Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 21

“சரி, என் பின்னால வாங்க.” என்றபடி அவளது பேக்கை எடுத்துக் கொண்டான். அதிகம் மழை நீர் படாதவாறு சுவரோடு ஒதுங்கியபடியே செட்டின் வலப்புறம் வந்தான். அவனைப் பின்தொடர்ந்து அவளும் நடந்தாள். அந்தச் சிறு சந்தில், மேல்நோக்கிச் சென்ற இரும்புப் படிகளில் ஏறினான். “பார்த்துக் கவனமா ஏறி வாங்க.” நான்கு படிகள் ஏறிவிட்டு அவளுக்காகக் காத்திருந்தான். அவளுக்காகத் தன் கையை நீட்ட சங்கருக்குத் தயக்கமாக இருந்தது. அவனைப் பார்த்துக் கொண்டே மேலே ஏறிய வசுமதி இரும்புப் படியின் விளிம்பில் காலை இடித்துக் கொண்டாள். இடது கால் கண்டு விரலுக்கு அருகில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் எட்டிப்பார்த்தது. வேதனையில் காலை உதறியவள் தடுமாறி விழுப்போனாள். சட்டென்று கையைப் பிடித்து நிறுத்தினான்.
“இது தேவையா? செருப்பு என்னாச்சு?”
“அதைக் கீழயே விட்டுட்டேன்.” என்றவளைக் கோபத்தை அடக்கிக் கொண்டு பார்த்தான். அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அழுது விடுவாள் போல் தோன்றியது. அவன் கையைப் பிடித்து மெதுவாக மேலே ஏறி வந்தாள். முதலிலேயே தயங்காமல் கையை நீட்டி இருந்தால் இப்படி காலை இடித்திருக்க மாட்டாள் என்று சங்கர் தன்னைத்தானே சபித்துக் கொண்டான். அறை விளக்கைப் போட்டு, அங்கிருந்த சிறு கட்டிலில் அவளை அமர வைத்தான்.
“இங்கதான் நீங்க தங்குவீங்களா?”
“சேச்சே.. எப்பவாவது டயர்டா இருந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கத்தான் இந்த ரூம். சாப்பாடு வாங்கிட்டு வந்தா இங்க வச்சித்தான் சாப்பிடுவோம். ”
கட்டிலில் அமர்ந்ததும் தன் பேக்கைத் திறந்து டவல் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“தலையைத் துவட்டுங்க. ரொம்ப நனைஞ்சிட்டீங்க.”
“இல்ல பரவால்ல. நீங்களும்தான் நனைஞ்சிருக்கீங்க.” என்றவனைப் பொருட்படுத்தாமல் அவன் தலையில் டவலைப் போட்டாள்.
“கொட்டற மழையில வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு நின்ன, உங்க அளவுக்கு நான் நனையலை.”
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அமைதியாக தலையைத் துவட்டினான். துவட்டியதும் சுவரில் மாட்டப் பட்டிருந்த சின்ன அலமாரியிலிருந்து டிஞ்சர் பாட்டிலை எடுத்து வந்தான். கட்டிலுக்குக் கீழே அவளின் காலருகே அமர்ந்தான். வசுமதிக்கும் கூச்சமாக இருந்தது.
“அதை என்கிட்டக் கொடுங்க நானே போட்டுக்கறேன்.” என்று அவள் சொன்னைதக் காதில் வாங்காமல் அவளின் வெள்ளையான பாதத்தைக் கையில் தாங்கி, ஒரு வெள்ளைத் துணியை எடுத்து ரத்தம் வந்த இடத்தை சுத்தமாகத் துடைத்தான். வசுமதி கண்களை மூடிக்கொண்டாள். துணியைச் சிறிது கிழித்து டிஞ்சரில் நனைத்து அந்தக் காயத்தில் வைத்தான். சுரீர் என்றது. அதன் எரிச்சலில் மெலிதாக முனகினாள் வசுமதி. அவளுக்குக் கண்ணீர் வந்தது. அது வலியிலா அல்லது அந்தக் கணத்தின் காதலிலா- என்று புரியாமல் தவித்தாள்.
மருந்தைப் போட்டுவிட்டு எழுந்த சங்கர், மறுபுறம் திரும்பி நின்று தெப்பலாக நனைந்து போயிருந்த தன் சட்டையைக் கழற்றி அங்கிருந்த கம்பியில் விரித்துப்போட்டான். அவளும் துவட்டி விட்டு வைத்திருந்த அதே டவலை எடுத்து மேலே போட்டுக் கொண்டான் வசுமதியின் உடல் குளிரில் நடுங்கியது.
“குளிருது நான் ட்ரெஸ் மாத்தணும்.” தரையைப் பார்த்தபடி சொன்னாள்.
“ஓ..ஸாரி, நீங்க மாத்துங்க. நான் பக்கத்துல போயிட்டு வந்துடறேன்.”
“வேண்டாம் எங்க போகப் போறீங்க? ரெண்டு நிமிசம் படிக்கட்டுல நில்லுங்க போதும்.”
“அதுக்கில்லைங்க.. நான் போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன்.”
“ம்ம் சரி சீக்கிரம் வந்துடுங்க.” என்றாள்.
“மழை இன்னும் விடலை.. எதுக்காகவும் கீழே வராதீங்க.” என்று சொல்லிவிட்டு குடையை பிடித்துக் கொண்டு கீழே சென்றான். அவன் இறங்கி செல்லும் வரை வாசலில் இருந்து பார்த்துக்கொண்டு நின்றாள். ‘ஒரு சேலை இருந்திருந்தா குளிருக்கு நல்லா இருக்கும்.’ மனதுக்குள் எண்ணியபடி, பேக்கைத் திறந்து கருநீல பிரிண்டட் குர்தியும் அதற்குரிய பேன்ட்டும் எடுத்து அணிந்து கொண்டாள்.
மழை நின்று நிதானமாகப் பெய்து கொண்டிருந்தது. இப்படிப் பெய்தால் சீக்கிரத்தில் மழை நிற்காது என்று சொல்வர்கள். இடியும் மின்னலும் கண்களைப் பறித்தது. அவன் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.
வெளியே பளீரென்று மின்னல் வெட்டியது. திடீரென்று காதைப் பிளக்கும் இடிச்சத்தம். மின்சாரம் துண்டிக்கப் பட்டது. எங்கும் இருள் பரவ வசுமதிக்குள் பயம் பரவியது. தன் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தான். பேட்டரியும் குறைவாகத்தான் இருந்தது. வீட்டிலிருந்து மூன்று மிஸ்டு கால் இருந்தது. போரடித்தது. தகர ஷீட்டின் இடைவெளி வழியாக அடித்துப் பெய்யும் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அரை மணி நேரத்துக்கும் மேலானபிறகு கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் சங்கர் திரும்பி வந்தான்.
“இந்த ஏரியாவுல எங்கேயுமே கரண்ட் இல்லைங்க. நீங்க இருட்டுக்குள்ள தனியா இருப்பீங்கன்னு சீக்கிரம் வந்துட்டேன். ஹோட்டல் எதுவும் இல்ல, ஒரே ஒரு டீக்கடை மட்டும்தான் இருந்துச்சு. அங்கேயும் டீயும் பண்ணும் மட்டும்தான் கிடைச்சது. ஏதோ வாங்கிட்டு வந்துருக்கேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.”
“பரவால்ல இருக்கட்டும்.” என்றாள் வசுமதி.
சங்கர் அலமாரியிலிருந்து ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றி வைத்தான். மெழுகுவர்த்தி ஒளியில் அவள் முகம் தேவதை போல காட்சியளித்தது. அவளின் ஈர முடியும், தாடையின் மச்சமும் ரவி வர்மா ஓவியங்களை ஞாபகப் படுத்தின. கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் சுய நினைவுக்கு வந்தவனாக, கொண்டு வந்த பிளாஸ்டிக் பையிலிருந்து பன்னை எடுத்து அவள் முன்னே வைத்தான். இரண்டு பேப்பர் கப்புகளில் டீயை ஊற்றி அவளிடம் ஒன்றை கொடுத்தான். பன்னை சாப்பிட்டுக் கொண்டு டீ குடிப்பது வசுமதிக்குப் புதிதாக இருந்தது. அந்த சூழ்நிலைக்கு அது தேவையாகவும் இதமாகவும் இருந்தது. எது எப்படியோ இந்த இரவு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இரவாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.
“அப்புறம் என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?”
சங்கர் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“..?”
“நம்ம கல்யாண விஷயம்?”
எதையும் சுற்றி வளைக்காமல் சட்டென்று விஷயத்துக்கு வரும் அவளது இந்த இயல்புதான் அவனை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது.
“உண்மையச் சொல்லணும்னா வீட்ல ஆறு மாசமா எனக்குப் பொண்ணு பாத்துட்டுதான் இருக்காங்க. எதுவும் சரியாக அமையாத விரக்தியில இருந்தப்பதான் ஏதோ தேவதை வரம் கொடுத்த மாதிரி உங்க அறிமுகம் கிடைச்சிருக்கு. ஆனா இதை ஏத்துக்க எனக்கு பல தயக்கங்கள் இருக்கு.முதல்ல நான் இதுக்குத் தகுதியானவன்தானான்னு என்னை நானே கேட்டுக்கிட்டு இருக்கேன். இந்த மெக்கானிக் செட் வாழ்க்கையை வச்சி உங்களுக்கு ஒரு நல்ல லைஃப் கொடுக்க முடியும்னு எனக்குத் தோனலை.
“ஆமா பிஇ படிச்சிட்டு ஏன் இப்படி மெக்கானிக் செட்டோட இருந்துட்டீங்க?”
“எனக்கு இதுல ஆரம்பத்தில் இருந்தே இன்ட்ரெஸ்ட் இருந்தது. என்னோட சின்ன வயசுல எங்க அப்பா டூவீலர் ஷோரூம் வச்சிருந்தாங்க. நல்ல வசதியாத்தான் இருந்தோம். நம்பக் கூடாதவங்களை நம்பி ஏமாந்து பிசினஸ்ல நொடிச்சுட்டாரு. இந்த மெக்கானிக் செட் வாழ்க்கை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். எனக்கும் டூவீலர் டீலர்ஷிப் எடுக்கணும்,ஷோரூம் போடணும்னுதான் ஆசை. அதுக்குப் பணம் சேர்க்கணும். முழு சப்போர்ட்டும் அப்பாகிட்ட எதிர்பார்க்க முடியாது. அது வரைக்கும் வாழ்க்கை எனக்காக காத்திருக்காது போல. செட்டில் ஆன பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா வீட்ல கேக்க மாட்டேங்குறாங்க. வயசாயிடுச்சுன்னு சொல்லி, சதா எந்நேரமும் கல்யாணப் பிரச்சனையைத்தான் பேசுறாங்க. அதனாலதான் வரன் பார்க்க சம்மதிச்சேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா.. அதுக்கு இன்னும் நான் தயாராகலைன்னுதான் தோணுது.”
“நாம தயாராகனும் தயாராகனும்னு கிடைக்கிற வண்டியை எல்லாம் மிஸ் பண்ணிட்டோம்னா, அப்புறம் தயாராகிட்ட பிறகு வண்டியே கிடைக்காமப் போகவும் வாய்ப்பிருக்கே. இன்னைக்கு நிறைய பேர் வாழ்க்கையில இப்படித்தான் காத்திருக்காங்க. அதை விடுங்க டூ வீலர் ஷோரூம் வைக்கிறது நல்ல ஐடியாதான். அதுக்கு நாம ரெண்டு பேருமே சேர்ந்து உழைக்கலாமே. நீங்க மட்டும்தான் உங்க கனவுகளை சுமந்துக்கிட்டு கஷ்டப்படணுமா என்ன? ரெண்டு பேரும் சேர்ந்து முயற்சி செய்யலாம். லோன் எடுக்கலாம், சேர்ந்தே அடைக்கலாம். நம்ம வாழ்க்கையை நாமளே அமைக்கலாம்.. என்ன சொல்றீங்க?” மெழுகுவர்த்தி ஒளியில் கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள். அவன் தகர ஷீட்டின் இடைவெளி வழியே வெளியே பார்த்தான். இருட்டுக்குள் மழையின் சத்தம் மட்டுமே கேட்டது.
சங்கரின் போன் அடித்தது. எடுத்துப் பேசினான்.
“என்னடா ஆச்சு? ரொம்ப நேரமா போட்டுட்டு இருக்கேன், உனக்கும் போன் போகவே இல்லை. ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை? வண்டிக்கு ஏதும் பிரச்சினையா?” சங்கரின் அம்மா சரசு பேசினாள்.
“அதெல்லாம் இல்லம்மா.. இங்க கடைக்கு உள்ள தண்ணி வந்துடும்போல இருக்கு. அதான் கொஞ்சம் திங்ஸை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு இருந்தேன். நேரமாச்சு.”
“சரிசரி.. நேரமாயிருச்சி, இந்த மழையில இதுக்குமேல கிளம்பி வராத.. அங்கயே தங்கிட்டு காலையில் வா. எதாவது வாங்கி சாப்பிட்டுக்கோடா.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சரசு.
வசுமதியைப் பார்த்தான். “சரி, தூங்குங்க.. மிச்சத்தைக் காலையில பேசிக்கலாம்.
நீங்க கட்டில்ல தூங்குங்க. நான் இப்படிக் கீழ படுத்துக்கறேன்.” தண்ணீர் பாட்டிலையும் மீதமிருந்த பன்னையும் அவளிடம் கொடுத்தான். இடையில பசிச்சா சாப்பிட்டுக்கங்க. என்றபடி நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய ஃப்ளெக்ஸ் பேனரைப் பிரித்துக் கீழே விரித்தான். அவள் படுக்காமல் தயங்கியபடியே அமர்ந்திருந்தாள்.
“நான்.. இங்க..”
“ரெஸ்ட் ரூமா?”
“ம்ம்!” தலையாட்டினாள்.
“படிக்கட்டுக்குக் கீழ இருக்கு. மெதுவா கவனமாப் போகணும்.” தனது போனில் டார்ச்சை ஆன் பண்ணி அவளுக்கு வழி காட்டினான். இறங்கிப் போனாள்.
“கவனம்.. கால் பத்திரம்.”
போய்விட்டு திரும்பி வந்தாள். அவள் உடல் குளிரில் நடுங்கியது. தனது பேக்கைத் தலைக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தாள். திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய் அலமாரிக்கு அருகில் சென்றான் சங்கர். அலமாரிக்கு மேலே வைக்கப் பட்டிருந்த ஒரு அட்டைப்பெட்டியை எடுத்தான். ஒருமுறை மித்ராவின் பிறந்தநாளுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வைத்தது. அது வசுமதிக்குத்தான் போகவேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டியைப் பிரித்து, அதிலிருந்த புத்தம்புது அடர் பச்சைநிறப் புடவையை எடுத்து அவளிடம் நீட்டினான். இதை வச்சிப் போர்த்திக்கங்க. குளிருக்கு நல்லாருக்கும்.
வசுமதி வாங்கிக் கொண்டாள். இது எப்படி வந்தது, யாருக்காக எடுத்து வைத்தது. எதையும் அவள் கேட்கவில்லை. மறக்கமுடியாத இந்த இரவு, மறக்க முடியாத பரிசையும் கொடுத்து விட்டது. போர்த்திக்கொண்டி நிம்மதியாகத் தூங்கினாள்.
****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!