பண்ணுக்கோ”
“காலையில அப்பாவுக்கு போட்ட டீ ம்மா… இப்போ டேஸ்ட் மாறி போயிருக்கும். அவருக்கு பிரெஷா காபி போட்டா தான் பிடிக்கும்” சாதாரணமாகத்தான் சொன்னாள்.
“அடேயப்பா பெரிய புருஷன் வச்சவ” நக்கலாக வெளியில் சொல்லத்தான் தோன்றியது ஆர்த்திக்கு… மாமியாரை பார்த்து தான் வாயை மூடி கொண்டாள்.
மித்ரனுக்கு காபியை கொடுத்தவள், சிதறி கிடக்கும் பொருள்களை ஒதுங்க வைக்க ஆரம்பித்தாள். சுமித்ரா இவளுக்கும் தனியாக போன் செய்திருந்தாள் ஒன்பது மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று… அந்த பரபரப்பு பிரவீனாக்கு…
இங்கும், அங்கும் நடப்பதும், பொருள்களை எடுப்பதும், துணிகளை அடுக்கி வைப்பதும் என்று ஓடிக் கொண்டிருந்தாள் பிரவீனா. மகேஸ்வரி பூ கொண்டு வந்து கொடுக்க, தலையில் வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் கணவன் வீட்டுக்கு…
குத்தல பேச்சுகளோ, அதிசய பார்வையோ எதுவும் இல்லாததால் இயல்பாகவே கிளம்பினாள் பிரவீனா.
“எப்ப கல்யாணம் பண்ணி வப்பாங்கன்னு இருந்திருப்பாளோ? சேலை அப்படி, பூ இப்படி… இந்த வீட்டில் நீ இருந்த இருப்பு எனக்கு தெரியாத” மிதப்பாக நினைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
ஒரே ஒரு நல்ல விஷயம் முன்மாதிரி அவளால் வாய் விட்டு வெளியே சொல்ல முடியவில்லை. முன்காரணம் மகேஸ்வரி என்றால் முக்கிய காரணம் மித்ரன்… அவன் அவள் கணவன். முன்பாவது சண்டை போட்டாலும், சத்தம் போட்டாலும் ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும். அதுவும் அனுசரித்து…
அப்படி எல்லாம் ரோஷப்பட்டு வெளியேற பிரவீனாவுக்கு இடம் கிடையாது. முடிந்த அளவு ஆர்த்தி வழிக்கே வராமல் ஒதுங்கி போவாள். அவ்வளவு ஏன் ஆதிரனை கூட ஆர்த்தி தான் கட்டுப்படுத்துவாள். இன்று அப்படி அல்ல. அவளுக்கு என்று குடும்பம் இருக்கு, கணவன் இருக்கான். தாங்கி நிற்கும் மாமனார் மாமியார் இருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் எல்லாம் இவளுக்கு சொந்தம். இவர்கள் பக்கம் மித்ரன் வீட்டுக்கு பெரிய மதிப்பு, மரியாதை இருக்கு…
அதுதான் ஆர்த்திக்கு அதிர்ச்சியே… சத்தியமூர்த்தி குடும்பம் மிகப்பெரிய பணக்கார வர்க்கம். பிரவீனாவும், மித்ரனும் ஒரே இடத்தில் தான் வேலை பார்க்கிறார்கள் என்றாலும் சந்தேகம் வராததற்கு காரணம் சாரதா தான். ஒரு குழந்தையோடு இருக்கும் விதவைப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிப்பார்களா என்று நினைத்தாள்.
ஆனால், எல்லாம் தலைகீழானது மித்ரன் என்ற ஒருவனால்… இன்று பிரவீனா மித்ரன் மனைவி என்பதை காட்டிலும் சத்தியமூர்த்தி மருமகள். அது பேசும். பலரிடம் மரியாதையாக தள்ளி நிற்க வைக்கும்.
மித்ரன் ரெடியாகி, ஆதிரனையும் தயார் செய்து வெளியே வர, பிரவீனா இருவருக்கும் உணவெடுத்து வைத்தாள். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. சாதாரண கணவன் மனைவியாகவே நடந்து கொண்டார்கள்.
மித்ரன் வீட்டு ஆட்கள் வந்து விட்டார்கள். நேரம் குறைவாக இருப்பதால் கிளம்ப தயாராக இருந்தார்கள் மித்ரன் தம்பதிகள். மகளை பூ பொட்டோடு புருஷன் அருகில் நிற்க வைத்துப் பார்த்ததும் கண் கலங்கியது மகேஸ்வரிக்கு…
“நம்ம பிரவீ எவ்வளவு அழகு இல்லைங்க” என்று கணவனிடம் கேட்க.
“பிரவீனா எப்பவும் அழகுதான்” என்றார் கணவர். மகேஸ்வரி கூட கண்கலங்க பிரவீனா அழுக வில்லை. உண்மையில் அவளுக்கு அழுகவும் வரவில்லை.
“ஆமா புதுசா கல்யாணம் பண்ணி கொடுக்குறாங்க அழுகுறதுக்கு” முனங்கினால் ஆர்த்தி. அவளுக்கு எல்லாம் என்னவோ எரிச்சலாக இருந்தது.
“இரண்டாம் கல்யாணம் தானே எதற்கு இவ்வளவு பில்டப். காணாததை கண்டது போல மருமகனை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்”
“அத்தை ப்ரீத்தி வந்துட்டு இருக்காளாம்?” என்றாள் ஆர்த்தி.
“அவ வாரதுக்கு நாம என்ன பண்ண முடியும். நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை அனுப்பி வைக்கணும். நீ வீட்ட பாத்துக்க” வெறும் பேச்சுக்காக கூட ஆர்த்தியை அழைக்கவில்லை.
நல்ல முறையில் பிரவீனா தன் கணவனோடு புது இல்லம் வந்து சேர்ந்தாள்.
error: Content is protected !!