Skip to content
Post Views: 7,415
அதிகாலை ஐந்து மணி.
போனில் செட் செய்து இருந்த அலாரத்தை நிறுத்தி விட்டு, போனில் இருந்த அவள் அப்பா போட்டோவைப் பார்த்து
“குட் மார்னிங் அப்பா” என்று சொன்னவள், எதிரில் இருந்த முருகன் படத்தையும் பார்த்து விட்டு, “அப்பா முருகா! இன்றைய பொழுது நல்லபடியாக செல்ல வேண்டும்!” மனதுள் ஒருமுறை வேண்டிக் கொண்டாள் மானசா!
கூடவே “அவளின் அவனுக்காகவும்” வேண்டிக் கொண்டாள்!
Advertisement
அந்த “அவன்” எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். நிம்மதியா சந்தோசமாக இருக்கணும் என்று!
தன் மேல் கால் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிதன்யாவின் கால்களை மெதுவாக எடுத்து விட்டுவிட்டு எழுந்தாள்.
குழந்தை சிணுங்க, “ரித்துமா நான் தாண்டா செல்லம்..” என்று சொல்லி மெல்ல தட்டிக் கொடுத்து, ஒரு தலையணையை அவளுக்கு அருகில் பாதுகாப்பாக வைத்து விட்டு வெளியே வந்தாள்.
Advertisement
பாத்ரூமில் விளக்கெரிந்து கொண்டு இருந்தது.
Advertisement
அம்மா எழுந்தாச்சு போல என்று நினைத்துக் கொண்டு, வாசலில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்து வைத்தாள்.
இன்று என்ன சமைப்பது என்று பிரிட்ஜை திறந்து காய்கறிகள் இருப்பைப் பார்த்தவள், பாத்ரூமிலிருந்து வெளியே வந்து விட்ட அவள் அம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.
“இன்னைக்கு என்னம்மா சமைக்கப் போறே?”
Advertisement
“இன்னிக்கு செவ்வாய்க்கிழமை, அதனால கண்டிப்பா சாம்பார் தான் வைக்கணும்.”
“சாம்பாரா, அப்ப ரித்துவுக்கு கொஞ்சம் பருப்பு தனியா எடுத்து வச்சுடும்மா, அவ பப்பு மம்மு சாப்பிடுவா” என்று சொல்லிவிட்டு, பாத்ரூமில் நுழைந்து கொண்டாள் மானசா.
“ம்ம். எழுந்துட்டேன்ப்பா.. நீங்க எப்ப வருவீங்க?
இந்த அம்மாச்சி என்னை வெளியே கூட்டிட்டு போக மாட்டேங்கிறாங்க.
சின்சான் பாக்க விட மாட்டேங்குறாங்க.” என்று போனில் தன் மழலைக் குரலில் பேசியபடியே வெளியே வந்தாள் மூன்று வயது ரித்து.
“ஆமா, காலங்கார்த்தால, உன் அப்பன்கிட்ட போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சிட்டியா? உன்னை யாரு இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க சொன்னா? போய் படுத்து தூங்கு, போ” சத்யபாமா அவளை அதட்டினார்.
“நீ போய் தூங்கு.. போ..” என்று அவருக்கு அழகு காட்டியவள்,
“அப்பா.. பாருங்கப்பா, இந்த அம்மாச்சிய.. காலையிலேயே திட்ட ஆரம்பிச்சிட்டாங்க” என்று சிணுங்கியபடி புகார் அளித்தாள்
மறுமுனையில் இருந்த அவள் அப்பா மனீஷ், “டேய் விடுடா.. நம்ம அம்மாச்சி தானே, நீ மானும்மா கிட்ட சொல்லு.. அவ பார்த்துப்பா.
இப்ப டாடி அவசரமா கிளம்பிட்டு இருக்கேன், ஈவனிங் நீ ஸ்கூல் விட்டு வந்தவுடன் கால் பண்றேன்.
இப்ப போய் சமத்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு. அப்புறம் மானும்மா வந்து ஸ்கூல்க்கு கிளப்பி விடுவா!”
“இன்னிக்கு ஸ்கூல் இல்ல.. ஸ்கூல் நாளைக்கு தான்.. ம்ம்..” என்று சொல்லி தொடர்ந்து கொஞ்சம் நேரம் பேசிய பின் போனை வைத்தவள்,
பாத்ரூம் வாசலில் நின்று “மானும்மா..” என்று கூப்பிட,
“அவ வருவா நீ போய் தூங்கு..” என்று அவளை தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் விட்டார் சத்யபாமா.
அதற்குள் மானசா வெளியே வந்து விட,
“என்ன பாட்டிக்கும் பேத்திக்கும் காலையிலேயே முட்டிக்கிச்சா?
நீ ஏம்மா.. அவ சின்ன குழந்தை, அவ கிட்ட போய் மல்லுக்கு நிக்கிற?” என்றிட,
“போடி..நீ எப்பவும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ..” என்று சத்யபாமாவும் சிணுங்கினார்!
சத்யபாமா, மானுவின் அம்மா தான்!
ஆனால் அந்த கிருஷ்ணனின் சத்யபாமா மாதிரி அவர் கணவருக்கு சாரதியாக துணை நின்றவர் இல்லை!
சத்யபாமா, சத்தியத்தில் அவர் ஒரு பாவம் பாமா! அவரே ஒரு குழந்தை மாதிரி தான்!
பிறந்ததில் இருந்தே அப்படி தான்!
“லோ ஐக்யு” என்பார்கள் சிலர்! மந்த புத்தி என்பார்கள் சிலர்!
மூளை வளர்ச்சி குறைவு என்பார்கள் சிலர்!
ஏன் அரைப் பைத்தியம் என்றே சொல்லுவாள் அவளின் அத்தை அமிர்தா!
ஆனால் மானுவின் அப்பா மணி சந்திரனுக்கும், தாய் மாமா சிவச்சந்திரனுக்கும், வளர்ந்த பிறகு மானுவிற்கும் கூட அவர் ஒரு குழந்தை மாதிரி தான்!
அப்படி தான் அவர்கள் அவரை நடத்தினார்கள்!
அப்பா உயிருடன் இருந்த வரை ஒரு பிரச்சினையும் இல்லை!
அவர் இறந்த பின் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பாமாவையும் வயது பெண் மானுவையும் தனியே விட மனமில்லாது தங்களுடனேயே அழைத்துப் போனார் அவளின் மாமா சிவா.
மணியும் சிவாவும் நெருங்கிய தோழர்கள்!
சந்திரன் & சந்திரன் என்று ஒரு ட்ராவல்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார்கள்!
அம்மா லட்சுமி அம்மாள், தங்கை சத்யபாமாவோடு இருந்த சிவாவின் வீட்டுக்கு நண்பன் என்கிற முறையில் வருவார் மணி.
சிவாவை ஒரு தலையாய் காதலித்துக் கொண்டிருந்தாள் அமிர்தா!
தங்கையை காரணம் காட்டி, அவளுக்கு ஒரு நல்லது நடக்காமல், தான் கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர் மறுத்து விட, மணியிடம் தான் போய் அழுதாள் அமிர்தா!
“நான் கட்டிக்கிறேன்டா பாமாவ.
நீ அந்த பொண்ணுக்கு ஓகே சொல்லு.. அப்படி அழறா அவ!
உன் மேல அவ்வளவு லவ்! நீ பாமாவைக் காட்டி அவளை ஏற்க மறுக்காதே!” என்று சிவாவுடனான அமிர்தா கல்யாணத்தை நடத்தி வைத்தே மணி தான்!
ஆனால் அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் அவரை அந்த ட்ராவல்ஸ் பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலக வைத்தாள் அமிர்தா, அவள் தாயின் உபதேசத்தில்!
ஆனால், அதன் பின் பாமாவைக் கட்டிய யோகமோ என்னமோ அவருக்கு அரசு பஸ் ஓட்டுநர் வேலையே கிடைத்து விட்டது!
அவர் தன் மாமியார் லட்சுமி அம்மாவையும் தன்னுடனே அழைத்து வந்து விட்டார்!
மானு பத்தாம் வகுப்பு லீவில் இருந்த போது லட்சுமி இறந்து விட்டார்.
அதுவரை அவர்கள் கூடவே இருந்து மானுவை வளர்த்தது அவர் தான்!
அதன் பின் மணி, ஒரு நாள் பணியில் இருக்கும் போதே, பஸ் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே, ஹார்ட் அட்டாக் வந்து விட, அத்தனை பயணிகளையும் பாதுகாப்பாக, அத்தனை வலியிலும் ஒரமாக பஸ்சை நிறுத்தி விட்டே அவர் உயிர் பிரிந்திருந்தது!
அது அப்போதையை ந்யூஸ் பேப்பரில் கூட வந்தது!
அப்படி அவர் இறந்திருந்த சூழ்நிலையில், ஆதரவு இல்லாமல் நிற்கும் தங்கையையும் அவளின் சின்னப் பெண்ணையும் எப்படி தனியே விடுவது என்று தான் சிவா அவர்களை தன்னுடன் அழைத்து வந்ததே!
ஆனால், “கூடவே கூடாது , இப்படி ஒரு பயித்தியத்தையும், வயசு பொண்ணையும் நம்மோட வச்சுக்க முடியவே முடியாது” என்று
“தையா தக்கா” என்று குதித்துக் கொண்டிருந்த அத்தை அமிர்தாவை அடக்கினார் அவளின் அம்மா இந்திரா!
இந்திரா என்பதற்கு பதில் மந்தரை என்றே பெயர் வைத்திருக்கலாம்!
அத்தையோடே இலவச இணைப்பாய் வந்து விட்டார் அவர்!
கூடவே அவரின் வெட்டி ஆபிசர் மகன் வெங்கியும்!
பெண்ணைக் கட்டிக் கொடுத்த இடத்தில் வந்து சட்டமாய் உட்கார்ந்து ஓஸியில் சாப்பிட்டு உடம்பு வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்!
“நீ ஏன் அம்மு, அவங்களை விருந்தாளியா நினைக்கிற?
இப்படி நினைச்சுப் பாரு, அந்த பாமா லூஸா இருந்தாலும் சமையல் சூப்பரா செய்வா, என்ன.. கூட இருந்து கொஞ்சம் சொல்லணும்!
அப்புறம் அந்த குட்டி.. அவளை யாரு காலேஜ் அனுப்ப போறா?
எங்கியாச்சும் கடையில பில் போடுற வேலைக்கோ, ஆசுபத்திரியில டோக்கன் கொடுக்கிற வேலைக்கோ அனுப்பி வச்சுடு!
அவ காசுல அவங்களுக்கு வேண்டியத வாங்கிக்கட்டும்! நீ எதுவும் பேசாத இப்ப.” என்றார் மகளிடம்.
“யம்மா நீ என்னம்மா புரியாம பேசுற! அந்த மானு என்ன இப்படியே இருந்துடுவாளா?
நாளைக்கு கல்யாணம் காட்சின்னு எல்லா பொறுப்பும் நம்ம தலையில இல்ல விழும்!”
“யாருடி இவ. அத எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.
அப்படியே அந்த பேச்சு வந்தாலும், இதோ நம்ம வெங்கியோட பிரன்ட் இருக்கானே முத்து, அவனைப் பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுடலாம்!
காலத்துக்கும் நமக்கு அவனோட சேர்த்து மூன்று அடிமைகள்!” கொக்கரித்தார் இந்திரா!
அந்த முத்து ஒரு அப்பாவி. இவர்கள் ஒரு டீ போட்டுக் கொடுத்து விட்டு, எவ்வளவு வேலை வாங்கினாலும் செய்வான்!
இப்படியாக மாமா வீட்டில் தஞ்சம் புகுந்து, மானுவும் பாமாவும் அந்த வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த தெய்வமே மனித ரூபத்தில் வந்து வழி காட்டியது போல வந்தவன் தான் மனீஷ்!
மானுவின் அப்பா இறந்த பின், அவளின் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, மாமாவின் ஊருக்கு வந்த பின், அவளை மீண்டும் கல்லூரியில் சேர்க்க விடவே இல்லை அம்மு.
கணவனோடு அப்படி ஒரு சண்டை!
பேயாட்டம் ஆடி, ஒரு கட்டத்தில் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்கள் தன் பார்வையில் பாதுகாப்பாகவாவது இருக்கட்டும் என்றே நினைத்து அவளுடன் ஒத்துப் போனார் மாமா சிவா!
மானுவை அவருக்குத் தெரிந்த ஒரு ஹாஸ்பிட்டல் ரிசப்சனில் வேலைக்கு சேர்த்து விட்டார் அவர்.
அங்கு மெடிக்கல் ரெப் ஆக வந்து போகும் போது பழக்கமானவன் தான் மனீஷ்!
மனிஷ் அந்த ஹாஸ்பிட்டலுக்கு அடிக்கடி வருவான், வேலையில்லா விட்டாலும் கூட!
காரணம் அவனின் காதலி மாலா!
அவள் அங்கு தான் நர்சாக வேலைப் பார்த்தாள். நர்சிங் கோர்ஸ் முடித்து விட்டு கவர்மென்ட் போஸ்டிங் வருவதற்கு காத்திருந்த இடைவெளியில் அந்த தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் காதலுக்கு மானு தான் தூது!
மனீஷ் தான் அடிக்கடி மானுவை படிப்பை தொடர சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருப்பான் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும்!
“எங்கண்ணா, காலேஜ் சேரணும்னு சொன்னாலே என் அத்தை ஒரு ஆட்டம் ஆடி தீர்த்திடும்!
வீணா எங்க மாமாவுக்கு தான் டென்சன்! அது தான் நான் அதுக்கு எல்லாம் ஆசைப்படுறதே இல்ல! விடுங்க அந்த கடவுள் ஏதாச்சும் வழி காண்பிப்பார்!”
“எல்லாத்துக்கும் அவரையே சொல்லக் கூடாது மானும்மா!
நாமளும் கொஞ்சமாச்சும் முயற்சி செய்யணும்!
மாலும்மா நீயாச்சும் சொல்லேன் உன் பிரன்ட் கிட்ட!
இப்படியே டோக்கன் போட்டுட்டு இருந்தா, இன்னும் பத்து வருஷம் கழிச்சு பார்த்தாலும் உன்னோட லைப் அப்படியே தான் இருக்கும் ஒரு முன்னேற்றமும் இருக்காது!
நீயும் உன் அம்மாவும் காலத்துக்கும் உன் அத்தைக்கு அடிமையா சேவகம் பண்ணிட்டு தான் இருக்கணும்!”
மானு யோசித்தாள்.
வீட்டில் அத்தையும் அவள் தாய்க் கிழவியும் தன் அம்மாவைப் படுத்தும் பாட்டை கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள். அனைத்தும் மாமாவுக்கு தெரியாமல் தான் என்றாலும், மாமா எப்போதுமே கூடவே இருப்பதில்லையே!
வீட்டில் சமையல்காரியாகவும் வேலைக்காரியாகவும் அத்தனை வேலை வாங்குவார்கள்!
“இது யார் வீடு பாமா, உன் அண்ணன் வீடு தானே! உன் அண்ணன் வீட்டுக்கு நீ செய்யாம யார் செய்வா?” என்று வெல்லமாக பேசி பேசியே மாடு மாதிரி வேலை வாங்குவார்கள் அவர்கள் இருவரும்!
இவர்கள் படுத்துவது பத்தாது என்று அந்த வெட்டி ஆபிசர் வெங்கியும்!
இப்போது எல்லாம் மாமாவின் மகன் சந்தோஷ் கூட அத்தையை வேலை வாங்குகிறான்.
“ஷூவை துடைத்து எடுத்து வை, தண்ணீர் கொண்டு வா” என்று உட்கார்ந்துகொண்டு அதிகாரம் பண்ணுவான்!
இதில் அவன் ஸ்கூல் அசைன்மென்ட், ப்ராஜெக்ட் மற்றும் ஹோம் ஒர்க்கைக் கூட மானு செய்து தர வேண்டும்.
இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து கொஞ்சமாச்சும் வெளியே வர வேண்டும் என்றால், கொஞ்சம் பொருளாதர சுதந்திரம் வேண்டும்!
அதற்கு நல்ல வேலை வேண்டும்! நல்ல வேலைக்கு படிப்பு வேண்டும்!
செலவில்லாமல் படிக்க முடியுமா? அப்படியே படித்தாலும் உடனே வேலை கிடைக்க வேண்டுமே! மானு மலைத்தாள்.
ஆனால் அதற்கும் மனீஷ் உதவினான்.
அவனுக்குத் தெரிந்த தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட் ஒன்றில் சேர்த்து விடுவதாகவும், படித்து முடித்த பின் இன்ஸ்டிடியூட்டை நடத்திக் கொண்டிருக்கும் அந்த பெரிய தனியார் ஹாஸ்பிடலில் அவர்களே வேலைக்கும் எடுத்துக் கொள்வார்கள், அங்கு நல்ல சம்பளமும் உண்டு என்றும் சொன்னான்.
மானுவுக்கும் அது சரியெனப் பட்டதால், மாமாவிடம் பேசினாள். மாமா அதை வீட்டில் சொன்ன போது மீண்டும் ஒரு களேபரம்!
“போறதா இருந்தா, அவ அம்மாவையும் கூட்டிட்டுப் போக சொல்லுங்க” என்று ஒரே சண்டை!
மானு ஹாஸ்டலில் தங்கி தான் படிக்க வேண்டும், அம்மாவை அவளுடன் வைத்துக் கொள்ள முடியாது என்று தெரிந்து கொண்டு தான் அம்மாவும் பெண்ணும் வம்பு செய்தார்கள்!
அந்த நேரம் பார்த்து, மணியின் பென்சன் பணம் பாமாவுக்கு சான்க்சன் ஆகி விட்டிருக்க, பென்சன் பணத்தை முழுவதுமே அவர்களிடம் தந்து விடுவதாக சொல்லி தான் மானு அந்த படிப்பில் சேரவே முடிந்தது.
படிப்பை முடித்தவுடன், சேலத்தில் வேலையும் கிடைத்து, மானு மெதுவாக மாமாவிடம் பேசி பேசி, துணைக்கு என்று சொல்லி அவள் அம்மாவை அவள் வேலை பார்க்கும் சேலத்திற்கு அழைத்து வந்து விட்டாள்.
அதற்குள் மாலுவுக்கும் கவர்மென்ட் போஸ்டிங் இவர்கள் இருக்கும் ஊருக்கே வந்து விட்டது!
மானு படித்துக் கொண்டிருந்த போதே அவளுக்கும் மனீஷ்க்கும் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் ஆகியிருந்தது.
மானுவையும் பாமாவையும் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டனர் மாலுவும் மனீஷும்.
அடுத்த வருடம் மாலு குழந்தை உண்டாகி விட்டிருந்தும் அவர்கள் இருவரின் வீட்டிலும் இன்னமும் பேசாததால், இவர்கள் நாலு பேருமே ஒரே குடும்பம் என்று ஆகி விட்டது!
வருடங்கள் ஓடி..
இதோ.. குழந்தை ரிதன்யாவை அருகில் இருந்த நர்சரி ஸ்கூலில் சேர்த்தாயிற்று.
இப்போது பார்த்து மாலுவை கிருஷ்ணகிரிக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள்! இவர்கள் இருப்பதோ சேலத்தில்.
ஷிப்ட் ட்யூட்டி என்பதால், வீக் ஆப் என்று வருகிறதோ அன்று மட்டுமே அவள் வீட்டிற்கு வர முடியும்.
மனீஷ்க்கோ அதிகம் ட்ராவல் பண்ணுகிற வேலை.
எனவே ரிதன்யாவின் பொறுப்பை மானு எடுத்துக் கொண்டாள்.
பாமாவின் உதவியோடு ரித்துக் குட்டி மானுவிடமே வளர்ந்து கொண்டிருக்கிறாள்!
மாலுவிற்கு ட்ரான்ஸ்பர் வாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இன்னமும் கிடைக்க வில்லை!
வீட்டில் இருக்கும் பாமாவிற்கும் ரித்துவிற்கும் டிவி பார்ப்பதில் சண்டை ஏற்படும்!
இன்றும் கூட அதை தான் புகாராக சொல்லிக் கொண்டிருக்கிறது ரித்துக் குட்டி!
“நீ எப்பவும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ” என்று சொன்ன பாமாவைக் கட்டிக் கொண்டு சமாதானம் செய்தாள் மானு!
“அம்மா.. அவ அவளோட அம்மாவை தேடாம இருக்கணும்னா, நாம கொஞ்சம் அனுசரிச்சு தான் போகணும், அவ குழந்தை தானேம்மா..” பாமாவின் முகவாயை பிடித்து கொஞ்சினாள் மகள்.
“ம்ம். சரி .. நீ, வா, சாப்பாடு எவ்வளவு செய்யனும்னு சொல்லு. வா.” என்று கிச்சனுக்கு அழைத்து சென்றார் பாமா.
அவருக்கு மாமா வீட்டில் செய்கிற மாதிரி நிறைய செய்து விடுவார். கூட இருந்து அளவு சொல்லணும்.
போன வாரம் மாமா ரொம்பவும் அழைத்தார் என்று, ரித்துவுக்கும் காலாண்டு லீவ் விட்டிருந்ததால், மூவரும் ஊருக்குப் போனார்கள்.
பாமாவின் தலையைப் பார்த்தவுடன் வேலைகளை அடுக்கினாள் அம்மு.
முதல் இரண்டு நாள் அதிகப்படியான வேலையால் மிகவும் களைத்துப் போனார் பாமா.
அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அடுத்து அடுத்து அவர்கள் வேலை ஏவிய போது, மானு தடுத்தாள்.
அவ்வளவு தான்!
கையில் கொஞ்சம் காசு வந்து விட்டதால், ரொம்பவும் திமிர் பிடித்து ஆடுகிறாள் என்று ஒரேடியாக சண்டையிட்டாள் அம்மு!
பொறுக்க முடியாமல், மூன்றாவது நாளே சேலம் திரும்பி விட்டார்கள்!
மானு எடுத்த லீவ் வேஸ்ட் ஆகி விடாமல் இருக்க, முடிக்க வேண்டியிருந்த பாங்க், இன்ஸுரன்ஸ் வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்று காலை டிபன் சாப்பிட்டு விட்டு வெளியில் கிளம்பினாள்.
கிளம்புமுன், “அம்மா.. ரித்து.. ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்காம இருந்தா, நான் வரும்போது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வருவேன்” என்று சொல்லி அவர்கள் குடியிருந்த மாடியில் இருந்து இறங்கினாள்.
கீழே ஹவுஸ் ஓனர் மாமி அழைத்தார், அவருக்கு இன்சுலின் ஊசி போட்டு விட வேண்டி!
“இதோ வரேன் மாமி” என்று சொன்னவள், போய் அவருக்கு ஊசிப் போட்டு விட்டு, கிளம்புகையில் மாமி சொன்னார்.
“டீ மானு, இன்னிக்கு வீட்டில் தானே இருக்க. சாயங்காலம் என் கூட வா. நம்ம தெரு கோவில்ல, அம்மனுக்கு ஸ்வயம்வர பார்வதி பூஜை செய்றாங்க. அதில் கலந்து கிட்டா, உனக்கும் உன் அம்மா ஆசைப்படி சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.
“இல்ல மாமி, நான் வீட்டில் இல்ல, இன்னொரு வாட்டி பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவளின் ஸ்கூட்டியை கிளப்பினாள் மானு.
வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது மாமி சொன்னது நினைவில் வந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது!
“உனக்கு அப்பா இல்லன்னா என்னடி மானு, நானும் எங்காத்துக்காரும் சேர்ந்து உனக்கு அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து உன்னை கன்னிகாதானம் செய்றோம், எங்களுக்கு என்ன பிள்ளையா, குட்டியா சொல்லு!” என்பார் மாமி அடிக்கடி!
அப்போது எல்லாம் மெல்ல சிரித்து விட்டு நகர்ந்து விடுவாள் மானு!
மாமிக்கு குழந்தை இல்லை. அவரின் கொழுந்தன் ஒருவன் ஆட்டிசம் வந்து நாற்பது வயது வரை ஒரு குழந்தையைப் போலவே இருந்து விட்டு இறந்திருந்தான்.
மாமி தான் அவனை அன்னையைப் போல் எல்லாம் செய்து பார்த்துக் கொண்டார்!
பாமாவைப் பற்றி சொல்லி விட்டே வீடு தேடினார்கள் மனீஷும் மாலுவும்!
பலர் தயங்க, இந்த மாமி மட்டுமே மனம் வந்து வீடு கொடுத்தார்!
“உங்க சூழ்நிலை புரியுதுப்பா, நானும் அதை கடந்து தானே வந்திருக்கேன் என்று சொல்லி வீடு வாடகைக்குக் கொடுத்தார்.
மாமி அடிக்கடி சொல்வதை இப்போதும் நினைத்துக் கொண்ட மானு, தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
“அய்யோ மாமி, நீங்க கன்னிகாதானம் செய்து கொடுக்க, நான் கன்னியும் இல்லை!
கழுத்தில் தாலி இல்லாவிட்டாலும் கூட நான் செல்வியும் அல்ல!
சட்டப்படியான ஆவணங்களின் படி நான் திருமதி மானஸா! இது அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்!
———
அவ என்ன என்ன தேடி வந்தா அஞ்சல..
அவ நிறத்த பார்த்து பார்த்து செவக்கும் வெத்தல.
……
துணியால் கண்ணையும் கட்டி காத்துல கைய நீட்டி
இன்னும் தேடுறேன் அவள..
தனியா எங்கே போனாளோ.. தனியா எங்கே போனாளோ?
என்று காதில் ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டே அவனது பைக்கில் அதி வேகமாக சென்று கொண்டிருந்தான் அவளின் “அவன்”.
அவளைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக!
error: Content is protected !!